எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக - அத்தியாயம் 5

admin

Administrator
Staff member

அத்தியாயம் 5​

கார் மீண்டும் புத்தக நிலையத்தை அடைந்ததும் “இப்போது என்ன முடிவு எடுக்கப் போகிறாய்? மீண்டும் அந்த கம்பெனியில் வேலை செய்கிறாயா? இனி எந்த பிரச்சனையும் இருக்காது” என்றான் நிரஞ்சன்.​

“மீண்டும் அங்கே போக பிடிக்கவில்லை நிரு சார். தனியார் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றால் தானே பிரச்சனை, அதுதான் அரசு வேலைக்குத் தேர்வெழுதி அதில் எதாவது வேலை கிடைத்தால் அங்கே சேர்ந்து கொள்ளலாம் என்று, பக்கத்தில் ஒரு தகுதித் தேர்விற்கான பயிற்சி நிலையத்தில் சேர்ந்திருக்கிறேன். அவர்கள் சொன்ன புத்தகங்களை இங்கே வாங்கலாம் என்று வந்தேன்” என்றாள்.​

“சரி, அப்படி அரசு வேலையில் சேர்ந்து விட்டால், உனக்கு இந்த மாதிரிப் பிரச்சனை வராது என்று நினைக்கிறாயா அழகி?” என்றான் அவள் கண்களை உற்று நோக்கியபடி.​

“ஆமாம் தானே. ஒரு பொறுப்பில் இருப்பவரிடம் எப்படி மற்றவர்களால் தவறாக நடக்க முடியும்” என்றாள் எழிலழகி தெளிவான குரலில்.​

“சரி உன் நம்பிக்கை உண்மையாகட்டும் வாழ்த்துக்கள், எப்படியோ ரஞ்சன் லிருந்து நிருனு கூப்பிட்டு இருக்கிறாய். அப்படியே அந்த சார் ஐயும் தவிர்த்து விட்டால் நல்லா இருக்கும்” என்று சிரித்தான்.​

அவனுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு “நீங்கள் இங்கே அடிக்கடி வருவீர்களா நிரு?” என்று கேட்டாள்.​

“ம்ம். இது ஓகே” என்றவன், நான் மனநல மருத்துவராக இருப்பதால் என்னிடம் சிகிச்சைக்காக வர்றவங்களுக்கு சில புத்தகங்களைப் படிக்க சொல்லி பரிந்துரைப்பேன். பெரும்பாலும் அவர்கள் படிக்க மாட்டாங்க. அதனால் நானே புத்தகங்களை வாங்கி சிகிச்சையின்போது அவர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் சொல்வேன்.​

அடுத்த முறை அவர்களுக்கு அதில் என்ன புரிந்தது என்று கேட்பேன். நான் தேடும் புத்தகங்கள் இங்கே கிடைப்பதால் நான் அடிக்கடி இங்கே வருவதுண்டு. நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள். நீயும் புத்தகங்களைப் படிக்க ஆரம்பி” என்றான்​

“நீங்க மனநல மருத்துவர் என்றதும் மனநலம் குன்றியவர்களுக்கான மருத்துவமனையில் மட்டும் வேலை செய்வீங்கனு நினைச்சேன்” என்றாள்.​

“மருத்துவமனையில் வேலை செய்தாலும், மனம் சம்மந்தப்பட்ட நோய் என்பதால் நான் சில நோயாளிகள் வீட்டிற்கு நேரடியாகச் சென்று கவுன்சிலிங் கொடுப்பதும் உண்டு. மன அழுத்தமும் உடனடியாகச் சரி செய்ய வேண்டிய ஒரு நோய். அதற்குச் சரியான வழிகாட்டுதல் இருந்தாலே போதும்” என்றான்.​

“சரி நிரு, என்னோட பயிற்சி வகுப்பிற்கு நேரமாயிடுச்சு, நான் கிளம்பறேன்” என்றாள்​

“அழகி. உன் அலைபேசி எண்ணை எனக்குத் தந்து விட்டுப் போ” என்றான் அவசரமாக.​

“ஏன்” என்று அவள் ஒருமாதிரி பார்க்கவும், “நீயாகப் அழைத்து என்னிடம் உதவி கேட்கமாட்டாய். நீ பாதுகாப்பாக இருக்கிறாயானு தெரிந்து கொள்ள நான் எப்போதாவது உனக்குப் அழைப்பேன்” என்றான் மனதிலிருந்ததை ஒளிக்காமல்.​

'எனக்கு உண்டாகும் இக்கட்டான சூழ்நிலையில் எல்லாம் ஆபத்பாந்தவன் ஆக அழைக்காமலே என்னை இரட்சிக்கறானே… அது போதாது என்று தன் நலனை தெரிந்து கொள்ளவும் நினைக்கிறானே’ என்று எண்ணியபடி அவள் அலைபேசி எண்ணை அவனிடம் கொடுத்து அவன் எண்ணையும் குறித்து கொண்டாள்.​

அடுத்த வந்த நாட்களில் நிரஞ்சன் அலைபேசியில் அழைத்து அவளின் நலம் விசாரிப்பான் என்று அவள் காத்திருக்க, அவனோ இரண்டு வாரங்கள் கழிந்தும் அவளை அழைக்கவே இல்லை.​

அடுத்த நாளே அவளுக்கு அந்த ஆபத்பாந்தவனின் உதவி தேவைபட, நிரஞ்சனாக அவளை அழைத்து பேசுவதற்கு முன் அவளாகவே அவனை அழைத்திருந்தாள்.​

அப்போது அவன் டெல்லியில் ஒரு மனோதத்துவ நிபுணர்கள் மாநாட்டில் கலந்துரையாடி கொண்டிருந்தான். அதனால் அலைபேசியின் ஒலியும் நிறுத்த பட்டிருந்ததால், அவனால் அதை ஏற்க முடியவில்லை.​

சில மணிநேரம் கழித்து தன் அலைபேசியை பார்த்தவன், அதில் அழகியின் எண்ணிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகளை கண்டதும் ஆர்வமும் ஆச்சரியமுமாக அவள் எண்ணிற்கு அழைத்தான். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.​

எதற்காக அழைத்து இருப்பாள். ஒரு வேளை எதாவது பிரச்சனையில் மாட்டி இருப்பாளோ என்று கவலையாக இருந்தது.​

மீண்டும் மீண்டும் அந்த எண்ணிற்கு போன் செய்தான், ஆனால் பதில் இல்லை.​

மனது ஏனோ பாரமாகி விட்டது. அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று தோன்றியது. உள்ளம் பதைக்க தொடங்கவும் சட்டென்று நிதானித்தான்.​

நான் ஏன் பதட்ட படுகிறேன். அவளுக்குப் பிரச்சனையா என்று கூடத் தெரியாது, அப்படியே பிரச்சனை என்றால் எனக்கு என்ன வந்தது என்று சுய அலசலில் சற்று நேரம் யோசித்தவனுக்கு ஒன்று மட்டும் தோன்றியது. அது அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று அவன் மனம் அவளுக்காக அடித்துக் கொண்டது மட்டும் உண்மை.​

அதற்குப் பிறகும் பல முறை அந்த எண்ணிற்கு அழைத்தான். அது அணைத்து வைக்கப்பட்டிருக்கவும் உடனடியாகச் சென்னைக்கு கிளம்ப தயாரானான்.​

சென்னைக்கு சென்றதும், முதலில் அந்தப் புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று அவளுக்காகக் காத்திருந்தான். அவள் வரவே இல்லை. அப்போது தான் உணர்ந்தான், அது ஞாயிற்று கிழமை என்று.​

மறுநாளும் அவள் வரவிற்காக அந்தப் புத்தக நிலையத்திற்கு சென்று அவளுக்காகக் காத்திருக்க தொடங்கினான். அவளின் எண்ணிற்கு விடாமல் முயற்சி செய்து கொண்டிருந்தான். அவளின் அலைபேசி அப்போதும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவளும் வரவே இல்லை.​

பின்பு வேறு வழியே இல்லாமல், அவள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பயிற்சி நிலையத்திற்கு சென்று அவளைப் பற்றி விசாரித்தான். அவர்களும் அவள் மூன்று நாட்களாக வரவில்லை. அலைபேசியிலும் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றனர்.​

இப்போது மேலும் நிரஞ்சனுக்கு பயமாக இருந்தது. அவளுக்கு என்னவாகி இருக்கும் என்று தெரிந்தே ஆக வேண்டும். இல்லை என்றால் தலை வெடித்து விடும் போல இருந்தது.​

காதல் தோல்வியில் மன அழுத்தம் ஏற்பட்டவர்களுக்கு ஆற்றுபடுத்துதல் முறையில் அவர்களைத் தேற்றி இருக்கிறான். ஆனால் இன்று அவன் இதய ஓட்டத்தின் வேகத்தை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.​

வேறு வழியே இல்லை, அவளைப் பற்றித் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று மனம் ஆர்பரிக்க, அவளை அன்று இறக்கி விட்ட அவளின் ஊரை நோக்கிக் காரைச் செலுத்தினான்.​

ஊர் எல்லைவரையே அன்று அவளுடன் அவன் சென்றிருந்ததால், இன்றும் அங்கேயே காரை நிறுத்தி யோசித்தான். அவள் வீடு எங்கே என்று தெரியாது. அவளைப் பற்றி என்னவென்று யாரிடம் விசாரிப்பது?​

ஒரு திருமணமாகாத பெண்ணைப் பற்றி அக்கம் பக்கத்தாரிடம் எப்படி என்ன சொல்லி விசாரிப்பது? அவர்கள் தப்பாக நினைக்கமாட்டார்களா? என்று தோன்றியது.​

சிறிது நேரம் அங்கேயே இருந்து விட்டு, என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் அங்கிருந்து கிளம்பினான். அந்தப் புத்தக நிலையத்திலும், பயிற்சி நிலையத்திலும் மீண்டும் அவள் அங்கே வந்தால் தன்னிடம் தெரிவிக்குமாறு அவன் எண்ணைக் கொடுத்து விட்டுக் கிளம்பினான்.​

மனம் கேட்காமல் பெசன்ட் நகர் பீச்சிற்கு சென்று அன்னம்மாவிடம் போய் அமர்ந்தான்.​

“என்ன சார் எப்பவும் பெளர்ணமி அன்றைக்கு தான் வருவீங்க, இன்னைக்கு அதுவும் இவ்வளவு நேரத்தோட வந்திருக்கீங்க” என்றாள் அன்னம்மாள்.​

“அதெல்லாம் இல்லை அன்னம்மா, நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கலாம்னு வந்தேன்” என்றான்.​

“சொல்லுங்க டாக்டர் சார், தெரிஞ்சதை சொல்றேன்” என்றாள் அன்னம்மா.​

“சமீபத்துல அழகி இங்கே உன்னிடம் பேச வந்தாளா அன்னம்மா?” என்றான் நிரஞ்சன்.​

“யாரு அழகி” என்று சத்தமாகத் தனக்குள் சொல்லியபடி தன் கண்களைச் சுருக்கி பலமாக யோசித்தாள் அன்னம்மா​

“அதுதான், அன்றைக்கு ஒரு பெண்ணை நீயும் நானும் சேர்ந்து காப்பாத்தினோமே அந்தப் பெண்தான் அன்னம்மா” என்றான் பரபரப்புடன்.​

“இல்லையே சார், அதுக்கு பின்னாடி அந்தப் பொண்ணு ஒரே முறைதான் வந்து நன்றி சொல்லிட்டு போச்சு, அதான் உன்னான்டையும் அப்பவே சொல்லிட்டேனே, அதுக்கு பின்னாடி அது வரலையே சார்” என்றாள்​

அன்னம்மாவின் பதிலில் இருந்த ஒரே நம்பிக்கையும் நொறுங்கி விட அமைதியாகி போனான். அந்த முகத்தில் தெரிந்த ஆர்வமும் அதன் பின் அதில் தெரிந்த வேதனையும் கண்ட அன்னம்மா,​

“என்னாச்சு சார், இத்தனை நாளா நான் உன்னை இந்தக் கோலத்துல பார்த்ததே இல்லை. அந்தப் பொண்ணுக்கும் உனக்கும் என்னா சாரே. அதுக்கு என்னாச்சு? எதுக்கு அவங்களை தேடறே?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் அன்னம்மா​

“நீ கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் தெரியலை அன்னம்மா. அவள் ஒரு வேளை இங்கே வந்தால் எனக்கு அழைத்து சொல்லு” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான் நிரஞ்சன்.​

அதன் பிறகு அவ்வப்போது அவள் எங்காவது தென்படுகிறாளா என்று தேடி கொண்டே இருந்தான். அவள் உண்மையில் பிரச்சனையில் இருக்கிறாளா என்று கூட தெரியாமல் திடீரென்று அவள் வீட்டில் சென்று விசாரிக்கவும் மனம் இல்லாமல் குழம்பினான்.​

(தொடரும்)​

 

santhinagaraj

Active member
அழகிக்கு என்ன ஆச்சு ஏன் அத்தனை முறை போன் பண்ணா. அப்பறோம் ஏன் போன அனைச்சு வச்சிருக்கா
 

NNK-64

Moderator
அழகிக்கு என்ன ஆச்சு ஏன் அத்தனை முறை போன் பண்ணா. அப்பறோம் ஏன் போன அனைச்சு வச்சிருக்கா
Wait sis, thank you 💕
 

Mathykarthy

Well-known member
என்னாச்சு எழிலுக்கு 🤔
கூப்பிடாமலே வந்து உதவி செஞ்சவன் எழில் கூப்பிட்ட நேரம் வர முடியாம போச்சு.... 😔
 

NNK-64

Moderator
என்னாச்சு எழிலுக்கு 🤔
கூப்பிடாமலே வந்து உதவி செஞ்சவன் எழில் கூப்பிட்ட நேரம் வர முடியாம போச்சு.... 😔
ஆமா சிஸ் 🥰💐
 
Top