எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக! - அத்தியாயம் 12

NNK-64

Moderator

அத்தியாயம் 12​

எழிலழகியை நிரஞ்சன் ஒரு மகாராணி போல நடத்தினான். அவளுக்கு வேண்டியதை அவள் கேட்க கூட தேவை இல்லை. மனதில் நினைக்கும் போதே அதை செய்து முடித்திருந்தான்.​

காலையில் அவள் எழுவதற்கு முன் எழுந்து உடற்பயிற்சியை முடித்து விட்டு அவளுக்கும், தனக்குமாக காபி போட்டு கொண்டு வருவான்.​

அவள் பூஜையை முடித்து வருவதற்குள் காய்கறிகளை வெட்டி சமையலுக்கு தேவையானதை தயாராக வைத்திருப்பான். அவள் சமைக்கும் போதும் அவளருகிலேயே இருப்பான்.​

சாப்பிட்டு விட்டு மருத்துவமனைக்கு சென்றாலும் மணிக்கொருமுறை அவளுக்கு அழைத்து பேசுவான். மாலையானதும் வீட்டிற்கு வந்து அவள் மடியில் படுத்தபடி அவள் கொடுக்கும் தின்பண்டங்களை தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே உண்பான்.​

விடுமுறை நாட்களில் கடற்கரை, சினிமா, பூங்கா என்று ஊர் சுற்றினர்.​

சொந்தபந்தம் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்த நிரஞ்சனுக்கு மனைவியின் அருகாமை சொர்க்கமாக இருந்தது. எழிலழகியும் தந்தையின் சுடுசொற்களோடு சொந்த வீட்டிலேயே அந்நியமாக வாழ்ந்து வந்தவளுக்கு, கணவனின் கவனிப்பும் அருகாமையும் பூலோக சொர்க்கத்தில் இருப்பது போல இருந்தது. இருவருமே இன்பத்தில் திளைத்திருந்தனர்.​

இரண்டு மாதங்கள் இனிமையாக கடந்திருந்தது. நிரஞ்சனுக்கு வெளியூர் சென்று கருத்தரங்கில் கலந்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அங்கு ஆண்களே அதிகம் வருவதால் மனைவியை அழைத்துக் கொண்டு செல்ல முடியாத நிலை.​

அவளை விட்டு பிரியவும் மனம் இல்லை. அவள் தனியாக இருப்பாளா என்றால் அதுவும் தெரியாது. தன் அருகாமையில் சந்தோஷமாகவே இருக்கிறாள், ஆனால் எதையும் எதிர்கொள்ளும் துணிவு வந்துவிட்டதா? என்றால் அது தெரியவில்லை.​

என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம் என்று வீட்டிற்கு போனான். கேட்டை திறக்கும் போது பார்வதி நிரஞ்சனை அழைத்தார்.​

“என்ன பாரும்மா” என்றான்​

“நீங்க மருத்துவமனைக்கு போனதும் உங்க மனைவி கதவை சாத்திட்டு திறக்கறதே இல்லை, யாருடனும் பழகறதே இல்லை. நேற்று கேஸ் சிலிண்டர் போடறவன் வந்து காலிங் பெல்லை அடிச்சிட்டே இருக்கான். ஜன்னல் வழியாக பார்த்திட்டு அப்படியே நிற்கிறாள்.​

நான் என்னனு விசாரிக்க போன பின்னாடி, கதவை திறந்துட்டு வந்தாள். அவன் சிலிண்டரை வைத்து விட்டு போனதும், நான் கேட்டேன், ஏம்மா அத்தனை நேரம் கேட்டை திறக்கலைனு. அதுக்கு அவ சொல்றா வீட்டில் அவர் இல்லாத சமயத்தில் யாரையும் நம்ப முடியாதுனு​

சரி முன்னெச்சரிக்கையாக இருக்கிறாள்னு பார்த்தால் எங்கேயும் வெளியவே வர்றது இல்ல. என்னை பார்த்தால் தான் பேசவே செய்யறாள். எல்லாரையும் ஒரு சந்தேக கண்ணோட பார்த்து பயப்படுற மாதிரி இருக்கு.​

இப்படி வெளி உலகம் தெரியாத பெண்ணாக இருந்தால் எப்படி? நாளைக்கே நீங்க எதாவது வேலைனு வெளியூர் போனால் தைரியமாக நடமாட வேண்டாமா? இல்லை நீ தான் அவளுக்கு 24 மணிநேரமும் காவலுக்கு இருக்க முடியுமா?​

எல்லாருக்கும் புத்தி சொல்லும் இடத்தில் இருக்கும் உங்க மனைவியே இப்படி இருந்தால் எப்படிப்பா? நான் குறை சொல்றதாக நினைக்காதீங்க. இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று ஆச்சரியமாக இருக்கிறது.​

அதனால் வெளிஉலகத்தில் அவளை கொஞ்சம் பழகவிடுங்க. அப்போதான் சரியாவாள். தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிக்கோப்பா. உங்களை என் மகனாக நினைச்சி தான் சொல்றேன்” என்றார் பார்வதி​

“அப்படியெல்லாம் இல்ல பாரும்மா, நானும் உங்களை என் அம்மா போல தான் நினைக்கிறேன். அதனால் தான் எங்களுக்கு நீங்க செய்த சடங்குகளை எல்லாம் முழுமனதோடு ஏத்துகிட்டேன். நானும் அவளை மற்ற பெண்கள் போல தைரியமானவாளாக மாத்தணும்னு நினைச்சிட்டே தான் வந்தேன். இனி நான் பார்த்துக் கொள்கிறேன். அவசியம் ஏற்படும் போது நீங்களும் அவளுக்கு உதவி செய்யுங்க” என்றான் கனிவான குரலில்​

“சரி தம்பி” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் பார்வதி.​

நிரஞ்சன் மனைவியை பார்த்தான். அவள் முகம் நிர்மலமாக கனிந்திருந்தது. ஆசையாக அவனைக் ஓடிவந்து கட்டிக் கொண்டாள். அவன் முகம் கழுவி இலகுவான உடைக்கு மாறி வந்ததும் சாப்பிட எடுத்து வைத்தாள். இருவரும் சாப்பிட்டு முடித்ததும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.​

“சொல்லு அழகி, அடுத்து என்ன செய்ய போவதாய் இருக்க? உன்னோட கேரியரை பத்தி எதாவது முடிவெடுத்திருக்கியா?” என்றான் நிரஞ்சன்.​

“கேரியரை பத்தி என்ன முடிவெடுக்கணும்? அதுதான் திருமணம் ஆயிடுச்சே! நான் அப்படியே உங்களுக்கு சமைத்து போட்டுகிட்டு வீட்டிலேயே இருந்துடறேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த உங்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதை விட எனக்கு வேறென்ன வேலை” என்றாள்.​

“அழகி, வாழ்க்கை கொடுத்தேன் அது இது என்று எதுவும் இனி பேசக் கூடாது. எனக்கு உன்னை பிடிச்சிருந்தது அதனால் தான் திருமணம் செய்தேன். இல்லை என்றால் வேறு விதமாக உனக்கு உதவி செய்திருப்பேன்.​

எனக்கு சமைத்து போடுவதிலே உன் வாழ்க்கையை வீணாக்க போறீயா? வீட்டு வேலையே செய்திட்டு ஒரு அடிமை வாழ்க்கையை வாழப்போறியா?” என்றான் கண்டிப்பான குரலில்​

“கணவனுக்கு சமைத்து போடுவது அடிமை வாழ்க்கையா?” என்று கேட்டாள் அவள்.​

“நான் அப்படி சொல்ல வரவில்லை, சமைப்பது முக்கியம் தான். ஆனால் வீட்டு வேலையையே செய்து உன்னோட தனித்தன்மையை இழக்க போறியா? உனக்கு என்று ஒரு அடையாளம் வேண்டாமா அழகி? இந்த சமுதாயத்தில் நிரஞ்சனின் மனைவி என்ற அடையாளம் ஒன்றே போதுமா?” என்று கேட்டான் அவள் கண்களை பார்த்து.​

“என்னை என்ன செய்ய சொல்றீங்க? எனக்கு எது நல்லா வரும்னு எனக்கே தெரியலை, போற இடத்துல எல்லாம் பிரச்சனையே வந்தால் நானும் தான் என்ன செய்வேன்” என்றாள் தன்னிரக்கமாக.​

“யாருக்கு தான் பிரச்சனையில்லை? அப்படி பிரச்சனையை கண்டு வேலையை விடணும்னா எல்லாரும் தான் விடணும். எதாவது ஒரு துறையை யோசித்து அதில் சேர்ந்து உன்னை உயர்த்திக் கொள்.​

நான் எல்லாருக்கும் கவுன்சிலிங் கொடுத்து பிரச்சனையிலிருந்து அவர்களின் மன அமைதிக்காக வேலை செய்பவன். என்னுடைய மனைவியே பிரச்சனையை எதிர்கொள்ள தயங்கி வீட்டில் ஒரு விட்டில் பூச்சியாக இருந்தால் நன்றாக இருக்குமா?” என்று கேட்டான்.​

“இப்போ நான் என்னதான் செய்யணும் நிரு?” என்றாள் சலித்துக் கொண்டே.​

“என் அழகி, திமிரழகியாக மாறினால் தான் எனக்கு பிடிக்கும். இந்த சமுதாயத்தில் வர பிரச்சனையை எதிர் கொள்ள தெரிந்து இருக்கணும். யோசிச்சு பாரு, நான் உன் வாழ்க்கையில் வந்திருக்கவில்லை என்றால் உன் நிலை என்ன? எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் உதவிகள் கிடைக்காது அழகி. நமக்காக நாம் தான் போராடணும்.​

உன் போன்ற மற்ற பெண்களுக்கு நீ ஒரு வழிகாட்டியா இருக்கணும். அப்போ தான் நமக்கு பிறக்க போகிற குழந்தைகளும் தைரியமாக அனைத்து பிரச்சனைகளையும் எதிர் கொள்ள தயாராக இருக்கும் வகையில் வளருவாங்க” என்றான் நிரஞ்சன்​

“சரி நிரு, நீங்க சொல்றது போல மாற முயற்சிக்கிறேன். ஆனால் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்றாள்.​

உன்னுடைய முதல் பிரச்சனை ஆரம்பித்தது அந்த ஐடி கம்பெனியில் தானே? அங்கேயே போகிறாயா? அந்த மேனேஜர் தான் இப்போது அங்கே இல்லையே” என்றான்​

“அய்யோ நிரு, அங்கே அந்த மேனேஜர் மட்டும் பிரச்சனையில்லை, அங்கே மற்ற ஆண்களின் புத்தியும் சரியில்லை” என்றாள்​

“சரி, எந்த இடத்தில் ஆண்களின் புத்தி சரியாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?” என்றான் அவள் கண்களை பார்த்து.​

இதற்கென்ன பதில் சொல்வது, அவள் தான் பல இடங்களுக்கு சென்று பல்வேறு பிரச்சனைகளை இழுத்துக் கொண்டிருக்கிறாளே, பதில் சொல்ல முடியாமல் கணவனையே பார்த்தாள்.​

“உனக்கே புரிகிறது இல்லையா, பிரச்சனை இல்லாத இடமே இல்லை. அதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் விஷயம் இருக்கிறது. நான் உன்னை வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இதை எல்லாம் சொல்லவில்லை.​

நான் எங்காவது வெளியே சென்றாலும், உனக்கு என்ன பிரச்சனையோ, எதில் மாட்டி இருக்கியோ என்று கவலை பட்டுட்டே இருக்க முடியாது. என் மனைவி தைரியமானவள், அவளை அவளே தற்காத்துக் கொள்ளுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தால் தானே நானும் வெளியில் சென்று என் வேலையில் கவனம் செலுத்த முடியும்?​

அதுமட்டுமில்லாமல் டாக்டர் ஊருக்கு தான் உபதேசம் செய்கிறார், மனைவி பார் எப்படி என்று யாரும் நினைக்க கூடாது. என்னுடன் சேர்ந்து நீயும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாகவும், தைரியம் சொல்பவளாக நீ இருக்க வேண்டும், அதற்கு நீ மாற வேண்டும்” என்றான்​

“நான் உங்களுக்கு ஏற்ற மனைவி இல்லையா நிரு?” என்றாள் முகத்தை தொங்க போட்டு​

“அப்படியெல்லாம் நினைக்காதே அழகி, உன்னை பார்த்த முதல் நாளே நான் உன்னிடம் மயங்கி விட்டேன்” என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினான்.​

“கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக் கொள் என்று சொல்கிறேன். இது கட்டாயம் இல்லை, உனக்கு தோன்றினால் செய், பிடிக்கவில்லையா? உன் விருப்பம் போல் வீட்டிலேயே இரு, எதுவானாலும் எனக்கு சம்மதமே” என்று முடித்தான்​

“இல்லை, நான் உங்க விருப்பம் போல் திமிரழகியாக மாற முயற்சிக்கிறேன், வேலையில் சேர ஏற்பாடு செய்யுங்க” என்றாள் திடமான குரலில்.​

“ம்ம், இது இதுதான் என் அழகி, திமிரழகி” என்று அவளை கட்டிக் கொண்டான்.​

அவளும் வாகாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.​

“அழகி, அடுத்த வாரம் என்னுடன் பணிபுரிபவர்களுக்கும் நண்பர்களுக்கும் சிறு விருந்து கொடுக்கலாம் என்று இருக்கேன். எல்லாரும் என்னை திருமண விருந்து கொடுக்காமல் விட்டு விட்டேன் என்று கேலி செய்கிறார்கள். அதற்கான ஏற்பாட்டை செய்துக் கொண்டு இருக்கேன். உனக்கு யாரையாவது அழைக்கணுமா?” என்றான் அவள் தலையை வருடியபடி​

அவள் இல்லை என்று தலையாட்டினாள். இதற்கு காரணம் யாருடனும் மனம் விட்டு பழகாததால் தான் என்று நினைத்துக் கொண்டான். இப்படியே இவளை இந்த வீட்டில் தனியாக விட்டால் இவள் மாறப்போவதில்லை.​

அதற்காகவாவது விருந்து முடிந்ததும், அவளை வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.​

அன்று நிரஞ்சன் எழிலழகியின் திருமண விருந்து!​

“அழகி தயாரா? நீ ஏற்கனவே பேரழகி தான். இதற்கு மேலும் உன்னை அலங்கரித்துக் கொண்டே இருந்தால், உன் அழகில் மயங்கி நான் தொப்பென்று விழுந்து விடுவேன். அதற்கு பிறகு நமக்கு விருந்து இங்கே தான்” என்றான்​

சற்று நேரத்தில் நிரஞ்சன் எடுத்து வந்திருந்த மயில் கழுத்து நிற பட்டுப்புடவை அணிந்து மாங்கனி டிசைனில் இருந்த பவளம் பதித்த தங்க மாலையை அணிந்து, அதற்கேற்றாற் போல காதணி வளையல் போட்டு, முடியை தளர பின்னி, அதில் மல்லிப்பூவை சூட்டியிருந்தாள்.​

அழகான பளிச்சென்ற அவள் முகத்தில் வட்டவடிவமான பொட்டும், கருவிழியை அலங்கரித்த காஜலும், நெற்றியிலிருந்த குங்குமமும், அவளை தேவதையாக காட்டியது.​

ஓருகணம் அவள் அழகில் ஸ்தம்பித்து நின்றான் நிரஞ்சன். “அழகி பார்ட்டியை வேறு ஒரு நாள் வைத்துக் கொள்ளலாமா? நான் என் நண்பர்களிடம் எதாவது ஒரு காரணத்தை சொல்லிடுறேன்” என்றான் காதலுடன் அவளை பார்த்து.​

“விளையாடதீங்க நிரு, எல்லாரும் காத்திட்டு இருப்பாங்க போகலாம் வாங்க” என்று சிணுங்கினாள் அழகி.​

வெளியே செல்ல மனமில்லாமல், அவளுடன் சென்று காரில் ஏறினான்.​

மீண்டும் அவளை ஏக்கமாக பார்த்து, “போய் தான் ஆகணுமா” என்றான்​

“நிரு” என்று அவள் முறைக்கவும் ஓட்டலை நோக்கி காரை செலுத்தினான்.​

விருந்துக்கு வந்தவர்கள் நிரஞ்சனையும் எழிலழகியையும் கைகுலுக்கி​

தங்கள் வாழ்த்தை தெரிவிக்க வந்த போது, அவள் அவர்களிடம் கைகளை கொடுக்காமல் அவன் பின்னாடி ஒளிந்து நின்றாள்.​

“அழகி, நான் சொன்னது நினைவிருக்கா, இல்லையா” என்றான் அடிக்குரலில்​

பிறகு கணவன் கோபித்துக் கொள்வானே என்று தயங்கியபடி அவர்களுக்கு கைக் கொடுத்தாள். சிலர் அவள் நிலையை புரிந்து கொண்டு வணக்கம் மட்டும் வைத்து சென்றனர்.​

அனைவரும் வாழ்த்தி சாப்பிட்டு முடித்து ஒவ்வொருவராக கிளம்பிக் கொண்டிருந்தனர். தூரத்தில் வேறு மேஐையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு ஜோடிக் கண்கள் மட்டும் இவர்கள் இருவரையும் குரூரமாக பார்த்துக் கொண்டே தங்களுக்குள் தீர்க்கமாக பார்த்துக் கொண்டனர்.​

(தொடரும்)​

 

Advi

Well-known member
அட யாரு பா அந்த கண்களுக்கு சொந்தக்காரங்க?????

ரெண்டு பேரா?????
 

santhinagaraj

Active member
இந்த அழகி எப்படித்தான் மாறப் போறாளோ தெரியல
யாரு அந்த ரெண்டு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரர்கள்
 

NNK-64

Moderator
இந்த அழகி எப்படித்தான் மாறப் போறாளோ தெரியல
யாரு அந்த ரெண்டு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரர்கள்
answer will be in upcoming epi sis. Keep follow, thank you for your comment 💕💕
 

Mathykarthy

Well-known member
நிரு சூப்பர்.. 🥰🥰🥰🥰🥰 அழகி வீட்டுக்குள்ளயே முடங்கி இருக்காம தைரியமா வெளிஉலகத்தை எதிர்கொள்ளணும் ன்னு நினைச்சு அவளை மாற்ற முயற்சி எடுக்குறது ஸுப்பர்... 🤩🤩🤩🤩
 

NNK-64

Moderator
நிரு சூப்பர்.. 🥰🥰🥰🥰🥰 அழகி வீட்டுக்குள்ளயே முடங்கி இருக்காம தைரியமா வெளிஉலகத்தை எதிர்கொள்ளணும் ன்னு நினைச்சு அவளை மாற்ற முயற்சி எடுக்குறது ஸுப்பர்... 🤩🤩🤩🤩
நன்றி சிஸ் 🥰
 
Top