எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே2

S.Theeba

Moderator
காதல் 2

தாரணியின் திருமணத்திற்கு முதல் நாள். நிஷாந்தினியின் குணத்தை நன்கு அறிந்து வைத்திருந்த அவளது நண்பி தனது தமக்கையை அவளது வீட்டிற்கே அனுப்பி வைத்துவிட்டாள். சுபியையும் அவளையும் கையோடு அழைத்து வரவேண்டும் என்று உத்தரவும் இட்டிருந்தாள்.
அவளே நேரில் வந்து அழைத்து – இழுத்து - சென்றிருப்பாள். ஆனால், நாளை முகூர்த்தத்தை வைத்துக்கொண்டு கல்யாணப் பெண் வெளியே செல்லக் கூடாது என்று வீட்டிலிருந்த பெரியவர்கள் தடுத்துவிட்டார்கள்.


நிஷாந்தினி முதல்முதலாக இந்த ஊருக்கு வந்தபோது தாரணி மட்டுமல்லாது அவளது குடும்பத்தினரும் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே அவளை ஏற்றுக்கொண்டனர். அவள்மீது அன்பும் அக்கறையும் காட்டி வழிநடத்தினர். நான்கு மாதங்களிலேயே ஆசிரியர் வேலை கிடைக்கவும் அவர்களுக்கு இனியும் பாரமாக இருக்கக் கூடாது என்று கருதியே அவள் தனது மகளுடன் தனியே வீடெடுத்துத் தங்கினாள்.

தாரணியின் தமக்கை விடாப்பிடியாக இருக்கவும் மறுக்க முடியாது தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு மகளுடன் சென்றாள். அவளைக் கண்டதும் தாரணிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அவளது சந்தோஷம் இவளையும் தொற்றிக்கொள்ளவும் இயல்பாக அங்கிருந்த வேலைகளில் தானும் பங்கெடுக்கத் தொடங்கினாள்.

இன்று நகரங்களில் அதிகமான (சில மட்டும் தவிர்த்து) திருமணங்கள் இயந்திரத் தன்மையுடனேயே நடைபெறுகின்றன. திருமணத்திற்கு நாள் குறித்தானதும் திருமண மண்டபம் ஒன்றை ஒழுங்குபடுத்தி சகல பொறுப்புகளையும் (சாப்பாடு, அலங்காரம்) அதற்கென தற்போது உள்ள அமைப்புக்களிடம் ஒப்படைத்து விட்டால் போதும். குறித்த நேரத்தில் மணமக்களுடன் புறப்பட்டு வரவேண்டியதுதான். உறவுகள் எல்லாம் நேரே மண்டபத்திற்கு வந்துவிடுவார்கள். தாலி கட்டும் சடங்கு முடிந்ததும் பந்தி ஆரம்பித்துவிடும். அதற்கென நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பரிமாற உண்டு முடித்ததும் உறவுகள் எல்லாம் சொல்லிக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.

ஆனால், கிராமங்களில் இன்றும் ஒரு உறவு வீட்டில் விசேஷம் என்றால் பலநாள் கொண்டாட்டம்தான். அவர்கள் தங்கள் ஊர் கோயில் திருவிழாவை எப்படி ஒன்று சேர்ந்து நடத்தி முடிக்கின்றார்களோ அதேபோல் வீட்டு விசேஷங்களையும் கூட்டாக நின்று நடத்துவார்கள். வெளியூரில் இருக்கும் சொந்தங்கள் எல்லாம் ஓரிரு நாட்களுக்கு முதலே வந்து சேர்ந்துவிடும். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வார்கள். வீட்டைச் சுற்றி பெரிய பெரிய பந்தல்கள் போடப்பட்டு அலங்கரிக்கப் பட்டிருக்கும். வீட்டின் பின்புறம் போடப்பட்ட பந்தலின் கீழ் இரண்டு நாட்களுக்கு முன்னரே அடுப்பெரிய ஆரம்பிக்கும். உறவுகள் எல்லாம் எந்தத் தயக்கமுமின்றி வேலைகளைச் செய்வார்கள். சமையல் ஒரு பந்தலில் நடந்தால், பந்தி இன்னும் ஒரு பந்தலில் போகும். வேலைகளூடே ஆட்டம், பாட்டு என குதூகலமாகப் போகும். பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறியவர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

தாரணியின் வீட்டுக் கல்யாணமும் அவ்வாறே. அதனைக் கண்டதும் சுபிக்ஷாவும் பெரும் குதூகலம் அடைந்தாள். அங்கிருந்த சிறுவர்களுடன் தானும் இணைந்து கொண்டாள். நிஷாந்தினியும் மகள் மீது ஒரு கண்ணை வைத்தபடி ஓடியாடி வேலைகளைச் செய்தாள்.

முதல்நாள் சடங்குகள் எதிலும் கலந்துகொள்ளாமல் சாமர்த்தியமாகத் தவிர்த்துக் கொண்டாள்.

மறுநாள் காலை பத்து மணிக்கு முகூர்த்தம். அதிகாலையிலேயே எழுந்து எல்லோரும் ஆயத்தமாகத் தொடங்கி விட்டார்கள். நிஷாந்தினியும் தாரணியை அலங்கரிப்பதில் உதவிக் கொண்டிருந்தாள். நேரம் செல்லவும் அறைக்குள் வந்த தாரணியின் தாய்,
“நிஷா போதும். மீதியை மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீ போய் ரெடியாகு. சுபியையும் ரெடியாக்கி அழைத்து வா”
எனக் கூறி அனுப்பி வைத்துவிட்டார்.

நிஷாந்தினி தனது மகளை மிக அழகாக அலங்கரித்தாள். கரும்பச்சையில் சிவப்புநிறக் கரையுடன் தங்க நிற ஜரிகை இழையோடிய பட்டுப் பாவாடை சட்டை. உடைக்குத் தோதாக அணிகலன்கள். தோள் வரை வளர்ந்திருந்த முடியை இரண்டாகப் பிரித்து கட்டியவள் தாரணியின் அம்மா தந்து சென்றிருந்த மல்லிகைச் சரத்தின் ஒரு பகுதியை அவளுக்கு சூட்டினாள். அவளது அழகைக் கண்ணுற்றவளுக்கு அந்நேரத்தில் யாரையோ நினைவுபடுத்தும் கண்கள் கலங்கினாள். அதைப் பார்த்த அவளது மகள்
“அம்மா.. ஏன்மா என்னைப் பார்த்து அழுவுறிங்க.. நான் ஒன்றும் பண்ணலையே”
“இல்லடா நான் அழவில்லை. என் குட்டியின் அழகில் வரும் ஆனந்தக் கண்ணீர் இது.”
என்று கூறி சமாதானப்படுத்தி விட்டுத் தானும் ஆயத்தமானாள்.

அவளும் தான் வழமையாக அணியும் காட்டன் புடவையில் இருந்து சற்று மாறுதலாக வெண்பட்டில் பச்சைக் கரையிட்ட பட்டுப் புடவை கட்டியிருந்தாள். கழுத்தில் சிறிய முத்துமாலையும் கைகளில் கண்ணாடி வளையல்களுமே அணிந்திருந்தாள். தளர்வாகப் பின்னிய ஒற்றைப் பின்னலும் அதில் சூடிய மல்லிகைச் சரமுமாக அந்த எளிய அலங்காரத்தில் மிக அழகாகவே இருந்தாள்.

காலை எட்டு மணிக்கே மணமகளை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு சென்று விட்டனர். மாப்பிள்ளையின் பூர்வீகம் சோலையூருக்கு அடுத்துள்ள ஊர். எனவே அங்கிருந்தே அவர்கள் வருவதாக ஏற்பாடாகியிருந்தது.
அதற்காகவே இரு ஊருக்கும் நடுநயமாக இருந்த முத்துக்குமாரசுவாமி ஆலயத்திலேயே திருமணச் சடங்குகள் நடைபெறவிருந்தன.

கோயிலில் ஒதுங்கி ஒரு ஓரமாய் நின்ற நிஷாந்தினியிடம் வந்த தாரணியின் அக்கா ஒரு தட்டைக் கொடுத்து அதனை மணமகனிடம் கொடுத்துவிட்டு வருமாறு கூறிச் சென்றுவிட்டாள். அந்தக் கோயிலிலேயே அதிகமான கல்யாணங்கள் நடைபெறுவதால் கோயிலின் பின்பக்கம் மணமக்களுக்கென அறைகள் கட்டப்பட்டிருந்தன. மணமகனின் அறையைத் தேடிச் சென்றவள் மூடியிருந்த கதவில் மெல்லத் தட்டினாள்.

கதவு மெல்லத் திறக்கவும் குனிந்து தட்டைப் பார்த்துக் கொண்டு நின்றவள் நிமிர்ந்து பார்க்கவும் பார்வை அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டது. உடல் மட்டுமே அசைவற்று நின்றது. அவளது உள்ளத்திலோ பெரும் பிரளயமே நடந்தது.

தன் கண்ணெதிரே நிற்பவன் அவன்தானா என்று ஒரு நொடி சந்தேகம் தோன்றவும், கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தாள்.

அங்கே ஆறடிக்கு சற்றும் குறைவில்லாத உயரத்தில் கட்டுமஸ்தான உடலுடன், பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றிருந்தவன்... தனஞ்சயன்தான். தான் காண்பது நிஜம் என்று அவள் அறிவு எடுத்துரைத்தது. அவனோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவளையே பார்த்து
நின்றான்.
 
Last edited:
Top