எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக - அத்தியாயம் 7

NNK-64

Moderator

அத்தியாயம் 7​

நிரஞ்சன் மறுநாள் வழக்கம் போல் தன் வேலைகளை முடித்து மருத்துவமனைக்கு சென்றான். அங்கே வேலை நேரம் முடிந்ததும் வழக்கமாக செல்லும் வீடுகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு சென்றான்.​

ஏனோ தாமோதரன் வீட்டு சூழ்நிலை பார்த்து அங்கே போகவே அவனுக்கு விருப்பமில்லை. இருந்தாலும் சிகிச்சை அளிப்பது தன் கடமை, ஒத்துக் கொண்ட வேலையிலிருந்து ஒதுங்கி கொள்வது அவனுக்கு பிடிக்காது. எனவே தாமோதரனின் வீட்டிற்கு சென்றான்.​

வீட்டிற்குள் நுழையும் போதே நிர்மலாவில் குரல் ஓங்கி ஒலித்தது. இந்த பெண்மணி இன்று வேலைக்கு செல்லவில்லையா? இவ்வளவு சீக்கிரமாகவே சண்டை தொடங்கி விட்டது போலிருக்கிறதே என்று அலுத்து கொண்டு ஜானகி அம்மாவின் அறைக்குள் நுழைந்தான்.​

இன்று நிரஞ்சன் சற்று சீக்கிரமாகவே வந்து இருந்தான். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது, ஒன்று நிர்மலா வருவதற்கு முன்பே சென்று அவர்கள் வருவதற்குள் கிளம்பி விடவேண்டும். எங்கே தன்னையும் மீறி அந்த பெண்மணியை திட்டி விடுவோமோ என்று அவனுக்கு அச்சமாக இருந்தது.​

மற்றொன்று அந்த பெண்ணை சந்தித்து ஜானகி அம்மாவிடம் எவ்வாறு பேச்சு கொடுக்க வேண்டும் என்று சொல்லி தர எண்ணி இருந்தான். ஆனாலும் அவள் இன்றும் அறையில் இல்லை.​

“அம்மா எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தான் நிரஞ்சன்.​

சுற்றும் முற்றும் மெதுவாக திரும்பி பார்த்தார் ஜானகி அம்மாள். வெளியே நிர்மலாவின் குரல் ஓங்கி ஒலித்து கொண்டது. அந்த பெண்ணை தான் திட்டி கொண்டிருக்கிறார் போலும்.​

எப்போதும் எதுவும் கண்ணில் படாமல் வெறித்து பார்த்தபடி இருக்கும் ஜானகி அம்மாள் இப்போது சுற்றும் முற்றம் பார்க்கவும், ஆச்சரியமாக புருவம் சுருக்கினான் நிரஞ்சன்.​

அந்த அம்மா அவனை தன்னருகே வரும்படி சைகை செய்யவும், ஆச்சரியமும் வியப்புமாக அவரருகில் குனிந்தான். அவர் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாக பேச தொடங்கினார்.​

“தம்பி, நீ பார்க்கறதுக்கு என் பேரன் மாதிரி இருக்க. அந்த பொண்ணு என் மருமகள் கிட்ட மாட்டிட்டு இருக்காள். அவளை காப்பாற்று, உனக்கு புண்ணியமாக போகும்” என்றார்.​

“எந்த பொண்ணு பாட்டி? உங்களுக்கு பேச வருமா? ஏன் இத்தனை நாள் பேசாமல் இருந்தீங்க?” என்று கேட்டான் நிரஞ்சன் வியப்பை அடக்க முடியாமல்.​

பேச முடியாமல் என்ன தம்பி, என் கணவர் இருந்தவரைக்கும், நான் அவருக்கு துணையாக, எனக்கு அவர் துணையாக இருந்தோம். அவர் போன பின்னாடி இந்த வீட்டில் என்னிடம் பேச யாரு இருக்காங்க?​

என் மகன் செய்த தப்பை குத்தி காட்டியே என் மருமகள் அவனை அடக்க பழகிட்டாள். அவனும் குற்ற உணர்ச்சியால் அவளை எதிர்த்து கேள்வி கேட்காமல் அடங்கி போக ஆரம்பிச்சுட்டான். எங்க கிட்ட பேசறதேயே விட்டுட்டான்.​

பிறகு நான் யாரு கிட்ட பேச? வேலைக்காரங்க கிட்ட பேசுனாலும் உங்க அம்மா என்னை பற்றி வேலை ஆட்களிடம் குறை சொல்லிட்டு இருக்காங்க? அவங்க என்னை எப்படி மதிப்பாங்கனு பிரச்சனையை கூட்டுவா? அதுதான் பேசறதே வேண்டாம்னு விட்டுட்டேன்.​

ஆனால் என் மகன் அந்த பொண்ணை வேலைக்கு வைத்தான். அவள் வந்த பின்னாடி எனக்கு எவ்வளவு ஆதரவாக இருந்தது தெரியுமா? உன்னிடம் மனம் விட்டு என்னால் பேச முடியாது, காரணம் என் மகனோ மருமகளோ இருப்பாங்க. அதனால் அந்த பொண்ணுகிட்ட சகஜமாக பேசிட்டு இருப்பேன்.​

நீ என் மகனுக்கு அறிவுரை சொன்னது எல்லாம் நானும் கேட்டுட்டு தான் இருந்தேன். அதனால் தானோ என்னவோ இன்றைக்கு என் மகன் என்னை பார்க்க வந்தான்.​

அவனுக்கு இந்த பொண்ணு காபி கொண்டு வந்து கொடுத்தாள், தவறுதலாக அது கீழே விழ, அவள் அதை சுத்தம் செய்ய கிளம்பும் போது தவறி விழ போனாள். என் மகன் தாமு அவளை விழாமல் தாங்கி பிடிக்கவும் என் மருமகள் இங்கே வரவும் சரியாக இருந்தது.​

அதற்கு பிறகு என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லாமலே உனக்கு புரிந்து இருக்கும். அந்த பெண்ணை தவறாக நினைத்து என் மருமகள் திட்டி கொண்டே இருக்கிறாள். என் மகன் எதிர்த்து பேச துணிவில்லாமல் மரம் போல நின்று கொண்டிருக்கிறான்.​

என் பேச்சு எல்லாம் அவள் கிட்ட எடுபடாது. நீ கொஞ்சம் அங்கே போய் என்னனு பாரேன்? ரொம்பவும் பேசிட்டாள் என்றால் அந்த பொண்ணு உடைஞ்சி போயிடுவா. மிகவும் மென்மையான பெண்ணாக இருக்கிறாள். அதிர்ந்து பேச கூட தெரியாமல் இருக்கிறாள், அவளை போய்.. என்று அவர் பேசி கொண்டே போகவும் இடை மறித்தான் நிரஞ்சன்.​

“அந்த பொண்ணு ஏன் அமைதியாக இருக்கணும்? அவளோட தரப்பை அழுத்தமாக சொல்லணும் தானே பாட்டி? அப்படி யாரு அவளை இங்கேயே வேலை செய்யணும்னு கட்டாயப்படுத்தினாங்க. இந்த வேலையே வேண்டாம்னு போக வேண்டியது தானே” என்றான் நிரஞ்சன் கடுப்பாக.​

அதற்குள் நிர்மலாவின் சத்தம் அதிகமாகியிருந்தது, “என்ன தாமு, அவளுக்கு ஆதரவாக பேசறீங்க, என்னை விட அவள் முக்கியமாக போய் விட்டாளா? எனக்கு இப்போதே முடிவு தெரியணும், ஒன்று நான் இந்த வீட்டில் இருக்கணும், இல்லை அவள் இருக்கணும்.​

அப்படி அவள் தான் இருக்கணும் என்றால், நான் இப்பாேதே எங்காவது போய் செத்து தொலைக்கிறேன்” என்று நிர்மலாவின் குரல் கேட்டது. அந்த பெண் அழுது கொண்டே, “நநானே போயிடுறேன் மேடம்” என்றாள் மெலிந்த குரலில்.​

அந்த மெல்லிய குரலைக் கேட்டு திடுக்கிட்டவன், அவர்கள் இருந்த அறையை நோக்கி நடந்தான்​

அந்த அறைக்கதவு திறந்தே இருந்தது, நிர்மலா அந்த பெண்ணை பார்த்து முறைத்து கொண்டு நின்றிருந்தாள். அவளருகில் தாமோதரன் ஊமையாக நின்றிருந்தார்.​

அந்த பெண்ணோ, அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள். நிரஞ்சனை ஏதோ உந்த, “அழகி” என்றான் மெதுவாக.​

அந்த குரலில் திடுக்கிட்டு திரும்பியவள், நிரஞ்சனை கண்டதும், “நிரு…” என்று கத்தி கொண்டு புயல் என ஓடியவள் நொடியும் யோசிக்காமல் அவனை கட்டிக் கொண்டாள். அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து கதறினாள்.​

அவள் கண்ணீர் அவன் மார்பை நனைத்துக் கொண்டிருந்தது. நிரஞ்சனின் முகம் இறுகி போய் இருந்தது. அவன் எந்த ஆறுதலும் சொல்லாமல், அவளையும் ஆற்று படுத்தாமல் அப்படியே கைகளை பின்னால் கட்டியபடி நிமிர்ந்து நின்று கொண்டிருந்தான்.​

அவனாக அவளை எதுவும் கேட்கவில்லை. அவளும் எந்த விளக்கமும் தராமல் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள். திடீரென்று அவள் ஓடிச் சென்று நிரஞ்சனை கட்டி கொள்ளவும் சில நிமிடம் நிர்மலா கூட ஸ்தம்பித்து போய் பார்த்திருந்தாள்.​

தாமோதரனும் அதிர்ச்சியாகத்தான் இருந்தார். எழிலழகியின் அழுகை மெல்ல மெல்ல குறைந்து விசும்பல் ஆனது. நிரஞ்சன் அவள் அழுது முடிக்கட்டும் என்று நினைத்தானோ என்னவோ, அப்படியே நின்றிருந்தான். முகம் மட்டும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இறுகி போய் இருந்தது.​

“நான் அந்த பெண்ணை திட்டினால் அப்படி எல்லாம் பேசாதே அவள் ரொம்ப நல்ல பெண் என்றெல்லாம் சொல்வீங்களே, இப்போ பார்த்தீங்களா? இந்த டாக்டர் முழுசாக ஒரு நாலு முறை வந்திருப்பாரா? அதுக்குள்ள அவரையும் மயக்கி இருக்காள், நம்ம முன்னாடியே எப்படி கட்டி பிடிச்சிட்டு இருக்கா பாருங்க” என்றாள் நிர்மலா.​

நிரஞ்சன் பேசவேண்டாம் என்று தன் சுட்டு விரலை அவன் வாயில் மேல் வைத்துக் காட்டி விட்டு, ஜாக்கிரதை என்பது என்பது போல எச்சரிக்கை செய்தான்.​

எழிலழகி அழுது முடித்து, சற்றே மூச்சு வாங்கி தன்னை ஆசுவாசப்படுத்தியபின், அவளை தன்னிலிருந்து விலக்கி நிறுத்தினான்.​

அவள் தலை குனிந்து நின்றிருக்க, அவள் தாடையை பற்றி நிமிர்த்தினான்.​

“நீ தப்பு செய்தியா?” என்றான் ஆழ்ந்த குரலில் அவள் இல்லை என்று மறுப்பாக தலையசைக்கவும், “அப்போ நிமிர்ந்து நில்” என்றான் சற்று அதட்டலான குரலில்.​

அவன் குரலுக்கு கட்டுண்டவள் போல நிமிர்ந்து நின்றாள். “அவங்க உன்னை பற்றி அவதூறாக பேசும் போது, உன் மனதில் சில பதில்கள் இருந்திருக்கும் தானே? அதை பேச முடியாமல் இருந்திருப்பாய். அதை இப்போது பேசிவிட்டு என்னுடன் கிளம்பு” என்றான் அதே குரலில்.​

எழிலழகி பாவமாக அவனை நிமிர்ந்து பார்க்கவும், நீ பேசித்தான் ஆகவேண்டும் என்பது போல அவளை தீவிரமாக பார்த்து பேசு என்பது போல கண்களால் இமை மூடி திறந்தான்.​

“எஎனக்கு உங்க புருஷனை மயக்க வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை, கிட்டத்தட்ட அப்பா வயதில் இருக்கும் அவரை போய் என்னுடன் இணைத்து பேசறீங்களே, உங்களுக்கே இது நியாயமாக இருக்கா?​

அப்படி உங்க கணவர் மேல் நம்பிக்கை இல்லை என்றால் நீங்க அவரை தான் கண்டிக்கனும், தண்டிக்கனும். அதை விட்டுட்டு பொருளாதார நிலைமைக்காக வேலைக்கு வரும் என் போன்ற பெண்களை அவதூறாக பேசி அவமானம் செய்யறீங்களே, உங்களுக்கே இது சரியாக தோணுதா? நீங்களும் பெண் தானே?”​

“அப்பறம் என்ன கேட்டீங்க, இவ்வளவு என்னை அவமானம் படுத்தியும் ஏன் வேலையை விட்டு போகலைனு தானே. நான் ஏற்கனவே சில வேலைகளை விட்டுட்டு வந்ததால், எங்க அப்பா இந்த வேலை தான் உனக்கு கடைசி வாய்ப்பு. இதையும் விட்டுட்டா மறுபடியும் அவரோட பழைய வயதான நண்பர் ஒருத்தருக்கு என்னை திருமணம் செய்து வைத்து விடுவேன் என்று பயமுறுத்தி இருந்தார்.​

அதனால் தான் நீங்க இவ்வளவு அசிங்கப் படுத்தியும் இங்கேயே வேலைக்கு வந்திட்டு இருந்தேன். நான் மட்டும் இல்லை, இங்கே வரும் எல்லா பெண்களும் அவங்க குடும்ப சூழ்நிலைக்காக தான் உங்க பேச்சை எல்லாம் பொறுத்துட்டு போறாங்க. அவங்க பதில் பேசாமல் அமைதியாக போறாதால தப்பு செய்யறவங்கனு அர்த்தம் கிடையாது.​

யாரோ செய்த தப்புக்கு எங்களை ஏன் சந்தேகப்பட்டு பேசறீங்க. யாரையும் வேலைக்கு அமர்த்தாமல் நீங்களே எல்லா வேலையும் செய்து கொள்ள வேண்டியது தானே. இல்லை என்றால் ஆண்களையே வேலைக்கு அமர்த்தி கொள்வது தானே?” என்று பொரிந்து கொட்டினாள் எழிலழகி.​

நிரஞ்சனுமே பேசும் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். இவளுக்கு இத்தனை கோபம் கூட வருமா? எவ்வளவு கோபம் இருந்தால் இந்த அளவிற்கு பேசுவாள்? என்று அவன் வியப்பாக அவளை பார்த்திருந்தான்.​

நிர்மலாவும் தாமோதரனும் கூட அவளை அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நாள் வரை நிர்மலா திட்டும் போதெல்லாம் மெளனமாகவோ அல்லது அழுது கொண்டோ நின்றிருப்பாள். ஆனால் இன்று? எல்லாம் இந்த டாக்டர் கொடுக்கும் தைரியம் என்று நினைத்தாள் நிர்மலா.​

“எல்லாம் இந்த டாக்டர் உனக்கு பேச சொல்லி கொடுத்தாரா? என் மாமியாரை பேச வைக்க தானே என் கணவர் அவரை வரவழைத்தார்? ஆனால் உனக்கு தான் சிகிச்சை கொடுத்திருக்கார் போலயே?” என்றாள் நிர்மலா நக்கலாக.​

நிரஞ்சன் கைகளை பற்றியபடி, “ஆமாம் அவர் சொல்லி கொடுத்தாகவே இருக்கட்டும், நல்லது தானே தான் சொல்லி கொடுத்தார்?” என்றாள் எழிலழகி​

“மிஸஸ்.தாமேதரன், உங்கள் கணவர் மேல் சந்தேகம் என்றால் அவரை திட்டுங்க, தேவைப்பட்டால் அடித்து உதைங்க. உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. உங்க சந்தேகத்தை தனிப்பட்ட நபர்களின் மேல் காழ்ப்புணர்ச்சியாக காட்ட வேண்டாம். மேற்கொண்டு நீங்கள் இப்படியே பேசி கொண்டு போனால் மான நஷ்ட வழக்கு போடுவேன்” என்றான் நிரஞ்சன் அதிகாரமாக​

அந்த மிரட்டலில் சற்று அமைதியாகி போனாள் நிர்மலா. பின்பு அரசு வேலையில் இருக்கும் போது இந்த மாதிரி நீதிமன்ற வழக்கு என்று போய் வந்தால் நன்றாகவா இருக்கும் என ஒரு கணம் நினைத்தவள், மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.​

“மிஸ்டர் தாமோதரன், உங்க அம்மாவிற்கு உடல்நலம் நன்றாகவே இருக்கிறது. அவர்களுக்கு உங்க யாருடனும் பேச விருப்பம் இல்லாமல் தான் அப்படி இருந்திருக்காங்க. நீங்க வசதியானவர்கள் தங்கும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டால், குறைந்தது கடைசி காலத்திலாவது நல்ல மனிதர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கும். எனவே என்னுடைய சிகிச்சை இனி அவர்களுக்கு தேவைப்படாது, நான் கிளம்புகிறேன்” என்று எழிலழகியை பார்த்தான்.​

“நானும் உங்களோட வருகிறேன் நிரு” என்றாள் எழிலழகி.​

“சரி வா, போகலாம்” என்று அவள் கையை பிடித்துக் கொண்டு அவளுடன் வெளியேறினான் நிரஞ்சன்.​

(தொடரும்)​

 

Attachments

  • NNK-64.jpg
    NNK-64.jpg
    198 KB · Views: 0

Mathykarthy

Well-known member
அழகி இப்போ பேசுனதை முன்னாடியே தைரியமா நிமிர்ந்து நின்னு பேசியிருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.... 🙂 நிரஞ்சன் வந்து தான் இவளுக்கு தைரியம் வந்துருக்கு..😍

இவ போன் என்னாச்சு.... ஏன் இவ அதுக்கு அப்புறம் நிரஞ்சனை contact பண்ணல... 🤔🤔🤔
 

NNK-64

Moderator
அழகி இப்போ பேசுனதை முன்னாடியே தைரியமா நிமிர்ந்து நின்னு பேசியிருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.... 🙂 நிரஞ்சன் வந்து தான் இவளுக்கு தைரியம் வந்துருக்கு..😍

இவ போன் என்னாச்சு.... ஏன் இவ அதுக்கு அப்புறம் நிரஞ்சனை contact பண்ணல... 🤔🤔🤔
Next epi la varum sis ❤️ thank you 💕
 
Top