எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக - அத்தியாயம் 9

NNK-64

Moderator

அத்தியாயம் 9​

நிரஞ்சன் அவளை நோக்கி “இங்கே பாரு அழகி, குழப்பத்தில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதாக இருக்காது, உனக்கு என்னோட உதவி எப்போதும் உண்டு, என்னால் முடிந்தவரை உனக்கு பக்கபலமாக இருப்பேன், அதற்கு நம் திருமணம் மட்டுமே முடிவாகாது.​

கோபாலனிடம் பலியாகாமல் தப்பிக்கும் சாமர்த்தியம் உன்னிடம் இருக்கிறது. அப்படியே உன் அப்பாவிடமும் உன் பிரச்சனையையும் கருத்தையும் துணிந்து சொல்ல பழகிக் கொள், இன்று நிர்மலாவிடம் சரியாகத்தானே பேசினாய். அதையே என்னுடைய உந்துதல் இல்லாமல் தேவைப்படும் சமயங்களில் உன் பக்க நியாயத்தை கூறினால் போதும். என்னுடைய உதவி தேவைப்படும் நேரங்களில் தயங்காமல் எனக்கு அழைக்கலாம்” என்று அவனுடைய விலாச அட்டையை மீண்டும் அவளிடம் கொடுத்தான்.​

எழிலுக்கு நிரஞ்சன் தன்னை ஒதுக்கி பேசியது போல இருந்தது. ஒரு வேளை அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ? இல்லை அவன் சொல்வது போல நான் தான் குழம்புகிறேனா? என்று மேலும் குழம்பியவள், “இப்போது நான் என்ன செய்வது நிரு?” என்றாள் அவனிடமே.​

“யோசி, உன் வாழ்க்கையை நீதானே முடிவு செய்யணும்” என்றான் அவன்​

“ஏன், இப்படி ஒட்டாமல் யாரோ போல பேசறீங்க? நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க நிரு” என்றாள் அவள் கண்கலங்க​

சற்று நேரம் யோசித்தவன் “நீ முன்னாடி வேலை செய்த அந்த ஐடி கம்பெனிக்கே தொடர்ந்து வேலைக்கு செல். உனக்கு எதாவது உதவி தேவைப்பட்டால் எப்போது வேண்டுமென்றாலும் என்னை அழைத்து பேசு, இப்போது கிளம்பலாமா?” என்றான்​

எழிலழகிக்கு எதையோ இழந்தது போல மனது பாரமாக இருந்தது. இத்தனை நாள் தன்னிடம் அவ்வளவு உரிமையாக பேசுபவன், தன் நலனை பாதுகாக்க நினைப்பவன், திருமணம் என்றதும் என்னை தவிர்க்க பார்க்கிறானே? என்று கவலையாக இருந்தது.​

கடற்கரை மணலை தட்டிவிட்டபடி எழுந்தவளை, “அழகி, வா அன்னம்மாவிடம் போய் பேசிவிட்டு கிளம்புவோம்” என்றான்.​

அவளை கண்டதும் அன்னம்மா மகிழ்ச்சியாக வரவேற்றாள், “தாயீ எழிலு, இத்தனி நாளா எங்கே போயிருந்த? உன்னை காணாம டாக்டரு எவ்வளவு தவிச்சு போயிட்டாரு தெரியுமா? முகத்தில் தாடி கூட மழிக்காமல் எதையோ இழந்தவர் போல.. என்று அவள் பேசிக்கொண்டே போக..​

எழிலழகி விழி விரித்து நிரஞ்சனை அப்படியா? என்பது போல பார்த்தாள். “அன்னம்மா” என்று சத்தமாக அழைத்தான் நிரஞ்சன். எப்போதும் அப்படி கத்தி அழைத்திருக்காததால் தன் பேச்சை நிறுத்தி என்னவென்று பார்த்தாள் அன்னம்மா.​

எதையும் பேச வேண்டாம் என்று கண்களால் அவளுக்கு சைகை செய்தவன், “எனக்கு பசிக்குது, கொஞ்சம் சாப்பிட எதாவது தருகிறாயா?” என்றான்.​

அவன் குறிப்புணர்ந்து அன்னம்மாளும் பேச்சை அத்தோடு நிறுத்தி, அவர்களுக்கு சாப்பிட கொடுத்தாள். “அப்புறம் என்ன ஆச்சு அன்னம்மா’’ என்று கேட்டாள் எழிலழகி.​

“உன் அலைபேசி அணைத்து வைக்கப் பட்டு இருந்தபோது அன்னம்மா விடம் விசாரித்தேன், அதை தான் சொல்றாங்க” என்று அந்த பேச்சை முடித்தான் நிரஞ்சன்.​

எழிலழகி அன்னம்மாவை பார்த்தாள், இன்னும் அதில் விஷயம் இருப்பதாக தோன்றியது. நிரஞ்சன் சாப்பிட்டு கிளம்பவும் வேண்டுமென்றே தாமதமாக சாப்பிட்டாள், “நீங்கள் காரில் ஏறி உட்காருங்க, நான் பின்னாடியே வருகிறேன்” என்றாள்.​

அவனுக்கும் அலைபேசியில் அழைப்பு வரவும் முன்னால் நடந்து சென்றான். “அன்னம்மா அக்கா இப்போது சொல்லுங்க, என்ன நடந்தது, நிரு என்ன சொன்னார்” என்றாள்.​

“அதை ஏன் கேட்கிற, நீ கிடைக்காம போனதும் தேவதாஸ் கணக்கா சுத்திட்டு இருந்தாரு. அவரை இதுக்கு முன்னாடி நான் அப்படி பார்த்ததேயில்லை. நம்ம கடைக்கு வரும் கஸ்டமருங்க சொன்னாங்க, ‘’என்ன உன் பிரண்ட் டாக்டர் எப்பவும் புக் ஸ்டார், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில், கடற்கரைனு எப்பவும் சுத்திட்டு இருக்காரு, யாரையாச்சும் லவ் பண்றாரா என்னனு கேட்டாங்க” என்றாள்.​

எழிலழகியின் உடல் பரவசத்தில் சிலிர்த்தது.​

“அம்மா அப்பா இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்து, சுயம்புவாக முன்னேறியவர், நீதான் அவருக்கு ஏற்ற ஜோடி, சீக்கிரம் அவரை கண்ணாலம் பண்ணிக்கோ கண்ணு” என்று அவள் கன்னத்தை வருடினாள் அன்னம்மா.​

எழிலழகியின் முகம் வெட்கத்தில் சிவந்தது. இவ்வளவு காதலை தனக்குள் வைத்து கொண்டு ஏன் என்னை தவிர்ப்பது போல பேசினான்?​

அன்னம்மா விடம் விடைப்பெற்றுக் கொண்டு அவன் அருகில் சென்று நின்றாள். நான் அவன் உயரத்திற்கு சரியாக இருப்பேனா என்று தோன்ற இருவருக்கும் இடையே உயரத்தை ஒப்பீடு செய்து பார்த்தாள்.​

நிரஞ்சன் அலைபேசியில் பேசிக் கொண்டே என்ன என்பது போல புருவம் உயர்த்தி கேட்கவும், எங்கே அவள் செயலை அவன் கண்டு கொண்டானோ என்று குப்பென்று முகம் சிவக்க ஒன்றுமில்லை என்பது போல தலையை இடம் வலமாக ஆட்டி விட்டு குனிந்து கொண்டாள்.​

என்ன நடந்தது என்று இப்போது இப்படி வெட்கப் படுகிறாள் என்று குழம்பினான். ஏதோ முதல் முறையாக அவனைப் பார்த்து வெட்கப் படுவது அவனுக்கும் புதிய அனுபவமாக இருந்தது.​

காரில் ஏறி அமர்ந்து பின்னும் அவனறியாமல் அவனை பார்த்தாள். நல்ல உயரம், கோதுமை நிறம், வசிகரமான முகம், ஆளுமையான தோற்றம், அளவான மீசை, சிறிது நாட்களாக மழிக்கப்படாத தாடி என அனைத்து பெண்களையும் கவரும்படியான தோற்றம் என்று அவன் அவளை கவனிப்பதும் அறியாமல் ஆவென பார்த்து கொண்டிருந்தாள்.​

“என்ன அழகி, தேறுவேனா? எத்தனை மார்க் எனக்கு?” என்று கேட்டான் புன்னகையுடன்.​

அய்யோ அவள் பார்த்ததை பார்த்து விட்டானா? முகம் ரத்தமென சிவந்தது. அவனை நிமிர்ந்து பார்க்கவே நாணம் தடுக்க கார் கண்ணாடி வழியே வெளியே பார்வையை செலுத்தினாள்.​

அப்போதும் அவள் கன்ன கதுப்புகளின் சிவப்பும் அவள் மேனியின் சிலிர்ப்பும் அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை.​

அவள் திருமணம் செய்து கொள்ள கேட்ட போது கூட அவன் மனம் சந்தோஷப்படவில்லை. ஆனால் அவன் சாதாரணமாக தேறுவேனா என்று கேட்டதற்கே இப்படி வெட்கப் படுகிறாள். முதல் முறையாக அவனை வேறு கோணத்தில் பார்த்திருக்கிறாள். இப்போது நிரஞ்சனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.​

அவளை ஆர்வமாக பார்த்துக் கொண்டே காரை செலுத்தினான். அவளோ அவன் பக்கம் திரும்பவே இல்லை.​

காரை ஓரமாக நிறுத்தி “அழகி” என்றான்​

“அழகி, இங்கே பாரேன்” என்றான்​

அவள் மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள், அவளை ஆழ்ந்து பார்த்தான், அவள் கண்களோடு அவன் கண்களை கலக்க விட்டான். அவனின் பார்வை அவள் அடிவயிற்றில் சில்லிட்டது. இது வரை அவனோடு பயணித்த சமயங்களில் இப்படி எல்லாம் தோன்றியதே இல்லை, இன்று மட்டும் அவன் பார்வை ஏன் இன்ப அவஸ்தையை தருகிறது?​

அவன் பார்வையின் கூர்மையை அதற்கு மேலும் தாங்க முடியாமல் உடல் சிலிர்த்து முகம் செவ்வானமாக சிவந்தது, “போங்க நிரு” என்று அவள் முகத்தை தன் இரு கைகளாலும் மூடிக்கொண்டாள்.​

“ஏய் அழகி, நான் ஒன்றுமே செய்யலையே, இதுக்கே இப்படி வெட்கப்பட்டால் எப்படி?” என்றான் அவள் காதில் கிறக்கமாக​

“சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளலாமா?” என்றான்.​

இப்போது அவனை நிமிர்ந்து பார்த்தவள், “கொஞ்ச முன்னாடி நான் திருமணம் பற்றி பேசியதை பெரிது படுத்தவே இல்லை, இப்போது என்ன திடீர் மாற்றம்?” என்று கேட்டாள்​

“நீ இப்போது மாதிரி கண்களில் காதலுடன் என்னைப் பார்த்து கேட்டு இருந்தால், வா இப்பவே போய் கல்யாணம் செய்துக்கலாம்னு சொல்லி இருப்பேன்” என்றான் புன்னகையுடன்.​

“என் கண்ணில் காதல் இப்போது மட்டும் எப்படி தெரிந்தது உங்களுக்கு?” என்று கேட்டாள்.​

என்னை ஒரு ஐந்து நிமிடம் பாரு, எப்படி என்று காட்டுகிறேன் என்றான். தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவள் அவன் கண்களை பார்த்தாள்.​

அவனோ அவளைத் தன் கண்களால் சிறை பிடித்தான். சிறு தொடுகையும் இல்லாமல் அவன் பார்வை அவள் உயிர் வரை ஊடுருவி சென்றது. அவன் பார்வை அவளுக்கு எதையோ உணர்த்த, அது இன்னது என்று புரியாவிட்டாலும் வெட்கம் பிடுங்கி தின்றது. முகம், உடல் எல்லாம் சூடேறி சிவந்தது.​

அதை மறைக்க அவன் நெஞ்சத்தில் தஞ்சம் போக தன்னிச்சையாக எழுந்த எண்ணத்தை கஷ்டப்பட்டு அடக்கினாள். அதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியாமல் முகத்தை ஜன்னல் புறமாக திருப்பிக் கொண்டாள்.​

அவனோ உல்லாசமாக சிரித்து, “இப்போ தெரியுதா வித்தியாசம்?” என்றான்.​

அவள் வெட்கத்துடன், “போங்க நிரு, நீங்க மோசம்” என்று சிணுங்கினாள்.​

அவள் சிணுங்கலை பார்த்து நிரஞ்சனின் கை அவளை அணைத்துக் கொள்ள பரபரத்தது. இதற்கு மேல் தாமதித்தால் நல்லது இல்லை என்று தோன்ற தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர பெரிய மூச்சுக்களை எடுத்துக் விட்டு பின்பு காரை செலுத்தினான்.​

அதன் பிறகு அவள்பக்கம் திரும்பாமல் காரை வேகமாக செலுத்தினான். எழிலழகி புரியாமல் அவனை பார்த்து கொண்டிருந்தாள். அவள் ஊர் எல்லையில் காரை நிறுத்தினான்.​

“அழகி பத்திரமாக வீட்டிற்கு போ, எதாவது பிரச்சினை என்றால் எனக்கு அழைத்து பேசு, சரியா? முதலில் உன் வீட்டு விலாசத்தை கொடு”என்றான்.​

“விலாசத்தை கொடுத்துவிட்டு, ஏன் இப்போ கொஞ்சம் நேரம் என்னை பார்க்காமல் உர்ரென்று எதுவும் பேசாமல் வந்தீங்க?” என்றாள் குற்றம் சாட்டும் குரலில்​

“அழகி நானும் சராசரி மனிதன் தான், ஓரளவுக்கு மேல் உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாமல் உன் மேல் நான் கை வைக்க போக, அய்யோ என்னை எதும் செய்திடாதீங்க என்று நீ பாட்டுக்கு கத்தி கூப்பாடு போட்டால் என்ன செய்வது? அது தான் என்னை கட்டுப்படுத்திட்டு வந்தேன்.​

எதுவாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு என்று நினைத்து கொண்டு இருக்கேன். என்னை ரொம்பவும் சோதிக்காமல் சீக்கிரம் கிளம்பு” என்றான் நிரஞ்சன்.​

“ஒரு டாக்டர் இப்படி எல்லாம் பேசலாமா?” என்றாள் பழிப்பு காட்டி​

“இதற்கு மேலும் பேசுவேன், என் மனைவி ஆன பிறகு” என்று கண் சிமிட்டினான்.​

அவள் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே காரை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள்.​

(தொடரும்)​

 

Attachments

  • Screenshot 2024-01-23 184906.jpg
    Screenshot 2024-01-23 184906.jpg
    96.1 KB · Views: 0

Advi

Well-known member
பரவால்ல அன்னம்மா புண்ணியம் கட்டிகிட்டாங்க.....

நிரு உன் நேர்மை ரொம்ப பிடிச்சி இருக்கு டா🥰🥰🥰🥰
 

NNK-64

Moderator
பரவால்ல அன்னம்மா புண்ணியம் கட்டிகிட்டாங்க.....

நிரு உன் நேர்மை ரொம்ப பிடிச்சி இருக்கு டா🥰🥰🥰🥰
Thank you sis 💕
 

Mathykarthy

Well-known member
அழகிக்கு பல்பு எரிஞ்சுடுச்சு..... 🤪
ஒருவழியா நிரஞ்சன் எதிர்பார்த்த காதலும் வந்துடுச்சு... 🥰
Lovely update ❤️
 

santhinagaraj

Active member
அழகிக்கு அன்னம்மா ஒரு வழியா நிரஞ்சன் மனச புரிய வச்சிட்டாங்க.
சூப்பர் 😍😍😍
 
Top