எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக - அத்தியாயம் 6

NNK-64

Moderator

அத்தியாயம் 6​

இப்படியே இரண்டு வாரங்கள் கடந்திருக்க செல்வநாயகம் நிரஞ்சனை அலைபேசியில் அழைத்து பேசினார்.​

“நிரஞ்சன், என் நண்பனின் அம்மா கொஞ்ச நாளாக வித்தியாசமாக நடந்துக்கறாங்களாம். அவன் மருத்துவமனைக்கு வர சங்கடப்பட்டான். நீ கொஞ்சம் அவங்க வீட்டிலேயே போய் சிகிச்சை தர முடியுமா?” என கேட்டார்.​

“கண்டிப்பாக போறேன் அங்கிள்” என்று கூறி அழைப்பை துண்டித்து அவர் சொன்ன விலாசத்திற்கு கிளம்பினான்.​

ஒரு பெரிய பங்களாவிற்குள் கார் நுழைந்தது. அவன் உள்ளே சென்றதும் தாமோதரன் அவனை வரவேற்றார்​

தாமோதரன் தன் மனைவி நிர்மலாவை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று அவரின் அன்னை ஜானகி அம்மாளை அறிமுகம் செய்தார். அவர் எங்கோ வெறித்தபடி அமர்ந்து இருந்தார்.​

கேள்வியாக பார்த்த நிரஞ்சனிடம், “சமீபத்தில் அப்பா இறந்து விட்டார். அப்போது அம்மா அழாமல் வெறித்தபடி அமர்ந்து இருந்தாங்க. அதிர்ச்சியால அப்படி இருக்காங்கன்னு இருந்து விட்டோம். மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அப்படியே இருக்காங்க” என்றார்.​

“வீட்டில் வேறு யாரெல்லாம் இருக்கிறாங்க. அம்மா கூட நேரம் ஒதுக்கி பேசறீங்களா?” என்று கேட்டான்.​

அவர் முகம் கன்ற, “என் மனைவி நிர்மலாவிற்கும், என் அம்மாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை தான். அவள் அரசு அலுவலகத்தில் வேறு வேலை பார்க்கிறாள். நானும் தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவேன். என் ஒரே மகனும் வெளிநாட்டில் படிக்கிறான்” என்றார்.​

“ஆக மொத்தம் இவங்க கூட பேச ஆளே இல்லை அப்படித்தானே? அப்படி தனிமையில் விட்டு விட்டால் மன நோய் வராமல் என்ன செய்யும்?” என்று குற்றம் சாட்டும் குரலில் கேட்டான் நிரஞ்சன்.​

“அதற்கு தான் அம்மாவை பார்த்துக் கொள்ள ஒரு பெண்ணை வேலையில் அமர்த்தி இருக்கேன். அவளை அம்மாவிடம் தினமும் பேச சொல்கிறேன்” என்றார் தாமோதரன் சமாதானமாக.​

“சொந்த பிள்ளை நீங்கள் பேசுவது போல் வருமா? எப்படி எல்லாம் உங்களை வளர்த்து இருப்பாங்க? இனி தினமும் கொஞ்சம் நேரம் அவர்களுடன் பேசுங்கள். நானும் அடிக்கடி அவர்களை வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு ஜானகி அம்மாவை பரிசோதித்து விட்டு சென்றான்.​

அவன் வெளியே செல்ல எத்தனிக்கும் போது பின் பக்கம் அறையில் நிர்மலாவின் குரல் சத்தமாக ஒலித்தது “அந்த கிழவியை பார்த்து கொள்ள தானே வர்ற. எதுக்கு இப்படி மினுக்கிட்டு வர்ற. என் புருஷனை வளைச்சு போடலாம்னு பார்க்கிறாயா?” என்று அந்த பெண்மணி ஏகத்துக்கும் பேசி கொண்டு இருக்க, ஒரு இளம்பெண் அழும் சத்தம் மட்டும் கேட்டது.​

ஒரு நிமிடம் என்னவென்று விசாரிக்கலாமா என்று தோன்றியது. பின்பு பெண்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று எண்ணிக்கொண்டு வெளியே சென்றான்.​

அவன் காரில் ஏறும் போது தோட்டத்தில் இருந்த இரு பணிப்பெண்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.​

“என்னவாம் இந்த நிர்மலா அம்மாவிற்கு, இன்றைக்கு யார் மாட்டினாங்க?” என்று ஒருவள் கேட்க மற்றவளோ “ஜானகி அம்மாவை பார்த்து கொள்ள புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கே அந்த பெண்ணைத்தான்” என்றாள்.​

“பாவம் அந்த பொண்ணு, ரொம்ப எளிமையாக தான் தயாராகி வர்றா. இளம் வயதில் இயற்கை அழகோடு இருக்கும் இவளை பார்த்தால் அந்த அம்மாவிற்கு வயிற்றில் நெருப்பை கட்டியது போல இருக்கும், எங்கே தாமோதரன் ஐயாவை வளைச்சிடவாளோனு பயம். அது தான் அவளை பார்க்கும் போது எல்லாம் திட்டிட்டே இருக்காங்க” என்றாள்.​

“எப்படியோ நாம தப்பித்தோம். நம்மை திட்டிட்டே இருக்கும். நம்மை விட அழகாக ஒருத்தி வரவும் நம்மை மறந்து விட்டது. அதுவரைக்கும் சந்தோசம்” என்று முதலாமவள் பெருமூச்சு விட்டாள்.​

நிரஞ்சன் இது எல்லாம் காதில் விழாததுப்போல தன் காரில் ஏறினான்.​

இப்போது அவனுக்கு எழிலழகி நினைவில் வந்தாள். அவளை போலவே கோழையாக இங்கொரு பெண்.​

‘இவளுக்கு என் அழகியே மேல். எதிர்த்து பேசவில்லை என்றாலும் நீயும் வேண்டாம் உன் வேலையும் வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு வெளியேறி இருப்பாள்.​

இப்போது எங்கே இருக்கிறாளோ? அழகி சீக்கிரம் என்னிடம் வந்துவிடு. உன்னை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வேன்’ என்று எண்ணியபடி காரை பெசன்ட் நகர் கடற்கரை நோக்கி செலுத்தினான்.​

இப்போது எல்லாம் பௌர்ணமிக்காக காத்திருக்காமல் அவள் நினைவு வரும்போதெல்லாம் கடற்கரை சென்று வந்தான்.​

அன்னம்மாவும் நிரஞ்சனிடம் வித்தியாசத்தை உணர்ந்து தான் இருந்தாள்.​

மழிக்காத அவன் தாடியும், கடற்கரையில் யாரையோ தேடும் பாவனையில் அங்குமிங்கும் அலைப்புறும் கண்களும் அவளுக்கு யோசனை தந்தது. “டாக்டர் சாரு கண்ணில் அந்த எழில் பொண்ணு சீக்கிரம் கிடைக்கணும் கடவுளே” என்று வேண்டிக் கொண்டாள்.​

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மாலை நேரத்தில் நிரஞ்சன் தன் வேலைகளை முடித்து விட்டு தாமோதரனின் வீட்டிற்கு சென்றான். ஜானகி அம்மாள் தனியாக இருந்தார். அவரிடம் சற்று அமர்ந்து சகஜமாக பேச தொடங்கினான்.​

அப்போது உள்ளே வந்த தாமோதரன், நிரஞ்சனை காணவும் அவரும் தன் அன்னையுடன் அன்று நடந்தவற்றை சுவாரசியமாக சொல்ல தொடங்கினார். ஜானகி அம்மாள் மகனையே விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தார்.​

நிரஞ்சனும் ‘தாயும் மகனும் பேசி கொள்ளட்டும்’ என்று அந்த அறையில் சற்று உலவினான். அப்போது நிர்மலாவின் குரல் பலத்த சத்தத்துடன் ஓங்கி ஒலித்தது.​

“எங்கடி உங்கள் ஐயா?” என்று சத்தமாக கேட்க பணிப்பெண் ஒருத்தி பதில் சொன்னாள் “அம்மா ஐயா, அவங்க அம்மா அறையில் இருக்காங்க” என்றாள்.​

“நினைச்சேன், நான் இல்லைனா போதும் அந்த மினுக்கிய பார்க்க அந்த மனுசன் போய் இருப்பார். இன்றைக்கு கையும் களவுமாக பிடிச்சு அவளை துரத்தறனா இல்லையா பாரு” என்று தன் தலை முடியை சுற்றி கொண்டையிட்டவாறு நிரஞ்சன் அறைக்குள் நுழைந்தாள்.​

“அம்மா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க” என்ற அந்த பெண்ணின் குரல் காற்றில் கரைந்தது தான் மிச்சம். அவளின் பேச்சை காதில் வாங்காமல் ஆங்காரமாக அறைக்குள் நுழைந்தாள் நிர்மலா.​

“தாமு” என்று கத்தியபடி வந்தவள், “எங்கே அந்த பெண்” என்று அறை முழுவதும் தன் பார்வையை சுழல விட்டாள்.​

“நிர்மலா, அந்த பெண் இன்றைக்கு ஏதோ வேலை இருப்பதாக சொல்லி முன்னாடியே போயிட்டாள். நான் நிரஞ்சன் சார் வந்ததால் தான் அறைக்குள் வந்து அம்மாவிடம் பேசிட்டு இருந்தேன்” என்றார் தாமோதரன் மெல்லிய குரலில்​

அந்த பெண் அறையில் இல்லாததை கண்டு சற்று ஆசுவாசம் அடைந்தாலும், “அவள் என்கிட்ட அனுமதி வாங்காமல் உங்க கிட்ட நேராக பேசி அனுமதி வாங்கியிருக்காள். அப்போ இந்த வீட்டில் நான் யாரு? அதென்ன அவள் உங்க கிட்ட பேசறது? நீங்க ஏன் அவளுக்கு சலுகை தர்றீங்க? என்ன நடக்குது இந்த வீட்டில்?” என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனாள் நிர்மலா.​

தாமோதரனுக்கோ சங்கடமாக இருந்தது. நிரஞ்சன் முன் நிர்மலா சுற்றம் உணராமல் கத்தி கொண்டிருக்க, அவளை சமாதனம் செய்யும் வழி தெரியாமல் தாமோதரன் மலைத்து நின்றார். அவரின் நிலையை உணர்ந்து நிரஞ்சன் அலைபேசியில் பேசுவது போல அங்கிருந்து அகன்றான்.​

எப்படியோ மனைவியை சமாதானம் செய்து அவளை அவர்கள் அறைக்குள் அனுப்பி விட்டு வெளியே வந்தார் தாமோதரன். நிரஞ்சன் வெளி வராந்தாவில் நின்றிருந்தான், உள்ளே போவதா? வேண்டாமா? இல்லை அப்படியே கிளம்பி விடலாமா? என்று ஒரு கணம் யோசித்தான்.​

அதற்குள் தாமோதரன் நிரஞ்சனிடம் வந்து, “ஐ யம் சாரி நிரஞ்சன், என் மனைவி எப்போதும் சந்தேகப்பட்டு சண்டை போடுவாள். அருகில் யார் இருக்கிறார்கள் என்றுகூட பார்க்காமல் இப்படி பேசுவதால் தான் நான் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை” என்றார் வருத்தமான குரலில்.​

“ஐம்பதை கடந்திருப்பீங்க தானே? இந்த வயதில் உங்களை ஏன் சந்தேகப்படறாங்க?” என்று கேட்டான் நிரஞ்சன்.​

“திருமணத்திற்கு பின் நான் என்னிடம் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் பழக ஆரம்பித்தேன். எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது. அவள் எங்கள் வீட்டிற்கும் அடிக்கடி வருவாள். முதலில் என் மனைவிக்கு இதைப்பற்றி எல்லாம் தெரியாது, பிறகு எப்படியோ இங்கிருந்த வேலையாள் ஒருத்தி மூலம் அனைத்தும் தெரிந்து கொண்டாள்.​

என்னை வேண்டாம் என்று அவளால் ஒதுக்க முடியவில்லை. அதனால் அந்த பெண்ணை அவமானப்படுத்தி வெளியேற்றி விட்டாள். அதற்கு பிறகு எந்த பெண் வேலைக்கு வந்தாலும் அவளையும் என்னையும் சம்மந்தபடுத்தி சந்தேகப்படுவாள். பிறகு சண்டை போட்டு அவர்களை வேலையிலிருந்து அனுப்பி விடுவாள்.​

நிறைய பேரால் இங்கே வேலையில் நிலைக்க முடியவில்லை. அவள் குணம் தெரிந்தவர்கள், அவள் அப்படி சண்டை போடும் போது அமைதியாக இருந்து விட்டு மீண்டும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அவளும் அதை மறந்து விட்டு மீண்டும் அந்த பெண்களோடு சகஜமாக பேச ஆரம்பித்து விடுவாள்.​

அவளுக்கு சந்தேகம் என்று தோன்றிய நிமிடத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வாள், அப்படியில்லை என்று தெரிந்ததும் சமாதானம் ஆகி அந்த பெண்களிடமே நன்றாக பேசுவாள். நீங்க எதுவும் தப்பாக நினைத்து கொள்ளாதீங்க” என்று விளக்கினார் தாமோதரன்.​

“இப்போது உங்க மனைவியின் சந்தேகத்திற்கு பலி ஆகி இருக்கிறது, ஜானகி அம்மாவை பார்த்துக் கொள்ள வந்த பெண் அப்படி தானே?” என்றான் நிரஞ்சன் புருவம் உயர்த்தி​

தாமோதரன் தவறு செய்த சிறுபிள்ளை போல தலை கவிழ்ந்தார்.​

“உங்க அம்மாவிற்கு சிகிச்சை தருவதற்கு பதிலாக, உங்க மனைவிக்கு தான் முதலில் சிகிச்சை தரணும் போல இருக்கே. உங்களோட நம்பிக்கை துரோகம் அவங்களை வெகுவாக பாதிச்சு இருக்கு. குற்றவாளியான உங்களை தண்டிக்காம அப்பாவியான பெண்களை தண்டிக்கிறாங்க” என்றான் குற்றம் சாட்டும் குரலில்.​

“உங்க மனைவி எப்போதும் அந்த பெண்ணை திட்டிட்டு இருந்தால், அவளால் உங்க அம்மாவை எப்படி நல்லா பார்த்து கொள்ள முடியும். அவள் நல்ல மனநிலையில் இருந்தால் தானே, ஜானகி அம்மாவிடம் நேர்மறையாக பேசி சிரிக்க முடியும். முதலில் உங்க மனைவிக்கு நம்பிக்கை வரவழையுங்க.​

அந்த பெண்ணிடம் ஜானகி அம்மாவிற்கு பிடித்த விஷயங்களை பற்றி பேசும்படி சொல்லுங்க. அடுத்த முறை நான் வரும் போது நான் அவங்களுக்கு ஜானகி அம்மாவிடம் எப்படி, என்னவெல்லாம் பேச வேண்டும் என்று சொல்கிறேன், இப்போது நான் கிளம்புகிறேன்” என்றான் நிரஞ்சன்​

தாமோதரனுக்கு நிரஞ்சன் பேசியதில் அவமானமாக போய் விட்டது. அவன் சொன்னதும் நியாயம் தானே என்று பெருமூச்செறிந்தார்.​

காரில் தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிரஞ்சனுக்கு ஏனோ அழகியின் நினைவாகவே இருந்தது. அவளை போலவே இன்னொரு பெண் சிக்கலில் இருக்கிறாள் என்று தெரிகிறது.​

ஆனால் ஒரு சின்ன வித்தியாசம், அழகிக்கு பிரச்சனை ஆண்களால் தான். ஆனால் தாமோதரன் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கோ, பெண்ணால் தான் பிரச்சனை. பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருப்பது விந்தையிலும் விந்தை.​

கணவன் செய்த தவறுக்கு, தண்டனை அவர்களிடம் பணிபுரிய வரும் பெண்களுக்கா? இதென்ன கொடுமை? கணவனை கண்டிக்காமல் தன்னிடம் வேலைக்கு வரும் பெண்களை இழிவாக பேசுவதா?​

ஒரு பெண் தவறியே போய் இருந்தாலும் அது அந்த ஆண்மகனின் கட்டாயத்தாலே நடந்திருக்கலாம் தானே. ஆனால் ஒட்டு மொத்த சமூகம் பெண்களையே குறை கூறும் போது, இந்த நிர்மலா மட்டும் என்ன விதிவிலக்கா? என்று தனக்குள் எண்ணியபடி வீட்டிற்கு வந்தான்.​

பலன் இருக்காது என்று தெரிந்தும் அழகியின் அலைப்பேசி எண்ணிற்கு அழைத்தான். அது அப்போதும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.​

அலுப்புடன் தன் படுக்கையில் படுத்தவனுக்கு, முதல் நாள் அழகியை சந்தித்தது நினைவில் வந்தது. அந்த ராஜூவின் கைகளை அவன் தடுத்து நிறுத்திய போது திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாளே, அன்றே, அந்த நொடியே அவனுக்குள் ஒரு மின்னல். அவளின் கைப்பற்றி தன்னிடம் இழுத்தபோது ஒரு கோழி குஞ்சு போல அவன் மார்பில் அவள் ஒடுங்கி நி்ன்ற போது, ‘கவலைப்படாதே, நான் இருக்கிறேன், உனக்காக நான் இருக்கிறேன்’ என்று அப்போதே ஆதரவாக அணைத்து கொள்ள துடித்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கினான்.​

அவள் வேறொருவனின் காதலியாக அறிமுகமாகி இருக்காவிட்டால், முதல் பார்வையிலே அவனை கவர்ந்த முதல் காதலியாகி இருப்பாள். ஆம், இதுவரை எழிலழகியை போல யாரும் அவனை கவர்ந்திருக்கவில்லை. ஆனால் அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.​

சந்திக்கும் சமயம் எல்லாம் எதாவது பிரச்சனையோடே வருகிறாள். இதில் அவன் எங்கே தன் காதலை அவளுக்கு உணர்த்துவது? கடவுளே எங்களின் அடுத்த சந்திப்பாவது இனிமையான ஒரு தருணமாக இருக்க வேண்டும். சீக்கிரமே அவளை என் கண்ணில் படுமாறு செய்” என்று கண்மூடி வேண்டிக் கொண்டு கண் அயர்ந்தான்.​

அவன் வேண்டிய வரம், எழிலழகியை சீக்கிரமே சந்திக்க வேண்டும் என்பது. அது கூடிய சீக்கிரமே நடக்கும். ஆனால் அது இனிமையான தருணமாக இருக்குமா?​

(தொடரும்)​

 

Attachments

  • WhatsApp Image 2023-12-19 at 12.40.23 PM.jpeg
    WhatsApp Image 2023-12-19 at 12.40.23 PM.jpeg
    83.9 KB · Views: 0

Mathykarthy

Well-known member
நிரஞ்சன் ரொம்ப சரியா சொன்னான்.... டிரீட்மென்ட் ரொம்பவே அவசியம் தாமு மனைவிக்கு.... புருஷனை எதுவும் பண்ண முடியாம தன்னோட இயலாமையை கோபத்தை வேலைக்கு வர்றவங்க மேல காட்டுறாங்க...

இந்த பொண்ணு உன்னோட அழகியா இருக்கப் போறா நிரஞ்சன்.... மறுபடியும் ஒரு பிரச்சனையோட தான் உன்னை சந்திக்கப் போறா போல.... 😖😖😖😖😖😖
 

NNK-64

Moderator
நிரஞ்சன் ரொம்ப சரியா சொன்னான்.... டிரீட்மென்ட் ரொம்பவே அவசியம் தாமு மனைவிக்கு.... புருஷனை எதுவும் பண்ண முடியாம தன்னோட இயலாமையை கோபத்தை வேலைக்கு வர்றவங்க மேல காட்டுறாங்க...

இந்த பொண்ணு உன்னோட அழகியா இருக்கப் போறா நிரஞ்சன்.... மறுபடியும் ஒரு பிரச்சனையோட தான் உன்னை சந்திக்கப் போறா போல.... 😖😖😖😖😖😖
Thank you sis ❤️💞
 
அந்த பொன்னே நம்ம அழகி தானோ??... நிரஞ்சன் கேட்டது சரி தானே!??... ஆனாலும் புரிஞ்சுக்கவா போறாங்க!!.அப்படி என்ன சூழ்நிலையில சந்திக்க போறாங்கன்னு தெரிலையே!!..
 

NNK-64

Moderator
அந்த பொன்னே நம்ம அழகி தானோ??... நிரஞ்சன் கேட்டது சரி தானே!??... ஆனாலும் புரிஞ்சுக்கவா போறாங்க!!.அப்படி என்ன சூழ்நிலையில சந்திக்க போறாங்கன்னு தெரிலையே!!..
Thank you sis 💕
 
Top