எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன் திமிர் பிடித்தவளாக - அத்தியாயம் 11

NNK-64

Moderator

அத்தியாயம் 11​

சற்று நேர மெளனத்திற்கு பிறகு எழிலழகி மெல்ல நிமிர்ந்து நிரஞ்சனை பார்த்தாள். இதில் யோசிக்க என்ன இருக்கு? என்பது போல அவன் பொறுமையிழந்து அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.​

“திருமணத்திற்கு பின் கணவன் வீட்டிற்கு செல்வது தான் பிறந்த வீட்டிற்கு பெருமை. என்னை நீங்கள் இதுவரை உங்கள் பெண்ணாக நினைத்ததும் இல்லை, பழகியதும் இல்லை. இங்கே இருந்து தான் நான் உங்கள் பெண் என்று நிருபிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.​

என் பிறப்பையே சந்தேகித்து என்னோட தாயை நம்பாத தந்தை எனக்கு தேவையே இல்லை” என்று முருகேசனை பார்த்து சொன்னவள், “வாங்க நிரு போகலாம்” என்று அவனை பார்த்து சொன்னாள் எழிலழகி.​

இத்தனை கோர்வையாக இவளுக்கு பேசக்கூட வருமா என்று திகைத்து போய் பார்த்திருந்தனர் முருகேசனும் யமுனாவும்.​

நிரஞ்சன் மெச்சுதலாக தன் மனைவியை பார்த்தான். எழிலழகி மெதுவாக அவனருகில் வந்து கலங்கிய கண்களுடன் அவன் கண்களைப் நேராக பார்த்தாள்.​

“நிரு, நீங்க அழைப்பை எடுக்கலை என்றதும் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? ஆனால் கட்டாயம் கடைசி நொடியிலாவது வந்துடுவீங்க என்ற நம்பிக்கையில் தான் மணமேடையில் அமர்ந்து இருந்தேன்.​

நீங்க தடுக்கலை என்றாலும் அந்த செல்வம் தாலிக்கட்ட வரும்போது நானே தடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயல்பாகவே வரும் பயமும் தயக்கத்தினாலும் பதற்றமாக உட்கார்ந்திருந்தேன். என்னை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனான நீங்களே எனக்கு கணவனாக கிடைத்தது நான் செய்த பாக்கியம். ஆண்டாளின் வேண்டுதலுக்கு அந்த பெருமாளே வந்து மணம் செய்து கொண்டது போல தான் நம் திருமணத்தையும் பார்க்கிறேன்” என்றாள்.​

“அழகி, என்னம்மா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற” என்றவன் அவளை இப்போது பேச விடாமல் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.​

அவளும் அவன் மேல் சாய்ந்துக் கொண்டு அழவும், சுற்றி இருந்தவர்களின் பார்வைகளுக்கு காட்சி பொருளாக விரும்பாமல் அவளை தன்னிலிருந்து பிரித்து, “வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று அவள் கைகளைப் பற்றியபடி காரை நோக்கி சென்றான்.​

காரில் அமர்ந்தவன் அதை இயக்கியபடி “சீக்கிரம் கல்யாணம் செய்துக்கலாம்னு நேற்று மாலை தான் சொன்னேன்; ததாஸ்து தேவர்களுக்கு நன்றாக கேட்டு விட்டது போல; அதுதான் காலையிலேயே நம் கல்யாணத்தை முடித்து வைச்சிட்டாங்க” என்றான் அவளைப் பார்த்து புன்னகைத்து.​

இப்போது அழகியும் சற்று நிதானத்திற்கு வந்தவள் “ஏன் போனை எடுக்கலை, நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?” என்றாள்​

“நான் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்ததால் உன் அழைப்பை எடுக்கலை. என்னால் உன்னை விட்டு கொடுக்கவே முடியாது. அதிலும் உனக்கும் என் மேல் விருப்பம் என்று தெரிந்த பின் உன்னை தவிக்க விட்டுடுவேனா ப்யூட்டி” என்றான் சிரித்துக் கொண்டே​

அவன் அப்படி அழைத்ததும் அவள் கன்னங்கள் தானாக சிவப்பேறியது. அதை ரசித்தபடி தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.​

“நம்ம பிளாட்டில் நம்மை வரவேற்க யாரும் இருக்க மாட்டாங்க அழகி. இனி உனக்கு நான், எனக்கு நீ, சரிதானே?” என்றான்.​

அவளும் சம்மதமாக தலையசைத்து அவன் தோளில் உரிமையுடன் சாய்ந்து கொண்டாள். அவளை ஒரு கையால் அணைத்தபடி தன் பயணத்தை தொடர்ந்தான்.​

என்றுமில்லாத திருநாளாய் நிரஞ்சன் ஒரு பெண்ணுடன் காரில் இறங்குவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவனிடம் விசாரித்தனர்.​

பிறகு தாங்களாகவே முன் வந்து ஆரத்தி எடுத்து எழிலழகியை வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.​

எழிலழகி வீட்டின் உள்ளே நுழைந்ததும் விளக்கேற்றி கடவுளை வழிப்பட்டு பாலைக் காய்ச்சி கணவனுக்கும் கொடுத்து அவளும் பருகினாள்.​

பக்கத்து வீட்டில் இருக்கும் பார்வதி அம்மாளே இருவருக்கும் மதிய விருந்து சமைத்து எடுத்து வந்து கொடுத்தார்.​

“டாக்டரே பொண்ணு ரொம்ப அழகா இருக்காள். உங்களுக்கேற்ற ஜோடி தான். இரண்டு பேரும் சந்தோசமாக இருங்க. இன்னைக்கு எங்கும் வெளியில் போகாதீங்க. இரவுக்கும் நானே சமைத்து எடுத்து வந்து தருகிறேன். ஓய்வெடுங்க” என்று சொல்லிவிட்டு சென்றார்.​

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் “அழகி, நேற்று இரவு சரியாக உறங்கி இருக்கமாட்டாய், அதனால் நீ போய் தூங்கி ஓய்வெடு” என்றான்.​

“இல்லை நிரு, இப்போது தூங்கிட்டால் எனக்கு இரவில் தூக்கம் வராது; நான் உங்களோட பேசிட்டு இருக்கேன்” என்றவளை அழுத்தமாக பார்த்தான்.​

“நான் சொன்னால் அதுக்கு ஒரு காரணம் இருக்கும், நீ போய் தூங்கு” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்தபடி.​

இதற்கும் மேல் மறுத்தால் திட்டுவானோ என்று நினைத்தவள் படுக்கையில் போய் படுத்த சில நிமிடங்களில் உறங்கி போனாள்.​

மாலை அவள் எழுந்த போது, அவளுக்கு காபி தயாரித்து எடுத்து வந்து கொடுத்தான்.​

புன்னகையுடன் அதை வாங்கி கொண்டவள், “தேங்க்ஸ்” என்றாள். அவன் பதிலேதும் சொல்லாமல் அவளை பார்த்து கொண்டே தன் காபியை அருந்தினான்.​

நிரஞ்சன் பேசாமல் தன்னையே குறுகுறுவென்று பார்க்கவும் அவளுக்கு படபடப்பாக இருந்தது. காபியை மடமடவென்று குடித்துவிட்டு, அவனிடமிருந்தும் டம்ளரை வாங்கி கொண்டு சமையலைறைக்கு அவசரமாக சென்று அதை கழுவி வைத்துவிட்டு வந்தாள்.​

அவன் அப்போதும் நீள் இருக்கையில் சாய்ந்தபடி அமர்ந்துக்கொண்டு இருக்கையின் மேல் இரு பக்கவாட்டிலும் தன் இரு கைகளையும் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.​

அவள் வெளியே வரும் வரையில் அவள் புறமாகவே பார்த்தபடி அமர்ந்திருந்தான். இப்போதும் அவன் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்தவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.​

முகம் கழுவி தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு வந்தாள், பூஜையறையில் விளக்கேற்றினாள். அவள் திரும்பும் இடமெல்லாம் அவனின் கூர்பார்வை விடாமல் அவளை துரத்திக் கொண்டே இருந்தது.​

அறைக்குள் சில நிமிடங்களுக்கு மேல் இருந்தாலும் குரல் கொடுக்க தொடங்கினான், “அழகி உள்ளே என்ன செய்றே, இப்படி வாயேன்” என்றான். அவனுடன் ஓரே வீட்டில் முதன் முறையாக தனியாக இருப்பதே அவளுக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது.​

இதில் விடாமல் துரத்தும் அவனின் கூர்பார்வை வேறு. ஒளிந்துக் கொள்ள இடமில்லாமல் தவித்தாள். அவள் நிலையைக் கண்டு சிரிப்பு வந்தது நிரஞ்சனுக்கு.​

தூரமாக இருந்தால் தானே பார்வையால் தொடர்கிறான் என்று நினைத்தவள் மனதை திடப்படுத்திக் கொண்டு நீள் இருக்கையில் அவன் அருகே போய் அமர்ந்தாள். எதிரே இருந்த ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை இயக்கினாள்.​

அதை அவளிடமிருந்து வாங்கி பாடல்கள் வரும் சேனலை அவன் மாற்றினான். அதில் காதல் பாடல்களாக ஒலிக்கவும் மேலும் அவஸ்தையில் நெளிந்தாள்.​

அமைதியாக கேட்கும்போது அந்த பாடல்களின் வரிகள் இருவருக்குள்ளும் அதன் அர்த்த்தங்களை ஐயம் திரிபற உணர்த்த, அவன் அவளை பொருள் பொதிய பார்த்தான். அதற்கு மேலும் அவனருகில் அமர முடியாமல் சட்டென எழப்போனவளை “எங்கே ஓடற?” கையை பிடித்து இழுத்தான்.​

அதில் அவன் மேலே பூக்குவியலாய் விழுந்தாள். அவளை அப்படியே அணைத்துக்கொண்டு அவள் கழுத்துவளைவில் முகம் புதைத்தவனின் கைகள் அவள் மேல் ஊர்வலம் நடத்த ஆயத்தமானது.​

நிரஞ்சன் மெல்ல தன் அணைப்பை இறுக்கி அவள் நெற்றியிலிருந்து முத்தமிட்டவன், அவள் இதழ்களை நோக்கி நெருங்கினான், கைகள் தானாக அவள் மேல் உரிமையுடன் எல்லைமீறத் தொடங்கவும், “ஐயோ, என்ன நிரு, நீங்களும் என்கிட்ட தப்பா நடந்துக்கறீங்க” என்றாள் பதட்டமாக.​

சரேலென்று அவள் மீதிருந்த கைகளை எடுத்து அவளிலிருந்து விலகி அமர்ந்தான். தலையை கோதிக் கொண்டே தன்னை சமநிலைப்படுத்த பெருமூச்சுகளை எடுத்து விட்டான். ஒருகணம் ஸ்தம்பித்து போனான். தவறான ஆண்களைப் பார்த்து பார்த்து, அவளுக்கு உணர்ச்சிகளே மரத்து போய் விட்டதா? கணவனிடமே அத்து மீற வேண்டாம் என்கிறாளே, குழப்பத்துடன் அவளை பார்த்தான்.​

கணவனின் நிலை உணர்ந்து கள்ள சிரிப்பை தன் இதழ்கடையில் மறைத்தாள் எழிலழகி. நொடியில் அதை கண்டு கொண்டான் அவள் கணவன்​

“அம்மா தாயே, என்னை சன்னியாசியாக அலைய விட்டுடாதே தாயே. ஆண்பாவம் உன்னை சும்மா விடாது. மத்தவங்க செய்தால் தான் அது அத்துமீறல், நான் செய்தால் அதுக்கு பேரு தாம்பத்யம்” என்றான் அவளை பார்த்து பரிதாபமாக.​

அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலையை குனிந்து கொண்டு “பார்வதி அம்மா இன்று இரவு பத்துமணிக்கு மேல் தான் நல்ல நேரம் என்று சொல்லிட்டு போய் இருக்காங்க” என்றாள் மெல்லிய குரலில்​

அவன் குரலை செருமிக் கொண்டே, “அப்படியா? சரி எதுக்கும் சற்று தள்ளியே உட்காரு, எதாவது திரைப்படமாவது பார்க்கலாம்” என்றான்.​

இருவரும் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது பார்வதி அம்மாள் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தார். இருவரையும் அமரவைத்து உணவு பறிமாறினார்.​

“எழில், என் மகளோட புதுபுடவை இரண்டு எடுத்து வந்திருக்கேன். இதில் ஒன்று இப்போ உடுத்திக்கொண்டு வா” என்றார். அழகி தயக்கத்துடன் கணவனை பார்க்கவும் அவள் வாங்கி கொள் என்பது போல கண்ணிமைத்தான்.​

அவளும் தங்க நிற புடவையில் தயாராகி வந்தாள். பார்வதி அம்மாள் அவளுக்கு பூச்சூடி ஆசிர்வதித்து விட்டு சென்றார்.​

தங்கசிலைப்போல நின்றிருந்த தன் மனைவியை விழுங்கிவிடுவது போல பார்த்திருந்தான் கணவன். அவனருகே சென்று அவன் காலில் விழப்போனவளை தடுத்து அணைத்துக் கொண்டான்.​

அப்போது தொலைக்காட்சியில் ஏர்ஆர் ரஹ்மான் இசையில் உன்னிக்கிருஷ்ணன் சுவர்ணலதாவின் மயக்கும் குரலில் இனிய கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது.​

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி​

நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி​

நிரஞ்சனின் விரல்களும் மோட்ச வழி தேடி நகர, பாடலின் வரிகள் மேலும் அவர்களின் உணர்ச்சிகளை தூண்டி விட, இனிதான தாம்பத்யம் அங்கே அரங்கேறியது. தூங்க விடாமல் விடிய விடிய அவளை கொண்டாடி தீர்த்தவன் “இப்போ புரியுதா, ஏன் உன்னை மதியமே தூங்க சொன்னேன் என்று” அவள் காதில் கிசுகிசுத்தான். வெட்கம் தாங்காமல் அவன் மார்பிலேயே தஞ்சம் புகுந்தாள்.​

மறுநாள் அவள் எழுவதற்கு மணி பத்தாகி இருந்தது. பதறி அடித்துக் கொண்டு எழுந்து வந்தவளிடம் காபியை நீட்டினான் நிரஞ்சன்.​

“சாரி நிரு. என்னை எழுப்பகூடாதா? நான் காபி போட்டிருப்பேனே?” என்றாள் கன்றிய முகத்துடன்.​

“ரிலாக்ஸ், நான் எப்போதும் எனக்கு சமைத்து பழக்கம் தான். காலை உணவுக் கூட தயார். நீ குளித்து விட்டு வா, ஒன்றாக சாப்பிலாம்” என்றான்.​

அவள் குளித்துவிட்டு வந்ததும் பூஜையறையில் விளக்கேற்றி கடவுளை வணங்கி விட்டு தனக்காக காத்துக் கொண்டிருந்த கணவனின் அருகில் சாப்பிட அமர்ந்தாள்.​

“என்ன ரொம்ப பக்தியோ, அடிக்கடி கடவுளை வணங்கிட்டே இருக்க?” என்றான் புருவம் உயர்த்தி.​

“கண்ணிறைந்த கணவனாக உங்களை எனக்கு கொடுத்திருக்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?” என்றாள் புன்னகையுடன்.​

“ம்ம்… அப்போ அந்த கணவனுக்கு எதுவும் இல்லையா?” என்றான்​

“என்ன வேண்டும் சொல்லுங்க” என்றபடி கணவனை பார்த்தவள், அவன் பார்வை வித்தியாசத்தை உணர்ந்து தலையை கவிழ்த்துக் கொண்டாள்.​

அதை பார்த்து ரசித்தபடி, “அழகி சீக்கிரம் சாப்பிடு, வெளியில் போய் உனக்கு தேவையான பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என அனைத்தும் வாங்கி வருவோம்” என்றான்.​

அவளும் சரி என்று தலையாட்டிவிட்டு குனிந்தபடி சாப்பிட்டு முடித்தாள்.​

இருவரும் பிரபல மால் ஒன்றிற்கு சென்றனர். நிரஞ்சன் துணிக்கடை, நகைக்கடை, பாத்திரக்கடை, காய்கறிக்கடை என எதையும் விட்டு வைக்காமல் வாங்கி குவித்தான்.​

அழகி விலை உயர்ந்த ஒரு பட்டுபுடவை, தங்க சங்கிலி, வேட்டி சட்டை மட்டும் அவள் சார்பாக வாங்கினாள்.​

எல்லாவற்றையும் காரில் அடுக்கியவன், “அழகி வீட்டுக்கு போகலாமா?” என்றான் அவளை ஆர்வமாக பார்த்துக் கொண்டே.​

“முதலில் பெசன்ட் நகர் போய் அன்னம்மாவை பார்த்துவிட்டு வரலாம்” என்றாள் அழகி.​

“என்ன திடீர்னு அன்னம்மா மேல் பாசம், அவங்களை அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாமே. இப்போது கணவன் சேவையே உனக்கு தேவை” என்றான் கண்களை சிமிட்டி​

“போங்க நிரு” என்று சிணுங்கியவள், “அன்னம்மா தான் சரியான நேரத்தில் உங்க மனதை எனக்கு தெளிவாக உணர்த்தினாங்க. அதுவரை எனக்கு உங்க மேல் இருப்பது பாதுகாப்பு உணர்வும் மரியாதையும் தான்.​

அவங்க உங்க மனதை சொன்னதால் தான் நானும் உங்களை வேறு கோணத்தில் பார்த்தேன். அப்போ தான் எனக்கே தெரிந்தது, எனக்கும் உங்கள் மேல் காதல் என்று. அதனால் தான் அவர்கள் சொன்னதும் எனக்கு சந்தோசமாகவும் வெட்கமாகவும் இருந்தது” என்றாள்.​

“அப்படியா, வா முதலில் அன்னம்மாவை பார்த்து நன்றி சொல்லிவிட்டு வரலாம்” என்று பெசன்ட்நகரை நோக்கி வண்டியை செலுத்தினான்.​

எழிலழகி கழுத்தில் புது தாலியுடன், நிரஞ்சனின் கையுடன் தன் கையை கோர்த்துக் கொண்டு தம்பதி சமேதராக வந்து நிற்கவும் அன்னம்மா ஆனந்த அதிர்ச்சியில் கூவினாள்.​

உங்க இரண்டு பேரையும் பார்க்க பார்க்க என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு, அப்படியே விஷ்ணுவும் மகாலஷ்மியும் போல இருக்கீங்க. முதலில் போய் அஷ்டலஷ்மியை சேவிச்சுட்டு வாங்க. உங்களுக்கு ஸ்பெஷலாக சமைச்சு வைக்கிறேன்” என்றாள் உற்சாகமாக​

அவள் பேச்சை தட்டாமல் இருவரும் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்துவிட்டு வந்தனர். அன்னம்மா அவர்களுக்கு அன்னமிட்டு மகிழ்ந்தாள்.​

சாப்பிட்டு முடித்ததும், எழிலழகி தான் கொண்டு வந்த விலையுயர்ந்த புடவை, வேட்டி சட்டையுடன் தங்க சங்கிலியையும் வைத்துக் கொடுத்தாள்.​

நிரஞ்சன் மனைவியை பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தான். அன்னம்மா வாங்க மறுத்தாள். “எனக்கு எதுக்கு கண்ணு இதெல்லாம், உங்க திருமணத்துக்கு நான் தான் எதாவது செய்யணும் என்று தன் விரிலில் இருந்த சிறு மோதிரத்தை நிரஞ்சனிடம் கொடுத்து எழிலழகிக்கு போட சொன்னாள்.​

நிரஞ்சன் மறுக்காமல் புன்னகையுடன் அதை வாங்கி மனைவியின் கையை பிடித்து அவள் விரலில் மாட்டிவிட்டான்.​

“அன்னம்மா, நீ அன்பாக கொடுத்ததை நாங்க வாங்கிட்டோம் தானே. இப்போ அழகி கொடுக்கறத நீ வாங்கிக்க, அப்போதான் நாங்க உன்னிடம் இனி பேசுவோம்”, என்றவன் கற்றை பண நோட்டுகளையும் அழகியுடம் கொடுத்து அன்னம்மாவிடம் கொடுக்க சொன்னான்.​

கண்களில் கண்ணீருடன் அதை வாங்கி கொண்டாள் அன்னம்மா. இருவரையும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாள்.​

அங்கே நடப்பதை எல்லாம் பலபேர் ரசனையாக பார்த்துக் கொண்டிருக்க, ஒரு ஜோடி கண்கள் மட்டும் குரூரமாக பார்த்துக் கொண்டிருந்தது.​

(தொடரும்)​

 

Attachments

  • NNK-64.jpg
    NNK-64.jpg
    198 KB · Views: 0

santhinagaraj

Active member
முருகேசனுக்கு எழில் அருமையான பதிலடி கொடுத்தது சூப்பர்👌👌

லவ்லி எபி செம்ம 😍😍😍

யார் அந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரர் 🙄🙄🙄
 

Mathykarthy

Well-known member
Lovely update... 💕 நிரு அழகி சந்தோசமா அவங்க வாழ்க்கையைத் தொடங்கிட்டாங்க... 😍

அந்த முருகேசனை இன்னும் நாலு கேள்வி கேட்டு இருக்கலாம் அழகி...

யாரு அந்த கண்கள்... கல்யாணத்துக்கு பயந்து இவ வந்தப்போ காதல் ன்னு சொல்லி பீச்ல காத்திருக்க வச்சவனா... 🤔
 

NNK-64

Moderator
Lovely update... 💕 நிரு அழகி சந்தோசமா அவங்க வாழ்க்கையைத் தொடங்கிட்டாங்க... 😍

அந்த முருகேசனை இன்னும் நாலு கேள்வி கேட்டு இருக்கலாம் அழகி...

யாரு அந்த கண்கள்... கல்யாணத்துக்கு பயந்து இவ வந்தப்போ காதல் ன்னு சொல்லி பீச்ல காத்திருக்க வச்சவனா... 🤔
Thank you sis 💕
 

NNK-64

Moderator
முருகேசனுக்கு எழில் அருமையான பதிலடி கொடுத்தது சூப்பர்👌👌

லவ்லி எபி செம்ம 😍😍😍

யார் அந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரர் 🙄🙄🙄
Thank you sis 💕
 
Top