எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் 07

NNK 89

Moderator
கொலுசொலி ஆசைகள் 07

"அம்மா! எனக்கு இப்டி பின்னிப் போடுறது புடிக்கல, குதிரை வால் போட்டு விடு" எனத் தலையை அசைத்தாள் பாப்பு.

அவளுக்கு பின்னல் போடத் தொடங்கிய செந்தாவின் கைகளில் இருந்த முடிகள் நழுவியது.

"பாப்பு! அமைதியா இரு, பின்னிப் போட்டா தான் களையாம இருக்கும், இல்லனா நீ அங்கப் போடுற ஆட்டத்துக்கு முடி நிக்காது"

இருவரும் மல்லுக்கட்ட, கௌது"பாப்பு! அம்மா சொல்ற கேளு" என்றான்.

செந்தா கணவனை ஆச்சரியமாக பார்க்க, அவனோ மகளிடம்"அப்புச்சி சொல்ற மாதிரி தானே அப்பா நடந்துக்கிறேன், அந்த மாதிரி நீயும் அம்மா சொல்றதைக் கேளுடா பாப்பு" என்றவனை மனைவி கொஞ்சம் கடுப்புடன் தான் நோக்கினாள்.

"அப்பா! அப்ப எனக்குப் புடிச்சதை எப்ப தான் செய்றது?" எனக் கேள்விக் கேட்டாள்.

"உனக்கு சின்ன வயசுலடா, இப்ப உனக்கு எல்லாமே புடிக்கும், ஆனா எது நல்லது, கெட்டதுனு அம்மாக்கு தானே தெரியும். அதனால அம்மா சொல்றபடி கேளு"

"ஓ! அப்ப நீங்க பெரிய ஆளு தானேப்பா, உங்களுக்குப் புடிச்சதை செய்யாம எதுக்கு அப்புச்சி சொல்றத கேக்குறீங்க?" எனப் பட்டென்றுக் கேட்டாள் பாப்பு.

கௌது பதில் சொல்லாமல் முழிக்கவும், வெளியில் இருந்த பாட்டி அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டு இருந்ததால்"அப்டி கேளு என் பாப்புக் குட்டி, சொந்தமா எப்ப தான் யோசிக்கிறது" என்றார் சற்று சத்தமாக.

அப்புச்சி பேசியதைக் கேட்டவனிற்கு கோபம் வர"பாப்பு! அதிகமா பேசக் கூடாது, எங்கருந்து இப்டி எல்லாம் பேசக் கத்துக்கிட்ட? என்ன செந்தா இது, நீ வளர்த்தது சரியில்ல" என மனைவியை அதட்டினான்.

"ஏங்க! நீங்க சொன்னத்துக்கு அவ பதில் பேசுறா, இடையில நான் என்ன பண்ணேன்? அவ வளர்ப்புச் சரியில்லைனு நீங்க சொல்றீங்க, உங்க வளர்ப்பைப் பத்தி ஊருக்குள்ள பேசுறாங்க" என அவளை மீறி வார்த்தைகளை விட்டாள்.

"என்னடி சொல்ற, யார் என்ன சொன்னா...? என்னோட வளர்ப்புக்கு என்ன கொறைடி? ஏன் சம்பாரிக்காம ஊர்ச் சுத்துறேனா, இல்ல உன்னைய தவிர வேற எவளையும் வெளியில் வச்சு இருக்கேனா?" என முகத்தைச் சுளித்துக் கேட்டான்.

"ஏங்க! பாப்பு இருக்கா" என கணவனிடம் கெஞ்சியவாறு முறைத்தாள்.

"இருந்தா என்ன? நீ தானே என் வளர்ப்பு சரியில்லைனு சொன்ன, சொல்லு யாரு சொன்னா?" என அவளிடம் எகிறினான்.

"தெரியாம சொல்லிட்டேன், நீங்க பாப்புவைக் கூட்டிட்டு விளையாட்டு விழாக்கு கெளம்புங்க, பாப்பு நீ போய் செருப்பைப் போடு" என அவசரமாக அவளுக்குப் பிடித்த குதிரை வால் சடையைப் போட்டுவிட்டாள்.

பாப்பு அதில் மகிழ்ந்திட, தந்தைப் பேசியதைக் காதில் வாங்காமல் வெளியில் ஓடினாள்.

"அது எப்டி தெரியாம சொல்லுவ செந்தா, அதான் வார்த்தையா சொல்லிட்டீயே, சொல்லு" என அழுத்திக் கேட்டான்.

செந்தா, எப்படி சமாளிப்பது என முழித்திட, வாசலில்"செந்தா! அடியேய் செந்தா! எங்க இருக்க?" என செவாயி அழைத்துக் கொண்டே வருவது கேட்டது.

"என்னம்மா, ஏன் கத்திட்டு வர? இங்க தான் நிக்கிறா" என்றான் மகன்.

"என்னத்த?" என்றாள் மெல்ல.

"ஆமா! நேத்து தண்ணீ புடிக்குற இடத்துல என்ன நடந்துச்சு?" எனக் கோபமாக கேட்டார் செவாயி.

செந்தா மனதில்'அச்சச்சோ! சந்திரா அக்கா பேசினது தெரிஞ்சுட்டா' என எண்ணியவள், "ஒன்னுமில்லத்த!" என மென்று முழுங்கினாள்.

"என்ன ஒன்னுமில்ல? அந்த சந்திரா அவ்வளவு பேசியிருக்கா, நீ ஒன்னுமில்லனு சாதரணமா சொல்ற" என அதட்டினார்.

"என்னம்மா சொல்ற?" என்ற மகனிடம்,

"அத உன் பொண்டடாட்டி கிட்ட கேளு" என மகனை முறைத்தார்.

"செந்தா! சந்திரா அண்ணி என்னப் பேசினாங்க?"

"அது வந்து...." என இழுத்தவளை தடுத்த செவாயி"இவ எப்டி சொல்லுவா, இவ தான் அவளுக்குக் கூட்டுயாச்சே, நீ அவ வீட்டுக்கு துக்கம் விசாரிக்கப் போகலைனு அந்தப் பேச்சு பேசியிருக்கா, நீ எனக்கு பொறந்த புள்ளையாம், அப்படி தான் இருப்பேனு, மறைமுகமா என் வளர்ப்பைப் பத்தி கொறைச் சொல்லியிருக்கா பாரு கௌது, உன் பொண்டாட்டி எதையுமே நம்ம கிட்ட சொல்லாம அமுக்கிணி மாதிரி இருக்கா" என தான் வெளியில் கேள்விப் பட்டதை கொட்டினார்.

கௌதுவிற்கு இப்பொழுது புரிந்தது, செந்தாவின் பேச்சிற்கு யார் காரணம் என்று.

"செந்தா! அம்மா சொல்றது உண்மையா?"

"சந்திரா அக்கா, நீங்க வரலைனு ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டாங்க, மத்தப்படி அவங்க நல்லவங்க, நீங்க பெருசுப் பண்ணாதீங்கங்க" எனக் கெஞ்சிக் கேட்டாள்.

"யாருடி பெருசு பண்றா? அவ புருசன் பேசினப் பேச்சுக்கு என் புள்ள அங்கப் போகல அதுல அவளுக்கு ரோஷம் வந்துட்டா?"

"அத்த! நீங்களும் தானே பேசினீங்க? ரெண்டுப் பக்கமே தப்பு இருக்கு, அதோட அவங்க மாமனார் இறப்புக்கு விசாரிக்க வரலைனு தான் கோபமா கேட்டாங்க, மத்தப்படி ஒன்னுமில்ல" என மாமியாருக்கு விளக்கினாள்.

"செந்தா! அமைதியா இரு, முடிஞ்சதை ஆரம்பிக்காத" என்றான் கௌது.

"ஓ! என் மேல தப்பு இருக்குனு என் புள்ளைக்கிட்ட போட்டுக் கொடுக்கிற அதானே"

"அய்யோ! அப்படியில்ல அத்த, ஊருக்குள்ள இவரைப் பத்தி தப்பா பேசிடக் கூடாதுனு தான் இதை சொல்றேன். நல்லதுக்குப் போகலைனாலும் கெட்டதுக்குப் போய் விசாரிக்கனுமுல. அதை தான் சந்திரா அக்காவும் கொஞ்சம் வேகமாக சொன்னாங்கனு புரிய வைக்கிறேன்" என எடுத்துக் கூறினாள்.

"யாரு என் புள்ளய பத்தி தப்பா பேச முடியும்? எங்க நேரா வரச்சொல்லு அப்படியே நாக்கை வகுந்துடுவேன், இப்ப என்ன அவ வீட்டு சாவுக்குப் போகலைனா, இந்தா படுத்திருக்க கெழவி இல்லைனா நானோ செத்தா அவ குடும்பமே வராம இருக்கட்டும்." என்றார் வேகத்துடன்.

"ரெண்டுப் பேரும் நிறுத்துங்க, செந்தா! நீ தேவையில்லாம யாருக்கோ சப்போர்ட் வாங்கிட்டு நிக்குற, நம்ம வீட்டை மட்டும் பாரு, அம்மா! நான் கிளம்புறேன்" எனக் கூறி வெளியேறினான்.

செவாயி கழுத்தை நொடித்துவிட்டு பின் பக்கம் சென்றார்.

அதுவரை அமைதியாக இருந்த பாட்டி,
"என்ன செந்தா நடந்துச்சு?" எனக் கேட்டார்.

செந்தா கண்கள் கலங்கிட, பொங்கல் அன்று நடந்ததைக் கூறினாள்.

"உன் புருசன் போய் செத்த தலையைக் காட்டிட்டு வந்திருந்தா இந்தப் பேச்சுக்கே இடமில்லை, என்ன செய்றது நான் கொண்டு வந்த மகராசி ஆட்சி தான் நடக்குது இந்த வீட்டுல. நீயும் எதையாவது பேசி அவ வாயில் விழாம, ஒதுங்கிப் போ, அவனே கொஞ்ச நாள் லீவ்ல தான் வந்து இருக்கான், அதையும் சண்டையும் சச்சரவுமா ஆக்கிடாம, சந்தோஷமா இருங்க" எனப் பெரியவராக அறிவுறுத்தினார்.

"பாட்டி! நானும் அவருக்காக தான் பேசுறேன். என்னமோ போங்க நான் இனி வாயைத் தொறக்கல" என அடுப்படிற்குள் சென்றுவிட்டாள்.

பொங்கல் விளையாட்டு விழா சிறப்பாகத் தொடங்கியது.

கௌது நீண்ட வருடங்கள் கழித்து இதில் கலந்துக் கொள்வதால், ஆர்வமாக அனைவருடனும் பேசி மகிழ்ந்தான்.

மகளை, அவள் வயதிற்கான விளையாட்டு அனைத்திலும் பங்குப் பெற உதவினான்.

பாப்புவும் சிலப் போட்டிகளில் பரிசுகளை அள்ளினாள்.

மித்ரவாகினி! இத்தனையாவது பரிசு என ஒலிப்பெருக்கியில் விளம்பரம் செய்தது, செந்தா வீட்டிற்கே கேட்டது. மகளின் பெயரைக் கேட்ட செந்தாவும் மகிழ்ந்தாள்.

செவாயி பக்கத்து வீட்டுக்காரரிடம், "இந்த வருசம் தான் என் பேத்தி வெளையாடவே போனா, அவ அப்பா வந்ததும் பரிசா வாங்குறா" எனப் பெருமை பீத்தினார்.

சிதம்பரமும் அங்கு ஒரு பக்கம் நிற்க, கௌது அவனைப் பார்த்தும் கண்டுக் கொள்ளவில்லை.

பேச்சுப்போட்டி நடந்தது, அதில் சிலர் நன்றாகப் பேசினார்கள்.

மகேஷ்"கௌது! இப்ப பேசினது யாரு தெரியுமா?"" எனக் கேட்டான்.

"யாருடா?"

"சிதம்பரம் அண்ணே பொண்ணு தான்"

"எந்தப் பொண்ணுடா?"

"பெரியப் பொண்ணு, ஆளுப் பாத்தா தெரியலையா, சந்திரா அண்ணி மாதிரியே இருக்கும், நீ தான் அவங்க வீட்டுக்குப் போகல, போனா பாத்திருப்ப"

"ம்ம்ம்!"

"சும்மா போயிட்டு வந்து இருக்கலாம்"

"டேய்! போதும், அந்தப் பஞ்சாயத்தை இப்ப தான் வீட்டுல முடிச்சுட்டு வந்தேன். மறுபடியும் நீ ஆரம்பிக்காத, அம்மாக்கு புடிக்கல அப்புறம் என்னதுக்கு போய்கிட்டு" என்றவனிடம் ஓடி வந்தாள் பாப்பு.

பகல் முழுவதும் போட்டிகள், மாலையில் கபடி, கயிறு இழுத்தல், என நிகழ்ந்தது.

கௌது, மகேஷ் அதில் பங்குப் பெற்றனர். ஆனால் பரிசுகள் தான் பெறவில்லை.

பாப்பு வீட்டிற்குப் போய்விட்டு இரவு பரிசு வாங்குவதற்காக சாப்பிட்டு முடித்து கௌதுவுடன் வந்தாள்.

செந்தா, பரிசுக் கொடுக்க நேரமாகும் பாப்புத் தூங்கிவிட்டால் அழைத்து வருமாறு கணவனிடம் சொல்லி தான் அனுப்பினாள்.

மனைவிக் கூறியதுப் போல் நேரமாக கௌது மகளை கிளப்பினான், அவளோ"அப்பா! நான் பிரைஸ் வாங்கனும்" என அடம் பிடித்தாள்.

ஒரு வழியாக பதினொரு மணியைக் கடந்து பாப்பு பெயரை அறிவிக்க, தூங்கும் மகளைத் தோளில் சுமந்தவாறு சென்று கௌதுவே அவள் வாங்கிய மூன்று விளையாட்டுகளுக்கான பரிசுகளைப் பெற்றுக் கொண்டான்.

பரிசாக இரண்டு சில்வர் டப்பாக்களும், ஒரு கலர் பென்சில்ஸ், க்ரேயான்ஸ், வாட்டர் கலர்ஸ் அடங்கிய பேக்கேஜ் தரப்பட்டது.

மகேஷ் பைக் ஓட்ட, மகளுடன் வீடு வந்துச் சேர்ந்தான் கௌது.

கௌது பைக் கண்ணன் வீட்டில் கிடந்தது, அங்குப் போகும் போது எடுத்துக் கொள்ளலாம் என மகேஷ் பைக்கை தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறான்.

செவாயி, பாட்டித் தூங்கிட, மெல்ல பாப்புவைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்தவனைக் கண்ட போர்டிகோவில் அமர்ந்திருந்த செந்தா வேகமாக சென்று மகளை வாங்கிக் கொண்டாள்.

மூவரும் வீட்டிற்குள் வர, வெளிக் கதவைப் பூட்டிவிட்டு அறைக்குள் சென்றனர்.

பாப்புவை கட்டிலில் ஓரமாக படுக்க வைத்தாள் தாய்.

கௌது"செந்தா! இங்கப் பாரு பாப்பு வாங்கினதை" என அந்தக் கவரை நீட்டினான்.

அதை வாங்கி ஆராய்ந்த செந்தா, "பாப்பு பாத்தா சந்தோஷபடுவாங்க, போட்டியை நடத்துறவங்க இந்தச் சின்னப் புள்ளைங்க வாங்கின பரிசைகளை வெள்ளனமே கொடுக்கலாம். இதுங்களும் ஆசையா காத்திருந்து தூங்கிடுதுங்க" எனக் கட்டிலில் அமர்ந்தாள்.

"ஆமா! நானும் சொல்லிட்டு தான் வந்தேன். பாப்பு மாதிரி நிறைய புள்ளைங்க தூங்கிட்டாங்க செந்தா" என கௌது கட்டிலில் படுத்தான்.

காலையில் நடந்ததைப் பற்றி இருவருமே பேசிக்கொள்ளவில்லை.

"தண்ணீ வேணுமாங்க?"

"ம்ம்ம்!" என எழுந்தவனிற்கு தண்ணீர் கொடுத்தாள். பிறகு செந்தா விளக்கை அணைத்துவிட்டு வந்துப் படுத்தாள்.

இருவரும் அருகருகே படுத்திருக்க, கௌது"செந்தா! சிதம்பரம் அண்ணே பொண்ணு என்னமா பேசுது தெரியுமா, முதல் பரிசு அதான் வாங்கினுச்சு" என்றான்.

"ம்ம்ம்! அவ நல்லா பேசுவாங்க, படிப்பிலும் நல்ல மார்க் வாங்குவா, முன்னாடி டியூசன் இங்க தானே வந்தா"

"நான் ரொம்ப சின்னப் புள்ளையா பாத்தது"

"ம்ம்ம்!"

சிறிது நேரம் ஆக...

அவள் பக்கம் திரும்பியவன், அவளின் இடுப்பில் கைகோர்த்து மிக அருகே அணைத்தான்.

"இன்னைக்கு ஓகேவா செந்தா?" எனப் பாவமாக கேட்டான் கௌது.

செந்தா ஒன்றும் அவனுடன் உறவில் ஈடுப்படக் கூடாது என்ற எண்ணம் கொள்ளவில்லை, ஆனால் மனம் ஏனோ ஒரு வித மறுப்பிலே இருந்தது.

ஆனால் அதை வெளிப்படுத்த முடியவில்லை, கௌதுவின் ஏக்கம், அவளுடனான உறவுக் கொள்ளும் எதிர்பார்ப்பு புரிந்தமையால், மறுக்காமல்
"ம்ம்ம்!" என்று மட்டுமே கூறினாள்.

கௌது பட்டென்று அவள் மேல் படர்ந்திட, செந்தாவின் கொலுசுகள் ஒலியை உண்டாக்கியது.

அவளின் மார்பில் இருந்து தலையை நிமிர்த்தியவன், மெல்ல"செந்தா! இந்தக் கொலுசை நான் போற வரை கழட்டி வை, பாப்புவை எழுப்புறது மட்டுமில்லாம, பத்தாதுன்னு வெளியே அம்மாக்கும் கேட்கும் போல" என முகத்தைச் சுளித்தான்.

"சரிங்க!" என கொலுசைக் கழட்டப் போக, அவனே கழட்டி கீழேப் போட்டான்.

அன்றைய தாம்பத்ய உறவானது கௌதுவின் மனதிற்கு இனிதாக நிறைவேறியது. ஏனோ செந்தா கணவனுடன் கலவியில் இணைந்தாலும் முழுமனதாக ஒப்ப முடியவில்லை. அவன் மனதை மகிழ்வித்தாள் ஒரு விலையில்லா மாதுவாக.

விடிந்தது...

கௌது தமிழு, இளா வீட்டிற்கு செந்தாவுடன் சென்று வந்தான். வெளியூர் சொந்தங்கள் வீட்டிற்கும், மாமியார் வீட்டு விருந்து என நாள்கள் நகர்ந்தது.

திருமணமான புதிதில் நடந்தது போல் நீண்ட வருடங்கள் கழித்து சென்றமையால் அக்கா, தங்கை, மாமியார் வீடுகளில் தடப்புடலான விருந்தே நடைபெற்றது.

பகலில் ஊர்ச்சுற்றுதல், இரவில் மனைவியுடன் அவனிற்கு இனிதான உறவு என ஒரு மாதம் கடந்தப் போது தான், செந்தாவிற்கு ஒரு விசயம் புரிந்தது. பொதுவாக மாதம் முடிவதற்குள் வரும் மாதவிடாய் இந்த மாதம் அவளின் கணக்கிற்கு முப்பது நாள்கள் ஆகியும் வரவில்லை என்று.

செந்தாவின் மனம் ஒரு மாதிரியான நிலையில் பிசைந்து மருகியது, மறுபடியுமா!

கொலுசொலி ஆசைகள்..... 
Top