எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 5

S.Theeba

Moderator
வரம்5

அதிர்ச்சியில் கண்கள் விரிய அந்தக் குழந்தையின் தந்தையையே பார்த்திருந்தாள் வர்ஷனா.

முதலில் அவளது கண்ணெதிரே நின்றவனது தோற்றமே அவளது கருத்தில் பதிந்தது. அதுமட்டுமின்றி அவளைக் கட்டியும் போட்டது. வெள்ளையில் மெல்லிய பச்சைக் கரையிட்ட வேட்டியும் கரும் பச்சை நிறத்தில் சேர்ட்டும் அணிந்திருந்தான். சேர்ட் கையை முழங்கை வரை மடித்திருந்தான். கையில் ரோலக்ஸ் வாட்ச் அணிந்திருந்தான். அவனது உயரத்திற்கு வேட்டி சட்டை பாந்தமாகப் பொருந்தியிருந்தது.
“லக்கிக் குட்டி, வாங்க வீட்ட போவோம்” என்று குழந்தையை அழைத்தான். அவளும் “டாடி… என்னைத் தூக்குங்க” என்று அவன் காலைக் கட்டியது. அவனும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினான்.
அப்போதுதான் வர்ஷனாவுக்கு நடப்புப் புரிந்தது. இவன்.. இவனா இலக்கியாவின் தந்தை என்று அதிர்ச்சி அவளைத் தாக்கியது.
ஆம்… அங்கே இலக்கியாவைத் தூக்கியபடி நின்றவன் சாட்சாத் யதுநந்தனேதான்.
அவனது குழந்தை இலக்கியா என்பதை அவளால் நம்பவும் முடியவில்லை… ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
அலுவலகத்தில் அவனைக் கண்டதும் மனதில் தோன்றிய சலனம் இப்போது அவளை இம்சித்தது. அவனருகில் சென்றவள் “ஹாய் சேர்… இவ உங்க மகளா?” என்று கேட்டாள்.
அவளைக் கூர்மையாகப் பார்த்தவன் மரியாதைக்குக்கூட ஒரு ஹாய் சொல்லாது.. “யெஸ். திஸ் இஸ் மை பேபி.” என்று சொன்னவன் குழந்தையிடம் “போவோமா லக்கிக்குட்டி” என்று கேட்டான். குழந்தையும் “ஓகே டாடி” என்றதும் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று விட்டான். தந்தையுடன் செல்லும் போது அவனது தோள் வழியாக எட்டி டாடா காட்டிவிட்டு சென்றாள் இலக்கியா. பதிலுக்கு தானும் அவளுக்கு கையசைத்து விட்டு,.
“சிடுமூஞ்சி… அவரது சொத்தை எழுதித் தரச் சொன்னது போல போறார் பார்” என்று வாய்விட்டே புலம்பினாள். பதில் சொல்லும் போது அவனது ஒரு வெறுப்புத் தன்மை இருந்ததோ என்று அவளுக்குத் தோன்றதோன்றியத

சிறிது நேரம் அசைவற்று அப்படியே நின்றாள் வர்ஷனா. அவளால் நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் சிலர் தங்கள் காதலைக் கூறியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் மனம் சலனப்படாமல், அவர்களின் மனம் நோகாதவாறு தன் மறுப்பைத் தெரிவித்திருக்கிறாள்.

முதல் முறையாக ஒருவனைக் கண்டதும் மனதைப் பறிகொடுத்தது இப்போதுதான். அவனைக் கண்டது முதல் அவனை நினைத்துக் கொண்டே இருந்தாள். இன்றோ அவன் ஒரு குழந்தைக்குக் தந்தை என்றபோது ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறி நின்றாள்.

???

சோபாவில் சுருண்டு படுத்திருந்தாள் வர்ஷனா. இது அவளது இயல்பே அல்ல. விடுமுறை தினங்களில் அக்காவும் தம்பியும் சேர்ந்து வீட்டையே இரண்டுபடுத்தி விடுவார்கள்.

வர்ஷனா யூடியூபில் வீடியோ பார்த்து சமையல் செய்கிறேன் பேர்வழி என்று சமையலறையையே அதகளப்படுத்தி விடுவாள். ஆனாலும் முடிவில் சுவையான உணவையே செய்து முடிப்பாள். அவளுக்கு இப்படி விதம் விதமாக சமையல் செய்வதுதான் பொழுதுபோக்கு.

அது முடிந்ததும் தம்பியுடன் சேர்ந்து செஸ் விளையாடுவாள். ஆனால் ஒருநாள் கூட விளையாட்டு முடிவடையாது. இடையிலேயே குழப்பம் உண்டாக்கி சண்டை போட்டு விடுவார்கள்.

சின்னக் குழந்தைகள் போல் அவர்கள் சண்டை போடுவதை தாய், தந்தை இருவரும் வேடிக்கை பார்ப்பார்கள். சிறிது நேரத்தில் சண்டை அதிகரித்து அவர்களிடமே பஞ்சாயத்துக்கு வரும்.
இப்படியாக விடுமுறை நாட்கள் வீட்டில் எப்போதும் குதூகலமாகவே இருக்கும்.

இன்று வர்ஷனா எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாகப் படுத்திருந்தது வீட்டில் இருந்த ஏனையோருக்கு கவலையைகத் தந்தது. வருணியன் பலதடவை அவளிடம் வந்து பேசிவிட்டான். அவன் கேட்டதற்கெல்லாம் ஒற்றை வார்த்தை மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

அவள் படுத்திருந்த சோஃபாவின் ஓரத்தில் வந்தமர்ந்த கலையரசன் ஆறுதலாக அவள் தலையைத் தடவியபடி “வர்ஷாம்மா… உடம்புக்கு ஏதும் சரியில்லையா?” என்றார்.
“அப்படி எதுவும் இல்லை அப்பா”
“அப்புறம் ஏன் வர்ஷாம்மா சோர்ந்து போய் படுத்திருக்காய்?”
“சும்மாதான்பா…”என்று அவள் கூறிக்கொண்டு இருந்தபோது அங்கே வந்த மாலதி “நானும் பார்க்கிறேன். கோவிலுக்குப் போய்வந்த நேரத்திலிருந்து நீ இப்படித்தான் இருக்கிறாய்… என்னடி உனக்குப் பிரச்சினை…” என்றார். தான் இப்படி இருப்பதால் வீட்டிலுள்ளோர் கவலைப்படுவதை உணர்ந்த வர்ஷனா அவர்களை இயல்பாக்கும் நோக்கில் பேசத் தொடங்கினாள்.
“எல்லாம் உன்னால்தான் மாலு…” என்றாள்.
“ஏண்டி நான் உனக்கு என்னதான்டி செய்தன். நான் என் பாட்டில் நான் உண்டு என் வேலை உண்டென்று இருக்கன். என்னையேன்டி வம்புக்கு இழுக்கிறாய்?” என்றார் மாலதி.
“ எல்லாம் கோவிலால் வந்ததும் நீ போட்டுத்தந்த ஃகாபியால் வந்தது. ஃகாபியா அது? கழனித் தண்ணீர்…”
“வர்ஷாம்மா நீ வாய் விட்டு சொல்லிற்ற… ம்..ம்..நான்….” என்று இழுத்தார் கலையரசன்.
“சொல்லுவிங்க... ஒருதடவைக்கு இரண்டு தடவை வாங்கி சப்புக் கொட்டிக் குடித்துவிட்டு இப்போ மகளோடு சேர்ந்து என் ஃகாபியக் குறை சொல்லுறிங்க” என்றார் மாலதி.

அப்போது வருணியனும் வந்து “இங்கே என்ன பட்டிமன்றம் நடக்குது…” என்றான்.
“வாடா வா… எங்க ஒருத்தர் குறையுறார் என்று நினைச்சேன் வந்திற்றாய். நீயும் இந்தக் கூட்டத்தில் ஒருத்தன்தானே” என்று புலம்பினார் மாலதி.
அவர் புலம்புவதைப் பார்த்து கலகலவென சிரித்தாள் வர்ஷனா. அவள் சிரிப்பதைப் பார்த்ததும் மற்றவர்களின் மனம் பெரும் நிம்மதியை அடைந்தது.

தன் வீட்டினரின் சந்தோசத்திற்காகத் தன் மனதை மறைத்து வெளியில் சிரித்தாலும் அவள் மனமோ உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தது.
 
Top