எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 2

S.Theeba

Moderator
ஒவ்வொரு அத்தியாயமும் சிறியவையாகவே இருக்கும். கோபப்படாமல் வாசியுங்கள்

வரம்2

தனது அலுவலகத்தை வந்தடைந்த வர்ஷனா பரபரப்பாக கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்குள் சென்றாள். அங்கே அந்த நிறுவனத்தின் பல்வேறு கிளைகளிலும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் நேரத்திற்கே வருகை தந்து அமர்ந்திருந்தார்கள். இன்னும் சேர்மன் சீராளன் வந்திருக்கவில்லை.
அப்பாடா... என்று நீண்ட பெருமூச்சொன்றை விட்ட வர்ஷனா, அன்றைய கூட்டத்துக்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொண்டு செய்தாள்.
சிறிது நேரத்தில் அம் மண்டபத்துக்குள் நுழைந்தார் சீராளன். அவருடன் இரு இளைஞர்களும் வந்தனர். அவர்களில் ஒருவரை வர்ஷினிக்கு நன்கு தெரியும். அவன் சீராளனின் தவப்புதல்வன் சிவானந்த். பலமுறை இந்த அலுவலகத்திற்கு வந்துள்ளான்.
மற்றைய புதியவனை அவளுக்கு யார் என்று தெரியவில்லை.
அடர் நீல நிற பான்ட்டும் இளம் நீலத்தில் முழுக்கை சட்டையும் அணிந்து ஆறடி உயரத்தில் பார்ப்பதற்குக் கம்பீரமாக இருந்தான். ஆனால் அவனது முகத்தில் ஒருவித இறுக்கம் பரவியிருந்தது. துளியளவுகூட சந்தோசம் அவன் முகத்தில் இல்லை.
அவனைப் பார்த்துக் கொண்டிருந்த வர்ஷனா, என்னவென்று சொல்ல முடியாத ஒரு இதம் முதல் முறையாகத் தன் மனதில் பரவுவதை உணர்ந்தாள்.
அவனின் தீர்க்கமான பார்வை அங்கு கூடியிருந்தவர்களை நோட்டமிட்டது. அவளைப் பார்த்தபோது கண்கள் ஒரு நொடி சிரித்ததோ என்று தோன்றியது வர்ஷனாவிற்கு. 'இந்த சிடுமூஞ்சியாவது சிரிக்கிறதாவது... நமக்குதான் மறை கழண்டிடுச்சு...' என்று தனக்குள் புலம்பியபடி கையில் வைத்திருந்த பேனாவால் தன் தலையில் ஒரு தட்டுத் தட்டினாள்.
கூட்டம் ஆரம்பமானது. சேர்மன் எழுந்து பேசத் தொடங்கினார். எல்லோரையும் வரவேற்றுப் பேசியவர். தொடர்ந்து தன் மகனை அறிமுகப்படுத்தினார்.
குறிப்பெடுத்துக் கொண்டிருந்த வர்ஷனாவோ ஓரக்கண்ணால் அடிக்கடி புதியவனைப் பார்த்துக்கொண்டாள்.
"இன்று முதல் இந்த நிறுவனத்தின் சகல பொறுப்புகளையும் என் மகன் சிவானந்த் பார்த்துக் கொள்வான். இன்று வரை எனக்கு நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பு போலவே இனிவரும் காலங்களிலும் உங்கள் புது எம்.டிக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்" என்றார். அதை ஆமோதிக்கும் வகையில் அங்கிருந்த அனைவரும் கைதட்டினர்.
இது ஏற்கனவே வர்ஷனா அறிந்திருந்த செய்திதான். கடந்த இரண்டு வாரங்களாக சீராளன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். அவளிடமும் அதுபற்றி கூறியிருந்தார்.
சீராளன் தன் திறமையால் சொத்துக்களை சேர்த்துக் கொண்டே இருந்தார். சிவானந்த்தோ அந்த சொத்துக்களை எப்படி செலவு செய்வதென்று ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான்.பொறுப்பின்றி சுற்றித்திரிந்தான்.
இப்போதுதான் அவனுக்கு பொறுப்பு வந்து, தானே தொழிலைப் பார்த்துக் கொள்வதாகக் கூறியுள்ளான். சீராளனும் பெரும் சந்தோசத்துடன் அவனிடம் தொழிலை ஒப்படைத்துவிட்டு ஜாலியாக இருக்கப்போவதாகச் சொன்னார்.
வர்ஷனாவையே தன் மகனுக்கும் காரியதரியாகப் பணியாற்றுமாறு சீராளன் தெரிவித்திருந்தார். அவன் அலுவலகத்துக்கு வந்த நாட்களில் நடந்துகொண்ட முறையில் எந்தவித குற்றமும் கிடையாது. கேள்விப்பட்ட வரையில் ஆடம்பரமாக செலவு செய்வானே தவிர பெண்கள் விடயத்தில் அவன் மிகவும் கண்ணியமானவன். எனவே அவளும் எந்தவித தயக்கமும் இன்றி ஏற்றுக்கொண்டாள்.
சீராளன் தன் மகன் குறித்து சில வார்த்தைகள் கூறிக்கொண்டு இருந்தார். வர்ஷனாவோ தன் மனதில் சலனத்தை உண்டாக்கிய அந்தப் புதியவனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
Top