எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் 09

NNK 89

Moderator
கொலுசொலி ஆசைகள் 09

தன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த கௌது, அதை வீட்டு வாசலில் நிறுத்தினான். கட்டிலில் படுத்திருந்த அவனோட அப்புச்சி, பைக்கின் சத்தம் கேட்டு"ஆரு அது?" என மெல்ல எழுந்தமர்ந்தார்.

அதே சத்தம் கேட்டு வீட்டின் பின்னால் இருந்து அவசரமாக வந்தார் செவாயி.

பைக்கை விட்டு இறங்கியவன், போர்டிகோவில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தான்.

"கௌதுவா!" என்ற பாட்டி அடுத்து செந்தாவை பற்றிக் கேட்க வர, அதற்குள் செவாயி"கௌது! வந்துட்டீயா, டாக்டர் என்ன சொன்னாங்க? சத்து மாத்திர எதும் கொடுத்துட்டாங்களா, எங்க செந்தா? வந்ததும் உள்ள போயிட்டா பாரு, ஏ செந்தா!" என இடைவிடாமல் பேசியவர், செந்தாவை அழைத்தார்.

கௌது அமைதியாக இருக்க, பாட்டி "ஏட்டி! நீ ஏன் கத்துற? அவ கௌது கூட வரல" என்றார்.

"கௌது! எங்க செந்தா?"

"அவளோட அம்மா வீட்டுக்குப் போயிருக்கா" என்றான் மொட்டையாக.

"ஓ! கன்னுக்குட்டி பசு கிட்ட பால் குடிக்கப் போயிருக்குதாக்கும், போனு சொன்னா கூட நகர மாட்டா, இப்ப என்ன அதிசயமா போயிருக்கா?"

"போகனுமுனு சொன்னா, போயிட்டா" என்றான் கடுப்புடன்.

"அது சரி, டாக்டர் என்ன சொன்னாங்க? கரு நல்லா இருக்குல, வயித்துவலினு சொன்னதும் எனக்கு கை, கால் ஓடலப்பா" என அக்கரையாக விசாரித்தார்.

"கரு கலைஞ்சுட்டும்மா, அதான் வயிறுவலி வந்து இருக்கு" என்றான் வருத்ததுடன்.

"அய்யயோ! என்னடா சொல்ற?" என்ற செவாயி அப்படியே தலையில் கைவைத்து போர்டிகோவின் படியில் அமர்ந்து, "நான் ஆசை ஆசையா இருந்தனே, பேரப்பயல பாக்க போறேனு இப்படியா ஆகனும். எப்படிடா?" என ஒப்பாரி வைத்தார்.

"அம்மா! இப்ப என்னதுக்கு வெளியில் உட்காந்து கத்திட்டு இருக்க, அக்கம் பக்கத்துல என்ன நெனப்பாங்க" என வீட்டிற்குள் எழுந்துச் சென்றான்.

நல்ல வேளை அது மதியப்பொழுது என்பதால் பக்கத்தில் யாருமில்லை, பாப்புவும் பள்ளிச் சென்றிருந்தாள்.

"ஏன்டா! நான் பேசுறது உனக்கு கத்துறதா? வீட்டுக்கு வரவேண்டிய வாரிசு அழிஞ்சுட்டே, இப்படி போயிட்டேனு அழுதுட்டு இருக்கேன். உனக்கு கத்துற மாதிரி இருக்கா?" என மூக்கை உறிந்து தூரமாக எறிந்தார்.

வீட்டிற்குள் அமர்ந்திருந்தவன் மனதில்,
'அழுது வருத்தப் பட வேண்டியவ, நிம்மதியா இருக்கா, நீ ஏன் ஒப்பாரி வைக்கிற' என எண்ணி வருந்தினான்.

"அம்மா வீட்டுக்கு எதுக்குப் போய் இருக்கா? அங்க அப்டியே தாழிச்சுக் கொட்டிடுவாங்கனு போய் இருக்காளா" என செவாயி கழுத்தை நொடித்தார்.

"போயிட்டு தான் வந்தா என்ன செவாயி?" எனப் பாட்டி இழுத்துக் கேட்டப்படி மருமகளை முறைத்தார்.

"ஏய் கெழவி! பெத்த மக முழுகாம இருந்து பத்து நாளு ஆச்சு, அந்தப் பொம்பளை என்ன, ஏதுனு ஒரு எட்டு வந்து பாத்தாளா? இந்தா ஒன்னும் இல்லாம கரு கரைஞ்சுட்டு, இப்ப என்ன மகளை அப்படியே வச்சு சாம்பிராணி போடப் போறாளாக்கும். இவ அம்மா வீடுப் போய் இருக்காளாம். பொண்ண பெத்தவ யாரும், மக உண்டான விசயம் தெரிஞ்சு வராம இருப்பாளா? அந்த வீட்டுல இவ போய் தங்குனா செலவுனு தான் அங்கப் போகவே மாட்டா, நானும் என் பேரப்புள்ள எதுக்கு அங்கப் போய் பிச்சையெடுத்து சாப்புடனுமுனு இங்கனயே போட்டு ஓட்டிட்டேன். இப்ப தான் அதிசயமா அம்மா வீடுப் போயிருக்கா, நான் எப்டி எல்லாம் கனா கண்டேன் ஆம்பள புள்ள பொறக்கப் போதுனு" எனக் கூறி முகத்தைச் சுளித்தப்படி புலம்பிக் கொண்டே பின்பக்கம் நடந்தார்.

தாய் பேசியதைக் கேட்டப்படி உள்ளுக்குள் அமர்ந்து இருந்த கௌது, மனைவியின் மேல் வெறுப்பில் தத்தளித்தான்.

ஆனால் கௌது, தாயிடம் இதுவரை செந்தா பேசியதுப் பற்றி கூறவில்லை. செவாயி கண்ணீர் சிந்தி ஒப்பாரி வைத்ததும், சொல்ல தோன்றாமல் உள்ளே எழுந்துச் சென்றுவிட்டான்.

சிறிது நேரம் கடக்கவும், வெளியில் சென்று வரலாம் என வாசலிற்கு வந்தான்.

"ஏப்பா கௌது" என அழைத்தார் பாட்டி.

"என்ன அப்புச்சி?" என, அவன் இருந்த மனநிலையில், வேண்டா வெறுப்பாக கேட்டான்.

"இங்க வா!" என அருகில் கூப்பிட்டார்.

அவனும் அவர் எதிரில் சென்றான்.

"என்னனு வேகமா சொல்லு, எனக்கு வேலை இருக்கு"

"உனக்கு என்னைக்கு தான் வேலையில்ல, செந்தா அம்மா வீட்டுக்கு சும்மா தான் போயிருக்கா, இல்ல நீ எதும் பேசின மன வருத்தமா?" என மெல்லக் கேட்டார்.

அதுவரை கையில் இருந்த ஃபோனையே பார்த்தவன், நிமிர்ந்து அப்புச்சியைப் பார்த்தான்.

"என்னப்பா சொல்லு"

"நான் எதுக்குப் பேச போறேன் அப்புச்சி?"

"இல்ல! அந்தப் புள்ள சாதரணமா அம்மா வீட்டுப் பக்கமே போகாது, அதும் பாப்பு இல்லாம போயிருக்குனா சந்தேகமா இருக்குனு கேட்டேன்பா, உனக்கு அப்பப்ப உன் அம்மா குணம் வந்துடும், உருவான புள்ளப் போயிட்டுனு எதும் நோக பேசிட்டீயா, இதுப் போனா அடுத்தது பெத்துகலாம்பா, ஆனா பொண்டாட்டி மனசை நோகடிச்சுடாத என் ராசா "

"அது எல்லாம் ஒன்னுமில்ல! நீ படுத்து தூங்கு" என திரும்பியவனிடம்,

"கரு உண்டாகி தீட்டுப் போற உடம்பு ராசா, சோந்துப் போகும் அங்க நாலு நாள் இருந்துட்டு வரட்டும், உன் ஆத்தாகாரி கிட்ட எடுத்துச் சொல்லு, சாமியாட்டம் ஆடப்போறா, செந்தா இல்லாத வீடு எப்டினு புரியனும் உன் ஆத்தாக்கு" என சாய்ந்து திரும்பி படுத்தார்.

கௌது காதில் வாங்கினாலும் அதைப் பெரிதாக அலட்சியம் செய்தவாறு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
…………

செந்தா, கௌது சென்றதும் மருத்துவமனை வாசலில் அப்படியே நின்று கொண்டு இருந்தாள்.

"செந்தா! இங்க நீ என்னடி பண்ணிட்டு இருக்க?" எனக் கேட்டுக் கொண்டே வந்தாள் அவளின் மூத்த அக்கா செங்கனி.

சட்டென்று வந்த குரலில் திரும்பிய செந்தா"அக்கா!" என அவளைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

"ஏய்! என்னடி ஆச்சு?" எனத் தன்னை அணைத்துக் கொண்ட தங்கையை புரியாமல் நோக்கினாள் செங்கனி.

அவளோ எதுவும் கூறாமல், தாயைக் கண்ட சேய் போல, தன் தமக்கையிடம் ஆறுதல் தேடினாள். தங்கையின் கண்களில் வழிந்த கண்ணீரை உணர்ந்தாள் செங்கனி.

சிறு அமைதிக்குப்பின், செந்தா தானாகவே நிமிர, செங்கனி, அருகில் இருந்த ஓர் அமரும் இடத்திற்கு தங்கையை அழைத்துச் சென்றாள்.

இருவரும் அமர்ந்த பின், "இப்ப சொல்லு! என்னடி ஆச்சு, நீ ஏன் இங்க வந்த? எதுக்கு இப்படி அழுதுட்டு நிக்கிற?"

"ஒன்னுமில்லக்கா!"

"என்னடி ஒன்னும் இல்ல, ஹாஸ்பிடலுக்கு வந்து தனியா நின்னுட்டு இருக்க, என்னைய பார்த்ததும் கட்டிப்பிடிச்சு அழுவுற இதெல்லாம் பார்த்தா, எனக்கு என்னடி தோணும், பயமா இருக்கு என்னடி ஆச்சு?"

செந்தா அமைதியாகவே இருந்தாள்.

"செந்தா என்னனு சொல்லு எனக்கு ஒன்னும் புரியல யாரையாவது பார்க்க வந்தீயா, வீட்டுல யாருக்கும் உடம்பு முடியலையா, பாப்பு எங்க? உன் வீட்டுக்காரர் எங்க? ஏதாச்சும் சொல்லுடி" எனத் தங்கையை உலுக்கினாள்.

"எல்லாரும் நல்லா இருக்காங்க, நான் தான் நல்லா இல்ல, நல்லாவே இல்ல, நான் பேசாம நம்ம வீட்டிலேயே வந்து உங்க எல்லார் கூடவும் இருந்திடவா?" என்றுக் கேட்ட தங்கையை விசித்திரமாக பார்த்தாள் செங்கனி.

"என்னடி இப்படி பேசுற? நாங்க கூப்புட்டா கூட அங்க வர மாட்ட, உனக்கும் மாமியாருக்கு எதும் பிரச்சனையா?"

"இல்லக்கா!"

"அப்புறம் என்னடி, உனக்கும் உன் வீட்டுக்...." என அவள் முடிக்கவில்லை உடனே செந்தா "இல்லக்கா" என்றாள் அவசரமாக.

"உனக்கு என்ன பைத்தியமா? அப்புறம் என்ன தான்டி பிரச்சனை, அங்க இருக்கே ஒரு பாட்டி அதுக்கும் உனக்கு எது பிரச்சனையா?" எனக் கேட்டு முறைத்தாள் தங்கையை செங்கனி.

"என்னைய எதுவும் கேக்காத, வீட்டுக்கு வா போகலாம்" என எழுந்தாள்.

"நம்ம வீட்டுக்கா?"

"ஆமா!"

"சரி! நீ யாரு கூட வந்த? இங்க என்ன வேலை? பாப்பு எங்கடி?"

"பாப்பு ஸ்கூல் போயிட்டாக்கா, இங்க எதுக்கோ வந்தேன், நீ வா" என எழுந்து முன்னே நடந்தாள் செந்தா.

செங்கனி ஒன்றும் புரியாமல் பின்னே தொடந்தவாறு"செந்தா! நீ இன்னும் மாறவே இல்ல, அதே பிடிவாதத்தோடு இருக்க" எனப் புலம்பினாள் பெரியவள்.

"அது எல்லாம் அம்மா வீட்டுல மட்டும்தான்கா, போன இடத்துல பிடிவாதமா இருந்தா வேறப்பேரு குடுத்து அடங்காபிடாரி, மூதேவி, ஆட்டக்காரினு முத்திரைக் குத்திடுவாங்க, எனக்கு எதுக்கு அந்தப் பேரு எல்லாம், நீ வா போகலாம்"

செந்தா அம்மா வீட்டில் இருந்த போது பிடிவாதமாக இருப்பாள், அதாவது எனக்கு இது தான் வேண்டுமென்ற அடம் இல்லை, நான் இப்படி தான் என்ற கொள்கையுடன் இருப்பாள், யாருக்கும் தேவையில்லாத தொந்தரவோ, சிரமத்தையோ கொடுக்க மாட்டாள், அக்காமார்கள், தங்கை என பாசமாக இருப்பினும் அவளுக்கென்ற வட்டத்தில் யாரையும் அனுமதிக்க மாட்டாள்.

சகோதரிகளுடன் உடை மாற்றிப் போடுவது பிடிக்காது , இரவின் படுக்கையில் தனிப் போர்வை, படிப்பில் கெட்டிக்காரி என்பதால் அவளின் பொழுது அதிலே போய்விடும், டியூசன் எடுப்பது, தற்காலிக பள்ளி ஆசிரியை என அவள் போக்கில் வாழ்ந்தவள்.

அவளின் வீட்டில் செந்தா என்றால் இப்படி தான் என அறிந்தமையால் பெரிதாக அவளிடம் ஆழமான கேள்விகள் கேட்க மாட்டார்கள். இந்த எட்டு வருசங்களும் செந்தா அதிகம் தாய் வீடு வரவில்லை என்பது அவர்களுக்கு குறையாக தெரியவில்லை. அவளுக்கு அங்கப் பிடித்திருக்கு இருக்கிறாள் என்றே எண்ணி தெய்வானை அமைதியாகிடுவார்.

அதையும் மீறி தாயுள்ளம் அழைத்தாலும்,
அம்மா வீடு ஏற்கனவே சிரமத்தில் இருக்கு, நம்மளும் போய் அவர்களுக்கு பாரமாக இருக்க வேண்டாமென்ற எண்ணத்துடன் அதையும் வெளிப்படையாக தாயிடம் கூறிவிடுவாள்.

பாப்பு பிறந்திருந்த போது கூட, பதினாறு நாள்களில் புகுந்த வீடு சென்றுவிட்டாள்.
தெய்வானை கேட்டதிற்கு"அம்மா! மாமா பாவம் உன்னைய, அக்கா, தங்கச்சினு, புள்ளைங்கனு சமாளிக்கிறாரு, இதுல நானும், பாப்புவும் இருந்தா சிரமமா இருக்கும்" எனக் கூறிவிட்டு கிளம்பியவள், அதன்பிறகு அம்மா வீட்டுக்குக் காலையில் போனால் மாலையில் திரும்பி விடுவாள்.

கணவர் வீட்டிலும் செவாயி, பாட்டி, முன்பு இளா மட்டுமே என்பதால் செந்தாவிற்கு நேரம் போய்விடும், என்ன செவாயி தான் வார்த்தைகளை அஸ்திரமாக தாக்கிக் கொண்டு இருப்பார், பிறந்த வீட்டில் அவள் போக்கில் இருந்தவள் புகுந்த வீட்டில் அவர்கள் போக்காக மாற்றிக் கொண்டதால் வாழ்க்கை மாறியது.

செந்தாவிடம் உள்ள முக்கிய குணம் ஒன்று, அவள் மனதில் உள்ளதை அவ்வளவு எளிதில் வெளியிட மாட்டாள். அது அவளின் குடும்பம் அறிந்த ஒன்று.

இன்று செங்கனி தங்கையிடம் அதற்கு மேல் கேள்விகள் எதுவும் கேட்காமல் வேற எதுவோ பேசியவாறு நடந்தாள்.
…………

மாலை வேளை வர, பாப்பு பள்ளியில் இருந்து வந்ததும், தாயை வீடு முழுவதும் தேடிட, செவாயி"உன் அம்மா, அவ ஆத்தாகாரி வீட்டுக்குப் போய் இருக்கா, எப்ப வராளோ தெரியல, நீ டிரஸை மாத்திட்டு வா, பால் காய்ச்சி தரேன்" எனக் கூறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார்.

பாப்பு புரியாமல் பாட்டியிடம்"கெழவி பாட்டி! அம்மா ஏன் அம்மாச்சி வீட்டுக்குப் போய் இருக்கு, அப்பா எங்க?" எனக் கேட்கும் போதே கௌது வந்து சேர்ந்தான்.

"அப்பா!" என தந்தையிடம் ஓட, அவனோ மகளைத் தூக்கி கொண்டு வாயிலில் நுழைந்தான்.

"அம்மா எப்ப வரும்பா, என் கிட்ட சொல்லவே இல்ல போறேனு" என மகள் கேட்கவும், பதில் சொல்ல யோசித்தவன்,
"அம்மாக்கு உடம்பு முடியலைனு போய் இருக்கு, சரியானதும் வருவா, நீ ஸ்கூல் போகனுமுல அதான் உன்னைய கூட்டிட்டுப் போகலடா, வா அதான் அப்பா இருக்கேன்ல" எனக் கூறிக் கொண்டே உள்ளே சென்றவனிடம் பாட்டி,

"என்ன தான் அப்பானு நீ பீத்திகிட்டாலும் அம்மா எடத்துக்கு வர முடியுமா? ஏன் நீயே இன்னும் அம்மானு தானே சுத்துற" என புலம்பிக் கொண்டே பேரனைப் பார்வையிட்டார்.

"அப்புச்சி! நீ பேசாம இரு, எதையாவது உளரிட்டு இருக்காம" என அதட்டினான்.

"அது வாய் சும்மா இருக்காது, ஊர்ல எத்தனையோ எழவு விழுது, இதுக்கு காடு இன்னும் வானு கூப்புடல, பச்ச உயிரை கொண்டுப் போன கடவுள் இந்தக் கெழவியைக் கொண்டுப் போய் இருக்க கூடாதா" எனப் புலம்பியவாறு செவாயி பால் டம்பளரோடு வந்தார்.

"அம்மா! நீ என்னத்துக்கு ஆரம்பிக்குற? அது வயசானது ஏதோ பேசுது, சாவு எல்லாருக்கும் தான் வரும், பொதுவானது, இப்ப எல்லாம் சாவு வயசு பாத்து வரதில்ல" என கூறி முகத்தைச் சுளித்தான்.

"அத சொல்லு, நான் கூட குத்துக் கல்லாட்டம் இருக்கேன். அந்தக் கடவுள் என்னைய கொண்டுப் போக கூடாதா?" என மீண்டும் செவாயி ஆரம்பிக்க,

"அய்யோ அம்மா! பேசாம தான் இருவே, ஏன், என்னைய விட்டு வச்ச, நானும் காடு போற உயிர் தான்" என்றான் கடுப்புடன்.

"அடேய்! அறிவுக்கெட்டவனே, ஏன்டா அப்படி பேசுற? அடி வாயில" எனச் சீறினார் மகனிடம்.

அவர்கள் பேச்சுப் புரியாத பாப்பு"அப்பா! நான் அம்மா கிட்ட பேசனும்" என்றாள்.

கௌது மனதில்'போனவளுக்கு தெரியாதா, இந்நேரப் புள்ள ஸ்கூல இருந்து வந்து இருக்குமே, ஃபோன் பண்ணி பேசனுமுனு, நல்லா தானே இருந்தா, திடீருனு எந்தப் பேய் புடிச்சு ஆட்டதோ' என எண்ணி யோசனையில் இருந்தவனை அசைத்தாள் மகள்.

"அப்பா! ஃபோனை குடுங்க" என அவனிடம் இருந்து வாங்கியவள், செந்தா எண்ணிற்கு அழைத்தாள்.

அந்த எண்ணிற்காக காத்திருந்தவள் போல் அடுத்த ரிங்கிலே ஃபோனை எடுத்தாள் செந்தா, பாப்பு வந்ததும் கண்டிப்பாக தனக்கு அழைப்பாள் என்று, அவள் மனம் கூறிக் கொண்டே இருந்தது.

"பாப்பு! வந்துட்டீயாடா"

"ம்ம்ம்! நீ ஏன்மா அங்கப் போன? எப்ப வருவ?"

"அம்மா வருவேன், நீ சமத்தா அப்பா, அப்புச்சிக் கூட இரு" என மேலும் பலவற்றை கூறி சமாதானம் செய்தாள்.

"ம்ம்ம்!" என்ற பாப்புவிடம் இருந்து ஃபோனை வாங்கிய செவாயி, "ஏன் நீ வரதா எண்ணமில்லையோ?" எனக் கேட்டார்.

"அத்த! எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுது, அதான் உங்கப் புள்ள இருக்காரே, பாத்துப்பார்" என்றாள் சற்று தைரியமாக.

"ஓ! நீ இல்லனா இங்க பொழுதே போகாதுனு நெனக்காதடி, நீ வந்தாலும் சரி, இல்ல அங்கயே இருந்தாலும் சரி, உன் ஆத்தா கிட்ட ஃபோனை குடு" என்றார் வேகத்துடன்.

செந்தா சிறிது யோசித்தாலும் ஃபோனை தாயிடம் நீட்டினாள்.

"சொல்லுங்க சம்பந்தி!"

"இந்த சம்பந்தியை மட்டும் பிரமாதமா சொல்லிடுங்க, மக உண்டானாளே வந்துப் பாப்போமுனு எல்லாம் தோணல, அப்படியே செக்கு இழுத்தான் செவலிங்கம் கதையா எண்ணெய் வந்தா போதுமுனு இருங்க, இப்ப கரு கலைஞ்சுட்டுனு உங்க மக அம்மா கிட்ட பால் குடிக்க வந்து இருக்கா, ஆத்திக் குடுத்து கொஞ்சுங்க" என ஃபோனை கட் பண்ணி கௌது அருகில் போட்டுவிட்டு,
"இப்டி இருக்கும் போதே ஏமாத்துறாள்க, நல்லா போனேன் சம்பந்தம் போட புதுசா திணுசா ஒரு வீட்டுக்கு" எனப் புலம்பிக் கொண்டே நடந்தார்.

"அப்பா! அம்மாக்கு என்ன ஆச்சு?" என பாப்பு கௌதுவுடன் ஒன்றினாள்.

பாப்பு செந்தாவை இதுவரை பிரிந்ததே இல்லை, இதுவே முதன் முறை.

"உடம்பு முடியலைனு போய் இருக்கா, வந்துடுவா பாப்பு, சரி வா! பாலை குடி" என மகளுடன் நேரத்தைப் போக்கினான்.

அவன் அறியவில்லை செந்தாவின் இடம், அந்த வீட்டில் எப்படிப்பட்டது என்று.
………

செந்தாவின் தாய் வீட்டில் அனைவரும் ஒரு ஆட்டம் ஆடிவிட்டார்கள். பாவம் செந்தா கருவுற்றதே அவர்கள் யாரும் அறியாத ஒன்று.

"இப்ப என்ன, நான் கிளம்பி அங்கப் போகனுமா? இல்ல இங்க இருக்கனுமா?" என செந்தா கேட்கவும், மாமா நடராஜன் மற்றவர்களை அமைதிப்படுத்தினான்.

என்றும் வராதவள் வந்து இருக்கிறாள், பொறுமையாக பேசிக் கொள்ளலாம் என்று, தன் அக்கா, மனைவி, கடைக்குட்டி செம்பருத்தி ஆகியோரை செந்தாவிடம் எதுவும் கேட்க வேண்டாம் என கூறினான்.

அன்று இரவு....

செந்தா தனிமையில் பாப்புவை விட்டு வந்துவிட்டோம் என எண்ணி மிகவும் வருந்தினாள்.

பாப்புவும் தூங்கவே சிரமப்பட்டு தந்தையின் மார்பில் படுத்துறங்கினாள்.

கௌதுவிற்கு மகளை சமாளிக்கவே போதும் என்றாகியது. இவ்வளவுக்கும் ஒரு நாள் இரவு தான் கடந்திருந்தது.

அடுத்த நாள் காலையில் பாப்புவை பள்ளிக்கு தயார் செய்வது பெரிய சவாலாக இருந்தது கௌதுவிற்கு. செவாயி அடுப்படிற்குள் கத்திக் கொண்டே சமைக்க, வீடே ரணகளமாக இருந்தது. அவசரமாக பள்ளிக்கு மதியம் சாப்பாடு, அவளுக்கு காலை உணவு ஊட்டிவிட்டு கிளம்பி பள்ளி பேருந்து நிறுத்துமிடம் வந்தும் பேருந்தை விட்டு விட்டார்கள் தந்தையும், மகளும்.

"அம்மா இருந்தா இன்னேரம் கிளப்பி இருக்கும், அப்புச்சியால தான் லேட், எனக்கு இன்னைக்கு ஸ்கூல் போயே ஆகனும்பா, ரன்னிங் ரேஸ் இருக்கு" என முகத்தைச் சுளித்தாள் மகள்.

"சரி வாடா! அப்பா பைக்கில் கொண்டுப் போய் விடுறேன்" எனப் பள்ளிக்கு அழைத்துச் சென்றான்.

ஒரே நாளில், ஆங்கிலத்தில் சொல்லும் Hectic எனும் பரபரப்பான காலைப்பொழுதாக மாறியது கௌதுவிற்கு.

மகளைப் பள்ளியில் விட்டுத் திரும்பிக் கொண்டு இருந்தவனிற்கு மனதில் ஏனோ லேசாக செந்தா மிஸ்ஸிங் உணர்வில் ஏறியது. மனைவி பதவி, படுக்கறையை தாண்டி செந்தாவைப் பற்றி பெரிதாக எண்ணாதவன் முதன் முறையாக செந்தா! இல்லாத வீடு? என்ற அடுத்த நிலையை யோசித்தான்.

செந்தாவின் வெற்றிடம் அவனுக்கு பாடம் புகட்ட காத்திருந்தது.

கொலுசொலி ஆசைகள்.....

 
இதெல்லாம் பத்தாது!!... இன்னும் நல்லா கஷ்டப்படனும்!!... முக்கியமா அந்த மாமியாரு!!!... என்ன வாய் அவங்களுக்கு🤦🏻‍♀️!!... சூப்பர் எபி!!!
 
Top