எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் 05

NNK 89

Moderator
கொலுசொலி ஆசைகள் 05

செந்தா தலைக் குளித்த நிலையுடன், காலை வேலைகளைத் தொடங்கிருந்தாள்.

செவாயி மகனிற்காக பல வகைகளை வாங்கி வந்திருந்தார். ஆட்டுக் குடல், இரத்தம், நெஞ்செலும்பு, தனியாக கொழுப்பு, ஈரலுலுடன் கூடிய கறி என மூன்று வேளைகளும் தனி தனியாக சமைக்க பட்டியலிட்டார் மருமகளிடம்.

"செந்தா! காலையில குடல் குழம்பு வச்சுடு, இட்லிக்கு வச்சுக்கலாம். மதியத்துக்கு ரத்தப் பொரியல், நெஞ்செலும்பு ரசம், மத்தத போட்டு தண்ணீ குழம்பா வை, ராத்திரிக்கு ஆட்டுத் தலை சொல்லி வச்சிருக்கேன். தோசைக்கு நல்லா இருக்கும்" என முடித்தார்.

செந்தா"சரிங்கத்த!" என்று மட்டுமே கூறினாள்.

"விறகு அடுப்புல பெரிய பானை நெறையா தண்ணீ ஊத்திப் போடு, நல்லா கொதிக்கட்டும். குடல் அலசனும், நான் போய் சாணியை அள்ளிப் போட்டு வந்துடுறேன்" என பின்பக்கம் சென்றவர், திரும்பி வந்து"நீ வெங்காயம், தக்காளி, இஞ்சிப் பூண்டு எல்லாம் அரிஞ்சு, அரைச்சு வை, நானே குழம்பு வைக்கிறேன், நீ வச்சாலும் அப்படியே மணத்துடும்" என மீண்டும் பின்னால் நடந்தார்.

செந்தாவும், விறகு அடுப்பினை மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்து தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்க சென்றாள்.

கௌது எழுந்திட, பாப்புவும் சேர்ந்து எழுந்தாள்.

செந்தா இருவருக்கும் டீ மற்றும் பால் எடுத்துச் சென்று தர, பெட்டை விட்டு எழாமல் பேசிக்கொண்டே படுத்திருந்தனர்.

செந்தா பாப்புவை ப்ரஷ் செய்ய அனுப்பிவிட்டு, படுக்கையை சரிச்செய்தாள்.

கௌது முகத்தை கழுவி உள்ளே வர, கையில் டீ எடுத்தப்படி, "செந்தா! அம்மா கிட்ட கேட்டுப் பாக்குறேன், சந்திரா அண்ணி வீட்டுக்குப் போயிட்டு வர, எனக்குமே போறது தான் சரினு தோணுது" என்றான்.

"ம்ம்ம்! அந்த மாமா இறந்தது சண்டைக்கு எல்லாம் முன்னாடிங்க, அதோட நம்ம வீட்டு விசேஷத்துக்கு சந்திரா அக்கா முன்னாடி வந்து நிக்கும். நம்ம இளா கல்யாணத்துக்கு அவங்க இல்லனா நான் தனியா என்ன பண்ணி இருப்பேன்."

"புரியுது! பாக்குறேன்" என வெளியில் சென்றான்.

செவாயி குடலைச் சுத்தம் செய்து, குழம்பு வைத்திட, கௌதுவும் காலை உணவினை முடித்துக் கொண்டு ஊர் துக்கம் விசாரிக்கப் புறப்பட்டான்.

"அம்மா! சிதம்பரம் அண்ணன் வீட்டுக்குப் போயிட்டு வந்துடவா, சண்டை ஒரு பக்கம் இருந்தாலும் பெரியப்பா செத்ததுக்கு விசாரிக்கனுமே" என்றான், செந்தா பேசிய சந்திரா புருசன் தான் சிதம்பரம்.

செந்தா அடுப்படியில் இருந்து எட்டிப் பார்த்தாள், செவாயி"ஏன்! உன் பொண்டாட்டி எதுவும் சொன்னாளா? தெரியும்! இவ அந்தச் சந்திராவோட கூட்டுச் சேந்து பேசுறது" எனத் திரும்பி மருமகளை முறைத்தவர்,

"எனக்கு என்ன வந்துச்சி, உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் முக்கியமுனா போயிட்டு வா, என்னைய எவன் மானகேடா பேசினா உனக்கு என்ன...?" என கண்களை கசக்கி முந்தானையில் மூக்கினை உறிஞ்சி இழுத்தார்.

பாட்டி"கௌது! உன் அம்மாகாரி அப்டியே பசப்புறா, இவ என்ன பேசி இருப்பானு எனக்கு தெரியும். சும்மாவா அவன் கண்டத பேசியிருப்பான். இவளுக்கு நாக்கு அடங்காது" என வேண்டுமென்றே பேரனிடம் ஏற்றிவிட்டார்.

"ஏ கெழவி! உன்னைய இன்னும் கட்டையில போற வரைக்கும் பாத்துக்கிறேன்ல, நீ இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ" எனச் சீறினார் மாமியாரிடம் செவாயி.

"அம்மா! விடுங்க நான் போகல, நீங்க ரெண்டுப் பேரும் அமைதியா இருங்க" எனக் கூறிய கௌது, மகேஷ் வரவும் புறப்பட்டுச் சென்றான்.

பாட்டி செவாயிடம்"நீ அவன ஆட்டிப் படைக்குறடி, இன்னும் எத்தன நாளைக்குனு பாக்குறேன். உம் மருமவ ஊமையா நீ சொல்றத கேக்குறானு தானே இந்த ஆட்டம் ஆடுற... சிதம்பரத்தோட அப்பா செத்ததுக்கு என் பேரன் போய் விசாரிக்க கட்டுப்பாடு போடுறீயா? எல்லாம் உன் ஆட்சினு நெனக்காத, எம் மருமவளே! எல்லாம் மாறும்" எனப் பாட்டி கத்திப் பேசினார்.

செவாயி மெல்ல பாட்டி அருகே போய்,
"ஏ கெழவி! என்ன சிதம்பர குடும்பத்து மேல ரொம்ப அக்கரையா பேசுற? அவனோட தாத்தாவும், நீயும் அப்படினு ஊருக்குள்ள பேசுறது உண்மையா என்ன?" எனப் பச்சையாக மாமியாரைக் கேட்டார் செவாயி.

புருசனை இழந்த பெண்ணிடம் கொழுந்தன் உதவிச் செய்ய வந்தாலோ, இல்லை சிரித்துப் பேசினாலோ கதைக் கட்டிவிடுற உலகம் தானே. அந்த வகையில் இளம் விதவையாக இருந்த பாட்டியை சிதம்பரத்தின் தாத்தாவோடு அந்தக் காலத்தில் இணைத்துப் பேசினர் ஊரார்.

"அடிச் செருப்பால! என்னடி பேசுற?" எனப் பாட்டி எழ முடியாமல் எழுந்து நின்று சீறினார் செவாயிடம்.

செந்தா ஓடிவர, "இப்ப என்னதுக்கு குதிச்சுட்டு வர கெழவி, அந்தச் சிதம்பரம் என்னைய நாக்குல நரம்பு இல்லாம கொச்சையா பேசி இருக்கான். அவன் வீட்டு எழவுக்கு விசாரிக்க போகலனு நீ வரிஞ்சு கட்டிட்டு வர, என்னைய விட அந்தக் குடும்பம் முக்கியமா படுதா உனக்கு, அப்ப ஊருக்குள்ள பேசுறது எனக்கு உண்மையா தானே தோணும்" என்றார் வீம்பாக.

"அத்த! மறுபடியும் பாட்டிய அப்படி பேசாதீங்க, ஊருக்குள்ள சொல்லலாம் நீங்க சொல்லக் கூடாது, நீங்களும் தான் மாமா இல்லாம இருக்கீங்க, நானும் தான் உங்கப் புள்ள இல்லாம தனியா எட்டு வருசம் வாழுந்தேன். நம்மளைப் பத்தி ஏதாவது பேசுனா அதுவும் உண்மையாகுமா...?" எனக் கோபம் சற்று மிகையாகிட கேட்டாள் செந்தா.

"ஓ! அவ்ளோ தூரம் தைரியம் வந்துட்டா உனக்கு, என்னைய கேள்விக் கேக்குறளவுக்கு, ஏன்! உன் புருசன் பக்கத்துல இருக்கானு நெனப்பாடி. உனக்கும், இந்தக் கெழவிக்கும் அந்தச் சிதம்பர குடும்பத்து மேல அப்படி என்ன அக்கரை?" எனக் கேட்டு அகங்காரமாய் முறைத்தார்.

"ச்சீ! ச்சீ! கழுதை ஏதோ கத்திட்டு இருக்கு, நீ போ செந்தா, இவ வாய் தான் இவளுக்கு எதிரி, எந்தளவு இந்தக் குடும்பத்துக்கு கஷ்டப்படுறாளோ அந்த அளவுக்கு வெளியில பகையை சம்பாரிச்சு வச்சு இருக்கா, எல்லாத்தையும் என் பேரன் தலை மேல கொண்ட வைக்கப் போறா... பாவி!" எனப் பாட்டி கத்திவிட்டு அப்படியே படுக்கையில் சரிந்துக் கொண்டார்.

செந்தா பதிலில்லாமல் அடுப்படிற்குள் சென்று விட்டாள்.

செவாயி சிறிது நேரம் வசைப்பாடிவிட்டு அடுத்த வேலையில் இறங்க, வீடே நிசப்தமாக இருந்தது.

நல்ல வேளை பாப்பு, கௌது சென்றதும் பக்கத்து வீட்டிற்கு விளையாடச் சென்று விட்டாள்.

மதியத்தை நெருங்கவில்லை, வாசலில் ஒரு பைக் வந்து நின்றது. அதில் இருந்து செந்தாவின் தாய் தெய்வானையும், தாய் மாமாவும், மூத்த சகோதரியின் கணவனுமான நடராஜன் இறங்கி வீட்டிற்குள் செந்தாவை அழைத்தப்படி நுழைந்தனர்.

பாட்டி"ஆரு அது?" எனக் கேட்டுக் கொண்டே எழுந்தார்.

"நான் தான் தெய்வானைமா"

"வாங்க! வாங்க! ஏ செந்தா!" எனக் குரல் கொடுத்தார் பாட்டி.

பைக் சத்தத்தில் பின்னால் இருந்து வந்தார் செவாயி. செந்தாவும் அடுப்படி வேலையில் இருந்து விலகி ஓடிவந்து இருவரையும் வரவேற்றாள்.

செவாயி பின்னால் இருந்து முன் வாசல் வழியாக வர, "வாங்க ரெண்டுப் பேரும்" என்றார்.

"நல்லா இருக்கீங்களா சம்பந்தி!" எனக் கேட்டார் தெய்வானை.

"ம்ம்ம்! உங்கப் பொண்ணை வச்சு ஓட்டுறேன்ல, அது நான் நல்லா இருந்தா தானே முடியும். எப்படி தம்பி இருக்கீங்க?" என நடராஜனிடம் விசாரித்தார் செவாயி.

"நல்லா இருக்கேன்மா! எங்க சகலய காணும்?"

"அவன் துக்கம் விசாரிக்க காலையில போனது இன்னும் திரும்பலப்பா, எங்க போற வீட்டுல எல்லாம் இந்த மாதிரி ஒரு கெழடுப் படுத்துகிடக்குது, எல்லாத்துகிட்டையும் பேசி முடிச்சு அடுத்த வீடுப் போகனுமே"

"என்னம்மா செய்றது, நம்ம பொறந்த இடமுனு ஊருக்குள்ள இருக்குறதுக்கு இது ஒரு பெரிய சோலி மாதிரி தெரியுது.
செத்த வீடுப் போறதுக்கே நாள் பத்த மாட்டுது. வாரத்துல நாலு சாவு விழுந்துடுது. சகலை வேற எட்டு வருசம் கழிச்சு வந்ததிருக்கார். நேரமாகும் தான்"

"ம்ம்ம்! செந்தா போய் காபி போட்டுக் கொண்டுவா."

"அது எல்லாம் வேணாம்மா" என நடராஜன், செவாயிடம் பேச, தெய்வானை மகளுடன் அடுப்படிற்குள் சென்றார்.

"என்னடி! மதியமே வானு புடிவாதமா சொல்லிட்ட, நாளைக்குப் பொங்கல் வேலை இருக்குல, எங்க புள்ளய காணும்?"

"என்னைய என்ன பண்ண சொல்ற, அத்த தான் சொல்ல சொன்னாங்க, நீ வர நேரத்துலையும் அவர் இருக்க மாட்டார், பாப்பு விளையாடப் போயிருக்கா." எனக் கூறியவள், நடராஜனுக்கு சென்று தண்ணீரைக் கொடுத்து வந்தாள்.

"ஏன்டி! அசதியா தெரியுற?" எனக் கேட்டவாறே, மதிய சமையலுக்காக மகளுடன் உதவியில் இறங்கினார்.

"ம்ம்ம்! குளிக்குற நாள்மா"

"எத்தனையாவது தலை?"

"இன்னைக்கு தான்"

"நாளைக்கு பொங்கல் வேறயே, சரி விடு! அதான் உன் மாமியா இருக்கே" என்றார் மெல்ல.

"இன்னும் சொல்லல, அதுக்கு வேற திட்டப் போறாங்க"

"அதுக்கு என்ன பண்றது, பொம்பளையா பொறந்தா இது இயற்கை தானே, அந்த உளுந்தை எடு கழுவித் தரேன்." என வெளிப்பக்கமாக ஓரமாக அமர்ந்தார்.

"பாவம்! அக்கா தனியா பாத்துட்டு இருக்கா செந்தா"

"எல்லாம் நல்லா இருக்காங்களா?"

"ம்ம்ம்!"

செந்தாவிற்கு இரண்டு அக்கா, ஒரு தங்கை. மூத்த அக்கா செங்கனியை தாய்மாமனுக்கே கொடுத்தாச்சு, நடராஜன் தெய்வானையின் தம்பி.

இரண்டாவது அக்கா செந்தூராவை பக்கத்தில் கட்டிக் கொடுத்திருக்கு. மூன்றாவது தங்கச்சி செம்பருத்தி வீட்டில் இருக்கிறாள். செங்கனி தெய்வானையுடன் வீட்டிலே புருசனுடன் தங்கி இருக்கிறாள். அப்பா நோய்வாய்ப்பட்டு படுக்கையாக கிடக்கிறார்.

"செம்பாவுக்கு வரன் எதுவும் வருதாம்மா?"

"வருது தான் செந்தா, ஆனா நம்மளும் எதாச்சும் கையல வச்சுக்கனுமே, நட்டுவும் பாவம் ஏதோ போட்டு அடிச்சு சமாளிக்கிறான். வரதுக்கு மேல செலவு இருந்தா என்ன செய்றதுடி"

"ம்ம்ம்! நான் என்னம்மா பண்ண முடியும்? என்னால உனக்கும், கூடப் பொறந்தவகளுக்கும் எதும் செய்ய முடியாத நிலை, அதனால தான் முடிஞ்சவரை அங்க வந்து தங்காம ஏதோ என்னால ஆன உதவியைச் செய்றேன்."

"எப்டி தான் இருக்கியோடி, எட்டு வருசத்தையும் ஓட்டிட்ட, உன் மாமியார் பேச்சைக் கேட்டு கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாதுனு நம்ம பர்வதா சொல்லுவா தான். என்ன செய்றது? நம்ம குடும்ப சூழ்நிலை அப்டியிருக்கு. இதுல செந்தூரா அப்பப்ப வந்து நின்னுறா செந்தா"

"ஏன்மா?"

"புள்ளக்கு மொட்டை அடிக்கனுமாம்."

"அம்மா! பாப்புவுக்கும் கூடியச் சீக்கிரம் சொல்லுவாங்க, மொத மொட்டை நம்ம பக்கம் சும்மா எடுத்ததோட இருக்கு. எங்க குலத்தெய்வதுக்கு எடுப்பாங்க" என்றாள் மெல்ல செந்தா.

"ம்ம்ம்! நட்டுகிட்ட நம்ம நிலத்துல ரெண்டு மா விக்க சொல்லி இருக்கேன்."

"இருக்குறதே நாலுமா தான்... இன்னும் செம்பா இருக்காளமா"

"என்ன செய்றது, அவளுக்கு வரன் அமைஞ்சா அதையும் விக்க வேண்டியது தான்"

செந்தா பாவமாக தாயைப் பார்த்தாள்.

நடராஜன் பள்ளிக் கூடத்துல பி இ டி வாத்தியார். அரசாங்க வேலை தான், ஆனாலும் அவரோட சம்பளம் மொத்தக் குடும்பத்துக்கே போதவில்லை. நடராஜனுக்கு குடும்பமுனா தெய்வானை மட்டும் தான்.

கௌது வந்து சேர, மகேஷ் இடையிலே இறங்கிக் கொண்டான்.

பாப்புவும் தெய்வானை வந்ததை அறிய ஓடிவந்துவிட்டாள்.

"வாங்க அண்ணா! வாங்க அத்த!" என கௌது இருவரையும் வரவேற்க, சிறிது நேரம் பேசிவிட்டு கௌது, நடராஜன் இருவரும் சாப்பிட்டனர்.

சற்று நேரம் ஆக, தெய்வானை கிளம்ப ஒரு தாம்பளம் கேட்டு அதில் பழவகைகளை அடுக்கினார்.

செவாயி"செந்தா! போய் விளக்கை ஏத்தி வை" என்றார்.

"இல்லத்த! நீங்கப் போய் ஏத்துங்க" என்றாள் சங்கடமாக.

செவாயி ஒரு மாதிரிப் பார்த்து, "எத்தன?" எனக் கேட்டார்.

"இன்னைக்கு தான்" என்றாள் மெல்ல.

செவாயி சென்று விளக்கை ஏற்றிவிட்டு, தாம்பளத்தட்டை தெய்வானையிடம் இருந்து வாங்கிக் கொண்டார்.

வெளி வராண்டாவில் கௌது, நடராஜன் பேசிக் கொண்டு நின்றனர்.

உள்ளுக்குள் நின்ற செவாயி"சுத்தப் பத்தமா வீட்டு மூலைய ஒதுக்காம கழுவி மொழுவினா நல்ல நாள் பாத்து நம்மளை விலக்கு ஆகாம சாமி ஒதுக்கிடுமாம். எங்க நீ தான் நடுவீட்டுல கெடக்குற பொம்மையைக் கூட அப்படியே வச்சுட்டு சுத்திக் கூட்டிட்டு போவ... அப்புறம் எங்க ஒதுக்குறது, உன்னைய ஒதுக்கிட்டு பொங்கலுக்கு." என நீட்டி முழக்கினார்.

பாப்பு அடம் செய்துச் சொல்லிவிட்டுப் போறதால அவள் கட்டின பிளாக்ஸை களையாமல் பார்த்து ஒதுக்கி வீடுப்பெருக்குவது, எப்படி பட்ட புரிதலில் சேர்ந்திருக்கிறது என செந்தா தலையைக் குலுக்கினாள்.

அது மட்டுமில்லாமல் நேற்றைய இரவின் தாம்பத்யத்தின் மனஅழுத்தம் கூட இந்த கணக்கின் முன்பாக வந்த விலக்கிற்கும் காரணமாகும். அதை எப்படி விலக்குவாள் மாமியாரிடம். கணவனுக்கே அதுப் புரியவில்லை.

தெய்வானை பதிலில்லாமல் மகளைப் பார்த்து, 'போயிட்டு வருவதாக' கூறினார்.

அவர்கள் கிளம்பவும், கௌது அறைக்குள் படுக்கச் சென்றான்.

செந்தா மற்ற வேலைகளைத் தொடர, இரவுப் பொழுதும் வந்தது.

செந்தா தூங்க செல்வதற்கு முன், வாசலில் முக்கிய வேலைகளை மட்டும் முடித்துவிட்டு, செவாயி பார்க்க வேண்டிய வேலைகளை விட்டு வைத்தாள்.

இரவு....

அறைக்குள்....

பாப்பு தூங்கிவிட, செந்தா பாயை எடுத்து விரித்தாள்.

"ஏன் செந்தா! கீழப் படுக்குற?"

"மூணு நாள் தூரமுங்க"

"ஓ! நான் வந்ததே எட்டு வருசம் கழிச்சு, அதுல இது வேறயா?" என்றான் அலுப்பாக.

செந்தா அவனின் வார்த்தைகளில் மனம் வெந்து வேதனையுடன் கணவனை நோக்கினாள்.

மனம் கேளாமல்"இன்னும் நாள் இருக்குங்க, என்னனு தெரியல இந்த தடவை சீக்கிரம் ஆச்சு" என தன் மேல் தவறில்லை என்பதை நிரூபிக்கும் எண்ணத்தில் விளக்கினாள்.

"என்னமோ சொல்லு, எனக்கு இருக்க லீவே மூணு மாசம் தான். இதுல மூணு நாளுனு போயிட்டா, அதுவும் வந்த அடுத்த நாளே ஒதுங்கிட்ட, இதுக்கு நான் மகேஷ் கூப்புட்டப்ப போய் இருக்கலாம், தண்ணி அடிச்சுட்டு நேரம் கழிச்சு வந்து இருப்பேன்" எனக் கோபமாக கூறிவிட்டுத் திரும்பி படுத்தான்.

"ஏங்க! இதுல என் மேல என்ன தப்பு இருக்கு? இது இயற்கையா வரது. அத்த பொங்கல் அப்ப வந்துட்டுனு திட்டுறாங்க, நீங்க சேர முடியலைனு கோபப்படுறீங்க" எனத் தாங்க முடியாமல் கேட்டாள்.

அவள் பக்கம் திரும்பியவன், "நான் மாச மாசம் சம்பளம் அனுப்பலனா ஏனு கேக்குறீல? குழுவுக்கு கட்டனும், புள்ளைக்கு அது வாங்கனும், இது வாங்கனுமுனு சொல்றீல. உனக்குத் தேவைனா கேக்குற? அப்ப நான் ஏன் கேக்குறேனு கேட்டனா, இல்ல நான் ஏன் பண்ணனு கேட்டனா, எட்டு வருசமா தனியா கெடந்தது எதுக்காக உங்க எல்லாருக்கும் சம்பாரிச்சுக் கொட்ட தானே" என்றான் அழுத்தமாக.

கௌதுவிற்கு குடிப்பழக்கம் மட்டுமே அதிகம் உண்டு, மற்றப்படி பிற பெண்கள் பக்கம் திரும்பியதில்லை, அந்த வகையில் செல்வதற்கு நாட்டமும் இருந்ததில்லை. வெளிநாட்டில் எவ்வளவோ வழியிருந்தும் நண்பர்கள் அழைத்தும் சென்றதில்லை.

ஆனால் தன்னை மறந்து குடித்துவிட்டுப் படுத்துவிடுவான்.

இன்று செந்தா விலக்கு என்றதும், அவனை மீறி கோபம் வந்தது, அதை அவனால் தடுக்க இயலவில்லை.

அவளிற்கு கோபத்தில் பதில் அளிக்கவே அவனோட வெளிநாட்டு கஷ்டத்தை சம்பாரித்துக் கொட்டுகிறேன் எனக் கூறினான்.

ஆனால் செந்தா மனதில்'நீங்க சம்பாரிச்சுக் கொட்டுனா நான் படுக்கனும் அவ்ளோ தானே என் வாழ்க்கை. இதுப்புரிய எனக்கு எட்டு வருசம் தேவைப்பட்டு இருக்கு' என தவறாக பதிய வைத்தாள், அவள் இருந்த மன அழுத்தத்தில் அதுவும் சரியானதாக தான் தோன்றியது.

மாதவிடாய் நாட்களின் மனஅழுத்தம் அவளை அதீத கோபத்தில் யோசிக்க வைத்தது.

கௌதுவிற்கு அந்த இரவின் தனிமை வாயில் வந்ததைப் பேச வைத்தது. இருவருக்குமே அவரவர் மனநிலை மட்டுமே பெரிதாக தெரிந்தது.

கொலுசொலி ஆசைகள்.....


 
Top