எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் 01

NNK 89

Moderator

கொலுசொலி ஆசைகள் 01

இரவுப்பொழுதின் மடியில் நித்திரையை நோக்கி சென்ற அந்த வீட்டின் படுக்கை அறையின் சுவர் கடிகாரத்தில் நேரமானது ஒன்பதரை எனக் காட்டியது.

"அம்மா! நாளைக்கு நான் ஸ்கூல் போக மாட்டேன், ஆமாதானே?"

"ம்ம்ம்!"

"என்னம்மா, வெறும் ம்ம்ம் மட்டும் சொல்ற, சரினு வாய தொறந்து சொல்லு"

"நீ மொத தடவ கேட்டு இருந்தா, நானும் சரினு சொல்லி இருப்பேன், இதோட எத்தனாவது வாட்டினு தெரியல பாப்பு! இனி ஒரு தடவ நீ திரும்பி இதையே கேட்ட, காலையில ஸ்கூல் கிளப்பி விட்டுருவேன், பேசாம தூங்கு" என முறைத்துக் கொண்டே கூறினாள் அந்தத் தாய்.

"சேரி! சேரி! நீ ரொம்ப அலுத்துகாத, நாளைக்கு எல்லாம் உன் கிட்ட பர்மிசன் வாங்க தேவையே இல்ல" எனக் கூறிய மகள், போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கண்களை மூடினாள்.

தாயின் மனதில் சிரிப்பு உண்டாக, அதை வெளிப்படுத்தாத அவள், தன் ஏழு வயது மகள் பாப்பு என்கிற மித்ரவாகினி தூங்கும் அழகினை ரசிக்கத் தொடங்கிருந்தாள்.

'அப்டியே உறிச்சி வச்சு இருக்கா!' எனப் பெருமிதம் கொண்டவள், சிறிது நேரம் கடக்கவும், மெல்ல மகளின் அருகே சென்று பாப்பு தூங்கிவிட்டாள் என உறுதிச் செய்த பின் தானும் நித்திரைக் கொள்ள, திரும்பிப் படுத்தாள்.

ஆனால் நித்திரை தான் வர மறுத்தது, எப்படி வரும்..? எட்டு வருடங்களின் கனவு வாழ்க்கையானது நாளை முதல் நனவாக போகின்றது.

மறுபடியும் திரும்பி படுக்க போனவள் காலில் அவளின் சாய்விற்கு ஏற்ப வழவழப்பாக அதுவும் சேர்ந்தே சரிந்தது.

அதை நினைவில் ஏத்தியவளின் மனம் விழித்தெழ, எழுந்தமர்ந்தாள்.

முகத்தில் மெல்லிய நகை தோன்றிய சில நொடிகளில் எழுந்து, பீரோ முன் சென்று அதன் கதவினைத் திறந்தாள்.

உள் அடுக்கில் இரண்டு ஒரே மாதிரியான சிறுப்பெட்டிகள் தெரியவும் அதில் ஒன்றை எடுத்துத் திறந்துப் பார்க்க, தங்க நிறத்திலான கண்ணாடி வளையல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் அதனை இருப்பிடத்தில் வைத்தவள், மற்றொருப் பெட்டியை எடுத்தாள்.

அதைத் திறந்தவளிற்கு ஏனோ முகத்தில் ஏக்கம், ஆவல், இழப்புகள், ஆதங்கம் என மாறி மாறி பிரதிபலித்தது.

அந்தப் பெட்டியில் இருந்த முத்துகள் நிறைந்த ஜோடி கொலுசுகளை கையில் எடுத்தவள், தொங்கிய நிலையில் பிடித்துக் கன்னத்தோடு அணைத்து விழிகள் மூடி, ஆழ்ந்த மூச்சினை இழுத்துவிட்டாள்.

அதை மெல்ல கையில் ஏந்தியவாறு சென்று தரையில் இருந்த பாய் படுக்கையில் அமர்ந்த பின், பழைய கொலுசினை கழட்டிவைத்து விட்டு, கையில் எடுத்த வந்த அவை இரண்டையும் அணிந்துக் கொண்டாள்.

அணிந்த நேரத்தில் கால்களைத் திருப்ப, அதில் இருந்து வந்த கொலுசொலி நீண்ட வருடங்கள் கழித்து சலசலத்தது. மனம் திடுக்கிட, சட்டென்று திரும்பி மகளைக் கண்டாள்.

அவளோ ஆழ்ந்த நித்திரையில் தென்பட, மெல்ல கால்களை நீட்டியவாறு படுக்கையில் சரிந்தாள், செந்தாமரை.

இத்தனை நாட்கள் ஒற்றை முத்துப் பொருந்திய மெல்லிய கொலுசுகளைப் போட்டிருந்தவளிற்கு, இப்பொழுது பல முத்துகள் தொங்கிய பட்டையான கொலுசு கனமாக தெரிந்தாலும், மனதில் அது லேசான உணர்வையே அளித்தது.

எட்டு வருடங்களாக கனத்த மனம், இன்று லேசான உணர்வை அடைய காரணம்...?

கண்களை மூடியும் நித்திரையின்றி தவித்தவள், நேரத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை நோக்கியப்படி காத்திருக்க, அதிகாலை நான்கு மணியை எட்டிய வேளையில், மெல்ல பாப்புவிடம் இருந்து விலகி தலையணையை எடுத்துப் பக்கத்தில் வைத்துவிட்டு எழுந்து நடந்தாள்.

அவளுடன் சேர்ந்து கொலுசொலியும் நடக்க, கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தாள்.

ஆனாலும் மனம் அந்தச் சங்கடத்தைப் புறம் தள்ளிவிட்டு அவளிற்கு ஆறுதலாக, 'செந்தா! விடிஞ்சுட்டு, போய் சீக்கிரம் வேலையைப் பாரு, இதுக்காக தானே நீ காத்துட்டு இருந்த, போடி' என்றது.

செந்தா, தனக்கு தேவையான உடையை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி, வீட்டின் பின்பக்கம் நடக்க அறையின் வாயிற்குச் சென்றாள்.

அரசாங்கம் மானியம் கொடுத்து உதவிய தொகுப்பு வீடு திட்டத்தில், இன்னும் கொஞ்சம் விரிவுப்படுத்தி கட்டப்பட்டிருந்தது செந்தா வீடு.

முன்பக்கம் சிறிய போர்டிகோ, உள்ளே நுழைந்ததும் இடதுப்பக்கம் சிறிய படுக்கும் அறை, எதிரில் ஹால், அதன் பின் வலதுப் பக்கம் சிறிய அடுப்பறை, அதன் எதிரில் சிறிய டேபிள் போடும் இடம். படுக்கும் அறை, டேபிள் இடம் இரண்டிற்கும் நடுவே சாமி கும்பிடுவதற்கு அலமாரி சுவருடன் கதவு திறந்து மூடுவது போல் அமைக்கப்பட்டிருந்தது.

அவ்வளவுதான் முழு வீடும். பின்னால் அவ்வீட்டினை ஒட்டியவாறு விறகு அடுப்பு பயன்படுத்த ஒரு ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட கொட்டகை அமைந்திருந்தது.

அதன் பின்னே குளிப்பதற்கு, கழிவறை என தனிதனியாக ஆனால் ஒரே இணைப்பில் கட்டப்பட்டிருந்தது பாத்ரூம்.

செந்தா மெல்ல நடந்தாலும் அவளின் கொலுசொலியில் திரும்பிப் படுத்தார் அவளின் மாமியார் செவாயி.

"யாரு இவ காலங் காத்தால சலசலப்புல போறவ..." என்றுக் குரல் கொடுத்தார்.

"அத்த! நான் தான் செந்தா..." எனத் தடுமாறி மெல்ல கூற, "நீயா, மணி எத்தன...?" எனக் கேட்டார்.

"நாலு மணியாகுது"

"படுக்குறது தான் தெரியுது, பொசுக்குனு விடிஞ்சுடுது" என மெல்ல எழுந்தமர்ந்தார்.

"நான் போய் குளிச்சுட்டு வரேன் அத்த!"

"ம்ம்ம்! என்ன காலையில குளிக்கப் போற, தொடக்கூடாதா..?"

"இல்ல! இப்ப குளிச்சா சீக்கிரம் வேலை முடிஞ்சுடும், அத்தா....." என நிறுத்தினாள்.

"ஆ! எனக்கும் ராவு முழுசும் தூக்கமே சரியா வரல... போ! போ!" என்றார்.

மனதில்'விடிஞ்சதே தெரியலனு சொல்லிட்டு, தூக்கமே வரலைனு சொல்றாங்க' என எண்ணிக் கொண்டு

செந்தா வேகமாக குளியறை நோக்கி சென்றாள்.

காலை ஆறரை மணியிருக்கும்....

வீட்டின் அருகில் இருக்கும் லைன் பைப்பில் தண்ணீர் வர, சுற்றி இருந்த ஐந்து வீடுகளும் தண்ணீர் குடங்களுடன் வந்தனர்.

அது பல அடிப்படை வசதிகள் கிடைத்தும் வசதிகேற்ப மக்கள் வாழும் கலப்பினமான வளர்ச்சியான ஊர்.

அனைத்து வசதிகளும் படைத்தவர்கள், நடுத்தர வசதிகள் பெற்றவர்கள், அடிப்படையான வசதிகள் கொண்டவர்கள் என முன்னேறத் துடிக்கும் கிராமம் சோமபாண்டி.

செந்தா வீடு, அடிப்படை வசதிகளான வீடு, கழிப்பிடம் மட்டுமே கொண்டு இருந்தது, தண்ணீர் வசதியில் அரசு கொடுக்கும் பொதுவான குடிநீர் குழாயை நம்பிருந்தனர். ஒவ்வொரு வீட்டிற்கு என தனியாக அரசு தண்ணீர் குழாய் இருந்தாலும், சாலையின் மேல் உள்ள குழாயில் தான் தண்ணீர் வரும், செந்தா வீடு சாலையின் உட்புறமாக இருந்தமையால் முன்னால் இருந்த வீட்டில் தண்ணீர் பிடிப்பது வழக்கம்.

செந்தா வேகமாக குடத்துடன் செல்ல, அவளைக் கண்ட பக்கத்து வீட்டு சின்ன மாமியார் செல்வி, "என்ன செந்தா, காலையிலே ஒரே சோடனையா இருக்கு, பொடவ, காலுல கொலுசு" என இழுத்தார்.

குடத்தை கீழே வைத்து நிமிர்ந்தவள், "ஒன்னுமில்ல சின்னத்த!" என்றாள்.

"அக்கா! விசயம் தெரியாதா...?" எனக் கேட்டாள் அடுத்த வீட்டு சின்ன மாமியார் வாணி.

"என்ன விசயம்...?"

"இன்னைக்கு தானே பாப்பு அப்பா வரார்.."

"செந்தா! இன்னைக்கா வருது கௌது, நாளைக்குனு அக்கா சொன்னாங்க, பரவாயில்ல பொங்கல் நாளனைக்கு இருக்க கௌது இன்னைக்கே வருதா"

"இன்னைக்கு தான் வராங்க அத்த, பத்து மணிக்கு மேல. அத்தை மறந்துட்டு மாத்தி சொல்லி இருப்பாங்க" என்றாள் செந்தா.

"அது சரி! இப்ப தான் புரியுது, உன் சோடனைக்கும், முகத்துல வர வெளிச்சத்துக்கும் காரணம்." எனக் கிண்டல் அடித்தார் செல்வி.

"அது எல்லாம் ஒன்னுமில்ல செல்வியத்த" என வெட்கம் வர, குடத்தை எடுத்து இடுப்பில் வைத்தவாறு நகர்ந்தாள் செந்தா.

"பாவும் செல்வியக்கா இவ, அவரும் கல்யாணம் பண்ணி பாப்புவை வயித்துல குடுத்துட்டுப் போனவர், கிட்டதட்ட எட்டு வருசம் கழிச்சு இப்ப தான் வரார்." என்றாள் வாணி.

"என்ன செய்றது, அது இவ தலையெழுத்து, செவாயி அக்கா சின்ன மவளைக் கட்டிக் கொடுத்து, வீட்டு வேலை முடியுற வரை அவனை வரவே விடல, இப்பக் கூட ஏதோ விசா மாத்தனுமாம், வந்துட்டுப் போகனுமுனு சொன்னதால வரான் போல"

"ம்ம்ம்! பாப்புவுக்கும் ஏழு வயசாச்சு அக்கா"

"அதான், செவாயி அக்கா சொல்லுது கௌது வந்தா அடுத்து ஒரு புள்ள இருக்கட்டும், ஒரு ஆம்பளப் புள்ள வேணுமுல அப்டினு சொன்னுச்சு. அதுக்கு மகனும், மருமகளும் தனி தனியா இருந்தா என்ன, வேலை முடியனும். வீட்டு வேலை முடிஞ்சுட்டு, மவளுங்க வேலை முடிஞ்சுட்டு, இப்ப வந்தா ஒரு ஆம்பள புள்ள பொறக்கனும். அவ்ளோ தான், ஏதோ! இந்தப் பொண்ணு செந்தா, செவாயி அக்கா போக்குக்கு வாழுறா, இல்லனா இந்தக் காலத்துல எந்தப் பொண்ணு இப்டி வருச கணக்குல பிரிஞ்சு இருப்பா..?"

"ஆமா அக்கா! அவ வீட்டுல அவ்ளோ வசதி இல்ல, அங்க எல்லாம் பொண்ணுவ அதான் இங்கயே கெடக்குறா."

"ம்ம்ம்! என்னமோ போ, அவனும் அம்மா பேச்சைக் கேட்டு அங்கயே கெடக்குறான். பொண்டாட்டி, புள்ளைய பாக்க ஆசையே இல்லாம, பாப்பு பொறந்து இன்னும் பாக்கவே இல்ல"

"எக்கா! அங்க அவன் சரியான குடிகாரனாம், என் தங்கச்சிப் புருசன் அந்த நாடு தானே, கேள்விப்பட்டேன்..."

"ஓ!"

"பொண்டாட்டி சொகம் தேவைப்படல, அந்த ஊருல எல்லாம் கெடைக்காதா என்ன?"

"ம்ம்ம்! அவனுக்காக இவ கன்னிக் களைஞ்சும் கன்னியா காத்திருக்கா, அவன் எப்டி எல்லாம் சுத்தி திரியுறானோ, நமக்கு என்ன? வா போவோம்."

இருவரும் காலை வேலையை விட்டு செந்தா கதையைப் பேசியவாறு கிளம்பினர்.

செல்வி, வாணி இருவருமே செந்தாவிற்கு சின்ன மாமியார்கள், செவாயிக்கு மிகவும் இளமையானவர்கள். செவாயின் சிறிய மாமனார்களின் மருமகள்களாவர், மேலும் செவாயிக்கு இளமையான ஓப்பாடியார்கள். செந்தாவிற்கு அக்கா வயதில் இருந்தாலும் மாமியார் முறையாவர்.

செந்தா மாமனார் வீரய்யன் ஒரே பிள்ளை, குடும்பத்திற்கே மூத்தவரான அவரின் தந்தையோ வீரய்யன் பிறந்ததும் அப்பொழுது இருந்த பஞ்சத்தால் அரசாங்கம் அறிவித்த ஆண்கள் குடும்பக் கட்டுபாடு திட்டத்தில் அரிசி, பணத்திற்காக அறுவைச் சிகிச்சை செய்துக் கொள்ள, அதன் விதிமுறையை பின்பற்றாமல் இயற்கை எய்திவிட்டார்.

வீரய்யன் தாய் நாகம்மா இளம் விதவையாக நாட்களை கடந்தார், வீரய்யனிற்கு செவாயியை திருமணம் செய்து முடித்த நாகம்மா, தான் அதிகம் பெறாத பிள்ளைச் செல்வங்களை மகன் மூலம் உருவாக்கிட எண்ணியதால், செவாயிக்கு ஐந்துப் பிள்ளைகள்.

முதல் மூன்றும் மகள்கள், நான்காவது மகன், ஐந்தாவதும் ஒரு மகள்.

ஆக மொத்தம், ஐந்துப் பிள்ளைகள். முதலாவது பெண் பிறந்த சிலத் தினங்களிலே இறந்திட, அடுத்த மகள் போலியோ வளர்ச்சியில் குறைப்பாட்டுடன் பிறந்திருந்தாள். அவளும் சில வருடங்களில் இறந்துவிட்டாள்.

தற்போது மூன்றாவது மகள் தமிழரசி, நான்காவது ஒரே மகன் கௌது என்கிற கௌதமசந்திரன்(செந்தாமரையின் கணவனும், நம் கொலுசொலியின் நாயகனுமானவன்), ஐந்தாவது மகள் இளவரசி.

வீரய்யனும் ஐம்பது வயது தொடக்கத்திலே உயிரை விட்டு இருந்தார்.

நாகம்மா, செவாயி, கௌது, தமிழ், இளா என ஐவர் மட்டுமே வாழ்ந்த வந்தக் குடும்பத்தில் செந்தாமரை இணைந்திருந்தாள்.

நாகம்மா வயோதிகம் காரணமாக வீட்டின் முன் போர்டிகோவில் கிடக்கும் கட்டிலில் படுத்திருந்தார். நடமாடும் நிலையில் இருந்த வயதான பாட்டி.

காலையில் இருந்து பாப்புவிடம் பதில் சொல்லி மாளவில்லை செந்தாவிற்கு.

செவாயி அதட்டியும் அவள் அடங்கவில்லை, இதுவரை நேரில் பார்க்காத அப்பா! எப்பொழுது வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு அந்த சிறுமியிடம்.

பாட்டி"ஏ குட்டி! என் பேரன் வூட்டுக்கு வந்ததும் என் கிட்ட தான் மொதல வந்துப் பேசிக் கொஞ்சுவான் பாரு" என வம்பிழுத்தார்.

"இல்லல்ல கெழவி பாட்டி! என் கிட்ட தான் என் அப்பா பேசுவாங்க" என முகத்தை விடைத்தாள் பாப்பு.

வாசல் ஓரமாக சாணி அள்ளிக் கொண்டு இருந்த செவாயி, "ஆமா! ஆமா! கெழவிக்கு ஆச தான், இருக்க முடியாம அஞ்ச பெக்க சொல்லி, ரெண்டை தார வார்த்துக் குடுத்து, மூணு வச்சு படாதபாடுபட்டேன். என் மகன் பொழப்பு அங்கப் போய் பாத்து தான் இந்த நிலைக்கு வந்தது, வந்து மொதல கொஞ்சுவானமே, ஏன்! பெத்த நானு என்ன செத்தா போயிட்டேன்" என இழுத்தார்.

வயதானாலும் மாமியார் கூறியதை ஏற்க முடியாமல், செவாயி போட்டிக்கு வந்தார்.

"அப்புச்சி! நீ உயிரோடு இருந்தாலும் அப்பா என்னைய தான் மொதல கொஞ்சுவாரு" எனப் போட்டிப் போட்டாள் பாப்பு.

மூவரும் ஆளாளுக்குப் போட்டி போட, உரிமைப்பட்டவளோ அடுப்படியில் அனைத்தையும் காதில் வாங்கியப்படி போட்டியில் பங்கேற்காமல் சமைத்துக் கொண்டு இருந்தாள்.

ஃபோன் அடிக்க, பாப்பு ஓடிச்சென்று எடுத்தாள்.

"சொல்லுங்க மாமா!"

"அப்படியா! குடுங்க......." என ஆர்வமாக பேசிவிட்டு ஃபோனை செந்தா வருவதற்குள் வைத்துவிட்டாள்.

செவாயி"யாருடி...?" என்று கேட்டு நுழைய,

"அப்புச்சி! ஏர்போர்ட்ல இருந்து கண்ணன் மாமா தான், அப்பா வெளியில் வந்துட்டாரு, நான் பேசிட்டேன். மதியத்துக்கு வீட்டுக்கு வந்துடுவாங்க" என்றாள் மகிழ்ச்சியாக பாப்பு.

"பாப்பு! ஏன் ஃபோனை வச்ச..? நான் பேசி இருப்பேன்ல" எனக் கேட்டாள் செந்தா.

"அதான் நல்ல படியா வந்துட்டான்ல, போய் மதிய வேலையை முடி, மாப்பிள்ளையும் கூட வருவாரு, கொஞ்சம் அப்பளம், பாயசம் வை" எனக் கூறிவிட்டு செவாயி நகர்ந்தார்.

செந்தா மண்டயை அசைத்தப்படி அடுப்படியை நோக்கிச் சென்றாள்.

கண்ணன், தமிழரசியின் கணவன்.

…………

விமான நிலையம்........

"இந்தாங்க மாமா!" என ஃபோனை கண்ணன் கையில் கொடுத்தான் கௌது.

"செந்தா கிட்ட பேசுனீயா..?"

"பாப்பு கிட்ட பேசிட்டேன், அவ சொல்லிடுவா, வாங்க கிளம்புவோம்" என லக்கேஜை எடுத்து கார் டிக்கில் வைத்தான்.

"கௌது! செந்தா கிட்ட ஒரு வார்த்தைப் பேசுடா"

"வீட்டுக்கு தானே போறேன் மாமா, போய் பொறுமையா பேசிக்கிறேன்" எனச் சிரித்தவன், கையில் இருந்த கவரை ஓரமாக வைத்தான்.

அதற்குள் கௌது நண்பன் மகேஷ், "பங்காளி! பாத்து வைடா, இப்ப அதான் முக்கியம், எனக்கு எல்லாம் பொங்கல் கொண்டாட்டமே இத வச்சு தான்" என அந்த டியூட்டி ஃப்ரீ கவரை பத்திரமாக நகர்த்தி வைத்தான்.

கௌது அவன் முதுகில் அடித்துவிட்டு, முன்னே சென்ற கண்ணனை கண் காட்டியவாறு கார் கதவு அருகே சென்றான்.

காரில் மூவரும் அமர, கண்ணனே காரை ஓட்டினான்.

"அப்புறம் கௌது, எத்தனை நாள் லீவ்..?"

"மூணு மாசம் மாமா!"

"அது சரி! இனிமே இப்டி மொத்தமா அங்கத் தங்கிடாம வருசத்துக்கு ஒரு தடவ வந்துட்டு போ, நீயும் பொங்கலைப் பாத்து ரொம்ப வருசமாச்சு"

"ம்ம்ம்! பாப்போம் மாமா"

"மாமா! இந்தத் தடவை ஒரு பையனை ரெடிப் பண்ணிட்டு போனா அப்புறம் பத்து வருசம் எட்டிப் பாக்க மாட்டான். ஒரேதா பாப்பு கல்யாணத்துக்கு வருவான் பாருங்க" என நக்கல் அடித்தான் மகேஷ்.

"டேய்! பேசாம இரு, நான் என்ன வேணுனா வரல மாமா, நம்ம குடும்ப சூழ்நிலை அப்டி அமைஞ்சுட்டு" என்றான் இதழில் சிரிப்பை வெளியிட்டவாறு.

"போதும்! இன்னும் எத்தன நாளைக்கு இதையே சொல்லி கடத்துவ, அந்தப் பொண்ணு செந்தா பாவமுடா"

"என்ன மாமா பண்றது, நான் என்ன இன்ஞ்சினியரா படிச்சு இருக்கேன், பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போக, இல்ல, மாச மாசம் லட்ச கணக்கில் சம்பாரிக்கிறனா? ஏதோ டிகிரி முடிச்சு கிடைச்ச வேலையில் ஓட்டிட்டு இருக்கேன். அவ எல்லாம் புரிஞ்சுப்பா" என்றான்.

கொலுசொலி ஆசைகள்....

(கொலுசொலி ஆசைகள்...

இந்தக் கதையானது கணவன்- மனைவி இருவரின் காதல் வாழ்க்கையை மையப்படுத்தியே நகரவுள்ளது.

திருமணமாகி மனைவியை விட்டு வெளிநாடு சென்ற கணவன் சில வருடங்கள் கழித்து வருகையால் இருவரின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள்.

எட்டு வருடப்பிரிவில் மனைவி ஏங்கியது கணவனின் மனதில் இருந்ததா..? குழந்தைப் பிறந்த பின் பெண்களின் காதல், அன்பு குடும்பத்தில் உள்ள பெரியவர்களால் நிராகரிப்படுவது இயற்கையான ஒன்று.

அதிலும் அதை உணராத கணவன் குடும்பத்தின் அனைத்திற்கும் தலை ஆட்டுவது அதை விட கொடுமை.

இங்கு கௌது உணராத காதலை செந்தா உணர்த்துவாளா...? அவளின் கொலுசொலியில் தான் அத்தனை ஆசைகளும் அடங்கியுள்ளது.

தொடர்ந்து இணைவோம் 👍கருத்துகளை பகிரவும்)

 
Last edited:
Top