கூடாரை வெல்லும் 16 :
திருமணத்திற்கு முன்பும் சில உரசல்கள் வரத் தான் செய்தன. கோதா பால், பால் சார்ந்த பொருள்களின் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் வேலையில் சேர்ந்து இருந்தாள். படித்து முடித்தவுடன் வேலையில் சேர்ந்து இருந்ததால் அவள் கற்றுக் கொண்டு வேலை செய்யும் நபராகவேக் (டிரெய்னிங் எம்பிளாயி) கருதப்பட்டாள். தொழிற்சாலைக்கு என்று பசு வளர்ப்பவர்களிடம் இருந்து சேகரித்து வரப் படும் பாலின் தரத்தைச் சோதித்த பின்பு தான் அடுத்த கட்ட நடைமுறைக்குப் பாலைத் தொழிற்சாலைக்கு உள்ளே அனுப்ப வேண்டும். பால், பால் பொருட்கள் பதப்படுத்தப்பட்ட பின்பு அல்லது தயாரிப்பு முடிந்த பின்பும் அவற்றின் தரத்தைச் சோதனை செய்த பின்பு தான் வெளியே விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
முன் அனுபவம் இல்லாமல் துறை சார்ந்த படிப்பை மட்டும் முடித்து விட்டுப் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களேத் தரச் சோதனைப் பிரிவில் பணியில் அமர்த்தப்படுவர். மிகக் கவனத்துடன் செய்யப்பட வேண்டிய வேலை. வருடத்தின் எல்லா நாள்களும் தொழிற்சாலை இயங்கும். தினமும் இருபத்து நான்கு மணி நேரமும் தொழிற்சாலை இயங்கும். தரத்தைச் சோதிக்கும் பணிபுரிபவர்களுக்கு ஷிப்ட் முறைப்படி வார வாரம் ஷிப்ட் மாற்றி வழங்கப் படும். சில சமயம் இரண்டு ஷிப்ட் தொடர்ந்து பணிபுரிய வேண்டியது இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை நாள்கள், அரசு விடுமுறை நாள்கள் என்று முறையாக விடுமுறை இருக்காது. சோதனைக் கூடத்தில் நின்று கொண்டே தான் வேலை செய்ய வேண்டும். தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் பாதுகாப்பிற்காக அணியும் கனமான காலணி அணிந்து இருக்க வேண்டும். தலை முடியை முழுதாக மறைக்கும் வகையில் தொப்பி, முகத்தை மறைக்கும் முகமூடி அணிந்து கொண்டு கண்கள் மட்டும் தெரியும் விதமாக இருக்க வேண்டும்.
படிக்கும் வரை எந்தக் கஷ்டமும் இல்லாமல் வளர்ந்த கோதாவிற்கு இவை எல்லாம் பிடிபடவே வெகுநாட்கள் ஆனது. பூர்வீகமாக ஆந்திராவைச் சேர்ந்தவள் என்பதால் மொழிப் பிரச்சனை இல்லை. வேறு மாநிலமாக இருந்தால் அதையும் பார்த்தாக வேண்டும். இவ்வாறான தொழிற்சாலைகளில் கூலி வேலை செய்யும் நபர்கள் பெரும்பான்மையாக உள்ளூரைச் சேர்ந்தவர்களாகத் தான் இருப்பர். உள்ளூரில் புழக்கத்தில் இருக்கும் மொழியின் அறிவுக் கொஞ்சமாவது இருந்தால் தான் பணிபுரிவது எளிது. அங்கு நிலவிய தட்பவெப்பம், சாப்பாடு இவை பற்றிப் பிரச்சனைகள் எதுவும் கோதாவிற்கு இல்லை. அவள் உடன் பணிக்கு சேர்ந்தவர்கள் எல்லாம் இது மாதிரியான விஷயங்களில் சிரமப் படக் கோதாவின் பிரச்சனையோ கடின உழைப்பைப் போடுவதில் சிரமமாக இருந்தது.
படிப்பிலும், வேலையிலும் கோதா தெளிவுமிக்கவளாகவே இருந்தாள். கடை நிலை வேலையும் செய்யத் தெரிந்து இருக்க வேண்டும். நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். எட்டு மணி நேரம் வேலை என்றால் அதுவரை மட்டும் தான் செய்ய முடியும் அதன் பிறகு முடியாது என்று சொல்வது எல்லாம் வேலைக்கு ஆகாது. வேலை பார்த்துக் கொண்டே மேலும் மேலும் அது தொடர்பான கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். உணவு அதுவும் முக்கியமாகக் குழந்தைகளுக்கானது என்பதால் மேலும் இருமடங்கு கவனத்துடன் இருக்க வேண்டும். இவை எல்லாம் கல்லூரியிலேயே அவளுக்குப் போதிக்கப் பட்டிருந்தது. ஶ்ரீநிவாசனும் மகளுக்கு ஒரு இடத்தில் பணிபுரியும் பொழுது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எதை செய்யலாம்?, எதை செய்யக் கூடாது? என மகளுக்கு நிறையவேக் கற்பித்து இருந்தார்.
கோதா அசதியில் சோர்ந்து போகும் போதெல்லாம் இதை எல்லாம் மனதில் கொண்டு வந்து தன்னைத் தானே ஊக்கப் படுத்திக் கொள்வாள். வீட்டில் ஶ்ரீராமிடம் வேலை கடினமாக இருக்கிறது என்றால் “இதுக்குத் தான் ஸ்கூல் படிக்கிறப்போவே சொன்னேன். பிளஸ் ஒன் படிக்கும் போது கம்யூட்டர மேஜர் சப்ஜெக்டா எடு. மூளைக்கு மட்டும் வேலை கொடுத்தால் போதும். சயின்ஸ் மேஜர் எடுக்காத. எத்தனை தடவை சொன்னேன். நீ கேட்கல. இப்போ கஷ்டமா இருக்கு என்றால் எப்படி? முடிந்தால் வேலை பாரு. முடியலை என்றால் வந்துடு” என்று பழைய பல்லவியை ஆரம்பித்து விடுவான். அம்மா பத்மாவோ “இதெல்லாம் உனக்குத் தேவையா? நீ வேலைக்குப் போய் என்ன செய்யப் போற? பேசாமல் வேலையை விட்டுட்டு வந்து வீட்டு வேலை, வீட்டை நிர்வாகம் பண்ணக் கத்துக்கோ” என்பார் பெண் என்றால் வீட்டு வேலைக்கே பிறவி எடுத்தது போல. ஶ்ரீநிவாசன் மட்டுமே நல்லதாக ஏதாவது சொல்வார். “கஷ்டப் படணும் மா. கஷ்டப் பட்டால் தான் நல்ல நிலை அடையலாம். கஷ்டப்படாமல் கிடைக்கிறது நிலைக்காது ரா தள்ளி”. அவள் சோர்ந்து போய் வேலையை விட்டு விடலாம் என்று நினைக்கும் பொழுது எல்லாம் தந்தையிடம் மட்டுமே தனது பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வாள். ஶ்ரீநிவாசன் உற்ற ஆசானாக அவளை வழிநடத்தினார்.
கோதாவும் தட்டுத் தடுமாறித் தளிர் நடை பழகிக் கீழே விழுந்து வாரி எடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் திருமணப் பேச்சு வந்தது. கோதாவிற்கும் ஒரு தெளிவு இல்லை. தன் வேலையில் தனக்கென ஓர் அங்கீகாரம் கிடைத்த பின் திருமணம் செய்து கொள்ளலாம். அல்லது குடும்பமும், வேலையுமாகத் தன்னால் இரட்டைக் குதிரைச் சவாரி செய்ய முடியுமா? போன்ற யோசனைகள் எதுவும் இன்றித் திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள்.
திருமணம் தொடர்பான வேலைகளுக்கு விடுமுறை போட்டு விட்டு வா என்ற அழைப்பிற்கு அவளால் இசைய முடியவில்லை. சில சமயம் ஷாப்பிங் செல்ல வா என்பார்கள். சில சமயம் ஏதாவது சடங்கு, சம்பிரதாயம் செய்ய வா என்பார்கள். கோதாவிற்குத் தலை சுற்றி விடும். அவளுக்கே வாரத்தில் சில சமயம் ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். அதுவும் எந்த நாள் என்று சொல்ல முடியாது. அந்த விடுமுறை நாளில் பெரும்பான்மை நேரம் அவள் தூக்கத்தில் தான் கழிப்பாள். அப்படி இருக்க அடிக்கடித் திருமண வேலைகளுக்காக ராஜமுந்திரிக்கோ, சென்னைக்கோ வந்து செல்வது கோதாவிற்கு சிரமமாக இருந்தது. பெரும்பான்மையானப் பயணங்கள் விமானத்தில் தான் வந்து செல்வாள். இருப்பினும் அதை சமாளிக்கக் கோதா வெகுவாகத் திணறி விட்டாள்.
இரண்டு, மூன்று முறை கோதாவால் வர முடியாமல் போய் விட ராஜேஸ்வரியும், தேவ்வும் தான் எதுவும் பிரச்சனை ஆகாமல் சமாளித்தார்கள். திருமணத்தின் பின்பும் இதே தான் நிலை என்பதால் தேவ் தனக்கு நெருங்கிய வட்டத்தில் ராஜமுந்திரியில் செயல்படும் பால் பொருட்கள் தொழிற்சாலையில் கோதாவின் வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.
கோதா திருமணத்திற்கு என்று இருபது நாள்கள் விடுமுறை எடுத்து இருந்தாள். அந்த இருபது நாள்களும் சடுதியில் ஓடி விட்டன. திருமணம், அதன் முன்பான சடங்குகள், அதன் பின்னான சடங்குகள், அவர்கள் தொழில் சார்ந்தவர்களுக்கும், தேவ்வின் தொழில் சார்ந்தவர்களுக்கும் செகந்திராபாத்தில் ஒரு வரவேற்பு, ஶ்ரீநிவாசன் அலுவலகம் சம்பந்தப் பட்டவர்களுக்குச் சென்னையில் வரவேற்பு, நெருங்கிய உறவினர்கள் வீட்டு விருந்து என நாட்கள் பறந்து விட்டன.
மறுநாள் கோதா வேலையில் சென்று சேர வேண்டும். வீட்டில் அனைவரிடமும் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள். வீட்டில் எவர் முகத்திலும் ஈயாடவில்லை. கிளம்பும் சமயம் தான் தேவ்வுடன் வந்து வேலைக்குச் செல்கிறேன் என்று சொல்லிக் கிளம்பி விட்டாள்.
சத்யநாராயணன் “போய்ட்டு எப்போ மா வருவ?” என்றார். கோதா “தாத்தையா… எப்போன்னு சொல்ல முடியாது. கல்யாணத்துக்கு நிறைய லீவ் போட்டுட்டேன். லீவ் கிடைக்கிறப்போ வரேன் தாத்தையா” என்று விட்டுக் கிளம்பியவளை வீடே விசித்திரமாகப் பார்த்தது. அவளை அனுப்பி விட்டுத் தேவ் வந்ததும் பேசிக் கொள்ளலாம் என அனைவரும் காத்திருந்தனர்.
தேவ் வீட்டுக்குத் திரும்பியதும் சத்யாபாபு கேட்ட முதல் கேள்வியே “கோதா எப்போ வேலையை விட்டுட்டு இங்க வருவா?”. தேவ் நிதானமாக “இங்க பக்கத்தில் ஏதாவது வேலை கிடைத்ததும் வந்து விடுவாள்” என்றான்.
சத்யநாராயணன் “அதுவரைக்கும் அவ ஒரு இடத்திலும், நீ ஒரு இடத்திலுமா இருக்கப் போறீங்க? அவளை அந்த வேலையை விட்டு விட்டு இங்கே கிளம்பி வரச் சொல்லு. இங்கப் பக்கத்தில் வேலை கிடைத்ததும் போய்க் கொள்ளலாம். இல்லை என்றால் வீட்டிலேயே இருக்கட்டும்” என்றார் கொஞ்சம் அதிகாரமாக.
தேவ்வும் உறுதியாகப் பேசினான் “இல்லை தாத்தையா… கொஞ்சம் நாள் வேலையை விட்டுவிட்டால் இடைவெளி வந்து விடும். அப்போ அடுத்து வேலை கிடைக்கிறதும் சிரமம். சீக்கிரமா இங்க பக்கத்தில் ஏதாவது வேலை கிடைக்க முயற்சி பண்ணிட்டுத் தான் இருக்கிறேன். பார்க்கலாம்” என்றான்.
சத்யபாபு “அப்படி அவ வேலைக்குப் போகணும்னு என்ன இருக்கு? கிடைத்தால் போகட்டும். இல்லை என்றால் வீட்டிலேயே இருக்கட்டும்” என்றார். தேவ் “அது அவ இஷ்டம் நானா. அதை நம்ம சொல்லக் கூடாது” என்றான் முடிவாக.
இந்தப் பேச்சு அன்றோடு முடிந்து விட்டாலும் உறவில், நட்பில் எவரேனும் வந்துக் கேட்கும் பொழுது இது ஒரு முக்கியப் பேசு பொருளாக விவாதிக்கப் பட்டது. கோதாவாலும் எல்லா வார இறுதியிலும் வர முடியவில்லை. மாதத்தில் ஒரு வார இறுதிக்கே அவளால் வந்து செல்ல முடிந்தது. ஒரு வார இறுதிக்கு தேவ் சென்று அவளைப் பார்த்து வந்தான். போனில் தான் இருவரும் பேசிக் கொண்டனர். அதுவும் மிகக் குறைந்த நிமிடங்களே. இருவரையுமே அவரவர் வேலை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது.
தேவ் ஒரு பக்கமும், கோதா ஒரு பக்கமும் ஓடிக் கொண்டிருந்தனர். திருமணம் ஆகி மூன்று மாதங்கள் கடந்து இருந்தன. வீட்டில் முதலில் முணுமுணுப்பாக ஆரம்பித்தப் பேச்சுக்கள் இப்பொழுது கண், காது, மூக்கு வைத்துக் கொஞ்சம் பெரிதாகப் பேசப்பட்டது. இவர்கள் மட்டும் தனியே இருந்து இருந்தால் அவர்கள் வேலையை அவர்கள் பார்த்துக் கொண்டு தேவ் கொஞ்சம் விட்டுக் கொடுத்துக் கோதாவை அரவணைத்துச் சென்றிருப்பான்.
கூட்டுக் குடும்பம் என்பதால் அனைவரும் விவாதிக்கும் விஷயமானது. கோதா வீட்டுக்கு வரும் பொழுது அவளின் காதுக்கு எந்த விஷயமும் செல்லாதவாறு தேவ்வும், ராஜேஸ்வரியும் பார்த்துக் கொண்டனர்.
சத்யபாபுவிற்கு இந்த விஷயம் கொஞ்சமும் ஏற்புடையதாக இல்லை. அவர்களின் தொழில் வட்டத்திலும் திருமணத்தின் பின் எதற்கு இவ்வாறு தனித் தனியாக வசிக்கின்றனர் என்று கேட்கத் தொடங்கினர். சத்யபாபுவின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது.
மனைவியும் மகனும் மருமகளை ஆதரிப்பதால் தன் பெற்றோரிடம் அவரின் மனக் குமுறலைக் கொட்டினார். மூத்த தலைமுறையினருக்கும் தம்பதியர் பிரிந்து இருப்பது உவப்பாக இல்லாததால் பத்மாவை அழைத்துப் பேசினர். பத்மாவுக்கும் மகள் வேலைக்குச் செல்வதில் முதலில் இருந்தே விருப்பம் இல்லாததால் இது குறித்து ஶ்ரீநிவாசனிடம் பேச அவரோ ஆடித் தீர்த்து விட்டார்.
“கோதா தனித்துவம் வாய்ந்த படிப்பு படிச்சிருக்கா. அவள் படித்த படிப்புக்கு ஏத்த வேலைக்குப் போகத் தான் செய்வாள். அவள் வேலைக்குச் செல்வதால் வீட்டினர் ஒத்துழைப்பு அவசியம் என்று தான் உன் பிறந்த வீட்டில் சம்பந்தம் செய்ய ஒத்துக் கொண்டேன். வேலைக்குப் போகணும் இல்லை போகக் கூடாது அப்படின்ற முடிவு அவ தான் எடுக்கணும். வீட்ல இருக்கிறவங்க அவளை வேலையை விடச் சொல்லிக் கட்டாயப் படுத்தினால் நான் வேற மாதிரி யோசிக்க வேண்டியது இருக்கும்”
பத்மாவுக்குத் தன் கணவரின் கோபத்தைக் கண்டுக் கொஞ்சம் ஆட்டம் கண்டுவிட்டது. இது எதில் போய் முடியப் போகிறதோ என்ற பதட்டம் அவரை ஆட்கொண்டது.