எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் 04

NNK 89

Moderator
கொலுசொலி ஆசைகள் 04

செந்தா அறைக்குள் சென்று கதவைத் தாழிடுவதற்கு திரும்பிய நேரத்தில் செவாயி"செந்தா! செத்த நில்லு" என்றார்.

அதுவரை மகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த கௌதுவும் திரும்பிப் பார்த்தான்.

"என்ன அத்த...?"

"நாளைக்கு வெள்ளனமே நம்ம ஆலமரத்து கிட்ட கெடா வெட்டுறாங்க, நான் கறி வாங்கப் போயிடுவேன், எழுந்திரிச்சு வந்து என்ன தேடாத"

"சரிங்கத்த!"

கௌது எழுந்து வந்து, "ஏன்மா! நீ போற, நான் போய் வாங்கிட்டு வரேன், எத்தன மணிக்குப் போகனும்?" எனக் கேட்டான்.

"கௌது! நீயே எட்டு வருசம் கழிச்சு வந்து இருக்க, காலையிலே ஆடு அறுக்குற இடத்துல ஊரு சனமே நிக்கும், உன்னைய பாத்துட்டு எல்லாரும் நலம் விசாரிப்பாங்க தான். ஆனா அதுக்கு முன்னாடி நீ துக்கம் விசாரிக்கப் போகனும்."

"ம்ம்ம்! காலையில போக தான், மகேஷை வரச் சொல்லி இருக்கேன், போயிட்டு வந்துடுறேன்மா"

"நம்ம ஊருல ஏகப்பட்ட துக்கம், மகேஷ் எல்லா வீட்டுக்கும் கூட்டிட்டுப் போயிடுவான், அது வேணாம் நான் சொல்ற வீட்டுக்கு மட்டும் போயிட்டு வா, வெளியூர்ல நம்ம தமிழு, இளா சொந்தகளுக்கு பொங்கல் முடிச்சுட்டுப் போலாம்"

"சரிம்மா! யாரு வீட்டுக்கு எல்லாம் போகனும்..?"

செவாயி ஒரு லிஸ்ட் பெயரைக் கூறினார்.

"இங்க மட்டும் போயிட்டு வா, போய் செத்த நேரம் உட்காந்து எழுந்திரி போதும். அடுத்தடுத்த வீட்டுக்குப் போகனுமுனு சொல்லிட்டு கிளம்பிடு, இல்லனா பொழுதுப் போய் தான் வீடுத் திரும்புவ..."

"ம்ம்ம்!"

"செந்தா! உங்கம்மாவும், மாமாவும் வரதுதான் வராங்க, மதியம் சாப்புடற மாதிரி வரச்சொல்லு, ஆட்டுக்கறி தானே எடுக்குறோம்" என்றார்.

"இல்லத்த! அம்மா காலையிலே வந்துட்டுப் போயிடும், அங்கயும் வேலை இருக்குல"

"கௌதுவ பாக்காம போயிடுவாங்களா என்ன...? அவன் ஊருக்குள்ள துக்கம் விசாரிக்க காலையில போறான்ல. மதியம் தான் வருவான். ஃபோன் பண்ணி விசயத்தைச் சொல்லு, மதியம் சோறு தின்னுட்டுப் பொறுமையா துக்கம் விசாரிக்கப் போக முடியுமா? ஊருல என்ன சொல்லுவாங்க, இன்னைக்கே போயிருக்கனும், ஆனா காலையில் போனா எல்லாரு வீட்டுலையும் ஆளு இருப்பாங்கனு விட்டுட்டேன்"

"இல்ல அத்த!" என ஆரம்பித்தவளிடம், "செந்தா! சாப்புட தானே அம்மா வரச்சொல்றாங்க. காலையில் ஃபோன் பண்ணிச் சொல்லு" என்றான் கௌது.

"ம்ம்ம்! சரிங்க" என மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் அமைதியானாள்.

"எது சொன்னாலும் பதிலு வச்சு இருப்பா, நீ போய் படு கௌது" என படுப்பதற்கு சென்றார் செவாயி.

கௌது நகர, செந்தா திரும்பி கதவினைத் தாழ் போட்டாள்.

பாப்பு கட்டிலில் படுத்துக் கொண்டு கௌது தந்த விளையாட்டு வீடியோ கேமில் ஆழ்ந்திருந்தாள்.

"செந்தா! பாப்பு தினமும் கீழே படுப்பீங்கனு சொல்றா, ஏன்...?" எனக் கேட்டான்.

"இல்லங்க! எனக்கு கட்டிலில் படுக்க வசதியா இல்ல, அதான் பகலில் சும்மா கட்டிலில் படுத்துக்குறது, நைட் தரையில் பாய் போட்டு படுத்துடுவோம்"

"ஏன் வசதியில்ல?"

"அது வந்து..." என அவள் நிறுத்த, அதற்குள் பாப்பு அழைத்திட, கௌது பெட்டில் சென்று அமர்ந்தான்.

செந்தா ஆழ்ந்த மூச்சினை வெளியிட்டு, கட்டில் அருகே சென்று போர்வையை எடுத்துப் போட்டாள்.

"அப்பா! இப்டி தானே" என்று பாப்பு கேட்கவும், மகளுடன் பேசியவன் செந்தா பாய் படுக்கையை மறந்தான்.

அவன் இல்லாத மெத்தைப் படுக்கை அவளிற்கு கசந்தது என எப்படி கூறுவாள்? மேலும் பின்னால் இருந்த கொட்டகை வீட்டின் தரையில் தான் முதல் இரவே நடந்தது. செந்தாவுக்கு வந்த இந்த கட்டில் பிரிக்கப்படாமல் கட்டி முடிக்காத இந்த அறையில் கிடத்தப்பட்டிருந்தது.

பாப்பு கொட்டாவி விடவும்,"சரி பாப்பு தூங்கு!" என்றான்.

செந்தாவும் கட்டிலில் ஓரமாக இருவரும் விளையாடுவதைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

செந்தா தரையில் படுப்பதால் கட்டிலை சுவருடன் ஒட்டிப் போட்டு இருந்தாள்.

"பாப்பு! போதும் தூங்கு" என்றாள் செந்தா.

"அம்மா! இன்னைக்கு மெத்தையில் அப்பாவோட தூங்குவேன்" என்றாள் மகள்.

"பாப்பு! எல்லாருமே இங்க தான் தூங்கப் போறோம். நீ படு" என்ற கௌது சுவர் ஓரமாக செந்தாவைப் போக சொன்னான், பாப்பு நடுவில் தூங்கட்டும் என்று.

"இல்ல நான் தான் இங்கப் படுப்பேன்" என சுவர் ஓரமாக பாப்பு நகர்ந்தாள்.

"சரி! நீ நடுவில் படு" என்றான் மனைவியிடம்.

"இல்ல! அப்பா என் கூட தான் படுக்கனும். அம்மா அந்தப் பக்கம் போ நீ" என்றவளை முறைத்தாள் செந்தா.

"சரிடா பாப்பு! இரு, செந்தா நீ இந்தப் பக்கம் வா, நான் நடுவுல படுத்துக்குறேன்" என்றான் தந்தை.

"அவ தான் கேக்குறானு நீங்களும் என்னங்க, நடுவுல எப்படி படுப்பீங்க இடைஞ்சலா இருக்கும், பாப்பு! சொல்ற பேச்சைக் கேளு" என மகளை அதட்டினாள்.

"பரவாயில்ல விடு செந்தா! எனக்கு பிரச்சனையில்லை" என எழுந்து நடுவில் போய் படுத்தான்.

"ஏங்க! காலையில துக்கம் விசாரிக்கப் போறீங்கள, அத்த சந்திரா அக்கா வீட்ட சொல்லல, நீங்கப் போயிட்டு வந்துடுங்க"

"அந்த நொங்குப் பிரச்சனை வந்துச்சுல அதான் அம்மா சொல்லல போல"

"ஆனா! அதுக்காக அவங்க மாமனார் இறப்புக்கு போய் விசாரிக்காம இருப்பீங்களா? உங்களுக்கு பங்காளிப் பெரியப்பாங்க"

"புரியுது! அம்மா வேணானு சொல்லும் போது, என்ன செய்றது செந்தா...?"

"ரெண்டுப் பக்கமும் சண்டைப் போட்டு பேசிகிட்டாங்க, ஆனா அந்த மாமா இறந்தது அதுக்கு முன்னாடி, துக்கம் விசாரிக்கப் போகாம இருந்தா நல்லா இருக்காதுல"

"அது எப்படி அந்த அண்ணன் அம்மாவ கெட்ட வார்த்தைச் சொல்லிப் பேசலாம்.? அம்மாவே ஆரம்பிச்சிருக்கட்டும், வயசுக்குனு ஒரு மரியாதை இருக்குல, நீ பேசாம இரு, அம்மா சொல்றதும் சரி தான்." என மனைவியை அடக்கினான்.

"அவரு பேசினது தப்புதான். நீங்க துக்கம் விசாரிச்சுட்டு வந்தா போதும் அப்புறம் எல்லாம் போக வேணாமுங்க, சந்திரா அக்கா நல்லா பேசுவாங்க" என்றாள், கணவனை மற்றவர்கள் குறைக் கூறிட கூடாதென்ற அர்த்தத்தில் யோசித்தவாறு.

செவாயி வீட்டு நொங்கு மரத்தில், சந்திரா புருசன்(கௌதுக்கு அண்ணன் வேணும்) நொங்கு வெட்டிக் கூட்டாளிகளோடு தின்று விட, செவாயி யார் வெட்டியது என விசாரித்து, சந்திரா வீடுவரைச் சென்று சண்டையிட, வாக்குவாதம் பெரிதாகி சந்திரா புருசன் செவாயியை தகாத கெட்ட வார்த்தைகளால் பேசி தாய் முறை என்றும் பாராமல் அசிங்கப் படுத்திவிட்டான்.

செந்தா எண்ணம், எட்டு வருடங்கள் கழித்து வருவதால் கணவன் ஒதுங்கிடாமல் போய் வந்தால் நல்லதென்று. ஏன் என்றால் செவாயி மேல் தான் முதல் தவறு, முதலில் வீடுவரைச் சென்று சண்டைப் போட்டதால் வார்த்தைகள் விழுந்து பெரிதாகியது. 'நுங்கு எல்லாம் ஒரு விசயமா' என செந்தா எண்ணினாள். சந்திராவும் செந்தாவும் நன்குப் பேசிக் கொள்ளும் தோழிப் போன்றவர்கள்.

அதற்கு மேல் அவனிடம் பேச இயலாமல் செந்தா அமைதியானாள்.

அப்பாவும், மகளும் கதைப் பேச, பாப்பு கண் அயர்ந்தாள்

செந்தா அவனின் கதையைக் கேட்டவாறு கண்களை மட்டுமே மூடியிருந்தாள்.

பாப்பு தூங்கியதை உறுதிப் படுத்திய கௌது, திரும்பி"தூங்கிட்டீயா? லைட் ஆஃப் பண்ணிட்டு வா, செந்தா" என்றான்.

"தூங்கல, இருங்க ஆஃப் பண்றேன்" என எழுந்துச் சென்று விளக்கை அணைத்து விட்டு வந்தாள்.

செந்தா வந்துப் படுத்ததும் அவள் பக்கம் திரும்பியவன், அவளோடு நெருங்கிப் படுத்தான்.

அவளுக்குமே அவனின் நெருக்கம் பிடித்தது, மெல்ல அவன் புறம் முகத்தைத் திருப்பினாள்.

அந்த வானத்தின் நிலா, தன் வெளிச்சத்தை ஜன்னல் வழியாக தேவைவானதை மட்டுமே அனுப்ப, அவர்களின் முகங்கள் பார்த்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.

"செந்தா!"

"ம்ம்ம்!"

அவளின் முகத்தையே பார்த்தவன், மெல்ல அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

பெண்ணவளிற்கு தன்னவனின் ஸ்பரிசம் படவும், அவளின் உணர்வுகள் பூத்திட தன்னிலை இழக்க தயாரானாள்.

இத்தனை வருடங்கள் பிரிவின் காரணமாக இருவரோட உடல்களின் உணர்வுகளானது அவர்கள் மனதின் எந்த வித கேள்விகளையும் எதிர்நோக்க காத்திருக்கவில்லை.

கௌதுவின் மேலோங்கிய உணர்ச்சிகள் செந்தாவை நிலைகுனிய செய்தது. முதலில் கணவனின் ஸ்பரிசம் பட்டிட அவனின் போக்கிற்கு இணங்கியவள், ஒரு கட்டத்தில் முடியாமல் தத்தளித்தாள்.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல்"ஏங்க! வலிக்குது" என்றாள் மெல்ல.

"என்ன செந்தா, என்னமோ ஃபர்ஸ்ட் நைட் மாதிரி சொல்ற? நமக்கு ஒரு புள்ளயே இருக்கு" எனக் கேட்டுவிட்டு மேலும் முன்னேறினான்.

இது எட்டு வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையும் தாம்பத்ய உறவு, மேலும் இந்த உறவானது கிட்டதட்ட ஃபர்ஸ்ட் நைட் உணர்வில் தான் இருக்கும் என்பதையே மறந்திருந்தான் மடையன்.

அன்று, முதல் இரவில் செந்தா மனதளவில் தயாராக இருந்தாள், புதுப் பெண் என்ற புதுமையான உணர்வில் அன்றைய தாம்பத்ய உறவின் வலியானது மனதிற்கு ஏற்ற சுகமான வலியாக தெரிந்தது.

இன்றோ பல உணர்வுகள் கலந்த ஒரு தாய், மேலும் அவளின் உணர்வுகள் மேலோங்கினாலும் உணர்ச்சிகள் ஏற்பட நேரம் தேவைப்பட்டது.

அவளின் ஆரம்ப உணர்ச்சியில் கௌது இறுதி நிலையை எட்ட அவளால் முடியாமல் கால்களை அசைத்து எதிர்ப்பினை, அவளை அறியாமல் தெரிவித்தாள்.

ஒரு பெண்ணிற்கு ஆசையிருந்தும் மனதின் பிடித்தமான தாம்பத்யம் அமையவில்லை என்றால் அதுவும் ஒருவிதமான பாலியல் கொடுமையே. இருவரில் ஒருவர் மட்டுமே இன்பமுறும் தாம்பத்ய உறவானது கற்பழிப்பிற்கு சமம்.

செந்தா வலியால் தெரிவித்த எதிர்ப்பில் அவளின் கால்களின் கொலுசு மிகுந்த ஒலியை எதிரொலித்தது.

அவ்வொலியில் பாப்பு முண்டிட, கௌது
மெல்ல"இந்த கொலுசைக் கழட்டு செந்தா" என்றான்.

அவளோ"ஏங்க! நாளைக்கு...." என இழுக்க, அதை காதில் வாங்காத நிலையில் இருந்தவன், அவள் பேச ஆரம்பித்தபோதே, "சரி இரு, நானே கழட்டுறேன்" என்று வேகமாக கொலுசினை கழட்டி கட்டில் கீழ் போட்டான்.

அதன் பின் நடந்ததில், செந்தாவிற்கு கடந்த கால சுகமான வலியானது தற்போது சொல்ல முடியா வடுவாக மாறியிருந்தது. தன் சத்தம் வெளியில் கேட்காமல் உள்ளடக்கினாள்.

கௌது விலகிட, செந்தாவின் கண்களில் கண்ணீர் மட்டுமே மிஞ்சியது.

அவனோ மகளின் பக்கம் திரும்பி, அவளை அணைத்தவாறு தூங்கத் தொடங்கினான்.

………

விடியற்காலையில் வழக்கமான நேரத்தில் முழிப்பு வந்தாலும் செந்தாவால் எழ முடியவில்லை.

சிறிது நேரப் போராட்டதிற்கு பிறகு தன் கனத்த உணர்வுகள் நிறைந்த உடலை தூக்கிக் கொண்டு மெல்ல எழுந்தமர்ந்தாள்.

திரும்பி கணவனையும், மகளையும் பார்த்தவள், இருவரின் ஆழ்ந்த உறக்கத்தைக் களைத்து விடாமல் மெல்ல எழுந்து ஒரு அடி எடுத்து வைக்கவும், பாதத்தில் ஏதோ தட்டுப்பட சலசலப்பு சத்தம் கேட்டது.

அப்பொழுது தான் அது கொலுசின் ஒலி என்று நினைவில் ஏறியது.

குனிந்து அதைக் கையில் எடுத்தவள், மெல்ல குனிந்து கால்களில் மாட்டினாள்.

பிறகு தன் புடவையைச் சரிச்செய்ய தொடங்க, முன்பு தாம்பத்ய உறவிலும் இதே கொலுசினை அணிந்திருந்தாள், ஆனால் கழட்டவில்லை. அன்று அதன் ஒலியானது தொந்தரவாக தெரியவில்லை. இன்று ஏன்....? என்ற கேள்வி செந்தாவின் மனதில் எழும்பியது.

மனமோ'அன்னைக்கு இந்த உறவு எனக்குப் புடிச்சது அனுபவிச்சேன், அதுக்கு ஏத்தாப்ல கொலுசொலி கேட்டுச்சு. ஆனால் நேத்து...' என நிறுத்தியது.

'நேத்து ஏன் உனக்குப் புடிக்கல.?' எனக் கேட்டாள் மனமிடம்.

'ம்ம்ம்! நான் தயார் ஆக வேண்டாமா இந்த உறவிற்கு, எனக்கு தேவையான உணர்ச்சிகள் கெடைச்சா தான் நானும் ஒத்துழைப்பேன், இல்லைனா உனக்கு வலி தான் மிஞ்சும்' என்று முறைத்த மனம், அவளிடம் இருந்து அடங்கியது.

செந்தா புரியாமல் தலையைக் குலுக்கிவிட்டு, வெளியில் சென்றாள்.

செவாயி படுக்கைச் சுருட்டப்பட்டு ஓரமாக இருந்தது.

பின் பக்கம் சென்றவளுக்கு ஏதோ ஒரு உணர்வு வர, அவசரமாக பாத்ரூம் சென்றாள்.

இன்னும் ஒரு வாரம் கழித்து வரவேண்டிய மாதவிலக்கானது இன்றே வந்துவிட்டது.

பொதுவாக செந்தாவிற்கு மாதவிலக்கு சுழற்சியானது இருபத்து ஆறு நாட்களுக்கு ஒரு முறை வரும். பல மாதங்களில் இரு முறை குளித்து விடுவாள். அவளுக்கு அது கொடுமையான ஒன்றாக இருக்கும்.

ஆனால் இன்று இவ்வளவு முன்பே வரவும் மனதில் நொந்துப் போனாள். நாளை பொங்கல் பண்டிகையாகும்.

கொலுசொலி ஆசைகள்...
 
Top