எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக! - அத்தியாயம் 16

NNK-64

Moderator

அத்தியாயம் 16​

அதற்கடுத்து ஒரு மாதத்தில் கார் ஓட்ட பழகியிருந்தாள் எழிலழகி.​

அலுவலகத்திற்கு அவளாக காரில் சென்று வந்ததை பார்த்து வாயை பிளந்தார் பார்வதி அம்மாள். அவர் அன்றுதான் ஊருக்கு திரும்ப வந்திருந்தார்.​

அவரைப் பார்த்தும் காரை வெளியில் நிறுத்திவிட்டு, “பாரும்மா எப்படி இருக்கீங்க, உங்க மகள் பேரன் எல்லாம் நலமா?” என்று கேட்டபடி அவளருகே வந்தாள்.​

அவரோ, “எல்லாரும் நலம் தான், நீயே தனியாக காரை ஓட்டிட்டு வர்றியே டாக்டர் எங்கே?” என்றார் ஆச்சரியமாக மேவாயில் கையை வைத்தபடி​

“நிரு மருத்துவமனையில் இருக்கிறார்” என்று நடந்ததை சொன்னாள்​

“எழில் ஏற்கனவே நீ ஒரு அப்பாவி, இந்த நிலையில் தனியாக எப்படி எல்லாம் சமாளிச்சே? நானாக இருந்தாலே தடுமாறி இருப்பேனே” என்றார் பார்வதி வருத்தமுடன்​

“என்ன பண்றது பாரும்மா, நமக்கு வரும் எதிர்பாராத பிரச்சனைகளும் கவலைகளும் தானே நமக்கு அனுபவத்தையும் பக்குவத்தையும் கொடுக்குது. தண்ணீரில் விழுந்தவன் நீச்சலே தெரியா விட்டாலும் நீந்தி போறாடி கரையேறது இல்லையா, அதுபோல தான் இப்போ என் நிலையும். தனியாக சமாளிக்க வேண்டிய நிலையில் நான் தள்ளப்பட்டிருக்கும் போது சமாளிச்சு தானே ஆகணும்” என்றாள் எழிலழகி மென்புன்னகையுடன்.​

“நான் ஊருக்கு போய் வருவதற்குள் உன்னிடம் இப்படி ஒரு மாற்றமா? உன்னுடைய பேச்சில் நிதானமும் தெளிவும் இருக்கு. நான் உன்னை முன்னாடி பார்த்துக்கும் இப்ப பாக்கறதுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக இருக்கு.​

உன்னோட இந்த மாற்றத்தை பார்த்தால் நிரஞ்சன் சந்தோசப்படுவார். நீ போகும் போது என்னையும் கூட்டிட்டு போ, நான் அவரை பார்க்கணும்” என்றார் பார்வதி.​

“நான் இப்போது சென்றால் காலையில் தான் வருவேன், ஞாயிற்று கிழமையில் கூட்டிட்டு போறேன் பாரும்மா. இப்போது கிளம்பறேன்” என்று அவரிடம் விடைப்பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு காரிலேயே சென்றாள்.​

அவள் சென்ற போது நிரஞ்சன் கண் விழித்திருந்தான். ஓடிச்சென்று கண்களில் கண்ணீர் மல்க கணவனை ஆசையாக பார்த்தாள்.​

“பயந்துட்டியா அழகி” என்றான் மெலிதாக புன்னகைத்து.​

ஆமாம் என்பது போல தலையை ஆட்டினாள். சந்தோஷமும் நெகிழ்ச்சியும் போட்டிப் போட அவளுக்கு பேச்சே வரவில்லை. கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது.​

அவன் கன்னத்தை தன் இருகைகளால் பொக்கிஷம் போல பிடித்துக் கொண்டு அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தாள். மெதுவாக மிகவும் மெதுவாக அவனுக்கு வலிக்குமோ என்று எண்ணியவளாக அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.​

“அவ்வளவு தானா?” என்று கண் சிமிட்டினான் கணவன்.​

“நிறைய தர வேண்டி இருக்கு. நீங்க வீட்டிற்கு குணமாகி வந்ததும் மற்றவை” என்றாள் புன்னகையுடன்.​

சிறிது நேரம் கணவனிடம் பேசிக் கொண்டிருந்தாள். அப்போது காவல் நிலையத்திலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அவளை வரச் சொல்லியிருந்தார்கள்.​

இப்போதே கண்விழித்திருக்கும் கணவனிடம் விபத்து எதிர்பாராமல் நடந்தது அல்ல, திட்டமிட்ட சதி. அதுவும் ராஜூ தான் காரணம் என்று இப்போது எப்படி சொல்வது என்று யோசித்தாள்.​

“நிரு, நீங்க ஓய்வெடுங்க. நான் கொஞ்சம் வெளியில் போய்ட்டு வந்துடுறேன்” என்றாள்.​

சற்று புருவம் சுருக்கியவன் அவளிடம் எந்த விளக்கமும் கேட்காமல் “போய் வா அழகி” என்றான் சிறு புன்னகையுடன்.​

எழிலழகி காரிலேயே போலீஸ் நிலையத்திற்கு உள்ளே சென்றாள். அங்கே இருந்த கான்ஸ்டபிளிடம் தன்னுடைய வேலைக்கான அட்டையை காண்பித்து, அவள் கொடுத்திருந்த புகாரைப்பற்றியும், காவல் அதிகாரி அவளை வரச் சொன்னதைப் பற்றியும் கூறினாள்.​

“உட்காருங்க மேடம். சார் உங்க விஷயமாகத்தான் உள்ளே இரண்டு பேரை விசாரிச்சிட்டு இருக்கார்” என்று லாக்அப்பை காட்டினார்.​

அங்கே ராஜூவுடன் சேர்த்து செல்வமும் அவரிடம் அடிவாங்கிக் கொண்டிருந்தனர். கைவலிக்கும் வரை அவர்களை தன் லத்தியால் விளாசி தள்ளிவிட்டு வெளியே வந்தார்.​

“மேடம், நான் நல்லா விசாரிச்சிட்டேன். இவங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டது உண்மை தான். உங்க காரை இவங்க ஏற்பாடு செய்த கார் பின்தொடர்ந்து இருக்காங்க. ஆனால் மற்றொரு காரும் உங்க காரை தொடர்ந்து வந்து இடிக்க முயற்சி செய்திருக்காங்க.​

அதனால் இவங்க குழம்பி போய், எப்படியோ விபத்து நடந்தால் சரி என்று அங்கிருந்து கிளம்பிட்டதாக சொல்றாங்க. உங்களோட நடக்க இருந்த திருமணத்தை நிரஞ்சன் தடுத்ததால் தான் இந்த ராஜூவும் செல்வமும் உங்க கணவர் மேல் வன்மம் கொண்டு கொல்ல முயற்சி செய்திருக்காங்க.​

அதற்கான வாக்குமூலத்தையும் கொடுத்திட்டாங்க. கொலைமுயற்சி வழக்கில் இவங்களுக்கு சீக்கிரமே தண்டனை கிடைத்திடும். தேவைபடும் போது நீங்கள் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொல்ல வேண்டி இருக்கும்” என்றார்.​

அவளும் சரி என்றாள்.​

“அந்த இன்னொரு கார் யாருடையதுனு இப்போ கண்டுபிடிக்கணும், உங்களுக்கு வேற யார்மீதாவது சந்தேகம் இருக்கா?” என்று கேட்டார்.​

சற்று யோசித்தவளுக்கு யார்மீதும் சந்தேகம் வராமல் போகவே உதட்டை பிதுக்கி இல்லை என்பது போல தலையாட்டினாள்.​

“சரி, அப்படி யார்மீதாவது சந்தேகம் வந்தால் எனக்கு தயங்காமல் அழைத்து சொல்லுங்க. இப்போ கிளம்பலாம்” என்றார்.​

காவல் அதிகாரியிடம் விடைப் பெற்றுக் கொண்டு காரை செலுத்தியவள், பஸ் நிலையத்திலிருந்த பழக்கடையில் வண்டியை நிறுத்தினாள். கணவன் தான் இப்போது விழித்துவிட்டானே. இனி அவனுக்கு எதாவது பழரசம் கொடுத்து உடம்பை தேற்றலாம் என்று நினைத்துக் கொண்டு பழங்களை வாங்க சென்றாள்.​

அப்போது ஏதோ தோன்ற பஸ் நிலையத்தை திரும்பி பார்த்தாள். அவள் தங்கை சந்திரிகா வெளிறிய முகத்துடன் உறைந்து போய் நின்றிருந்தாள்.​

“சந்திரிகா” என்று அழைத்தபடி அவளருகே சென்றாள் எழிலழகி.​

சுரத்தே இல்லாமல் நிமிர்ந்து பார்த்தாள் சந்திரிகா. “என்ன ஆச்சும்மா, ஏன் இப்படி ஏதோ மாதிரி இருக்க? எட்டு மணிக்கு மேல் ஆகுது வீட்டிற்கு போகாமல் இங்கே என்ன செய்யறே?” என்றாள் அழகி.​

“வீட்டிற்கு போவதா, இல்லை செத்து போவதானு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றாள் அவள் பொங்கிய அழுகையை அடக்கியபடி.​

“சந்திரகா, இங்கே வேணாம் வா, காரில் அமர்ந்து பேசலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு காரில் போய் அமர்ந்தாள்.​

“எதுவானாலும் என்கிட்ட சொல்லுமா. யாருக்கும் தெரியாமல் உன் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்” என்றாள் அழகி அவள் தோளை தடவியவாறு​

அடுத்த நொடி தன் அக்காவை பற்றிக் கொண்டு கதறி அழுதாள் சந்திரிகா. அவளை தன் தோள் மேல் சாய்த்துக் கொண்டு ஆசுவாசப்படுத்தினாள். “தைரியமா சொல்லுடா, நான் இருக்கேன்” என்றாள் அவள் முதுகை தடவியவாறு.​

“அக்கா இது கடைசி வருடப் படிப்பு என்பதால் அப்பா என்னை அரசுவேலைக்கான பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படிக்க சொன்னார். அப்போதான் படித்து முடிக்கவும் வேலை கிடைக்கவும் சரியாக இருக்கும் என்று சொன்னார். நீ படித்த அதே பயிற்சி நிலையத்தில் தான்…” என்று அவள் முடிக்காமல் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.​

இப்போது எழிலழகிக்கு என்ன நடந்திருக்கும் என்று தெள்ள தெளிவாக புரிந்து விட்டது.​

“கோபாலான் உன்னை என்ன செஞ்சான்?” என்றாள் எழிலழகி பற்களை கடித்தபடி.​

அழகி நேரடியாக பேரைச் சரியாக சொன்னதும் அழுவதை நிறுத்திவிட்டு “அக்கா” என்று அதிர்ச்சியாக பார்த்தாள் சந்திரிகா.​

“சொல்லு என்ன செய்தான்? பயப்படாதே. அவன் என்ன செய்திருந்தாலும் உடம்பில் சேறு பட்டுவிட்டதாக நினைச்சு தேய்ச்சு குளிச்சிடு எல்லாம் சரியாக போயிடும். கற்பு போயிடுச்சினு எல்லாம் யோசித்து அந்த அற்பனின் தவறுக்காக உன் உயிரை மாய்ச்சுக்கலாம்னு நினைக்காதே” என்றாள் அழகி அழுத்தமான குரலில்.​

தங்கை வீட்டிற்கு போவதா செத்துபோவதா என்று யோசிப்பதாக சொன்னதிலேயே விஷயத்தை ஊகித்துவிட்டாள் எழிலழகி.​

“அக்கா உனக்கு எப்படி தெரியும், உன்னையும் அந்த” என்ற சந்திரிகாவை இடைமறித்தாள் எழிலழகி​

“நான் அதற்குள் தப்பிச்சிட்டேன் சந்திரிகா. அதனால் தான் மறுபடியும் அங்கே போக மாட்டேன் என்று உறுதி இருந்தேன்” என்றாள்​

“நீ நீ ஏன் அப்பவே வீட்டில் சொல்லை?” என்றாள் தங்கை​

இகழ்ச்சியான புன்னகையை சிந்திவிட்டு, “அந்த வீட்டில் என்னை யார் பேச விட்டார்கள் அதையெல்லாம் சொல்வதற்கு? இப்போது நீ வீட்டிற்கு போனால் அப்பாவிடம் நடந்ததை சொல்வியா? சொல்றதற்கான தைரியம் இருக்கா? இல்லை கேட்டு கொள்வதற்கான சூழ்நிலை தான் அந்த வீட்டில் இருக்கா?” என்றாள் எழிலழகி இளக்காரமாக.​

“நீ சொல்றது உண்மை தான். நானும் அப்பாவிடம் இதை எல்லாம் சொல்லியிருக்க மாட்டேன். அம்மாவும் என் முகமாறுதலை எல்லாம் கவனிக்கறதே இல்லை” என்றாள் யோசனையுடன்​

இப்போது தான் தன் வீட்டிலிருக்கும் போது அக்காவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று சந்திரிகாவால் உணர முடிந்தது.​

“சந்திரிகா, இனிமேலும் அவனை சும்மா விடக்கூடாது. நான் எனக்கு தெரிந்த காவல் அதிகாரியிடம் விஷயத்தை சொல்றேன். உன் பெயர் வெளியில் வராமல் அவர் நடவடிக்கை எடுப்பார். அவரிடம் மட்டும் போனில் நடந்ததை சொல்றியா?” என்றாள் எழிலழகி.​

சந்திரிகாவும் சரி என்று தலையை ஆட்டினாள்.​

எழிலழகி சற்றுமுன் பேசிவிட்டு வந்த காவல் அதிகாரிக்கு போன் செய்து நடந்ததை கூறினாள். அவர் அவளை அங்கேயே காத்திருக்கும்படி சொல்லி சில நிமிடங்களில் அவர்கள் இருந்த காரை நோக்கி வந்தார்.​

உள்ளே வந்து அமர்ந்தவர். “இப்போ சொல்லுங்க, நான் சொல்றதை ரெக்கார்ட் செய்துக்கிறேன். உங்க முகமோ பேரா வெளியில் வராது. அதற்கு நான் உத்திரவாதம்” என்றார்.​

சந்திரிகாவும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நடந்ததை சொல்ல தொடங்கினாள். கோபாலன் அரசு வேலைக்கு அவளை சிபாரிசு செய்வதாக சொல்லி, அவளை வகுப்பு முடிந்தபின் பார்க்க சொல்லியிருக்கிறார்.​

அனைவரும் கிளம்பும் வரை அவளை காக்க வைத்து, அவர்கள் சென்றதும் பயிற்சி வகுப்பின் தலை வாசலை அடைத்து விட்டு உள்ளே வந்தார். அவர் கதவை அடைத்ததை உணராமல் சந்திரிகா அவர் அறையில் காத்திருந்தாள்.​

அவளருகில் வந்தவர் அரசுவேலை வாங்கி தருவதாக சொல்லி தன்னிடம் இணக்கமாக நடந்துக் கொள்ள வேண்டும் வற்புறுத்தினார். கடைசிவரை சந்திரிகா அவருக்கு ஒத்துழைக்காமல் போகவே அவளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததோடு இல்லாமல், இதை வெளியில் சொன்னால் உனக்கு தான் அசிங்கம் என்று மிரட்டி அனுப்பி இருக்கிறார்.​

அவள் சொல்லி முடிக்கவும் எழிலழகிக்கு உடம்பெல்லாம் கோபத்தால் சிவந்தது.​

“சார் இந்த வழக்கோடு, என் கணவரின் கொலை முயற்சியிலும் அவர்தான் ஈடுபட்டிருக்கிறார் என்ற வழக்கையும் போடுங்க. நான் அதற்கான கம்ப்ளெய்ண்ட் தருகிறேன்” என்றாள்.​

“நாளையே அந்த பயிற்சி நிலையத்தில் மேலும் பல பெண்களிடம் விசாரிக்கிறேன். அவன் வாழ்க்கை முழுவதும் வெளிவராதபடி கேசைப் போட்டு அவனை சிறையில் அடைத்து விடுகிறேன்” என்றார் அவரும் அதே கோபத்துடன்.​

சகோதரிகள் அவருக்கு நன்றி கூறினார்கள். அவர் கிளம்பியதும் எழிலழகி காரை எடுத்தாள்.​

“அக்கா எங்கே போறே, நானே வீட்டிற்கு போயிடுவேன். இப்போ கொஞ்சம் தெளிவாயிட்டேன் பயப்படாதே” என்றாள் சந்திரகா.​

“நீ தெளிவாயிட்ட, வீட்டில் இருப்பவர்கள் தெளிவாக வேணாம்? அவர்களிடம் நான் பேச வேண்டியிருக்கு” என்றபடி ஒரு முடிவுடன் காரை எடுத்தாள்.​

(தொடரும்)​

 

Attachments

  • WhatsApp Image 2023-12-19 at 12.40.23 PM.jpeg
    WhatsApp Image 2023-12-19 at 12.40.23 PM.jpeg
    83.9 KB · Views: 0

Mathykarthy

Well-known member
சூப்பர்... நிரு கண் முழிச்சுட்டான்... 🤩 அழகியோட மாற்றத்தை பார்த்து சந்தோசப் படுவான்... 🙂

அழகி செம... சூழ்நிலை தான் மனிதனை திடமாக்குது எதையும் எதிர்கொள்ள வலிமையைத் தருது...
அழகியோட அதிரடி நடவடிக்கைகள் சூப்பர் 👌
 

NNK-64

Moderator
சூப்பர்... நிரு கண் முழிச்சுட்டான்... 🤩 அழகியோட மாற்றத்தை பார்த்து சந்தோசப் படுவான்... 🙂

அழகி செம... சூழ்நிலை தான் மனிதனை திடமாக்குது எதையும் எதிர்கொள்ள வலிமையைத் தருது...
அழகியோட அதிரடி நடவடிக்கைகள் சூப்பர் 👌
Thank you sis 💕
 

santhinagaraj

Active member
நிரு கண் முழிச்சுட்டான் 😍😍😍

அழகியோட தெளிவும் தைரியமும் சூப்பர் 👌👌👌
வீட்டில் அழகியோட தைரியமான பேச்சுக்காக வைட்டிங்
 

Advi

Well-known member
வாவ் அழகி செம்ம டா 😍😍😍😍😍

கோபால் இனி உனக்கு பால் தாண்டி
 

NNK-64

Moderator
நிரு கண் முழிச்சுட்டான் 😍😍😍

அழகியோட தெளிவும் தைரியமும் சூப்பர் 👌👌👌
வீட்டில் அழகியோட தைரியமான பேச்சுக்காக வைட்டிங்
Thank you sis 💕🙏🏻😊
 

NNK-64

Moderator
வாவ் அழகி செம்ம டா 😍😍😍😍😍

கோபால் இனி உனக்கு பால் தாண்டி
What a rhyming கோபால் பால், சூப்பர் சிஸ் 💕💓❤️💐
 
Top