அத்தியாயம் - 14
அவன் மட்டுமல்ல அவ்வீட்டிலிருந்த ஒவ்வொருவரின் மனமும் இன்றைய கௌசிக்கின் வருகையால் கடந்து வந்த அவர்களது அழகான நாட்களையும் அதை தொடர்ந்த அந்த கசப்பான நாட்களையும் அசைபோடத் தொடங்கியது..
(ஒவ்வொருத்தங்களும் அவங்க அவங்க பேசின நிகழ்வ நினைக்கிறாங்கன்னு கற்பனை பண்ணிக்கங்க மக்களே.. அப்போ தான் லாஜிக் கரெக்டா இருக்கும் ஹிஹிஹி.)
அந்த அரண்மனை வீடு முழுவதும் தோரணங்களாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு அத்தனை அம்சமாய் ஜொலிக்க வீடு முழுவதும் சொந்த பந்தம் உற்றார் உறவினவர்கள் நண்பர்கள் என நிரம்பி வழிந்தனர்.
கொடைக்கானலின் மதிப்பிற்குரிய நாராயண கிருஷ்ணணின் வீட்டுத் திருமணம் என்றால் சாதாரணமாக இருக்குமா? என மக்கள் வியக்கும் அளவிற்கு அத்தனை தடபுடலாய் தங்கள் அரண்மனை வீட்டிலே தங்கள் வீட்டின் பெண்ணரசி பூரணியம்மாளின் செல்ல இளவரசி நித்யாவின் திருமணத்திற்கான நிச்சயதார்த்தை கோலகாலமாய் ஏற்பாடு செய்திருந்தார் நாராயண கிருஷ்ணண்.
நாளை திருமணம் இன்று முதல் நாளோ நிச்சயதார்த்தத்துடன் மேலும் சில சடங்குகளை செய்யவே இந்த நிகழ்வை கோலாகலமாய் ஏற்பாடு செய்திருந்தார்.
வீட்டின் நுழைவாயிலிலே வருவோரை வரவேற்று நாராயண கிருஷ்ணண் கமலம்
பூரணி மோகன்ராஜ் மற்றும் கோகுல கிருஷ்ணன் ஆனந்தி ஆகியோர் தம்பதி சகிதமாய் நின்றிருந்தனர்.
வீட்டின் வரவேற்பரையின் நடுநாயகமாய் திரு வெட்ஸ் நித்யா என மணமக்கள் பெயரை தாங்கி நின்ற அலங்கரிக்கப்பட்ட மேடையில் புன்னகை முகமாய் நின்றிருந்தினர் மணமக்கள்.
அவர்களைச் சூழ நின்று கேலி செய்தே ஒரு வழி செய்து கொண்டிருந்தனர் அவ்வீட்டின் இளவட்டங்கள்.
"புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே"
என பாடிய சிவாவிற்கு பின்பாட்டாக திவ்யா மற்றும் அவ்வீட்டின் கடைக்குட்டிகள் தீரன் தீக்ஷி இருவரும் கோரஷ்பாட அவ்விடமே களைகட்டியது.
"மனசோ இப்போ தந்தியடிக்குது மாமன் நடைக்கு மத்தல டம் டம்
மத்தல டம் டம்... மத்தல டம் டம்... மத்தல டம் டம்
சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம்
அட்சத டம் டம், அட்சத டம் டம், அட்சத டம் டம்
புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது
வேட்டி ஒண்ணு சேலையத்தான் கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது
மால டம் டம், மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம், ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம் " என பாடியபடி திவ்யாவோ நித்யாவின் கன்னத்தை கிள்ள மணப்பெண்ணும் வெட்கத்தில் சிவந்து நின்றாள்.
இளம் சிவப்பு நிறத்தில் இடையை இறுக்கி பிடித்த லெஹெங்காவினூடு வெளித் தெரிந்தும் தெரியாதவாறு மின்னிய சிற்றிடையிலும் ஓர் ஆண்மகன் மனம் தடுமாறி நிற்பதை கண்டும் காணாது போல தன் போக்கில் விழாவை ரசித்துக் கொண்டிருந்தவளை ரசித்திருந்தான் விஷ்வா.
"ராட்சஷி கொஞ்சமாச்சும் திரும்பி பார்க்குறாளா பாரு" என வாய்க்குள் அர்ச்சித்தவன் அவள் தனியே சிக்கும் தருணத்திற்காய் காத்திருந்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே அவளும் ஏதோ பொருளெடுக்க ஸ்டோர் ரூம் பக்கம் செல்ல அவளைத் தொடர்ந்து தானும் சென்றவனோ அவளை பின்னிருந்து வேகமாய் அணைத்திருந்தான்..
திடீரென்ற அணைப்பில் அரண்டு கத்த முயன்றவள் இதழ்களை வேகமாய் கரம் கொண்டு மூடியவன் அவள் காதோரமாய் "தியா பேபி நான் தான்" என கிசுகிசுப்பாய் கூறிட அதில் சற்றே பதற்றம் நீங்கியவள் ஒரு பெருமூச்சுடன் அவனை விட்டு விலகி இடுப்பில் கைகுற்றி அவனை முறைத்துப் பார்த்தாள்.
அவனோ சிரிப்புடன் அவளை மேலிருந்து கீழ் ரசித்தபடி "கோபப்பட்டாலும் ரொம்ப அழகா இருக்க தியா பேபி" என அவள் கன்னம் கிள்ள முயல அவன் கரத்தை தட்டிவிட்டவள் மாறா முறைப்புடன் "ஹலோ வக்கீல் ஸார் இந்த டச்சிங் டச்சிங் எல்லாம் என்கிட்ட வெச்சிக்கிடாதிங்க தெரியும்ல நான் பொலீஸ்காரன் தங்கச்சி.. என் அண்ணன் கிட்ட சொன்னேன்னு வெச்சிக்கொங்க அப்புறம் லாடம் தான்" என்றவளின் பேச்சில் கேலியாய் சிரித்தான் விஷ்வா.
"ஹலோ மிஸிஸ் விஷ்வா உங்க அண்ணன் இன்னும் பொலீஸ் ஆகல இப்பா தான் ஐபிஎஸ் எக்ஸாமே எழுதி முடிச்சியிருக்காரு.." என்றவனை உதட்டை சுழித்து பார்த்தவள்.
"எங்கண்ணன் தான் பெஸ்ட் லெவல்ல பாஸ் பண்ணுவான்" என சற்றே கர்வமாய் கூறியதில் எதிரே நின்றவனோ பல்லைக் கடித்தான்.
அவன் முகம் காட்டிய பாவனையில் இதழ்களுக்குள் சிரித்தவள் மனமோ "நான் வேணும் ஆனா என் அண்ணன் வேண்டாதவனா? " என எண்ணிக் கொண்டவளுக்கு மனதின் ஓரம் சிறு கவலை எழத் தான் செய்தது.
தன் மனதிற்கு பிடித்தவனுக்கு தன்னை உயிராய் நேசிப்பவனுக்கு ஏன் நான் உயிராய் மதிக்கும் தன் அண்ணணின் மீது இத்தனை கடுகடுப்பு.. தன் மீது கொண்ட அன்பால் உண்டான பொறாமையா? என சில நேரங்களில் எண்ணுபவளுக்கு பதில் என்னவோ இல்லை என்பதே..
விஷ்வாவின் இந்த கடுப்பும் கோபமும் இன்று நேற்று அல்லவே..
எப்போது தன் தங்கையுடன் இந்த வீட்டிற்கு முதல்முறை வந்தானோ அன்றிலிருந்து கௌசிக் சிவாவிடம் பேசுவதே இல்லை .. எந்த நேரமும் அவன் பெரியப்பாவுடனும் அவர் மகனோடும் மட்டுமே தன் நேரத்தை செலவிடுபவன்
சிலசில நேரங்களில் மட்டும் தன்னோடு சீண்டி விளையாடுபவனுக்கு எந்தப் புள்ளியில் தன் மீது காதல் தோன்றியது என இன்று வரை அவளுக்குத் தெரியவில்லை.
என்று அவன் மனம் கொண்ட காதலை ஒழிவு மறைவின்றி தைரியமாய் அவளிடம் கூறியனானோ அன்றே பெண்ணவள் மனம் அவனிடம் காதலில் தடுமாற ஆரம்பித்தது.
நாட்களின் போக்கில் ஒருத்தர் மீது ஒருத்தர் உயிராய் நேசிப்போம் என்பதை அவ்விருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
காதலால் அவ்விரு மனங்களும் இணைந்திருக்க அவர்களுக்கு குறுக்கே நின்றது என்பது என்னவோ விஷ்வாவின் மனதில் அமிழ்ந்து கிடக்கும் பழிவெறி என்பது அவன் மனமறிந்த ரகசியம்.
ஆம் பழிவெறியே, அவன் கொண்ட பழிவெறி ஒரு உயிரை மட்டுமல்ல தன் உயிர்க் காதலையும் காவு வாங்கப் போவதை அவன் அறிந்திருக்கவில்லை.
மௌனமாய் சில கணங்கள் அவனையே பார்த்திருந்தவள் அங்கிருந்து நகர முயல எட்டி அவள் கரத்தை பிடித்தவன் "சரி சொல்லு எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்" என்க அவனைத் தலைசரித்துப் பார்த்தவள்..
"என் அண்ணன் ஓகேன்னு சொன்னா எனக்கும் டபுள் ஓகே வக்கீல் ஸார்" என்றவள் மான்குட்டியாய் துள்ளி ஓடிட அவள் பதிலில் பல்லைக்கடித்தது கோப பெருமூச்சுடன் நின்றிருந்தான் விஷ்வா.
சிறிது நேரம் வரை அங்கிருந்தவன் பின் வெளியேறி வர அவன் விழிகளோ அங்கே ஒரு ஓரமாய் நின்று நடக்கும் நிகழ்வுகளை வெறித்து நின்ற தங்கையில் பதிந்திட "இவளை எப்பிடி மறந்தேன்" என்ற மனதில் எழுந்த குறுகுறுப்போடு அவளை நெருங்கிச் சென்றவன் அவள் தோள் தொட்டான்.
அதில் தன் பார்வையை மாற்றாது அவனை பார்த்தவள் பார்வையிலிருந்த கேள்வியில் பதிலின்றி மௌனமாய் அவளைப் பார்த்தான் விஷ்வா.
அவன் மௌனத்தில் அவள் இதழ்களோ
கேலியாய் வளைய அவனை பார்த்தவள்
"என்ன அண்ணா.. உன் காதல் முன்னாடி பழி வெறியெல்லாம் மறந்து போயிடுமோ?" என நக்கலாய் கேட்டதில் விழுக்கென்று நிமிர்ந்து தங்கையை பார்த்தவன் அழுத்தமாய் இல்லையென தலையசைத்து "திவ்யா மேல நான் வெச்சுருக்க காதல் எப்பிடி மாறாதோ அத போல என்னோட குறிக்கோளும் மாறாது நேஹா" என்க.. அதில் நம்பாத பார்வை பார்த்தவள் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
தங்கையின் நம்பாத பார்வையில் மனது அடிபட்டாலும்.. அவள் புரிந்து கொள்வாள் என எண்ணியவன் நிகழ்வுகளை பார்த்திருந்தான்.
நேரம் செல்ல வருகை தந்தவாறிருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராய் வரவேற்று நின்ற நாராயணனின் விழிகளோ யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்க அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போலவே அங்கே வந்து நின்ற வண்டியிலிருந்து இறங்கினார் அவரின் ஆருயிர் தோழன் குருநாத்.
நண்பனைக் கண்டதும் துள்ளளோடு ஓடிச் சென்று நண்பனை அணைத்துக் கொண்டவர்.
"டேய் வாடா.. எங்க நீ வராம போய்டுவியோன்னு நினைச்சேன்" என தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.
தன்னை அணைத்திருந்த நண்பனை புன்னகை முகமாய் பார்த்த குருநாத் "என்னோட உயிர் நண்பனோட வீட்டுக் கல்யாணம் நான் வராமாலாடா?" என அவருக்கு சளைக்காத சந்தோஷத்தோடு நண்பனை அணைத்திருந்தார்.
நண்பர்கள் இருவரினதும் சந்தோஷத்தையும் கண்டு புன்னகையோடு அவர்களை பார்த்திருந்தனர் மற்றவர்கள்.
பார்ப்பவர்கள் அனைவரும் பொறாமை
கொள்ளும் அளவிற்கு நெருங்கிய
பால்யகால நட்பல்லவா இருவரதும்..
சிறுவயதிலிருந்து ஒன்றாய் படித்து வளர்ந்தவர்கள் இடையில் குருநாத்தின் தந்தையின் வேலையின் மாற்றல் காரணமாய் பிரிந்து சென்ற நட்போ மீண்டும் இதே கொடைக்கானலில் இணைந்து கொண்டது என்னவோ குருநாத்தின் காதல் வாழ்க்கையால் தான்.
ஆம் குருநாத் காதல் திருமணம் செய்து கொண்டு வந்து குடியேறியது என்னவோ அவரது சிறுவயதில் வாழ்ந்த கொடைக்கானலிலே..
மீண்டும் பழைய நட்பு புதிதாய் புதுப் பரிணாமத்தில் உருவாகி இரும்பென இறுகிட அதே போலவே அவர்களது குடும்பம் குழந்தைகளுக்குமிடையே அவர்களது நட்பும் பகிரப்பட்டு அவர்களிடையே ஒரு இணைபிரியா பந்தத்தை உருவாக்கியவர்கள் இதோ எத்தனை வயதானாலும் நாங்கள் இப்படித்தான் எங்கள் நட்பும் இப்படித்தான் என்பது போல நட்பின் ஆரம்புள்ளியிலிருந்து இதோ இன்றுவரை இருவரும் தங்கள் தோழமையில் அத்தனை உறுதியோடு ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாய் இருந்து வருகின்றனர்.
நண்பர்கள் இருவரும் தங்களுக்கு பேசிக் கொண்டிருக்க அவர்களுக்கு குறுக்கே வந்து குதித்து நின்ற பெண்ணவளோ சிறு முறைப்புடன் "மாமா உங்க ப்ரெண்ட்ட கண்டவுடனே என்ன மறந்திட்டிகளா?" என கேட்ட தன் நண்பனின் நகலை புன்னகையோடு அணைத்துக் கொண்டார் நாராயணன்.
"உன்ன மறப்பேனா சிவாங்கிமா? நீ என் செல்ல மருமகளாச்சே" என்றவர் அவள் தலை வருடி "எப்பிடிடா இருக்க.. இந்த ராஸ்கலால என் செல்ல மருமகளையும் பிரிஞ்சி நாங்க இருக்குற நிலமை" என மருமகளிடம் கொஞ்சி நண்பனிடம் கோபமாய் முடித்து வைத்தார் நாரயணன்.
குருநாத் ஒருவருடம் முன்பு வரை இதே கொடைக்கானலில் டிஎஸ்பி யாக இருந்தவர் கடந்த வருடம் பணி மாற்றலாக வேறொரு ஊருக்கு செல்ல வேண்டி ஏற்பட்ட தன்னோடு தனக்கு ஒரே துணையாய் இருந்த தன் மகளையும் அழைத்துச் செல்ல எண்ணியவர் அவளையும் அழைத்துச் சென்றிருந்தார்.
அதுவோ இத்தனை காலமாய் தங்களோடு ஒன்றியிருந்தவர்கள் வேலையை காட்டி தனியே சென்றதில் சிறு கோபத்தை நாராயணன் மனதில் விதைத்திருக்க..அதன் வெளிப்பாடே இது.
நண்பனின் கோபத்தில் சிரித்த குருநாத்தோ அவர் தோளோடு தோளணைத்து "டேய் எப்போ திரும்ப வந்தாலும் இதே சொல்லி சண்ட போடாதடா நாராயணா.. இன்னும் ஒருவருசம் தான் என் சிங்கக் குட்டி இந்த காவல்துறைக்குள கால் எடுத்து வெச்சிட்டா போதும் நான் ரிட்டெய்யர் ஆகிடுவேன்..அப்புறம் நீ ஆசப்பட்ட போலவே நாம எல்லாரும் ஒரே குடும்பமா ஒரே வீட்ல இருக்கலாம் சரியா?" என நண்பனை தாஜா செய்து சமாதானம் செய்தார்.
தந்தையின் பேச்சில் சிவாங்கியோ "டாடி நான் உங்க மகளா? இல்ல அத்து உங்க மகனானே எனக்கு டவுட்டா இருக்கு" என தாடையில் கைவைத்து யோசித்தவள் காதை செல்லமாய் திருகிவிட்டவர் "இதுல என்ன சந்தேகம் என் கௌசிக் கிருஷ்ணா தான் என் சிங்கக்குட்டி.. என்னோட ஆசைக்காகவே பொலீஸ் வேலைல சேர தயாரான என் ஆண் வாரிசு" எனும் போதே அவர் கண்ணில் பெருமை மின்னியது.
நண்பனின் கூற்றில் சிரித்த நாரயணன் "டேய் போதும்டா என் மருமகள வம்பு பண்ணாத.. நீயே உன் சிங்கக் குட்டியவெச்சிக்கோ.. பெத்தது என்னவோ நான் தான் ..அதுக்கப்புறம் அவன் வளர்ந்தது என்னவோ உன்ன பார்த்து தான்.. அதுதான் பையன் அவனோட பாசக்கார அத்தம்மா அழைச்சிக் கூட கல்யாணத்துக்கு வராம போயிட்டான்" என்க அவர் தோள் தட்டி நடந்த குருநாத்தோ "டேய் நாரயணா நீ இன்னும் என் கிருஷ்ணாவ சரியா புரிஞ்சிக்கலடா" என்றவர் தன்னை குழப்பமாய் பார்த்த நண்பனை அழைத்துக் கொண்டு உள்நுழைந்தார்.
இத்தனை நேரமும் யாரையும் கண்டு கொள்ளாது தங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்த இருவரையும் முறைத்து நின்ற பூரணியோ "ஹப்பா இப்போவாச்சும் இரண்டு பேரும் பேசிமுடிச்சிங்களே" என போலியாய் சலித்துக் கொள்ள அவரை பார்த்து சிரித்து வைத்தனர் நண்பர்கள் இருவரும்.
குருநாத்தோ அங்கிருந்த அனைவரிடம் நலம் விசாரித்தவர் பெயருக்கு சிரித்தபடி நின்ற மோகன்ராஜ்ஜின் தோளில் அழுத்தமாய் தட்டிக் கொடுத்து சிரித்துவிட்டு உள்நுழைந்தார்.
அவர் தட்டியதில் வலித்த தோளை வருடிவிட்ட மோகன்ராஜ்ஜின் மனமோ வன்மத்தில் புகைந்தது.
நாராயணண் குருநாத் இருவரினதும் இந்த நட்பில் அவருக்கு எப்போதுமே ஓர் புகைச்சல் உண்டு.
இந்த வீட்டிற்கு அவர் வந்த காலத்திலிருந்து அவ்வீட்டின் மருமகன் தன்னை விட குருநாத்திற்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அவருக்கு கோபத்தை உண்டாக்கினாலும் அதை வெளிக் கட்டும் அளவிற்கு தைரியமில்லாதவர் வெளிப் பார்வைக்கு போலியாய் நல்லவர் போல வாழ்ந்தவர் உள் மனமோ தன் வஞ்சத்தைக் கக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
தங்கையின் கணவனின் நயவஞ்சக குணத்தை அறிந்திருந்தாலும் நாராயணனோ தங்கையின் முகத்திற்காக அமைதியாய் அவரை பொறுத்துக் கொள்வார். ஆனால் குருநாத்தோ மறைமுகமாய் அவரை அதட்டி மிரட்டுபவர் அவரை அடக்கி வைத்திருந்தார்.
இருவருக்கும் பயந்தே தன் வாலைச்சுருட்டி தன் மனைவிக்கு நல்ல கணவனாய் தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாய் அவ்வீட்டில் தன்வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றார் மோகன்ராஜ்.
தந்தையோடு உள்நுழைந்த சிவாங்கியின் விழிகளோ மேடையில் நின்ற தன் இளவட்டங்களை நோக்கி பாய அடுத்த கணம் சிட்டாய் அங்கு பறந்திருந்தாள்.
கடல் நீல நிற லெகேங்ஹாவில் தேவதையென வந்து நின்ற தன்னவளைக் கண்டு விழிகள் விரிய பார்த்து நின்ற சிவாவோ தன் வாயில் உணர்ந்த தொடுகையில் குனிந்து பார்க்க அங்கோ கைக்குட்டையால் தன் வாயை துடைத்துவிட்ட மணமகன் திருவை முறைத்தான்.
அவனோ "ரொம்ப வழிஞ்சிதா அதான் துடைச்சிவிட்டேன்" என நக்கலாய் கூறிட அதில் அசட்டு சிரிப்பை உதிர்த்தான் சிவா.
அவன் சிரிப்பில் அவனை முறைத்தவன்
"டேய் சிவா உங்கண்ணன் வருவானா மாட்டானாடா.. அவனெல்லாம் ஒரு ப்ரெண்ட்டாடா.. நண்பனோட கல்யாணத்துக்கு கூட வராம அப்பிடி என்ன தான் வேல.. வரட்டும்" என தன் புலம்பலை ஆரம்பித்திட பாவமாய் பார்த்து வைத்தான் சிவா.
பின்னே திருமணம் முடிவாகிய தினத்திலிருந்து இவனின் அலுப்பே இல்லாத அனத்தலில் பழியாவது அவனல்லவா..
திரு கௌசிக்கின் சிறுவயது நண்பன்.. யாருமற்றவனுக்கு அனைத்துமாய் இருந்து கல்வி முதல் அனைத்தையும் அவனுக்கு வழங்கியது என்னவோ கௌசிக்கும் அவன் தந்தை நாராயணனுமே .. இருவரின் உதவில் படித்து நல்ல வேலையில் சேர்ந்தவனுக்கு தன் தங்கையின் மகளையே திருமணம் பேசி முடித்தவர் இதோ திருமணத்தையும் நடத்திக் கொண்டிருந்தார்.
தன் கேள்விக்கு பதில் பேசாது அமைதி நிலவியதை உணர்ந்து நிமிர்ந்த திருவோ அவ்விடம் சிவா இல்லாதிருப்பது கண்டு பார்வையால் தேட அவனோ எப்போதோ அவன் கண்ணை விட்டு மறைந்திருந்தான்.
இளசுகளின் சந்தோஷக் கூச்சலோடும் பெரியோர்களின் மகிழ்வோடும் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.
அடுத்தடுத்த நிகழ்வுகளாய் நலங்கு வைத்து மணமக்களுக்கான திருமண ஆடைகளை கொடுத்து ஓய்வெடுக்குமாறு அவரவர் அறைக்குள் அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாளை அதிகாலை வேளை ஆறு மணிக்கு நல்ல முகூர்த்த வேளையில் திருமணம் வைத்திருந்தபடியால் மணமக்களுக்கு உணவை வழங்கி நேரமாகவே அவரவர் அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொண்டாட்டங்கள் முடிந்து இளையவர்கள் அனைவரும் ஓய்ந்து போய் தத்தமது அறைக்குள் முடங்கிட பெரியவர்களோ சற்று ஓய்வாய் ஒன்றாய் அமர்ந்திருந்தனர்.
அனைவரின் முகத்தில் நிறைவான புன்னகை நிறைந்திருந்தது.
"எல்லாம் ஒருவழியா நல்லபடியா முடிஞ்சுது ..நாளைக்கு கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சிதுன்னா சந்தோஷம் தான்" என்ற தங்கையை புன்னகையோடு பார்த்தவர்.
"கவலப்படாத பூரணிமா எல்லாமே நல்லபடியா நடக்கும்" என்றார்.
"பசங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க ஆனா இந்த கிருஷ் பய தான் வராம ஏமாத்திட்டான்.. அதுதான் கொஞ்சம் கவலையா இருக்குண்ணா" என சற்றே வாடிய முகமாய் கூறினார் பூரணி.
குருநாத்தோ "நீ கவலப்டுற அளவுக்கு உன் மருமவன் நடந்துக்க மாட்டான்மா பூரணி.." என்றவர் வார்த்தையை முடிக்க வீட்டு வாசலில் வண்டியொன்று வந்து நிற்கவும் சரியாய் இருந்தது.
வண்டிச் சத்ததில் குருநாத்தோ புன்னகையுடன் "சொன்னேன்ல" என்றவர் புன்னகையோடு விரைந்து வெளியேறிச் செல்ல அவரை ஓடி வந்து அணைத்திருந்தான் கௌசிக்கிருஷ்ணா.
"குருப்பா .. எப்பிடி இருக்கிங்க" என்ற சந்தோஷக் கூச்சலிட்டவனை தானும் அணைத்துவிடுவித்தவர் "நான் ரொம்ப நல்லாயிருக்கேன் மை போய்.. நீ எப்பிடியிருக்க.." என்க.
"எனக்கென்ன டிசிபி ஸார் .. நான் ரொம்ப நல்லாயிருக்கேன்" என கண்சிமிட்டி சிரித்தவன் அங்கே வந்த தந்தையை கண்டு புன்னகையோடு அவரை அணைத்துக் கொண்டான்.
"எப்பிடிப்பா இருக்கிங்க.. " என தந்தையிடம் நலம் விசாரித்தவன் அருகே நின்ற தாயையும் அணைத்து அவரையும் நலம் விசாரித்து திரும்பியவன் பார்வையோ தன்னையே முறைத்தி நின்றவரைக் கண்டு மன்னிப்பை யாசிக்கும் பாவனையில் "ஸாரி ஸ்வீட் ஹார்ட்" என்றதில் அவர் முறைப்பும் இருந்த இடம் இல்லாது போய்விட புன்னகையோடு அவனை அணைத்துக் கொண்டார்..
அனைவரின் நல விசாரிப்புக்களுக்கும் புன்னகையோடு தலையசைத்தவன் அடுத்து தன் நண்பனைக் காணச் சென்றவனுக்கு அங்கும் நண்பனிடம் பல அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டு நண்பனை சமாளித்து மலையிறக்கிய பின்னரே தன்னறைக்குள் புகுந்து கொண்டான் கௌசிக்.
அனைவரும் உறக்கத்திற்கு சென்றிருக்க நள்ளிரவு வேளையில் தன்னறையின் பால்கனி வழியே வானத்தை வெறித்திருந்தவளின் முகத்தில் அத்தனை கோபம் ஆக்ரோஷம் தாண்டவாட நின்றிருந்தாள் நேஹா.
சற்று முன்னர் தூக்கமின்றி தன்னறையை விட்டு வெளியே வந்தவளுக்கு கீழே தன் மகனோடு பாசமழை பொழிந்து நின்ற நாராயணன் குருநாத் இருவரின் முகம் காட்டிய சந்தோஷத்தைக் கண்டவளுக்கோ உள்ளம் பற்றியெறிய அங்கு நிற்க முடியாதவளாய் மீண்டும் தன்னறைக்குள் அடைந்து கொண்டவளுக்கு உடம்பெல்லாம் பற்றியெரியும் அளவவிற்கு ஆத்திரம் கொழுந்துவிட்டெரிந்தது.
அவள் மனமுழுவதும் "என் அப்பாவோட சந்தோஷ பறிச்சிட்டு நீங்க மட்டும் குடும்ப குழந்தை குட்டினு சந்தோஷமா இருக்கிங்களா?? விடமாட்டேன்.. எங்கப்பாவுக்காக உங்க எல்லோருடைய சந்தோஷத்தையும் குழி தோண்டி புதைக்காம விடமாட்டேன்" என்ற வஞ்சமே வேரூன்றி பரவியிருந்தது.
நிமிடங்களாய் வானத்தை வெறித்திருந்தவள் தோளில் உணர்ந்த தொடுகையில் திரும்பிட அங்கு நின்றிருந்தார் மோகன்ராஜ்.. அவளின் பெரியப்பா..
"என்ன நேஹாமா இன்னும் தூங்கலையா?" என்றவரை அழுத்தமாய் பார்த்தவள் ..
"எப்படி பெரியப்பா தூங்க சொல்றிங்க..இங்க நடக்குறதெல்லாம் பார்த்து நிம்மதியா எப்பிடி தூங்க சொல்றீங்க.. எங்கப்பாவோட நிம்மதிய சந்தோஷத்தை அழிச்ச அந்த நாராயணன் அவர் குடும்பத்தோட சந்தோஷமா இருக்குறத பார்த்துட்டு எப்பிடி நிம்மதியா தூங்க சொல்றீங்க?" என சீறலாய் வந்து வீழ்ந்தவளின் வார்த்தையில் அவளின் கோபம் உணர்ந்தவர் அவளை சமாதானம் செய்ய முயன்றார்.
"கோபப்படாத நேஹா.. பொறுமையா இரு.. இது எதுவுமே அந்த நாராயணனுக்கு நிலைக்காது.. கூடிய சீக்கிரமே இதுக்கு எல்லாம் முடிவு கட்டி என் தம்பியோட இழப்புக்கு நியாயம் செய்யலாம்.. நம்ம திட்டத்தை செயற்படுத்தனும்னா அதுக்கு உன்னோட இந்த கோபத்தையும் வேகத்தையும் பொறுமையோட கையாளனும்.. அவசரத்துல ஏதாச்சும் ஒரு தப்பு பண்ணி நாமளே அந்த குருநாத்தோட பார்வையில சிக்கிடக் கூடாது.. நண்பனுக்கு ஒன்னுனா அவன் கொலை பண்ணக்கூட தயங்கமாட்டான்" என எச்சரித்தவர் அவளை கூர்மையாய் பார்த்தபடி..
"இப்போ நம்மளோட துருப்புச்சீட்டு அந்த திவ்யாவும் அந்த கௌசிக்கும் தான் அவங்கள வெச்சு தான் நாம காய் நகர்த்தனும்" என்றவர் தன் திட்டத்தை கூறி முடித்திட இருவரும் வில்லத்தனமாய் சிரித்துக் கொண்டனர்.
என்றோ நிகழ்ந்த ஒரு தவறிற்கு பழிவாங்கும் ஆயுதமாய் நேஹா விஷ்வா என்ற இருவரின் பிஞ்சு வயதிலே தங்கள் நஞ்சை விதைத்து இதோ இந்தளவிற்கு அவர்கள் மனதை வன்மத்தால் நிரப்பியிருந்த மோகன்ராஜ்ஜிற்கு தன்னால் சாதிக்க முடியாததை தன் தம்பியின் பிள்ளைகளைக் கொண்டு சாதிக்க எண்ணியவராய் இதோ அவர்களை வஞ்சத்திலே வளர்த்துவிட்டிருந்தார்.
அவர் எதிர்பார்த்தது போலவே அவரின் போதனையிலும் வளர்ந்தவர்களின் குறிக்கோள் ஒன்றேயொன்று அது இந்தக் குடும்பத்தின் மூத்தவரின் கௌரவத்தை சுக்குநுறாய் உடைப்பது.. அதற்காகவே இன்றை வரை இந்தக் குடும்பத்தில் ஒருத்தராக வளர்ந்து சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதற்கான நாளும் வெகு அருகிலே அவர்களை நெருங்கியிருந்தது..