எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் 06

NNK 89

Moderator
கொலுசொலி ஆசைகள் 06

பொதுவாக பொங்கல் பண்டிகை என்றால் கௌது கிராமத்தின் முறையானது வாசலில் மண் குலைத்து இரண்டு அடுப்பு பூசி, இடதுப்பக்கம் ஒன்றில் சர்க்கரைப் பொங்கல், வலதுப் பக்கம் அடுப்பில் வெண் பொங்கல் என வைத்து, சுற்றிலும் கரும்புகளால் பந்தலிட்டு, கிழக்கே சூரியனைப் பார்த்தவாறு திட்டாணி உருவாக்கி, குத்து விளக்கேற்றி படையலிடுவர்.

ஆனால் காலப்போக்கில் மண் குலைப்பது மாறி தயார் செய்யப்பட்ட மண் அடுப்பாகவே பயன்படுத்தினர், அதுவும் இப்பொழுது இரும்பு அடுப்பாக மாறியது.

செவாயி இன்னும் மண் குலைத்தே அடுப்புக் கட்டிய பொங்கலை வைத்துக் கொண்டுள்ளார். பெண்கள் மட்டும் இருக்க அதிக வேலையின் காரணமாக கரும்பு பந்தலிடாமல், இரண்டுக் கரும்புகள் வைத்துப் படையலிடுவார், ஆனால் இந்த முறை கௌது பந்தலிடுவதற்கு காலையிலே எழுந்து அனைத்தையும் தயார் செய்தான்.

செவாயி பொங்கல் வைக்க வேண்டிய வேலைகளைத் தொடர்ந்தார்.

செந்தா அடுப்பு வேலையைப் பார்க்க, அன்றைய பொங்கல் களைக்கட்டியது. அதுவும் கௌது இருந்ததால் பாப்பு தான் புதிதாக பொங்கலை கொண்டாட தயாராகினாள். செந்தா, கௌதுவும் சேர்ந்துக் கொண்டாடப் போகும் முதல் பொங்கல் கூட இது தான்.

பாப்பு, தந்தையுடன் நின்று கரும்புகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

"பாப்பு! அம்மா கிட்ட போய் டீ போட்டுட்டா கொண்டு வரச்சொல்லு" என்றான்.

கடந்த இரவிற்கு பின், கௌது, செந்தா இருவருமே காலை வேலையில் பிஸியாகிட இன்னும் பேசிக் கொள்ளவில்லை.

பாப்பு கூறிவிட்டு வந்த சிறிது நேரத்தில் டீயுடன் வந்தாள் செந்தா.

பாட்டி, செவாயி இருவரிற்கும் கொடுத்தவள், பாப்புவிற்கு குடிக்க பால் கொடுத்த பின்,

"இந்தாங்க!" என கணவனிடம் டீ டம்பளரை நீட்டினாள்

"அங்க வை செந்தா! இந்தக் கொடி ஒட்ட கோந்து வேணும். மைதா இருக்கா.?" என்றுக் கேட்டான்.

கௌது சாதரணமாக பேச, அவளும் அதுவரை இருந்த ஒரு ஒதுக்கத்தை விடுத்து, "இருங்க எடுத்துட்டு வரேன், நிறையா வேணுமா?"

கௌது ஒன்றும் கொடுமைகாரன் இல்லை, வேலை, குடும்பம் என ஓடிக்கொண்டு இருக்கும் சாதரண மனித வர்க்கம். அவனுக்கென்ற ஆசைகள் தனியாக எதுவுமில்லை, அம்மா, அப்புச்சி உடன்பிறப்புகள், மனைவி, குழந்தை, பிறகு அவனின் கணவன் என்ற உரிமையில் எதிர்பார்க்கும் தாம்பத்யம்.

அனைவரின் தேவைகளையும் தான் சம்பாதித்த பணத்தினால் நிறைவேற்றுபவன், ஆனால் மனைவியின் தேவையை அன்பு, காதல், பாசத்தினால் நிறைவேற்ற தவறி விட்டான். மனைவி என்றால் பகல் நேரதத்தின் வீட்டின் நிர்வாகி இரவு நேரத்தின் சுகம் தருபவள், பிள்ளைகள் என்பவர்கள் அதற்கான அடையாளம் என்ற நிலையிலான புரிதலில் வாழ்ந்துக் கொண்டு இருப்பவன்.

அதையும் தாண்டி பல நிலைகள் இருப்பதை உணர கௌதுவிற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, பகல் நேரத்தில் வேலை, இரவில் தூக்கம் என வாழ்க்கையை ஓட்டிவிட்டு திரும்பியுள்ளவனிடம் அதற்கு மேல் எதிர்பார்ப்பது அதீத ஆசையே.

"இந்தக் கலர் பேப்பர்களை கரும்புல ஒட்டனும், எடுத்துட்டு வா, பாத்துக்கலாம்" என்றான் மனைவியிடம்.

"ம்ம்ம்!" என்ற செந்தா, மைதா கோந்து தயார் செய்ய திரும்பியவளிடம், செவாயி"செந்தா! எடுத்து வந்துக் குடுத்துட்டு, போய் தண்ணீ தூக்கிட்டு வா, பொங்கனால சீக்கிரமே லைன் தண்ணீ விட்டுட்டாங்க, அப்புறம் நின்னுட போகுது. நான் இந்த வேலையைப் பாக்குறேன். நீ தான் சரியான நாளுல வெளியில நிக்கிற" என ஒரு இழுவையோடு நிறுத்தினார்.

"சரித்த!" என விலகி நடந்தாள்.

கௌது அவர்கள் பேச்சினை காதில் வாங்காமல் அவனின் வேலையில் கவனமாக இருந்தான்.

மைதா கோந்து தயார் செய்துக் கொடுத்துவிட்டு, குடங்களை எடுத்துக் கொண்டு பைப் இருக்குமிடத்திற்கு சென்றாள் செந்தா.

சிலப் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருக்க, அடுத்து செந்தா வைக்கப்போக சரியாக சந்திராவும் குடத்தை வந்து வைத்தாள்.

அவளைக் கண்ட செந்தா, தனது குடத்தை நகர்த்திவிட்டு"நீங்க வைங்க அக்கா!" என்றாள்.

"ஒன்னும் அவசியமில்ல, அவளைப் புடிச்சுட்டுப் போ சொல்லு ஜெயா" என அருகில் இருந்தவளிடம் கூறி முகத்தைச் சுளித்தாள் சந்திரா.

"அக்கா!"

"யாருடி அக்கா? நான் உன் கூடப் பொறந்தனா இல்ல நீ என் கூடப் பொறந்தீயா? அக்கா கொக்கானு இன்னொரு தரம் கூப்புட்ட, மரியாதைக் கெட்டுப் போயிடும். உன் புருசன் நேத்து ஊர் எல்லாம் சுத்திட்டுப் போனாரு, எங்க வீடு கண்ணுக்குத் தெரியல, அப்ப நாங்க வேணானு ஒதுக்கியாச்சுல, அப்புறம் என்ன அக்கா?" எனச் சந்திரா ஆக்ரோசமாக பேசினாள்.

"இல்லக்கா!" என செந்தா வாயைத் திறக்க,

"உன் மாமியா வேணும் விளையுமுனு நெனக்காம வார்த்தையை விட்டுச்சு, என் புருசன் ஆம்பளைடி, ரோசம் வராதா என்ன? பதிலுக்குப் பேசினாரு, அதுக்காக உன் கூட முகத்தை திருப்பிட்டா போனேன். உன் புருசன் எங்களை யாரோ மாதிரி ஒதுக்கிட்டுப் போனாருல, இனி நான் எதுக்குப் பேசனும்?"

"நான் சொன்னேன் தான்கா, ஆனா..." என்றவளை இடைமறித்த சந்திரா,

"மொதல வீடுத் தேடி வந்து சண்டைப் போட்டது உன் மாமியா தான், அத போய் உன் புருசன் கிட்ட சொல்லு, நான் கூட நல்ல ஆளுனு நெனச்சேன், அந்தம்மாக்கு பொறந்தவரு பின்ன எப்படி யோசிப்பாரு, நான் தான் தப்பு பண்ணிட்டேன், உன் மேல இரக்கப்பட்டு ஒதுங்காம பேசினது தப்பு தான். இனி அக்கா! ஆட்டுக்குட்டினு கூப்புட்டு கிட்ட வராத" என தன் குடத்தை வைத்து தண்ணீர் நிரப்பி தூக்கியவாறு வேகமாக விலகிச் சென்றாள் சந்திரா.

செந்தா பாவமாக தூரப் போகும் அவளையே பார்க்க, அருகில் நின்ற ஜெயா"பின்ன என்ன செந்தா, சந்திரா அக்கா சொல்றதும் சரி தானே, எத ஒதுக்கினாலும் உன் புருசன் துக்கத்தை ஒதுக்கலாமா? உன் மாமியாக்கு தான் நாக்குல தேள் கொடுக்கு இருக்கு. நீயும், உன் புருசனும் தானே எல்லாரையும் அரவணைச்சுப் போகனும், என்னமோ போ" என அவளும் நகர்ந்தாள்.

செந்தா தண்ணீர் குடத்தை எடுத்து இடுப்பில் வைத்தவாறு நடக்க,

மனமோ எதையும் சொல்ல முடியாத நிலையில் தத்தளித்தது. இந்த எட்டு வருடங்கள் செந்தா அம்மா வீட்டிற்கு கூட அதிகம் போகாமல் திடமாக இருந்திட சந்திராவின் சகோதரி வடிவிலான நட்பும் ஒரு காரணம். செவாயி அலட்சியமாக திட்டும் நேரங்களில் அதை வெளிப்படுத்தாமல் சந்திராவிடம் ஆறுதல் தேடுவாள்.

சந்திராவும் செவாயி பற்றி எதுவும் கேட்காமல் செந்தாவிற்கு ஆறுதல் கூறி, ஊர் விசயங்கள் பற்றிப் பேசி சிரிப்பாள்.

டவுன் பக்கம் போக வேண்டுமானால் சந்திராவை தான் துணைக்கு அழைப்பாள், செவாயி சண்டைப் போட்ட பின்பும் செந்தா, பாப்புவை மருத்துவமனை அழைத்துச் செல்ல பஸ் ஸ்டாபிற்கு வரச்சொல்லி ஒன்றாக போவார்கள்.

ஆனால் இன்று சந்திராவே கோபமாக விலகி சென்றது, மனதை வேதனையாக்கியது. அது மட்டுமில்லை எதை நினைத்துப் பயந்தாலோ அதுவும் நடந்தது.

கௌதுப் பற்றி தவறாக நினைக்கப் போகிறார்கள் என எண்ணியது போல் அதே தான் நடந்தது இன்று. சந்திரா, ஜெயா வார்த்தைகளில் அது நிரூபணமாகியது. ஊருக்குள்ளும் இப்படி தானே பேசிக்கொள்வார்கள் என மனம் வருந்தியது.

செந்தா அதே யோசனையுடன் வீட்டு வாசலிற்கு செல்ல, அங்கு மாமியார், கணவர், மகள், பாட்டி என அனைவருமே பொங்கலை முன்னிட்டு சிரித்த முகத்துடன் காட்சியளித்தார்கள்.

அதைக் கண்டவள் மனம் அவளின் முகத்தை மாற்றிக் கொள்ள எச்சரித்தது. குடும்பமே சந்தோஷமாக இருக்கும் போது தான் மட்டும் சோகமாக இருந்தால் அதற்கும் திட்டு விழும், எனவே முகத்தை மாற்றிக் கொண்டு லேசாக சிரித்தப்படி நுழைந்தாள்.

நீண்ட வருடங்கள் கழித்துக் கிடைத்திருக்கின்ற சந்தோஷ தருணம் இது, இதைக் கெடுத்துக் கொள்ள விரும்பாதவள், புன்னகைப் பூத்திட சென்றாள்.

பாப்பு"அம்மா! சீக்கிரம் வா, பொங்கல் சொல்லப் போறோம்" எனக் கத்தினாள்.

"ம்ம்ம்!"

"வா செந்தா! இவ்வளவு நேரம் என்ன பண்ண? குடத்தை வச்சுட்டு இங்க வந்து நில்லு" என்றான் கௌது.

செந்தாவும் பாப்பு அருகில் சென்று நிற்க, சரியாக செவாயி அடுப்பை எரித்துவிட்ட வேகத்தில் பானைப் பொங்கி வழிந்தது.

"பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" எனக் கத்தினர் அனைவரும். பொங்கிய நேரத்தில் மகளைத் தூக்கிய கௌது மற்றும் மகளின் சந்தோஷத்தைப் பார்த்து மகிழ்ந்தாள் செந்தா.

பிறகு அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர, அன்றைய தினம் முடிந்தது.

இரவு....

காலையில் இருந்து மனதை அரித்த நிகழ்வை கௌதுவிடம் சொல்ல காத்திருந்தாள் செந்தா. ஆனால் கௌது வீட்டிற்கு வர நேரமாகியது.

செந்தா காலை முதல் பார்த்த வேலையின் அசதியால் கண் அயர்ந்தாள்.

கௌது எப்பொழுது வந்துப் படுத்தான் எனத் தெரியாது. விடிந்து தான் அவனை நோக்கினாள்.

அடுத்த நாள் மூன்றாம் தலை என்பதால் மாட்டுப் பொங்கலுக்கு தேவையானதை செந்தாவே செய்து முடித்தாள்.

அன்று இரவும், செந்தா கௌதுவிற்காக காத்திருக்க அவனோ நேற்றுப் போல் வரவே இல்லை. ஆனால் இன்று இரவு மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பல வகைகள் அசைவம், சைவம் என சமைத்து சாமிக்காக படைப்பர். அதனால் செந்தா இரவு உணவு போடுவதற்கு கணவனிற்காக காத்திருந்தாள்.

பகல் முழுவதும் வேலைப் பார்த்ததால் செந்தாவிற்கு கண்கள் சொருகியது. செவாயி, செந்தாவை மகன் வந்ததும் சாப்பாடு போடு எனப் படுக்கையில் சாய்ந்தார். பாப்புவும் அப்புச்சியுடன் படுத்துக் கொள்ள அப்படியே தூங்கிவிட்டாள்.

பாட்டி கட்டிலின் எதிரில் நாற்காலியைப் போட்டு அமர்ந்திருந்தவள், பாட்டி பேசியப்படியே தூங்கிட, அவளும் கண்களை மூடிக் கொண்டு இருந்தாள்.

வீட்டின் வாசலில் ஏதோ சத்தம் கேட்டிட சட்டென்று கண் முழிக்க, கௌது தான் மெல்ல நடந்து வந்தான்.

அவளை அங்கு எதிர்பாராதவன், "நீ இன்னும் தூங்கலையா?" எனக் கேட்டான்.

"இல்லங்க! சாமி கும்பிட்டு உங்களுக்காக தான் சாப்பாடு போட உட்காந்திருக்கேன்"

"ம்ம்ம்!" என மெதுவாக நடந்து வீட்டிற்குள் சென்றான். செந்தா முன்னால் சென்று சாப்பாடு வகைகளை எடுத்து தரையில் வைத்தாள். அடுப்படிற்குள் எதிர் புறமாக அமர்ந்திருந்தவள் முன் சென்று அமர்ந்தான்.

அவனின் நடையில் வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் முன்னே வந்தமர்ந்தவனிடம் இருந்து வீசிய வாடையில் அவனின் குடிப்போதையை செந்தாவால் உணர முடிந்தது.

"எல்லாரும் சாப்புட்டாச்சா?"

"ம்ம்ம்!"

செந்தா இன்னும் சாப்பிடவில்லை, ஆனால் அவனோ பொதுவாக கேட்டுவிட்டு சாப்பிடத் தொடங்கினான்.

"கௌது வந்துட்டீயாப்பா?" என மாமியார் குரல் கொடுத்தார்.

கௌது வாயில் கைவைத்து, "நீயே வந்துட்டேனு சொல்லு" என்றான்.

"ஆ! வந்துட்டாரு அத்த, சாப்புடுறாங்க" என்றாள்.

"சரி! சரி! எல்லாத்தையும் எடுத்து வை, மீன் வறுவல் மறக்காம வை, புள்ளைக்குப் புடிக்கும்" எனத் தூக்கத்திலே கூறியவர், பாப்புவின் மேல் கைப்போட்டுத் தூங்கிவிட்டார்.

கௌது, மது அருந்துவது செவாயி அறிந்ததே, ஆனால் தாய் முன் தான் மது அருந்தி இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான்.

"ஏங்க லேட்?" எனக் கேட்டாள் மெல்ல.

"ரொம்ப நாள் ஆச்சுல, மாட்டு ஃபண்ட்ல நின்னு அதான் பேசிட்டே இருந்துட்டோம்."

"ம்ம்ம்!"

"நாளைக்கு பொங்கல் விளையாட்டு விழா நடக்குது, பாப்புவை காலையிலே கிளப்பி விடு, கூட்டிட்டுப் போறேன்"

"சரிங்க! ஆனா பாத்து, சின்னப்புள்ள பொம்பளைப் புள்ள வேற, கூடவே நிக்க வச்சுக்கோங்க" என்றாள் தாயாக சற்றுப் பயந்து.

"அவ சின்னப்பொண்ணு செந்தா, நீ படிச்சவ தானே" என்றான் கோபமாக.

"படிப்புக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்? ஊருல நடக்குறதை நியூஸ்ல பாக்கும் போது பயம் தானா வருது"

"நம்ம ஊருல என்ன பயம்? எல்லாரும் நம்ம சொந்த பந்தம் தானே"

"ஆனா! ஊருக்குள்ள சொந்தகாரங்க தாண்டி, பகையாளிங்க தான் அதிகமா இருக்காங்க"

அவளை ஒரு மாதிரிப் பார்த்தவன், "இப்ப என்ன சொல்ல வர?" எனக் கேட்டான்.

"ஒன்னுமில்ல! சாப்புடுங்க" என மறு சாப்பாடு போட்டாள்.

அவனும் அதற்கு மேல் பேசாமல், சாப்பிட்டு முடித்து எழுந்தான்.

செந்தாவும் ஒரு தட்டை எடுத்து வைத்துச் சாப்பிடத் தொடங்கினாள். கை கழுவி முடித்து நுழைந்தவன் அவளைக் கண்டு,
"நீ இன்னும் சாப்புடலையா? எல்லாரும் சாப்புட்டாச்சானு கேட்டேன், ஆமானு சொன்ன" எனக் கேட்டான்.

"ம்ம்ம்! என்னைய கேக்கலையே" எனப் பதில் கூறிவிட்டு, தட்டில் சாப்பாடு போடும் வேலையைத் தொடந்தாள்.

கௌதுவின் புருவம் சுருங்கியது, அதற்கு மேல் புரியாதவன் பின் தலையைக் குலுக்கிவிட்டு அறையை நோக்கி சென்றான்.

பாப்பு தாயுடன் தூங்குவதைப் பார்த்தவன் தொந்தரவு செய்யாமல் நகர்ந்தான்.

செந்தாவும் சாப்பிட்டு முடித்து பாப்புவை தூக்கப் போக, செவாயி நித்திரை விலகாமல்"இங்கயே படுக்கட்டும் போ!" என்றார்.

செந்தா அறைக்குள் நுழைய, கௌது கட்டிலில் அமர்ந்து ஃபோனில் எதையோப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

செந்தா இன்று கட்டிலில் சென்று படுப்பதற்கு தயார் ஆனாள்.

"தனியா படுப்பது முடிஞ்சுட்டா?" எனக் கேட்டான்.

"ம்ம்ம்!"

"ஓ!" என ஃபோனை அமர்த்திவிட்டு படுக்கையில் சரிந்தபடி,

"உட்கார முடியல, தலைச் சுத்துனுச்சு ஆனாலும் சாப்புட்டது செரிக்கனுமேனு உட்காந்துட்டேன். ஸ்ப்பா!" என மேற்கூரை பார்த்தவாறு படுத்தான்.

"ம்ம்ம்!"

"நீ இங்க படுப்பனு தெரிஞ்சிருந்தா தண்ணீ அடிக்காம வந்துருப்பேன் செந்தா"

"ஏங்க, தண்ணீ அடிச்சா பக்கத்துல வர மாட்டீங்களா?"

"அப்படியில்ல, இத்தன வருசமா நீ இல்லாத ராத்திரிக்கு மதுப் போதை தான் துணையா இருந்துச்சு, நீ பக்கத்துல இருக்கும் போது, அது எதுக்குனு தான்"

"அப்ப நான் ராத்திரிக்கு பக்கத்துல இருந்தா தண்ணீ அடிக்க மாட்டீங்களா?"

"உனக்கு சொன்னா புரியாது, விடு" எனத் திரும்பி படுத்துக் கொண்டான்.

"சொன்னா தானேங்க புரியும்" என்றாள் நொந்த மனதுடன்.

"என்ன சொல்லனும்? அடிச்ச சரக்கு எல்லாம் இறங்கிடும் போல" எனத் தலையைத் தடவினான்.

"ஏதோ சொல்றீங்க, அதை தெளிவா சொன்னா தானே புரியும்"

"ம்ம்ம்! எனக்கு எப்ப எல்லாம் உன்னைய தொடனுமுனு தோணுதோ அப்ப எல்லாம் தண்ணீ அடிச்சுட்டு கவுந்துடுவேன், போதுமா!"

"ஆம்பளைங்க தண்ணீ அடிக்குறீங்க, பொம்பளைங்க என்ன செய்றது? இன்னும் அந்தக் கலாச்சாரம் நம்ம பக்கம் வரலையே"

"ஏய்! என்னடி உளர? இன்னைக்கு தண்ணீ அடிச்சுட்டு வந்ததும் நல்லதுக்கு தான் போல, கடுப்பாக்குறா" எனக் கோபமாக கூறினான்.

"இன்னைக்கு நீங்க கேட்டாலும் முடியாதுங்க" என்றாள் மெல்ல.

"ஏன்?"

"மூணு நாள் தானே. நாளைக்கு....." என நிறுத்தினாள்.

"ஓ! அப்படியா"

கௌது அறியாதது இது, செந்தாவும் திருமணம் ஆகிய முதல் மாதத்திலே கருவுற்று விட்டாள்.

"மூணு நாள் தானே சொல்வாங்க"

"ம்ம்ம்! சிலருக்கு முன்ன பின்ன ஆகும்."

அவள் பக்கம் திரும்பியவன், "செந்தா! எனக்கு லீவ் முடியுறதுக்குள்ள அடுத்து ஒரு குழந்தைக்கு முயற்சிப் பண்ணனும்."
என்றான்.

"ம்ம்ம்!" என்றாள்.

"பாப்புக்கு ஒரு தம்பி வந்துட்டா போதும்."

"ஒரு வேளை தங்கச்சி வந்தா" எனக் கொஞ்சம் கடுப்பாக கேட்டாள் செந்தா.

"வந்தா என்ன, ஏத்துக்க வேண்டியது தான்"

"ம்ம்ம்! எனக்கு தூக்கம் வருது" எனத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவர்கள் பேச்சினில் சந்திரா நேற்றுப் பேசியதை சொல்ல மறந்தாள்.

அவனும் பதிலின்றி நித்திரைக் கொண்டான்.

'இரவு சுகத்திற்கு மட்டும் தான், நான் தேவைப் போல, நான் இல்லைனா மது, எனக்கும் அதுக்கும் ஒரே இடமா? எனக்குனு ஆசைகள் இல்லையா? அவருக்கு மது அருந்துவது மருந்து என்றால் என்னோட உணர்ச்சிக்கு மருந்து?' எனக் கேட்டு அதனை மனதில் எண்ணி நொந்தாள் செந்தா.

கௌதுவிற்கு அந்த எண்ணங்களே இல்லை, மனைவி அருகில் படுக்காத சுகத்தை மதுவில் தேடி சுகமடைந்தான். இவன் என்ன மாதிரியான குணமோ? செந்தா மனம் அறிவானா? செந்தாவின் ஆசைகள் நிறைவேறுமா!

கொலுசொலி ஆசைகள்... 
Top