எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக! - அத்தியாயம் 14

NNK-64

Moderator

அத்தியாயம் 14​

எழிலழகி அந்த பெரிய நிறுவனத்தின் உள்ளே சென்று வரவேற்பாளினி மதுவந்தியை சந்தித்து முதலாளி செல்வநாயகத்திடம் அவள் வேலைக்காக வந்திருப்பதாக சொல்ல சொன்னாள். மதுவந்தியும் சற்று நேரத்தில் தொலைபேசியில் விவரம் சொல்லிவிட்டு, அவளிடம் பேசுமாறு நீட்டினாள்.​

“அம்மா எழில், நிரஞ்சனுக்கு விபத்து ஏற்பட்டதாக கேள்விப்பட்டேன். ரொம்ப வருத்தமாக போயிடுச்சு, நான் வெளிநாட்டில் என் மகனோடு இருக்கிறதால் வந்து பார்க்க முடியலை. சீக்கிரம் குணமாயிடுவான், வருத்தப்படாதேம்மா.​

எதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் எனக்கு அழைத்து பேசு. என் நம்பரை மதுவந்தியிடம் வாங்கிக் கொள். நீ மனிதவள மேம்பாட்டு துறையில் (HR Dept) வேலையில் சேர்ந்துக் கொள். முதலில் வேலைகளை கற்றுக் கொள், பிறகு உனக்கேற்ற போஸ்டிங்கை அறிவிக்கிறேன்” என்றார்.​

அவளும் சம்மதம் சொல்லி போனை வைத்துவிட்டு, செல்வநாயகம் சொன்னதை மதுவந்தியிடம் சொன்னாள். அவளும் செல்வநாயகத்தின் பெயர் அட்டை ஒன்றை அவளிடம் கொடுத்து விட்டு அவள் வேலை செய்ய வேண்டிய பகுதியை கைக்காட்டினாள்.​

எழில் அங்கே போவதற்குள் அந்த துறையின் மேலாளர் ரவீந்தருக்கும் தகவல் கொடுத்து விட்டாள். அவர் அவளை அமரச் சொல்லி அங்கே அவள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி விளக்கினார்.​

சிறிது நேரத்தில் புதிதாக இயற்றப்பட்ட விதிமுறைகளை பற்றிய சுற்றறிக்கையை தயார் செய்ய சொல்லி அதை அனைவரிடமும் அவளையே நேரில் சென்று கையெழுத்து வாங்கி வரச் சொன்னார்.​

அவளும் அதை எடுத்துக் கொண்டு அனைவரின் இருப்பிடத்திற்கும் சென்று கையெழுத்து கேட்டு நின்றாள். பழைய ஊழியர்கள் இன்னுமே வேலைசெய்து கொண்டிருந்ததால் அவளை ஏற இறங்க கேள்வியாக பார்த்தனர்.​

அன்று ஒருநாள் மீட்டிங் ஹாலில் அவள் கால்களை வேண்டுமேன்றே இடித்த இரண்டு ஆண்கள் பாஸ்கரும் சேகரும் அருகருகில் அமர்ந்துக் கொண்டு அவளை வக்கிரமாக பார்த்தனர்.​

கைகள் நடுங்க, அவர்கள் அருகில் சென்றாள். இருவருமே அவளிடம் அந்த தாளை வாங்கும்போதும் கொடுக்கும் போதும் அவள் கைகளை வேண்டுமென்றே தீண்டினர். பல்லைக்கடித்துக் கொண்டு அதை அவர்களிடமிருந்து வாங்கினாள்.​

பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள். நிரு இதையெல்லாம் நான் அனுபவிக்கணும்னா என்னை வேலைக்கு போக சொன்னீங்க? முதல் நாளே என்னால் முடியலையே, நான் எப்படி இங்கே சமாளிக்க போறேன் என்று மனதிற்குள் புலம்பினாள்.​

மதிய உணவு இடைவேளையின் போது சில பெண்கள் அவளிடம் வந்து “என்ன எழில், திருமணம் ஆயிடுச்சு போல?” என்றாள் ஒருத்தி​

“இங்கே கருத்தரங்கிற்கு வருவாரே டாக்டர் நிரஞ்சன், அவரைத் தான் திருமணம் செய்துகிட்டதா சொல்றாங்க? உண்மையா?” என்றாள் மற்றவள்.​

“என்ன? டாக்டர் நிரஞ்சனா?, அவருக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்காருனு கேள்விப்பட்டேனே” என்றான் பாஸ்கர் அதிர்ச்சியுடன் இடைபுகுந்து.​

எதற்கும் பதில் அளிக்காமல் மெளனமாக அமர்ந்திருந்தாள் எழிலழகி. அவளுக்கு துக்கத்துடன் சேர்த்து உணவும் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. கட்டுப்பாட்டை மீறி கண்களில் கண்ணீர் உடைப்பெடுக்க ஆரம்பித்தது. பெரும்பாடுபட்டு அதை அடக்கி கொண்டிருந்தாள்.​

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மீரா என்ற பெண், “கொஞ்சம் அவளை சாப்பிட விடறீங்களா? கேள்வியா கேட்டு துளைச்சிட்டு இருக்கீங்க. அதான் எல்லா விஷயமும் தெரிந்து இருக்கே, அப்புறம் என்ன கேள்வி வேண்டியிருக்கு” என்றாள் சிடுசிடுவென்று.​

“க்கும் வந்துட்டா” என்று முனகிக் கொண்டு அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.​

“எழில் சாப்பிடு” என்றாள் மீரா அதட்டல் குரலில்​

எழிலழகி அவளை நன்றாக பார்த்தாள். மீரா எழிலழகியின் டிபார்ட்மென்டை சேர்ந்தவள் தான் தொழிலாளர் நலன் அதிகாரியாக இருக்கிறாள். சீக்கிரமே அவளுக்கு திருமணம் என்று மேலாளர் ரவீந்தர் சொல்லி இருந்தார். அவளுடைய வேலைகளைத் தான் எழில் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார்.​

மீரா முகத்தில் ஒரு அழுத்தமும் அமர்ந்திருந்த விதத்திலேயே ஒரு மிடுக்கும் தெரிந்தது. அவள் சாப்பிட்டு முடித்து வந்த பின் மீரா அவள் அருகில் வந்தாள்.​

“எழில் கவலைப்படாதே, உன் கணவரை எனக்கும் தெரியும், சீக்கிரமே நலமாகி விடுவார்” என்றாள் தோளை ஆதரவாக அழுத்தி.​

“சொல்லி அழக்கூட யாருமில்லாத நிலையில் மீரா ஆதரவாக இருக்கவும் எழிலழகி அவள் கைகளை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்.​

“ஷ் அழாதே எழில், முக்கியமாக நாம் வேலை செய்யும் இடத்தில் அழவோ, பயப்படவோ கூடாது. நம்முடைய பலவீனத்தை யார்கிட்டயும் முக்கியமாக ஆண்கள் கிட்ட காட்டிக்கவே கூடாது. முதலில் கண்ணை துடை” என்றாள் மீரா அழுத்தமான குரலில்.​

எழிலழகியும் கண்ணை துடைத்துக் கொண்டு தன் இருக்கையில் போய் அமர்ந்தாள்.​

அதன் பின் மீராவே எழிலழகியுடன் அமர்ந்து சாப்பிட தொடங்கினாள். மீரா அழகாகவே இருந்தாள், தன் உடை அலங்காரத்தில் மிகவும் கவனமாக இருந்தாள். அனைவரிடமும் அன்பாகவும் பழகினாள். ஆனால் எழிலழகியிடம் மட்டும் நெருக்கமாக பழக ஆரம்பித்து தோழியாக மாறி போனாள்.​

எழிலழகியிடமும் இன்னும் சிலரிடம் மட்டும் நெருக்கத்தை காட்டினாள் மீரா. மற்றவர்களை தள்ளி நிறுத்தி பேசினாள், அவர்களிடம் பேசும் போது முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு கண்டிப்பான குரலில் சொல்ல வேண்டிய வார்த்தைகளை அழுத்தமாகவும் சுருக்கமாகவும் பேசினாள்.​

அதனால் எந்த ஆண்களும் அவளிடம் போய் தேவையில்லாமல் பேசவோ சிரிக்கவோ இல்லை. உயர் அதிகாரிகளே வந்திருந்தாலும் மீரா அவர்களிடம் ஆளுமையுடன் பேசினாள். அவளிடம் சின்ன தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் பார்க்கவே முடியவில்லை.​

தனக்கு எதாவது தெரியவில்லை என்றால் பகிரங்கமாக ஒத்து கொண்டு மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வாள். யாராவது தவறு செய்துவிட்டால் யாரென்றும் பார்க்காமல் முகத்திற்கு நேரே சொல்லிவிடுவாள். அவள் மேல் அங்கிருந்தவர்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை இருந்தது.​

எழிலழகி மீராவை ஆச்சரியமாக பார்த்து அவளின் ஒவ்வொரு செயலையும் தன்னை அறியாமல் ரசிக்க ஆரம்பித்தாள்.​

ஆனால் எழிலழகியிடம் சில ஆண்கள் வேண்டுமென்றே வந்து பேச்சு கொடுத்தனர்.​

ஒரு நாள் பாஸ்கர் அவளிடம் “எப்படி வீட்டிற்கு போவாய் எழில் நான் டிராப் செய்யவா?” என்றான்​

“திருமணம் ஆகி மூன்று மாதம் கூட ஆகாத நிலையில் உன் கணவன் மருத்துவமனையில் இருக்கான். உன்னை நினைத்தாலே பாவமாக இருக்கு. இரவில் தனியாகவா இருக்க? எதாவது உதவி தேவைப்பட்டால் எந்த நேரமானாலும் எனக்கு அழை. உடனே நான் உனக்காக வந்து நிற்பேன்” என்றான் சேகர்​

அவர்களிடம் எதிர்த்து பேசாமல் இதையெல்லாம் கேட்க வேண்டியிருக்கே என்று ஓய்வறையில் சென்று அழுது விட்டு வருவாள். இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் விழி பிதுங்கினாள்.​

இதை மீராவிடம் ஒரு நாள் வெளிப்படையாகவே கேட்டாள், “மீரா உன்னிடம் மட்டும் எல்லாரும் மரியாதையுடன் நடந்துக்கிறாங்க, ஆனால் என்கிட்ட மட்டும் ஏன்?” என்று முடிக்க முடியாமல் பொங்கும் துக்கத்தை கஷ்டப்பட்டு அடக்கினாள் எழிலழகி.​

அவளின் கைகளை ஆதரவாக அழுந்த பற்றினாள் மீரா. “எழில் உன்னோட பயந்த சுபாவம் உன் முகத்தில் பட்டவர்த்தனமாக தெரியுது. அதை எல்லாரும் பயன்படுத்திக்கிறாங்க.​

முதலில் உன்னோட உணர்வுகளை எல்லாருக்கும் தெரியுற மாதிரி வெளிப்படையாக காட்டாதே. யாரைப் பார்த்தும் சிரிக்கவும் வேண்டாம், முறைக்கவும் வேண்டாம். நம்முடைய பயமோ, அழுகையோ நமக்கு நெருக்கமானவர்களைத் தவிர யாருக்கும் தெரியவே கூடாது.​

கிட்டத்தட்ட பல்லைக் காட்டும் ஆண்களிடம் திமிராகத்தான் நடந்துக்கணும். என்ன! திமிர்பிடிச்சவ, ராங்கிக்காரினு சொல்லுவானுங்க! பரவால்ல. நாம் யாருனு நமக்கு தெரியும் இல்லை” என்றாள் மீரா.​

“அழகி திமிரழகியாக மாறிடு” என்று நிரஞ்சன் சொல்வது போல இருந்தது எழிலழகிக்கு​

தீவிரமாக யோசித்துக் கொண்டே வெளியே வந்தாள். அவளுக்காக ஆட்டோ காத்துக் கொண்டிருந்தது.​

நிரஞ்சனுக்கு பழக்கமான ஆட்டோ டிரைவர் தான் மூர்த்தி. எழிலழகி காலையில் வேலைக்கு கிளம்பும் போதும் சரியான நேரத்திற்கு வந்து அவளுக்காக காத்திருப்பார்.​

மாலையில் வேலை முடிந்ததும் அவள் வரும்போதே காத்துக் கொண்டு இருப்பார். அவள் வந்ததும் நேராக அவளை கொண்டு சென்று மருத்துவமனையில் விட்டுவிட்டு போவார். தினமும் தவறாமல் சரியான நேரத்திற்கு அவர் வந்து விடுவதை பார்த்து அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.​

முதல் நாள் அன்று தான் அவள் அவரை அழைத்திருந்தாள். அதன்பிறகு அவராகவே தனக்கு தொடர்ந்து வேலை தருமாறு கேட்டார். தனக்கும் பாதுகாப்பு வேண்டுமென்று அவளும் சம்மதித்திருந்தாள். அவரால் அவளுக்கும் பாதுகாப்பாகவே இருந்தது.​

இரவில் நிரஞ்சனுடன் மருத்துவமனையில் இருந்துவிட்டு, காலையில் வந்து குளித்து தயாராகி செல்வதற்கே வீட்டிற்கு வந்தாள்.​

அன்று காலை அவளை அலுவலகத்திற்குள் இறக்கி விடும்போது ஆட்டோ டிரைவர் அவளை அழைத்தார். “அம்மா, உன்கிட்ட ஒரு சேதி சொல்லணும். நாம் தினமும் காலையில் வரும்போதும் போகும்போதும் அந்த கருப்பு நிற கார் நம்மை பின்பற்றி வருது, நீ கவனிச்சு இருக்கியா? எனக்கென்னவோ சரியாபடலை” என்றார்.​

“என்ன சொல்றீங்க, நிஜமாகவா?” என்று அதிர்ந்தாள் எழிலழகி.​

“ஆமாம், முதல் நாளே நான் கவனிச்சிட்டேன். உன் நிலையும் புரிஞ்சது. உன் வயசில் எனக்கும் பெண் இருக்காள். அது தான் உனக்கு பாதுகாப்பும் ஆச்சு, எனக்கு சவாரி கிடைச்ச மாதிரியும் ஆச்சுனு நானே உன்னிடம் சவாரிக்கு கேட்டேன்​

இந்த கார்க்காரன் என்னவோ நீ தனியாக சிக்குவியானு பார்த்திட்டு இருக்கிற மாதிரி எனக்கு தோணுது. அதுதான் இன்னிக்கு உன்கிட்ட சொல்லிடலாம்னு சொன்னேன். பார்த்து சூதனமா நடந்துக்கோம்மா” என்று சொல்லி விட்டு போனார்.​

அவள் அந்த காரில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று எட்டி பார்த்தாள்.​

அவள் பார்த்தை உணர்ந்துக் கொண்டான் உள்ளே இருந்தவன், காரை திறந்துக் கொண்டு வெளியே வந்தான்.​

அவன் ராஜூ! அவளை பார்த்து வருமாறு கையசைத்தான். எதற்கு அழைக்கிறான்? கட்டாயம் நல்ல விஷயமாக இருக்காது என்று தோன்றவும் பதட்டமாக இருந்தது. சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டு அவசரமாக அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.​

பதட்டத்தை மட்டுப்படுத்த தண்ணீர் அருந்தினாள். அவன் ஏன் வந்து இருக்கிறான்? எதாவது பிரச்சனை செய்ய நினைத்திருக்கிறானோ? என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே வரவேற்பாளினி மதுவந்தி அவளுக்கு அழைத்தாள்​

“மிஸஸ்.எழில் உங்களை பார்க்க ஒருவர் வந்திருக்காரு. அவரை விசிட்டர் அறையில் அமரச் சொல்லியிருக்கேன்” என்றாள்.​

அவளைக் காண அலுவலகத்திற்கு யார் வந்திருப்பார்கள் என்ற கேள்வியோடு விசிட்டர் அறையை நோக்கி சென்றாள். அந்த அறை கண்ணாடி சுவர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதால் உள்ளே அமர்ந்திருந்தவனின் உருவம் தெள்ள தெளிவாக தெரிந்தது.​

அவளைக் கண்டதும் எழுந்து நின்று கைகளை ஹாய் என்று அசைத்தான். அந்தப்பக்கமாக சென்று கொண்டிருந்தவர்கள் அவன் யாருக்கு சொல்கிறான் என்று குழம்பி, பின்பு அவன் பார்வை போன திசைக்கு திரும்பினர். எழிலழகியைக் கண்டதும் என்ன விஷயம் என்று தெரிந்துக் கொள்ள ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தனர்.​

எழிலழகி பேயறைந்தாற் போல நின்றிருந்தாள்.​

(தொடரும்)​

 

Mathykarthy

Well-known member
மீரா சூப்பர்... அழகி அழுது பயந்துகிட்டு இருக்காம எதிர்கொள்ள கத்துக்கோ...

இவன் எதுக்கு இப்போ வந்துருக்கான்....🤔
 

NNK-64

Moderator
மீரா சூப்பர்... அழகி அழுது பயந்துகிட்டு இருக்காம எதிர்கொள்ள கத்துக்கோ...

இவன் எதுக்கு இப்போ வந்துருக்கான்....🤔
Thank you 💕☺️💓
 

santhinagaraj

Active member
அழகிக்கு மீராவோட ஆறுதல் சூப்பர் 👌👌👌
அழகி நீ தான் சொல்ற மாதிரி எதுக்கு எடுத்தாலும் அழுதுகிட்டே இருக்காமல் வருகிற பிரச்சினையை தைரியமா எதிர்கொள்ள முயற்சி பண்ணு.

அந்த ராஜி தான் உள்ள வந்துட்டானா???
 

NNK-64

Moderator
அழகிக்கு மீராவோட ஆறுதல் சூப்பர் 👌👌👌
அழகி நீ தான் சொல்ற மாதிரி எதுக்கு எடுத்தாலும் அழுதுகிட்டே இருக்காமல் வருகிற பிரச்சினையை தைரியமா எதிர்கொள்ள முயற்சி பண்ணு.

அந்த ராஜி தான் உள்ள வந்துட்டானா???
Correct sis ❤️ Thank you so much ☺️💖
 

Advi

Well-known member
போச்சி மறுபடியும் அவனே வந்துட்டான்😳😳😳😳😳

மீரா சொன்ன மாதிரி நீயும் ஆகனும் டா
 

NNK-64

Moderator
போச்சி மறுபடியும் அவனே வந்துட்டான்😳😳😳😳😳

மீரா சொன்ன மாதிரி நீயும் ஆகனும் டா
Yes sis Thank you 💕
 
Top