எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மிஞ்சியின் முத்தங்கள் - கதை திரி 5

Status
Not open for further replies.

NNK-50

Moderator
மிஞ்சியின் முத்தங்கள் - 5

1706632100900.jpeg


அதிவீரன் தன் உழைப்பில் தனக்கென்று வாங்கிக்கொண்டது அந்தக் கடையை மட்டுமே, ஒரு சூப்பர் மார்க்கெட் கொஞ்சம் பெரிதாக இருந்த கடையை வாங்கி மாற்றங்கள் செய்துகொண்டான்.

அணைத்து பொருட்களும் கிடைக்கும், பெரிதாகக் கடைகள் அங்கே இல்லாத நிலையில் அவனின் கடை நன்றாகவே சென்றது, கடையைத் தந்தையின் பொறுப்பிலே விட்டிருந்தான் மாதா மாதம் செலவுக்கென்று அவன் அனுப்பும் பணத்தையும் அவரே வாங்கினார்.

கடை தொடங்கியபிறகு இரண்டு வருடமாக மளிகை பொருட்கள் கடையில் இருந்தே வீட்டிற்கு செல்கிறது, கணக்கில் பல திருட்டுத்தனங்களும் செய்துவைத்தார் ராஜவேலு.

மகன் அனுப்பும் பணத்திலும் அவரிடம் யாரும் கணக்கு கேட்பதில்லை என்பதால் அவர் கையிலிருந்து யாருக்கும் பணம் போகாது என்ன தேவையென்றாலும் அவரிடம் கூற வேண்டும் அவரே வாங்கிவருவார், பார்வதி இதையெல்லாம் மகனிடம் கூறுவதில்லை.

ஊருக்கு வந்துசெல்லும்போது தாயின் கையில் தனியாகக் கொஞ்சம் பணத்தை கொடுத்துச்செல்வான் அதிவீரன் “இது உங்களுக்கு மட்டும்… வீட்டு செலவுக்கு நான் தனியா அனுப்புறேன் அதனால இதை வேற எந்தச் செலவுக்கும் நீங்க எடுக்கக் கூடாது, உங்க தேவைக்கு அவர்கிட்ட கைநீட்டாதீங்கம்மா” என்று கூறி கொடுத்துச் செல்வான்.

இன்றுவரை பார்வதி தன்னுடைய தனிப்பட்ட செலவுக்கு ராஜவேலுவிடம் கேட்பதில்லை கோவில் போவது பூஜைக்குக் கொடுப்பது பூ, புடவை எடுப்பது என்று அவரே வாங்கிக்கொள்வார் அதிகம் செலவு செய்வதில்லை மிச்சம்வரும் பணத்தை அப்படியே வைத்துக்கொள்வார்.

‘தந்தை பொய் கணக்கு எழுதுகிறார்’ என்று தெரியும் இன்றுவரை அதைப்பற்றியெல்லாம் பெரிதாக நினைத்ததில்லை, இங்கேயே வந்துவிட்டபிறகு பார்த்துக்கொள்ளலாம் இப்பொழுது கேட்டு அது ஒரு பிரச்சனையாக வேண்டாம் என்று அமைதியாக இருந்தான்.

வந்து ஒருவாரத்திற்கு பிறகு ஒரு மாலை கடைக்குச் சென்றான், அங்கே வேலை செய்யும் இருவருமே நன்றாகத் தெரிந்த பிள்ளைகள், இங்கே நடப்பதை பார்த்திபனிடம் அவர்கள் கூற அது அதிவீரனின் செவியில் சென்று சேர்ந்துவிடும், அனைத்தும் அறிந்தாலும் கண்டும் காணாமலும் இருந்தான்.

“அண்ணே!! என்ன இன்னைக்குத்தான் வரீங்க” என்றார்கள் இருவரும்.

அவர்களுக்கென்று வாங்கிவந்த பரிசை அவர்களிடம் கொடுத்தவன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான், இருவரும் பொறுப்பாகக் கடையைப் பார்த்துக்கொள்வதை கவனித்தான் தந்தை கடையில் இருப்பார் என்று எண்ணியே வந்தது அவன் வந்து ஒருமணிநேரம் கடந்தும் அவரைக் காணவில்லை.

கணக்கு புஸ்தகத்தை எடுத்து அமர்ந்துவிட்டான் பார்க்கப் பார்க்க அவனுக்கே தலை சுற்றியது என்ன செய்து வைத்திருக்கிறார் என்று, சொந்த மகனின் உழைப்பை திருடுகிறோம் என்ற எண்ணம்கூட இல்லையா இந்த மனிதனுக்கு என்று வருத்தமாக இருந்தது.

“அப்பா எப்போ கடைக்கு வருவார்” என்று கேட்க.

“வரமாட்டார் காலைல கடை தொறக்கும்போது வருவார் அப்புறம் தோணுச்சுனா சாயந்திரம் வருவார்” என்றனர்.

“சரி எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு அப்பா வந்தா நான் வந்துட்டுபோனேன்னு சொல்ல வேண்டாம்” என்றவன் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.

அவன் சென்றபிறகு வந்த ராஜவேலு மூன்று பாக்கெட் பன்னீரும் ஒரு கிலோ முந்திரிப்பருப்பும் வீட்டிற்கு தேவை என்று கூறி எடுத்துக்கொண்டு கணக்கு எழுதினார், கடையை அடைத்துவிட்டு சாவியை வீட்டில் கொடுக்கச்சொல்லி சென்றார்.

எப்பொழுதும் நடப்பது என்பதால் அவர்களும் சரி என்றுவிட்டனர், மறுநாள் காலைக் கடைக்கு வந்தவன் எடுக்கப்பட்டிருக்கும் பொருளைப் பார்த்துவிட்டு யோசனையானான், காரணம்… இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு வந்த ராஜவேலு வெறும்கையை வீசிக்கொண்டே வந்தார், அப்படியென்றால் அந்தப் பன்னீரும் முந்திரியும் எங்குச் சென்றது என்ற யோசனை ஓடியது.

ஆதவனின் திருமணம் முடியட்டும் பிறகு பார்ப்போம் என்று அப்பொழுது அதைத் தள்ளிவைத்தான், அன்று மாலை திருமண செலவுகள் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்து கொண்டுவந்தான் ஆதவன்.

முதல் விஷயமாக ‘கல்யாணம் பெண்வீட்டின் செலவு’ என்று ஆதவன் கூற.

“பொண்ணு தனியா தாலிக்கட்டிக்க போகுதா” என்ற அதிவீரன் “கல்யாண செலவு பாதி பாதி” என்றான்.

“அதெப்படி பொண்ணுக்கு சீதனமா ஒன்னும் தரப்போறதில்ல அதோட கல்யாண செலவும் ஏத்துக்கணுமா” என்று கத்திக்கொண்டிருந்த தந்தையை திரும்பியும் பார்க்கவில்லை இவன்.

ஆதவன் தம்பியைப் பார்க்க அவன் பார்வை அண்ணனின் மீதே இருந்தது “சரி பாதி பாதி” என்றவன் மற்ற செலவுகளை வாசிக்க அனைவரும் அமைதியாக இருந்தனர் “கிட்டத்தட்ட செலவு பத்து லக்ஷம் ஆகுது, கல்யாண செலவு தனியா அவங்ககிட்ட கேட்டுப் பாதியை குடுத்திடலாம்” என்றான் ஆதவன்.

“சரி துணி எடுக்க, நகை எடுக்க அம்மாகூட அக்காவையும் கூப்பிட்டுக்கோ, பத்திரிக்கை வைக்க நானும் போறேன் எனக்குப் பாதி குடுத்துடுங்க” என்றவன் அமைதியாகப் போன் பார்த்து அமர்ந்திருக்க.

“என்ன வீரா ஒண்ணுமே சொல்லமாட்ற” என்றான் ஆதவன்.

“என்ன சொல்லணும்?”.

“கல்யாணத்துக்கு எப்படியும் பத்து லக்ஷம் கிட்ட தேவைப்படும்”.

“அதான் சொல்லிட்டியே அதுக்கு என்ன!”.

“இல்ல எவ்ளோ குடுப்ப, எப்போ குடுப்பன்னு தெரிஞ்சா நல்லாயிருக்கும்”.

“நான் எதுக்கு குடுக்கணும்?” என்றான் அதிவீரன்.

“என்ன இப்படி கேக்குற? இவ்ளோ காசு நான் எப்படி செலவு பண்ண, ஒரு ரெண்டு மூணு லக்ஷம் வேணும்னா நான் போட முடியும் அதுக்குமேல என்கிட்டே இல்ல” என்றான் ஆதவன்.

“சரி அப்போ ரெண்டு மூணு லச்சத்துல கல்யாணத்தை முடிச்சுடு, நம்ம சக்திக்கு மீறி ஏன் செய்யணும்” என்றான் ஆதவன் அதிர்ச்சியோடு தந்தையை துணைக்கு அழைத்தான் பேசச்சொல்லி.

“என்ன பேசுற? அவனால எப்படி இவ்ளோ கொடுக்க முடியும் உனக்கு நல்ல சம்பளம் இருக்கே பாதி பணம் நீ குடு மீதி அவன் எப்படியாவது ஏற்பாடு பண்ணுவான்” என்றவரை வெறுப்போடு பார்த்துநிற்க.

“என்ன பேசுறீங்க நீங்க… மூத்தவன் இருக்கும்போது இந்தக் குடும்பத்துக்காக எங்கேயோ போய்க் கிடந்து கஷ்டப்படுறான் எல்லா பாரத்தையும் அவன் தலைல போட்டாச்சு, லட்சுமி கல்யாணத்தை முழுசா அவன்தானே செஞ்சான், இதை எதுக்கு அவன் செய்யணும் தம்பி கல்யாணத்துக்கு அண்ணன் செஞ்சு கேள்விப்பட்டிருக்கேன் இங்கதான் எல்லாம் புதுசா நடக்குது” என்று கூறிக்கொண்டே உள்ளே ஹாலின் நடுவில் வந்து நின்றார் பார்த்திபன்.

“இது எங்க குடும்ப விஷயம் நாங்க பேசிக்குறோம்” என்றார் ராஜவேலு.

“மச்சான் என் அக்காவை நீங்கக் கட்டினதோட முடியல, உங்க தங்கச்சி என் பொண்டாட்டி அதை மறந்துடாதீங்க” என்க.

‘அதை வெச்சுத்தானே வேதாளம் மாதிரி என் முதுகுல தொங்குற’ என்று மனதில் எண்ணிக்கொண்டார் ராஜவேலு

“கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம், அந்தக் கதையால்ல இருக்கு உன் மவன் பண்றது என்ன ஏதுன்னு கேக்கமாட்டியா” என்ற தம்பியைப் பாவமாகப் பார்த்துநின்றார் பார்வதி.

“மாமா விடு யார் என்ன சொன்னாலும் என்கிட்டே காசு இல்ல உங்களால முடிஞ்சா சிக்கனமா கல்யாணம் செய்ங்க இல்ல காசு சேர்ற வரைக்கும் வெயிட் பண்ணி கல்யாணத்தை நடத்துங்க” என்று மாமானுடன் வெளியேறினான்.

இறுதியில் வேறு வழி இல்லாமல் ரிசெப்ஷன் வைப்பதை கேன்சல் செய்தான் ஆதவன், ஆடம்பர செலவுகளைக் குரைத்தான்.

நிர்மலாவிடம் பேச அவள் பெற்றோர் மிகுந்த கோபத்தில் இருப்பதாகக் கூறியவள் அவர்கள் பேசியதை அப்படியே அவனிடம் பகிர்ந்தாள்.

“மாப்பிளையை தேடிக்கொண்ட உனக்குப் பதிவுத் திருமணம் செய்யவும் தெரியும் எங்களை அதிகாரம் செய்ய நினைத்தால் உனக்குத் தர நினைத்த நகை பணம் அனைத்தயும் நாங்களே வைத்துக்கொள்வோம், இவ்ளோ நாள் நீ பண்ணதெல்லாம் பொண்ணாச்சேன்னு பொறுத்துக்கிட்டோம் எப்போ எங்களை நீ இந்தளவுக்கு கேவலமா நினச்சுட்டியோ இனிமே நாங்களும் அப்படியே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்”.

“கல்யாணம் கோவில்ல வெச்சுதான் பண்ணுவோம் உன் மாப்பிள வீட்ல முடியாதுன்னு சொன்னாங்கன்னா நீயே போய் நல்ல மண்டபமா பாத்து நடத்திக்கோ, உனக்கு வேணும்னா நாங்க வந்து பெத்தவங்களா நிக்குறோம், வேண்டாம்ன்னா அதும் எங்களுக்கு நல்லதுதான் பட்டுசேலை பட்டு வேஷ்டி எடுக்குற காசு மிச்சம்” என்று அவள் தலையில் இடியை இறக்கி இருந்தனர்.

‘அதுவும் போச்சா’ என்றெண்ணியவன் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியானான்.

‘இவள் இங்கு என்ன செய்கிறாள்’ என்ற யோசனையோடு பஸ் ஸ்டாப்பின் அருகில் இருந்த மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தியவன் அந்தப் பக்கம் நின்றிருந்த கொடிமலரை நோக்கிச் சென்றான்.

“இங்க என்ன பண்ற” என்ற குரலில் பதறித் திரும்பியவள் அவனைப் பார்த்துத் திரு திரு என்று விழித்தாள்.

“என்னாச்சு?” என்றவனிடம் என்ன சொல்ல என்று தெரியாமல் கையைப் பிசைந்தாள்.

“யாரு மலர்” என்று பின்னில் வந்து நின்றவனை ஆராய்ச்சியாய்ப் பார்த்தான் அதிவீரன்.

“சித்தப்பா பையன்” என்றாள் உடனே.

“சரி இங்க என்ன பண்றீங்க” என்றான் மீண்டும்.

அவள் ஒன்றும் கூறாமல் நின்றாள், எந்த அதிகாரத்தில் அவளிடம் கேள்விகேட்க? தனக்கு அந்த உரிமை இல்லை என்பது புரிந்தது, என்றாலும் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக்கொள்ள கூடாதே என்ற தவிப்பும் இருந்தது.

“அண்ணாக்கு பொண்ணு பாக்க வந்தோம்” என்றாள் அவசரமாக, அவன் ஆச்சர்யமாக அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“உங்க அண்ணா வந்துருக்காரா! நீ தனியா வந்திருக்கேன்னு நினச்சேன்” என்றான் கொஞ்சம் நிம்மதியோடு, அந்த நிம்மதியை அப்பொழுதே உடைந்தெறிந்தாள் ‘தனியாத்தான் வந்தேன்’ என்று.

அவன் அமைதியாக நின்றிருந்தான் அவளே சொல்லட்டுமென்று “தரகர்கிட்ட சொல்லிவெச்சிருந்தோம், இங்க கோர்ட்ல டைபிஸ்ட்டா இருக்காங்க வந்து பாருங்க சொன்னாரு அதுக்குத்தான் வந்தோம்” என்றாள்.

“சரி பாத்துட்டிங்களா” என்க.

“ஹ்ம்ம்… ஆனா அவங்க அண்ணனை வந்து பேசச் சொல்லுன்னு சொல்றாங்க, அண்ணண் போட்டோ பாத்து அவங்களுக்கு பிடிச்சுடுச்சுன்னா எப்படியாது அண்ணன்கிட்ட பேசலாம்னு நெனச்சேன்”.

“ஏன் இப்போ என்னாச்சு?” என்க.

“சின்ன அண்ணண் அந்த வீட்லதான் இருக்கும்ன்னு சொன்னா… முடியாது சொல்றாங்க, ஏற்கனவே லேட்டா கல்யாணம் ஆகுது இதுல தம்பியைக் கூடவே வெச்சு பாத்துகிட்டு அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு அக்கா தங்கச்சின்னு சீர் செஞ்சுக்கிட்டே இருக்கணுமான்னு கேக்குறாங்க” என்றபோது கன்னங்களைத் தாண்டி வழித்தது கண்ணீர் துளிகள்.

“இப்போ ஏன் அழற” என்றான் அவளை நெருங்கி ஆறுதல்சொல்ல முடியா வேதனையில்.

“நான் பொறக்காம இருந்திருந்தா அவங்களுக்கு எப்போவோ கல்யாணம் ஆயிருக்கும் என்னாலதான்” என்று மனம் வருந்தி அழுபவளை அப்படியே அள்ளிக்கொள்ள தோன்றியது.

அண்ணன்களுக்கு எப்படியாவது துணையை கண்டுபிடித்து அவர்கள் திருமணத்தை நடத்த அவளும் முயல்கிறாள் எதுவும் சரியாக வரவில்லை.

“எங்களுக்குக் கல்யாணம்லாம் வேண்டாம் பாப்பா அதெல்லாம் சரியா வராது, அதுல விருப்பமும் இல்ல, வரவங்களுக்கு ஏகப்பட்ட கனவு இருக்கும் அதுக்காக எங்க அக்கா தங்கச்சிங்கள விட முடியாது, நீங்கதான் எங்க குடும்பம் உனக்கு ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணனும்”.

“பக்கத்திலேயே இருக்கணும் உன்னைத் தூரமா கட்டிக்குடுத்துட்டு எங்களால இருக்க முடியாது” என்று அவளைப் பற்றி மட்டுமே யோசிக்கும் அவர்களுக்குத் தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற வருத்தம் நெஞ்சம் நிறைய உண்டு கொடிமலருக்கு.

‘யாரவது ஒருவர் இந்தக் குடும்பம் பிடித்திருக்கிறது என்று கூறிவிட மாட்டார்களா அண்ணன்களுக்குத் திருமணம் நடந்துவிடாதா’ என்று அவளும் காத்திருக்கிறாள்.

“இங்கபாரு அழாம வீட்டுக்குப் போ, இனிமே இந்த மாதிரி எங்கேயும் போகக் கூடாது என்ன பண்ணாலம்னு பாக்குறேன்” என்றான் அவளிடம்.

அந்த வார்த்தைகள் அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது ‘உண்மையா’ என்றது அவள் விழிகள் “உண்மையா ஏதாவது பண்றேன் நம்பு” என்க.

“சரி” என்றாள் சம்மதமாக.

அவர்கள் இருவரையும் பஸ்சில் அனுப்பிவிட்டு தொடர்ந்து சென்றான், சித்தப்பா மகனிடம் அதிவீரனை பார்த்ததை இப்பொழுது யாரிடமும் கூற வேண்டாம் என்று சொல்லிவிட அவனும் சம்மத்துவிட்டான்.

திருமணத்திற்கு சம்மதிப்பார்களா என்று தெரியவில்லை என்றாலும் முயன்று பார்த்துவிடுவது என்று தீர்மானித்துவிட்டான், கொடிமலருக்கு அதிவீரன் கொடுத்த முதல் நம்பிக்கை அது பொய்த்துப்போவதை அவன் விரும்பவில்லை.

 

Advi

Well-known member
எவ்ளோ சுயநலம் ஆதவன், ஆன சரியா கொடுத்தான் அதி👏👏👏👏

வேலு, செகண்ட் சேனல் ஏதும் இருக்கா என்ன????

சந்தேகமா தான் இருக்கு....

நிம்மி, ஆப்பு வெச்சிட்டாங்க உன் மம்மி 🤣🤣🤣🤣🤣

நீ கேளு அதி, உனக்கு தரமலா.....
 
அவன் அப்பா, அண்ணா எவ்வளவு சுயநலமா இருக்காங்க!!!... எப்படி அண்ணனுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து கல்யாணம் செஞ்சு வைப்பாங்களா?
 

Mathykarthy

Well-known member
அண்ணனுக்கு முன்னாடி கல்யாணம் பண்றோமேன்னு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை... இதுல இவன் கல்யாணதுக்கு அண்ணன் செலவு பண்ணணுமாம்.... 😤😤😤😤😤

ராஜவேலு 😈 சொந்த பையனையே ஏமாத்தி பிழைக்குறாரு....
அதியும் எல்லாம் தெரிஞ்சும் விட்டுட்டு இருக்கான்... அவங்களை கெடுக்குறதே இவன் தான்.... கொடுக்குறதை நிறுத்தினா தெரியும் இவங்களைப் பத்தி....
 

NNK-50

Moderator
எவ்ளோ சுயநலம் ஆதவன், ஆன சரியா கொடுத்தான் அதி👏👏👏👏

வேலு, செகண்ட் சேனல் ஏதும் இருக்கா என்ன????

சந்தேகமா தான் இருக்கு....

நிம்மி, ஆப்பு வெச்சிட்டாங்க உன் மம்மி 🤣🤣🤣🤣🤣

நீ கேளு அதி, உனக்கு தரமலா.....
ஒருவேளை இருக்குமோ தெரியலையே :LOL::LOL: நன்றி சகி🥰🥰
 

NNK-50

Moderator
அவன் அப்பா, அண்ணா எவ்வளவு சுயநலமா இருக்காங்க!!!... எப்படி அண்ணனுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து கல்யாணம் செஞ்சு வைப்பாங்களா?
இருக்கலாம்🤪 நன்றி சகி🥰🥰
 

NNK-50

Moderator
Eppdi oru appa, udanpirappu....ethungalukkaa evan maadu maathiri uzhaikkiraan 🤧🤧🤧🤧
இப்படி ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்ய, நன்றி சகி 🥰🥰🥰
 

NNK-50

Moderator
அண்ணனுக்கு முன்னாடி கல்யாணம் பண்றோமேன்னு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை... இதுல இவன் கல்யாணதுக்கு அண்ணன் செலவு பண்ணணுமாம்.... 😤😤😤😤😤

ராஜவேலு 😈 சொந்த பையனையே ஏமாத்தி பிழைக்குறாரு....
அதியும் எல்லாம் தெரிஞ்சும் விட்டுட்டு இருக்கான்... அவங்களை கெடுக்குறதே இவன் தான்.... கொடுக்குறதை நிறுத்தினா தெரியும் இவங்களைப் பத்தி....
நன்றி சகி 🥰🥰🥰 , அதிவீரன் இளையவன்... ஆதவன் மூத்தவன் சகி:)❤️❤️
 
Status
Not open for further replies.
Top