எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக! - அத்தியாயம் 8

NNK-64

Moderator

அத்தியாயம் 8​

நிரஞ்சன் அமைதியாக காரை செலுத்திக் கொண்டு வந்தான். அவன் எதாவது அவளை கேள்வி கேட்பான் என்று அவன் முகத்தையே பார்த்திருந்தாள் எழிலழகி.​

அவள் தன்னை தான் பார்த்து கொண்டு வருகிறாள் என்று தெரிந்தும் அவளை கண்டு கொள்ளாமல் சாலையில் கவனம் வைத்து வண்டியை செலுத்தி கொண்டிருந்தான். எப்போது தான் நிமிர்வுடன் நடக்க போகிறாள். தான் அவ்வளவு சொல்லியும் அப்படியே மாறாமல் இருக்கிறாளே என்று அவனுக்கு எழிலழகி மேல் கோபம் இருந்தது.​

“நிரு, எனக்கு பிரச்சனைனு வரும் போதெல்லாம் ஆபத்பாந்தவன் போல எங்கிருந்து தான் வர்றீங்களோ தெரியாது. சரியான நேரத்தில் வந்து என்னை காப்பாற்றி விட்டிங்க, நீங்க இல்லை என்றால் இதை நான் எப்படி சமாளித்திருப்பேன் என்று கூட தெரியாது.​

இப்போதெல்லாம் உங்களை பார்த்தாலே தைரியம் தானாக வந்து விடுகிறது. உங்களோட இருக்கும் போது மிகவும் பாதுகாப்பாக இருக்குது. நீங்க எப்போதும் என்னுடனே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?” என்றாள்​

அதில் சட்டென்று அவளை திரும்பி பார்த்தான் நிரஞ்சன். அவள் கண்களை ஆராய்ந்தான். அதில் அவன் தேடிய காதல் தென்படவில்லை. பாதுகாப்பிற்காக அப்படி கேட்கிறாள் என்று உணர்ந்து கொண்டவன் தன் ஆர்வத்தை அடக்கினான்.​

மேலும் தொடர்ந்தவள், “நிரு, நீங்க தப்பா நினைக்கலைனா? நான் ஒன்று சொல்லட்டுமா?” என்றாள்.​

ஒரு முறை அவளை திரும்பி அழுத்தமாக பார்த்துவிட்டு சொல்லு என்பது போல தலையை அசைத்தான்.​

“நீங்க என்னை திருமணம் செய்துக்கிறீங்களா?” என்றாள் பட்டென்று​

மீண்டும் திரும்பி தீர்க்கமாக அவளை பார்த்து விட்டு காரை செலுத்தினான். கேட்டு விட்டாளே தவிர, இப்போது அவன் என்ன நினைப்பானோ என்று கவலையாக இருந்தது.​

பதிலுக்காக சில நிமிடம் அவன் முகத்தையே பார்த்திருந்தாள். அவன் முகத்திலிருந்து எந்த உணர்வையும் அவளால் கண்டறிய முடியவில்லை. அவன் எதிர்வினை ஆற்றாமல் போகவே சற்று ஏமாற்றமாக இருந்தது.​

அதற்குபிறகு அவளும் அமைதியாகவே வந்தாள். கார் பெசன்ட் நகர் கடற்கரையை அடைந்ததும் இருவரும் கடற்கரை மணலில் அமர்ந்தார்கள்.​

நிரஞ்சன் அப்போதும் பேசாமல் கடலின் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தான்.​

“நிரு” என்றழைத்தாள் எழிலழகி.​

அவன் என்ன என்பது போல் அவளை பார்க்க, “என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா? நீங்க பெரிய டாக்டர், நான் சாதாரண குடும்பத்து பெண் என்பதால் என்னை ஏற்றுக் கொள்ள தயங்கறீங்களா?” என்று கேட்டாள்​

“அழகி” என்று அதட்டினான் மெலிதான குரலில்.​

“நீ இப்போது உணர்ச்சிவசத்தில் பேசற. என்னை திருமணம் செய்து கொண்டால் உனக்கு பாதுகாப்பாக நான் இருப்பேனு நினைக்கிற. அதனால் தான் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க, இதுக்கு முன்னாடி நீ ராஜூவை தேர்ந்தெடுத்தை போல தவறான முடிவாக இது இருக்க கூடாது” என்றான் தணிவான குரலில்.​

“அப்போ, நான் அந்த ராஜூவை காதலித்திருப்பேனு நீங்க நினைக்கிறீங்களா? இன்னொருவன் கூட இதே இடத்திற்கு வந்தவள் தானே…” என்று அவள் முடிக்கும் முன் அவள் வாயை தன் கைகளால் மூடினான்.​

“நான் உன்னை எப்போதும் தவறாகவே நினைக்க மாட்டேன், அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள். இந்த விஷயத்தை இப்போதே பேசி முடிவெடுக்கணும்னு என்ன கட்டாயம்? இன்னும் நல்லா யோசித்து சில மாதங்களுக்கு பிறகு சொல்லு” என்றான் நிரஞ்சன்​

“ஆமாம், உன் அலைபேசிக்கு அழைத்தால் ஏன் எப்போதும் அணைத்து வைக்கப்பட்டிருக்குனு வருது?” என்றான் அப்போது தான் நினைவு வந்தவனாக.​

“அன்று ஒருநாள் நான் உங்களுக்கு எத்தனை முறை அழைத்தேன் தெரியுமா? நீங்க ஏன் என் அழைப்பை எடுக்கவில்லை?” என்றாள் அவளும் கேள்வியாக.​

“அன்றைக்கு நான் டெல்லியில் ஒரு மாநாடு கூட்டத்தில் இருந்தேன். அதை முடித்துவிட்டு உனக்கு திரும்ப அழைத்தால் அதற்கு உயிர்ப்பு இல்லை” என்றான்​

அன்றைய நாளின் நினைவில் அவள் முகம் வாடி, கண்களில் கண்ணீர் வரப் பார்த்தது. சமாளித்துக் கொண்டு அதை உள்ளே இழுத்தாள்.​

“என்ன அழகி? என்ன நடந்ததுனு சொல்லு”​

“அன்றைக்கு பயிற்சி நிலையத்தின் நிறுவனர்களில் ஒருவர் அங்கே வந்திருந்தார். அவர் உதவி செய்தால் கட்டாயம் அரசு வேலை கிடைக்கும் என்று என் அப்பா அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசி பார்க்க சொன்னார்.​

நானும் பயிற்சி வகுப்பு முடிந்து, அவர் அறைக்கு சென்றேன் என்றவள் அன்றைய நிகழ்வை நிரஞ்சனுக்கு விளக்க தொடங்கினாள்.​

“சார் உள்ளே வரலாமா?”​

“ம், வாங்க, என்ன விஷயம்?” என்றார் கோபாலன்.​

“என் அப்பா முருகேசன், அவருக்கு உங்களை நன்றாக தெரியுமாம், அதுதான் அரசு வேலைக்கு உங்களிடம் கேட்க சொன்னார்.​

சிபாரிசு எல்லாம் இதற்கு ஒத்து வராது என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் தான் உங்களிடம் பேசும்படி சொன்னார்” என்றாள் தயக்கத்துடன்.​

அப்போது தான் அவளை மேலிருந்து கீழாக நன்றாக பார்த்தார் கோபாலன். செய்து வைத்த செப்பு சிலைப்போல அம்சமாக இருக்கிறாளே என்று ரசனையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தார்.​

“அதுக்கென்ன நான் சொன்னால், வேலை போட்டு தர, என்கிட்ட ஆட்கள் இருக்காங்க, நீ தேர்வு எழுதினால் மட்டும் போதும், விண்ணப்பத்திற்கான எண்ணை மட்டும் என்னிடம் சொல்லி விடு, நான் பார்த்துக் கொள்கிறேன்.​

ஆனால் அதற்கு கொஞ்சம் செலவாகும். என்ன தான் நன்றாக தேர்வு எழுதினாலும் உடனே அரசு வேலை கிடைத்துவிடாது, யாருக்கு செல்வாக்கும் செல்வமும் இருக்கோ, அவங்களுக்கு தான் வேலை கிடைக்கும்” என்றார்.​

“அப்போது எங்களை மாதிரி நடுத்தர குடும்பத்திலிருப்பவர்கள் எல்லாம் அரசு வேலைக்கு வரவே முடியாதா சார்? நான் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்து விடுவேன், அப்போதும் நாங்கள் பணம் தர வேண்டுமா? இல்லையென்றால் வேலை கிடைக்காதா?” என்றாள் அப்பாவியாக​

என்ன இந்த பெண் வெகுளியாக இருக்கிறாளே என்று நினைத்த கோபாலன், பணம் தான் கொடுக்கணும் என்று இல்லை, வேறு எதுவும் கொடுத்தாலும் பரவாயில்லை என்று அவளை பார்த்தார்.​

அவளுக்கோ புரியவில்லை, “வேறு என்ன கொடுக்கணும்?” என்றாள்.​

“அது தான் நீ கொஞ்சம் அப்பப்ப என்னிடம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும், தேவைப்படும் போது நான் சொல்ற அதிகாரிகள் கிட்டயும் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கணும்” என்றார் அவளின் முகபாவணையை அவதானித்தபடி.​

“நான் அவர்களை எதிர்த்து எல்லாம் பேச மாட்டேன் சார், எந்த பிரச்சனை என்றாலும் பொறுத்து போக கூடியவள் தான்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, “அட என்னம்மா நீ? புரிந்து தான் பேசறீயா? இல்லை புரியாதது போல நடிக்கிறயா? அட்ஜஸ்ட் என்றால் தெரியாதா?” என்று பேசி கொண்டே வந்து அவள் தோளை அழுத்தினார்.​

பதறி எழுந்தாள், என்ன சார் சொல்றீங்க? இந்த மாதிரி எல்லாம் இருந்தால் தான் வேலை கிடைக்குமா? திறமைக்கும் நேர்மைக்கும் மதிப்பே இல்லையா? என்றாள்.​

“அட என்னமா நீ இப்படி மேடையில் பேசற மாதிரி பேசிட்டு இருக்க? சும்மா பொண்ணு என்றாலே யாரும் விட மாட்டாங்க. உன்னை போல பேரழகியை பார்த்தால் யாருக்காச்சும் உன்னை தொடாமல் இருக்க தோணுமா சொல்லு?” என்றவர் அவள் அருகில் வந்து அத்து மீற தொடங்கினார்.​

அந்த நேரத்தில் அங்கிருந்த அனைவரும் ஏற்கனவே சென்று விட்டிருந்தனர், அவள் அறையை திறக்க முயற்சிக்க, அந்த மனிதர் அவளை எட்டி கைகளை பிடித்து இழுத்தார். அவரை உதறிக் கொண்டு கதவை திறந்து வெளியே வந்தால் அந்த கட்டிடத்தில் யாருமே இல்லை.​

என்ன செய்வது என்றே தெரியாமல் அங்கிருந்த வேறொரு அறைக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்தினாள். அதற்கு தாழ்பாளும் இல்லாதிருக்க, அந்த கதவின் மேல் சாய்ந்துக் கொண்டு தன் அலைபேசியை எடுத்தாள்.​

உதவிக்கு யாரை அழைப்பது என்று ஒரு கணம் திகைத்தவளுக்கு, அடுத்த நொடி நினைவில் வந்தது நிரஞ்சன் தான். உடனே அவனுக்கு அழைத்தாள், அவனோ அதை எடுக்காதிருக்கவும் மீண்டும் மீண்டும் அழைத்து சோர்ந்து போனாள்.​

கடவுளே, உனக்கு பதிலாக நிரஞ்சனையே ஆபத்பாந்தவனாக என்னை காப்பாற்ற அனுப்புவாயே, இன்று எனக்கு உதவமாட்டாயா? என்று கடவுளை வேண்டியபடி நிரஞ்சனுக்கு போன் செய்தாள். அது இணைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் கோபாலன் கதவை படாரென்று தன் பலம் கொண்டு தள்ளினார்.​

அதில் நிலை தடுமாறி கீழே விழந்தாள் எழிலழகி. மெல்ல எழுந்து சுவற்றில் ஒட்டியபடி நின்று கொண்டு, “நீங்க செய்யறது சரியில்லை, வெளியில் தெரிந்தால்…” என்று அவள் முடிக்கும் முன், “வெளியில் தெரிந்தால், நீ தான் அரசுவேலைக்காக என்னிடம் தனியாக பேச வந்தாய், எதற்கும் தயார் என்று ஒழுக்கமின்றி நடந்து கொண்டாய் என்று சொல்வேன்” என்றார் கோபாலன் நக்கலாக.​

அந்த நிமிடம் அந்த மனிதனை அற்ப புழுவாக வெறித்து பார்த்தவள், தனக்கு இருக்கும் நேரம் மிகவும் குறைவு, சற்று தாமதித்தாலும் அவன் அவளை பலாத்காரம் செய்ய தொடங்கி விடுவான் என்று தோன்ற சுற்றும் முற்றும் பார்த்தாள். அறையே காலியாக இருந்தது, தன் கையிலிருக்கும் அலைபேசியை தவிர நிராயுதபாணியாக நின்று இருந்தாள்.​

கைப்பேசி சைனாவின் கைவண்ணத்தில் குறைந்த விலைக்கு கிடைத்த அதிக எடையுள்ள பொருள் என்ற தோன்றிய நொடியில் சற்றும் யோசிக்காமல் அந்த ஆளின் முகத்தை நோக்கி ஓங்கி வீசினாள். அது குறுக்கு வாட்டில் அவன் கண்களை பதம் பார்க்க, “அய்யோ” என்று தன் கண்களை அவன் கசக்கும் நேரத்தில் நொடியில் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க வெளிப்புறம் நோக்கி ஓடினாள்.​

அதன்பிறகு பேருந்தில் ஏறியபின்பு தான் அவளுக்கு மூச்சே வந்தது. போனை ஓங்கி அடித்ததில் அங்கேயே அது விழுந்து கிடந்தது. அதனால் மீண்டும் அவளால் நிரஞ்சனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த எண்ணும் அவளுக்கு நினைவில் இல்லாததால் அவனை மீண்டும் அழைக்க முடியவில்லை.​

ஓங்கி அடித்ததில் அவனுக்கு என்னவாயிற்றோ? தன் மேல் எதாவது குற்றம் சுமத்தி விடுவானோ என்று அந்த பயிற்சி நிலையம் பக்கமே அவள் போகவில்லை.​

இதைப்பற்றி வீட்டிலும் பகிர்ந்து கொள்ளவில்லை. எழிலழகி பயிற்சி நிலையத்திற்கு போகாமல் வீட்டிலேயே இருக்கவும் முருகேசனுக்கு கோபம் தலைக்கேறியது.​

“இந்தாடி, என்ன தான் நினைச்சிட்டு இருக்கே, நான் ஏற்பாடு செய்த கல்யாணத்தையும் பண்ணிக்காமல் வீட்டை விட்டு ஓடின, அன்னிக்கே உன் காலை உடைத்து அவனுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கணும். வேலைக்கு போய் எல்லாத்தையும் கிழிக்கிறேனு சொன்னே, சரினு நானும் பொறுமையாக இருந்தேன்.​

ஐடி கம்பெனிக்கு போய் முழுசாக ஒரு மாதம் கூட போகல, வேலையை விட்டுட்டு வந்துட்டே. சரி அரசு வேலைக்கு முயற்சி பண்றேன் சொல்லி பயிற்சிக்கு போன, இப்ப மறுபடியும் அங்கேயும் போகாமல் வீட்டில் இருக்க, என்ன தான் நினைச்சிட்டு இருக்க” என்று அவள் தலைமுடியை கொத்தாக பிடித்து ஆட்டினார் முருகேசன்.​

“ஒருவேளை பயிற்சி நிலையம் வேண்டாம் வீட்டிலிருந்தே படிக்கலாம்னு நினைக்கிறாளோ என்னேவா” என்றாள் யமுனா.​

அப்படியா என்பது போல முருகேசன் எழிலழகியை பார்த்தார். கோபாலன் சொன்ன, “உன்னை யாராவது பார்த்தால் தொடாமல் விடுவாங்களா?” என்ற வார்த்தை ஓங்கி ஒலிக்க, “இல்லை, நான் எந்த வேலைக்கும் போகலை” என்றாள்.​

அவள் பதிலில் அவளை எட்டி உதைத்தார் முருகேசன். “போகாமல் தண்ட சோறு சாப்பிடலாம்னு இருக்கியா? அதுக்கு தான் உன்னை படிக்க வைத்தேனா? ஒழுங்கா வேலைக்கு போறாதாக இருந்தால் போ, இல்லைனா நான் சொல்றவனை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டே இரு” என்று கர்ஜித்தார்.​

அப்போது யமுனா, “என்னோட தோழி ஒருத்தி நிர்மலானு ஒரு அம்மா வீட்டிற்கு தோட்ட வேலைக்கு போறாள். அந்த நிர்மலாவோட மாமியாருக்கு உடல் நலம் சரியில்லையாம். அவங்களை பார்த்துக் கொள்ள ஒரு ஆள் வேணும்னு கேட்டாங்க, நானும் யாரும் தெரிஞ்சால் சொல்றதாக சொன்னேன். அங்கே போறாளானு கேளுங்க” என்றாள்​

எழிலழகியும் யோசித்தாள், வீட்டில் வேலை என்றால் இந்த மாதிரி தொல்லைகள் இருக்காது என்று தோன்றவும் “சரி போகிறேன்” என்று சொன்னாள் உடனடியாக. அப்போது தான் முருகேசன் அடிப்பதையே நிறுத்தியிருந்தார்.​

“ஆனா ஒன்னு. மறுபடியும் இந்த வேலையை விட்டு விட்டால், நான் சொல்றவனை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும்” என்றார் முருகேசன் அதிகாரமாக.​

அவளும் சரி என்று தலையாட்டினாள். இதை எல்லாம் சந்திரகாவும் சுரேஷ்ம் பார்த்தாலும் தங்களுக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல, தங்கள் வேலையை பார்க்க போய் விட்டனர்.​

கடைசி வாய்ப்பாக தனக்கென்று இருப்பது இந்த வேலை தான் என்று ஜானகி அம்மாளை பார்த்துக் கொள்ள சென்று வந்தாள். தாமோதரனும் அவளிடம் கண்ணியமாகத்தான் நடந்தார். இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைக்கும் போது தான் நிர்மலாவின் சந்தேகம், அவளுக்கு பிரச்சனையாக அமைந்தது.​

வேலையை தொடரவும் முடியாமல் விடவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தாள். இன்று நிர்மலாவின் பேச்சு எல்லை மீறினாலும் எதிர்த்து பேச இயல்பாக வராமல் போனதால் அழுது கரைவதை தவிர வேறு வழி தோன்றவில்லை.​

அந்த சமயத்தில் நிரஞ்சனை கண்டதும் தன்னிச்சையாக அவளுக்குள் ஒரு தைரியம் வந்தது, அதனாலேயே அவளுக்குள் இருந்த கேள்விகளையும் கோபங்களையும் நிர்மலாவிடம் கேட்டு விட்டாள். அப்போதே மனது சற்று இலகுவானது போல தோன்றியது.​

யாராவது வீண்பழி சுமத்தும்போது அதை மறுக்காமல் அப்படியே கேட்டு கொண்டிருப்பது எவ்வளவு வலியை தருகிறது? அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நிரஞ்சனே தனக்கு துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த நொடி தோன்றியது” என்று நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தாள்.​

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த நிரஞ்சன், “இப்போது உன்னோட முடிவு என்ன? அடுத்து என்ன செய்ய இருக்கிறாய்?” என்று கேட்டான்​

“இனி நான் வேலைக்கே போக போவதில்லை. போகவும் விருப்பம் இல்லை. ஆனால் அப்பாவை எப்படி சமாளிப்பது? அவர் அந்த வயதானவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால்?” என்றாள் கவலையாக​

“எல்லா இடத்திலும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும், அதை எதிர் கொள்ள தயாராக இருக்கணுமே தவிர முற்றிலும் விலகி ஓடக் கூடாது. ஆக, அதிலிருந்து தப்பிக்கத்தான் என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றாயா?” என்றான் நிரஞ்சன் உணர்ச்சியற்ற குரலில்.​

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் எழிலழகி.​

(தொடரும்)​

 

Attachments

  • NNK-64.jpg
    NNK-64.jpg
    198 KB · Views: 0

Mathykarthy

Well-known member
முருகேசன் எல்லாம் என்ன ஜென்மமோ... 🤬🤬🤬🤮🤮🤮🤮 பாவம் அழகி 😕 நம்பிக்கையும் பாதுகாப்பும் தர வேண்டிய அப்பாவே இவ்வளவு மோசமானவரா இருந்தா அவளும் என்ன தான் செய்வா... 😓😓😓😓😓

நிரஞ்சன்கிட்ட திரும்பவும் வந்துட்டா அவன் அவளுக்கான பலமா இருப்பான்.... 🙂

அவனை பிடிச்சு விரும்பி கல்யாணத்துக்கு கேட்டுருந்தா அவன் ஓகே சொல்லியிருப்பான் அழகி....😔
 

NNK-64

Moderator
முருகேசன் எல்லாம் என்ன ஜென்மமோ... 🤬🤬🤬🤮🤮🤮🤮 பாவம் அழகி 😕 நம்பிக்கையும் பாதுகாப்பும் தர வேண்டிய அப்பாவே இவ்வளவு மோசமானவரா இருந்தா அவளும் என்ன தான் செய்வா... 😓😓😓😓😓

நிரஞ்சன்கிட்ட திரும்பவும் வந்துட்டா அவன் அவளுக்கான பலமா இருப்பான்.... 🙂

அவனை பிடிச்சு விரும்பி கல்யாணத்துக்கு கேட்டுருந்தா அவன் ஓகே சொல்லியிருப்பான் அழகி....😔
yes you are correct sis, thank you for your comments 💕💕💕
 

Advi

Well-known member
பாவம் தான் இவளும் என்ன தான் செய்வா????

நிரு நீ தான் அவளுக்கு ஏதும் வேலை பார்த்து கொடு a
 
எப்பத்தான் இவ தைரியமா நின்னு பேசப்போறாளோ???... அவங்க அப்பாக்கு ஒரு பாயசத்த போட்டு விடுங்க!!... நிரு பாவம்!!... இனி என்ன பன்ன போறாளோ???
 

santhinagaraj

Active member
இந்த முருகேசன் எல்லாம் என்ன மனுஷன் பொண்ணு ஏன் வேலைக்கு போக மாட்டேனு சொல்ற அவனுக்கு என்ன பிரச்சனை ஏதுன்னு கேட்காம. ஏன் வேலைக்கு போற பணம் சம்பாதிக்கிறேன்னு கேட்டு வயசான ஒரு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாரு.

எப்பதான் எழில் தைரியமா எல்லாரையும் எதிர்கொள்ள போகிறாள்
 

NNK-64

Moderator
பாவம் தான் இவளும் என்ன தான் செய்வா????

நிரு நீ தான் அவளுக்கு ஏதும் வேலை பார்த்து கொடு a
ஆமா சிஸ் 🥰💐 நன்றி
 

NNK-64

Moderator
எப்பத்தான் இவ தைரியமா நின்னு பேசப்போறாளோ???... அவங்க அப்பாக்கு ஒரு பாயசத்த போட்டு விடுங்க!!... நிரு பாவம்!!... இனி என்ன பன்ன போறாளோ???
பாயசம் தானே போட்டுடோம் சிஸ்🥰🤣
 

NNK-64

Moderator
இந்த முருகேசன் எல்லாம் என்ன மனுஷன் பொண்ணு ஏன் வேலைக்கு போக மாட்டேனு சொல்ற அவனுக்கு என்ன பிரச்சனை ஏதுன்னு கேட்காம. ஏன் வேலைக்கு போற பணம் சம்பாதிக்கிறேன்னு கேட்டு வயசான ஒரு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாரு.

எப்பதான் எழில் தைரியமா எல்லாரையும் எதிர்கொள்ள போகிறாள்
 
Top