எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மோகனின் கதைகள் - By ஐ. எம். ஸம்றா

Fa.Shafana

Moderator
அஸ்ஸலாமு அலைக்கும்!

எனது பாடசாலையில் நூலக கண்காட்சிக்கு எனது பங்களிப்பாக "மோகனின் கதைகள்" எனும் புத்தகத்தை எழுதி உள்ளேன். எல்லா புகழும் இறைவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!

மோகன் என்ற சிறுவனின் சுவாரஸ்யமான பத்து சிறுகதைகள் இங்கே பதிவிட்டுள்ளேன். படித்து மகிழுங்கள்.
என் திறமை மேன்பட உங்கள் துஆக்களில் (பிரார்த்தனைகளில்) என்னை நினைவு கூறுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி!
ஜஸாக்குமுல்லாஹு ஃகைறன்!

அன்புடன்
இஷாம். எம். ஸம்றா


 

Fa.Shafana

Moderator

மோகனும் ரொட்டியும்!


முன்னொரு காலத்தில் ஒரு சிறிய ஊரில் மோகன் எனும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அவனுடைய அம்மா செய்யும் சிறிய வகை ரொட்டி மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் மோகனின் அம்மா இரவு உணவுக்காக மோகன் விரும்பும் அந்த ரொட்டி செய்து வைத்து விட்டு, தனது அம்மாவைப் பார்க்க பக்கத்து வீட்டிற்கு சென்றார்.

மோகன் விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தான். அவன் மேசையில் ரொட்டி இருப்பதை கண்டான். அதைக் கண்டு விட்டு அவனின் ஆசை குறையவில்லை. அவன் அதை எடுத்து உண்டான். அது சுவையாக இருந்ததால் இன்னும் ஒன்றை எடுத்து உண்டான். அவனை அறியாமல் மூன்று ரொட்டிகளை உண்டான்.

இரவுணவு நேரம் வந்தது. மோகனின் அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்தார்கள். அம்மா ரொட்டி இருந்த தட்டை எடுத்தார். அதில் மூன்று ரொட்டிகள் குறைவதைக் கண்டார். "யார் மூன்று ரொட்டிகளை உண்டது?" என்று கேட்டார்.

அதற்கு மோகன், "நான் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்த போது ரொட்டி இருப்பதைக் கண்டேன். எனக்குப் பசியாக இருந்ததால் எடுத்து உண்டேன். அது சுவையாக இருந்தது. அதனால் தான் நான் என்னை அறியாமலே மூன்று ரொட்டிகளை உண்டேன்" என்று குற்றத்தை உணர்ந்தவன் போல் கவலையாகக் கூறினான்.

அதற்கு அம்மா,"நீ உண்மையை மறைக்காமல் கூறி விட்டாய். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

அதன் பின்பு அனைவரும் மகிழ்ச்சியாக இரவு உணவு உண்டார்கள். மோகனும் அம்மா மன்னித்து விட்டார் என்று மகிழ்ச்சியாக உண்டான்.
 

Fa.Shafana

Moderator

மோகனும் புதிய பந்தும்.

ஒருநாள் மோகனின் அப்பா மோகனுக்கு அழகான பந்து ஒன்று வாங்கிக் கொடுத்தார். அப்பந்து பல நிறங்களைக் கொண்டிருந்ததால் மோகனுக்கு மிகவும் பிடித்தது.

தினமும் மோகன் அப்பந்தை நிலத்தில் அடித்தடித்து விளையாடுவான். ஒருநாள் மோகன் விளையாடுவதைக் கண்ட அவனது நண்பன் கோபால், "இது உன்னுடைய பந்தா? அழகாக இருக்குறதே!" என்றான்.

அதற்கு மோகன், "இது எனக்கு எனது அப்பா வாங்கித் தந்தார்" என்றான்.

"நானும் விளையாட வரவா?" என்று கோபால் கேட்டான்.

அதற்கு மோகன், "உனக்கு விருப்பம் என்றால் வரலாம்" என்றான்.

மோகனும் கோபாலும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மோகன் பந்தை எறியும் போது அது தவறி மோகனின் வீட்டுக் கிணற்றினுள் விழுந்தது.

மோகன் வீட்டினுள்ளே அழுது கொண்டே போனான். அதைக் கண்ட மோகனின் அப்பா, "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார்.

மோகன் நடந்த அனைத்தையும் கூறினான்.

"ஆ.. அதற்காகவா அழுகிறாய்? வா உன்னுடைய பந்தை எடுத்துத் தருகிறேன்" என்றார் அப்பா.

அதைக் கேட்ட மோகன் அழுகையை நிறுத்தினான். அப்பா பந்தை எடுத்துக் கொடுத்தார். அதன் பின்னர் மோகனும் கோபாலும் மகிழ்ச்சியாக விளையாடினார்கள்.

 

Fa.Shafana

Moderator
வெற்றியோ! தோல்வியோ!

ஒருநாள் மோகனும் கோபாலும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதில் கோபால் வென்றான். "உன்னால் இதிலாவது வெற்றி பெற முடியவில்லையா?" என்று மோகனைப் பார்த்து கோபால் கேலி செய்தான்.

அதைக் கேட்ட மோகன் அழுது கொண்டே வீட்டினுள் சென்றான். அவனின் அழுகுரலைக் கேட்ட அவனின் அம்மா, "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார்.

மோகன் சொல்லவில்லை. அம்மா மறுபடியும் கேட்டார். மோகனால் நடந்ததை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதனால் மோகன் நடந்ததை சொன்னான்.

அதைக் கேட்ட அம்மா, "அவன் அப்படிக் கூறியது தவறு என்றால் நீ அதைக் கேட்டு அழுதாயே அதுவும் தவறுதான்" என்று சொன்னார்.

மோகனுக்கு அவர் சொல்வது புரியவில்லை. "அம்மா இப்பொழுது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று மோகன் கேட்டான்.

அதற்கு அவனுடைய அம்மா, "ஒரு போட்டியில் வெற்றியும் தோல்வியும் வருவது சகஜம்" என்று சொன்னார்.

அம்மா கூறியதைக் கேட்ட மோகன் அதை கோபாலிடம் சென்று சொன்னான். கோபால் மோகனிடம் மன்னிப்புக் கேட்டான். அதன் பின்னர் மோகனும் கோபாலும் மகிழ்ச்சியாக விளையாடினார்கள்.
 

Fa.Shafana

Moderator
மோகனும் பூனைக்குட்டியும்.

ஒருநாள் மோகனின் வீட்டுப் பின்புறத்தில் அழகான பூனைக்குட்டி ஒன்று இருந்தது. அதைக் கண்ட மோகன் அவனது அம்மாவிடம், "அம்மா நான் இந்தப் பூனைக்குட்டியை வளர்க்கவா?" என்று கேட்டான்.

"நீ இந்தப் பூனையை வளர்க்கலாம் ஆனால் இது வீட்டினுள் வரக் கூடாது" என்றார் மோகனின் அம்மா.

அதைக் கேட்ட மோகனுக்கு மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. "சரி.. சரி.. சரி" என்று மோகன் சொன்னான்.

சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள் இரவு பூனை வீட்டினுள்ளே வந்தது. அதைக் கண்ட அம்மா கோபமுற்றார். அப்பூனையை மெல்லிய குச்சியொன்றை எடுத்து அடித்தார். பூனை பயந்து ஓடியது.

அடுத்த நாள் காலையில் மோகன் பூனையைத் தேடினான். பூனை கிடைக்கவில்லை. மோகனுக்குக் கவலை வந்து விட்டது.

மோகனின் கவலை முகத்தைக் கண்ட அம்மா, "என்ன தேடுகிறாய்?" என்று கேட்டார்.

அதற்கு மோகன், "எனது பூனையைத் காணவில்லை" என்றான்.

"அது நேற்றிரவு வீட்டினுள்ளே வந்தது. அதை நான் அடித்து விரட்டினேன்" என்றார் மோகனின் அம்மா.

அதைக் கேட்ட மோகனுக்கு அழுகை வந்து விட்டது. அதைக் கண்ட அம்மா, "நீ இந்தப் பூனையை வளர்க்கவா? என்று கேட்ட போது, நீ வளர்க்கலாம் ஆனால் இந்தப் பூனை வீட்டினுள் வரக்கூடாது என்று சொன்னேன். ஆனால் நேற்றிரவு பூனை வீட்டினுள் வந்தது, அதனால் தான் நான் அடித்து விரட்டினேன்" என்றார்.

அதைக் கேட்ட மோகன் அழுது கொண்டே வெளியே சென்றான். அவனின் அழுகுரலைக் கேட்ட பூனை ஒரு பெரிய புதரில் மறைந்திருந்து வெளியே வந்தது. அதைக் கண்ட மோகன் மகிழ்ச்சி அடைந்தான்.

அன்றிலிருந்து அந்தப் பூனை வீட்டினுள்
 

Fa.Shafana

Moderator

சண்டை பிடிக்காதே!

ஒருநாள் மோகனும் கோபாலும் தங்களுக்குள்ளே ஓட்டப் போட்டி ஒன்றை வைத்தார்கள். அதில் கோபாலுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருந்தது.

போட்டி ஆரம்பித்தது. மோகனும் கோபாலும் ஓடத் தொடங்கினார்கள். மோகன் போட்டியில் அதிக ஆர்வம் காட்டியதால் முன்னால் இருந்த கல்லைக் காணவில்லை. அவன் அந்தக் கல்லில் இடறி விழுந்தான்.

மோகன் விழுந்ததைக் கண்ட கோபால் சிரித்தான். மோகனுக்கு அழுகை வந்து விட்டது. அவன் அழுது கொண்டே வீட்டினுள் சென்றான். அவன் அழுவதைக் கண்ட அவனுடைய அப்பா, "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார்.

அதற்கு மோகன், "நானும் கோபாலும் ஓட்டப் போட்டி வைத்தோம். அதில் நான் ஓடிக் கொண்டிருக்கும் போது ஒரு கல்லில் இடறி விழுந்தேன். அதைக் கண்ட கோபால் சிரித்தான்" என்று சோகமா சொன்னான்.

அதற்கு அவனுடைய அப்பா கோபாலை அழைத்து வரச் சொன்னார். மோகன் சென்று கோபாலை அழைத்து வந்தான்.

அப்பா கோபாலைப் பார்த்து "நீங்கள் நண்பர்கள் என்று தானே நான் நினைத்தேன். கோபால் இப்படி ஒருவர் விழுந்தால், அவரைப் பார்த்து சிரிப்பது அவரைக் கேலி செய்வது போல் இருக்கும்" என்றார்.

மோகனின் அப்பா சொன்னதைக் கேட்ட கோபால் மோகனிடம் மன்னிப்புக் கேட்டான். மோகனும் கோபாலை மன்னித்தான். அதன் பின்னர் இருவரும் மகிழ்ச்சியாக சென்று விளையாடினார்கள்.
 

Fa.Shafana

Moderator

கிளி சென்ற கவலை!

ஒருநாள் மோகனின் அப்பா மோகனுக்கு அழகான கிளி ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அந்தக் கிளியை மோகன் ஒரு அழகான கூட்டில் வைத்து வளர்த்தான்.

அந்தக் கிளிக்கு மோகன் தினமும் பழமும், தானியங்களும் கொடுத்தான். ஒருநாள் மோகன் கிளியிடம் சென்று, "பசிக்கிறதா?" என்று கேட்டான். கிளியும் "பசிக்கிறதா?" என்று பதிலுக்குக் கேட்டது. அதைக் கேட்டவுடன் மோகன் அதிர்ச்சி அடைந்தான். ஓடிப் போய் அவனது அப்பாவிடம் சொன்னான்.

அதற்கு அவனின் அப்பா, "கிளிகள் சிறிது காலம் எங்களோடு பழகினால் நாங்கள் பேசுவதை அது திருப்பி சொல்லும்" என்றார். அதைக் கேட்ட மோகன் தினமும் கிளியுடன் பேசுவான்.

ஒருநாள் மாலையில் மோகன் கிளி இருந்த கூட்டைப் போய் பார்த்தான். அதற்குள் கிளி இருக்கவில்லை. கிளி இருந்த கூட்டின் கதவு திறந்திருந்தது. அதைக் கண்டு மோகன் மனம் வருந்தி சோகமாக இருந்தான்.

அவனைக் கண்ட அப்பா, "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என்று கேட்டார்.

அதற்கு மோகன், "எனது கிளிக் காணவில்லை. அதன் கூட்டுக் கதவும் திறந்து இருந்தது" என்றான்.

"பறவைகள் வானத்தில் பறக்க வேண்டும். நீ கவலைப்படாதே. அந்தக் கிளி இங்கேயே இருந்தது. அது மாலையாகும் பொழுது வந்து விடும்" என்றா மோகனின் அப்பா. அவர் சொன்னதைக் கேட்டவுடன் மோகனுக்கு தைரியம் வந்தது.

மாலையாகி விட்டது. மோகன் கிளி வந்து விடும் என்று நினைத்துக் கொண்டே இருந்தான். திடீரென வானத்தில் இருந்து கிளி ஒன்றின் குரல் கேட்டது. மோகன் அந்தக் குரல் வந்த திசையைப் பார்த்தான்.

மோகனின் கிளி அவனை நோக்கி பறந்து வந்தது. அதைக் கண்ட மோகன் மகிழ்ச்சி அடைந்தான். அதே நேரத்தில் அப்பா சொன்னது சரி என்றும்

 

Fa.Shafana

Moderator
கடைக்குச் சென்ற மோகன்!

ஒரு நாள் மோகனின் வீட்டில் மா, சீனி, முட்டை மற்றும் உப்பு முடிந்துவிட்டது. அந்த நேரம் மோகனின் அப்பா வீட்டில் இல்லை. வேலை விடயமாக பக்கத்து ஊருக்குச் சென்று இருந்தார். மோகன் மட்டும் தான் வீட்டில் இருந்தான்.

அம்மா மோகனிடம், "சீனி, மா, முட்டை மற்றும் உப்பு வாங்கிட்டு வா" என்று சொன்னார்.

மோகனும் கடைக்கு சென்றான். அம்மா மோகன் வரும் வரை இருந்தார். ஒரு மணித்தியாலம் கழிந்தது.
மோகன் முட்டை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து இருந்தான்.
அம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அம்மா மோகனிடம், "மற்ற மூன்று பொருட்களும் எங்கே?" என்று கேட்டார்.

அதற்கு மோகன், "அம்மா நீங்கள் சொன்ன ஒரு பொருள் தான் எனக்கு நினைவுக்கு வந்தது. மற்ற மூன்று பொருட்களையும் மறந்து விட்டேன். நீங்கள் ஒரு தாளில் மற்ற மூன்று பொருட்களையும் எழுதித் தாருங்கள், நான் போய் வாங்கிக் கொண்டு வருகிறேன்" என்றான்.

அம்மாவும் எழுதிக் கொடுத்தார். மோகன் போய் வாங்கிக் கொண்டு வந்தான்.

அன்றிலிருந்து மோகன் கடைக்கு போகும் பொழுதெல்லாம் தேவையான பொருட்களை எழுதிக் கொண்டு போவான்.
 

Fa.Shafana

Moderator
பு‌திய புத்தகம்!

மோகனுக்கு புத்தகம் வாசிப்பதற்கு மிகவு‌ம் பிடி‌க்கு‌ம். அவன் நிறைய புத்தகங்கள் வாசித்தும் இருக்கிறான்.

ஒருநாள் மோகனின் அப்பா மோகனுக்கு இரண்டு புதிய புத்தகங்கள் வாங்கிக் கொண்டு வந்திருந்தார்.

மோகன் அப்புத்தகங்களை வாசித்ததே இல்லை. ஆனாலும் அவனுக்கு இந்த புத்தகங்கள் தனக்கானதா என்ற சந்தேகம் இருந்தது.

மோகன் அப்பாவிடம், "இப்புத்தகங்கள் யாருக்கு?" என்று கேட்டான்.

"உனக்கு புத்தகம் வாசிக்க பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால் தான் உனக்கு இந்தப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்தேன்" என்று மோகனின் அப்பா சொன்னார்.

அதை கேட்ட மோகன் "உண்மையாகவா?" என்று கேட்டான்.
"ஆமாம்" என்றார் மோகனின் அப்பா.

அதன் பின்பு மோகன் தினமும் அந்த புத்தகங்களை வாசிப்பான். மூன்று வாரங்கள் கழிந்தன. ஒரு நாள் மோகன் கடைக்குப் போக வெளியேறினான்.

அந்த நேரம் கோபால் வந்து, "மோகன் ஏன் இத்தனை நாளாக என்னுடன் விளையாட வரவில்லை? என்னுடன் கோபமா?" என்று கேட்டான்.

"நான் உன்னுடன் கோபம் இல்லை" என்றான் மோகன்.

மீண்டும் கோபால், "அப்படி என்றால் ஏன் என்னுடன் விளையாட வரவில்லை?" என்று கேட்டான்.

அதற்கு மோகன், "எனக்கு எனது அப்பா இரண்டு கதைப் புத்தகங்கள் வாங்கித் தந்தார். அவைகளைத் தான் இவ்வளவு நாளாக வாசித்துக் கொண்டிருந்தேன். நான் நாளை உன்னுடன் வந்து விளையாடுகிறேன்" என்று சொல்லி விட்டு மோகன் கடைக்குச்
 

Fa.Shafana

Moderator
நேரம் பார்க்கத் தெரியாது!

ஒரு நாள் மோகனின் அப்பா மோகனிடம், "நேரம் என்ன?" என்று கேட்டார்.

அதற்கு மோகன், "எனக்கு நேரம் பார்க்கத் தெரியாது" என்று சொன்னான்.

"நேரம் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். அது உனக்கு உதவியாக
இருக்கும். யாராவது நேரம் என்ன என்று கேட்டால் செல்லத் தெரிந்திருக்க வேண்டும்" என்றார் மோகனின் அப்பா.

அதைக் கேட்ட மோகன், "சரி நான் பழகிக் கொள்கிறேன் அப்பா" என்றான்.

அவன் சொல்லி விட்டு கோபாலுடன் விளையாடச் சென்றான். சில நாட்கள் கழிந்தன. மோகனும் நேரம் பார்க்கப் பழகிக் கொள்ளவில்லை.

ஒருநாள் மோகனின் அப்பா வேலையில் இருந்து வந்து, "மோகன் நேரம் என்ன?" என்று கேட்டார்.

அதற்கு மோகன், "தெரியாது" என்றான்.

"நேரத்தைப் பார்த்துச் சொல்" என்று சொன்னார் அவனின் அப்பா.

அவன் கடிகாரத்தின் முன் சென்று நேரம் செல்லத் தடுமாறிக் கொண்டிருந்தான்.

அவ்விடத்திற்கு வந்த மோகனின் அம்மா, "கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு என்ன செய்கிறாய்?" என்று கேட்டார்.

அதற்கு மோகன், "அப்பா நேரம் என்ன என்று கேட்கிறார். ஆனால் எனக்கு நேரம் பார்க்கத் தெரியாதே" என்றான்.

அதற்கு மோகனின் அம்மா, "அதற்கு நாள் முழுவதும் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறாயா?" என்று கேட்டார்.

"வேறு என்ன செய்வது அம்மா?" என்று அம்மாவைப் பார்த்து மோகன் கேட்டான்.

"போய் அப்பாவிடம், அப்பா எனக்கு நேரம் பார்க்கத் தெரியாது என்று சொல்" என்றார் அவனின் அம்மா.

"என்னால் முடியாது" என்றான் மோகன்.

அம்மா மோகனிடம்,"ஏன் முடியாது? ஏதாவது காரணம் உண்டா?" என்று கேட்டார்.

"ஆம் அம்மா. சில மாதங்களுக்கு முன்பு அப்பா இதே போல நேரம் என்ன என்று கேட்டார். நான், எனக்கு நேரம் பார்க்கத் தெரியாது என்று சொன்னதும், நேரம் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும், நான் திடீரென கேட்பேன் என்று அப்பா சொன்னார். நானும் சரி என்று சொன்னேன். இப்பொழுது அவர் சொன்னது போலவே நேரம் என்ன என்று கேட்கிறார். மீண்டும் நான் போய் எனக்கு நேரம் பார்க்கத் தெரியாது என்று சொன்னால் அவர் என்னை திட்டுவார். அதற்காகத் தான் நான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்" என்றான் மோகன்.

அதைக் கேட்ட அம்மா அவ்விடத்தில் இருந்து சென்றார். அப்பா மீண்டும், "நேரம் என்ன?" என்று கேட்டார்.

அதற்கு மோகன் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். அவரிடம் வந்த அவனின் அம்மா, "இவனுக்கு நேரம் பார்க்கத் தெரியாது" என்றார்.

அப்பா மோகனைப் பார்த்து, "இன்னும் நீ நேரம் பார்க்கக் கற்றுக் கொள்ளவில்லையா? சரி நான் இந்த முறை உன்னை மன்னித்து விடுகிறேன். ஆனால் நீ நேரம் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த முறை நான் கேட்டால் சொல்ல வேண்டும்" என்றார்.
அதைக் கேட்ட மோகனின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

சில நாட்கள் கழிந்தன. அப்பா மீண்டும் மோகனிடம் நேரத்தைக் கேட்டார். அதற்கு மோகன் நேரத்தை சரியாகக் கூறினான்.

அதற்கு அப்பா, "அதற்குள் நீ நேரம் பார்க்கப் பழகி கொண்டாயா? எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று சொல்ல, அனைவரும் இரவுணவு உண்ண சென்றார்கள்.
 

Fa.Shafana

Moderator
மோகனின் புதிய செருப்பு!

ஒருநாள் மோகனும் கோபாலும் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது மோகனின் செருப்பு அறுந்து விட்டது. மோகன் விளையாடுவதை நிறுத்தி விட்டு அப்பாவிடம் சென்று, "அப்பா எனது செருப்பு அறுந்து விட்டது. எனக்குப் புதிய செருப்பு ஒன்று வாங்கித் தருவீர்களா?" என்று கேட்டான்.

அதற்கு மோகனின் அப்பா, "இப்பொழுது எனக்கு கடைக்குப் போக முடியாது, நாளை வாங்கித் தருகிறேன். அதுவரையில் என்னுடைய செருப்பைப் போட்டுக் கொண்டு விளையாடு" என்றார்.

மோகனும் அப்பாவின் செருப்பைப் போட்டுக் கொண்டு விளையாடினான். மறுநாள் காலையில் மோகன் எழுந்து அப்பா கடைக்குப் போகும் வரை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பா எழுந்து குளித்து விட்டு கடைக்குப் புறப்பட்டார்.

மோகன் ஓடிப் போய், "அப்பா நேற்று நான் புதிய செருப்பு வாங்கிக் கேட்டேனே! இன்று வாங்கிக் கொண்டு வருவீர்களா?" என்று கேட்டான்.

அப்பாவும் சரி என்று சொல்லி விட்டு கடைக்குச் சென்றார். மோகன் அப்பா வரும் வரை காத்திருந்தான்.

கோபால் மோகனின் வீட்டிற்கு வந்து, "மோகன் விளையாட வருவாயா?" என்று கேட்டான்.

அதற்கு மோகன், நேற்று நாம் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எனது செருப்பு அறுந்து விட்டது. அப்பா எனக்கு புதிய செருப்பு ஒன்று வாங்கிக் கொண்டு வருவதற்காக கடைக்குச் சென்றிருக்கிறார். அப்பா வந்தவுடன் விளையாட வருகிறேன்" என்று சொன்னான்.

அதைக் கேட்ட கோபால் அங்கிருந்து சென்றான்.
சில மணி நேரம் கழித்து மோகனின் அப்பா வீட்டிற்கு வந்தார். மோகன் அவர் பின்னாலே சென்றான்.

அவனிடம் அப்பா புதிய செருப்பைக் கொடுத்தார். மோகனும் அதைப் போட்டுக் கொண்டு விளையாடச் சென்றான்.

இரவு நேரம் வந்தது. மோகன் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்தான். அனைவரும் இரவுணவு உட்கொண்டு விட்டு படுக்கைக்குச் சென்றனர். அப்பா வெளியே போய் பார்த்தார். மோகனின் புதிய செருப்பைக் காணவில்லை.

அவர் மோகனிடம், "மோகன் எங்கே அந்த புதிய செருப்பு?" என்று கேட்டார்.

அதற்கு மோகன், "நான் அதைக் காலில் போட்டுக் கொண்டு தான் படுக்குறேன் அப்பா" என்று பதிலளித்தான். அதைக் கேட்ட அப்பாவும் அம்மாவும் சிரித்துக் கொண்டார்கள்.

"அதைக் கழற்றி வைத்துவிட்டு தூங்கு" என்று அம்மா சொன்னார்.

 
Top