எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீயே.. நீயே.. தித்திக்கின்றாயே!! - கதை திரி

Status
Not open for further replies.

Viba Visha

Moderator
தீயே.. நீயே.. தித்திக்கின்றாயே!!

eiQC84K78059 (1).jpg

அத்தியாயம் - 1

"ஐயோ.." என்ற ஒரு அலறல்! அந்த அலறல் முற்றுப்பெறும் வேளையில் பேரிடியின் பேரிரைச்சல்!

அந்த ஒற்றை இரைச்சலில் இந்த மொத்தக் குடும்பமும் இப்படியாய் நிலை குலைந்து போகுமென்று யாரும் கனவில் கூட கண்டிருக்க மாட்டார்கள்.

தெய்வம்.. உயிருள்ள, உயிரற்ற அத்தனை ஜீவன்களையும் படைத்ததாகக் கூறப்படும் அந்த தெய்வம்.. தாய்மையின் அம்சம் என்று அவள் அம்மா எப்பொழுதுமே கூறுவார்.

ஆனால், அதே தெய்வம் பலி வாங்குமா?

நம் மீதே.. அதாவது தன் பிள்ளைகளின் மீதே கோபம் கொள்ளுமா?

செய்வதாகக் கூறிய நேர்த்திக் கடனை, மறந்துவிட்ட.. அல்லது தெரிந்தே மறுத்துவிட்ட காரணத்திற்காக உயிர் வாங்குமா?

இதோ.. வாங்கிவிட்டதே!!

உடலெல்லாம் தீயில் கருகி.. இன்னமும் புகை வந்துகொண்டிருந்தது அந்த உடலில் இருந்து.

அது செல்லியின் அம்மாவின் உடல் தான்.

மழை பெய்யவிருக்கிறதே என்று செல்லியின் அம்மா அந்த இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே கொடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க வந்த அந்த நேரத்தில் சட்டென வந்த மின்னல் செல்லியின் அம்மா முத்தம்மாவைத் தாக்கிவிட, கண நேரத்தில் தீயில் கருகினார் அவர்.

துள்ளத் துடிக்க என்பது கூட இல்லாது.. அவரது "அம்மா.." என்ற அலறல் கூட முற்றுப்பெறாது அப்படியே உயிர் போய்விட்டது.

அந்த இடிச்சத்தத்தில், முத்தம்மாவின் குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஊர் மக்களும் தத்தமது வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்க, அங்கு கிடந்ததென்னவோ முற்றிலுமாய் எரிந்து போன முத்தம்மாவின் உடல் மட்டிலும் தான்.

அவரை அப்படிப் பார்த்ததும் முத்தம்மாவின் அன்பு கணவன் மாயன் கதறிய கதறலில் அந்த ஊரே நடுங்கியது.

அதைப் பார்த்த அவரது ஆசை மகள் செல்லியோ.. அடியற்ற மரமாய் மயங்கிச் சரிந்திருந்தாள்.

அவள் புறம் திரும்பக் கூட இல்லை அவள் தந்தை.

"ஐயோ.. உனக்காகவே தவமா தவமிருந்து அஞ்சு வருஷம் காத்திருந்து உன்ன கல்யாணம் செய்துகிட்டேனே.. எல்லாம் இப்படி நீ என்ன பாதில விட்டுட்டுப் போறதுக்காகவா?

நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? ஏன் எனக்கு இப்படி ஒரு நிலைமை?" என்று அவர் அரற்றிட..

அங்கு இருந்த ஒரு வயதான கிழவி.. கோலூன்றிய தளர் நடையுடன் அவர் அருகே வந்து ஒரு கணம் கருகிப் போன முத்தமாவின் உடலையே கூர்ந்து பார்த்துவிட்டு..

"எல்லாம் சாபம்.. அந்த கள்ளழகருக்கு உங்க வேண்டுதல நிறைவேத்தாம விட்ட பாவம்!

நம்ம அழகர்சாமி என்ன சாதாரணமானவருன்னு நினைச்சியா?

இந்த ஊருக்கே காவல் தெய்வம் அவரு.. அவருக்கு ஒரு வேண்டுதல் வெச்சுட்டு.. உன் பொண்டாட்டி அதை நிறைவேத்தாம விட்டுட்டா.. நீயும் அதுக்கு துணை போன இல்லையா?

இப்போ உன் பொண்டாட்டிக்கு உயிர் போய்டுச்சு.. இனியும் தாமதிக்காக உன் வேண்டுதல நிறைவேத்திடு.." என்று அப்பொழுது தான் தானாகவே மயக்கத்திலிருந்து மெல்ல விழித்தெழுந்த செல்லியை ஒரு மார்க்கமாகப் பார்த்துவிட்டு வேறு புறமாக அகன்றார் அந்தக் கிழவி!

அவரது அந்த வார்த்தையைக் கேட்டதும்.. சட்டென அழுகை நிற்க, மெல்ல மேலே எழுந்து கொண்டிருந்த மகளைக் கண்டவர்..

"ஐயோ.. தாயீ.. உனக்காக உன் அம்மா எத்தனை கோவில்ல தவமா தவிமிருந்து உன்ன பெத்தா..

கடைசியா நம்மூரு அழகருக்கு, 'தனக்கு ஒரு குழந்தை பிறந்தா, அதை இந்த அழகர் கோவிலுக்கே நேர்ந்து விட்டுடறே'ன்னு சொன்னாளே.. அப்பறம் பொறந்த குழந்தை முகத்த பார்த்த பின்னாடி பச்ச பிள்ளைய அவளால கோவிலுக்கு கொடுக்க முடிலையே..

அதுக்காக அவளையே அந்த அழகர் இப்படி காவு வாங்கிட்டாரே.." என்றவர், பிள்ளையின் கையைப் பற்றியபடி விறுவிறுவென அந்த பழங்கால அழகர் கோவிலுக்குச் சென்றார்.

"எப்பா கள்ளழகா.. நீ கள்ளந் தான்.. ஆனாலும் நியாயமான சாமி! உன்கிட்ட வேண்டிகிட்டா அந்த வேண்டுதல நீ உடனே நிறைவேத்திடுவேனு சொல்லித் தான் என் பொண்டாட்டி உன்கிட்ட புள்ளைக்காக வேண்டிகிட்டா.

அவ நம்புன மாதிரியே அடுத்த வருஷமே இந்த புள்ளைய எங்களுக்கு நீ கொடுத்துட்ட.

ஆனா.. நாங்க வாக்குத் தவறிட்டோம்!

குழந்தை பிறந்ததும் உனக்கே நேர்ந்து விட்டுடறதா சொன்னபடி நாங்க நடக்கல..

நீதி நேர்மைல தவறாத கறார் சாமி நீ.. அதுக்காக என் பொண்டாட்டிய காவு வாங்கிட்ட!

போதும் சாமி.. போதும்.. நான் என்னோட ஒரு உயிர தொலைச்சதே போதும்.. இந்த பிஞ்சையும் காவு கொடுக்க எனக்குத் தைரியம் இல்ல..

இந்தா.. இன்னைல இருந்து இவ உன் சொத்து. என் பொண்ணு செய்ய நான் உனக்கே நேர்ந்து விட்டுட்டேன். அவ காலம் முழுக்க உனக்கே அடிமையா இருப்பா.." என்று கூறி மகளை கோவிலின் வாசற்படியில் விட்டுவிட்டுத் திரும்பியும் பார்க்காது நடந்து வந்தார் மாயன்.

அவர் இப்படிக் கூறிவிட்டு சென்றதும், அவரது வார்த்தைகள் பாதி புரிந்தும் புரியாமலும் போனாலும், செல்லிக்கு அவள் தந்தையும் தன்னை விட்டு விட்டுப் போகிறார் என்று மட்டும் புரிந்தது.

அவள் தன் தந்தையின் பின்னோடாக, "அப்பா.. அப்பா.." என்று கதறிக் கொண்டே ஓடியும் மாயன் தன் மகளது கதறல் காதில் கூட விழாதபடி சென்றவர், தனது வீட்டில் மனைவியின் புடவையாலேயே சுருக்கிட்டுக் கொண்டார்!
மனைவி இறந்த துக்கம் தாளாது, ஒரு கணத்தில் எடுத்த முடிவது!

தாயும், தந்தையும் இப்படி ஒரே நாளில் தனக்கு இல்லாது போவார்கள் என்று அறியாத அந்தப் பிஞ்சின் கண்களில் அதற்கு மேல் கண்ணீரும் கூட சுரக்கவில்லை.

ஒரு மாதிரி உடலும் உள்ளமும் உறைந்து, மறைத்துப் போனது.

தாய், தந்தையின் உடலுக்கு முன்பாக அவர்களையே கண்சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தவளை, தூரத்தில் இருந்து பார்த்தான் பதினைந்தே வயதான இரும்பொறை!

அந்த ஊர் பெரிய தனக்காரரின் மகன்.

"அம்மா.. பாவம்மா செல்லி.. அது எப்படிம்மா கோவில்ல தனியா இருக்கும்? நாம நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்மா.." என்று தன் தாயிடம் அவன் கிசுகிசுக்க, அவனருகே இருந்த அவனது தந்தை பூபதிராஜா, "ஹ்ம்ம்.." என்று ஒரு உறுமல் போட, அப்படியே மகனின் குரல் தாழ்ந்துவிட்டது.

ஆனாலும் கண்களில் செல்லியை நினைத்து கசிந்தது கண்ணீர்!

அந்தக் கண்ணீருக்குக் காரணம்.. பாசமா, பரிதாபமா என்று அப்போது அவனுக்கும் புரியவில்லை!

*****

விடிந்தும், விடியாத அந்த அதிகாலையின் அந்தகாரத்தில் நடை தடுமாறி, தனது இடுப்பில் இருந்த லுங்கி பிடிப்பின்றி அவிழ்ந்து விழவும், அதை தன்னிச்சையாகப் பற்றியபடி தள்ளாடியபடியே வந்தவன், சட்டென ஒரு இடத்தில் கால் தடுமாறி விழுந்துவிட, அவன் விழுந்த சப்தம் கேட்டு, அந்த இடத்திற்குக் காவலாக இருந்த இரண்டு செக்யூரிட்டிகள் அரைத் தூக்கத்திலிருந்து பதறியபடி விழித்தெழுந்து சத்தம் வந்த திசை நோக்கி வந்தனர்.

வந்து பார்த்தவர்களுக்கு அங்கே கிடந்த கரிகாலன் கண்ணுக்குத் தட்டுப்பட, பல பத்திரிகைகளில் அவனது முகத்தைப் பார்த்திருந்தவர்களுக்கு, அந்த அறையிருளிலும் அவனை அடையாளம் தெரிந்தது.

"டேய்.. இது.. காலா இல்ல?" என்று அந்த செக்யூரிட்டிகளில் ஒருவன் மற்றவனைப் பார்த்துக் கேட்க, அதற்கு மற்றவனோ..

"ஆமாம்டா.. அவரே தான். இங்க எதுக்கு வந்திருக்காரு? ஏதாவது இன்வெஸ்டிகேஷனா?" என்றான் பதில் கேள்வியுடன்.

"டேய்.. இல்ல டா.. அவர் தான் போலீஸ் டிபார்ட்மெண்ட்டுலயே இல்லையே? அப்பறம் எங்க இன்வெஸ்டிகேஷன் செய்யப் போறாரு?

ஆளு.. செம மப்புல இங்க வந்து விழுந்துருக்காருன்னு நினைக்கறேன்.." என்று பதிலுருந்தான் முன்னவன்.

"சரி.. எப்படி இருந்தாலும் பெர்மிஷன் இல்லாம நம்ம ஏரியாக்குள்ள ட்ரெஸ்பாஸ் செய்திருக்காரு.. அதனால எப்படி இருந்தாலும் நம்ம மேடம்கிட்ட நாம இன்போர்ம் செய்தே ஆகணும்." என்றபடி அவன், அவர்களது மேடமுக்கு போன் செய்து விவரத்தைக் கூறினான்.

மெல்ல மெல்லப் புலர்ந்து கொண்டிருந்த அதிகாலையில் இன்னமும் போதை தெளியவில்லை கரிகாலனுக்கு.

"சார்.. இந்தாங்க சார்.. இந்தத் தண்ணில கொஞ்சம் முகத்தைக் கழுவிட்டு கொஞ்சம் ஸ்டடியா நில்லுங்க சார்.." என்று அந்த செக்யுரிட்டிகளில் ஒருவன் கூற, கரிகாலனோ..

"ஏய்.. உஷ்ஷ்ஷ்ஷ்.." என்று எங்கோ பார்த்தபடி, ஏதோ சம்மந்தமில்லாது உளறினான்.

இன்னமும் அவனது இடுப்பு லுங்கி அதன் இடத்தில் நிற்பதாக இல்லை.

அவனுக்கு உதவி புரிய வந்த அந்த செக்யூரிட்டிகளையும், "மேல கை வைக்காதீங்கடா.." என்று பிதற்றலாய் கூறி, கூடவே புரியாத ஏதோவொரு மொழியில் ஏசவும் செய்தான்.

இப்படி இவர்கள் காலாவுடன் போராடிக் கொண்டிருக்கையிலேயே ஒரு கரு நிற BMW கார் சீறியபடி அங்கு வெகுவேகமாக வந்து நேராக காலாவின் முன் நின்றது.

அதிலிருந்து கருநிற சட்டையும், பேண்ட்டும், அதே கருநிறத்தில் முழு நீள ஷ்ரக்குமான இரவு உடையில், உச்சியில் தூக்கிப் போட்ட 'மெஸ்ஸி பன்' எனப்படும் உச்சந்தலையில் தூக்கிப் போடப்பட்ட கொண்டையுடனும் வந்திறங்கியவளை அத்தனை போதையிலும் அடையாளம் தெரிந்தது கரிகாலனுக்கு!
"இவளா?" என்று அதிர்வுடன் அவன் பார்க்க, அந்த 'அவளோ..' தன் கீழ் உதடு ஏளனமாய் வளைய, அவனைக் கண்டாள்.

கூடவே பார்வையை மட்டிலும் அவனிடம் பதித்து.. வார்த்தைகளை அந்த செக்யுரிட்டிகளிடம் தொடுத்து..

"என்ன? இந்த ஆள் தான் நம்ம சைட்டுக்குள்ள ட்ரெஸ்பாஸ் செய்ததா?" என்றாள் அதே ஏளனத்தை இப்பொழுது குரலிலும் தேக்கி.

"ஆமாம் மேடம்.. இவர் எப்படி உள்ள வந்தாருன்னு தெரில.. திடீருன்னு பார்த்தா ஏதோ சத்தம். ஓடிப் போய் பார்த்தா இவர் அர மப்புல கீழ விழுந்து கிடந்தார்.

ஆனாலும்.. எங்களுக்கு சந்தேகமா இருந்ததால உடனே உங்களுக்கு போன் செஞ்சுட்டோம் மேடம்." என்றான் பெருமையாக.

இதுவரை கரிகாலனை நோக்கி வீசிக் கொண்டிருந்த அந்த ஏளனப் பார்வை, இப்பொழுது அந்த செக்யூரிட்டியிடம் திரும்பியது.

"ஓஹோ? நீங்க கடமையே கண்ணாயிரமா வேலை செஞ்சுட்டு இருந்தப்போ இந்த ஆளு உங்க கண்ணுல மண்ணத் தூவிட்டு உள்ள நுழைஞ்சாரு..

இவர் வந்த சத்தம் கேட்டதுமே நீங்க அடிச்சுப் புடுச்சு உங்க வீராதி வீர சாகசமெல்லாம் காட்டி இவர கையும் களவுமா பிடிச்சுட்டீங்க அப்படித் தானே?" என்று கூறி சத்தமாக சிரிக்க, அந்த இரு செக்யூரிட்டிகளின் தலையும் மெல்லத் தாழ்ந்தது.

"நல்லா கும்பகர்ணனுங்க மாதிரி தூங்கியிருக்கீங்க.. அதுவும் ஒரு குடிகாரன் உள்ள நுழைஞ்சது கூட தெரியாத அளவுக்கு.

இதுல பெரிய வீர சாகசம் செஞ்சுட்ட மாதிரி பெரும பீத்தல் வேற.." என்று என்று அவள் பொரிந்து தள்ள.. அந்த இரு செக்யூரிட்டிகளும் மெல்ல "சாரி மேடம்.." என்றார்கள் எழும்பாத குரலில்.

"ஆமா.. இது ஒன்னு சொல்லிடுங்க.. சர்வ ரோக நிவாரணி மாதிரி, எதுக்கெடுத்தாலும் சாரி.." என்றுவிட்டு காரில் ஏறப் போனவள், அப்பொழுது தான் கவனம் வந்தவளாக..

"இன்னும் எதுக்கு அந்த ஆள பிடிச்சுட்டு இருக்கீங்க?

காதல் தோல்வியால அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஊர விட்டு ஓடிப் போன ஆளு.. இன்னமும் காதலிய மறக்க முடியாம கண் மண் தெரியாம போதைலயே மிதந்துட்டு இருக்காரு.

விடுங்க.. அந்த ஆள விட்டுட்டு, வேற ஏதாவது வேலை இருந்தா போய் பாருங்க.." என்று அவள் உதாசீனமாக கை அசைத்துக் கூற, அவளது வார்த்தைகளை அப்படியே அட்சரம் பிசகாது செய்து முடிப்போம் என்று சபதமேற்றவர்களாக அவள் அப்படிக் கூறி முடிக்கும் முன்னரே, தங்கள் பிடியில் இருந்த கரிகாலனை சட்டென விடுத்தார்கள்.

அவர்களது துணையுடன் தான் தள்ளாட்டத்துடன் என்றாலும் ஓரளவுக்கு நின்று கொண்டிருந்த கரிகாலனோ, இப்பொழுது அவர்களது பிடி விலகியதும், சட்டென கீழே சரிந்தான்.

கீழே விழுந்தவனை மேலே தூக்கலாமா, அப்படியே அவனைத் தூக்கினால், அதற்கும் தங்கள் முதலாளி அம்மாள் ஏதாவது கூறுவாளோ என்ற ஐயத்துடன் அந்த செக்யூரிட்டிகள் நின்றிருக்க, கரிகாலன் கீழே விழுந்த சப்தம் கேட்டு, காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தவள், மீண்டும் தலை திரும்பிப் பின்னே பார்த்தாள்.
அப்பொழுது தான் மீண்டும் மேலே எழ முயன்ற கரிகாலனைப் பார்த்தவளது பார்வை, அவனது வலது கையை நோக்கி ஓடியது.

அங்கே திருவாளர் கரிகாலன், தனது காதலிக்காக.. அவளின் நினைவாக.. அவள் பெயரான 'நந்தினி'யை பிளேடால் கீறி காயம் செய்திருந்தது இப்பொழுது தழும்பாகத் தெரிந்தது.

அதைக் கண்டவளுக்கு தொண்டையெல்லாம் கசந்தது.

"இப்படி இவ்வளவு கஷ்டப்பட்டு காதலி பேர பிளேடால கீறிக்கிட்டதுக்கு, கொஞ்சம் தள்ளி அந்த மணிக்கட்டு நரம்ப ஒரே கீறல்ல வெட்டியிருக்கலாம்.. யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம போயிருக்கும்" என்றாள் வஞ்சத்துடன்!

தொடரும்..

என்ன நட்புக்களே.. கதை ஆரம்பம் பிடிச்சுதா? ஏற்கனவே சொன்ன மாதிரி இந்தக் கதைல நிறைய காதல்.. நிறைய நிறைய மோதல்.. வஞ்சம், பழிவெறி, திரில்லர்.. எல்லாத்தையும் விட அதிகமா அமானுஷ்யம்ன்னு எல்லாம் கலந்து இருக்கும்..


இந்த முதல் அத்தியாயம் பற்றிய உங்க கருத்துக்களை இங் கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க.. கதை பிடிச்சிருந்தா உங்க நண்பர்கள் கூட பகிருங்க!

For Comments :நட்புடன்,

விபா விஷா.
 

Viba Visha

Moderator
தீயே.. நீயே.. தித்திக்கின்றாயே!!
eiQC84K78059 (1).jpg
அத்தியாயம் - 2

எத்தனை உதாசீனம்? எவ்வளவு வஞ்சம்? நெஞ்செல்லாம் அத்தனையத்தனையாய் முட்டிக் கிடந்த காதல், இப்பொழுது இத்தனை வெறுப்பாக முடியுமா?

அன்று கண்ட காதல் உண்மையா? அன்றி இன்று இருக்கும் இந்த வெறுப்பு உண்மையா?

வார்த்தைக்கு வார்த்தை 'மாமா.. மாமா.. என்றவள் இப்படியுமா மாறிப் போவாள்?

ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை அந்த கருநிறத்தின் மீதிருக்கும் காதல் மட்டும் மாறவே இல்லையே..

உச்சி முதல் உள்ளங்கால் வரை முழுக்க கருநிற உடை.. அவளது காரும் கூட கருநிறத்தில் தான்!

அது பற்றி அவள், கரிகாலனிடம் முன்பு பேசியது அவனுக்கு இப்பொழுது நினைவு வந்தது.
"மாமா.. உங்களுக்காகன்னு இல்லாம, எனக்கே எனக்காகன்னு பிடிச்ச ஒரே விஷயம் இந்த கருப்பு கலர் தான். ஆனாலும் அதுல கூட உங்களுக்கு சம்மந்தம் இருக்கு பார்த்தீங்களா?

நாம எப்படி இருந்தாலும் மேட் ஃபார் ஈச் அதர் மாமா.." என்று அடிக்கடி கூறுவாள்.

அப்பொழுதெல்லாம், ஏதோ சின்னப் பெண் அறியாத வயதில் ஏதோ பிதற்றுகிறாள் என்று அவளை கண்டுகொள்ளாமல் விட்டது தவறோ என்று இன்னமும் கரிகாலனுக்கு மனதுக்குள் உறுத்தத் தான் செய்தது.

ஆனால் அவன் மட்டும் என்ன செய்வான்.. பன்னிரண்டாவது படிக்கும் சிறு பெண் வந்து இப்படியெல்லாம் முறை மாமனிடம் கூறினால், அப்பொழுது தான் கல்லூரி முடித்து போலீஸ் ட்ரைனிங் எடுத்துக் கொண்டிருக்கும் 'அவ்வளவு பெரியவனான அவன்' அதை என்னவென்று நினைப்பான்.

சிறுபிள்ளைத்தனமான கேலி என்று அதை ஒதுக்குவது தானே இயல்பு?

இவனும் அதைத் தானே செய்தான்?

ஆனால்.. இப்பொழுது யோசிக்கையில் அந்த விதமான பேச்சுக்களை அப்படி சாதாரணமாக ஏற்றது பிசகு என்று தோன்றியது கரிகாலனுக்கு.

அதை.. அந்தப் பேச்சு வார்த்தைகளை 'இவனுக்கு.. இவள் தான்' என்பது போன்ற பதங்களை அவன் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும் என்று ரொம்பவும் குற்ற உணர்வாக பட்டது அவனுக்கு.

ஆனால்.. யாரோ மீதிருந்த கோபத்தை, மற்றவரை பழி வாங்குவதாக எண்ணி, இவளது வாழ்வை சீரழித்துவிட்டானே? அந்த பாவத்தை என்னவென்று விளக்குவான் இவன்?
வெறும் பதினெட்டு வயதே நிரம்பியிருந்த அவளுடன், திருமணம் என்பதை ஏற்று மணமேடை வரை சென்று, அதை அத்தனை பேர் முன்னிலையிலும் நிறுத்தினானே? அதை என்னவென்று சொல்லுவது?

ஆனால் ஒன்றை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.. இத்தனை நடந்த பிறகு.. தன்னைக்குள்ளேயே கூடு கட்டி மக்கி, மடிந்து போவாள் என்று அவளைப் பற்றி பலரும் எண்ணியிருக்க, அவளோ.. கூட்டுப் புழுவாக இருந்து, வெறும் பட்டுப் பூச்சியாக விரியாது.. சிறகின் கூடவே, கூர் நகமும்.. குதறும் அலகுமாக, பெரும் ராஜாளியாகவல்லவோ பரிணமித்திருக்கிறாள்?!

ஆனால் அந்த ராஜாளி, இப்பொழுது தனது இத்தகைய பரிணாமத்திற்கு காரணமான அவனை பழிவாங்கத் துடிப்பது தான் கொடுமையாகிப் போனது!

பின்னே? 'மாமா.. மாமா..' என்று காலைச் சுற்றும் நாய்க்குட்டியாய் சுற்றி வந்தவளை, கழுத்தை நெறித்துக் கொல்லுவதைப் போல அத்தனை பேர் மத்தியிலும் அவளை எடுத்தெறிந்து பேசினானே? அந்தப் பாவத்தை கரைக்க இன்னும் எத்தனை எத்தனை பிறவிகள் அவன் எடுக்க நேருமோ? என்று எண்ணியவன், மெல்ல தடுமாற்றத்துடன் மேலே எழுகையில், மீண்டும் சரிந்து விழுந்தான்.

அப்பொழுது அவனருகே கீழே கிடந்த நெருஞ்சி முள் ஒன்று அவனது வலக்கை மணிக்கட்டை மெதுவே பதம் பார்த்துவிட, கரிகாலனின் மணிக்கட்டில் அவன் ஏற்படுத்திக் கொண்ட அந்தக் காயம்.. முன்னொரு காலத்தில் அவனவளாக இருந்த அந்த 'நந்தினி'யின் தழும்பு மீதே கீறி ரத்தம் ஏற்படுத்திவிட, தனது லுங்கியால் அந்த ரத்தத்தை மெல்லத் துடைத்தவன் விழிகளில் இருந்து சூடாகக் கசிந்தது ஒரு துளி நீர்!

வழியால் துடிக்கும் அவன் இதயம் கசிந்த ரத்தத் துளி, விழி நீரில் கரைந்து கண்ணீராய் கசிந்து, அந்த 'நந்தினி'யின் மீதே பட்டுத் தெறித்தது!

முன்னவளுக்குத் தான் செய்த பாவத்திற்குக் காரணம், இவளுக்கு.. இந்த நந்தினிக்கு.. தான் செய்த துரோகத்தின் விளைவு தான் இல்லையா?

இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல..

இந்த சிறு முட்கீறல் போதாது.. உடலெல்லாம் சப்பாத்திக் கள்ளியின் குறு கூர் முட்கள் ஒவ்வொன்றாய் தைத்து தைத்து.. உடலின் ஒவ்வொரு அணுவும் சல்லடைக் கண்ணாகத் துளைத்தால் தான், தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் கிடைக்கும் என்று தன்னை நினைத்து தானே மனம் கைந்தபடி இன்னமும் தெளியாத போதையுடனே தன் வீட்டிற்கு நடையைத் தொடர்ந்தான்.

இங்கு மறுபுறத்திலோ உள்ளமெல்லாம் அணையாத கனல் நெருப்பாய் தகதகத்துக் கொண்டிருந்தது அவளது இதயம்.

அவள் மாதேவி!

கரிகாலனின் முறைப்பெண். அவளுக்கு கரிகாலனுக்கு வயது வித்தியாசம் ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும். ஆனால் அவள் பிறந்ததுமே.. காலாவுக்கு, தேவி தான் என்று பெரியோர்களால் ஒருமித்ததாக நிச்சயிக்கப்பட்டுவிட்டது.

அந்த நிச்சயம், மாதேவியின் மனத்திலும் நிர்மாணிக்கப்பட்டு விட்டது.

சின்னதிலிருந்து அவளுக்கு எல்லாமே அவள் மாமா தான்.

கரிகாலனுக்கும், இப்படி ஒரு சிறு பெண் தன் பின்னாலேயே சுற்றுவது அந்த சிறு வயதில் சற்றுப் பெருமிதமாக இருந்ததோ என்னவோ? அவன் அப்பொழுதெல்லாம் அதை ரசிக்கவே செய்தான்.

ஆனால் என்ன தான் சிறு வயதில் அதையெல்லாம் அவன் ரசித்திருந்தாலும், சற்று வளர வளர மாதேவி இப்படி அவன் பின்னால் சுற்றுவது அவனுக்குக் கர்வத்தைக் கொடுத்ததோ என்னவோ?

எப்பொழுதுமே அவன் மாதேவியிடம் அதிகாரத் தோரணையில் தான் அடைந்து கொள்வது.

அது புரியாத இந்த மக்கோ.. 'ஆஹா.. இந்த மாமா நம் மேல் இருக்கும் உரிமையில் தான் தன்னிடம் இப்படி கடுகடுவேன் இருக்கிறார்' என்று அத்தையும் ஆசையுடனே ரசிக்க ஆரம்பித்துவிட்டது.

இப்பொழுது நினைத்தால் தான், காலவிடம் எவ்வளவு அடிமையாக இருந்திருக்கிறோம் என்று!

காதல் என்பது, ஒருவருக்கு.. மற்றவர் அடிமையாக கிடப்பது அல்ல. 'காதல் என்பது ஆண், பெண் இருவரையும் சமப்படுத்துவது.' என்று அவளுக்குப் புரியாமல் போனது தான் பரிதாபம்.

ஆனால் அது மட்டுமல்ல.. காலாவுக்குத் தன் மேல் கொஞ்சமேனும் பாசமோ.. அல்லது அவளும் ஒரு சக மனுஷி தானே என்ற பரிவேணும் இருந்திருந்தால்.. அவன் தன்னை அப்பொழுதெல்லாம் அப்படி உதாசீனமாக நடத்தியிருக்க மாட்டான் என்பதும் கூட அவளுக்குப் புரியாமல் போனதே?

ஆனால் அதெல்லாம் ஒரு கட்டத்தில்.. அதுவும் ஆயிரம் பேர் முன்னிலையில் அவனிடம் உயிர்நிலையில் அடிவாங்கிய பொழுது தானே முற்றும் முழுமையுமாகப் புரிந்து போனது அவளுக்கு.

'உனக்கு கல்யாணம் கேட்குதா? அதுவும் இந்த பதினெட்டே வயசுல கல்யாண கேட்குதா?

அப்படி என்னடி இந்த சின்ன வயசுல உனக்குக் கல்யாணத்துக்கு அவசரம்?

உன்னோட அவசரத்துக்கு நான் பலியாக மாட்டேன்.." என்று திருமண மேடையில் வைத்து அவளை.. அவளது காதலை கொச்சைப் படுத்தினானே? அதன் பிறகு தானே இந்த மரமண்டைக்கு உறைத்தது தன்னை அவன் என்னவாக நினைத்திருக்கின்றான் என்று? என பழையதை, அப்போது உணர்ந்த அதே வலியோடு நினைத்தபடி வந்தவளுக்குத் திடீரென பாதை மறைந்து, அவளது கார் தடுமாறியது.

'என்னடா தீடிரென்று பார்வை மறைக்கிறதே..' என்று எண்ணியபடி கண்ணைத் தொட்டுப் பார்த்தால், அவளது விழிகளில் கண்ணீர்!

'ச்சீ.. ச்சீ.. இன்னமும் அவனை நினைத்துக் கண்ணீரா? என்ன கேவலம்?' என்று தன்னை நினைத்து தான் அருவறுத்துக் கொண்டவள்,

'ச்சே.. அவன நினச்சு நான் அழல.. அன்னைக்கு நடந்த கேவலத்த.. நான் பட்ட அவமானத்த.. அவ்வளவு நாள் உலகம் புரியாம, அவன் தான் உலகம்னு நினச்சு இருந்த முட்டாள் தனத்த தான் நினச்சு வருத்தப்பட்டேன்.. அவ்வளவு தான்." என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டவள், அப்பொழுது தான் தன் கார் எங்கே வந்திருக்கிறது என்று சுற்றுப்புறத்தை ஆராயலானாள்.

அவளது கை தன் போக்கில் கள்ளழகர் கோவில் முன்னாக வந்து நின்றிருந்தது.

மனதிற்குள் மெல்ல ஒரு திடுக்கிடல்!

'எதை நினைத்துத் தான இங்கே வந்தோம்?' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள் விழிகள் மெல்ல கனிந்தன.

அந்த அதிகாலையில் குளித்து முடித்து, புதிதாகப் பூத்த குண்டு மல்லியென புத்துணர்வோடு கோவிலின் வாசலைக் கூட்டிக் கொண்டிருந்தாள் செல்லி!

சட்டென அவளிடம் சென்று பேச நினைத்து, ஒரு கணம் தயங்கி நின்று தன்னைத் தானே குனிந்து பார்த்துக் கொண்டவள், மெல்ல சிரித்துக் கொண்டாள்.

'ஹ்ம்ம்.. இந்த ட்ரெஸ்ஸோட என்ன பார்த்தா.. அவ்வளவு தான் பத்திரகாளியா மாறிடுவாளே..' என்று எண்ணினாலும், சரி ஆனது ஆகட்டும் என்ற எண்ணத்தோடு ஆனந்த முறுவல் மாறாமலேயே காரை வீட்டுக் கீழிறங்கி செல்லியை நோக்கிச் சென்றாள் மாதேவி.

அவள் வரும் அரவம் கேட்டதுமே சட்டெனத் திரும்பிப் பார்த்த செல்லியின் இதழ்களிலும் பூத்தது ஒரு மகிழ்ச்சிப் புன்னகை.

கையிலிருந்த பெருக்குமாரை ஓர் ஓரமாகப் போட்டுவிட்டுத் தானும் மாதேவியை நோக்கி முன்னே வந்தாள்.

வந்தவளின் முகம், மாதேவியை முழுதாகப் பார்த்ததும் சற்றே சிணுங்கியது.

"என்னக்கா.. எத்தனை முறை சொல்லியிருக்கேன்? குளிக்காம கோவிலுக்கு வரக்கூடாதுன்னு?" என்று பொய் கோபத்துடன் கேட்டு கொண்டே வந்தவளை, வெகு வேகமாக ஓடிச் சென்று கட்டிக் கொண்டு, பின் விடுவித்தாள் மாதேவி.

"ஐ.. செல்லிப்பொண்ணு.. இப்போ நீயும் குளிச்சாகணுமே? அதென்ன செல்லி.. சாமி கும்பிட எதுக்கு இவ்வளவு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்?

சாமிய கும்பிடறதுக்கு மனசு சுத்தமா இருந்தா போதுமுன்னும் சொல்லறீங்க.. அதே சமயம் தலைக்கு குளிச்சு படு சுத்தமா தான் கோவில் இருக்கற பக்கமே தலை வச்சு படுக்கணும்னும் சொல்லறீங்க?

இது ரெண்டுல எது நிஜம்? எனக்கு உங்க லாஜிக்கே புரிலயே?" என்று அவள் விழி விரித்து அறியாப் பிள்ளையைப் போலக் கேட்க, செல்லியோ, மாதேவியை இன்னமும் சிணுங்கலாகப் பார்த்தாள்.

"அக்கா.. என்னக்கா.. இப்படி செய்துட்டீங்க?

கோவில் பூசாரி வேற வந்துடுவாரு. நான் போய் மறுபடியும் குளிக்கணும்.

ஆனா.. பாருங்க.. எனக்கு உங்க ரூல்ஸ்.. ரெகுலேஷன்னு எதுவும் தெரியாது.

ஆனா.. என் அழகர நினச்சாலே மனசு மட்டும் இல்ல.. உடம்பும் சுத்தமாகிடும்." என்று அவள் கூற, அதற்கும் சிரித்தாள் மாதேவி.

"ஓஹோ? அப்படியா? அப்போ நீ இனி குளிக்கவே தேவ இல்ல?

நீ தான் எந்நேரம் பார்த்தாலும் அந்த அழகரையே நினைச்சுட்டு இருக்கயே.." என்று மீண்டும் சிரிக்க, இப்பொழுது செல்லிக்கு ரோஷம் வந்துவிட்டது.

"ஹ்ம்ம்.. நான் கேட்டா என் அழகரு எனக்காகவே இப்போ மழைய கொடுப்பாரு தெரியுமா?.." என்று அவள் கூற, அதற்கு மாதேவி இன்னமுமாய் சிரித்தாள்.

ஆனால் அவள் சிரித்து முடிக்கக் கூட இல்லை.. சட்டென அங்கு மண் வாசம் கிளம்ப, சடாரென்று விரியும் மகிழம் பூவாய் மழை தூர, உடல் சிலிர்த்தாள் செல்லி.

குரல் கரகரக்க.. கண்களின் கண்ணீர், மழையோடு கரைய..

"பார்த்தீங்களாக்கா.. என் அழகரு எனக்காக மழைய கொடுத்துட்டாரு?" என்று பயபக்தியோடு அவள் வானம் பார்த்துக் கூற, அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது மாதேவிக்கு.

அதே பரிதாபத்துடனே.. "பத்து வருஷம் இருக்குமா செல்லி?" என்றால் குரல் நலிந்துவிட.

வானம் நோக்கி கண் மூடி மழையில் நனைந்து, அதன் ஸ்பரிசத்தை ரசித்துக் கொண்டிருந்த செல்லியோ..

"எதுக்குக்கா?" என்றாள் இன்னமும் விழி திறக்காமலேயே.

"இந்தக் கோவிலுக்கு உன்ன நேர்ந்து விட்டு.." என்றாள் இன்னமும் அவளை பச்சாதாபத்துடன் பார்த்தபடி.

மெல்ல விழி திறந்து மாதேவியைப் பார்த்த செல்லி..

"பத்து இல்ல.. பதினொன்னு!

எனக்கு எட்டு வயசு இருக்கும் போது எங்க அப்பா என்ன இந்த கோவிலுக்கு.. இல்ல இல்ல.. என் அழகருக்கு என்ன நேர்ந்து விட்டாரு." என்றாள் மென்னகை புரிந்தபடியே.

அதைக் கேட்டு மனமெல்லாம் வலித்தது மாதேவிக்கு.

அவளும் இப்படித் தானே பைத்தியக்காரத்தனமாக பதினெட்டு வருடம் ஒருவனுக்காக காத்திருந்தாள்?

ஆனால்.. இறுதியில் மிஞ்சியதோ அவமானமும், ஏமாற்றமும் மட்டும் தானே?

தான் பட்ட கஷ்டம் இதோ.. தன் பிரியத்துக்குண்டான இந்த சிறு பெண் செல்லியும் பட்டுவிடக் கூடாதே என்ற அக்கரையில்..

"சொல்லறதை கேளு செல்லிம்மா.. நீ இந்த ஊர விட்டு வந்துடு. நான் உன்ன சிட்டிக்கு கூட்டிட்டுப் போய் நல்லா பார்த்துக்கறேன்.

உனக்கு கொஞ்ச நாள்ல அங்க ஒரு நல்ல வாழ்க்கை கூட அமையும்." என்று அவள் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து லட்சத்தி எட்டாவது முறையாக செல்லியிடம் கூற, அதை இம்முறையும் மறுத்தாள் செல்லி!

அதற்கு கூறிய காரணமும் மாறவில்லை தான்!
"அக்கா.. தப்புக்கா.. என் அழகரு எனக்காக வருவாருக்கா.. அவருக்காக நான் இங்க தான் காத்திருக்கணும்.

அப்படி இல்லைன்னா, அவர் எனக்காக இங்க வரும் போது நான் இங்க இல்லாம போட்டா.. அவர் கோவிச்சுப்பாருக்கா..

எனக்கு நம்பிக்கை இருக்குக்கா.. அவர் வருவாரு எனக்காக.." என்று மிகவும் தீவிரமாகக் கூறினாள்.

அதைக் கேட்ட மாதேவிக்கோ.. 'இதே நம்பிக்கை.. இதே அசட்டு நம்பிக்கை தானே தானும் கொண்டிருந்தோம்..' என்ற எண்ணம் பிறந்து உயிர் வலித்தது!

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை சற்று தொலைவில் இருந்த ஒரு மரத்தின் பின்னே இருந்தபடி, தானும் மழையில் நனைந்து கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான் இரும்பொறை!

செல்லியை நினைத்து இன்னமும் அவன் மனம் தவியாய் தவித்துக் கொண்டு தான் இருந்தது. ஆனால் அந்தத் தவிப்பை யாரிடமும் பகிர்ந்து கொள்ளத் தான் இன்றைய இளைஞன் இரும்பொறைக்கும் தைரியம் இருக்கவில்லை.

எப்பொழுதும் போல ஓர் ஓரமாக ஒளிந்திருந்து செல்லியைப் பார்த்துக் கொண்டிருந்தவனை மெல்ல அணுகினார்கள் சிலர்.

தொடரும்..

ஹேய் செல்லம்ஸ்.. கதை பிடிச்சா உங்க கருத்துக்களை இங்க என்கூட பகிர்ந்துக்கோங்க..நட்புடன்,

விபா விஷா.
 

Viba Visha

Moderator
தீயே.. நீயே.. தித்திக்கின்றாயே!
eiQC84K78059 (1).jpg
அத்தியாயம் - 3

செல்லிக்கு வேலை வைக்க வேண்டாமென்று அவளது அழகரே, செல்லியையும், அவள் பெருக்கிக் கொண்டிருந்த கோவில் வாசலையும் மழை கொண்டு முழுமையாகக் கழுவி விட, அதைக் கலகலவென்று சிரித்துப் பார்த்து பூரித்துப் போய் நின்றிருந்தாள் அவள்.

அவளைக் கண்களில் வலியுடன், காதல் போட்டி போட ஆவலுடன் தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்த இரும்பொறையை அணுகினார்கள் அந்த ஊருக்கு சம்மந்தப்படாத சிலர்.

அந்த ஊர்.. பெருமாநல்லூர் சமஸ்தானம்!

பற்பல ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கிய பகுதி அது. இப்பொழுது மிகவும் சுருங்கிப் போய் ஒரு குக்கிராமமாக மாறிவிட்டது.

அந்தக் குக்கிராமத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கைந்து தெருக்கள், நானூறு மக்கள் இருப்பர். அவர்களில் யாவருமே ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள் தாம்.

ஆனால் இப்பொழுது வந்திருக்கும் இவர்களோ, அந்த கிராமத்திற்கு மிகவும் அந்நியப்பட்டு இருந்தனர்.

இவர்கள் ஒரு வேளை மாதேவியின் ஆட்களோ என்று ஒரு கணம் நினைத்தான் இரும்பொறை.

ஆனால்.. மாதேவியின் புதிய இயற்கை உரத் தொழிற்சாலைக்கும், அது சம்மந்தமாக இந்த ஊருக்கு வந்து போகும் வெளியூர்க்காரர்களின் நேர்த்தியான நடை, உடை, பழகும் விதத்திற்கும்.. இதோ இப்பொழுது வந்திருக்கும் இவர்களுக்கும், இவர்கள் கண்களில் தென்படும் கள்ளத் தனத்திற்கும் மிகப்பெரும் வேறுபாடு இருந்தது.

அவர்களை சந்தேகக் கண்ணோடு இரும்பொறை பார்க்க, வந்தவர்களோ புரியாத ஏதோ ஒரு மொழி.. தெலுங்கோ, கன்னடமோ அதில் இவனிடம் ஏதோ பேசினார்கள்.

இவன் புரியாத பாவனையில் அவர்களைப் பார்க்க, அவர்களில் ஒருவன் மிகவும் கொச்சையான தமிழில்..

"தம்பு.. இதி பெருமாநல்லூரூ கோவிலு தான?" என்று கேட்க, அவனை வித்தியாசமாகப் பார்த்தான் இரும்பொறை.

அவர்களது வித்தியாசமானத் தோற்றமும், கரடுமுரடான பாவனையும் சேர்ந்து, இயல்பிலேயே பயந்த சுபாவமுடைய அவனை இன்னமும் பயத்துக்குள்ளாக்கியது.

அதனாலே அவன் கேட்ட கேள்விக்கு ஆம் என்றோ இல்லை என்றோ பதிலுரைக்காது, திக்கித் திணறியபடியே..

"இ.. இதெல்லாம் நீ.. நீங்க ஏன் கேட்கறீங்க? நீ.. நீங்கல்லாம் யாரு?" என்று அவன் கேட்க, அந்தப் புதியவர்களில் மிகத் திடகாத்திரமாக தலைவன் போன்ற தோரணையில் இருந்த மற்றொருவன் முன்னே வந்து இரும்பொறையின் தலையில் தட்டினான்.

"கேட்டா.. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும் தம்புடு.. திரும்ப கேள்வியெல்லாம் கேட்க கூடாது.. சரியா தம்புடு?" என்று கேட்க, அவன் அப்படித் தலையில் தட்டியதுமே கோபத்திலும், இயலாமையிலும் கண்கள் கலங்கிவிட்டது இரும்பொறைக்கு.

"அடச்சீ.. என்னடா இவன் இதுக்கே இப்படி அழுகுறான்.. வாங்கடா நாம வேற யார்கிட்டயாவது விசாரிக்கலாம்." என்றபடி அந்தத் தலைவன் மற்றவர்களை அழைத்துச் செல்ல.. சூடான கண்ணீர் இரும்பொறையின் கன்னங்களில் வழிந்தது.

அவன் அந்தப் புதியவர்கள் செல்லும் திசையயையே பார்த்தபடி சென்று கொண்டிருக்க, அந்த வழியாகக் காரைத் திருப்பிக் கொண்டு வந்த மாதேவியோ.. இரும்பொறை கண்களில் கண்ணீருடன் நின்றிருப்பதைப் பார்த்தாள்.
அவளுக்குத் தெரியும்.. இரும்பொறைக்கு, செல்லியின் மீதிருக்கும் காதல்.

அங்கு செல்லியானால், கடவுளே கணவனாக வேண்டும் என்று தவமிருந்து கொண்டிருக்கிறாள்.

இங்கு இவனோ.. அந்தக் கடவுளே இந்த செல்லி தான் என்பது போல கண்களில் ஒரு வித பரவசத்துடன் எப்பொழுதும் பார்வையால் மட்டுமே செல்லியைத் தொழுது கொண்டிருக்கிறான்.
இதென்ன விசித்திரமோ?

இந்தக் காதல் ஏன் மனிதர்களை இப்படிக் குழப்பியடிக்கிறது?

ச்சே.. இப்பொழுது மாதேவிக்கு காதல் மீதும் நம்பிக்கை இல்லை, அந்தக் கடவுள் மீதும் நம்பிக்கை இல்லை.

பார்த்து காதல்.. பார்க்காது காதல்.. தெரிந்து காதல்.. தெரியாது காதல்.. என்று காதலில் தான் எத்தனை வகை?

ஆனால் அத்தனையிலும் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே..

இபப்டியெலலாம் எண்ணியபடி ஒட்டுமொத்தமாய் உலகையே வெறித்தபடி அவள் தன் வீட்டிற்கு வர, அவளை வாயிலிலேயே வரவேற்றான் மாதேவியின் நண்பன் நிதின்.

அவள் காரை விட்டுக் கீழிறங்கவும், இடுப்பில் கை வைத்து முறைத்தபடி அவள் முன்பு வந்த நின்றவனை ஒரு கேலி நகையோடு பார்த்து வைத்தாள் மாதேவி.

"என்ன சார்.. இவ்வளவு காலைலயே இங்க விஜயம்?" என்று கிண்டலாகக் கேட்க, மற்றவன் முகம் கொடுத்தது.

"நான் இங்க விஜயம் செய்தது இருக்கட்டும். மேடம் நீங்க எங்க இவ்வளவு காலைல போயிட்டு வரீங்க?" என்றான் கோபம் தணியாமலேயே.

அவனது கேள்வியில், அவனை ஆச்சரயமாகப் பார்த்த மாதேவி, வீட்டினுள் சென்றபடி..

"ஹ்ம்ம்.. எனக்கும் இருபத்து மூணு வயசாகிடுச்சு நிதின் சார். மெச்சூரிட்டி வந்துடுச்சு. இன்னமும் நீங்க ஒவ்வொன்னுக்கும் பயந்துட்டு இருக்கத் தேவை இல்ல.

அதே சமயம், இது என்னோட கம்பெனி. இதோட ஒவ்வொரு வேலையும் நானே தான் முன்னாடி நின்னு பார்த்துக்கணுமாக்கும்." என்று சிரித்தபடியே அவள் கூற, நிதினின் பார்வை கனிந்தது.

"நீயே எல்லாமும் பார்க்கறதெல்லாம் சரி தான் தேவி. ஆனா.. இவ்வளவு காலைல நீ அவசரமா கார் எடுத்துட்டு எங்கயோ போறேன்னு தெரிஞ்சதும் மனசுக்கு கொஞ்சம் படபடன்னு வந்துடுச்சு." என்று அவன் சமாதானமாகக் கூறினான்.

ஆனால் அதற்கும் அவனைத் தலை சரித்து ஒரு மாதிரி பார்த்தாள் மாதேவி.

"என்னங்க சார் உளவா? எனக்கே ஸ்பை வச்சிருக்கீங்களா?" என்று அவள் கேட்ட கேள்வியில் மென்மையாக சிரித்தான் நிதின்.

"அது ஸ்பை இல்ல.. அக்கறை. எனக்கு மட்டும் இல்ல. ரொம்ப வருஷமா உங்க அப்பாகிட்ட வேலை செய்யற உங்க வாட்ச்மேன் தாத்தாக்கும் உன் மேல இருக்கற அக்கறை.

இவ்வளவு காலைல அவ்வளவு அவசரமா நீ காரை எடுத்துட்டு கிளம்பவும் அந்த வயசான மனுஷன் பயந்துட்டாரு. அதான் எனக்கு போன் போட்டு விவரத்தை சொன்னாரு." என்று அவன் கூறவும், மாதேவியிடம் முழுக்க அமைதி.

அவளது அமைதியைத் தவறாகப் புரிந்து.. "ஏய்.. அதுக்காக அவர் மேல கோவிச்சுக்காத. அவருக்கு உன் மேல எவ்வளவு பாசம்ன்னு உனக்கே தெரியும் இல்ல?" என்று அவன் விளக்க முற்பட, சட்டெனக் கனவிலிருந்து விழித்தவள் போல,

"ச்சே.. ச்சே.. நம்ம வாட்ச்மேன் தாத்தா மேல எனக்கு எப்பவாவது கோபம் வருமா?

சொல்லப் போனா என் உயிர காப்பாத்தினதே அவர் தான?

ஒரு தகுதியில்லாதவனுக்காக நான் என்னையே அழிச்சுக்க நினச்சனே.. அதிலிருந்து என்ன காப்பாத்தினது அவர் தானே? அவர் மேல எப்படி எனக்குக் கோபம் வரும்?

ஆனா.. இப்படி தூக்கத்த கெடுத்துட்டு என்ன நோட் பண்ணிட்டே இருக்காரே? அதுக்கு ஏதாவது பனிஷ்மென்ட் உண்டு!" என்று கண்ணடித்துச் சிரித்தாள் அவள்.

நிதினும் அவளை பார்த்து மிருதுவாக நகைத்தபடியே.. "எப்போ கரிகாலன பத்தி அவன் அப்பா, அம்மாக்கு சொல்லப் போற?" என்றான் மாதேவியை நேராய் பார்த்து.
"எதுக்கு சொல்லணுமாம்? என்னன்னு சொல்லணுமாம்?" என்றாள் மாதேவியும் விட்டேற்றியாக!

"தேவி.. காலா ஊரவிட்டு ஓடிப் போய் கிட்டத்தட்ட நாலஞ்சு வருஷம் ஆகிடுச்சு. அவன் அப்பா, அம்மாக்கு அவன் எங்க இருக்கான்னு இன்னமும் தெரியல.

ஆனா.. நாம் இங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி வந்தப்போவே நாம அவன பார்த்தாச்சு. பட் நீ இன்னமும் அவன் இங்க தான் இருக்கான்னு அவன் பேரண்ட்ஸ்க்கு சொல்லாம இருக்க?" என்றான் ஒரு வேகத்துடனும், கூடவே கசிந்த ஆதங்கத்துடனும்.

அதைக் கேட்டு அவனை நன்றாக தலை நிமிர்த்துப் பார்த்தவள்,

"ஏன் இவ்வளவு எமோஷன் ஆகற நிதின்?

ஓஹோ?! ஒரே இனமில்லையா? அதான் இந்த அக்கறை?" என்றாள் பரிகாசமாக.

அதைக் கேட்டதும் சுறுசுறுவென்று வந்தது நிதினுக்கு.

"இங்க பாரு தேவி.. உனக்கு இருக்கற கோபம், கரிகாலன தவிர வேற யாரையும் யோசிக்க விடமாட்டிங்குது.

ஆனா.. நான் இந்தப் பிரச்சனைய விட்டு வெளில நிக்கறவன். அதனால தான் எனக்கு அவர் அம்மா, அப்பாவோட கஷ்டம் புரியுது." என்றான் சற்று சூடாக.

அவன் பேசுவதை முழுமையாகக் கேட்டுவிட்டு, அதற்கு எந்த எதிர்வினையும் செய்யாது, ஒரு அலட்சியத் தோள் குலுக்களுடன் மாடிப்படியை நோக்கிச் சென்றாள் மாதேவி.

அதைக் கண்டு இன்னமும் கடுப்படித்தது நிதினுக்கு.

"நான் பேசப் பேச நீ பாட்டுக்கு தோள குலுக்கிட்டு போனா என்ன அர்த்தம்?" என்றான் எரிச்சலுடன்.

"எனக்கு அவங்க யார பத்தியும் எந்த அக்கறையும் இல்லையான்னு அர்த்தம்." என்றாள் மாடிப்படி ஏறியபடியே.

"அப்போ நான் காலாவோட பேரன்ட்ஸுக்கு போன் பண்ணி காலா இங்க தான் இருக்கான்னு சொன்னா உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையே?" என்றான் வேண்டுமென்றே.

ஆனால் அதற்கும் அதே போல ஓர் அலட்சியத் தோள் குலுக்களே பதிலாகக் கிடைத்தது.

"திமிர்.. திமிர்.. உடம்பு முழுக்க இருக்கறதெல்லாம் முழுத் திமிர்.." என்று வாய்க்குள் வைத்தபடி அவன் கிளம்ப, அப்பபொழுது மீண்டும் ஒலித்த மாதேவியின் குரல் அவனைத் தேங்கியது.

"நீ யாருக்கு வேணாலும் போன் செய்.. ஆனா, அதுக்கு முன்னாடி உன்னோட ஃபியான்சி ரஞ்சிக்கு போன் பண்ணி பேசிடு.

நேத்து நைட்டு நீ அவளுக்கு பேசலைன்னு அவ எனக்கு போன் பண்ணி ராத்திரி முழுக்க என்ன தூங்க விடல." என்றாள் நகைக்குரலில்.

அதைக் கேட்டவன் முகம், அதுவரை கொண்டிருந்த கடுப்பு மறைய சட்டென கனிந்தது.

"நான் தான் டபுள் டியூட்டி பார்க்கறேன்னு அவளுக்குத் தெரியுமே?" என்று அவன் ஆரம்பிக்கவும், மாதேவி அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

"ஆமா.. ஒண்ணு உனக்கு பாடிகார்ட் வேலை! இந்த ஊர் என்னோட சொந்த ஊர். கடந்த சில வருஷமா, நான் சிட்டிக்கும், இந்த கிராமத்துக்கும் மாறி மாறி வந்துட்டு போயிட்டு இருக்கறதால, உனக்குத் துணையா உன் அப்பா என்ன இங்க தங்க சொல்லிட்டாரு.

அவர் கேட்டதுக்கு அப்பறம் அவரோட சீமந்தப் புத்திரிய என்னால பாதுகாக்காம இருக்க முடியுமா? அதனால அந்த வேலையையும் என் முழுநேரத் தொழிலா பார்த்துட்டு இருக்கேன்.

இன்னொன்னு என்னோட சாஃப்ட்வேர் வேலை. வொர்க் ஃப்ரம் ஹோம்ன்னு ஒன்னு கொண்டு வந்தாலும் வந்தாங்க.. வீட்டுல இருக்கற நேரம் முழுக்க வேலை கொடுத்துட்டே இருக்காங்க.

நேத்து நைட்டு, ஆன்சைட்டுல இருக்க க்ளைண்ட் கூட கால் வந்துடுச்சு. அவளுக்கு மெசேஜ் செய்துட்டு தான் நான் காலுக்கு போனேன். அதுக்குள்ளே மேடம் உங்க கிட்ட குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிச்சுட்டாங்களா?" என்று ஒரு வெட்கச் சிரிப்புடன் கூறிவிட்டு,

"சரி.. நான் மறக்காம அவளுக்குப் பேசிடறேன்.. ஆனா, அதுக்கு முன்னாடி காலாவோட பேரண்ட்ஸ்கிட்டையும் பேசிடறேன்." என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டுச் சென்றான்.

அப்பொழுதும் அதைக் கண்டுகொள்ளாதவள் போல, மீண்டும் இன்னுமொரு தோள் குலுக்கலுடன், "என்னமோ பண்ணு.. உன்ன கட்டுப்படுத்த என்னால முடியாது. ஆனா.. நான் இன்னும் அந்த பதினெட்டு வயசு மக்கு கிடையாது. எனக்கு இப்போ இருபத்து மூணு வயசு ஆகிடுச்சு நிதின்.

இருபத்தி மூணும் அப்படி ஒன்னும் கிழவி வயசு கிடையாதுன்னு நீ வியாக்கியானம் பேசுவேன்னு எனக்குத் தெரியும்.

ஆனா.. வாழ்க்கைல நான் பட்ட அடிகள் என்ன ரொம்ப முதிர்ச்சியாக்கிடுச்சு.

அதனால.. எனக்கு எந்த பாடிகார்டும் தேவையில்லை.." என்று கூறியபடியே மாடியேற்றிச் சென்று தனது அறைக்குள் அடைந்தாள்.

அறைக்குள் வந்ததும் மீண்டும் நெஞ்சமெல்லாம் முட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு .

'எவ்வளவு அலட்சியமா என்ன தூக்கிப் போட்டுட்டான்? நான் அவனுக்கு அவ்வளவு ஈஸியா இருந்ததால தான என் மேல அவனுக்கு அவ்வளவு அலட்சியம்?

இப்போ நான் இந்த அஞ்சு வருஷத்துல அவனால தொட முடியாத உயரத்துக்கு போய்ட்டேன்.

அவனை இனி எப்படியெல்லாம் பந்தாடறேன்னு பாரு.." என்று உள்ளுக்குள் சூளுரைத்தவளின் இதயம் இன்னமும் எரி பிழம்பாய் கொதித்துக் கொண்டு தான இருந்தது.

அதே வேளையில் அந்த ஊருக்குள் வந்த சில வெளியூர்க்காரர்கள் யாருக்கும் தெரியாமல் அந்த கள்ளழகர் கோவிலுக்குள் புகுந்தனர்.

அவர்கள் கையில் வைத்திருந்த சில ஓலைச் சுவடிகளை பார்த்தபடியே கோவிலின் சுவற்றில் இருக்கும் கல்வெட்டுகளை படிக்க முயன்றுகொண்டிருந்தனர்.

அப்பொழுது அங்கு வந்த கோவில் பூசாரி அவர்களைப் பார்த்துவிட, "ஏய்.. யாருப்பா நீங்க? ஊருக்கு புதுசா தெரியறீங்க?" என்று சந்தேகக் கண்ணோடு அவர்களை நெருங்கினார்.

அதற்குள் தங்கள் கையிலிருந்த ஒரு முக்கிய ஓலைச் சுருளை மட்டும் சட்டென தனது பைக்குள் வைத்து மறைத்துக் கொண்ட அவர்களின் தலைவன்..

"வணக்கம் பூசாரி.. நாங்க தொல்லியல் துறை ஸ்டுடென்ட்ஸ்.. இந்தக் கல்வெட்டெல்லாம் படிக்க வந்திருக்கோம்.

இந்த கோவில் கட்டி சில நூறு வருஷங்கள் இருக்குமாமே? நல்ல பழைய கோவில் தான். அதனால தான் இதோட கல்வெட்டெல்லாம் படிச்சுப் பார்க்க வந்தோம்.." என்றான்.

அவனது பேச்சு கோர்வையாக இருந்தாலும், அவர்களைப் பற்றி உள்ளுக்குள் ஒரு மூளையில் சந்தேகம் உதித்தது கோவில் பூசாரிக்கு.

ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, "ஹ்ம்ம்.. படிங்க படிங்க.. ஆனா, கோவிலோட பரமபத வாசல் கதவ மட்டும் திறக்க முயற்சி செய்யக் கூடாது. அந்தப் பக்கம் மட்டும் யாரும் போகவும் கூடாது.

அது இந்தக் கோவிலோட எழுதப்படாத விதி. சரியா? அத நீங்க மீறினா, அப்பறம்.. நான் சொல்லறத்துக்கு ஒன்னுமில்ல.." என்று மறைமுகமாக எச்சரித்தபடியே அங்கிருந்து சென்றார்.

அவர் செல்வதையே கண்களில் ஒரு வித ஒளியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

அன்றைய இரவு, கோவிலின் வேலைகளெல்லாம் ஒதுங்க வைத்துவிட்டு, கோவிலுக்கு சற்றுத் தொலைவில் தன்னந்தனியாக அமைக்கப்பட்டிருந்த தனது சிறு குடிசைக்கு சென்றாள் செல்லி.

அவளை கோவிலுக்கு நேர்ந்து விட்டுவிட்டதால் அவள் ஊருக்குள் வரக்கூடாது என்பது விதி. சிறு வயதில் இருந்தே ஊருக்கு ஒதுக்குப் புறமாகத் தான் வசித்து வருகிறாள். சிறு வயதில் சில வயதான பாட்டிகள் அவளுடன் துணைக்குத் தங்கியிருந்து நல்லது கெட்டது பற்றி அறிவுறுத்தினார்கள்.

காலப்போக்கில் அவர்களும் மரித்துவிட, இப்பொழுது செல்லிக்கு அந்த அழகர் மட்டுமே துணை.

அதனாலேயே அவளுக்கு அந்த அழகர் மீது இத்தனைக் காதல்.

அவளது அழகரையே நினைத்தபடி மெல்ல ஆழ்துயிலில் ஆழ்ந்தவள், திடீரெனக் கேட்ட கோவிலின் மணியோசையில் அதிர்வுடன் விழித்தெழுந்தாள்.

'என்னதிது? எங்கிருந்து இந்த சத்தம் கேட்குது?' என்று முதலில் திகைத்து விழித்தவளுக்கு, சில கணங்கள் கழித்து தான் அது கோவிலின் மணிச்சத்தம் என்பது புரிந்தது.

'பூட்டின கோவிலுக்குள்ள இருக்கற அவ்வளவு பெரிய மணிய இந்நேரத்துக்கு யார் அடிக்கறது?' என்ற குழப்பத்துடனே வேக வேகமாக கோவிலுக்கு ஓடிச் சென்றாள் அவள்!

தொடரும்..

என்ன பட்டூஸ்.. கதை பிடிச்சுதா? கதை பற்றிய உங்க கருத்துக்களை இங்க என் கூட பகிர்ந்துக்கோங்க..உங்க நபர்கள் கூடவும் பகிர்ந்துக்கோங்க..

நட்புடன்,


விபா விஷா.
 
Last edited:

Viba Visha

Moderator
தீயே.. நீயே.. தித்திக்கின்றாயே!
eiQC84K78059 (1).jpg
அத்தியாயம் - 4

தடதடக்கும் இடியோசையோடு இயைந்து ஒழித்தது செல்லியின் இதயத் துடிப்பு!

இந்த ராத்திரி நேரத்தில் கோவிலுக்குள் யாரோ சென்றதே வியப்பு தான்! அதிலும் அப்படி சென்றவர்கள், அங்கிருக்கும் அவ்வளவு பெரிய மணியை அடித்து ஊரை எழுப்புவது, வியப்பிலும் வியப்பல்லவா?!

எனவே தான் அது யாரென்று அறிந்து கொள்ள அங்கு விரைந்தாள் செல்லி.

அவசர அவசரமாக ஓடுகையில் பாதம் துளைத்த கல்லையும், முள்ளையும் கூடப் பொருட்படுத்தாது காலில் வழியும் ரத்தத்துடன் கோவிலுக்குச் சென்றவளுக்கு பெரும் வியப்பு!

ஏனென்றால்.. கோவிலே ஜெகஜோதியாக வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருந்தது!

அந்த வெளிச்சத்தில் கண்கள் கூச, மெல்ல மெல்ல விழிகளை சுருக்கி, விரித்தபடியே அவள் கோவிலுக்குள் காலடி எடுத்து வைக்க, கோவிலுக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்த பேரொளியின் முன்னே வெள்ளைக் குதிரையில் நின்றிருந்தான் ஒருவன்!

அவனை 'ஒருவர்' என்று மரியாதைப் பன்மையில் விளித்திருக்க வேண்டுமோ?

அந்த உருவத்தை அப்படி மரியாதையாகத் தான் நினைக்கத் தோன்றியது செல்லிக்கு.

ஏனென்றால் அது.. அந்த உருவம்.. வேறு யாருமல்ல, அது 'கள்ளழகர்' தான். ஆம்.. செல்லியின் அழகிரே தான்.

பின்னிலிருந்த ஒளிர்ந்த அந்த பேரொளியில் அவளது அழகரின் முகத்தைக் காண இயலவில்லை செல்லியால். அதனால் அருகே சென்று அவள் அழகரைப் பார்க்க முயல, சட்டென்று இடித்த பேரிடியின் ஒலியில் முற்றிலுமாய் கனவு களைந்து விதிர்த்து எழுந்தாள் செல்லி.

உடலெல்லாம் மயிர்க்கூச்செறிந்திருக்க.. இதோ.. இப்பொழுதே.. இந்த நொடியே நம் அழகரை கண்டுவிடப் போகிறோம் என்று ஆவலும், ஆனந்தமுமாய் அவளது அழகரை நோக்கி விரைந்து கொண்டிருந்தவள், திடிரென்று மலையுச்சியில் இருந்து பாதாளத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல, கனவிலிருந்து நனவுலகிற்கு வந்ததும், கையில் கொடுத்த மிட்டாயை, யாரோ சட்டென பறித்துக் கொண்டதும் உதடு பிதுங்கி அழும் குழந்தையாய் மாறிவிட்டிருந்தாள் செல்லி.

'அழகா.. கள்ளழலாகா.. என் ஜென்மமே உனக்காகன்னு நான் கொடுத்துட்டேன். நாள் கிழமைன்னு பார்க்காம உன் கோவில்லையே விழுந்து கிடக்கறேன்.. எனக்கு ஒரு தரிசனம் கூட கொடுக்க மாட்டேங்கறியே?

என்ன மாதிரி தான அந்த ஆண்டாளும்? சின்னதுல இருந்து உன்னையே நினச்சு, கடைசில உன்னையே வந்து அடைஞ்சுட்டா தான?

என்னோட பக்திய விட, என்னோட அன்ப விட, என்னோட காதல விட எந்த விதத்துல அவளோட காதலும், பக்தியும், அன்பும் உசத்தி?

உன்ன நேருல தான் பார்க்க முடியல.. அதுக்கு நான் இன்னும் பக்குவப்படலன்னு வச்சுக்கிட்டாலும், என் கனவுல கூட நான் உன்ன பார்க்க முடியாதாப்பா?

எனக்குன்னு உன்ன விட்டா யாரு இருக்கா?

பசிச்சா, பாலுக்கு அம்மாவ தேடற குழந்தையாட்டம் நான் உன்ன தான என்னோட எல்லா நேரத்துலையும் நினைச்சுக்கறேன்.. ஆனா, உன்ன நான் கனவுல கூட அடைய முடியாதா?' என்று அவள் தனது குடிசையில் வைத்திருக்கும் கள்ளழகரின் படத்தின் முன்பு அமர்ந்து ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுது கரைய, சட்டென ஒலித்தது ஓர் ஒலி!

அது.. அதே தான்!

கனவில் அவள் கேட்ட அதே கோவிலின் மணியோசை!

கடந்த சில வருடங்களாகவே இப்படித் தான். இவள் கனவில் வருவதெல்லாம் சில தினங்களில்.. அல்லது அதே இரவில் நடந்தேறுகிறது!

அதிலும் எங்காவது.. குறிப்பாக இவர் வீட்டில் திருட்டு நடைபெறப் போகிறது என்று இவள் கனவு கண்டாள் என்றால், அவள் கனவு கண்ட சில மணி நேரத்திலேயே ஊர் அல்லோலப்படும்.

'ஐயோ.. என் வீட்டில் இதைத் திருடிவிட்டார்களே.. இவ்வளவு பொன் காணாமற் போயிவிட்டதே.. இவ்வளவு பணம் காணாமற் போய்விட்டதே..' என்று அவள் கனவில் கண்ட அதே நபர் அலறிப் புலம்புவார்.

ஆனால் அதிலும் விசித்திரமாக.. அந்த திருட்டின் பிறகு யாரோ.. அவரகள் ஊர் கள்ளழகர் கோவிலில், "ஊரக் களவாண்டு சேர்த்த சொத்து, திரும்ப ஊர் மக்களுக்கே வந்து சேரும்!" என்று எழுதிவிட்டுப் போய்விடுவார்கள்!!

இதுவே தொடர்கதையாகப் போய்விட, முதலில் ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து ஊருக்குப் பொதுவாக காவல் போட்டார்கள். ஆனால் காவல்காரனை மயக்கமடைய வைத்துவிட்டு திருட்டு தொடர்ந்தது.

போலீசில் புகார் அளித்தும், அவர்கள் வந்து ஊரை சல்லடையாக சலித்தும் எந்த உபயோகமும் இல்லாது போனது.

ஊரெங்கிலும்.. குறிப்பாக பெரிய தனக்காரர்கள் வீட்டில் திருட்டு தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதிலும் ஊர் சொத்தை குள்ளநரித்தனமாக தன்னுடைமையாக்கிக் கொள்பவர்களின் சொத்து சர்வ நிச்சயமாகக் களவாடப்பட்டது.

இந்தத் திருட்டு நடந்த சில தினங்களில் எல்லாம், அந்த ஊருக்குப் புதிதாக யாராவது வந்து, அங்கு கஷ்டப்படுபவர்களுக்கோ.. அல்லது ஊருக்குப் பொதுவாக செய்யக்கூடிய ரோடு போடுவது, குளம் தூர்வாறுவது, பள்ளியை சீரமைப்பது என்று ஊர் பொது காரியத்துக்கு பணம் வழங்கிவிட்டுப் போவார்கள்.

அப்படி வந்து உதவி செய்பவர்கள் யார் என்னவென்று அந்த ஊர்க்காரர்களுக்கு தெரியாது இருந்தது.. ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து வந்து செய்து கொடுத்துவிட்டுப் போவார்கள் அவர்கள்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது சர்வ நிச்சசயமாய் இந்தத் திருட்டை அவர்கள் ஊர் கள்ளழகர் தான் செய்கிறார் என்று அந்த ஊர் மக்கள் உறுதியாய் நம்பினார்கள்!

இதில் செல்லி தனக்குத் திருட்டு நடப்பது பற்றி முன்னமே வரும் கனவினை மக்களிடம் கூறவும், 'ஐயோ.. அழகரே.. எங்களை மன்னிச்சு விட்டுடுப்பா.. இனி நாங்க யாரையும் ஏமாத்த மாட்டோம்..' என்று சரணாகதி அடைந்தார்கள்.

இது போன்ற சம்பவங்களும் செல்லிக்கு அழகர் மீது ஆழ்ந்த காதலும், அசைக்க முடியாத நம்பிக்கையும் ஏற்பட முக்கியக் காரணமாயிற்று.

ஆனால் இன்று வந்த கனவு.. அப்படித் திருட்டைப் பற்றியதாக இருக்கவில்லை. மாறாக அழகரின் தரிசனத்தைப் பற்றி!

அதை இப்பொழுது எண்ணினால், ஒருவேளை.. ஒருவேளை.. அவள் கூடிய விரைவில் அவளது அழகரை கூடிய நேரிலேயே கண்ணுறுவாளோ?!

இப்படி ஒரு எண்ணம் பிறந்ததுமே மனதுள் இன்னமும் மணியோசை கேட்பது பற்றி மகிழ்வுடன் எண்ணியபடி கோவிலுக்கு விரைந்தாள் அவள்.

செல்லும் வழியெல்லாம் இப்பொழுதும் கல்லும், முள்ளும் காலுக்குத் தெரியவில்லை தான்! மனதின் உற்சாகம் பீறிட, இன்று தன் அழகர் தனக்கு தரிசனம் தரவெனவே வந்திருக்கிறார் என்று ஆவலுடன் அவள் கோவிலுக்குச் சென்றால், கோவிலில் அவள் கனவில் கண்டது போலவே ஒரு பெரு வெளிச்சம் சூழ்ந்திருந்தது.

ஆனால் அது என்னவோ தெய்வீகமான ஒளியெல்லாம் இல்லை.

சில பல தீபங்கள் அங்கும் இங்குமாய் விழுந்து கிடந்ததால் பற்றிக் கொண்டிருந்த பெரு நெருப்பு அது!

அதையும் விட, செல்லிக்கும் முன்பாக, கோவிலின் முன்னே ஊர் முற்றிலுமாய் குழுமி விட்டிருந்தது.

இவள் அறக்கப் பறக்க ஓடி வருவதைக் கண்ட ஊர் மக்கள்..

"செல்லி.. பார்த்தியாடி.. நம்ம கோவிலுக்குள்ள இவனுங்க வந்து புகுந்து என்னவோ செய்யப் பார்த்திருக்கானுங்க.. நம்ம அழகர் சாமி தான் இவனுங்கள பிடிச்சு கட்டி வச்சிருக்காரு.." என்று இவளிடம் கூற, அப்பொழுது தான் சுற்றியிருந்த நெருப்பின் வெளிச்சத்தையும் தாண்டி இவள் கோவிலின் உள்ளே உற்று நோக்கினாள்.

உள்ளே பார்த்தால்.. அங்கே அன்று அந்த ஊருக்கு புதிதாக வந்தவர்கள் உடலெல்லாம் பலத்த அடிபட்டு, ஆழ் மயக்க நிலையில் கை கால்களெல்லாம் கட்டப்பட்ட நிலையில் கீழே விழுந்து கிடந்தார்கள்.

அவர்களுக்கு அருகே ஒரு பலகையில்.. "என் இடத்தில் வேறு அந்நியர்களுக்கு இடமில்லை" என்று அந்த அடிபட்டு கிடந்தவர்கள் ரத்தத்தைத் தொட்டே எழுதப்பட்டிருந்தது.

அதைப் பார்த்த செல்லியின் கண்கள் விரிந்தன.

மனதிற்குள் அவள் யோசித்துப் பார்த்தால்.. அவள் கனவில் அழகரைக் கண்ட பொழுது தான் இங்கு நேரடியாகவே அழகர் வந்து இந்த ஆட்களை அடித்துப் போட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.

அப்படி ஓர் எண்ணம் தோன்றிய அக்கணமே அவளது உடலெல்லாம் சிலிர்த்துப் போனது அவளுக்கு.

அப்பொழுது ஊர் தனக்காரர் பூபதிராஜா அழைத்திருந்த போலீசாரும், ஆம்புலன்சும் வந்துவிட, அந்தப் புதியவர்களை ஆம்புலன்சில் ஏற்றி அழைத்துச் செல்ல முனைந்தார்கள் அவர்கள்.

அப்பொழுது தான் அங்கிருந்த காவலாட்களில் ஒருவர், கையில் பாட்டிலுடன் இருந்த கரிகாலனைப் பார்த்தார்.

அவனைப் பார்த்ததும் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, தனக்கருகே இருந்த இன்னொரு போலீஸ்காரரிடம்.. "டேய்.. மூர்த்தி.. அங்க பார்த்தியா நம்ம காலா சார?" என்று சுட்டிக் காண்பிக்க, இருவருமாகச் சென்று காலாவை அணுகினர்.

"சார்.. காலா சார்.. நான் தான் ரமேஷ். என்ன ஞாபகம் இஇருக்கா சார்?" என்று அந்த போலீசார்களில் ஒருவன் கேட்க, அவரை அப்பொழுதும் இருந்த போதையுடன் மேலும் கீழுமாகப் பார்த்தான் காலா.

"ஹா.. ஹா.. வாங்கடா ரமேஷா.. மூர்த்தி.. என்னங்கடா தொழில்ல நல்லா சில்லற தேறுதா?" என்று மிகவும் இளக்காரமாக, பெரிதாக சத்தம் போட்டு காலா அவர்களை குசலம் விசாரிக்க, அந்த மூர்த்திக்கும், ரமேஷுக்கும் முகம் கருத்தது.

பொது மக்களிடம் லஞ்சம் வாங்குபவர்கள் தான் அவர்கள். அப்படி அவர்கள் லஞ்சம் வாங்கியதற்கு, காலாவிடம் நடு ரோட்டிலேயே வைத்து அரை வாங்கியவர்களும் கூடத் தான்.

ஆனால் அதை இப்பொழுது காலா, இத்தனை பேர் முன்பாகவும் பகிரங்கப்படுத்தியது அந்த இருவருக்கும் மிகுந்த தலைகுனிவாகப் பட்டது.

கருத்த முகத்துடன் அவர்கள் இருவரும் நின்றிருக்க, காலாவே மீண்டும் தொடர்ந்தான்.

"என்னங்கடா.. பேச்சையே காணோம்?

ஓஹோ??? டிபார்ட்மென்ட் ரகசியமில்லையா? அதான் வெளிய தெரியக் கூடாதுன்னு நினைக்கறீங்களாக்கும்?" என்று கூறி இன்னமும் சத்தமாக சிரிக்க, அந்த ரமேஷுக்கும், மூர்த்திக்கும் என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை.

ஆனாலும் சட்டென நிலைமையை சமாளிக்க நினைத்த மூர்த்தி..

"என்ன சார்.. இப்படியாகிட்டீங்க? நீங்க மறுபடியும் டியூட்டில ஜாயின் பண்ணுங்க சார். நீங்க இன்னைக்கு ஜாயின் பண்ணறேன்னு சொன்னா கூட, நம்ம கமிஷனர் உங்கள உடனே சேர்த்துக்குவார் சார்.

இப்படி குடிச்சு குடிச்சு ஏன் சார் உங்க உடம்ப கெடுத்துக்கறீங்க? எப்படி இருட்னஹா மனுஷன் இப்படி ஆகிட்டாருன்னு எங்களுக்கெல்லாம் எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா சார்?" என்று கேட்க, உடனே காலா.. "ஓஓஓஓஓஓஓஓ.." என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டான்.

ஏற்கனவே இவர்களது உரையாடலைக் கண்டும் காணாததும் போல கேட்டுக் கொண்டிருந்த ஊர் மக்கள், இப்பொழுது நன்றாகவே திரும்பி அவர்களைப் பார்க்க, ஒப்பாரி வைத்தபடியே தரையில் குத்துக்காலிட்டு, கன்னத்தில் கை வைத்த காலனை, மூர்த்தியும், ரமேஷும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.

"சார்.. என்ன சார் செய்யறீங்க? பப்ளிக்குல இபப்டியெல்லாம் நடந்துகிட்டு.. நல்லாவா இருக்கு?" என்று தலையில் அடித்துக் கொண்டு கூறினான் ரமேஷ்.

ஆனால் அதற்கும் நிறுத்தாத ஒப்பாரியுடன் தொடர்ந்தான் காலா.

"அது.. அது.. எங்க அம்மா சின்ன வயசுலயே சொல்லுச்சு. டேய்.. வாழ்க்கைல நல்லபடியா உருப்படணும்டா.. இல்லைனா, கண்ட கண்ட நாயெல்லாம் அட்வைஸ் பண்ணி சாகடிக்கும்டான்னு..

இப்போ பாரு.. நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணற?" என்று கேட்டு இன்னுமாய் அழுவது போல பாவனை செய்தான்.

அதைக் கேட்டதுமே ரமேஷுக்கும், மூர்த்திக்கும் ஏற்கனவே கருத்திருந்த முகம் மேலும் கன்றிப் போனது.

'ச்சை.. இவன்கிட்ட எல்லாம் பேச வந்தமே..' என்ற ஆத்திரத்துடன் இருவரும் வேறு புறம் நகர்ந்தனர்.

இதில் ரமேஷ், மூர்த்தியிடம்..

"இந்த ஆளு இப்போ இருக்கற நிலைமைக்கு நம்மாள நாய்ன்னு சொல்லறானா? இவனே இப்போ பழுத்த குடிகாரனா மாறிட்டான்.

இவனுக்கு என்ன யோக்கியத இருக்கு நம்மள பத்தி பேசறதுக்கு?

இவனோட இந்தக் கொழுப்பெடுத்த திமிர்த்தனத்துக்குத் தான் கடவுள் இவன இந்த நிலைமைல வச்சிருக்காரு.. அப்படி இருந்தும் அடங்குறானா பாரேன்?" என்று பொரிந்து தள்ள.. மூர்த்தியோ,

"ஆமா.. அவன் இப்படி இருக்கறதுக்கு யார் காரணம்? அவன் தான?

கொஞ்ச நஞ்ச பாவமா செஞ்சான்? ஒன்னு இல்ல.. ரெண்டு பொண்ணுங்களுக்கு துரோகம் செஞ்சானே.. அந்தப் பாவம் அவன எப்படி சும்மா விடும்?" என்றவன் தனக்குள்ளாக சிரித்துக் கொண்டு..

"நீ இவன் பேசினதை எல்லாம் நினச்சு கவலைப்படாத ரமேஷு.. இவன் இப்போ இருக்கற நிலைமைய விட, இன்னும் கேவலமான நிலைக்கு போகப் போறான்.." என்று சந்தோஷக் குரலில் கூறினான்.

அதைக் கேட்டு சற்று வியந்த பாவனையுடன்.. "என்ன சொல்லற மூர்த்தி?" என்று ரமேஷ் கேட்க,

"ஆமா ரமேஷு.. இந்த ஆளு இன்னும் கொஞ்ச நாள்ல முழு பைத்தியமா மாறி ஊர் ஊரா தெருத் தெருவா சுத்துவான்.. இல்ல தன்னைத் தானே கொலை பண்ணிட்டு சாவான்.

ஏனா.. இந்த ஊருக்கு.. அந்த காலா இருக்க இதே ஊருக்கு, இவனோட முன்னாள் காதலி.. 'நந்தினி' வரப் போறாங்க.." என்று கூறி மூர்த்தி கோரமாக சிரிக்க, ரமேஷோ..

"என்ன சொல்லற மூர்த்தி?" என்றான் அதிர்வுடன்!

தொடரும்..

சாரி.. சாரி நட்புக்களே.. கொஞ்சம் சொந்த வேலை காரணமா வாரக்கடைசில மட்டும் அத்தியாயங்கள் வருவது கஷ்டம். முடிஞ்ச அளவுக்கு அத்தியாயங்கள் கொடுக்க முயற்சி செய்வேன்.. ஆனா அப்படியும் முடியலைன்னா கோவிச்சுக்காதீங்க.. ப்ளீஸ்!!


மற்ற நாட்கள்ல கண்டிப்பா ud உண்டு!

சரி.. கதை எப்படி இருக்குன்னு உங்க கருத்துக்களை என் கூட பகிர்ந்துக்கோங்க.. கதை பிடிச்சிருந்தா உங்க நண்பர்களுக்கும் ஷார் பண்ணுங்க!

கருத்துக்களுக்கு :

நட்புடன்,

விபா விஷா!
 

Viba Visha

Moderator
தீயே.. நீயே.. தித்திக்கின்றாயே!
eiQC84K78059 (1).jpg
அத்தியாயம் - 5

நந்தினி அங்கு வரப் போகிறாள் என்று அந்த மூர்த்தி சொன்னதுமே ரமேஷுக்கே அந்த விஷயம் அதிர்வாக இருந்தது.

அவனது அதிர்ச்சியைப் பார்த்த மூர்த்தியோ.. "என்னடா.. என்னமோ உன் கல்யாணத்தப்போ உன் எக்ஸ் அழையா விருந்தாளியா வந்த மாதிரி ஷாக் ஆகற?" என்று நக்கலாகக் கேட்க, அவனைப் பார்த்து முறைத்தான் ரமேஷ்.

"அட ஏண்டா நீ வேற?

நான் அதுக்கு ஷாக் ஆகல..

இங்க ஏற்கனவே காலாவ லவ் பண்ணின அவரோட மாமா பொண்ணு மாதேவி இருக்கு. இதுல அந்த நந்தினியும் இங்க வந்துட்டாங்கன்னா.. என்ன ஆகும்?" என்றான் பயந்த குரலில்.

அதற்கு மூர்த்தியோ..

"ஹா.. ஹா.. என்ன ஆகும்? அத பத்தி நாம கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்?

ஆனா.. என்ன வேணாலும் சொல்லு.. நம்ம காலாக்கு இருக்கற மாதிரி மச்சம் வேற யாருக்கும் அமையாதுடா..

ஒரு பக்கம் பார்த்தா.. அவர லவ் பண்ணின பொண்ணு..

இன்னொரு பக்கம் பார்த்தா அவர் லவ் பண்ணின பொண்ணு..

இனிமே செம மஜா தான் போ.. காத்தது வாக்குல ரெண்டு காதல்ன்னு இவரோட சுயசரிதைக்குத் தான் பேர் வைக்கணும்.." என்று கூறி சிரித்தான்.

அவனுடன் கூடச் சேர்ந்து சிரித்த ரமேஷோ..

"அப்படி இல்ல மூர்த்தி.. இங்க அந்த ரெண்டு பொண்ணுங்களுமே அவர நிஜமாவே குத்திக் கொல்லத் துடிக்குதுங்க.. அது தான் சுவாரஸ்யம்.." என்று சந்தோஷமாக சிரிக்க, மூர்த்தியும் அவனுடன் இணைந்து சிரித்தான்.

இது எதுவும் தெரியாத காலாவோ.. அவன் போக்கில் குடியும் குடித்தனமுமாக வளைய வர, மறுநாள் காலையிலும் கூட அவனால் போதையில் இருந்து தெளிய இயலவில்லை.

அப்பொழுதும் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் இருந்த மரத்தடியில் தான் படுத்திருந்தான் அவன்.

அவனைப் பரிதாபமாகப் பார்த்தபடியே தான் வழக்கம் போல கோவில் வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தாள் செல்லி.

அதே வழக்கம் போலவே.. செல்லியை, காலா படுத்திருந்த அதே மரத்திற்குப் பின்புறமாக நின்றபடி தான் இரும்பொறை பார்த்துக் கொண்டிருந்தான்.

இரும்பொறையின் இந்தச் செய்கை செல்லியும் அறிந்தது தான்.

ஆனாலும் அவள் இதை எண்ணி பயப்படவில்லை.. பதட்டம் கொள்ளவில்லை.. இவ்வளவு ஏன்.. இரும்பொறைக்கு இப்படித் தன் மீது ஏதோவொரு ஈடுபாடு இருக்கின்றது என்பதை அறிந்தார் போலக் கூட அவள் காட்டிக் கொள்ளவில்லை.

ஏனென்றால்.. இது போல யாரோ ஒருவன்.. சரி! ஊரின் பெரிய தனக்காரரின் மகன் தன் பின்னால் சுற்றுவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

தான் அந்த அழகருக்கு நேர்ந்து விடப்பட்டவள் என்று அறிந்தும் கூட அவன் தன் பின்னால் சுற்றுவது செல்லிக்கு எரிச்சலையே உண்டாக்கியது.

ஆனாலும் அவனிடம் நேரடியாகச் சென்று இதுபோலவெல்லாம் என் பின்னால் அலையாதே.. உன் மனதில் வீண் ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதே.. அது உனக்குத் தான் நல்லதல்ல.. என்று கூறுவது அவளுக்கு அனாவசியமாகப் பட்டது.

'இன்னும் எத்தனை நாள் என் பின்னால சுத்துவான்? நான் நேரடியா பேசாம.. அவன கண்டுக்காமலேயே விட்டுட்டா அவனும் வேற வேலைய பார்க்க போவான்.

அத விட்டுட்டு அவன்கிட்ட நேரடியா போய் பேசி, தேவையில்லாம அதுக்கு அவன் வேற ஏதாவது பதில் சொல்லி.. ச்சே.. சுத்த நேர விரயம்..' என்று அலட்சியமாய் எண்ணினாள்.

அதே சமயத்தில் அப்பொழுது இரும்பொறை மறைந்திருந்த மரத்திற்கு அடியில் படுத்திருந்த காரிகாலனோ, இரும்பொறையிடம்..

"டேய்.. பார்த்து டா.. ரொம்ப உத்து உத்து பார்க்காத.. உன் ஆளு கடுப்பாகி தண்ணி வாளிய தூக்கி தலைல அடிச்சுடப் போகுது.

அப்பறம் உன்ன நான் தான் தூக்கிட்டு போகணும்.." என்று கிண்டலாகக் கூற, அவனை முறைத்தான் இரும்பொறை.

"ஏண்ணா.. முழு நேரம் போதைல இருக்கற உங்கள பாதி நேரம் தேடிக் கண்டுபிடுச்சு தூக்கிட்டு வந்து வீட்டுல விடறது நான் தான். இதுல நீங்க என்ன தூக்கிட்டுப் போகப் போறீங்களா?

இங்க முடிஞ்சா கொஞ்சம் அப்படியே மெதுவா எந்திருச்சு நில்லுங்க பார்க்கலாம்.." என்று இன்னமும் அவன் போதையில் இருப்பதைச் சுட்டிக் காட்டி பகடியாக இரும்பொறை கூற, ரோஷம் வந்துவிட்டது கரிகாலனுக்கு.

"டேய்.. எனக்கு இந்த ஊர்ல தங்க வீடு கொடுத்தன்ற ஒரே காரணத்துக்காக நீ சொல்லற எல்லாத்தையும் நான் கேட்டுட்டு இருப்பனா?

நான் யாரை நம்பியும் இல்லடா.. இந்த கரிகாலனுக்கு தன் காலே தனக்குதவி.

இப்போ பாரு நான் எப்படி ஸ்டடியா எந்திருச்சு நிக்கறேன்னு.." என்று தள்ளாடியபடியே இடுப்பு கைலியை சுருட்டிப் பிடித்தபடி மேலே எழுந்தவன், நிற்க முடியாமல் தள்ளாடி கீழே விழப்போக, அவனைத் தாங்கிப் பிடித்தான் இரும்பொறை.

"ஹா.. ஹா.. ஹா.. பார்த்தீங்களாண்ணா.. எதுக்கு இப்படி குடிக்கணும்? இப்படி உடம்ப கெடுத்துக்கணும்?" என்று சற்று அக்கறையும், ஆதங்கமுமாகக் கேட்க, அதற்கு கரிகாலனோ..

"எல்லாம் அவளை மறக்கத் தான்.. என்னை மறக்கத் தான்.. எல்லாவற்றையும் மறக்கத் தான்.." என்று வசனம் பேசினான்.

அதைக் கேட்ட இரும்பொறையோ அவனை முறைத்தபடியே..

"பெரிய பொன்னியின் செல்வன் ஆதித்த கரிகாலரு.. நந்தினிய மறக்க முடியாம குடிபோதைல கிடைக்காராரு.." என்று எகத்தாளமாகக் கூறினான்.

"டேய்.. நீ சொன்னாலும், சொல்லாட்டியும் நான் நந்தினியால தான்டா இப்படி இருக்கேன்.. அவள மறக்கத் தான் இந்த தலைமறைவு வாழ்க்கை.. அவள மறக்கத் தான் இந்த குடி.. அவள மறக்கத் தான் இந்த எல்லாமும்.." என்று கரிகாலன் உணர்ச்சிவயப்பட்டுக் கூற, அதே சமயத்தில் அங்கு சீறலுடன் பாய்ந்து வந்தது ஒரு வெண்ணிற ரோல்ஸ் ராய்ஸ்.

அந்த காரிலிருந்து, பனித்துளியின் தூய வெண்மை நிறம் கூட சற்று மங்கித் தெரியும்படி பரிபூரண பால் வெள்ளையில் ஒரு பெண் கீழிறங்கினாள்.

காரின் சத்தம் கேட்டபடி திரும்பிய கரிகாலனும், இரும்பொறையும் பார்த்தது பார்த்தபடி நின்றிருக்க, ஏற்கனவே தலைக்கேறிய போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த கரிகாலனோ.. இப்பொழுது முழுக்க சுயநினைவு இழந்து மயங்கிச் சரிந்தான்.

அதைக் கண்ட இரும்பொறையோ.. "அண்ணா.. அண்ணா.. என்ன ஆச்சுங்கண்ணா உங்களுக்கு?" என்று கவலையும், பயமுமாக கரிகாலனை எழுப்ப முயன்றான்.

இவை அத்தனையும் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாது வெறித்துக் கொண்டிருந்த பெண்ணை, "நந்தினி.." என்று அழைத்தார் அந்த காரின் ஓட்டுநர் இருக்கையின் பக்கமிருந்து வெளி வந்தவர்!

மயங்கி விழுந்த காலாவை, இரும்பொறை தூக்க முயல்வதுக்குள் அவர்களை சில காவலர்கள் சுற்றி வளைத்தார்கள்.

அதைக் கண்ட இரும்பொறைக்கு பயம் சூழ்ந்துகொள்ள அவன் பதுங்கிப் பின்னடைந்தான்.

அங்கு வந்த காவலர்கள், மயங்கியிருந்த கரிகாலனை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றார்கள்.

அதைப் பார்த்து திகைத்த இரும்பொறையோ.. "சார்.. சார்.. அவர எங்க சார் தூக்கிட்டு போறீங்க? அவரும் உங்கள மாதிரி ஒரு போலீஸ் தான் சார்.." என்று கத்திக் கொண்டே அந்த காவலர்கள் பின்னே ஓட, அவர்களோ இரும்பொறையைத் திரும்பிப் பார்த்து முறைத்தார்கள்.

"அவர் முன்னாடி ஒரு காலத்துல போலீசா இருந்தவர். ஆனா அதுக்காக தப்பு செஞ்சா அவரை அர்ரெஸ்ட் பண்ணாம இருக்க முடியாது." என்று கறார்க் குரலில் கூறினார்கள் அவர்கள்.

"தப்பா? சும்மா கிருஷ்ணா.. முகுந்தா.. பெருமாளேனு இருக்கறவர் என்ன சார் தப்பு செஞ்சிருக்க முடியும்?" என்று சற்று பம்மிய குரலில் தான் என்றாலும் அந்த காவலர்களிடம் தைரியத்தை வரவழைத்துக் கேட்டே விட்டான் இரும்பொறை.

ஆனால் அதற்கும்.. "ஹ்ம்ம்.. உனக்கு எந்த கேள்வின்னாலும், நீ அத போலீஸ் ஸ்டேஷன்ல வந்து கேட்டுக்கோ.." என்றதும் இன்னமும் பின்னடைந்தான் இரும்பொறை.

இங்கு நடந்த களேபரத்தைப் பார்த்தபடியே நந்தினியும், அவளுடன் வந்த அந்த இன்னொரு மனிதரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்படி நந்தினியின் உடன் வந்தவர், சற்று வயது மூத்தவர் போலத் தோன்றினார்.

அந்த நந்தினிக்கு தமையன் என்று கூறக் கூட முடியாதபடிக்கு அதிக வயது. அதே சமயம், அவளுடைய தந்தை என்று கருதக்கூடிய வயது இல்லை அவருக்கு.

கரிகாலனை போலீசார் தூக்கிச் செல்வதை அந்தக் கோவிலின் பூசாரியும், கூடவே செல்லியும் பார்த்திருந்தாலும், அவர்களுக்கு கரிகாலனைப் பற்றிய கரிசனை இருந்தாலும், வந்திருந்தவர்கள் அதி முக்கியமானவர்கள் போலும்.. அதனால் கரிகாலனை கவனிக்க இயலாமல், நேராக அவர்களையே அணுகினார்கள் அழகர் கோவில் பூசாரியும், செல்லியும்.

"வாங்க.. மந்திரி ஐயா.. வாங்கம்மா.. நீங்க வந்ததால இந்தக் கோவிலுக்கே பெருமை.. வாங்க வாங்க.." என்று உண்மையான சந்தோஷத்துடனும், பெருமையுடனும் அவர்களை வரவேற்றார் பூசாரி.

அவரது வரவேற்பை வந்திருந்த அந்தப் பெரிய மனிதர் ஏற்றாலும், சற்று வாடிய முகத்துடனே..

"என்ன பூசாரி சொல்லறீங்க? நாங்க இங்க வந்தது இந்தக் கோவிலுக்குப் பெருமையா?அப்படியெல்லாம் இல்ல.. நாங்களே எங்க வாழ்க்கைல ஒரு நல்ல வழி பிறக்காதான்னு இங்க வந்திருக்கோம்.." என்றார் சற்றே பரிதாபமாக.

அதைக் கண்ட செல்லிக்கும், பூசாரிக்கும் ஒரே ஆச்சார்யமாகிப் போயிற்று. கூடவே சங்கடமாகவும்!

"என்னடா இது இவ்வளவு பெரிய மினிஸ்டர் இப்படி பேசறேனேன்னு பார்க்கறீங்களா?

என்ன செய்யறது பூசாரி? எங்களுக்குக் கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகுது. ஆனா பாருங்க.. இன்னமும் எங்களுக்குக் குழந்தை இல்ல.. நாங்களும் போகாத டாக்டர் இல்ல.. பார்க்காத வைத்தியம் இல்ல.. ஆனா, எந்த முன்னேற்றமும் தெரிய மாட்டேங்குது.

அதனால தான்.. கடைசியா நாங்க கடவுள சரணடைஞ்சுட்டோம்.

வாழ்க்கைல எல்லாப் பாதையும் அடைச்சு, ஒரே இருட்டா இருக்கப்போ எல்லாரும் அந்த கடவுள தான் தேடறாங்க?

அப்படி நாங்க தேடின சமயத்துல தான் என் மனைவிக்கு இந்த ஊர் அழகர் கோவில் பத்தி தெரிஞ்சுது.. இங்க வேண்டிகிட்டா.. அது கண்டிப்பா நடக்குமாம்.

அதனால தான் நாங்களும் எங்களுக்கு குழந்தை வேணும்னு வேண்டிக்க வந்திருக்கோம்.

எங்க குடும்ப ஜோசியரும் அதே தான் சொன்னாரு. ஒரு மண்டலம் இந்த ஊருல தங்கியிருந்து தினமும் விடிகாலைல குளிச்சு இந்த கோவிலுக்கு வந்து அழகருக்கு வேண்டிக்கிட்டா அடுத்த பத்தாவது மாசம் எங்களுக்குக் குழந்தை பிறக்கும்னு சொன்னாரு.. அதான் வந்தோம்.." என்று சொல்லவும், செல்லிக்கு முகம் கருத்தது.

ஏனென்றால்.. அவளுக்குத் தன் பிறப்பின் கதை நினைவு வந்தது!

இப்படித் தானே தன் தாயாரும்.. என்று அவள் எண்ணி முடிப்பதற்குள்ளாகவே அவள் விழிகளின் ஓரம் நீர்கட்டிவிட, அவள் வேக வேகமாக அங்கிருந்து அகன்றுவிட்டாள்.

அவள் அப்படிச் செல்வதை பார்த்ததும் சற்று அதிர்ந்து போய் நந்தினி ஏன் என்று விசாரிக்க.. பூசாரியோ, செல்லியின் மொத்த சரித்திரத்தையும் சொல்லி முடித்தார்.

அதைக் கேட்ட நந்தினியின் மனது செல்லியின் பால் உருகிப் போயிற்று!
உடனே செல்லி சென்ற புறமாக அவளைத் தேடிச் சென்றவள், அவளை சமாதானப்படுத்த முனைந்தாள்.

இங்கு மறுபுறமோ கரிகாலன் மருத்துவமனையில், போலீஸ் காவலுடன் இருந்தான்.

இன்னமும் அவன் மயக்கம் தெளிந்து எழவில்லை.

காலாவை முதலில் காவல் நிலையத்திற்குத் தான் அழைத்துச் செல்வார்கள் என்று கருதியிருந்த இரும்பொறை முதலில் பம்மினாலும், அவனை போலீஸ் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று அறிந்ததும், தனது பைக்கிலேயே அவர்களைப் பின் தொடர்ந்தான்.

அங்கு படுக்கையில் படுத்திருக்கும் காலாவிடம் விரைந்தோடியவன், சுற்றி நின்றிருந்த காவலர்களிடம்..

"சார்.. இப்போவாவது சொல்லுங்க எதுக்கு இவரை அர்ரெஸ்ட் பண்ணிருக்கீங்க?" என்று கேட்டான்.

அதற்கு அந்தக் காவலர்கள் பதில் சொல்லாமல், அங்கு வந்த மருத்துவரிடம்..

"சார்.. இவருக்கு என்ன ஆச்சு? ஏன் திடீருன்னு மயங்கி விழுந்துட்டாரு?" என்று கேட்க, அந்த மருத்துவரோ..

"ஏதோ ஒரு விஷயத்தால இவரு பயங்கரமா டிப்ரெஸ் ஆகிருக்காரு. அந்த அயற்சில மயங்கிட்டாரு. பயப்படற மாதிரி எதுவும் இல்ல.

ஒரு நாலு மன்னி நேரம் அப்ஸர்வேஷன்ல இருக்கட்டும். அப்பறம் டிஸ்சார்ஜ் ஆகிடலாம்.." என்று கூற, இப்பொழுது இரும்பொறையோ மீண்டும் அந்தக் காவலர்களையே பிடித்தான்.

"சார்.. என்ன சார் நான் கேட்டுகிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்கு கேட்கற மனுஷன, மனுஷனாவே மதிக்காம இருக்கீங்க?" என்று சற்று எரிச்சலுடன் கேட்க,

"ஹ்ம்ம்.. மனுஷன் கூட சேர்ந்தா, உன்னையும் மனுஷனா மத்திப்பாங்க.. இவன் மாதிரி ஆளுங்க கூட எல்லாம் சேர்ந்தா உன்ன எப்படி மனுஷனா மதிப்பாங்க?" என்று எகத்தாளமாகக் கேட்டான் அங்கு வந்த நிதின்.
அவன் குரலைக் கேட்டதுமே கடுப்படித்தது இரும்பொறைக்கு.

சிறு வயதிலிருந்தே இருவருக்கும் ஆகாது! படப்பிலிருந்து, வளரும் முறை.. கொண்ட கொள்கை, என எல்லாமே வேறுபாடு தான்.

இருவருமே கிராமத்தில் தான் வளர்ந்தாலும், இரும்பொறைக்கு முழுக்க முழுக்க கிராமத்து வாசம் தான்.

ஆனால் நிதினுக்கோ.. அவன் அப்பாவின் வேலை காரணமாக சில காலம் கிராமத்திலும், சில காலம் நகரத்திலுமாக மாறி மாறி வசித்து வந்தான். அதனால் இருபுற நாகரிகமும் அவனுக்கு பழக்கம் தான்.

அதுமட்டுமின்றி அவன் பெற்றோர் அவனுக்குப் படிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து அவனைப் படிக்க ஊக்குவித்திருந்தனர்.

ஆனால் இங்கு இரும்பொறைக்கோ.. அவன் படிக்கிறானா.. இல்லையா.. என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட யாருமில்லை.

யாருமில்லை என்பதை விட, அதையெல்லாம் கவனித்துக் கொண்ட அவன் தாயாரையும் ஏளனப்படுத்தி, ஒடுக்கி ஒரு மூலையில் போட்டுவிட்டு, இரும்பொறையையும் தைரியமில்லாதவனாகவே வளர்த்திருந்தார் அவனது தந்தை பூபதிராஜா.

அவருக்கு எக்காலத்திலும் ஊருக்குள் அவரது மிதப்பு.. மதிப்பு என எதுவும் குறையக் கூடாது.

தான் பெற்ற மகனாகவே இருந்தாலும் அவன் எக்காலத்திலும் தனக்கு பயந்து வாழும் அடிமையாகாவே இருக்க வேண்டும் என்று நினைத்து இரும்பொறையை வளர்த்தார் அவர்.

அவரது ஆசைப்படி இன்னமும் இரும்பொறை அப்படித் தான் இருக்கிறான் என்பது வேறு விஷயம்.

ஆனால், அந்த சிறு வயது நண்பர்களுக்குள் அப்பொழுது ஏற்பட்ட அந்தப் பாகுபாடு நாளடைவில் மோதலாக மாறியது.

இப்பொழுது நிதின் குரல் கேட்டதுமே இரும்பொறை எரிச்சலடைந்தது அதனால் தான்.

"யார் மனுஷன்.. யார் மனுஷன் இல்லைனு மனுஷ ஜாதிலயே சேராத யாரும் எனக்கு புத்தி சொல்லத் தேவை இல்ல." என்று தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து வெறுப்புடன் அவன் கூற, அப்பொழுது அங்கு கம்பீர நடையுடன் ஓர் அடி உயரக் குதிகால் செருப்பு சப்தமிட நிமிர்வுடன் வந்தாள் மாதேவி.

அவள் வருவதற்கும், கரிகாலன் கண் விழிப்பதற்கும் சரியாக இருந்தது.

அவன் விழித்தெழுவதைப் பார்த்த அந்த போலிஸ்காரர்கள், இரும்பொறையை விளித்து..

"யோவ் இரும்பொற.. ஏன் இவர நாங்க அரெஸ்ட் செய்யறோம்னு கேட்டல்ல.. இதோ.. மாதேவி மேடம் தான் இவர் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தது.

அவங்க பெர்மிஷன் இல்லாம அடிக்கடி அவங்க இடத்துக்குள்ள ட்ரெஸ்பாஸ் பண்றதால அவங்க செக்யூரிட்டி ரீசனுக்காக சார அர்ரெஸ்ட் பண்ண சொன்னாங்க.

அப்படி இல்லைன்னா.. சார் உடனடியா இந்த ஊர விட்டு காலி பண்ணி போகணும்." என்று கூற, இரும்பொறையோ மாதேவியை திகைப்பாகப் பார்த்தான்.

ஆனால் மாதேவியோ, உதட்டில் ஓர் ஏளன முறுவலுடன் கரிகாலனைப் பார்க்க.. அவனோ, ஒரு வருத்தமான முறுவலுடன்..

"இப்போ நான் இந்த ஊர விட்டுப் போகணும் அவ்வளவு தான? சரி.. நான் இந்த ஊர விட்டு கிளம்பறேன்.. உடனே!" என்று ஒற்றை வார்த்தையில் முடித்தான்.

அதைக் கேட்ட மாதேவிக்கு இதயத்தில் கொடூர சந்தோசம் உண்டாயிற்று.

அதே வேளையில் இரும்பொறையோ.. "அண்ணா.." என்று சற்று நா தழுதழுக்க உரைக்க, அவனைத் தடுத்த காலாவோ..

"விட்டுடு இரும்பொற.. நான் கிளம்பறேன்.. இங்கிருந்து அப்படியே கிளம்பறேன். என்னோட பொருளையெல்லாம் மட்டும் நீ இங்க எடுத்துட்டு வந்துடு." என்று கூறி கண்மூடிப் படுத்துக் கொண்டான்.

அவன் அப்படிக் கூறியபடியே, கரிகாலனின் பொருட்களை எல்லாம் இரும்பொறை எடுத்து வந்ததுமே, அன்று மாலையே காலா அந்த ஊரை வீட்டுக் கிளம்பிவிட்டான்.

அதை நினைத்து வருத்தப்பட்ட ஒரே ஆள் இரும்பொறை மட்டும் தான்!

*****

காலா கிளம்பி சரியாக ஒரு வாரம் கழித்து கள்ளழகர் கோவிலின் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயின.

கோவில் கட்டி ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு விமரிசையாக நடத்தப்படுவது இந்தக் கும்பாபிஷேகம்.

அதற்காக கம்பம் நடும் விழா அன்று அதிகாலைப் பொழுதிலேயே வெகு விமரிசையாக நடைபெற ஆயத்தமானது.

ஊர் மக்களெல்லாம் முன்னதாகவே தீர்த்தம், கரகம், வேண்டுதல் எனத் தயாராக.. ஊரே விழாக்கோலம் பூண்டது போல இருந்தது.

அதிகாலைப் பொழுதிலேயே கும்பாபிஷேகத்திற்கான கம்பம் நாடும் விழா துவங்க இருக்க, ஊர் மக்களெல்லாம் கோலாகலாமாக தயாராக, அந்த விடியக் கறுக்கள் கூட அப்பொழுது பட்டப்பகல் போல வெளிச்சம் சூழ்ந்திருந்தது.

அத்தனை மக்களும் கோவிலின் வாயிலில், கம்பம் நடப்படும் இடத்த்திற்கு முன்பாக வந்து கூடியிருக்க, மாதேவியும் அங்கு வந்திருந்தாள்.

என்ன தான் மாதேவிக்கு கடவுள் மேலெல்லாம் இப்பொழுது நம்பிக்கை இல்லை என்றாலும், அவளது தொழிற்சாலை நல்லபடியாகக் கட்டி முடிக்கப்படுவதற்கும், அது தொடர்ந்து அங்கு இயங்குவதற்கும் அந்த ஊர் மக்களின் ஆதரவு அவளுக்குத் தேவை.

எனவே அவளும் நிதின், மற்றும் அவன் குடும்பத்துடன் வந்திருந்தாள்.

அப்படியே அவளுக்கு எதிர்ப்புறமாக நந்தினியும், அவளது கணவரும் நின்றிருந்தார்கள்.

தனக்கு எதிர்ப்புறமாக நின்றிருந்த மாதேவியைப் பார்த்த நந்தினியோ, அவளை பார்த்து சினேகமாக முறுவலிக்க, மாதேவிக்கோ கண்களில் கனல் கனன்றது!

அதே சமயத்தில் தான் அங்கிருந்த மக்களை எல்லாம் மிரட்டும் வகையில் அசுரத்தனமான வேகத்துடன் பயங்கரமான ஹாரன் சத்தத்துடன் மாதேவிக்கும், நந்தினிக்கும் நடுவே ஒரு ஜீப் வந்து நின்றது!

தொடரும்..

சாரி.. சரிப்பா.. இங்க கிளைமேட் சேஞ் ஆகிறதால வீட்டுல எல்லாருக்கும் உடம்பு சரியில்ல.. அதான் இவ்வளவு தாமதம்..


மன்னிக்க!

கதை பற்றிய அவுங்க கருத்துக்களை இங்க என் கூட பகிர்ந்துக்கோங்க!


நட்புடன்,

விபா விஷா.
 

Viba Visha

Moderator
தீயே நீயே தித்திக்கின்றாயே!
eiQC84K78059 (1).jpg
அத்தியாயம் - 6

சரித்திரத்தில் ஒரே சம்பவம் மீண்டும் திருப்பி நடப்பது உண்டு! அதை சரித்திரம் திரும்புகிறது என்பார்கள்.. ஆனால் சரித்திரத்தில் நடந்த ஒரு சம்பவம் அப்படியே தலைகீழாக நடக்க இயலுமா?

அது தான் இனி இங்கு நடக்கப் போகிறது!

***

அத்தனை ஜனக்கூட்டத்துக்கும் இடையே கீரீச் என்ற சத்தத்துடன் வந்து நின்ற ஜீப்பிலிருந்து புயல் போல இறங்கினான் கரிகாலன்!

தோள் கண்டார் தோளே கண்டார் என்பதாக அங்கிருந்த அனைவரும் காலாவை பார்த்தது பார்த்தபடி இருக்க, அவன் கையில் அப்பொழுது இருந்த அந்த மதுப்புட்டியை அப்பொழுது தான் கவனித்த மாதேவிக்கு கண்கள் கனன்றன.

கூட்டத்திலிருந்து முன்னே வந்தவள்.."உனக்கெல்லாம் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லையா? இப்போ தான போலீச விட்டு உன்ன விரட்டி அடிச்சேன்? ஆனா கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லாம இப்படி மறுபடியும் இங்க வந்து நிக்கற?

அதுவும் கோவில் விஷேசத்தப்போ கைல இந்த பாட்டில் வேற?" என்று கடுப்புடன் மொழிந்தவளைப் பார்த்தபடியே அந்த புட்டியில் இருந்ததை மீண்டும் தனது வாய்க்குள் ஊற்றிக் கொண்டான் கரிகாலன்.

அதைக் கண்டதும் குமட்டிக் கொண்டு வந்தது மாதேவிக்கு.

ஆனால் கரிகாலன், சட்டென்று எதுவும் பேசிவிடாது ஒரு கணம் குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டான்.. கூடவே திரும்பி தான் வந்த ஜீப்பையும்!

பின்பு ஏதோ தெளிந்தவனாக.. "ஏம்மா.. மாதேவிம்மா.. நான் போட்டிருக்க இந்த காக்கி பான்ட்டும், வெள்ளை சட்டையும் பார்த்து என்ன போலீஸ்காரனா தெரிலன்னா.. சரி பரவாயில்லைன்னு வச்சுக்கலாம்.

ஆனா.. இந்த போலீஸ் ஜீப்ப பார்த்தும் கூடவா நான் இப்போ போலீசா வந்துருக்கேன்னு உன்னால கண்டுபிடிக்க முடில?" என்று அவன் கிண்டலாகக் கேட்கவும் மாதேவியின் கண்கள் அகன்றன!

"போ.. போலீசா?" என்று எழும்பாத குரலில் அதிர்வுடன் கேட்டவள், அந்த அதிர்ச்சி மாறாமலேயே..

"ஆனா.. ஆனா.. இந்த பாட்டில்?" என்றாள் அதே குரலில்.

அதைக் கேட்ட காலாவுக்கு சிரிப்பு தான் வந்தது.

சிரித்தபடியே சற்றும் எதிர்பாராமல், தன் கையிலிருந்த பாட்டிலில் இருந்ததை அப்படியே மாதேவியின் முகத்தின் மீது ஊற்றிவிட்டான்.

"ஏய்.. ஏய்.." என்றபடி மாதேவி மேலும் அதிர்ந்து போய் அதைத் துடைக்க, அவளைப் பார்த்து..

என்னம்மா சரக்கு டேஸ்ட் எப்படி இருக்கு?" என்று கேட்டான் எகத்தாளமாக!

அதிர்ந்த விழிகள் அசையாது நிலைக்க.. "இது.. இது.." என்று தடுமாறினாள் பெண்!

"ஹ்ம்ம்.. சொல்லு." என்று கரிகாலன் மேலும் அவளை ஊக்க..

"இது.. இது வெறும் தண்ணி!" என்றாள் புரியாத குழப்பத்துடனும், கூடவே நம்ப இயலாத ஆச்சரியத்துடனும்!

"ஓஹோ?! அப்படியா?" என்று அவளிடம் கேட்டவன், மீண்டும் ஊருக்கே கேட்கும் குரலில்..

"நான்.. ஆதித்த கரிகாலன்! சூப்ரடன்ட் ஆஃப் போலீஸ். இனிமே இந்த ஊர்ல தான் நான் தங்கப் போறேன்.." என்று அதுவரை ஊர் மக்களை பார்த்துக் கூறிக் கொண்டிருந்தவன், சட்டென மாதேவியின் பக்கம் திரும்பி..

"ஏன்னா.. எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சுருக்கு.." என்றான் சன்னமாக கண்ணடித்தபடி!

பேச வார்த்தைகளின்றி திக் பிரமை பிடித்து நின்றிருந்தவளை, ஒரு மந்தகாசப் புன்னகையுடன் பார்த்தபடியே சற்று நிமிர்ந்தவனின் பார்வையில் விழிகளிலோ, அல்லது முகத்திலோ எந்த வித உணர்ச்சியும் இன்றி அவனையே பார்த்தபடி நந்தினி நிற்க, காலாவை அந்தப் பார்வை மின்சாரமாய் பாதித்தது.

ஒரு கணம் ஏதோ அவனை உள்ளுக்குள் உலுக்கிவிட, சட்டென பேச்சும், சிரிப்பும் நின்று, விருட்டென தனது ஜீப்பில் ஏறி அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டான் அவன்.

அவன் பார்வை தன்னைத் தாண்டி பின்னே சென்றதும், நந்தினியைப் பார்த்ததும் அவன் முகம் மாறி அவ்விடத்தை விட்டே ஓடியதும் மாதேவியை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது.

கண் பாராதது கருத்தில் இருந்தும் மறைந்துவிடும் என்று ஒரு சொற்றொடர் இருக்கிறது.

ஆனால் இத்தனை ஆண்டுகளாக இந்த கரிகாலனை தான் பார்க்கவே இல்லை தான். ஆனால் அவன் தன் கருத்தில் இருந்து மறைந்துவிட்டானா என்ன?

அதற்காக அவன் மீது அன்று இருந்த காதல் இன்றும் இருக்கிறது என்று பொருளல்ல.. அந்தக் காதலால் தான் பட்ட அவமானம், அதனால் அன்று உண்டான வலி.. இப்பொழுது.. இந்தக் கணமும் அதே போல இருக்கிறதே..

அது போலத் தானே அந்த காலாவுக்கும்.. அவ்வளவு நேரமாய் தன்னைச் சீண்டி வார்த்தையாடிக் கொண்டிருந்தவன், அந்த நந்தினியைப் பார்த்ததும் அரை நொடியில் முகம் மாறி ஓடியே விட்டானே?! என்று மாதேவிக்கு இன்னமும் கோபமாக வந்தது.

'அப்படின்னா அவனுக்குள்ள இன்னமும் நந்தினி மேல காதல் இருக்கு தானே? அவளுக்கு கல்யாணம் ஆகி அவளோட புருஷனோட நிக்கறத பார்க்கவே சகிக்காம தான அங்கிருந்து ஓடியே போய்ட்டான். இதுல எதுக்கு தேவை இல்லாம என்கிட்டே பிளிர்ட் பண்றான்?

இல்ல.. இல்ல.. ஏதோ பிளான் பண்றான்.. என்ன பிளானிங்கா இருக்கும்?

ஓஹோ? ஒருவேள இது அந்த நந்தினிய பொறாமைப்பட வைக்கவா இருக்குமோ?

ச்சை.. இந்த ஆம்பளைங்களுக்கெல்லாம் புத்தி போற போக்க பாரு? ஒருத்தி கல்யாணம் ஆனாலும் விடமாட்டானுங்க இல்ல?

ஆனாலும் இந்த நந்தினி?! அவ மட்டும் என்னவாம்? அவ எதுக்கு காலாவ இப்படி அடிச்சுத் திங்கற மாதிரி பாக்கறாளாம்?' என்று தன் போக்கில் எண்ணமிட்டவளை அவளது மூளை சடன் பிரேக் போட்டு நிறுத்தியது.

'ஏய்.. ஏய்.. இப்போ இவன், அவள பார்த்தா என்ன? இல்ல அவ, இவன பார்த்தா உனக்கு என்ன?

உனக்கு எங்க எரியுது?' என்று காறித்துப்ப..

'அதான.. எவன் எவள பார்த்தா எனக்கென்ன? ஆனா.. ஆனா.. என்ன தான் அடிச்சுத் துரத்தினாலும், மறுபடியும் பயங்கர திமிரோட, அசைக்க முடியாத அதிகாரத்தோட அந்த காலா இங்க வந்து நின்னுட்டானே?' என்று இன்னமும் காலாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க, அவளது மூளையோ.. 'எடு அந்த விளக்கமாத்துக் கட்டைய..' என்று எகிறவும் தான்,

'ஒகே.. ஒகே.. ஓகே.. ஓகே..' என்று வேறு வேலையைப் பார்க்கப் போனாள்.

இங்கு மறுபுறமோ காலா செய்வதறியாத குழப்பத்துடன் தலையைப் பிடித்தபடி இருந்தான்.

'ஏன்.. ஏன்.. ஏன்.. என்னால இன்னமும் எதையும் மறக்க முடியல..

ஏன் இன்னமும் நான் இவ்வளவு எமோஷனல் ஆகறேன்?

இந்த உலகத்துல ஆண்கள் வெறும் பிசிக்கலா வேணும்னா ஸ்ட்ராங்கா இருக்கலாம்.. ஆனா, எமோஷனலா ரொம்ப வீக்குன்னு சொல்லுவாங்களே? நான் அப்படி வீக்கா இல்லைன்னு எத்தனை முறை என்ன நினச்சு நானே பெருமைப் பட்டிருக்கேன்!

ஆனா.. ஆனா.. இவள பார்த்தா மட்டும் ஏன் இப்படி தலைகுப்புற கீழே விழறேன்?

ஆனா ஒன்னும் மட்டும் உண்மை!

இந்தப் பொண்ணுங்களெல்லாம் பிசிக்கலி வீக்.. ஆனா எமோஷனலி ரொம்ப ஸ்ட்ராங்குன்னு சொல்லுவாங்க. அது உண்மை தான்னு நிரூபிக்கறதுக்கு தான் இந்த ரெண்டு ராட்சஷிங்களும் இப்படி வளர்ந்து நிக்கறாங்களே?

அவ்வளவு சின்ன வயசுல அப்படி அவமானப்பட்ட பிறகும், பூஞ்சை மனசுக்காரின்னு நினைச்சுட்டு இருந்த மாதேவி.. இப்போ தன்னந்தனியா ஒரு கம்பெனியவே கட்டிக் காக்கற நிலைமைக்கு உயர்ந்துட்டா.

அதே சமயம் அந்த நந்தினி? அவளுக்கு நான் பண்ணின துரோகம் எவ்வளவு பெருசு?

அதுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அவ விடலையே..

இப்போ இன்னொருத்தன.. அதுவும் அரசாங்கத்துல பெரிய பதவில, அதிகாரத்துல இருக்கற ஓர் அமைச்சரையே கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா தான நிக்கறா?

ஆனா.. நான்?!

ஊருக்குத் தான் பெரிய போலீஸ் ஆபீசர்.. யாராலயும் சாதிக்க முடியாததெல்லாம் சாதிக்கற போலீஸ்..

கம்பீரமானவன், இரும்பு மனுஷன்னு எத்தனை பேர்.. எத்தனையோ இடத்துல பாராட்டியிருப்பாங்க? எதிரிங்க உட்பட!

ஆனா என்னால பழசெல்லாம் இன்னமும் மறக்க முடியலையே?!

ஆமா எப்படி முடியும்? செஞ்சது கொஞ்ச நஞ்ச பாவமா என்ன?

ஒரு பொண்ணு இல்ல.. ரெண்டு பொண்ணுங்களுக்கு ஒரே நேரத்துல துரோகம் செய்திருக்கேனே? எனக்கு எப்படி நிம்மதி கிடைக்கும்?' என்று தன்னைத் தானே நொந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது அவன் வீட்டு பக்கமாக இரும்பொறை தனது புல்லட்டில் வரவும், அவன் தன்னைப் பார்க்கத் தான் வருகிறான் என்று எண்ணிய காலாவோ, வீட்டு ஜன்னல் வழியாக வந்தவனைப் பார்த்துவிட்டு எழுந்து வெளியே சென்றான்.

இவன் வெளியே செல்வதற்குள், இரும்பொறையின் பைக் அதி வேகமாக அந்த வீட்டைக் கடந்து சென்றுவிட, காலாவுக்கோ ஒரு மாதிரியாகிவிட்டது.

ஏனென்றால், காலா அவசர அவசரமாக வெளியே வருவதை இரும்பொறையால் பாராதிருந்திருக்க இயலாது.

அப்படி இருந்தும் என்னவோ அந்த இடத்தில் அப்படி ஒரு வீடோ, அந்த வீட்டில் காலா என்று ஒருவனோ இல்லவே இல்லாததைப் போன்ற பாவனையுடன் இரும்பொறை பைக்கை முறுக்கிக் கொண்டு செல்ல.. சட்டென மனம் சோர்ந்தவன்.. விலுக்கென நிமிர்ந்து..

'மவனே.. இந்த ரெண்டு பொண்ணுங்க தான் என்ன ஆட்டி வைக்கறாளுங்கன்னா.. நீயும் என்ன அசைச்சு பார்க்கலாம்னு பார்க்கறியாடா கண்ணா..

அந்தப் பொண்ணுங்ககிட்ட வேணா நான் வேற மாதிரி இருப்பேன். ஆனா, உன்ன அப்படி எல்லாம் ஈஸியா விட முடியாதுடா மவனே..' என்று எண்ணியவன், அதுவரை துணி போட்டு மூடியிருந்த தனது ராயல் என்பீல்டின் உரையை விளக்கினான்.

மாதேவியுடனான திருமணத்தை முறித்து, நந்தினியுடனான காதலையும் மறுத்த பிறகான இத்தனை நாட்களில் அறிந்தவர், தெரிந்தவர் கண்களுக்கு மறைந்து, தலை மறைவு வாழ்க்கையிலும் பல்வேறு வழக்குகளைக் கண்டறிந்து வந்தாலும், தான் ஆசை ஆசையாய் வாங்கிய, தனது பிரியத்துக்குரிய இந்த பைக்கை அவன் தொடவே இல்லை.

ஏதோ இப்பொழுது தான் மனதிற்கு மீண்டும் தனது பைக்கின் மீது கை வைக்கும் எண்ணம் பிறந்தது.

எனவே தான் ஊருக்கு போன் செய்து தனது பைக்கை இங்கு அனுப்பி வைக்குமாறு பணித்திருந்தான் காலா.

அப்படி எடுத்து வந்த பைக்கை முதன் முறையாக இவனை சமாதானப்படுத்த எடுக்க வேண்டுமா? என்று எண்ணியவனுக்கு சிரிப்பே வந்தது.

'ஆமா காதலிக்கிட்ட ஊடல் கொள்ளற மாதிரியில்ல இருந்த இரும்பு என்கிட்டே கோவிச்சுக்கிட்டு மூஞ்சிய திருப்பிகிட்டு போயிருக்கு..

அப்பறம் இப்படியெல்லாம் சீனப் போட்டு தான அவனையும் சமாதானப்படுத்தணும்?' என்று எண்ணமிட்டபடியே தனது பைக்கை முறுக்கினான்.

'எங்க போயிருப்பான் இந்த இரும்பு?' என்று யோசித்தபடியே சென்றவனுக்கு சட்டென பதிலும் கிடைத்தது!

'ஆமா.. கழுதை கெட்டா குட்டிச் செவுரு.. இது வேற எங்க போயிருக்கும்.. எல்லாம் அங்க தான்..' என்றபடி கோவிலை நோக்கித் தனது பைக்கைத் திருப்பினான் அவன்.

கோவிலுக்குச் சற்று தூரத்திலே இரும்பொறையைக் கண்டுவிட்டான் காலா.

இரும்பொறை வேறு எங்கு இருப்பான்.. செல்லி இருக்கும் இடத்திலே தானே?

கோவிலுக்குள் இருக்கும் செல்லியை, இவன் கோவிலுக்கு வெளியே இருக்கும் மரத்தின் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

'ம்ம்க்கும்.. இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இவன் இப்படி மரத்தையே தடவிட்டு இருக்கப் போறான்..

இவன் தடவற தடவலப் பார்த்தா.. இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மரமே குட்டி போட்டுடும் போலிருக்கே?' என்று தனக்குள் எண்ணி சிரித்தபடியே, அவனது பைக்கின் ஓசையைக் கூட கண்டுகொள்ளாது இன்னமும் கோவிலின் உள்ளேயே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இரும்பொறையின் அருகே மெல்லச் சென்று, அவன் முதுகில் பலமாக ஓர் அடி வைத்தான்.

"ஐயோ.. அம்மா.." என்று சத்தமாக அலறி.. பின் அந்த அலறல் கோவிலுக்குள் யாருக்கும் கேட்டுவிடக் கூடாதே என்ற பயத்துடன் வாயைக் கைகளால் பொத்தியபடி திரும்பிய இரும்பொறை அங்கு காலா இருக்கவும் ஒரு கணம் மிரண்டான்.

உடனே சட்டெனப் பின்வாங்கி, தனது பைக்கை எடுக்கப் போனவன், தனது பைக்கருகே அதே போலவே இருந்த கலாவின் பைக்கில் சாவியை பொருத்த, அதுவோ.. 'ஹேய்.. ஹூ ஆர் யூ மேன்..' என்று அவனது சாவியை ஏற்க மறுத்தது.

சற்றுத் திணறலுடன் அவன் மீண்டும் மீண்டும் முயற்சிக்க.. அவனருகே வந்த காலாவோ..

"என்னடா போலீஸ் பைக்கையே ஆட்டயப்போட பார்க்கறியா?" என்றான் மிரட்டல் தொனியுடன்!

தொடரும்..

மறுபடியும் மன்னிச்சு.. இவ்வளவு நாள் வீட்டுல இருந்த எனக்கு புது வேலை கிடைச்சுரக்கு தங்கம்ஸ்.. அதுல பிசி ஆகிட்டேன்.. காலைல நாலு மணிலா இருந்து ஓடறேன்.. ஆனாலும் விடாம எழுதணும்னு முடிவோட இருக்கேன்.. வாரத்துக்கு கண்டிப்பா ரெண்டு எபியாவது கொடுக்கறேன் இனிமே!

இந்த அத்தியாயம் பற்றிய உங்க கருத்துக்களை என்னோட மறக்காம பகிர்ந்துக்கோங்க!


நன்றி மக்களே!

நட்புடன்,

விபா விஷா.
 

Viba Visha

Moderator
தீயே.. நீயே.. தித்திக்கின்றாயே!
eiQC84K78059 (1).jpg

அத்தியாயம் - 7

கரிகாலன் சட்டென அருகே வந்து, "என்னடா போலீஸ் பைக்கையே ஆட்டையபோட பார்க்கரியா?" என்று மிரட்டல் தொணியில் கேட்கவும் இரும்பொறைக்குத் தூக்கி வாரிப் போட்டது!

"என்ன.. என்ன சார் சொல்றீங்க?" என்று கோபத்துடன் கேட்டவனைப் பார்த்து புருவம் உயர்த்தினான் காலா.

'ஓஹோ?! சார் வேறயா?' என்று தனக்குள்ளாக நினைத்து நகைத்து கொண்டவன், முகத்தை கஷ்டப்பட்டு கடுகடுவென்று வைத்துக் கொண்டு..

"என்ன காரணம்னா கேட்கிற?

போலீஸ்காரன் வண்டியவே.. அதுவும் போலீஸ்காரன் கண்ணு முன்னாடியே திருட முயற்சி பண்ணிட்டு இருக்க?

கேட்டா.. என்னமோ ஒண்ணுமே தெரியாதவனாட்டம் முழிக்கற?" என்று மீண்டும் காலா எகிற, மிடறு விழுங்கிக் கொண்டான் இரும்பொறை!

ஆனால் அவன் சற்றும் எதிர்பாரா வண்ணம், சட்டென அவனது சட்டை காலரை பிடித்த காலா, "என்னடா.. பயந்துட்டியா?" என்று கூறிச் சிரிக்க, இரும்பொறைக்கோ தலை கால் ஒன்றும் புரியவில்லை!

"அடேய்.. நீ நின்னுட்டு இருக்கறது என்னோட வண்டிகிட்ட.

என்ன முழிக்கிற? என்னோட வண்டியும் உன்னோட வண்டியும் ஒரே மாடல்!

ஏன்டா ஒரே மாதிரி வண்டி இருக்குன்றதுக்காக உன் வண்டி எது.. என் வண்டி எதுன்னு வித்தியாசமே தெரியாதா?

அவ்வளவு பதட்டமா?

ஏன் திடீர்னு புதுசா என்ன பார்த்து பயப்படுற? இத்தனை நாளா என்ன பக்கத்துல வச்சுக்கிட்டு தானே செல்லிய சைட் அடிச்சிட்டு இருந்த? இப்ப என்ன புதுசா சமஞ்ச பொண்ணாட்டாம் இப்படி ஓடற? போலீஸ பார்த்து தப்பு செய்யறவன் தான் பயப்படணும்.. நீ என்ன தப்பா செய்யற?" என்று காலா கேட்க, இன்னமும் திரு திரு திரு பார்வை தான் இரும்பொறைக்கு.

ஆனாலும் ரோஷத்துடனே.. "நான் செய்யறது எதுவும் தப்பு இல்ல.." என்றான் நிமிர்வுடன்.

அதைக் கண்டா காலா.. "ஆஹா.. ஆஹா.. என்ன ஒரு கம்பீரம்? இப்படித் திருட்டுத்தனமா ஒரு பொண்ண சைட் அடிக்கறது உனக்கு தப்பில்லையா?

சரி.. அந்த கதைக்கு அப்பறம் வருவோம்.. இப்போ என் கதைக்கு வா!

என்னமோ பெரிய இவனாட்டம் என்ன கண்டும் காணாமையும் பைக்க விருட்டுன்னு ஓட்டிட்டு வந்துட்ட?

இந்த நாலு தெரு, நாப்பது வீடு இருக்கற ஊருக்குள்ள நீ எங்க போவன்னு எனக்குத் தெரியாதா?

அப்படியே என்கிட்ட இருந்து ஓடி ஒளியலாம்னு நினைச்சியா? அதெல்லாம் என்கிட்ட நடக்காது மகனே..

சரி சரி.. சீக்கிரம் பைக் எடுத்துட்டு என் வீட்டுக்கு வா.. நான் இன்னமும் உன்னோட வீட்ல தான் இருக்கேன் தெரியுதா?" என்று கூற.. இரும்பொறையோ,

"நீங்க என் வீட்டுல இருக்கறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.. ஆனா நான்.. நான் அங்க வரல." என்று தயங்கியபடியே கூற.. காலாவும், 'அப்படியா சேதி?!' என்று இடுப்பில் கை வைத்து அவனைப் பார்த்து முறைத்தான்.

"நான் ஒன்னும் சாதாரண கரிகாலனா உன்கிட்ட உன்ன என் வீட்டுக்கு வரச் சொல்லலடா.. போலீஸ் ஆதித்த கரிகாலனா என் வீட்டுக்கு உன்ன வர சொல்றேன்.

இது ரிக்வெஸ்ட் இல்லடா தம்புடு.. இட்ஸ் மை ஆர்டர்.. வந்து சேரு." என்று கூறி அவனை நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டு, தனது பைக்கை எடுத்துக்கொண்டு முன்னே சென்றான்.

இரும்பொறையும் செய்வதறியாத திகைப்புடன் அவனைப் பார்த்தாலும் ஒரு போலீசின் ஆணையை மீற முடியாத கையாலாகத்தனத்தால் வேறு வழியின்றி தனது பைக்கில் அவனைப் பின் தொடர்ந்தான்.

இப்படியாய் பகல் பொழுது கழிந்திட, அன்றைய இரவு நந்தினியும், அவள் கணவன் தங்க பாண்டியனும், தங்களுக்குள்ளாக ஏதோ ஒரு ஆழ்ந்த யோசனையில் இருந்தார்கள்.

வெகுநேர.. நீண்ட.. யோசனைக்குப் பிறகு தனது கணவனது தோளில் கை வைத்து அவரது கவனத்தை தன் புறம் திருப்பிய நந்தினி.. "சரி வாங்க.. நாம கோயிலுக்கு போயிட்டு வரலாம்." என்று அழைத்தாள்.

அவளது அழைப்பில் சற்று மிரண்ட அவள் கணவனோ.. "இ.. இ.. இப்பவா?" என்று கேட்டான்.

ஆனால் நந்தினியோ, சற்று பிடிவாதமான குரலில்.. "ஆமா.. இப்போ போனா தான் யாரோட தொந்தரவும் இல்லாம நாம சாமிய பார்த்துட்டு வர முடியும்.." என்று கடுமையான குரலில் கூற, அவரும் வேறு வழியின்றி அவளுடன் சென்றார்.

செல்லும் வழியெல்லாம் தங்க பாண்டியனுக்கு மிகுந்த பயம் தான்.

என்ன தான் மனைவி மேல் அவருக்கு மயக்கம் இருந்தாலும், அவள் சொல்லுக்கெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு ஆடினாலும், உள்ளுக்குள் இருக்கும் பயம் போகுமா என்ன?

ஆனால் என்ன.. இங்கு அவருக்குள் இருந்த பயத்தை, மனைவி மேல் இருக்கும் மையல் மீறியது! அதனால் வெளியில் சற்று தைரியமாய் காட்டிக்கொண்டு நந்தினியுடன் சென்றார் அவர்.

ஆனால் நந்தினி யாரையும் எதையும் கண்டு கொள்வதாகவே இல்லை. அவளது எண்ணமெல்லாம் ஏதோ ஒரு விஷயத்தைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

சுற்றுப்புறம் மறந்து அவளது மூளையிலும் கண்களிலும் அந்த கள்ளழகர் கோவில் மட்டுமே நிறைந்திருந்தது. தன் போக்கில் நடந்தே சென்று கோவிலின் முன்பு நின்றாள் அவள்!

என்ன தான் தங்கபாண்டியன் அவ்வளவு நேரம் பயத்திலேயே நந்தினியுடன் வந்திருந்தாலும் அவருக்குமே கோவிலில் சன்னதியை அடைந்ததுமே உள்ளுக்குள் பரவசமானது!

அதுவரை அலைபாய்ந்து கொண்டிருந்த எண்ணமெல்லாம், ஓரிடத்தில் நிலை பெற்று, ஒன்றையே எண்ணி, ஒற்றை காரியத்தில் சூழ் கொண்டது!

அவரும் தன்னையும் மறந்து அந்த கோவிலையே பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தார். கணவனும், மனைவியும் எவ்வளவு நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள் என்று தெரியாது.

ஆனால் வெகு நேரம் கழித்து, காதுக்கருகிலேயே குதிரையின் கனைப்பொலி வெகு சத்தமாகக் கேட்க, இருவரும் திடுக்கிட்டு சுயநினைவிற்கு வந்தார்கள்.

"என்ன?.. என்ன சத்தம் அது?" என்று மிரண்டு போய் தாங்க பாண்டியன் கேட்க, நந்தினியின் விழிகளிலும் அச்சம் படர்ந்தது!

" அங்.. அங்க பாருங்க.." என்று அவள் கை நீட்டிக் காட்டிய இடத்தைத் திரும்பிப் பார்த்த தங்க பாண்டியனுக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது!

ஏனெனில் அங்கு அவர்கள் கண்டது, கோபத்தில் திமிரிக் கொண்டிருக்கும் அழகரின் வெள்ளைக் குதிரையை!

"இது.. இது சாமிக்கு நேர்ந்து விட்ட குதிரை தான?

"ஆமா.." என்று குரல் நடுங்கக் கூறியவள், சட்டென தனது கணவனது கரத்தைப் பற்றிக் கொண்டு,

"நாம இப்போ கிளம்பணும்." என்று கூறி நடக்க ஆரம்பித்தாள்.

தங்க பாண்டியனும், குதிரையைப் பார்த்தபடியே அதிர்ச்சி விலகாத பார்வையுடன் அவளுடன் நடந்து சென்றார்.

வீடு நெருங்கும் வரையிலும் கூட இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

எதிலிருந்தோ தப்பித்து ஓடுபவர்களைப் போல வேக வேக நடையுடன் வந்தவர்களுக்கு, தங்களது வீடு கண்ணுக்குத் தென்படவும் தான் சற்று மூச்சே வந்தது.

ஆனால் வீட்டை அடைந்ததும், திரும்பி வந்த மூச்சு சட்டென்று அடைத்துக் கொண்டு நின்றே விட்டது!

*****

இங்கு மறுபுறத்தில் உறங்கிக் கொண்டிருந்த செல்லியின் கண்களுக்குள்ளோ, கனவின் வழியாக ஒரு பேரொளி பளீரிட்டது!

அந்தப் பேரொளியின் பளீரிடலிடன் முடிவில் சூரியக் கதிரின் மேன்மையின் சாயலாய் அவன்!

அவளது அழகன்.. கள்ளழகன்!

சூழ்ந்திருந்த ஒளியில் கூட அவளது அழகனின் முகம் மட்டும் அவளுக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஏனென்றால்.. அழகனின் தலையில் வீற்றிருந்த கிரீடத்தில் இருந்த ஒரு ரத்தின வைரக் கல்லிலிருந்து பிறந்த ஒளியானது அவனது மதிமுகத்தையே மறைத்திருந்தது.

ஆனால் முகம் தான் தெரியவில்லையே ஒழிய, அவன் திருவுருவம், தேவிக்கு திவ்விய தரிசனம் தான்!

தோள் கண்டார்.. தோளே கண்டார் என்பது போலல்லாமல்.. கண் முன் காணும் அவன் மொத்த உருவத்தையும் தன்னுள் நிரப்பிக் கொண்டே தீருவேன் என்று சபதம் பூண்ட மங்கையவளின் கருவிழிகளோ.. தன்னவனைத் தலையிலிருந்து, பாதம் வரை பார்த்துக் கொண்டே வர, அவளது அந்தக் காதல் பித்து நிலையை எண்ணி அந்தக் கள்ளனும் சிரித்தானோ?

ஏனென்றால்.. அவன் முகம் தெரியாவிட்டாலும் அவன் தன்னைக் கண்டு நகைக்கிறான் என்று செல்லிக்குப் புரியத் தான் செய்தது!

அதைப் புரிந்து கொண்டதில், புது வெட்கமும் பிறந்தது.. வெட்கம் கொண்டு நிலம் நோக்கிய திருமகள், மீண்டும் நிமிர்ந்த பொழுது.. அவளருகே வந்ததிருந்த அழகனின் திருக்கரம், செல்லிக்கான திருமாங்கல்யத்தை ஏந்தியிருந்தது!

அதைக் கண்ட பூவையின் விழிகளோ ஆனந்த அதிர்ச்சியில் விரிய, கருநிறக் கள்வனின் கரங்களோ.. காரிகையின் சங்குக் கழுத்தில் திருநாணைப் பூட்டியது!

மூச்சடைக்க விழித்தெழுந்த பாவையோ.. ஆசையும், ஆவலுமாய் தன் கழுத்தைத் தடவிப் பார்க்க.. அங்கு தன் மன்னவன் பூட்டிய மாங்கல்யம் இல்லாததை உணர்ந்து, பெருத்த ஏமாற்றத்துடன் முகத்தை கைகளில் புதைத்துக் கொண்டு அழுதாள்.

ஆனால்.. அவளுக்குள் அந்த நிலையிலும் சற்று பரவசம் பரவத் தான் செய்தது!

'இத்தனை நாளா கனவுல கூட எங்கயோ தூரத்துல இருந்து எனக்குத் தரிசனம் கொடுத்துட்டு இருந்த என் அழகரு.. இன்னைக்கு என் விருப்பப்படியே என் கழுத்துல தாலி கட்டி.. என்ன அவர் பொண்டாட்டியா ஏத்துக்கிட்டாரு..

என்னைக்கா இருந்தாலும் நான் உன்னத் தேடி வந்து கல்யாணம் கட்டிப்பேன்னு எனக்கு உணர்த்திட்டாரு..

இது போதுஞ்சாமி.. இது போதும்.. இந்த சென்மத்துக்கு மட்டுமில்ல.. இன்னும் எனக்கு ஏழு பிறப்பிருந்தாலும் சரி.. எழுபது பிறப்பிருந்தாலும் சரி! அத்தனைக்கும் இதுவே போதும்..' என்றவள் விழிகளில் இப்பொழுதும் கண்ணீர் தான்.. ஆனால் அதற்குக் காரணம், சோகமல்ல.. பரவசப் பேரானந்தம்!

இப்படியாய் செல்லி எண்ணி முடிக்கவும், கோவிலுக்கருகே குதிரையின் கனைப்பொலி கேட்கவும் சரியாய் இருந்தது!

கண்களில் காதல் மின்ன, கோவிலை நோக்கி ஓட்டமெடுத்தாள் செல்லி.

ஆனால், இவள் கோவிலை நோக்கிச் செல்லுகையில், அவளுடன் சேர்ந்து மொத்த ஊருமே ஏதேதோ பரபரப்பாகப் பேசிக் கொண்டு கோவிலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.

இவள் திகைத்துப் போய் அதைப் பார்க்க, அந்த ராத்திரி வேளையிலும் தள்ளாட்டத்துடன் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த பாட்டி ஒருவர்,

"ஏ புள்ள செல்லி.. என்ன இவ மசமசன்னு நடந்துட்டு கிடக்கறவ? வெரசா வா.." என்று கூறி அழைக்க, செல்லியோ..

"ஏய் கிழவி.. நான் வரது இருக்கட்டும்.. இப்போ நீங்க எல்லாம் எங்க போறீங்க இந்த அர்த்த ராத்திரில?" என்று குழப்பத்துடன் கேட்க, வயது கிடுகிடுத்தாலும், தன் வேகம் குறைக்காத அந்தக் கிழவி, ஒரு கணம் நின்று இவளையே கூர்ந்து பார்த்தது.

"ஏண்டி.. அப்போ விஷயம் என்னன்னு தெரியாமத் தானா நீ வந்துட்டு இருக்க?" என்று அதிசயத்துடன் அவர் கேட்க, செல்லியோ..

"அட புதிர் போடாத கிழவி.. எங்க போயிட்டு இருக்கீங்க எல்லாரும்? எதுக்கு ஊரே இப்படிக்கு களேபரமா கெடக்கு?" என்று கேட்டாள்.

அதற்கு அந்தக் கிழவியோ..

"நல்லா கேட்ட போ கேள்வி.. நம்ம ஊருக்கு வேண்டுதலுக்காக வந்திருக்க அமைச்சரோட வீட்டுலையே நம்ம கள்ளரு கை வச்சுப்போட்டாராம்டி.." என்று கிசுகிசுக்க.. செல்லிக்கோ பக்கென்றானது!

"என்ன கெழவி சொல்லற நீ?" என்று இவள் மீண்டுமாய் கேட்க, அதற்கு அந்தக் கிழவியோ..

"என்னத்த சொல்லறனா? இன்னும் சொல்லறேன் கேட்டுக்கோ.. கொள்ள போனது சாதாரண காசு, பணம் இல்லையாம்.. அந்த அமைச்சரோட குடும்ப சொத்தான, உசந்த ஜாதி வைரக்கல்லாம்..

விஷயம் கேள்விப்பட்டதுமே ஒரு போலீஸ் பட்டாலியனே ஊருக்குள்ள வந்து இறங்கிடுச்சு.. போலீஸ்காரனுங்க எல்லாம் வந்த தடபுடல்ல தான் ஊரே அலறிப்புடைச்சுக்கிட்டு எந்திருச்சுச்சு.

அட.. அந்த வைரக்கல்லு காணாமப் போன விஷயமே ரெண்டு போலீஸ்காரனுங்க பேசிக்கிட்டத்துல தாண்டி எனக்கே தெரிஞ்சுது.

இதுல அழகரு, குதிரை மேல கோவில் பக்கமா போனதா எவனோ ஒரு போலீஸ்காரன் பார்த்துருக்கான்.. அதனால தான் இப்போ மொத்த ஊரும் கோவிலுக்கு ஓடிக்கிட்டு இருக்கோம்." என்று கூறிச் செல்ல.. செல்லிக்கோ, தன் கனவில் வந்த அழகரின் கிரீடத்தில் வீற்றிருந்த ரத்தின வைரக் கல் கண் முன் வந்து போனது!

அங்கு கோவிலிலோ, செல்லியுடன் சேர்த்து மொத்த ஊர்சனமும் அங்கு வந்து சேர, அவர்களுக்கு முன்னதாகவே வந்து விட்ட போலீஸ் படை, கோவிலின் சுற்று மதிலின் அருகே கூடி நின்றிருந்தது.

அது என்னவென்று இன்னும் சற்று அருகே சென்று பார்க்கையில் அங்கு.. "ஹா! ஹா!! ஹா!!! தங்கப்பாண்டியா.. உரியவன் சொத்து.. இப்பொழுது உரியவனிடத்தில்! தேடாதே.." என்று எச்சரிப்பது போல எழுதியிருக்க, அந்த வாசகத்தின் கீழே..

"செல்லி.. இதோ உனக்கான சொத்து!" என்ற வாசகத்தின் அருகே ஒரு திருமாங்கல்யம் தொங்கிக்கொண்டிருந்தது!

தொடரும்..

சாரி செல்லங்களே.. மறுபடியும் மறுபடியும் ஒரே காரணம் தான்.. கிடைக்கற நேரத்துல எழுதிட்டு இருக்கேன்.. ரொம்ப ரொம்ப சாரி..

படிச்சுட்டு உங்க கருத்துக்களை என்கிட்ட பகிர்ந்துக்கோங்க..


தொடரும்..
 

Viba Visha

Moderator
அத்தியாயம் - 8

கோவிலின் சுவரில் எழுதியிருந்த வாசகத்தைப் பார்த்து ஊர் மக்கள் மட்டுமின்றி அங்கு குழுமியிருந்த காவலர்களுக்குள்ளும் பெரும் சலசலப்பு!

அந்த ஊருக்கு களவு புதிதல்ல.. ஆனால் இது? செல்லிக்கு அழகர் கொடுத்திருக்கும் அந்தத் தாலி?!

சுவரில் எழுதியிருந்ததையும், அந்தத் தாலியையும் பார்த்த செல்லிக்கு மயக்கமே வந்து கீழே சரிந்துவிட்டாள்.

அவளது இத்தனை வருட வாழ்க்கைக்குமான முழு அர்த்தமும் இதோ அவளது கண்களுக்கு முன்பாக தெரிவது போலிருந்தது!

கிருஷ்ணனின் மீராவாக கற்பனையில் அவனுடன் வாழ்ந்து, வெறும் காற்றிலே கரைந்துவிடும் கற்பூரமாக இல்லாமல்.. கண்ணனின் கோதையாக.. அவன் கரம் பிடிக்கும் ஆண்டாளாக தான் மாறிவிட்டதாகவும், தன் காதலும், ஆண்டவனது திருவுருவத்தின் முன்பு காண்பிக்கும் ஜோதி பிம்பமாக பிரகாசிப்பதாகத் தோன்றி அந்நொடியே அவனோடு கலந்துவிட்டது போலொரு பிரம்மை பெண்ணுக்கு!

ஆனால் அவளது அந்தக் கனவுலக ஏகாந்ததை களைக்கும் விதமாக, அங்கிருந்த காவலர்களில் ஒருவர் முன் வந்து, "இங்க செல்லி யாருமா? கரிகாலன் ஐயா கூப்பிடராரு.. வா." என்று கூறி விளிக்க, சற்று மருண்ட பார்வையுடன் காலாவுக்கு அருகே சென்றாள் செல்லி.

"சொல்லு.. யார் இந்தத் திருடன்?" என்று எடுத்ததும் அதிகாரத் தோரணையில் மிரட்டலாக காலா கேட்க சர்வாங்கமும் பதறிவிட்டது செல்லிக்கு.

"நா.. நா.. எனக்கு ஒன்னும் தெரியாது சார்.. ஆனா.. ஆனா.. இது சாமி தான் சார்.

நீங்க தப்பா நின்னாச்சு, தப்பான காரியம் செய்யத் துணியாதீங்க.." என்று பயந்த குரலில் செல்லி கூறவும், காலாவோ இழுத்துப் பிடித்த பொறுமையுடன் செல்லியிடம் பேசினான்.

"இங்க பாரும்மா.. இந்த ஊரே.. ஏன், இந்த உலகமே இவன கடவுள்ன்னு சத்தியம் அடிச்ச சொன்னாலும், அத நான் நம்ப மாட்டேன். இவன் ஒரு பக்காத் திருடன்னு எனக்குத் தெரியும்.

ஒன்னும் தெரியாத சின்ன பொண்ணு மாதிரி இன்னும் நீ என்கிட்ட நடிக்க வேணாம்.

உண்மைய சொல்லு.. இல்லைன்னா உன்ன லாக்கப்புல புடுச்சு தள்ளிடுவேன்." என்று ஐயனாராய் விழி இடுங்க, குரலுயர்த்தி காலா கேட்க, செல்லியின் தளிர் மேனியோ பயத்தில் வெடவெடுக்க ஆரம்பித்தது.

அந்த நேரத்தில் சட்டென செல்லியின் கரத்தைப் பற்றியது இன்னுமோர் பூந்தளிர் மென் கரம்!

"என்ன சார்? யார் கிட்ட என்ன பேசறேன்னு தெரிஞ்சு தான் பேசறீங்களா?" என்று செல்லிக்கு ஆதரவாக, அவளருகே வந்த மாதேவி குரலுயர்த்திக் கேட்க, காலாவுக்கு இன்னமும் எரிச்சல் மண்டியது.

ஆனாலும், அந்த எரிச்சலின் எங்கோ ஓர் ஓரத்தில் சற்று ரசனையும் பிறக்கத் தான் செய்தது!

ஆனாலும் இரண்டையுமே வெளிகாட்டிக் கொள்ளவில்லை காலா.

"என்னம்மா நீ இந்தப் பொண்ணுக்கு சப்போட்டா? சட்டத்துக்கு யாரா இருந்தாலும் ஒன்னு தான்.

என் கடமையை நான் செய்யறேன். அதுக்கு குறுக்க யாரும் வரக்கூடாது." என்று ஒரு போலீஸ் அதிகாரியாக காலா பேசவும் உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது மாதேவிக்கு.

"ஓஹோ.. அப்படியா சார்? அப்போ இதே திருடன் நாளைக்கு, 'ஆதித்த கரிகாலா.. நம்ம கொள்ளை அடிச்சதுல, உன்னோட பங்க உனக்கு அனுப்பிச்சுட்டேன்'னு இதே மாதிரி கோவில் செவுத்துல எழுதி வச்சிருந்தா, உடனே உங்களையும் அரெஸ்ட் பண்ணிடுவாங்களா?" என்று அவள் கேட்கவும், காலாவின் புருவங்கள் உயர்ந்தன!

"வாஸ்த்தவம் தான்.. பாயிண்ட்டு தான்! ஆனா, இந்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டுல 'ஏதோ ஒரு திருடன் என்னம்மோ எழுதிட்டான்.. அதுக்காக நாம ஆதித்த கரிகாலன எதுவும் கேட்கக் கூடாது'ன்னு இருக்க மாட்டாங்கம்மா.

என்னையும் விசாரிப்பாங்க. கமிஷன் வச்சே விசாரிப்பாங்க." என்று அவன் விம் பார் போட்டு விளக்கினாலும் விடுவதாய் இல்லை மாதேவி.

"விசாரிக்கலாம் சார்.. தப்பில்ல. ஆனா, ஒரு பொண்ண விசாரிக்கும் போது கூட ஒரு லேடி போலீஸ் இருக்கணும்னு உங்களுக்குத் தெரியாதா?

அதுவும் ராத்திரி நேரத்துல இப்படி ஒரு பொண்ண கூப்பிட்டு விசாரிக்கக் கூடாதுன்னு உங்க ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கலையா?" என்று அவள் ஏகத்துக்கும் வாறவும், காலாவோ கடுப்புடன் தலையைக் கோதிவிட்டுக் கொண்டான்.

"என்ன இப்போ? நீ என்ன இந்த காதலுக்கு சப்போட்டா? இவ்வளவு வக்காலத்து வாங்கற இந்தப் பொண்ணுக்கு?" என்று காலா எகிறவும், மாதேவிக்கோ கண்களில் கனல் வீசியது!

"காதலுக்கு சப்போட்டும் இல்ல.. ஒரு கண்ணராவியும் இல்ல.

இப்டி கண்மூடித் தனமா காதல், பக்தின்னு புலம்பிட்டு இருக்கற இன்னொரு பொண்ணு மேல வந்த பரிதாபம்.

அவளும் இந்தக் காதலால அவமானப்படக்கூடாதுன்னு நினச்சேன்.

இதோ.. இப்போ தேவையே இல்லாம அந்தத் திருடன், இவள இந்த விஷயத்துக்குள்ள இழுத்துவிட்டுட்டான். ஒரு பாவமும் செய்யாத இந்தப் பொண்ணு மனசு ரணமாகிடக் கூடாது." என்று கடுப்புடன் கூறியவளைப் பரிதாபத்துடன் பார்த்தான் காலா.

"செல்லி மாதிரி தான் நீயும் இருந்த இல்ல.. உன்ன மொத்தமா நான் அழிச்சுட்டேன்.." என்று குற்றஉணர்வுடன் காலா கூறிக் கொண்டிருக்கையிலேயே, "ஸ்டாப் இட்!" என்று கிறீச்சிட்டாள் மாதேவி!

"இங்க பாருங்க.. இப்போ நாம பேசிட்டு இருக்கறது செல்லி பத்தி.. இங்க என்ன பத்தி பேச எதுவும் இல்ல.. முக்கியமா நீங்க என்ன பத்தி நினைக்கறத கூட நான் விரும்பல.

செல்லிகிட்ட உங்களுக்கு ஏதாவது விசாரிக்கணும்னா, நாளைக்கு ஒரு லேடி போலீஸோட செல்லிய வந்து பாருங்க.

இப்போ உங்களோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவளுக்கு எந்த அவசியமும் இல்ல." என்று கூறியபடி, பற்றியிருந்த செல்லியின் கரத்தைப் பிடித்தபடியே அவளைக் கூட்டிக் கொண்டு நடந்தாள் மாதேவி.

கண்களில் வலியுடன், செல்லுபவர்களையே கால பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்குப் பின்னால் நின்றிருந்த இரு கான்ஸ்டபிள்களில் ஒருவன், "பாருடா.. நம்ம காலா சார.. இந்த ரணகளத்துலையும் பிட்டு பிட்டா போடறாரேடா.." என்று கேட்க,

அதற்கு மற்றொரு கான்ஸ்டபிளோ, "ஆனா என்ன பிட்டு போட்டாலும், எதுவும் நடக்கமாட்டீங்குதேடா.." என்று கூறினான்.

அது காலாவின் காதுகளில் விழுந்ததும் பின்னால் திரும்பி அவர்களை ஒரு முறைப்பு முறைக்க, அவர்களோ மெல்ல அங்கிருந்து சற்று விலகிக் கொண்டனர்.

அப்பொழுது கூட்டத்தில் சற்று மிரண்ட பார்வையுடன், கோவில் சுவரில் தொங்கிய தாலியையே பார்த்துக் கொண்டிருந்த இரும்பொறையின் அருகில் சென்றான் காலா.

மெல்ல அவனருகே சென்று மெதுவே அவன் தோளை கால தொட, விதிர்த்துப் போய் நடப்புக்கு வந்தான் இரும்பொறை!

"என்னடா திருட்டு முழி முழுச்சுட்டு இருக்க? நீயும் பயந்துட்டியா?" என்று இதமாகக் கேட்டான் கரிகாலன்.

அவனுக்குப் புரியாதா என்ன.. தன்னது என்று எண்ணியிருந்த பொருள் இப்பொழுது தன்னைவிட்டுப் போய்விடுமோ என்கிற பயம் எப்படி இருக்கும் என்று?

ஆம்.. இரும்பொறை, செல்லியை எவ்வளவு நேசிக்கிறான் என்பது அவன் அறிந்தது தானே?

என்னதான் செல்லி.. அந்த அழகர் தனக்கு கணவனாக வேண்டும் என்று தவமிருந்தாலும், அந்த கடவுளாவது.. வந்து கல்யாணம் செய்துக்கறதாவது என்ற மிதப்பில் தானே இத்தனை நாள் இருந்தான் இரும்பொறை?

இப்பொழுது ஊரே அழகர் என்று நினைக்கும் அந்தத் திருடன், இப்படி செல்லிக்கு தாலி கொடுத்துவிட்டுச் சென்றிருப்பதை பார்க்கையில் இரும்பொறைக்கு அடிவயிறு கலங்காதாமா என்ன?

அந்தக் கலக்கத்துடனே.. "அது சாமிண்ணே.." என்றான் வறண்ட குரலில், தூரத்து இருளை வெறித்தபடி!

"அடச்சே.. சாமியாவது.. மண்ணாவது.. ஒரு திருடன் ஒட்டுமொத்தமா இந்த ஊராய் ஆட்டிப் படச்சுட்டு இருக்கான்.. நீங்களும் அவன கடவுள்ன்னு நம்பிட்டு அவன் ஆடற ஆட்டத்துக்குல்லாம் ஆடிட்டு இருக்கீங்க..

இங்க பாரு காலா.. கடவுளாவே இருந்தாலும், காதலுக்கு முன்னாடி ஒன்னும் இல்ல.. உன் காதல் உனக்கு வந்து சேர்ந்தே ஆகும்.." என்று கால கூறவும், சட்டென.. "அப்பறம் ஏன் உங்க காதல் உங்களுக்கு கை கூடல?" என்று சுருக்கென்று கேட்டுவிட, அடர்ந்த மௌனம் காலாவிடம்!

தன்னை சமாளிக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டவன், சில பல வினாடிகளுக்குப் பின், "ஒரு வேள நான் அந்தக் காதலுக்கு தகுதி இல்லாதவனா இருக்கலாம்.. அதனால தான் என் காதல் என்னவிட்டு போய்டுச்சு.." என்று கரகரப்பான குரலில் கூறியவன், மீண்டும் ஒரு வினாடி மௌனத்திருக்குப் பின்பு..

"ஆனா நீ அப்படி இல்ல இரும்பொறை.. உன்னோடது சாதாரண காதலுக்கும் மேல.. சின்ன வயசுல் இருந்து நீ செல்லிய காதலிச்சுட்டு இருக்க. அந்தக் காதல் எப்படி தோத்து போகும்?" என்று இரும்பொறையின் காதலுக்காக அவனிடமே வாதாடினான் காலா.

ஆனால் அவனைப் பார்த்து விரக்தியாக சிரித்த இரும்பொறையோ.. "எனக்கு செல்லி மேல இருக்கற காதல விட.. செல்லிக்கு, அந்த அழகர் மேல இருக்கற காதல் பெருசுண்ணா.. அவளோடது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பக்தி!!

முட்டாள்தனமான காதல்!

அது அவளை தீயா எரிச்சலும், அதையே தித்திப்பா நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கா.. அந்தக் காதல் தோத்துப் போகனும்ன்னு நினைக்கறது கூட பாவமா தோனுது." என்று மிகவும் உருக்கமாக கூறினான் அவன்.

இவனையெல்லாம் இப்படி ஒற்றை பேச்சில் மாற்ற முடியாதென நினைத்த காலாவோ.. "நீ இப்படியே பேசிட்டு இரு.. ஆனா உன் காதல் ஜெயிக்கும்.. அத நான் பார்க்கத் தான் போறேன்.." என்று கூறி, அவனை வீட்டிற்கு அழைத்து சென்றான்.

தன்னுடனே இரும்பொறையை தங்க வைத்துக் கொண்டவனின் மனதிற்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள்.

இங்கு இவன் கூறுகின்றானே.. செல்லியினது, தெய்வத்தின் மீதான பக்தி! காதலையும் தாண்டிய நம்பிக்கை என்று.. அது போலத் தானே மாதேவியினதும்?!

என்னவோ நந்தினியிடம், "எனக்கு எங்க அம்மா, அப்பா தான் முக்கியம். அவங்கள என்னால விட முடியாது. அவங்க மனசு மாற உன்னால காத்திருக்கவும் முடியாது. அதனால நாம பிரியறது தான் நல்லது." என்று சட்டென்று கூறியவனால்.. மாதேவியை அப்படி நினைக்க இயலவில்லை.

ஆனால் அவளை, மணமேடையிலேயே அசிங்கப்படுத்தினான் தான்!

அதற்கு பின்னர், மாதேவி ஒடுங்கிப் போயிருந்தால் அவள் மீது இப்பொழுதிருக்கும் பிரம்மிப்பு வந்திருக்குமா என்று அவனுக்குத் தெரியவில்லை.

மாறாக.. அவள் மீது எழுந்த விஷயம் தான் அவனுக்குள் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது!

மறுபுறம் நந்தினி, காலாவைப் பழிவாங்கவென்று மிகவும் வயதான ஒருத்தனை, அதுவும் பணக்கார அமைச்சரை திருமணம் செய்துகொண்ட பொழுது மனதுக்குள் மிகவு நொந்து போனான் அவன்.

ஆனால் காலப்போக்கில் அவளை சொல்லியும் குற்றமில்லை.. அவள் நன்றாய் இருந்தால் போதும் என்று அந்த நினைப்பு மட்டுமே அவனுக்கு.

இப்பொழுது நந்தினியை மிக அருகில் பார்க்கும் போதும் கூட, அவளை நினைத்து குற்ற உணர்வு தானே ஒழிய, வேறொன்றுமில்லை.

ஆனால்.. மாதேவியைக் கிட்ட இருந்து பார்க்க பார்க்க.. காலாவின் காதலோ, அவள் மீது அசுர வேகமாய் வளர்ந்துகொண்டே போனது.

தன் மனதை எண்ணி அவனே வியக்கும் அளவிற்கு அவன் காதல் அவள் மீது வளர்ந்து கொண்டே போனது.

அவன் உண்மையாகவே நந்தினியைக் காதலித்தான் தான். ஆனால் என்று அவர்கள் இருவரும் பிரிந்தார்களோ.. அன்றே அந்தக் காதல் மறைந்துவிட்டது.

ஒரு காதல் தோல்வியடைந்தால், அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடும் என்று இல்லையே?

அடுத்த காதல், அவனது உயிரையே பிரட்டிப் போடும் அளவுக்கு மிக அரக்கத் தனமாக அவனை ஆட்டிப் படைத்தது.

ஆனால் அவளுக்கு, தான் செய்ததை எண்ணி உள்ளுக்குள் வேதனையுற்றவனால், மீண்டும் எப்படி மாதேவியிடம் சென்று தன் காதலை உரைப்பது என்று புரியவில்லை.

ஆனால் எப்படியாவது தன் மனதை அவளிடம் குறைத்துவிட வேண்டும் என்று வெகுநாளாகவே நினைத்துக் கொண்டிருந்தான் அவன்.

அதற்கான ஒரு சந்தர்ப்பமாக தான் மாதேவியின் பிறந்தநாள் வந்தது!

அவளது பிறந்தநாள் அன்று தான் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டியும், தன் காதலை அவளுக்கு புரிய வைத்துவிடும் விதமாகவும், அவளுக்கு ஒரு மிகச்சிறந்த பரிசு கொடுக்கவேண்டும் என்று மிகவும் தீவிரமாக யோசித்து ஒரு பரிசை வாங்கி வைத்திருந்தான்!

அந்த திருட்டு சம்பவம் நடந்ததற்கு மறுநாள் தான் மாதேவியின் பிறந்தநாள்!

என்ன தான் முந்தைய நாளின் குழப்பங்களெல்லாம் காலாவை மண்டை காய வைத்தாலும், மறுநாள் முற்றும் முழுமையாக, மாதேவியை மனதில் தாங்குபவனாக விழித்தெழுந்தான்.

எழுந்ததும் தனது மொபைலை எடுத்து பார்த்தவனது விழிகள் அதில் தெரிந்த தேதியில் சென்று நின்றது.

மையலுடன் விரித்த காலாவின் முறுவல், சற்று திகைத்துப் பின் மறைந்தது!

ஏனென்றால்.. அன்று தான் நந்தினியின் பிறந்தநாளும்!

தொடரும்..

இந்த அத்தியாயத்தைப் பற்றிய கருத்துக்களை என்னோட பகிர்ந்துக்கோங்க..


https://www.narumugainovels.com/index.php?threads/தீயே-நீயே-தித்திக்கின்றாயே-கருத்து-திரி.1146/

நட்புடன்,

விபா விஷா.
 
Status
Not open for further replies.
Top