எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - அத்தியாயம் 03

NNK-41

Moderator

அகம் 3​

கொடைக்கானலுக்கும் போகும் பஸ்ஸில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள் மலர். கூட வருவதாக சொன்ன நிலவனுக்கு நடுவில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. தன்னை மட்டும் தனியாக பிரயாணப்பட சொல்லி விட்டான். வீட்டில் யாரும் ஏதேனும் சொல்லிவிட்டார்களா என்று தெரியவில்லை!​

அண்ணன் ஆயிரம் அறிவுறைகள் சொன்னாலும் படபடப்பு குறையவே மாட்டேன் என்கிறது. ஏன் வர மறுக்கிறான்? என்னவாக இருக்கும்? நான் எப்படி தனியாக அத்தனை தூரம் பிரயாணிப்பது? எல்லோரும் என்னை ஒதுக்கியபோது வராத வலி… இப்பொழுது ஏன் வருகிறது? கொஞ்ச நாட்களாக அவன் ஆதரவாய் இருந்ததாலா? இருக்கலாம்… எனக்கு எதுவுமே நிலைக்காதோ? ஏன்? நான் என்ன தவறு செய்தேன்!! மனதோடு மன்றாடி கொண்டிருந்தாள்.​

தங்கையின் நிலைகண்டு கலங்கி போனான் நிலவன். ஏதோ யோசிப்பதும் பின்பு கலங்குவதுமாக இருந்தவளை பார்த்தவனின் மனம் வலித்தது. ‘என்னை மன்னிச்சிடுமா… எல்லாம் உன் நன்மைகாகத்தான்’ மனதார தங்கையிடம் பேசியவன் அவள் தலையை மென்மையாக கோதிவிட்டு கிளம்பிவிட்டான்,​

‘அவ்வளவுதானா? அண்ணன் என்னை விட்டு சென்றுவிட்டானா?’ சஞ்சலத்துடன் நின்றவள் கைப்பையை இறுக்கமாக பற்றிக்கொண்டு சுற்றும் முற்றும் யாரும் தன்னை கவணிக்கிறார்களா என்று பார்த்தாள். அவரவர்கள் தங்கள் வேலையில் மூழ்கியிருந்தனர். பெருமூச்சு ஒன்று வந்தது. தனிமை அவளுக்கு ஒன்றும் புதிதல்ல. அவளே தன்னை மற்றவரிடமிருந்து தனிமை படுத்திக்கொண்டவள்தான். குடும்பம் என்ற குடையிலிருந்து வெளிவந்து சுதந்திர காற்றை சுவாசிக்க ஏங்கியவள்தான்.​

அவள் நினைத்ததுதான் இப்பொழுது நடந்துக்கொண்டிருக்கிறது. குடையை தவிர்த்து வந்திருக்கிறாள். மழையோ வெயிலோ பனியோ எதுவந்தாகினும் காய்வதும் நனைவதும் அவளது விருப்பு. ஆனால் மனம் சந்தோஷமடைய மட்டேன் என்று அடம் பிடிக்கிறதே.​

வெளியே கொட்டிக்கிடந்த இயற்கையை ரசிக்க சொல்லி மூளை உந்தினாலும், மனதில் ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வு ஒன்று அலாரம் அடித்துக்கொண்டிருந்தது. கடிகாரத்தை பார்த்தாள் சேர வேண்டிய இடத்துக்கு இன்னும் இரண்டு மணி நேரம் உள்ளதால் கண்களை மூடி உறங்க முயன்றாள்.​

“க்ரீச்ச்” என்ற சத்தத்துடன் பஸ் நின்ற உணர்வு வந்ததும் கண்கள் திறந்து நிமிர்ந்து பார்த்தாள். அதற்குள் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டதா என்று கடிகாரத்தை பார்க்க… அது இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதை கண்சிமிட்டி சொன்னது. ஏன் பஸ் நின்றுவிட்டது என்ற கேள்வி எழும்ப… பயத்துடன் எழுந்து நின்றாள்.​

“வா தாயி டீ குடிக்கலாம். இங்கே டீ நல்லாயிருக்கும். அப்படியே சுடச்சுட மிளகாய் பஜ்ஜியும் கிடைக்கும். இந்த குளிருக்கு காரமா மிளகாய் பஜ்ஜியை கடிச்சிட்டு சூடான டீயை குடிச்சா… ம்ம்… ஆஹா அப்படிதானிருக்கும்” எதிர் சீட்டில் அமர்ந்திருந்த பாட்டி ரசித்து சொல்ல… அவர் சொல்வதை கிரகிக்க சில வினாடிகள் எடுத்துக்கொண்டவளுக்கு அவற்றை சுவைக்கும் ஆவல் வந்தது.​

இவரை நம்பலாமா? மனம் ஒரு பக்கம் அச்சமுடுத்த… இறுதியில் பசி மனதை வெல்ல அமைதியாக அந்த மூதாட்டியுடன் கீழே இறங்கினாள்.​

மேகத்துடன் கலந்த ஈரக்காற்று சில்லென அவளை உரசி செல்ல… சிலிர்த்தவள் துப்பட்டாவை இழுத்து போர்த்திக்கொண்டு தோள்களை சுருக்கி முகத்தை சற்று தூக்கி ஈரக்காற்றை முகத்தில் உரசவிட்டு ரசிக்க… ஒரு ஜோடி கண்கள் வஞ்சனையில்லாமல் அவளை ரசித்துக்கொண்டன.​

கடையில் அமர்ந்திருந்த குறும்புகார ஆடவர்கள் சிலர் சீட்டியடித்து அவளை வம்பிழுத்துக்கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் கழித்துதான் நடந்துக்கொண்டிருந்த கிண்டல்கள் தன்னை நோக்கிதான் என்பதை கண்டுக்கொண்டவள் சங்கோஜத்தில் நெளிந்தாள்.​

இவளின் அமைதி அவர்களுக்கு உற்சாகமளித்தது போலும் பாடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு எல்லைமீறி அவள் அங்கங்களை விமர்சிக்க… பயத்தில் கால்கள் நடுங்க ஆரம்பித்ததும் ஆர்டர் செய்த டீயைகூட குடிக்காமல் பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்துவிட்டாள். மனதில் படபடப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதை அடக்க எண்ணி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.​

நான் என்ன பொது சொத்தா? எனக்கென்று ஒரு மனம் இருக்காதா? எப்படி இவங்களால இப்படி நடந்துக்க முடியுது!! நான் இப்பொழுது என்ன செய்ய? ஏன் இப்படி என்னை படைச்சே இறைவா!!​

மனதின் கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் போகவே தன்னிரக்கத்தில் மூடியிருந்த விழியோரம் கண்ணீர் கசிந்து கன்னத்தை ஸ்பரிசிக்க ஆசைப்பட்டு ஊர்ந்து செல்ல… “க்கும்!!” என்ற கனைப்பில் கண்விழித்தாள்.​

ஓர் ஆடவன் அவசர அவசரமாக பஸ்சிலிருந்து இறங்குவது பார்வையில் தென்பட்டது. அவனின் பின்புறம் மட்டுமே தெரிந்தது. அவனின் உயரம்கூட கருத்தில் பதியவில்லை. மின்னலென மறைந்திருந்தான். யாரிவன்?​

எட்டி பார்க்க முனைந்தாள்… கையில் எதுவோ தட்டுப்பட்டது. குனிந்து பார்த்தாள். டீயும் மிளகாய் ப்ஜ்ஜியும் இருந்தது. கூடவே சின்ன குறிப்பு ஒன்று. எடுத்து படித்தவளின் கண்கள் தடாகத்தில் தள்ளாடும் தாமரை இலைபோல் பளபளத்து விரிந்தன.​

‘உன் தோட்டத்து புல்கூட நிமிர்வாய் வாள்போல் துனிந்து நிற்கும் பெண்ணே​

உன் முதுகில் புதிதாய் கூன் முளைத்து விட்டதா என்ன?​

கேள்விக்குறியாய் வளைவதேன்?​

துனிந்து நில் பெண்ணே!!’​

ஏன் இந்த உற்சாகமூட்டும் வார்த்தைகள்? யாருக்காக? ஓ.. சற்றுமுன் நான் பயந்து வந்ததற்காகவா இது? அப்பொழுது இவனும் அங்குதான் இருந்தானோ? எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான் போல… சிந்தனைகள் ஒருபுறமிருக்க கைகள் தானாக தேநீரை தொண்டைக்குள் இறக்கியது. ம்ம்.. ஆஹா… குளிருக்கு இதமாக இருந்தது.​

‘இதம்… ம்ம்… டீயைவிட அந்த வார்த்தைகள்…’ மனம் சுட்டிக்காட்டிய வரிகளை கண்கள் நோக்கின. மறுபடியும் படித்தாள். இப்பொழுது அந்த வார்த்தைகள் டீயைவிட இதமாக்கின. அனிச்சமலராய் இருந்தவளை சூரியனை கண்டு நிமிரும் தாமரையாய் நிமிர வைத்தன வார்த்தைகள். காரணம் அகத்துக்கு புரிந்தது ஆனால் பாவையவள் உணரவில்லை.​

****************​

“நீங்கத்தானே புதுசா வந்த டீச்சரம்மா?” பஸ்சை விட்டு இறங்கியதும் தனக்காக காத்திருந்தவன் போல அருகில் வந்து நின்றவனை அளவிட்டாள் மலர். கண்களில் கணிவுடன் தன்னை பார்த்தவன்மேல் அவளுக்கு மரியாதை வந்தது. கூடவே சிறுபயமும் வந்தது. ஆமென தலையாட்டியவள் தயங்கி நின்றாள்.​

அவள் தயக்கத்தை கண்டவன் யாருக்கோ அழைக்க இன்னுமே பயம் அதிகரித்தது அவளுக்கு. குளிரிலும் உள்ளங்கைகள் பிசிபிசுத்தன. சில வினாடிகளில் அவளுக்கு நிலவன் அழைத்திருந்தான்.​

“ண்ணா..” என்றவளில் குரலில் அத்தனை நடுக்கம். “மலர் அங்கே ஒருத்தர் உனக்காக காரோட காத்திருப்பார். அவர் பெயர் வசந்தன் அவரோட கிளம்புமா” என்றதும் சற்று தெளிந்தவளின் கையிலிருந்த பயண பொதிகையை வாங்கிக்கொண்டவன் காரின் பின் கதவை அவளுக்காக திறக்க… நெகிழ்ந்து போனாள் அவள்.​

அந்த சிறு செயலே அவளுக்குள் சந்தோஷ சாரலை வீச வைத்தது. தனக்கென்று தனி மரியாதை கொடுக்கப்பட்டதை நினைத்து சந்தோஷம் பொங்கியது. அம்மாவும் அக்காவும் இதை பார்த்தார்களேயானால் எப்படி உணர்வார்கள் என்று சிறுபிள்ளையாய் நினைத்துக்கொண்டவள் “தேங்க்ஸ் ண்ணா” என்றாள்.​

“அண்ணனா?” அதிர்ச்சியுடன் கேட்டவன் பின்பு என்ன நினைத்தானோ காரை அமைதியாக எஸ்டேட்டை நோக்கி ஓட்டலானான்.​

“உங்க பேரென்ன ண்ணா?” என்று அவள் கேட்க​

“வசந்தன் மேடம்”​

“என் பேர் மலரினியாழ்… மலர் என்று எல்லோரும் கூப்பிடுவாங்க”​

“சரிங்க மேடம். இனி எல்லோரையும் மலர் மேடம் என்று கூப்பிட சொல்லுறேன்” என்றான்​

“ப்ச்!! இப்போதானே என் பெயரை சொன்னேன். அண்ணானு வேற கூப்பிட்டேன்ல… நீங்க என்னை மலர் என்றே கூப்பிடுங்க..”​

“அது முடியாது மேடம். என் முதலாளிக்கு தெரிஞ்சா சீட்டை கிழிச்சி வீட்டுக்கு அனுப்பிடுவாரு மேடம்” என்று சொன்னதும்​

“ஓ… முதலாளி ரொம்ப கோபக்காரரா?” என்றவளின் வார்த்தைகள் நடுக்கத்துடன் வர… கண்ணாடி வழி அவளை பார்த்த வசந்தன்​

“ரொம்ப நல்லவர் மேடம். தப்பு செஞ்சா மட்டும் கோபப்படுவார். அதனால நான் ஜாக்கிரதையா நடந்துக்குவேன்..” என்று நல்லவிதமாக சொல்ல​

“கோபம் வந்தா அடிப்பாரா? கெட்ட வார்த்தைகளில் திட்டுவாரா? ரூம்ல வச்சி அடைச்சி வச்சிருவாரா?” ஏதோ ஒன்று உந்த அடுக்கடுக்காய் கேட்டுவிட்டாள்.​

காதில் வந்து விழுந்த வார்த்தைகளின் தாக்கத்தில் பிரேக்கை அழுத்தி விட்டான் வசந்தன். சட்டென அவளை திரும்பி பார்க்க… அவள் நிலையில் எந்த மாற்றமுமில்லை… எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.​

“மேடம்.. ஏன் அப்படி கேட்கிறீங்க?” என்றதும்தான் தன் உணர்வு வந்தவள் அமைதியாகி விட்டாள். எஸ்டேட் பங்களா வந்து சேரும் வரையில் அவளில் எந்த மாற்றமும் இல்லை. சொல்லியிருக்க கூடாதோ? வசந்தன் தன்னையே நிந்தித்துக்கொண்டான்.​

***************​

வந்து இரண்டு மணி நேரம் ஆயிற்று. ஒரு குட்டி தூக்கம்கூட போட்டாகிவிட்டது. இன்னும் அண்ணனின் பாஸ்ஸின் நண்பன் வரக்காணோம். வருவதற்குள் குளித்துவிட்டால் நல்லது என்று தோன்ற சற்றுமுன் சமையல்காரம்மா அடையாளம் காட்டிய குளியறைக்குள் நுழைந்தாள். குளியலறை பிரமாண்டமாக இருந்தது. ‘பெத்த பணக்கார்ர் போல’ என்று நினைத்துக்கொண்டாள்.​

உற்சாகத்துடன் குளித்து முடித்தவள் மிதமான ஒப்பனையுடன் கீழே செல்ல படியில் இறங்கினாள். அதே நேரம் வீட்டுக்குள் காதில் அலைபேசியுடன் நுழைந்துக்கொண்டிருந்தான் அந்த நெடியவன். அந்த வாசலையே குள்ளமாக்கியது அவனின் உயரம். அவள் அவனை அளவிட அவனும் படியிலிறங்கி கொண்டிருந்தவளைதான் பார்த்துகொண்டிருந்தான்.​

முகத்தை மறைக்கும் தாடி மீசை, கூர் நாசி… ‘அப்பப்பா அதில் பழத்தை நறுக்கி விடலாம் போலிருக்கே’ என்று எண்ணியவள் அடுத்து இறுகியிருக்கும் அவன் இதழ்களை பார்த்தாள். ‘என்ன இப்படி சிவந்திருக்கு… குளிருக்கு லிப் பால்ம் போட்டிருப்பானோ?’​

அடுத்து அவன் கண்களை பார்க்க… அந்த கழுகு விழிகள் அவளை என்னவோ செய்தன. பயமா பரவசமா என்று தெரியவில்லை. பார்க்காதே என்று மூளை ஆணையிட்டாலும் மனம் சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது. ஏதோ மாயைக்கு கட்டுப்பட்டதுபோல் கால்கள் அவனை நோக்கி சென்றன.​

இங்கே உள்ளே நிழைந்தவனின் நடை அவளை பார்த்ததும் எப்பொழுதோ நின்றுவிட்டது. வருடங்கள் கடந்து நேற்று திருட்டுதனமாக கோவிலில் அவளை பார்க்கையில்… அவளின் தோற்றங்கண்டு மனம் சுக்கு நூறானதை அவன் மட்டுமே அறிவான்.​

வெகுவாக இளைத்திருந்தாள்… முகம் களையிழந்திருந்தது. அதற்கு காரணம் தான்தான் என்பதை எண்ணி நொந்து கொண்டிருக்கையில் சட்டென அவள் பார்வை கோவிலை துளாவியதில் விருட்டென தூணின் பின்னே தன்னை மறைத்துக்கொண்டவனின் மனம் கொண்ட உவகை வார்த்தைகளில் வடிக்க இயலாது. தன்னை அவள் உணர்கிறாள் என்பதில்தான் அத்தனை ஆனந்தம்.​

ஆனாலும் தன் திட்டத்துக்கு அவள் சம்மதிப்பாளா என்ற தவிப்பு மட்டும் அடங்கவே இல்லை. அவளுக்கு சேவகம் செய்ய தான் காத்திருக்க… அவளோ என் வீட்டுக்கு வேலைக்காரியாக வருவதாக சொன்னதும் நொறுங்கி போனேனே… அவள் அறிவாளா?​

இன்று பனிமலராக நின்றவளை தன்னுள் அடக்கிகொள்ள பரபரத்த கைகளை அடக்கியவனால் அவளை வம்பிழுத்தவர்களை துவம்சம் செய்வதை தடுக்க இயலவில்லை. அவர்களை எச்சரித்து விட்டு அவள் ஆர்டர் செய்த டீயை எடுத்து செல்லும் பொழுது அவளின் நிலை கண்டு நொறுங்கிய என் நெஞ்சை அவள் அறிவாளா??​

ஏதேதோ கிருக்கி டீயுடன் வைத்துவிட்டு தான் ஓடிய ஓட்டம்… இப்பொழுது நினைக்கையில்கூட சிரிப்புதான் வருகிறது. ஓட்டப்பந்தயத்தில்கூட இப்படி ஓடியிருக்க மாட்டேன். அப்படியும் மனதை அடக்க இயலாமல் மறைந்துக்கொண்டு அவளின் நடவடிக்கைகளை பார்க்க… தான் கொடுத்த டீயை அவள் ரசித்து குடிக்கையில் அந்த டீ தானாக இருக்க கூடாதா என்ற ஏக்கத்தை அடக்க தான் பட்டபாடு… அப்பப்பா…​

போட்ட திட்டமெல்லாம் அவளை நேரெதிரில் காண்கையில்… மனதை அடக்க முடியும் என்று நம்பியது எல்லாம் தவிடுபொடியானது. அவன் மனமே அவனை வஞ்சம் செய்தது.​

இதோ இப்பொழுது அவள் கண்முன் அறிமுகமற்றவனாக நிற்கையில்… இறைவா என்நிலை எவனுக்கும் வரக்கூடாது. ஆனால் இந்த நிலையை உருவாக்கியவன் நான்தானே!! அவள் அனுபவித்ததில் பாதியேனும் இல்லையில்லை அதற்கு மேலும் நான் அனுபவிக்கவேண்டும். விரும்பியே அனுபவித்து கொள்கிறேன் பெண்ணே. மனம் அரற்றிக்கொண்டிருக்க கண்கள் அவளை நோக்கின. அவன் ஆதித்யா நெடுமாறன்.​

“ஸார்..” வசந்தனின் குரலில் இயல்புக்கு வந்தவன் அவளை பார்க்க.. அதே நேரம் அவளும் சுயத்துக்கு வந்தவள் அதிர்ந்தாள். நானா? நானா ஒருத்தனை ரசிக்கிறேன்? எப்படி? எனக்கு என்ன ஆனது?​

“என்ன வசந்தன் டீச்சரம்மாக்கு வணக்கம் சொல்லும் எண்ணமில்ல போலிருக்கே?” அவள் நிலை உணர்ந்து சகஜமாக்க நினைத்து அவன் சீண்ட… ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவள் பயத்துடன் அவசரமாக படியில் இறங்க முற்படுகையில் தடுக்கி விழ பார்க்க… சினிமா ஹீரோபோல் ஒடி வந்து தடுத்தான் அவன். அது வேறு யாருமல்ல வசந்தன்தான்.​

அந்த கழுகு விழிக்காரனுக்கு பதிலாக வசந்தன் காப்பாற்றியதில் நிம்மதி கொண்டவள் “நன்றி ண்ணா” என்று புன்னகைக்க​

“ஐய்யய்யோ நான் அண்ணா இல்ல!!” என்று வசந்தன் கதறிக்கொண்டே அங்கிருந்தவனை பார்க்க… மலரும் வசந்தனின் பார்வை சென்ற இடத்தை பார்த்தாள். இத்தனை நேரம் அவள் ரசித்த முகம் இப்பொழுது தக்காளியை பூசிவிட்டது போல் சிவந்திருந்தது. கோபமாக இருக்கிறான் என்பதை உணர்ந்ததும் நிலநடுக்கம்போல் நெஞ்சம் நடுங்கியது.​

“கு.. குட் ஈவ்..வினிங் ஸ..ஸார்” எத்தனை முயன்றும் வார்த்தைகள் டைப்படித்தன. இந்த உதடு வேற தேவையில்லாத நேரத்தில் நடுங்கும் என்று நினைத்தவள் உடனே உதடை மேற்பற்களால் கடித்து அடக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் செய்கைகளை கண்ணுற்றவனுக்கு சட்டென வானிலை மாறியது. தக்காளியே நேரில் வந்து இங்கேதானே இருந்தேன் இப்பொழுது எங்கே போனேன் என்று தேடும் அளவுக்கு மென்மையாகியிருந்தது அவன் முகம்.​

“குட் ஈவ்னிங் டீச்சர். ஏன் இப்படி பயப்படுறீங்க? நான் என்ன மிருகம்போலவா இருக்கேன்? என்னையும் மனிதனாக நினைக்க கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே!” என்றவனின் கேலி பேச்சில் சற்று இலகுவானாள் மலர். புன்னகையும் சற்று எட்டிபார்த்தது. ஆனால் வசந்தன்தான் அதிர்ச்சியில் ஜென் நிலைக்கு சென்றுவிட்டான்.​

அவளைக்கண்டவனின் மனம் பெரிய சாதனை செய்துவிட்டதுபோல் குதூகளித்துக்கொண்டது. அவளின் புன்னகையை தொலைக்க வைத்தவன் அவன் என்பதாலோ?​

அகம் திறக்கும் திறப்பானாக அவன்.​

 

kalai karthi

Well-known member
அதியமான் மலர் பழக்கம் போல. அவள் மறந்தும் அவன் பார்ப்பதை உணர்கிறாள்
 

NNK-41

Moderator
அதியமான் மலர் பழக்கம் போல. அவள் மறந்தும் அவன் பார்ப்பதை உணர்கிறாள்
அவனை உணரும் காலம் வெகு அருகில் டியர்:giggle:
 
Top