எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் 02

NNK 89

Moderator
கொலுசொலி ஆசைகள் 02

கௌதுவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்த வீட்டிற்கு, அந்த வீட்டின் பிறந்த பெண்கள் தமிழும், இளாவும் வந்துச் சேர்ந்தனர்.

"வாங்க புள்ளைகளா! ஏன் இவ்வளவு நேரம் கழிச்சு வரீங்க...?" எனப் பாட்டி கேட்க, செவாயி சத்தம் கேட்டு வெளியில் வந்தார்.

"எங்க அப்புச்சி, வீட்டு வேலை முடிச்சுட்டு கெளம்பி பஸ்ல வரதுக்குள்ள, போதும் போதுமுனு ஆச்சு. எல்லாம் பொங்கல் சாமான் வாங்கப் போற கூட்டம்" என போர்டிகோவில் அமர்ந்தாள் தமிழு.

"இவளை வேற பஸ்ஸில் தூக்கிட்டு வந்து நொந்துப் போயிட்டேன்" எனத் தோளில் கிடந்த இரண்டு வயது மகளை, பாட்டியின் கயிற்று கட்டிலில் அவர் அமர்ந்திருக்க, ஓரமாக படுக்க வைத்தாள் இளா.

"வாங்க! வாங்க! ஏன்டி தமிழு மாப்பிள்ளையோட வந்து இறங்கி இருக்கலாமுல...? நீ எப்டி இளா வந்த அதுவும் புள்ளைய தூக்கிட்டு, மாப்பிள்ளை எங்க...?" என இரு மகள்களிடம் செவாயி இடைவெளி இல்லாமல் கேட்டார்.

"அம்மா! அவரு காலேஜ் போயிட்டார், நீ போ சாயங்காலம் வந்து அண்ணனை பாத்துட்டுக் கூட்டிட்டுப் போறேனு சொன்னாரு, அக்காக்கு கூப்புட்டேன், சேந்தே வந்தாச்சு" என்றாள் இளா.

"செந்தா! குடிக்க தண்ணி கொண்டா" என தம்பி மனைவியை அழைத்தாள் தமிழு.

"அவ பின்னாடி நிக்கிறா, காதுல விழாது நான் போயிட்டு வரேன், இரு" என்ற செவாயி, அடுப்படிக்கு சென்று தண்ணீர் எடுத்தவாறு, பின்னால் பாப்புவை குளிக்க வைத்துக் கொண்டு நின்ற செந்தாவிடம் மகள்கள் வந்திருப்பதைக் கூறி குரல் கொடுத்தார்.

"இதோ வரேன் அத்த!" என பாப்புவிடம் உடையைக் கொடுத்து மாற்றிக் கொண்டு வருமாறு முன் பகுதிக்கு விரைந்து,
"வாங்க அண்ணி, வா இளா" என நாத்தனார் இருவரையும் வரவேற்றாள்.

"ஆ! பாப்பு எங்க அண்ணி..? ஸ்கூல் போயிட்டாளா..?"

"குளிச்சுட்டு இருக்கா இளா, பேசிட்டு இருங்க வரேன்" என உள்ளே சென்றாள் செந்தா.

"அவ எப்டி இன்னைக்கு போவா" என்ற செவாயி, மூத்த மகளிடம்"அவ புருசன் தான் காலேஜ்ல வாத்தியார், வர நேரமாகிட்டு, நீ வெள்ளனமே வர வேண்டியது தானே தமிழு" என செவாயி கேட்டார்.

"ஏம்மா! பொங்கல் வேலை இருக்காதா...? அதோட என் மாமியார் அவரு போனதுக்கே அந்தப் பேச்சு, பொங்கல் வேலையை விட்டுட்டு மச்சானை அழைக்கப் போயிருக்காருனு, அதான் நான் மதியத்துக்கும் சேத்து சமைச்சு வச்சுட்டு வந்தேன்."

"உன் புருசன் என்னமோ மாச மாசம், என் புள்ளைய கூப்புட போற மாதிரி உன் மாமியார் பேசுது, அவனே எட்டு வருசம் கழிச்சு இப்ப தான் வரான்" என மகளை முறைத்தார் செவாயி.

"ஏம்மா! என்னமோ நான் சொன்ன மாதிரி முறைக்குற?"

"அத்தை! எங்க பாப்பா...?" என ஓடி வந்தாள் பாப்பு.

"பாப்பா தூங்குதுடா" என்ற இளா பாப்புவை இழுத்துக் கொஞ்சினாள்.

"அப்பா வராங்கனு பாப்புக்கு ஒரே கொண்டாட்டம் போல"

செந்தா டீ போட்டுக் கொண்டுவரவும், இருவரும் எடுத்துக் கொண்டனர்.

"என்ன செந்தா கொலுசு சத்தம் தரையை பேத்துடும் போல, புதுசா...?" எனக் கேட்டாள் தமிழு.

"இல்ல அண்ணி! பழசு தான், கல்யாணத்துக்குப் போட்டது, கழட்டி வச்சிருந்தேன்"

"ஓ!" என அதற்கு மேல் எதுவும் கேட்காத தமிழு, தாயுடன் வேறு எதையோ பேசத் தொடங்கினாள்.

இளா மெல்ல"அண்ணி! அண்ணன் வர சந்தோஷத்துல கொலுசு காலுல ஏறிட்டுப் போல" எனக் கேலி செய்தாள்.

"பேசாம இரு இளா, உள்ள வா" என பாப்பாவைத் தூக்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் வெட்கத்துடன் செந்தா.
……………

மதியம் பன்னிரெண்டு மணியிருக்கும், கார் வரும் சத்தம் கேட்டு பாப்பு வாசலிற்கு ஓடினாள்.

மற்றவர்களும் எழுந்துச் சென்றனர், செந்தா அடுப்படியில் சாதத்தை வடித்தப்படி நின்றதால் உடனே போக இயலாமல், அவசரமாக சாதத்தை வடித்துவிட்டு வெளியில் செல்ல, அங்கு பாப்பு, கௌதுவின் கைகளில் தொங்கிக் கொண்டு அவனின் கழுத்தைக் கட்டிப்பிடித்தப்படி காட்சியளித்தாள்.

பாப்பு சென்று முதலில் தாவியதால் மற்றவர்கள் பின்னால் தள்ளப்பட்டனர்.

அவற்றை வேடிக்கைப் பார்த்த செந்தா, அனைவருக்கும் பின்னால் கதவின் முன்பக்கமாக நின்றாள்.

காலையில் இருந்து எப்பொழுது வருவான் என எதிர்பார்த்திருந்த மனைவி தன் கண்ணெதிரே நிற்கும் கணவனை வைத்தக் கண் எடுக்காமல் பார்க்க தொடங்கினாள்.

போன முறை கௌது திருமணத்திற்காக இரண்டு மாதம் மட்டுமே விடுப்பு எடுத்து வந்திருந்தான், அதுவும் திருமணத்திற்கு இருபது நாட்கள் முடிந்திருக்க, திருமணத்திற்கு பிறகு செந்தாவுடனான தாம்பத்ய வாழ்க்கையில் அவளோ முதல் மாதத்திலே கர்ப்பம் தரித்துவிட்டாள்.

கௌதுவின் விடுமுறையும் முடிய, அவனை முழுதாக புரிந்துக் கொள்வதற்குள் பறந்துவிட்டான். பிறகு ஃபோன் மட்டுமே இருவரின் வாழ்க்கையாக மாறியிருந்தது. அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பேசுவான், அவனோட கார் ஓட்டுநர் வேலை எந்த நேரத்திலும் ஃபோன் பேச தடையாக இருக்கும், இரவு அவன் அறைக்கு வரும் போது இரண்டு நாடுகளுக்கும் நேர வித்தியாசம் வந்துவிடும்.

அவன் பேசும் நேரங்களில் நலன் விசாரிப்பும், குடும்ப பிரச்சனைகளும், பாப்புவின் திருவிளையாடல் மட்டுமே பகிர்ந்துக் கொள்ளப்படும். செந்தாவும் அவன் மனநிலை எப்படி இருக்கும் என புரியாமல் மனதில் உள்ளவற்றை பேசாமலே இருந்துவிடுவாள்.

அதையும் மீறி இருவரின் காதல் பேச்சுகள் வெளிப்பட்டதே இல்லை, கௌது அதிகபட்சமாக கூறுவது'ஊருக்கு எப்ப வருவேனு இருக்கு செந்தா, உங்களை எல்லாம் பாக்கனும் போல இருக்கு' என்பது மட்டுமே.

"அம்மா! எப்டி இருக்க...?" எனத் தாயின் முன் சென்றவனை,

"என் தங்கம், ராசா எப்டிப்பா இருக்க, எனக்கு என்ன, நல்லா இருக்கேன்" என மகனின் முகத்தை தடவி முத்தம் வைத்தார் செவாயி.

அடுத்தடுத்து அப்புச்சி, அக்கா, தங்கை, தங்கை மகள் ஹர்ஷி பாப்பா என அனைவரையும் நலம் விசாரித்தான்.

பாட்டி"கௌது! உம் மவ என் கூட போட்டி போடுறா, என் பேரன் என்னைய பாக்க. தான் வரானு சொல்றேன், இல்லையாம் அவளைப் பாக்க தான் வரீயாம்" என சிறுவண்டுடன் போட்டிப் போட்டார்.

"எல்லாரையும் பாக்க தான் வந்தேன் அப்புச்சி, முக்கியமா பாப்புக் குட்டிய" என மகளிற்கு முத்தம் வைத்துக் கொஞ்சியப் படி திரும்பியவன், தன்னையே பார்த்துக் கொண்டு நிற்கும் மனைவியைக் கண்டு,
ஒரு நொடி தடுமாறினான்.

திருமணமான புதிதில் ஒல்லியாக, இளமையின் கன்னிப் பெண்ணாக இருந்தவள், இன்று பூசிய உடலுடன் குழந்தையின் தாயாக அதீத அழகுடன் காட்சியளித்தாள்.

மற்றவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த தன்னவனையே நோக்கியவள் சட்டென்று அவன், அவளைக் கண்டதும் எதுவும் தோன்றாமல், கால்கள் தடுமாற, கைகளில் முடிகள் சிலிர்த்திட, விழிகள் அசையாமல், எந்தப் பாவனையைக் கொடுப்பது என குழப்பத்துடன் முழித்தாள்.

சுற்றிலும் குடும்பத்தினர் நிற்பதை மூளை உணர்த்த, நொடியில் தன்னை மீட்ட கௌது, "நல்லா இருக்கீயா செந்தா...?" எனக் கேட்டான்.

"ம்ம்ம்! நீங்க...." என அவள் கேட்கவும், மகள் அவன் முகத்தைத் திருப்பவும் சரியாக இருந்தது.

"அப்பா! நான் சொன்னது எல்லாம் வாங்கிட்டு வந்தீங்களா...?" எனக் கேட்டாள் பாப்பு.

"ம்ம்ம்! வாங்கிட்டேன்டா பாப்பு" என மகளைக் கொஞ்சினான்.

"சரி! சரி! உள்ள போங்க, இப்டியே நின்னுட்டே இருந்தா எப்டி?" எனக் கேட்டான் கண்ணன்.

கண்ணனை வரவேற்று நாற்காலியில் அமர வைத்தாள் செந்தா.

"இருக்கட்டும்!" என்ற கண்ணன் கௌதுவிடம்"நீ போய் குளிச்சுட்டு வா கௌது, எல்லார்கிட்டையும் வந்து பேசலாம்" என செந்தாவுடன் தனியாக பேச செல்லட்டும் என்ற எண்ணத்தில் கூறினான்.

"பரவாயில்ல மாமா!" என்ற கௌது, இளாவின் மகளை மற்றொருப் பக்கம் தூக்கி கொஞ்சினான்.

பாட்டி"எங்க நீ வரதுக்குள்ள நான் கண்ணை மூடிடுவேனோனு நெனச்சேன் கௌது, உன்னைய பாத்துட்டேன் இனி எப்ப இந்த உசுருப் போனாலும் பரவாயில்ல" என வருத்தமாகக் கூறினார்.

"அப்புச்சி! அது எல்லாம் ஒன்னும் ஆகாது, நீ நல்லா இருப்ப"

"ஆமா! உன் அப்புச்சி இப்ப அப்போனு இழுத்துட்டு இருக்க மாதிரியே பேசும், நான் போனதுக்கு அப்புறம் தான் இது போவும், நீ போய் குளிச்சுட்டு வா கௌது" என செவாயி மாமியாரை முறைத்து சிலுப்பியவாறு கூறினார்.

"சரிம்மா!" என்றவன் இருப்பக்கமும் இருந்த பாப்பு, ஹர்ஷியை இறக்கிவிட்டு உள்ளே நடந்தான்.

செந்தா அவன் பின்னால் சென்றாள்.

"உன் தம்பி இவ்ளோ அம்மா புள்ளையா இருக்க கூடாது தமிழு, நான் சொன்னப்ப நகராதவன், உன் அம்மா சொன்னதும் உடனே குளிக்கப் போயிட்டான் பாரு." எனக் கேலிச் செய்தான் கண்ணன்.

"ம்ம்ம்! ஏன் நீங்க மட்டும் அம்மா புள்ள இல்லையா என்ன? ஏர்போர்ட் போயிட்டீங்கனு உங்கம்மா என்னைய படுத்தி எடுத்துட்டாங்க, அப்படியே புள்ளைய வீட்ட விட்டு வெளியில் அனுப்பாத மாதிரி." என முறைத்தாள் தமிழு.

"நல்ல வேளை ஞாபகப்படுத்தின, இரு அம்மா கிட்ட போய் பேசிட்டு வரேன்" என வெளியில் எழுந்துச் சென்றான் கண்ணன்.

அதுவரை சிறிய மகளுடன் ஹாலில் பேசிக் கொண்டு இருந்த, செவாயி"ஏ தமிழு! மாப்புள்ள எங்கடி போறாரு...? சாப்பாடு தயாருனு சொல்லு" எனக் குரல் கொடுத்தார்.

"வருவாரும்மா, அம்மாவோட கொஞ்ச போய் இருக்காரு, நீ ஏன் பக்கத்து வீடு கேக்குற மாதிரி கத்துற...?" எனச் சீறினாள் தமிழு.

"எதுக்குடி இப்ப என் கிட்ட பாஞ்சுட்டு வர?"

"அக்கா மாமியார் மேல உள்ள கடுப்பை உன் மேல காட்டுதும்மா" எனச் சிரித்தாள் இளா.

"ம்ம்ம்! ரொம்ப சிரிக்காத, செந்தா எங்க? சாப்பாட்டை எடுத்து வைக்கச் சொல்லு, அவருக்கு பசி வந்துட்டுப் போல" என்றாள் கண்ணன் சாப்பிடும் நேரம் வந்துவிட்டதை எண்ணி.

"அண்ணி, அண்ணனுக்கு குளிக்க துண்டு எடுத்துக் கொடுக்கப் போயிட்டாங்க, நீ போய் எடுத்து வை"

"ம்ம்ம்! அங்கயும் நான் தான் செய்யனும், இங்கயுமா, காலு எல்லாம் நோவுது, அம்மா நீ போய் எடுத்து வைம்மா"

"ஆமான்டி! நீங்க எல்லாம் வயசான கெழடுங்க, நான் மட்டும் குமரிப் பொண்ணு, எனக்கு கை, கால் நோவாது"
எனக் கேட்டப்படி செவாயி அடுப்படி பக்கம் நுழைந்தார்.

பாப்பு, ஹர்ஷியுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
………………………

அறைக்குள் நுழைந்த கௌது, அறையைச் சுற்றிப் பார்த்தான்.

இந்த வீடு அஸ்திவாரம் போட்ட பிறகே அவன் வெளிநாடு சென்றது, அதன் பின் அவனின் கல்யாணத்தின் போது ஸ்லாப் போட்டு பூச்சு பூசாமல் கிடந்தது. பழைய கொட்டகை பின்னால் சேர்ந்தாற்ப்ல முன்பு இருந்தது, அதில் தான் அவர்களின் முதல் இரவே நடந்தது.

திருமணத்தின் பின்பு தான் வீடானது முழுமையாக வேலை முடிந்து, பால் காய்ச்சி குடியேறினர். கௌதுவால் வீடு குடிப்பெயர, இளா திருமணத்திற்கு எல்லாம் வர இயலவில்லை.

என்ன தான் ஃபோனில் பார்த்து இருந்தாலும், இப்பொழுது தான் முதல் தடவையாக நேரில் பார்க்க, பின்னால் நின்ற செந்தா"பாத் ரூம் பின்னாடி இருக்குங்க, இருங்க குளிக்கத் துண்டு எடுத்து தரேன்." எனத் துண்டை எடுத்தாள்.

"ம்ம்ம்! ரொம்ப வருசம் கழிச்சு வந்தாலும், எது எல்லாம் எங்க இருக்குனு தெரியும் செந்தா" என சட்டையைக் கழட்டினான்.

உள்பனியனோடு கையை நீட்ட துண்டினை வாங்கிக் கொண்டவன்,
"நீ ஆளே மாறிட்ட!" எனக் கூறினான் சிரித்தப்படி.

அதுவரை ஃபோனில் பேசிய அனுபவமே அதிகம் என்பதால் எப்படி, என்ன பேசுவது என யோசித்தவள், அவனின் வார்த்தைகளில் சற்று தைரியம் வர, "என்ன மாறிட்டேனுங்க...?" எனப் பயந்து புரியாமல் கேட்டாள்.

"நீ பயப்புடுற மாதிரி சொல்லல, கல்யாணத்தப்ப ஒல்லியா இருந்த, இப்ப கொஞ்சம் பாப்புக்கு அம்மா சைஸில் தெரியுற..." என அவள் அருகில் நெருங்கினான்.

அவனையே வெட்கத்துடன் பார்த்தவள்,
"குண்டா ஆகிட்டேனாங்க!" என வருத்தமாக கேட்க,

"இல்ல செந்தா! அப்டி சொல்லல, இப்ப கொஞ்சம் பெரிய மனுசியா தெரியுற" என அவளின் இடையில் கைவைத்து தன் மார்போடு அணைத்தான்.

எத்தனை வருடங்களின் ஏக்கங்கள் அது, அவனின் ஸ்பரிசம் அவளை நிலைகுனிய செய்தது, அவளை மீறி கைகள் தானாக அவனின் முதுகைக் கோர்க்க, மார்பில் சாய்ந்து,

"எட்டு வருசம் ஆச்சுங்க, பெரிய மனுசி தானே" என்றாள் மெல்ல.

"ஆமாம்மா! ரொம்ப பெரிய மனுசி ஆகுறதுக்குள்ள ஒரு பையனைப் பெத்துடுவோம், அம்மாக்கு ஒரே புலம்பல் அதான் செந்தா, ஒரு பேரன் பொறக்கனுமாம்..." என்றான் அவளை அணைத்தப்படியே.

அதுவரை அவள் மனதில் அணைக் கட்டியிருந்த மகிழ்ச்சியானது அப்படியே அடுக்கி வைத்தச் சீட்டுக் கட்டுகளாக சரிந்தது.

அவளை விலக்கியவன்"சரி! நான் போய் குளிச்சுட்டு வரேன்" என வெளியில் சென்றான்.

கொலுசொலி ஆசைகள்....

 
Top