எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 4

S.Theeba

Moderator
வரம் 4

தன் பணிகளை முடித்துக் கொண்ட வர்ஷனா அலுவலகத்திலிருந்து வீட்டிற்குப் புறப்பட்டாள். ஸ்கூட்டியை இயக்கி சிறிது தூரம் சென்றதும் அவளது கைத்தொலைபேசியிலிருந்து அழைப்பு வந்தது. ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு எடுத்துப் பார்த்தாள். அழைப்பது அவளது ஆருயிர் தோழி மஞ்சு.

இருவரும் அருகருகே உள்ள வீட்டில் வசிப்பதால் சிறுவயது முதல் நெருங்கிய தோழிகள். ஒன்றாகக் கற்றபோதும் மஞ்சுவிற்கு நர்ஷரி பள்ளியில் ஆசிரியராவது பெரும் விருப்பமாக இருக்க, அதிலேயே டிப்ளோமா செய்து இப்போது லிட்டில் பிளவர் மொன்டஸரியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறாள்.

“ஹாய்… சொல்லு டி…”
“வர்ஷூக்குட்டி….”
“ என்னடி.. ஐஸ் வைக்கிற. என்னால ஏதோ காரியம் ஆகணும் போல…”
“ஹி..ஹி..ஹி”
“சிரிச்சது போதும் சொல்லுடி”
“இன்று மோர்னிங் என்னோட ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகல. அப்பாதான் கூட்டிவந்து விட்டார். இப்போ அப்பாவுக்கு வேலை இருக்காம். வர லேட் ஆகும். நீ என்ன பிக்கப் பண்ணிக்கிறியா…?”
“ஓகேடி வெயிட் பண்ணு வாறேன்” என்றுவிட்டு தன் ஸ்கூட்டியை மஞ்சுவின் பள்ளிக்கு விட்டாள் வர்ஷனா.

பள்ளி சென்றவள் வாசலில் அவளைக் காணாது வகுப்பறையைத் தேடிச் சென்றாள். அங்கும் அவள் இல்லாது போகவும் அவளது மொபைலுக்கு அழைத்தாள். “கிட்ஸ் கெயார் செக்சனில் இருக்கன். இங்கே வாடி..” என்றதும் அந்தப் பகுதியை நோக்கி சென்றாள் வர்ஷனா. அந்தப் பள்ளியில் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றும் இயங்கி வருகின்றது.

வர்ஷனா அங்கே சென்றபோது மஞ்சு ஒரு சிறுவனைத் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். “5மினிட்ஸ் பொறுடி. வதனா மிஸ் இன்று லீவ். சாந்தி மட்டும்தான் இந்த செக்சனில் இருக்கா. ஒரு பையன பாத்ரூம் கூட்டிப் போயிருக்கா. அவ வந்ததும் போவோம்” என்றாள்.

அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்த வர்ஷனாவுக்கு மனமெல்லாம் பூரிப்படைந்தது.


அந்த அறையில் பதினைந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அதில் மூன்று வயதுச் சிறுமி ஒருத்தி பெரிய பெண் போல, இன்னுமொரு சிறுவனுக்கு விளையாடக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
பேபி பிங்க் நிறத்தில் அழகான சட்டை அணிந்திருந்தாள். இரண்டு கன்னங்களும் ஒரு ஆப்பிளை இரண்டாகப் பிளந்து வைத்தது போல இருந்தன.

அந்தக் குழந்தையைப் பார்த்ததும் வர்ஷனாவிற்கு அதனை அள்ளி அணைக்கும் ஆசை ஏற்பட்டது. அக் குழந்தையின் அருகில் சென்றவள் அதன் உயரத்திற்கு அமர்ந்து கன்னங்களில் முத்தமிட்டாள்.
“சின்னக்குட்டி உங்க பேர் என்ன?”
“இலக்கியா..”
“வாவ் சூப்பர் நேம். நீங்களும் லவ்லியா ஸ்வீட்டா இருக்கிங்க” என்றாள்.
அந்தக் குழந்தை கன்னம் குழியச் சிரித்தது. அதைப் பார்த்த வர்ஷனா அதன் அழகில் தன்னையே தொலைத்தாள்.

அப்போது அருகில் வந்த மஞ்சு “போவோமா வர்ஷூ…சாந்தி வந்திற்றாள்..”
“மஞ்சு, இந்த குட்டி ரொம்ப ஸ்வீட்டா இருக்கால்ல…”
“இலக்கியா என் கிளாஸ் தான். ஸ்கூல் முடிஞ்சதும் இங்கதான் இருப்பா. ஈவினிங் அவளது அப்பா வந்து கூட்டிப் போவார்” என்றாள் மஞ்சு.
இலக்கியாவை மீண்டும் கட்டியணைத்து முத்தம் கொடுத்த வர்ஷனா “குட்பாய் செல்லக்குட்டி..” என்று விடை பெற்றாள். “குட்பாய் ஆன்ரி” என்று தன் மழலைக் குரலில் விடை கொடுத்தாள் இலக்கியா.

வீட்டிற்கு வந்த வர்ஷனா வீட்டிலிருந்தவர்களிடம் இலக்கியாவைப் பற்றி புலம்பித் தள்ளி விட்டாள். சிறிது நேரம் சுவாரசியமாகக் கேட்டவர்கள் அவள் தொடர்ந்து மூச்சு விடாமல் அக்குழந்தை பற்றியே பேசிக் கொண்டு இருக்கவும் ஒவ்வொருவராக எழுந்து செல்லத் தொடங்கினர்.

பொறுத்துப் பார்த்த வருணியன் “அக்கா உனக்கு கல்யாண ஆசை வந்திடுச்சா…” என்று இழுத்தான். “ஏன்டா இப்படிக் கேட்கிறாய்”
“அது வந்து… நீ அந்தக் குழந்தை பற்றி இவ்வளவு ஆவலாகப் பேசுறாய். குழந்தைகளில் ஆசை வந்தால் கல்யாணத்தில் ஆசை வந்திடுச்சுன்னு அர்த்தம்”
“போடா தடிமாடு… முட்டை போன்டா…” என்று சொன்னதும் வருணியனுக்கு கோபம் வந்துவிட்டது. சிறுவயதில் வருணியன் கொழுக் மொழுக் என்று இருந்தவன். அப்போது வர்ஷனா தன் தம்பிக்கு வைத்துள்ள பட்டப்பெயர்தான் முட்டை போன்டா.

தொடர்ந்து இருவரும் குழந்தைகள் போல் சண்டை போடத் தொடங்கிவிட்டனர். இது அந்த வீட்டில் தினமும் நடப்பதால் மாலதியும் கலையரசனும்ண சிரித்துக்கொண்டே ஒதுங்கி விட்டனர்.

???​

மறுநாள் சனிக்கிழமை. அலுவலகமும் கல்லூரியும் விடுமுறை என்பதால் வர்ஷனாவின் குடும்பத்தினர் கொஞ்ச தூரத்தில் இருந்த முருகன் கோவிலுக்குச் சென்றனர். அன்று தைப்பூசத் திருவிழா என்பதால் கோவிலில் கூட்டமாக இருந்தது.

பூஜை முடிவுற்றதும் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு, பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு நால்வரும் ஓரிடத்தில் அமர்ந்தனர். பிரசாதமாகக்கொடுத்த பொங்கலை வர்ஷனா ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தாள்.அப்போது வருணியன் “அக்கா… அந்தக் குட்டிப் பொண்ணைப் பாரேன். ரொம்பக் கியூட்டா இருக்கா..” என்றான். வாய்க்குள் பொங்கலை அடைத்துகொண்டு “யார்ரு…?” என்று பார்த்தாள். அங்கே பச்சை நிறத்தில் தங்கநிறக் கரையிட்ட பட்டுப் பாவாடை சட்டை அணிந்து, கலகலவென சிரித்தபடி ஓடிக் கொண்டிருந்தாள் இலக்கியா. முகத்திற்கும் அழவான ஒப்பனை செய்யப்பட்டிருந்தது.

அவளைக் கண்டதும் கையிலிருந்த மிகுதிப் பொங்கலைத் தன் தாயிடம் கொடுத்துவிட்டு கைகழுவி வந்தாள் வர்ஷனா.

“அம்மா, அப்பா.. இவதான் நான் நேற்று சொன்ன இலக்கியா..” என்று கூறியபடியே அதன் அருகில் சென்றாள்.

“ஹாய் இலக்கியாக்குட்டி..”
“ஹாய் ஆன்ரி”
"குட்டி யார் கூட வந்திங்க…”
“டாடிகூட வந்தன்” என்றாள் அந்தக் குட்டிக் குழந்தை.இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வர்ஷனாவின் பின்னே பார்த்த குழந்தை “டாட்...” என்று அழைத்தது. தனது தந்தையைக் கண்டுவிட்டுத்தான் குழந்தை அழைக்கின்றது என்பதை உணர்ந்த வர்ஷனா தனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தாள். அதிர்ச்சியில் கண்கள் விரிய அந்தக் குழந்தையின் தந்தையையே பார்த்திருந்தாள்.
 
Top