எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் --- 3

இதுவரை பச்சையன்…….

நிலாமகள் தன் தோழிகளாகிய உடன் பணியாற்றும் நான்கு பேருடன் குற்றாலம் செல்ல முடிவெடுக்கிறாள். அதே நேரத்தில் அந்த அழகிய இளைஞனும் குற்றாலம் நோக்கி செல்லும் ரோட்டில் நடக்க ஆரம்பிக்கின்றான் . இனி…..

பிறை நிலா –3

நிலவுச் செய்தி….

வியாழன் கிரகத்திற்கு உள்ள நிலாக்களின் எண்ணிக்கை 67

அவர்கள்……..​

அதிகாலை நேரம் , குற்றாலம் குளிர்ச்சியால் அனைவர் மனைதயும் உடலையும் குளிரவைத்துக்கொண்டிருந்தது. மனித தலைகள் ஆங்காங்கே சிறு கூச்சலுடன் குளித்து கொண்டு இருந்தார்கள். முகத்தில் அறைந்த குளிர்ந்த காற்றை தாங்க முடியாமல் கைகளால் உடலை குறுக்கிக்கொண்டு நிலா மகள் நடந்து கொண்டு இருந்தாள், கூடவே அவள் தோழிகளும்.

அதிகாலை 4 மணிக்கு வந்து நிலாமகள் ஏற்கனவே பதிவு செய்திருந்த ஓட்டல் அறையில் சென்று விட்டு கூட்டம் சேர்வதற்குள் முதல் குளியலை முடிந்து விட வேண்டும் ஏன ஏற்கனவே போட்ட திட்டத்தின்படி அந்த ஐவர் அணி குளிக்கும் இடத்தை நோக்கி போய் கொண்டு இருந்தது.

“ விமலா நாம இரண்டு பேரும் மத்தவங்க குளிச்சிட்டு வந்த பிறகு போய் குளிப்போம் “

“ சரி நிலா, நாம ஏற்கனவே பேசியதுதானே “

மற்ற மூவரும் குளிக்க போக இருவரும் தனித்து நின்றார்கள். விமலா மற்றவர்களைவிட சற்று நெருங்கிய தோழி. மற்றவர்கள் கல்லூரி தோழிகள், ஆனால் விமலா பள்ளியிலிருந்து ஒன்றாக படித்த தோழி. யாராவது ஏதாவது அலுவலகத்தில் காரியம் ஆக வேண்டுமென்றால் விமலாவை வைத்து முடித்து விடுவார்கள்.

நாம் முன்பு பார்த்த அவன் இன்னொரு இடத்தில் தனியாக நடந்து கொண்டு இருந்தான். பரபரப்பு இல்லாத நிதானமான நடை. அந்த பாதையில் அவன் மட்டுமே லாவகமாக நடந்து கொண்டு இருந்தான்.

“ ஏண்டி குளிச்சிட்டு வந்தவுடனே தேனருவி பக்கம் போகலாம்னு இருக்கேன். வர்றீயா ? “

“ நிலா ஆபத்தை விலை கொடுத்து வாங்காதே. அங்க போக சரியான பாதை கிடையாது. மிருகங்க உலவற இடம். பேசாம வந்தோமா இரண்டு நாளைக்கு நல்லா குளிச்சோமா, சுத்தி பார்த்தோமா, சாப்பிட்டோமான்னு இல்லாம என்னடி விளையாட்டு இது ?”

“ சாதாரணமா எல்லாரும் போற இடத்துக்கு போறதைவிட கொஞ்சம் புதுசா ஒரு இடத்துக்கு போறதுல ஒரு திரில் இருக்கும். வேறு யார்கிட்டேயும் சொல்லக் கூடாது”.

“ ஏய், உன்னை திருத்த முடியாதுடி. சரி குளிச்சு முடிச்சவுடனே காலை சாப்பாடு முடிச்சிட்டு அப்படியே கடைவீதிக்குப் போற மாதிரி நீ தனியா போயிடு, நான் அவங்களை பார்த்துக்கறேன். போயிட்டு சீக்கிரம் வந்துரணும்”

“ சரிடி , மாமியார் கிழவி மாதிரி ரொம்ப பேசாத. நான் பத்திரமா போயிட்டு வந்துருவேன்”.

அங்கு….. அவன் நடந்து கொண்டிருந்த பொழுது குறுக்கே அந்த பெரிய குரங்கு வழிமறித்தது. அவன் கையில் ஏதாவது இருக்கிறதா என பார்த்து ஒன்றும் இல்லாமல் போகவே ஏமாற்றத்துடன் அதே சமயத்தில் கோபத்துடன் பற்களை காட்டிக்கொண்டு கண்களை உருட்டி அவனை நோக்கி நகர, அவன் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு எந்தவித பதட்டமும் இல்லாமல் அவன் கண்களால் அதன் கண்களை உற்றுப்பார்க்க ஆரம்பித்தான். முறைத்து முன்னேறிய குரங்கு அவன் பார்வை தாங்காமல் மெதுவாக பின்வாங்கியது. மீண்டும் அவன் பார்க்க அது அலறிக்கொண்டு ஓடியது.

மற்ற தோழிகள் எல்லாரும் குளித்துவிட்டு வந்தவுடன் விமலாவும் நிலாவும் உள்ளே இறங்கினார்கள். சிறிது நேரம் கழித்து இருவரும் குளித்துவிட்டு மேலே ஏறினார்கள்.

அப்பொழுதான் நிலா அந்தப்பகுதியில் நின்றிருந்தவர்களை கவனித்தாள். ஒரு சிறு கூட்டம் வாய்க்குள் பிரஸ் இருப்பதை மறந்து வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். நிலா தனக்குள் சிரித்துக் கொண்டாள். அங்கு வந்த போலிஸ்காரர் ஒருவர் எல்லாரையும் விரட்ட முயற்சி செய்துகொண்டு இருந்தார்.

அவன் அங்கு இருந்த ஒரு சிறிய மேடான பகுதியில் உட்கார்ந்தான். எதையோ எதிர்பார்ப்பவன் போல இருந்தான்.

எல்லாரும் காலை சாப்பாடு முடித்துவிட்டு ஏதாவது பொருட்கள் வாங்கலாம் என சுற்றிக்கொண்டு இருந்தார்கள். நிலா விமலாவிடம் கண்ணை காட்டிவிட்டு பின்வாங்கி தனியாக பிரிந்து நடக்க ஆரம்பித்தாள்.

இடையில் உள்ளூர்கார பெரியவர் இவளைப் பார்க்க அவரை ஏமாற்றி பார்வையிலிருந்த அந்த கரடுமுரடான பாதையில் மேலே ஏற ஆரம்பித்தாள். வழியில் ஒரு குட்டிக்குரங்கு தன் தாயை கட்டிக்கொண்டு உட்கார்ந்து இவளைப் பார்க்க, குட்டி கண்ணாடி உருண்டை கண்களை கொண்டிருந்த அதன் அழகில் இவளே மயங்க ஆரம்பித்தாள். இவளின் கண்களை கண்ட குட்டிகுரங்கு தனக்கு போட்டியாய் இருக்கும் அவள் கண்களை கண்டு தாள முடியாமல் தலை குணிந்தது.

எங்கும் மயான அமைதி நிலவ, யாரும் இல்லாத இடத்தில், யாரும் போக பயப்படும் இடத்தில் இவள் தனியாக சிரமப்பட்டு மெதுவாக நகர ஆரம்பித்தாள்.

சற்று தூரத்தில், சிறிது உயரத்தில் மனதை கிறங்கவைக்கும் ஒருவித நறுமணம் நிலவிய அந்த செடியை நோக்கி மெதுவாய் தவழ்ந்து முன்னேறி அந்த செடி அருகில் அவள் செல்ல முயற்ணித்தாள். கடைசி நொடியில் பிடிமானம் தவறி மேலிருந்து உருள ஆரம்பிக்க கண்களை இறுகமூடிக்கொண்டாள். சிறிய உயரமாயிருந்தும் இடையில் உள்ள பகுதிகளில் சிறுசிறு கற்கள் இருக்க, அவள் வலியில் இன்னும் இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டு இருக்க, ஏதோ ஒன்றில் மோதப்பட்டு நிறுத்தப்பட்டாள்.

மெதுவாய் எழுந்து உட்கார, கண்களை சிரமப்பட்டு திறந்தவள் தனக்கு முன் இருகால்கள் தெரிய நிமிர்ந்து பார்த்தவள் அவனைக் கண்டு திகைத்து பின்வாங்கினாள்.

“ பதட்டபட வேண்டாம். பெரிய அடி ஒண்ணும் இல்லை. பதட்டபடாம உட்காருங்க”

அவன் குரல் அவளுக்குள் ஏதோ செய்தது. அவன் கண்களை பார்த்தவள் திகைத்து பின்வாங்கினாள். இவளின் கண்களைவிட அவன் கண்களின் அழகைக்கண்டு திகைத்தாள்.

இரண்டு சம பலமுள்ள அழகுகள் மோதிக்கொள்ளும் அற்புதமான நேரம் அது. எத்தனையோ பேர் இவள் அழகில் கிறங்க , மயங்க இவளோ அவன் பார்வையில் தன்னை முழுவதும் இழப்பது போல உணர்ந்தாள். இன்னும் தான் எழாமல் இருப்பதைக்கண்டு வெட்கப்பட்டு எழ முற்ப்பட்டு தடுமாறினாள். அவன் கைகளை நீட்டவே தயக்கத்துடன் கைகளை நீட்டினாள். அவன் கைகளை பிடித்து எழுந்தாள்.

மஞ்சள் நிற சுடிதாரில் கறுப்பு கலர் பூப்போட்ட வடிவமைப்பில் அணிந்து இருந்த அவள் ஆடை அந்த காலை நிற வெயிலில் பளபளத்தாள். அவன் மெல்லிய நிற ரோசா பூ கலரில் கண்ணுக்கு உறுத்தாத வண்ணம் ஆடை அணிந்து இருந்தான். மெல்லிய காற்று இருவருக்கும் இடையில் நுழையலாமா வேண்டாமா என தயங்கி நின்றது.

“ என் கால்கள் தடுக்கலைன்னா நீங்க இந்நேரம் உயிரோடு இருந்திருக்க மாட்டிங்க. பின்னாடி பாருங்க “

அவனுடைய குரல் அவள் மனதை இவளை மீறி சுண்டி இழுக்க, ஒரு நிமிடம் தடுமாறியவள் பின் அவன் தோள் வழி எட்டிப்பார்க்க பின்னால் சற்று தள்ளி ஒரு சிறுபள்ளமும் அதை தாண்டி ஒரு கூர்மையான கல் ஈட்டி போல சாய்வாக இருந்தது. அவள் அந்த மஞ்சள் நிற சுடிதாரில் மலைமேல் மஞ்சள் நிலாவாகவும் , அவன் பக்கத்தில் அவனது உடையில் அழகிய மேகம் போல காட்சி அளித்தான். தேவதைகளுக்கு எல்லாம் தேவதையாக அவளும், உலக அழகு எல்லாம் ஒன்று சேர்த்து அவனும் நின்றிருந்தான்.

அவள் அவனை நன்றியுடன் பார்த்தாள்.

“ உன்னோட பேரு என்ன ?”

“ என்னோட பேரு நிலா மகள். நானும் என்னோட தோழிகளும் குற்றாலம் சுற்றிப் பார்க்க வந்தோம். நான் ஆர்வக்கோளாறுல தனியா இங்க வந்துட்டேன். வந்த இடத்துல….” அதற்கு மேல பேச முடியாமல் வெட்கத்தில் தலை குணிந்தாள். மெதுவாக அவனைப் பார்த்து கேட்டாள்.

“ நீங்க யாரு ? உங்க பேரு என்ன ? எங்கிருந்து வர்றீங்க ? “ படபடவென கேட்ட அவளை அவன் ஒருவித சிரிப்புடன் பார்த்து தலையை அசைத்தான். அதே சிரிப்புடன் ஏதும் பேசாமலிருந்தான்.

அவள் அவனை மேலிருந்து கீழே பார்த்தாள். அவனைப் பார்க்க பார்க்க அவள் இதயத்தில் யாரோ காதல் மாவை பிசைந்து கொண்டிருந்தார்கள். கண்ணுக்கு தெரியாத காதல் வைரஸ் அவளுடைய நாடி நரம்புகளுக்குள் ஊடுருவி பாம்பின் விஷம் போல மெதுமெதுவாக ஏறிகொண்டிருந்தது. காதலுக்கு மாற்று மருந்து காதலிப்பதுதான். காதல் அதை தொட நினைப்பவரை தொட விடாது, ஆனால் காதல் ஒருவனை தொட்டு விட்டால் அவனையோ அல்லது அவளையோ விடாது.

அவன் கைகளைப் பார்த்தாள். கையில் சில இடங்களில் பச்சை நரம்புகள் தனியே தெரிந்தன. சில நேரங்களில் இரத்தத்தில் கொழுப்பு கூடும் பொழுது அதுவும் நரம்புகளில் படியும் போது அபூர்வமாக நரம்புகள் மஞ்சளாக சில பேருக்கு காணப்படலாம். இவனுக்கோ சற்று கூடுதலாக இருந்தது போல தெரிந்தது.

“ சரி , நீங்க பெயரைச் சொல்ல வேணாம். நானே உங்களுக்கு பெயர் வைக்கிறேன். உங்க பேரு பச்சையன்..சரியா “

அவள் தலையை மெதுவாக அசைத்து கொஞ்சலாக , கெஞ்சலாக கேட்டவிதம் கண்டு அவன் திடுக்கிட்டான். அதுவும் அவன் பெயரை பச்சையன் என்று சொல்லியவுடன் திடுக்கிட்டாலும் பின் சுதாரித்துக் கொண்டு சிரித்தான்.

“ எனக்கு நல்ல பேரு வச்சிருக்க. மிக அருமை.. எனக்கு பிடிச்சிருக்கு. அது எப்படி பார்த்தவுடனே காதல் பத்திகிச்சோ ? “

” உண்மைதான் , கண்டதும் காதல்ன்னு சொல்றதையே நான் கண்டபடி பேசி மறுத்துறுக்கேன். கண்டதும் காதலுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா ? காதல் தனக்கு உரியவங்களை கண்டதும் ஏறி தொத்திக்கறதுதான் உண்மையான அர்த்தம். எல்லார்கிட்டேயும் காதல் தொத்தாது. ஆனா இன்னைக்கு நானே…. ” அதற்கு மேல் பேசாமல் அந்த மஞ்சள் நிலா வெட்கப்பட்டதில் அந்த இடமே அழகானது.

“ யம்மாடி சாதாரண ஆள் கிடையாது நீ…உன்கிட்ட ஜெயிக்க யாராலும் முடியாது “.

அவள் அவனது பாராட்டைக்கேட்டு வெட்கப்பட்டு தலையை குணிந்தாள். கால் விரல்கள் கீழே உள்ள கட்டாந்தரையில் கோலம் போட முயற்சி செய்து கொண்டு இருந்தது.

” நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு போல எல்லாரும் தேடுவாங்க. வரட்டா “

அவள் மெதுவாக நகர்ந்து செல்ல முற்பட்டு முன்னோக்கி நகர்ந்தாள். அவன் அவளை ரசித்துக்கொண்டே நின்றிருந்தான். சென்றவள் திடீரென திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவள் திடீரென திரும்பியதைக் கண்டு இவன் சற்று நின்றான்.

“ உங்களை அடுத்து எப்ப பார்க்கலாம் ? உங்களை தொடர்புகொள்ள ஏதாவது போன் நம்பர்…? என இழுத்தவாறே கேட்டாள்.

“ கண்டிப்பா நாம மறுபடி சந்திக்கலாம், சந்திப்போம். காதல் நம்மை சந்திக்க வைக்கும் “.

“ நீங்க கீழே வரலையா ? “

“ நீ போ , பின்னாடியே வர்றேன். பார்க்கலாம்.. பார்த்து போ “

அவள் மெதுவாக திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அவள் அந்த கரடுமுரடான அந்தப்பாதையில் அவள் கால்களை சற்று கவனமாக எடுத்து வைத்து நடந்தது ஒரு அழகிய மஞ்சள் நிற அழகிய சிறு வாத்து நடப்புது போல ரம்யமாக இருந்தது.

அவன் சிரித்துக்கொண்டே திரும்ப நினைக்கையில் அந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது.

அருகில் ஒரு மேட்டில் இருந்த ஒரு மரத்தின் நீண்ட ஒரு கிளையின் ஒரு கூர்மையான பகுதி அவன் கை பகுதியை கிழிக்க இரத்தம் வெளிவர ஆரம்பித்தது. அந்த இரத்தம்……..

அவன் திகைக்கவும் முன்னால் சென்ற அவள் திரும்பவும் சரியாக இருக்க அவர்களுக்கு இடையில் விதியும் திரும்பிப் பார்க்க…….

பச்சையன் வருவான்…………….
 
Top