எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மிஞ்சியின் முத்தங்கள் - கதை திரி 4

Status
Not open for further replies.

NNK-50

Moderator
மிஞ்சியின் முத்தங்கள் -4


1706300350856.jpeg


இரண்டு நாட்கள் ஆகிறது கொடிமலரை பார்த்து, இது பட்டணம் அல்லவே வெள்ளந்தியான மனிதர்களாக இருந்தாலும் கிராம மக்கள் மிகவும் கவனமானவர்கள் எப்பொழுதும் சுற்றத்தை பற்றிய தெளிவு இருக்கும்.


யார் எங்குச் செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்ற கவனம் இருக்கும் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தால் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் சந்தேகம் வரலாம் என்பதால் அந்தப் பக்கமே செல்லவில்லை.


இன்று நண்பனின் கடையில் நின்றிருந்தான் அவள் வரவை எதிர்பார்த்து, கொடிமலரின் விழிகள் சுற்றிலும் சுழன்றது ‘இன்றாவது வந்திருப்பானா’ என்ற ஆவலோடு.


அவளின் தேடலைக் கண்டுகொண்டான், கடையின் உள்ளே நின்றதால் அவள் பார்வை வட்டத்தில் அவன் விழவில்லை மனதில் சட்டென்று ஒரு குளிர்மழை பொழிந்தது அவனுக்கு.


தன்னை ஒருவன் பார்க்கிறான் என்ற பருவ வயதின் ஆர்வமாகக் கூட இருக்கலாம் கொடிமலருக்கு, அவனுடைய பக்குவப்பட்ட மனதிற்கு அதுவும் புரிந்தது என்றாலும் மனதில் அசைக்கமுடியா ஒரு நம்பிக்கை அவனின் இதயராணியின் மனசிம்மாசனத்தில் அவனே அமரப்போகிறான் என்று.


கொடிமலருக்கு இன்றும் ஏமாற்றமே! இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த முதல் முறையே அவள் மனதில் சுவடு பதித்துவிட்டான் அதன் பிறகு சில முறை மட்டுமே அவனைப் பார்த்திருக்கிறாள், கடை வாங்கும் விஷயமாக அவளின் சித்தப்பாவை பார்க்க வருவான்.


ஒருநாள் காணாமல் போனான், ஏன் வருவதில்லை? என்ற விவரம் தெரியாமல் தவித்தாள் கொடிமலர், ஆனால் அவனுடைய பயணத்திற்கு முதல் நாள் அவளின் சித்தப்பா ராஜப்பனை காண வந்திருந்தான், நன்றி சொல்லிப் பயணத்தைப் பற்றிக் கூற.


அது ஒரு சாக்கு… உண்மையில் அவளைக் காணவே வந்தது ஆனால் அன்று கொடிமலர் அங்கில்லை பெண்கள் அனைவரும் குலதெய்வம் கோவிலுக்குச் சென்றிருந்தனர்.


வெகுநேரம் அவரிடம் ஏதேதோ பேசிக் காத்திருந்தும் அவளைக் காணமுடியாத ஏக்கத்தோடு சென்றிருந்தான், அதைக் கொடிமலர் அறியவில்லை, அவன் திரும்பிச் சென்றுவிட்டான் என்பதே அவனின் மாமா பார்த்திபன் ராஜப்பனை கானவந்தபோதே அறிந்துகொண்டாள்.


இப்பொழுது மீண்டும் அவளுக்கு அந்தச் சந்தேகம் வந்தது ஒருவேளை சென்றிருப்பானோ என்று.


அந்த வார இறுதியில் அனைவரும் குடும்பத்தோடு நிர்மலாவின் வீட்டில் இருந்தனர், தாய் மாமா பார்த்திபனும் அத்தை சிவகாமியும் உடன் வந்திருந்தனர்.


“என் பொண்ணு கல்யாணத்தப்போ நான் உடம்பு முடியாம படுக்கைல இருந்தேன் ஆனாலும் நாங்க பாத்த மாப்பிளையை எங்க பொண்ணு கல்யாணம் செஞ்சுக்கிட்டா” என்ற வார்த்தைகள் நேரடியாகவே நிர்மலாவின் பெற்றோரைக் குற்றம் சுமத்தியது.


‘குத்துகல்லுமாதிரி நீ இருக்கும்போதே உன் பொண்ணு அவளே மாப்பிளை பாத்துக்கிட்டா’ என்று.


தான் ஏதோ பெரிய தவறு செய்தபோலக் கூனி குறுகி நின்றார் அந்த மனிதர், இவர்கள் பெண்பார்க்க வருவதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை.


அன்று காலை ஏதோ தோழி வீட்டிற்கு வருகிறாள் என்பதை போல ‘என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள்’ என்றாள் பெற்றோரிடம், காதில் கேட்ட வார்த்தைகளை அவர்களால் நம்ப முடியவில்லை.


“என்ன பேசுற நீ?” என்று குரல் உயர்த்தினார் அவளின் தாய்.

“எங்களுக்குத் தெரியாம எப்படி பொண்ணு பாக்க வருவாங்க தரகர்கூட எதுவும் சொல்லலையே” என்றார் அவர்.


“தரகர் கொண்டு வரச் சம்மந்தம் இல்ல… நாங்க ரெண்டு பெரும் ஒரே கால்லேஜ் படிச்சோம் அப்போல இருந்து பழக்கம் அவர் அவங்க வீட்டில சொல்லிச் சம்மதம் வாங்கிட்டார், அவங்க இன்னைக்கு சாயந்திரம் வருவாங்க” என்றாள் அசராமல்.


சிறிய வயதிலிருந்தே அவளுக்குக் குடும்பத்தைப் பற்றிய கவலை இல்லை அவளுடைய குடும்பத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது தந்தை ஒரு சிறிய தொழிற்சாலையில் வேலை செய்கிறார் அம்மா கிடைக்கும் சிறிய சிறிய வேலைகளைச் செய்கிறார் அவ்வளவே.


கணவனின் குறைந்த வருமானத்தில் அந்தக் குடும்பத்தைக் கட்டுக்கோப்பாகச் சிக்கனமாக அவள் தாயார் நடத்தும் விதம் தெரியாது, பெண்பிள்ளை பிறந்ததுமே தம்பதிகள் முடிவு செய்து நகை சீட்டைத் தொடங்கிவிட்டனர், மேலும் சிக்கனம் பிடிக்கும் பணத்தை அப்படியே சேமிப்பில் வைத்து மகளுக்கு இருபது பவன் நகையையும் கல்யாண செலவுக்குத் தேவையான பணத்தை ஒருவிதம் சேர்த்ததும் தெரியாது.


மூன்று வருடமாக வேலைக்குச் செல்கிறாள் நிர்மலா, நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் அவள் வெறும் ஐந்தாயிரம் மட்டுமே வீட்டில் கொடுப்பாள்.


அதிகமாகக் கொடுத்தால்… பணம் இல்லாமல் கஞ்சத்தனமாக (சிக்கனமாகக் குடும்பம் நடத்துவதை அவள் அப்படியே உவமை படுத்துகிறாள்) செலவுசெய்யும் தாய் நிறைய பணம் கைக்குவந்தால் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அனைத்தையும் செலவு செய்துவிடுவாள் என்று முடிவுசெய்துகொண்டு மிச்ச பணம் அனைத்தையும் அவளே சேமிப்பில் வைத்துக்கொண்டாள்.


அதைப் பற்றி அவளுடைய பெற்றோர் கவலைப்படவில்லை தங்கள் கடமையைச் சரியாகச் செய்தனர், அவள் செலவுக்குக் கொடுத்த பணத்தில் கூட ஒரு ரூபாய் எடுக்கவில்லை அதையும் சேமிப்பில் வைத்துவிட்டனர்.


இது எதுவும் அவளுக்குத் தெரியாது தெரிந்துகொள்ளவும் அவள் விரும்பவில்லை மகளுடைய இந்தச் செய்கையை அவர்களால் தாங்க இயலவில்லை முற்றிலும் மனமொடிந்துபோயினர்.வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதை போல ராஜவேலு பேச அவர் இன்னும் தளந்துபோனார், அவரின் நிலையைக் கவனித்த அதிவீரன் மாமனுக்கு கண்காணிப்பித்தான் பேசுங்கள் என்று.


பெரியவர்கள் இருக்கும் சபையில் தான் பேசுவது சரியாக வராது, அதோடு அண்ணனின் திருமணம்பற்றிப் பேசவந்துள்ளோம் வருங்கால மனைவியின் தந்தையை இப்படி பேசுவதை அவன் தட்டி கேட்கவேண்டாமா.


நிர்மலா மட்டும்மல்லவே ஆதவனும் காதல் செய்கிறானே! அதை விடுத்து பெண்ணின் வீட்டினரை மட்டும் ஏன் பேசுகிறார் என்ற ஆத்திரம் வந்தது.


“அடடா என்ன நீங்க இப்படி நிக்குறீங்க… உங்க பொண்ணு மட்டுமில்லயே எங்க பையனும்தானே விரும்பினான், எங்க பையன் சொன்னதால தானே உங்க வீட்டுக்கு நாங்க பொண்ணு கேட்டு வந்துருக்கோம் நீங்க எங்கவீட்டுக்கு வரலையே”.


“அப்படிப்பார்த்தா பையனை ஒழுங்கா நாங்க வளக்கலன்னு தானே அர்த்தம் ஆகுது” என்றார் பார்த்திபன் ராஜவேலுவை பார்த்துக்கொண்டே, பார்த்திபனை நார்நாராகக் கிழிக்கும் ஆத்திரம் இருந்தும் அதிவீரனின் விழிகள் தன்னிலே நிலைத்திருப்பதை உணர்ந்து அமைதியாக இருந்தார் ராஜவேலு.


அதற்குமேல் அங்கே பேச்சுக்கள் பெரிதாக இல்லை ஆதவன் வீட்டினர் கூறுவதை இவர்கள் கேட்டுநின்றனர், அனைத்தையும் பேசிமுடிக்க “பெண்ணுக்கு என்ன போடு…” என்று ராஜவேலு தொடங்கும்போதே அதிவீரன் எழுந்துவிட்டான்.


“அப்போ நாங்க கெளம்புறோம் ரெண்டுவாரத்துல கல்யாணம் இப்போவே வேலையை ஆரம்பிச்சதான் சரியா இருக்கும்” என்று எழுந்து நின்று கைகூப்பினான்.


ராஜவேலு கேட்க வந்தது என்னவென்று புரிந்துகொண்ட நிர்மலாவின் தந்தை “நகைநட்டு பத்தி எதுவும் பேசலையே” என்றார்.

“உங்கப்பொண்ணுக்கு என்ன போடணும்னு சொல்ற அதிகாரம்லாம் இங்க யாருக்கும் இல்ல, அதெல்லாம் உங்க இஷ்டம் நீங்க ஒண்ணுமே குடுக்காம அனுப்பினாலும் என் அன்னான் நல்லா வெச்சு பாத்துப்பான்” என்றவன் விழிகள் ஆதவனில் படிந்தது அழுத்தமாக.“ஆமா வரதட்சணை எதுவும் வேண்டாம்” என்றான் அவசரமாக.

‘தறுதலைங்க எனக்குன்னு வந்து பொறந்திருக்கு பாரு’ என்று மனதிற்குள் மகன்களை என்னைசட்டியில் இட்டு வறுத்துக்கொண்டே நடந்தார் ராஜவேலு.


“ஏன்ணே வீட்ல ஒரு பந்தல் போட்டுக் காது குத்தினா உன் புள்ள காதுல தோடு தொங்கமாட்டேன்னு சொல்லுச்சா? இந்தப் பொட்ட காட்டுல உச்சிவெயில்ல இப்படி நிக்க வெச்சுருக்க” என்றாள் கயல்விழி, தாவணியை தலைவழியே போட்டு மூடிக்கொண்டு.


“தெரியாம பண்ணிட்டேன் விடு உன் புள்ளைக்கு வீட்டுக்குள்ளேயே பந்தல் போட்டுக் காது குத்திடுவோம்” என்றான் அவளின் பெரியப்பா மகன்.


“ஏய் சும்மா இருடி” என்ற கொடிமலர் கயல்விழியை இழுத்துக்கொண்டு குதிரை சிலையின் நிழலில் சென்று நின்றாள்.


“ஏண்டி இதுங்க எல்லாம் ஊட்டிக்கு ஊர்வலம் போனமாதிரி நிக்குதுங்க நமக்கு மட்டும்தான் வெயில் தாங்கலையோ” என்றாள் சுறுசுறுப்பாக ஓடி ஓடி வேலை செய்யும் குடும்பத்தலைவிகளை பார்த்துக்கொண்டே.


“தெரியலையே ஒரு வேல கல்யாணம் ஆனா நாமளும் இப்படி பொறுப்பா மாறிடுவோமோ என்னமோ” என்றாள் கொடிமலர்.


“அப்போ பொறுப்பு வரணும்னா கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்ற!” என்றவள் தலையில் கொட்டிய அவளின் தாய் “உனக்கெல்லாம் புள்ளயே வந்தாலும் பொறுப்பு வராது சோம்பேறி கழுத வந்து வேலைய செய்”
என்றார்.


“அடியே நீயும் இங்கதான் நிக்குற உன்னை ஏதாவது சொன்னுச்சா பாத்தியா என்னை மட்டும் திட்டிட்டு போவுது” என்றாள் விழி தலையைத் தேய்த்துக்கொண்டு, சிரித்துக்கொண்டே முன்னில் நடந்தாள் கொடிமலர்.


அவளுடைய அக்காக்கள் இருவரும் அங்குக் காய்கள் வெட்டிக்கொண்டு இருக்க இவர்களும் சென்று அமர்ந்தனர் “நீ ஏன் வந்த? போப்போய் நிழல்ல ஒக்காரு” என்றார்கள் பாசமலர்கள் மலரிடம்.


“இல்லக்கா உங்ககூடவே இருக்கேன்” என்றவள் அவர்களுடன் அமர்ந்துகொண்டாள், சொந்தங்கள் எல்லோருக்கும் அங்கேயே சமையல் நடக்கிறது உறவுகளே ஆளுக்கு ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டார்கள்.


அணைத்து ஏற்பாடுகளும் முடிந்து நல்ல நேரத்தில் குலதெய்வத்தின் முன்னே அனைவரும் கூடி நிற்கப் பிள்ளைக்குக் காதுகுத்து நடந்தது, வீல் வீல் என்று அலறிய பிள்ளையை ஆளாளுக்கு சமாதானம் செய்துகொண்டிருக்க.


“அடியே மலரு! யாரு வராங்கன்னு பாரு” என்றாள் விழி.


அவள் பார்த்துக்கொண்டிருந்த திசையில் எட்டி பார்த்த கொடிமலரின் மேனியில் ஒரு பரவசம் வந்து ஒட்டிக்கொண்டது, அதிவீரன் அவன் தாய் பார்வதியுடன் வந்துகொண்டிருந்தான் வேட்டிசட்டையில் அவன் நடந்துவரும் கம்பீரத்தை பார்க்கவே இரு கண் போதவில்லை அவளுக்கு.


“இங்க ஏன் வந்துருக்காங்க” என்றாள் மெலிதாக நடுங்கும் குரலில்.

“உன்னைப் பொண்ணுக்கேட்டு இருக்கும்” என்றாள் விழி.


அதிவீரனை பார்த்த கயல்விழியின் தந்தை ராஜப்பன் அவர்கள் அருகில் விரைந்து சென்று “அடடே வாங்க தம்பி நீங்க எங்க இங்க” என்றார் ஆச்சர்யமாக.


பின்னையே வந்த விழியின் பெரியப்பா மகன் “என் தோஸ்து சித்தப்பா ஒண்ணா படிச்சோம், ரொம்ப வர்ஷம் ஆச்சு பாத்து போன வாரம் சந்தைல பாத்தேன் அதான் குழந்தைக்குக் காதுகுத்து வெச்சுருக்கேன் வரணும்னு பத்திரிக்கை வெச்சேன்” என்றான்.


பார்வதியை பெண்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுடன் நிற்கவைத்துவிட்டு நண்பனை அழைத்துச்சென்றான், குழந்தைக்குப் பரிசைக் கொடுத்துவிட்டு பின்னில் நிற்பதாகக் கூறி கொஞ்சம் நகர்ந்து நின்றவன் விழிகள் ரசனையாக அவளில் பதிந்தது.


தூய வெள்ளை நிறத்தில் அரக்குநிற ஜரிகை வைத்த தாவணியில் புதுமலராக நின்றிருந்தாள், நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல் பார்க்காமல் இருக்கவும் முடியாமல் என்ன அவஸ்தை இது என்று இருந்தது கொடிமலருக்கு.


அதிவீரனுக்கு அந்தப் பிரசச்னையே இல்லை மற்றவரின் கவனத்தை கவராமல் அவளை விழிகளில் நிறைத்துக்கொண்டான்.


அறிமுகப்படலம் மெல்ல மெல்ல நீண்டு அவளின் அண்ணன்மார் வரை சென்றது, அவனிடம் சினேகமாகப் பேசினர், அங்கு நின்ற அரைமணி நேரத்தில் அவர்களின் மனதில் சிறப்பான ஒரு இடத்தைப் பிடித்துவிட்டான் அதிவீரன்.


தன்னுடைய மரியாதையான நடத்தையால், தெளிவான சிந்தனையால் கம்பீரமான பேச்சால்.


 
Last edited:

Mathykarthy

Well-known member
நிர்மலா பெத்தவங்களை கூட மதிக்க மாட்டேங்குறா.... என்ன பொண்ணோ... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
ஆதவனுக்கு ஏத்த ஜோடி... 😏

அதி அவன் வேலையை சரியா செய்யுறான்.... 😝 பாசமலர்கள் மனசுலயும் இடம் பிடிச்சுட்டான்... ☺️
 

NNK-50

Moderator
நிர்மலா பெத்தவங்களை கூட மதிக்க மாட்டேங்குறா.... என்ன பொண்ணோ... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
ஆதவனுக்கு ஏத்த ஜோடி... 😏

அதி அவன் வேலையை சரியா செய்யுறான்.... 😝 பாசமலர்கள் மனசுலயும் இடம் பிடிச்சுட்டான்... ☺️


😍😍🥰🥰 நன்றி சகி 🥰
 
Status
Not open for further replies.
Top