எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 2

NNK-41

Moderator

அகம் 2​

டைரி​

என் பேரு மலரினியாழ். ஒரு தடவை எனக்கு நாலு வயசுனு அம்மா சொன்னாங்க. ஆனா அப்போ என் பிறந்தநாள் இன்னும் வரல… அதுக்கு இன்னும் நாலு மாசம் இருந்துச்சு. அப்போதானே நாலு வயசு பிறக்கும். இதை சொன்னா அம்மா திட்டுறாங்க… வயசை குறைச்சி சொன்னா ஆயுள் குறையுமாம். எனக்கு இப்போ ஒரு சந்தேகம். இந்த ஆயுள் என்றால் என்ன? ப்ச்!! அம்மாக்கிட்ட விளக்கம் சொன்னேன். நான் குறைச்சி சொல்லலமா சரியாதான் சொன்னேன்னு. அதற்கு அம்மா என்னை திட்டிட்டாங்க. சரியா சொன்னா எப்படி தப்பாகும்? புரியலையே?​

எனக்கு கேள்விகள் முளைச்சிக்கிட்டே இருக்கும். கேள்விகள் அறிவை வளர்க்கும்னு அக்காகிட்ட அம்மா சொன்னது ஞாபகம் இருக்கு. ஆனா நான் கேட்டா மட்டும் திட்டுறாங்க… ஏன்?​

என் அக்கா பூமிகா கேட்டா மட்டும் சமத்துனு பாராட்டுறாங்க… நான் கேட்டா அசடுனு சொல்றாங்க…​

அன்று ஒரு நாள் அண்ணா… ம்ம்.. அண்ணா பெயர் சொல்ல மறந்துட்டேன். அவன் பேரு நிலவன். அது என்னமோ தெரியல. நிலவன், பூமிகா, என்று பிளானட் பெயரா வச்சிட்டு எனக்கு மட்டும் மலரினியாழ் என்று வச்சிருக்காங்க. ஒரு நாள் அதை பற்றி கேட்கனும்.​

சரி என்ன சொல்ல வந்தேன் ஆங்… அன்று கொய்யா மரம் ஏறி பழம் பறிச்சி மேலிருந்து வீசினான். அக்கா குதிச்சு குதிச்சு கேட்ச் பண்ணா… ஜாலியா இருந்துச்சு. நானும் குதிச்சேன் ஆனா பிடிக்க முடியல.. மண்ணில் விழுந்திருச்சி. அதை எடுத்து சாப்பிட்டேன் அக்கா உடனே தட்டிவிட்டுட்டா. மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.​

திருப்பியும் கீழே இருந்த பழம் எடுக்க போனேன். அண்ணா மரத்துல இருந்து ஸ்பைடர்மேன் போல குதிச்சி என்னை தடுத்து பழத்துல ஒட்டியிருந்த மன்னை துடைச்சி கொடுத்துட்டு வீட்டுக்குள்ள போய்ட்டான். ஓ.. சுத்தம் படுத்திதான் சாப்பிடுனும் போல… அதனால்தான் அக்கா தட்டி விட்டா போல.​

பழம் ரொம்ப ருசியா இருந்தது… இன்னும் ஒன்னு சாப்பிட ஆசை வந்துச்சு. மரத்துல ஏறினேன் சுலபமா இருந்துச்சி… பழத்தை பறிச்சு அங்கேயே அமர்ந்து சாப்பிட்டேன்… ஆனா அது துவர்ப்பா இருந்துச்சி… அது எப்படி அண்ணன் கொடுத்தது இனிச்சது? அண்ணனையே கேட்போம் என்று ஸ்பைடர்மேன் போல கீழே குதிச்சேன்.​

கால் வலிச்சது… எழ முயன்றேன் முடியல… அண்ணா எப்படி சரியா எழுந்து நடந்தான்? மறுபடியும் எழுந்தேன். கால் காகிதம் போல மடங்கி என்னை கீழே விழ செய்தது… ஏன்?​

அக்கா வந்தா… ஐயோ என்று கத்தினா.. ஏன்? சத்தம் கேட்டு அம்மா வந்தாங்க. என்னை எழுந்து நிற்க சொன்னாங்க. கால் சொந்தமாக மடங்குது என்றேன். அம்மா முகம் மாறியது… அது என்ன பாவனை? அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது,​

எனக்கு வலிக்குது என்றேன்… அம்மா அழுதாங்க. ஏன்?​

அண்ணன் என்னை விசித்திரமாக பார்த்தான். வலி என்றால் ஏன் அழல என்று கேட்டான்? ஏன் அழனும் என்று கேட்டேன். அம்மா அழுவதை நிறுத்திட்டாங்க. அக்கா என்னை பார்த்து பைத்தியம் என்றாள். அழவில்லை என்றால் பைத்தியமா? புரியல எனக்கு.​

அப்பாவுக்கு ஃபோன் போனது. வந்தார்… என்னை பார்த்தார். ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார். வெள்ளையாக எதையோ வைத்து கட்டினார் டாக்டர். அவர் கையில் சாக்லெட் இருந்தது. அதை பார்த்ததும் எச்சில் ஊரியது. என் கையில் அதை தினித்தவர் கொஞ்சம் வலிக்கும் அழக்கூடாது என்றார்.​

சாக்லெட்டை வாயில் வைத்து சுவைத்தேன். ம்ம்… இனித்தது… சாப்பிட்டுக்கொண்டே எனக்கு அழுகை வராது என்பதை அவரிடம் சொன்னேன்… ஏன் என்று கேட்டார்…​

அழுகை எப்படி எதுக்காக வரனும் என்று அவரிடம் கேட்டேன். இது எனது பல நாள் கேள்வி அல்லவா.. கேட்டுட்டேன். அவர் என்னை ஆழ்ந்து பார்த்தார். பின்பு டாக்டர் என் அப்பாவை பார்த்தார்… நானும் அப்பாவை பார்த்தேன்… அம்மாவை பார்த்தார்… நானும் அம்மாவை பார்த்தேன்.​

அருகில் வந்து அமர்ந்தவர் “லிசன் பேபி… இப்போழுது உனக்கு ஒரு சாக்லெட் கொடுத்தேனே அது எப்படி இருந்தது?” என்று கேட்டார்.​

யோசித்தேன்… வாயில் போட்டதும் இனித்தது. அதை அப்படியே அவரிடமும் கூறினேன்.​

“ஆங்… அதேபோலதான் அழுகையும். சாக்லேட் சாப்பிட்டதும் இனிக்கிறது என்பதை உணர்கிறாய் அல்லவா? அதேபோல் அழுகை என்பது கண்களிலிருந்து நீரை சிந்துவது. உணர்ச்சிவசப்பட்ட மனிதனின் ஒரு நிலை. அழுகை என்பது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு. சாதாரணமாக வலி ஏற்பட்டால் அழுகை வரும்” என்றார் நீளமாக.​

மெதுவாக அவர் சொன்னதை புரிஞ்சிக்க முயற்சித்து பார்த்தேன். யோசனையானேன்… வலி வந்ததே… பிறகு ஏன் அழுகை வரல? டாக்டரிடம் கேட்டேன். ஒரு நாள் வரும் அதை நான் உணர்வேன் என்றார்.​

பதில் கிடைத்ததும் எனக்குள் சந்தோஷம். ஏதோ சாதித்துவிட்டதுபோல. ஆனால் சக்கரவண்டியில் உலாவுவதுதான் கஷ்டமாக இருந்தது. ஆனால் உட்கார்ந்த இடத்திலேயே சாப்பாடு வந்ததை பார்த்ததும் மத்ததெல்லாம் மறந்தாச்சு. ஹை ஜாலி.​

மாமா குடும்பம் என்னை பார்க்க வந்தாங்க. அதுவும் அவர் கையில் பழங்களும் இனிப்பு வகைகளையும் பார்க்க நாவில் நீரூறியது. மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். பேபி.. செல்லம்.. என்று கொஞ்சி கூப்பிடுவார். அவர் மகன் சுதீஷையும் ரொம்ப பிடிக்கும். நான் எது கேட்டாலும் உடனே வாங்கி தந்திடுவான்.​

இரண்டு நாட்கள் இருந்தவர்கள் மறுநாள் கிளம்ப போகிறார்கள் என்றதும் மனதை என்னவோ செய்தது. சுதீஷ் என்ன நினைத்தானோ தெரியல. அன்று இரவு வீட்டிலேயே முடங்கி கிடக்கிறேன் என்று என்னையும் தள்ளுவண்டியையும் தள்ளிக்கொண்டு வாக்கிங்க்கு அழைத்து சென்றான். இருவருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கினான். ஸ்டராபெர்ரி சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதையே வாங்கி தந்தான்.​

சாப்பிட்டு முடித்தும் வாய் துடைக்க டிஷு கேட்டேன். அவனிடம் இல்லையாம். பரவாயில்லை அவனே துடைத்து விடுகிறேன் என்றான். குனிந்தவன் அவன் உதட்டால் என் வாயை துடைத்தான்.​

எனக்கு பிடிக்க வில்லை. துடைக்கிறேன் என்று என் வாயை எச்சில் செய்து விட்டான். நான் முகம் சுளித்தேன். அசிங்கமா உவ்வேக்காக இருக்கு என்றேன். உடனே என் சட்டையை தூக்கி துடைத்து விட்டவன் அவன் வாயையும் சேர்த்து துடைக்க என் சட்டையில் அவன் உதட்டை வைத்து அழுத்தினான்.​

உவ்வேக் அவன் எச்சில் என் கழுத்தில் எல்லாம் பட்டுச்சு. அவனை தள்ளிவிட்டேன். பேலன்ஸ் இல்லாமல் என் மேலேயே விழுந்துட்டான். அடிப்பட்ட கால் சுர்ரென ரொம்ப வலிக்க ஆரம்பிச்சிருச்சு. கத்தி அழுதேன்.​

தூரத்திலிருந்து அண்ணன் வருவது தெரிஞ்சது. இன்னும் சத்தம் போட்டு அழுதேன். அண்ணன் ஓடி வந்தான். சுதீஷ் காலில் விழுந்து விட்டான் என்று சொல்லி அழுதேன். ஆனால் அண்ணன் சந்தோஷப்பட்டான். நான் கண்ணீர் விட்டுட்டேனாம்.​

ஆம்… என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. முதல் முறையாக எனக்கு அந்த சுரப்பி வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. அண்ணன் சுதீஷுக்கு நன்றி சொன்னான்.​

சுதீஷின் மேல் இருந்த அருவெறுப்பு காணாமல் போனது. ஹேய்!! நான் அழுதுட்டேன் என்று எனக்குள் குதூகலம் உண்டானது. எனக்கு கண்ணீரை வர வழைத்த சுதீஷை பார்த்து புன்னகைத்தேன்.​

நடக்க முடியாததால் மறு வருடம்தான் பள்ளிக்கு சென்றேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. புது ஃபிரண்ட்ஸ் கிடைப்பாங்கல. ஹை ஜாலி!! டீச்சர் வந்தாங்க. சொல்லி கொடுத்தாங்க. சில எழுத்துகள் எனக்கு புலப்படல. m w தலை சாய்த்து சாய்த்து படித்தாலும் மறந்திடுறேன். b d இந்த எழுத்துக்குள் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல… ஹும்.​

நான் மெதுவாக நடந்தேன். காலில் இன்னும் பலம் கூடல… பள்ளிக்கு அக்காவோடுதான் போவேன். என்னால் அவள் பள்ளிக்கு தாமதமாக போறதால ஆசிரியர் திட்டிட்டாராம். பாவம் அக்கா… வீட்டுக்கு வந்ததும் அழுதா.​

திட்டுனா அழுகை வருமா? ப்ச்!! எனக்கு பல விஷயத்துல சந்தேகம் வந்துக்கிட்டே இருக்கு… யார்கிட்ட கேட்க?​

அம்மா என்னை பார்த்தாலே முறைக்கிறாங்க… எனக்கு பதில் சொல்லியே அவங்களுக்கு ஆயுள் குறையுதாம்… ஆயுள்னா என்ன என்று கேட்டதுக்கு கன்னத்துல அறைஞ்சிட்டாங்க. ப்ச்… அம்மா ரொம்ப வயலன்ஸா இருக்காங்க.​

அப்பாக்கு நேரமில்ல. பாவம் வேலை விட்டு வந்ததும் பார்க்கவே டயர்ட்டா இருப்பார். அப்படியும் ஒரு தடவை கேள்வி கேட்டுட்டேன். இதெல்லாம் நீ கவனிக்க மாட்டீயா என்று அப்பா அம்மாவை கேட்க… இருவருக்கும் வாக்குவாதம் வந்திருச்சு.​

ப்ச்!! அதிலிருந்து அம்மா என்னை பார்த்தாலே எதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க… முதலில் முட்டாள் என்று சொன்னாங்க. சந்தேகம் வந்தால் தெளிவு படுத்துவதுதானே முறை. அதை சொன்னேன் அதற்கு பீடை.. சனியன்… என்று திட்டினாங்க. அப்படி என்றால் என்ன?​

அண்ணா எப்பொழுதும் படிச்சிக்கிட்டே இருக்கான். நிறைய கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டிக்கிறான். ஒரு நாள் தண்ணி குடத்தை அக்கா உடைச்சிட்டா. நான்தான் உடைச்சேன்னு அம்மாட்ட பொய் சொல்லிட்டா. நானில்லனு சொன்னதுக்கு மறுபடியும் பீடை… சனியன்னு கத்துனாங்க. நேரா அண்ணன்கிட்ட அம்மா சொன்ன வார்த்தைகளை சொல்லி அர்த்தம் கேட்டேன். அண்ணா அடிச்சிட்டான்.​

அது தவறான வார்த்தைகளாம். ஓ… அப்படி என்றால் அந்த வார்த்தைகளை சொன்ன அம்மாவை யார் அடிப்பது? அக்காவை பார்த்தேன். கிட்ட வந்தா கொன்னுடுவேன்னு எச்சரித்தா. மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. ப்ச்!! யார் கூடவும் பேச பிடிக்கல… யாருக்கும் என்னை பிடிக்கல.​

சாக்லட் கொடுத்து எனக்கு அழுகையை பற்றி விளக்கம் கொடுத்த டாக்டர் ஞாபகம் வந்தது. அவர்கிட்ட போகலமானு யோசிச்சேன். என்ன சொல்லி போறது? மறுபடியும் காலை உடைச்சிக்கலாமா? ஆனா… வலிக்குமே!! சந்தேகங்களுக்கான பதிலை விட வலியின் வீரியம் அதிகம் என்பதை உணர்ந்ததும் அந்த ஐடியாவை தூக்கி போட்டுட்டேன்.​

பேச்சை குறைத்தேன்… யாரும் என்னை குறையாக பார்க்கல. நிம்மதியாக இருந்தது. வசைகள் வாங்குவதில்லை…. இனிமையாக இருந்தது. யாரும் கை நீட்டல… சந்தோஷமாக இருந்தது.​

இனி நான்... என் மனம்… என் எண்ணங்கள் அவற்றை கோலாச்சும் உரிமை எனது. என் தனி உலகம்… அதில் யாரையும் அனுமதிக்க தேவையில்ல. பிடித்திருந்தது மிகவும் பிடித்திருந்தது. வீட்டினர் யாரும் தடை செய்யவில்லை… ம்ம்… கவனிக்கல அதுதான் சரியான வார்த்தை. பரவாயில்ல இதுவுமே ஜாலியாக இருக்குது.​

பள்ளியில் புது கணித ஆசிரியை மிஸ் மல்லிகாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவங்க அவ்வளவு அழகு. நடிகை சினேகா போல இருப்பாங்க. சிரிச்சாலும் அப்படிதான் இருப்பாங்க. என்னை மலரினியாழ் என்று முழு பெயரை வச்சி அழகா கூப்பிடுவாங்க. அது வித்தியாசமா இருந்தது. ஓ… சொல்ல மறந்துட்டேன். என்னை வீட்டில எல்லோரும் மலர் என்றுதான் கூப்பிடுவாங்க.​

புதிய நண்பர்கள் கிடைப்பாங்க என்ற நோக்கத்துடன் ஜாலியாக பள்ளிக்கு சென்ற என்னை பாடங்களிடமும் நட்பு வளர்க்கலாம் என்ற எண்ணத்தை பதிய வச்சாங்க மிஸ். அவங்க சொல்லி கொடுக்கும் விதம் எனக்கு புரியும்படி இருந்தது. மனசுக்கு பிடிச்சா பாடமும் சுலபமா புரியும் போல…​

மற்ற ஆசிரியர்களிடம் மிஸ் மல்லிகா சொல்லி கொடுப்பதுபோல் கத்துக்கொடுக்க சொன்னேன். அது தவறா? தெரியல… டீச்சர் திட்டிட்டாங்க. மிஸ் மல்லிகாவிடம் சொன்னேன். அவங்க என்னை அணைச்சிக்கிட்டாங்க. ஏன்? நான் என்ன செய்யனும்? எனக்கு ஒன்னும் புரியல.​

நீ ஏன் என்னை அணைக்கல என்று மிஸ் கேட்டாங்க. என் கைகளை பார்த்தேன். அவை நிலத்தை நோக்கி இருக்க.. அவங்க முகத்தை புரியாமல் பார்த்தேன். அழகா சிரிச்சுக்கிட்டே விளக்கினாங்க. அணைப்பது என்பது ஒருவகை உணர்ச்சியின் வெளிப்பாடு. சந்தோஷமோ துக்கமோ கட்டி அணைத்துக்கொண்டால் என் உணர்வுகளை உன்னிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று அர்த்தம் என்று சொன்னாங்க.​

மிஸ்ஸின் விளக்கம் எனக்கு பிடிச்சிருந்தது. மிஸ்ஸை அணைச்சிக்கிட்டேன். அன்றுமுதல் மிஸ்ஸிடமிருந்து எனக்கு தனி கவனிப்பு கிடைச்சது.​

என் பள்ளி தோழர்களுக்கு அதில் பொறாமை. ஏன் என்று தெரியல? அதைப்பற்றி எனக்கு கவலையும் இல்ல. என் தனி உலகத்தில் மல்லிகா டீச்சரையும் இணைச்சிக்கிட்டேன்.​

‘கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடம் கேட்டு பெறுவது தவறில்லை’ என்று சொன்னாங்க. ஆமாம்தானே எனக்கு தெரியாததை கேட்டுதானே பெறனும். வாவ்… சந்தோஷமாக இருந்தது. ஆனால் மற்ற மாணவர்கள் எல்லாம் என்னை விரோதிபோல பார்ப்பதை பற்றி மிஸ்ஸிடம் சொன்னேன்.​

‘பொறாமை கொள்வதும் காழ்ப்புணர்வும் கொள்வதும் அவரவரின் தவறே அன்றி கிடைக்கப்பெற்றவரின் தவறல்ல’ என்று அழகா சொன்னாங்க’ மிஸ். என் சந்தேகங்களை தீர்க்க வந்த கடவுளாய் மிஸ் எனக்கு தெரிஞ்சாங்க. ஐ லவ் மிஸ் மல்லிகா.​

திரை விலக பார்க்கிறேன். விலக்கப்படுகிறேன்.​

 
Last edited:
அவ கேள்வி கேக்குறதுதான் பிரச்சினையா வீட்டுல உள்ளவங்களுக்கு??!!!... ஏன் அழுகை வரலை???... அணைக்க தோனலை!??... என்னவா இருக்கும்???... சுவாரஸ்யமா கொண்டு போறீங்க!!..
 

NNK-41

Moderator
அவ கேள்வி கேக்குறதுதான் பிரச்சினையா வீட்டுல உள்ளவங்களுக்கு??!!!... ஏன் அழுகை வரலை???... அணைக்க தோனலை!??... என்னவா இருக்கும்???... சுவாரஸ்யமா கொண்டு போறீங்க!!..
அவளுக்கு இருக்கும் பிரச்சினையை யாரும் கண்டுக்க மாட்டிக்கிறாங்க... உணரும் காலம் வரும். நன்றி டியர் மா:love:
 
Top