எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் ---1

பிறை நிலா -1​

நிலா செய்தி ;

நாம் பார்க்கும் விண்வெளி நிலவு ஒன்றுதான் என நினைத்தால் தவறு. அது நமது பூமிக்குரிய நிலவு மட்டுமே.

அவள்……​

மாலை 3 மணி. மழை வரும்போல இருந்தது. அந்த நகரம் அந்த வேளையிலும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. மழை வரலாமா வேண்டாமா என மேகத்துடன் இடி உறுமலுடன் வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தது. நகரத்தின் மையத்தில் அந்த சிறிய கட்டிடத்தில் அந்த அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருந்தது.

ஐந்து பெண்கள் அங்கு இருந்தாலும் எந்தவித சத்தமும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது. நிலா மகள் கம்ப்யூட்டரை தட்டி கொண்டு இருந்தாள். ஆம் அவள் தந்தை வைத்த பெயர்தான் அது. அவள் பெற்றோருக்கு செல்லமான ஒரே மகள் அவள். பிறந்தவுடன் அவள் முகம் பிரகாசமாக இருந்ததை கண்டு ரசித்து வைத்த பெயர் அது.

பிறர் வீட்டுப் பெண்ணை வர்ணிப்பது , அல்லது யாரோ ஒருவருக்கு மனைவியாக போக போகிற பெண்ணை வர்ணிப்பது தவறுதான். இருந்த பொழுதிலும் அவளுடைய அழகை வர்ணிக்காமல் கடப்பது பெரிய பாவம் . எனவே.. அவள் அழகு முழுவதும் அவள் கண்களில் குடியேறியிருந்தது. அவள் கண் அசைவிற்கு அந்த அலுவலகமே இயங்க கூடிய அளவிற்கு பழகி இருந்தது

அவள் கல்லூரி படித்து வேலை தேடிக்கொண்டு இருந்தபோது அவளது தந்தை திடீரென இறக்க, அவள் தந்தை செய்த வியாபாரத்தை கையிலெடுத்துக் கொண்டாள். தன்னோடு படித்த தோழிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு இந்த அலுவலகத்தை பம்பரமாக இயக்கிகொண்டு இருக்கின்றாள்.

மாதவி, மாலா . வசந்தி மற்றும் விமலா ஆகிய நான்கு பேரும் அவள் கண் அசைவிற்காக காத்திருப்பார்கள். நான்கு பேரும் குடும்ப சூழ்நிலை காரணமாக வறுமையில் இருந்தவர்கள். இவளால் இன்று அவர்களது குடும்பம் நல்ல நிலையில் இருக்கின்றது.

மணி நான்கு ஆக, நால்வரும் சோம்பல் முறித்து மெதுவாக நகர்ந்து அந்த அலுவலகத்தின் வலது மூலையில் உள்ள அந்த சிறிய அறையில் கூடினார்கள். எல்லா அலுவலகமும் 5 மணி வரை இயங்கும் , ஆனால் நிலா அலுவலகம் மட்டும் பெண்களின் பாதுகாப்புக்காக 4 மணி வரை மட்டுமே. கதவை தள்ளிக்கொண்டு நிலா உள்ளே நுழைந்தாள்.

“ ஏய் வாடி , இன்னைக்கு என்னமோ மீட்டிங்னு சொன்னே. சீக்கிரம் முடிப்பியா ? இல்லையா ? “

“ என்ன மாதவி , நான் உன்னோட பாஸ். மரியாதை கிடையாதா ?”

மாலா இடைமறித்தாள்.

“ அம்மா தாயி, நீதானே சொல்லியிருக்க. 10 மணியிலிருந்து 4 மணி வரை பாஸூ , அதுக்கப்பறம் லூஸூன்னு…”

நிலா மகள் அவளை பொய் கோபத்துடன் செல்லமாக அடிக்க கையை ஓங்கினாள். மாலா அவள் கையை பிடித்துக்கொண்டாள்.

வசந்தி இப்போது வாயை திறந்தாள்.

” நிலா இப்ப விசயத்துக்கு வா, வழக்கமா இங்க கூடுறது அபூர்வம் . ஏதாவது முக்கியமான விசயம் இருந்தாதான் இந்த ரூமுக்கு கூப்பிடுவ. இப்ப என்ன முக்கிய விசயம்ன்னு தெரிஞ்சக்கலாமா ?”

“ அதானே என்னடி இது அதிசயம். திடுதிடுப்புன்னு கூப்பிட்டா பதக்பதக்னு மனசு அடிச்சுக்குது இல்லையா ?” வயதான கிழவி மாதிரி இழுத்து இழுத்து விமலா பேச அனைவரும் சிரித்தார்கள்.

நிலா எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தாள். எல்லாரும் அவள் என்ன சொல்லப்போகிறாள் என அவளை பார்த்துக்கொண்டு ஆர்வமுடன் காத்து கொண்டு இருந்தனர்.

“ நாம இந்த கம்பெனி ஆரம்பிச்சு 4 வருசம் ஆகுது. ஒவ்வொரு வருசமும் நாம கம்பெனி தொடங்கிய நாளை ஆண்டுவிழாவா கொண்டாடுவோம், அதுவும் உள்ளுரிலேயே ஏதாவது ஒரு ஓட்டல்ல. ஆனா இந்த தடவை நாம கொண்டாட போறது இங்க இல்ல, குற்றாலம் போய் கொண்டாடுவோம், சரியா ? “

அனைவரிடமும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. கூச்சல் அறையை பிளந்தது. நிலா காதுகளை பொத்திக்கொண்டாள்.

“ ஏய் சூப்பர்டி, என்னைக்கு நாம கிளம்பறோம். ? “

மாலா கேட்டவுடன் நிலா திரும்பி அவளைப் பார்த்தாள்.கண்ணை சிமிட்டிக்கொண்டே சொன்னாள்.

“ இந்த வாரம் சனி கிளம்பி திங்கள் வரை, என்ஜாய்,..”

எல்லாரும் அவளைப் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.

” எப்படிடி உங்க அம்மாவை சம்மதிக்க வைச்ச ? “ வசந்தி தூண்டினாள்.

“ எங்க அம்மா பார்கவியை சம்மதிக்க வைக்க பெரும்பாடு ஆயிருச்சு. ஒரே புலம்பல்தான். சமாளிக்கறதுக்குள்ள பெரும்பாடு ஆயிருச்சு. நான் வர்ற வரைக்கும் அவகளை பத்திரமா பார்த்துக சொல்லி ஆளெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்”.

“ தங்கறதுக்கு ஏற்பாடெல்லாம் பண்ணிட்டேன் . ரூமெல்லாம் புக் பண்ணியாச்சு. போய் வர்ற வரைக்கும் கம்பெனி செலவுதான் “.

மாலா நிலா கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

“ நீ இல்லைன்னா எங்களோட நிலைமை என்னாகும்னு நினைச்சுப் பார்த்தா உடம்பே நடுங்குது. உன்னாலதான்ட எங்க வீட்ல அடுப்பு எரியுது. நீ மட்டும்…”

நிலா மாலாவை இழுத்து தன்னுடன் சேர்த்துக் கொண்டாள் அவளைப் தன் அழகிய கண்களால் பார்க்கத் தொடங்கினாள். அந்த கண்கள் மவுன மொழியோடு ஆறுதல் மொழி பேசத்தொடங்கினாள்.

அந்த கண்கள்…

மீண்டும் அவளை வர்ணிக்காமல் இருக்க முடியவில்லை.

வெட்கமோ, கோபமோ , ஆறுதலோ அந்த கண்கள் தனி மொழி பேசும். யாராவது அவள் கண்களைப் பார்த்தால் அதிலிருந்து வெளிவரும் ஒருவித அலைவீச்சில் மயங்கி வேறு எங்கும் பார்க்க மாட்டார்கள், பார்க்கத் தோணாது. சாந்தப் பார்வையிலிருந்து காந்தப் பார்வை வரை எல்லாமோ அழகுதான். அவள் நகர்வது உண்மையில் மேகத்துக்கு இடையில் இரவு நேரத்தில் நிலா ஊர்வது போலவே இருக்கும். காதல் கடிதம் கொடுக்க வந்த சில பேரை மவுனமாக கண் பார்வையின் மூலமே கலங்கடித்து விரட்டியவள்.

‘இந்த கண்ணு மேல என் கண்ணே பட்டுவிடும் போல இருக்குடி என்று அம்மா பார்கவி அடிக்கடி சொல்லி சொல்லி மாய்ந்து போவாள்.

சூர்ய அஸ்தமன மாலை நேர வானம் போல செவ்வரி ஓடிய அந்த கண்களுக்கு முன் யாரும் நின்று தைரியமாக பேச மாட்டார்கள். சற்றே நீண்டு விரிந்தாற் போல கண்கள். மேலே பாதுகாப்பு குத்தீட்டிகளாய் சிறு இமை முடிகள். காற்றில் திரைத்துணி ஆடுவது போல மூடித்திறக்கும் மெல்லிய இமைகள், எந்த செயற்கைப் பூச்சும் ஏற்றாத அந்த கண்களைப் பற்றி சொல்லிக் கொண்டோ போகலாம் , ஆனால் கதை நகராது.

மற்ற மூவரும் இருவரைப் பிரித்தார்கள்.

“போதும்டி , திடீர்னு இப்படி பாசத்தை பொழிஞ்சிங்கினா நாங்களும் அழுது இந்த ரூமே தண்ணிகாடாயிரும். ஏய், மாலா சும்மா இருக்க மாட்டியா ? ஏற்கனவே நிலா உணர்ச்சிவசப்பட்டா கண்ணாலே பேசுவா, கண்ணு சிவக்க ஆரம்பிச்சுரும். போடி அந்த பக்கம் “

நிலா சிரித்தவாறே விமலாவை செல்லமாக தலையில் தட்டினாள்.

” சரி , நம்ம திட்டம் என்ன ? “

வசந்தி கேட்க நிலா வாயை திறந்தாள்.

“ சரி , நல்லா கேட்டுக்குங்க. வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு நான் சொல்ற இடத்துல எல்லாரும் ஒண்ணா கூடனும். லேட்டாக்கிட்ற கூடாது. சனிக்கிழமை காலையில குத்தாலம் 4.30 மணிக்கு போயிரலாம். காலையில நான் புக் பண்ணியிருக்கற இடத்துல தங்கிட்டு அப்புறம் காலைக் குளியல் பிறகு சாப்பாடு அப்புறம் ஒவ்வொரு அருவியா ரசிச்சு , குளிச்சு கிட்டதட்ட 2 நாள். ஞாயித்துக்கிழமை மதியத்துக்கு மேல கிளம்பி ஊர் திரும்புறோம். திங்கள் ஆபிஸ் லீவு. சரிதானே “

மறுபடி விசில் சத்தம் காதை பிளந்தது.

மாதவி ஆரம்பித்தாள்.

“ யாரும் பிரியக் கூடாது. எதுக்கும் கையில மறைவா ஒரு பெப்பர் ஸ்பிரே வைச்சுக்குவோம். ரொம்ப என்ஜாய் பண்ணுவோம் , ஆனா கட்டுப்பாடோடு…”

“ உண்மை, யாரும் எங்கயும் பிரிஞ்சு போகக் கூடாது. மாதவி சரியா சொன்னா. வெளியே மழை வரலாமா வேண்டாமான்னு ஒத்திகை பார்த்துகிட்டு இருக்கு. வாங்க போகலாம்.”

அனைவரும் வெளியேற நிலாமகள் வாசல்வரை வந்தாள்.

வெளியே வானத்தைப் பார்த்தாள். வானம் இன்னும் கோபமான மனைவி அடுப்படியில் சாமான்களை உருட்டுவது போல உருட்டிக்கொண்டு இருந்தது.

மெதுவாக இறங்கி ஸ்கூட்டரை தள்ளி கிளப்ப முயற்சிக்க அது சிறிது நேரம் அடம்பிடித்தது. அந்த வழியே சென்ற ஒருவன் அவளைக் கண்டு அவள் கண்களைக் கண்டு நிதானித்து தடுமாறி எதிரே செல்போனை தடவிக்கொண்டு வந்தவருடன் மோத அவர் கையிருந்த செல்போன் எகிறி கீழே விழவும் , இவளை பார்த்துக் கொண்டே வந்தவனின் ரையில் இருந்த செல்போன் எகிறி விழ இருவரும் பதட்டத்தில் செல்போனை மாற்றி எடுத்துக்கொண்டு அவசரமாக ஓட , இதையெல்லாம் பார்த்துகொண்டு நின்றவள் சிரித்து விட்டாள்.

நிலா மகள் வண்டியை சுற்றி வந்து ஒரு முறைமுறைத்து விட்டு பின் வண்டியை கிளப்ப வண்டி கதறிக்கொண்டு கிளம்பியது.

இப்படிப்பட்ட அந்த அழகிய கண்களைக்கொண்ட அவள்… தடுமாறினாள் என்றால் நம்புவீர்களா ? எங்கே ?

அழகிய காந்த கண்களின் சொந்தக்காரி நிலாவே செயல் இழந்தாள் . யாரிடம் ?

தடுமாறாமல் பார்க்கும் அந்த கண்களே தடுமாறியது .எப்பொழுது ?

கோபத்தில் கூட கண்கள் சிவக்காதவளின் கண்கள் செவ்வரி ஓடிய திரையாய் சிவந்தது. எதனால் ?

இவள் அழகுக்கு அடிமையாக பலர் நினைக்க , இவளோ அடிமையாகி போனாள். ஏன் ?

ஏதோ ஒன்று நடந்து பலர் தடுமாறி நடக்கவைத்தவள் தடுமாறப்போவதை அறியாமல் சுற்றிப் பார்க்க கிளம்புகிறாள் இந்த பேதை பெண் நிலா மகள்.

விதி காத்திருக்க அந்த நாளும் வந்தது……..

காத்திருங்கள்……..
 
Top