எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மிஞ்சியின் முத்தங்கள் - கதை திரி 7

NNK-50

Moderator
மிஞ்சியின் முத்தங்கள் 7


1707306715266.jpeg


அதிவீரனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்ற அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது ராஜவேலுவின் முகத்தில் “யாருங்க” என்று பின்னில் வந்த பெண்மணி இவனைக் கண்டதும் பயத்தோடு இரண்டடி பின்னில் சென்றாள்.

எங்கேயோ பார்த்து மறந்த அந்த முகத்தை மீண்டும் ஊன்றிப் பார்த்தான் அதிவீரன், ராஜவேலுவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் இருவரையும் கூர்மையாகப் பார்த்துக் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நிற்க ராஜவேலுவுக்கு தொண்டை வறண்டது.

கையேடு பிடிபட்ட பிறகு என்ன சொல்லித் தப்பிக்க ஒருவார்த்தை அவரிடம் பேசவில்லை அசையாமல் அப்படியே நின்றான் ‘நீ சொல்ல வேண்டும் நீயேதான் சொல்ல வேண்டும்’ என்ற உறுதியோடு.

“கம்பெனில நடந்த விபத்துல அடிபட்டு ஹாஸ்பிட்டள்ள இருந்தப்போ என்னைப் பாத்துகிட்ட நர்ஸ்” என்க அவனுக்குப் பிடிபட்டது, இரண்டுமாதம் படுக்கையில் கிடந்தபோது இவர் தான் அங்கே பார்த்துக்கொண்டார், இப்பொழுதும் அவனிடம் அசைவில்லை.

“புருஷன் இறந்துட்டான் ஒரு பெண் குழந்தையை வெச்சுகிட்டு தனியா கஷ்டப்பட்டா அதான்” என்று முடிக்கும்போது ராஜவேலுவின் பாதங்கள் நிலத்திலிருந்து இரண்டடி மேலே உயர்ந்திருந்தது, கழுத்தோடு சேர்த்து பிடித்துச் சுவரில் சாய்த்து தூக்கி நிறுத்திவிட்டான், பிடி இறுக மூச்சுமுட்டியது.

“ஐயோ விட்டிருப்பா ப்ளீஸ்” என்று அருகில் வந்தவளை அவனின் பார்வையே தள்ளி நிறுத்தியது

“உன்னைக் கட்டிக்கிட்ட பாவத்துக்கு என் அம்மா மூணு பிள்ளைங்களை வெச்சுகிட்டு என்ன பன்னன்னு தெரியாம நின்னாங்க அது உன் கண்ணுக்குத் தெரியல, பொண்ணு கல்யாணம் முடிவாகி எப்படி நடத்தன்னு தெரியாம தவிச்சது உன் கண்ணுக்குத் தெரியல, இருந்த எல்லாத்தயும் அடகு வெச்சுட்டு குடும்பமே வீதியில நின்னது உனக்குத் தெரியல”.

“ஆசப்பட்டத படிக்க முடியாம விரும்புறவங்கள பாக்க முடியாம எங்கயோ கிடந்து நான் கஷ்டப்படுறது உனக்குத் தெரியல, பிள்ளையோட உழைப்பை அவனுக்குத் தெரியாம திருடி யாருக்கோ குடுக்குறோம்னு கொஞ்சம்கூட வெக்கமா இல்ல ஆனா இவங்க கஷ்டப்பட்டது மட்டும் தெரியுதுல” என்றவனுக்கு அவரை அங்கேயே வெட்டிப்போடும் ஆத்திரம்.

ராஜவேலுவை கீழே உதறியவன் வேகமாக வெளியேறினான், கடற்கரையில் அமர்ந்திருந்தவனுக்கு என்ன செய்ய யாரிடம் சொல்ல ஒன்றும் புரியவில்லை, தாயால் இதைத் தாங்க இயலுமா மாமாவிடம் கூற முடியுமா.

அக்காவின் வீட்டினருக்கு தெரிந்தால்?... தொட்டதிற்கெல்லாம் அவளைக் குத்திக்கிழிக்கும் அவளின் மாமியாரும் கணவனும் இப்படியொரு விஷயம் அறிந்தால் அவளை அந்த வீட்டில் வாழ விடுவார்களா…

கொடிமலர்? அவள் வீட்டினருக்கு தெரிந்தால் அவனால் அதற்குமேல் யோசிக்கமுடியவில்லை மண்டை வெடித்தது, மனதால் மிகவும் உடைந்துபோனான், வீட்டிற்கு வந்தபோது தாயின் குரல் செவியை நிறைத்தது.

“அந்த அன்னாசிப்பழம் எடுத்து நறுக்கிவை ஆதி அப்பாக்கு ரொம்ப பிடிக்கும் அப்படியே கொஞ்சம் அன்னாசி பழ கேசரி செய்யணும் ஆதிக்கு ரொம்ப பிடிக்கும்” என்று நிர்மலாவிடம் கூறிக்கொண்டிருந்தார் பார்வதி.

மனதில் மீண்டும் எரிச்சல் பரவியது அன்னாசிப்பழத்தின் மீதே வெறுப்பு வருவதை போல… அவனின் அறைக்குள் சென்று முடங்கினான்.

வீட்டிற்கு செல்வதை நினைத்தாலே ராஜவேலுவுக்கு பயத்தில் நெஞ்சை அடைத்தது தன்னுடைய செயலில் விளைந்த கோபத்தில் என்ன செய்வான் என்பதை யோசிக்கவே முடியவில்லை அவரால்

அனைவரும் உறங்கியபின் வந்துசேர்ந்தார் ராஜவேலு, மனைவி தனக்காகக் காத்திருப்பாள் என்று நினைத்து வர இருளில் ஹால் சோபாவில் அமர்ந்திருந்தான் அதிவீரன்.

“நில்லு” என்ற கர்ஜனையில் அப்படியே நின்றுவிட்டார் “என்ன தைரியத்துல இந்த வீட்டுக்குள்ள இப்போ வந்துருக்கன்னு தெரியும், யார்கிட்டயும் சொல்லியிருக்க மாட்டேன்னு நம்பிக்கை அதானே” என்க.

தலை நிமிராமல் நின்றிருந்தார் “இப்போ சொல்லமாட்டேன் உன்னமாதிரி குடும்பத்தை யோசிக்காம இருக்க முடியாதே, உன்னை மாதிரி ஒருத்தன் கூட வாழ்ந்ததை நினச்சு என் அம்மா தன்னையே அழிச்சுப்பாங்க”.

“கட்டிக்குடித்த ஒரு பொண்ணு இருக்கு அதைப்பதின பயமாவது இருந்ததா உனக்கு, இனிமே என் அம்மா இருக்குற எடத்துல நீ இருக்க கூடாது உன் நிழல்கூட அவங்க மேல படக் கூடாது, யார்கிட்டயும் இப்போதைக்கு சொல்லமாட்டேன் ஆனா உனக்கான தண்டனை இன்னைல இருந்து ஆரம்பம்” என்றவன் அவனின் அறைக்குச் சென்றான்.

இரவெல்லாம் உறக்கமே இல்லை அவனுக்கு, அதிகாலை பார்வதி எழுந்து வந்தபோது சோபாவில் தலைசாய்த்து விழிமூடி அமர்ந்திருந்தான் அதிவீரன்.

“எய்யா என்ன!” என்று அவனின் அருகில் வந்து அமர்ந்த பார்வதி அவனின் நெற்றியில் கை வைத்து பார்த்தார் “என்னய்யா உடம்பு முடியலையா” என்க.

“ஒண்ணுமில்லமா” என்றான் சோர்வாக ஆளே உடைந்துபோயிருந்தான் “என்னப்பா என்னாச்சு” என்றார் பதட்டமாக, அன்னையை பயமுறுத்துகிறோம் என்று புரிய “இல்லமா தலை வலிக்குது” என்றான்.

“நாளைக்கு ஊருக்கு போகணும் ஏன் இப்படி வெயில்ல அலையிற” என்றவர் “கொஞ்சம் படுத்துக்கோ நா போய் காபி கொண்டுவரேன்” என்று உள்ளில் சென்றார்.

இரவெல்லாம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான், காப்பி குடித்து மேலே சென்று குளித்துவந்தவன் “சாப்பாடு வேண்டாம்” என்றுவிட்டு வெளியில் சென்றான்.

பார்த்திபன் அவனுக்காக கடையில் காத்திருந்தார், அவருடன் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்ட அவரின் நண்பரின் மகன் ஒரு இளைஞனும் இருந்தான்.

“என்ன மாப்ள கடையை பாத்துக்க நாளைக்குள்ள நம்பிக்கையான ஆள் வேணும்னு சொன்ன… என்னாச்சு?” என்றார் அந்த இளைஞனை அறுமுகப்படுத்திக்கொண்டே, என்ன செய்யவேண்டும் சம்பளம் எவ்வளவு என்று அவனுக்கு விளக்கினான் அதிவீரன்.

“கடை கணக்கு தினமும் ராத்தரி மாமாகிட்ட குடுத்துடுன்னும் எந்த தப்பும் நடக்கக்கூடாது, ஏதாவது தப்பு நடந்துச்சு அடுத்த நாள்ல இருந்து நீ வேலையில இருக்க மாட்ட, யாரும் வந்து கடைல பொருள் எடுத்துட்டு காசு குடுக்காம போகக்கூடாது அது என்வீட்டு ஆளுங்களா இருந்தாலும் சரி புரிஞ்சுதா…” என்க.

“புரிஞ்சுதுண்ணா” என்றான் அவன்.

“மாமா வீட்டுக்கு தேவையானதை அம்மாகிட்ட கேட்டு குடுத்தனுப்ப சொல்லு” என்றான், அவன் குரலில் இருந்த தீவிரம் ஏதோ ஒரு பயத்தை கொடுத்தது பார்த்திபனுக்கு.

“இங்க பாரு கார்த்தி இனிமே நீதான் இங்க எல்லாத்துக்கும் பொறுப்பு பாத்துக்கோ” என்றவர் மருமகனை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தார்.

“என்ன மாப்ள என்ன பிரச்சனை சொல்லுயா, உன் முகமே சரியில்ல” என்றார் அவனை ஆராய்ந்துகொண்டே.

“என்கிட்டே எதுவும் கேக்காத மாமா, அந்த ஆள் வந்து காசு கேட்டா ஒரு ரூபா கூட கொடுக்காத” என்றான் வார்த்தைகளை கடித்துதுப்பி.

“யாரை சொல்ற மாப்ள” என்க.

“ஹ்ம்ம்… உன் அக்கா புருஷன்” என்றான்.

“மாப்ள என்னனு என்கிட்டே சொல்லு அவரு பண்ற திருட்டுதனலாம் கொஞ்சம் எனக்கும் தெரியும், என்னனு அந்த ஆள் கிட்ட சண்டைபோடன்னு பேசாம இருக்கேன், நீ இப்போ பேசறதை பார்த்தா ஏதோ பெருசா இருக்கும்போல எங்கயாவது பெருசா பணத்தை வாங்கிட்டாரா! உன் தலைல விழுந்துடுச்சா சொல்லுயா” என்க ஆழ மூச்செடுத்தவன் “சொல்றேன் இப்போயில்ல” என்றான் தூரே பார்வை பதித்து.

மகனுக்கு எடுத்துச்செல்ல பொடிவைகள், எண்ணெய், வீட்டில் செய்த பலகாரம் என்று அனைத்தையும் பார்த்து பார்த்து எடுத்துவைத்தார் பார்வதி, அடுத்தநாள் காலை பத்து மணிக்கு பிளைட், இங்கிருந்து சென்னை சென்று ஏறவேண்டும் அதிகாலை புறப்பட்டுவிடுவான்.

முகமெல்லாம் வாடி கிடந்தது பார்வதிக்கு அவன் முதல் முறை போகத்தொடங்கியதில் இருந்தே இப்படித்தான் தாயை சமாதானப்படுத்தவே நேரம் போய்விடும்.

அந்த நொடி கொடிமலரின் மூத்த சகோதரன் சுகுமாரின் அலுவலக கேன்டீனில் அவன் முன்னில் அமர்ந்திருந்தான் அதிவீரன் “எனக்கு உங்கள் தங்கையை பிடித்திருக்கிறது திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.

அன்று பெரியப்பா மகனின் காதுகுத்து விழாவில் பார்த்து பேசியிருந்தார்கள், சித்தப்பா ராஜப்பனும் நல்ல விதமாக கூறியிருந்தார் என்றாலும் தங்கைக்கு மாப்பிள்ளையாக எண்ணும்போது… சுகுமாரிடம் அதிகமாகவே யோசனை நிறைந்தது.

“நாளைக்கு ஊருக்கு போறேன் யோச்சிச்சு சொல்லுங்க, என்னைப்பத்தி என்ன விசாரிக்குணுமோ தாராளமா விசாரிங்க” என்றவன் தன்னுடைய அலைபேசி எண்னை அவனிடம் கொடுத்து “உங்க பதிலுக்காக காத்திட்டிருப்பேன்” என்று சொல்லிச்சென்றான்.

புறப்படுவதற்கு முன் விமானநிலையத்தில் வைத்து மாமனிடம் கொடிமலரின் மீதான விருப்பத்தை வெளிப்படுத்தினான், எப்பொழுதுமே பார்த்திபன் மட்டுமே வருவார் மருமகனை வழியனுப்ப “என்ன மாப்ள நீ இப்போ சொல்ற, முன்னாடியே சொல்லியிருந்தா இந்நேரம் எப்படியாவது பேசி முடிச்சுருப்பேன்” என்று உண்மையில் வருத்தப்பட்டார்.

“இல்ல… இதான் சரியான நேரம் நீ கொஞ்சம் பார்த்துக்கோ மாமா, அவங்க அண்ணா கிட்ட நான் பேசியிருக்கேன் இருந்தாலும்… ஒருவேள அவளுக்கு வேற எதுவும் பாக்குற மாதிரி தெரிஞ்சா எனக்கு உடனே சொல்லு” என்றான்.

“இம்புட்டு ஆசையை வெச்சுகிட்டு ஏன்யா இப்படி பண்ண, இந்நேரத்துக்கு நிச்சயமாவது செஞ்சிருக்கலாம்” என்றார் மீண்டும்.

ஏனோ மனதில் ஒரு சஞ்சலம் இருந்துகொண்டே இருந்தது அதிவீரனுக்கு, தந்தையின் செயல்… கொடிமலருக்கு கொடுத்த வாக்கு இப்பொழுது தான் பேசிவிட்டு வந்ததால் அவர்களின் சிந்தனை செல்லும் விதம் என்னவாக இருக்கும் என்ற எண்ணம் அனைத்தும் சுழன்றது மனதில்.

ஒரு இடத்தில்கூட கொடிமலருக்கும் தன் மீது ஒரு விருப்பம் இருக்கிறது என்று கூறவில்லை, தன்னுடைய விருப்பமாக மட்டுமே சொல்லிவைத்தான்.

கொடிமலரின் திருமணத்தைப் பற்றிய யோசனை குடும்பத்தில் இருந்தது தமக்கைகள் இருவரும் பதினேழு பதினெட்டு வயதில் திருமணம் செய்திருக்க இவளுக்கு மாப்பிளை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தனர் இருவரும்.

இப்பொழுது இப்படியொரு சம்பந்தம் தேடி வந்திருக்க சகோதரர்கள் இருவருக்கும் மிகுந்த, பெற்றோர் இல்லாத காரணத்தால் வீட்டின் முக்கிய முடிவுகள் சித்தப்பா ராஜப்பனிடம் கலந்தாலோசித்தே எடுக்கப்படும், இன்றும் அவரிடமே சென்று நின்றனர்.

கேட்டவுடனே அவர் சொன்னது “நல்ல சம்பந்தம்தானே பையன எனக்கும் தெரியும் நல்ல குணமான பையன், அவங்க மாமாவைத் தெரியும் பையனுக்கு நல்ல வேலை இருக்கு சீக்கிரமா இங்கேயே வந்துடுவாருன்னு சொன்னாங்க”.

“அதோட வீடு இருக்கு சொந்தமா கடை இருக்கு, நம்ம விமல் கூடப் படிச்ச புள்ள… அவனும் அன்னைக்கு நல்லவிதமாதானே சொன்னான்” என்றார் (விமல் ராஜப்பனின் அண்ணன் மகன் அதிவீரனின் உடன் படித்தவன்).

“அதோட ரொம்ப முக்கியம் பையன் பக்கத்து ஊரு பாப்பா நம்ம பக்கத்துலயே இருக்கும்” என்றவர் “இன்னும் நாள் இருக்கே நம்ம பக்கத்துலயிருந்து நாலு பேர்கிட்ட விசாரிப்போம்” என்றார்.

அவர்களுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது, பிரச்சனை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை தங்கைக்கு இவரையே பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் என்றாலும் அவர்கள் வீட்டிலிருந்து பெரியவர்கள் யாரேனும் வந்து பேசவேண்டுமே வரட்டும் பிறகு பார்க்கலாம் என்று முடிவுசெய்துகொண்டனர.

ராஜவேலுக்கு கடையிலிருந்து ஒரு சிறு துரும்பை கூட நகர்த்த முடியவில்லை ‘எந்தப் பொருளையும் கணக்கில் சேர்க்காமல் கொடுக்க முடியாது’ என்றுவிட்டான் கார்த்தி, அதோடு ராஜவேலுக்கு பொருளாகவோ பணமாகவோ கொடுக்கக் கூடாது என்பது முதலாளியின் உத்தரவு என்றும் சொல்லிவிட அவனை மனதிற்குள் திட்டமட்டுமே முடிந்தது.

அதிவீரன் துபாய் சென்ற அடுத்த மாதம் மகன் அனுப்பும் பணத்துக்கு அவர் காத்திருக்க ஒன்றும் வரவில்லை, தொடர்ந்து மூன்று மாதங்கள் அவனிடமிருந்து பணமே வரவில்லை பார்வதியை நச்சரிக்க தொடங்கினார் “கேளு கேளு” என்று.

மகன் தினமும் அழைத்துப் பேசினாலும் ஒருமுறைகூட இதைப் பற்றிப் பார்வதி கேட்டதில்லை, எந்த விஷயத்திலும் அவன் தவறியதில்லை அனைத்தையும் சரியாகச் செய்திருக்கிறான் இப்பொழுது அனுப்பவில்லை என்றால் நிச்சயம் காரணம் இருக்கும், அதோடு ஒருவன் மட்டுமே ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணமிருக்க பணத்தை பற்றி ஒன்றுமே கேட்கவில்லை அவர்.

மூன்றுமாதமாகக் கையில் காசு இல்லாமல் பைத்தியம் பிடித்தது ராஜவேலுவுக்கு, அதோடு அந்த வீட்டிற்கும் ஒன்றும் வாங்கி கொடுக்க முடியவில்லை இரண்டு வாரமாக அவள் பணம் கேட்டுத் தொல்லை செய்துகொண்டிருந்தாள்.

கடன் வாங்க தொடங்கியிருந்தார் மகனின் பெயர் சொல்லி, முதல்முறையாக ஆதவனிடம் மின்கட்டணம் கட்ட சொன்னார் பார்வதி அப்படியே அலுவலகம் முடிந்து வரும்போது காய்கறிகள் வாங்கிவர சொன்னார்.

அதிசயமாக அன்னையை பார்த்தவன் “என்னமா இது என்கிட்டே ஏன் சொல்றீங்க, காசு குடுங்க மாலா வாங்கிட்டுவருவா எப்போவும் அவதானே போறது” என்றான் வீட்டில் பணிசெய்யும் பெண்ணைக் காணபித்து.

“அவ போய்க் கேட்டவுடனே கொடுக்க உங்க அப்பாவா கடை வெச்சுருக்கார், காசு குடுக்கணும்” என்றார் பார்வதி.

“ஆதி அனுப்பியிருப்பானே” என்றான் சந்தேகமாக.

“அவன் இனிமே அனுப்பமாட்டான் நீதானே இந்த வீட்டுக்கு மூத்த பிள்ளை இனிமே நீதான் செய்யணும், உங்களுக்கே செஞ்சுட்டு இருந்தா அவன் வாழ்க்கையை எப்போ பாக்க, இங்க பாரு காய் வாங்கிட்டுவந்தா சமைப்பேன் இல்லனா நாளைல இருந்து கஞ்சிதான் எல்லார்க்கும்” என்று தன் அறைக்குள் நுழைந்துகொண்டார்.

இந்த முறையும் கணிசமான தொகையைத் தாயிடம் கொடுத்திருந்தான் அதிவீரன், இந்த முறை ஏனோ பார்வதி அந்தப் பணத்தில் இவர்களுக்கு எதுவும் செய்வதில்லை என்ற முடிவோடு இருந்தார்.

கணக்கு பார்த்துப் பார்த்துச் சிக்கனமாகக் கொஞ்சம் காய்கறிகள் மட்டும் வாங்கிவர தொடங்கினான், ஞாற்றுக்கிழமைகளில் மீன் கறி இல்லாமல் சாப்பிட மாட்டார்கள் மூன்று நான்கு வஞ்சரம் மீன் ஒரு நாளில் மட்டும் தின்று தீர்ப்பார்கள், இப்பொழுது… அதன் விலையைக் கேட்டு அதை நுகர்ந்துபார்க்க கூட அச்சப்பட்டான் ஆதவன்.

ஓடி ஓடி விளக்கையும் பேனையும் அணைத்தான் பணம் அவன் கட்டுகிறானே! ஒருவன் பணம் அனுப்புவதை நிறுத்தியதும் அவர்களின் வாழ்வே ஆட்டம் கண்டது.

மாதங்கள் உருண்டோட அதிவீரனுக்கு
நல்ல ஒரு சம்பந்தம் வந்திருப்பதாகக் கூறி கொடிமலரின் புகைப்படத்தோடு வீட்டிற்கு வந்திருந்தார் பார்த்திபன்.

 

Advi

Well-known member
நல்லா அனுபவிக்கட்டும்😬😬😬😬😬

இப்ப தான் நல்லா இருக்கு.....
 
Top