எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 6

S.Theeba

Moderator
வரம்6

இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தாள் வர்ஷனா. ஏதேதோ எண்ணங்கள் தோன்ற, அதனைத் தள்ளி வைத்துவிட்டுத் தூங்க முற்பட்டவளுக்கு அதிகாலையில்தான் தூக்கம் தழுவியது. தன்னை மறந்து தூங்கிப் போயிருந்தாள்.

மறுநாள் காலை சூரியன் தன் பொற்கதிர்களைப் பரப்பிக் கொண்டு அழகாக மேலெழுந்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெகு நேரம் கழித்தே எழுந்தாள் வர்ஷனா. காலைக் கடன்களை முடித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

சமையலறையில் மாலதி ரொம்பப் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள். கலையரசனைக் காணவில்லை. வருணியன் தொலைக்காட்சி பார்த்தபடி சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

ஞாயிற்றுக்கிழமையில் மாலதி இப்படி பரபரப்பாக இருந்ததேயில்லை. யோசனையாகப் பார்த்தபடி வருணியன் அருகில் வந்தமர்ந்தவள் "வருண் நம்ம வீட்டில என்ன விசேஷம். மாலு ரொம்பப் பரபரப்பா இருக்கா" என்று கேட்டாள்.
"உனக்கு விசயமே தெரியாதா..? ராதாத்தை இன்று நம்ம வீட்டுக்கு வர்றாங்களாம்..." என்றான்.
"ஐயையோ... இப்போ எதுக்கடா அந்த மில்லிமீட்டர் இங்க வருதாம்..." என்று அழாக்குறையாகக் கேட்டாள் வர்ஷனா.

கலையரசனுக்கு இரண்டு சகோதரிகள். மூத்தவள் ராதா எனப்படும் ராதாமணி. இளையவள் தங்கா எனப்படும் தங்கமணி. ராதா ஒரு பணக்காரரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டாள். தங்காவிற்கு கலையரசனே தனது நண்பனை நிச்சயம் செய்து கல்யாணம் செய்துவைத்தார்.
தங்கா மிகவும் அமைதியானவள். தன் அண்ணன் குடும்பத்தினர் மீது மிகுந்த பாசம் உள்ளவள். அவள் திருமணம் செய்ய முன்னரே வர்ஷனாவும் வருணியனும் பிறந்ததால் அவர்களைச் சிறுவயதில் தூக்கி வளர்த்தவளும் அவளே. அவள்மீது இரு பிள்ளைகளுக்கும் மட்டுமல்லாது மாலதிக்கும் மிகுந்த பாசம் உண்டு. அவளுக்கு இந்துமதி, சுதாமதி என இரு பெண்பிள்ளைகள் உண்டு. தங்கா இரண்டு வாரங்களுக்கு ஒருதடவை அண்ணன் வீட்டிற்குக் குடும்பத்தோடு வந்து விடுவாள்.

தங்காவிற்கு நேர்மாறானவள் ராதா. கலையரசனைவிட எட்டு வயது மூத்தவள் என்பதாலும் தான் பணக்கார வீட்டில் திருமணம் செய்ததாலும் தன் சொல்லுக்குத் தன் கூடப் பிறந்தவர்கள் அடிபணிய வேண்டும் என்பது அவரது எண்ணம். கூடப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது அவர்கள் வீட்டில் உள்ள அனைவருமே தன் சொல்லுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எழுதாத சட்டத்தையும் வைத்துள்ளார்.

அவருக்கு யாரும் அதிகமாகப் பேசவும் கூடாது, சத்தம் போட்டு சிரிக்கவும் கூடாது. அளவோடு பேசணும் அளவோடு சிரிக்கணும் என்று எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார். எந்நேரமும் சிடுசிடுத்த முகத்துடனேயே இருப்பார். அதனால்தான் ராதாவுக்கு மில்லி மீட்டர் என்று வர்ஷனா பட்டம் வைத்துள்ளாள்.

ராதாவுக்கு ஆதவன் என்னும் ஒரே மகன். செல்வச் செழிப்பாலும் ராதா கொடுத்த செல்லத்தாலும் குடியும் குடித்தனமுமாக..(?) வாழ்கிறான்.

ராதா தன் சகோதரர்கள் வீட்டிற்கு அடிக்கடி வரமாட்டார். அவ்வளவு வசதியாக வாழும் நான், இந்தக் குச்சு வீட்டிற்குள் அரைமணி நேரம் கூட இருக்க முடியாது என்பார். அரிதாக வந்தாலும் மாலதியை ஒருவழி பண்ணிவிட்டுத்தான் செல்வார். மாலதியும் ராதா என்ன சொன்னாலும் செய்தாலும் தன் கணவனின் அன்புக்காகப் பொறுத்துப் போவாள்.

அப்படிப்பட்ட ராதா இன்று வருகின்றார் என்றதும்தான் வர்ஷனா ஐயையோ என்றாள்.

வெளியில் சென்றிருந்த கலையரசன் சிக்கன், மட்டன் என்று வாங்கிக் கொண்டு வந்து மாலதியிடம் கொடுத்தார். அவ்வளவு வக்கணை பேசும் ராதா சாப்பாட்டில் மட்டும் வஞ்சகம் செய்ய மாட்டார். தம்பி வீட்டிற்கு வந்தால் மாலதி சமைத்து வைத்ததை ஒரு பிடி பிடித்து விட்டுத்தான் போவார். எவ்வளவு ருசியாக சமைத்து வைத்திருந்தாலும் பாராட்ட மாட்டார். குறைமட்டும் ஒரு முழத்துக்குச் சொல்லுவார்.

மதியம் ஒரு மணி போல் தன் வீட்டு பெரிய காரில் வந்திறங்கினார் ராதா. வந்ததும் முதல் வேலையாக மாலதி சமைத்து வைத்ததை வயிறு நிறைய உண்டுவிட்டுப் பெரும் ஏப்பத்துடன் சோஃபாவில் வந்தமர்ந்தார்.

கலையரசன் அவருக்கு எதிரில் அமர்ந்தார். வர்ஷனாவும் வருணியனும் தங்கள் தந்தைக்குப் பின்னால் நின்றிருந்தனர். அவர்கள் இப்போது சோஃபாவில் அமர்ந்தால் மரியாதை தெரியாமல் பிள்ளைகளை வளர்த்திருக்கிறாள் என்று மாலதியைக் குறை கூறுவார். அங்கே நிற்காது சென்றாலும் மாலதிக்குத்தான் குட்டு விழும்.

வர்ஷனாவை ஒருதடவை ஏற இறங்கப் பார்த்த ராதா "அரசு.. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்தன்"
என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.

சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்த மாலதியும் வாசலுக்கு வந்து அவர் சொல்லப்போவதை காதுகொடுத்துக் கேட்டாள்.
"இத பார் அரசு... எனக்கிருக்கிற வசதிக்கும் செல்வாக்கிற்கும் எத்தனையோ பேர் தங்கள் மகளை எங்கள் வீட்டு மருமகளாக்க தவமிருக்காங்க. ஆனா, எனக்குத்தான் நம்ம சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதென்ற கவலை.. நான் நினைச்சா கோடீஸ்வர வீட்டுப் பெண்ணையே என் பையனுக்குக் கட்டி வைத்து விடுவேன். ஆனா, நீயும் ஒன்னப் பெத்து வைச்சிருக்கியே. அதான் பெரிய மனசு பண்ணி உன் பொண்ண எனக்கு மருமகளாக்குவோம் என்று முடிவு செய்திருக்கன். சீக்கிரமா நல்ல நாள் பார்த்து கல்யாணத்த முடிச்சிடுவம். சரியா..." என்றார்.
 
Top