எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக! - அத்தியாயம் 17

NNK-64

Moderator

அத்தியாயம் 17​

எழிலழகி சந்திரகாவை காரிலேயே அமரச் சொல்லிவிட்டு அவள் மட்டும் வீட்டிற்குள் நுழைந்தாள்.​

முருகேசன் யமுனா மற்றும் சுரேஷ் மூவரும் சாப்பிட்டபடி தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்.​

கைகளை கட்டியபடி நின்று அவர்களை ஆழ்ந்து பார்த்தபடி நின்றிருந்தாள்.​

முதலில் சுரேஷ் தான் அவளைப் பார்த்தான். முழங்கையால் தன் தந்தையின் கையை இடித்து அவள் இருந்த திசையை கண்களால் காண்பித்தான்.​

திரும்பி பார்த்த முருகேசன் எழிலழகியை பார்த்ததும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, “ஏய் நீ ஏன் உள்ளே வந்தே. உன்னை தான் அன்றைக்கே தலைமுழுகிட்டேனே. இனி உனக்கு இந்த வீட்டில் எந்த உறவோ உரிமையோ இல்லை. போ வெளியே” என்று கத்தினார்.​

“எப்போ உறவும் உரிமையும் இருந்தது. இனி இல்லாமல் போவதற்கு” என்று கேட்டாள் அழுத்தமான குரலில்.​

இதற்கு என்ன பதில் சொல்வது என்று சற்று தடுமாறினார்.​

“நான் ஒண்ணும் உங்ககூட சொந்தம் கொண்டாட வரலை. ஓரு விஷயத்தை புரியவைக்க முயற்சிக்கலாம்னு வந்திருக்கேன். உங்க மூளைக்கு அது எட்டுமா என்று தான் தெரியலை” என்றாள் இளக்காரமாக.​

“ஏய்! என்ன டாக்டர் புருஷனா வந்திட்டான் என்று அப்பாவையே மட்டு மரியாதை இல்லாமல் பேசறியா?” என்றார் யமுனா.​

“அது சரி, மணி ஒன்பது ஆக போகுது, நீங்க மூணுபேர் தான் இருக்கீங்க? எங்கே உங்க மகள் சந்திரிகா?” என்றாள் எழிலழகி யமுனாவை பார்த்து​

“அவள் ஒண்ணும் உன்னை மாதிரி இல்லை. இந்த வருடம் படிச்சு முடிக்கும் போதே அரசுவேலையில் இருப்பா பாரு. பயிற்சி வகுப்பிற்கு போயிருக்காள். எதாவது சிறப்பு வகுப்பாக இருக்கும், இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாள்” என்றாள் யமுனா.​

“இதை சந்திரகாவே போன் செய்து சொன்னாளா?” என்றாள் புருவம் உயர்த்தி.​

இப்போது யமுனாவிடம் மவுனம், தலையை குனிந்து கொண்டாள். முருகேசன் சந்திரிகாவின் எண்ணிற்கு அழைத்தார், அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.​

“எங்கடி உன் பொண்ணு? எங்கே போறாள் எப்போ வராள்னு பார்க்கமாட்டியா?” என்றார் முருகேசன் யமுனாவை முறைத்து​

“எனக்கு தான் வீட்டு வேலையே சரியா இருக்கு. நீங்க வெட்டியா தானே இருக்கீங்க நீங்க பார்க்கிறது” என்று யமுனாவும் மல்லுக்கு நின்றாள்.​

“ச்சீ, நிறுத்துங்க. நான் தான் வேண்டாத பொண்ணு, அதனால் என்மேல் அக்கறை காட்டலை என்று இருந்தேன். சந்திரிகாவிடமும் உங்களுக்கெல்லாம் அக்கறையே இல்லையா?​

ஒரு பெண் வெளியில் போயிட்டு வந்தால், அவள் என்னென்ன பிரச்சனை சந்திக்க வேண்டியிருக்கு தெரியுமா? ஒரு நாளாவது ஏன் உன் முகம் இப்படி இருக்கு, எதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்லு, நாங்க பார்த்திக்கிறோம் என்று சொல்லி இருக்கீங்களா?​

பெத்தவங்க பிள்ளைகளோட முகத்தை பார்த்தே அவங்க மனநிலையை தெரிஞ்சு விசாரிச்சால் தானே, பிள்ளைகளும் அவங்க பிரச்சனையை தைரியமாக நம்பி வீட்டில் சொல்வாங்க.​

ஒருமுறையாவது என்னிடம் கேட்டிருக்கீங்களா? இல்லை என்னை பேசத் தான் விட்டிங்களா? நீங்களே கேள்வி கேட்டு நீங்களே அதுக்கு ஒரு பதிலை சொல்லி என் வாயை அடைச்சிடுவீங்க. ஒரு இடத்திலயும் ஒழுங்கா வேலை செய்யாமல் அடிக்கடி வேற வேலைக்கு மாறி போயிட்டே இருக்கானு குறை சொல்ல தெரிஞ்ச உங்களுக்கு, அதுக்கான காரணம் என்னனு ஒரு நாளாவது கேட்க தோணுச்சா?​

எப்படி கேட்க தோணும்? என்னைத் தான் உங்களுக்கு பிறந்த பெண்ணாகவே நினைக்கவில்லையே. என் அம்மாவை சந்தேகப்பட்டு கொடுமைப் படுத்தி இருக்கீங்க. அதை எல்லாம் பொறுத்திட்டு அவங்க உங்ககூட இருந்து இருக்காங்க. அவங்களோட வாழ்வதற்கு உங்களுக்குதான் கொடுத்து வைக்கவில்லை. அந்த பாவம் உங்களை சும்மா விடாது​

என்னிடம் தான் இப்படி என்று நினைத்திருந்தால் சந்திரிகாவிடமும் இப்படிதான் விட்டேற்றியாக இருந்தது இருக்கீங்க. அவள் நிலையை பார்த்ததுக்கு பிறகு பொறுக்காமல் தான் உங்களிடம் பேசியே ஆகவேண்டும் என்று வந்தேன்” என்றாள் எழிலழகி.​

“அய்யோ, என் பெண்ணுக்கு என்ன ஆச்சு” என்று பதறினாள் யமுனா.​

எழிலழகியின் பின்னாலிருந்து வெளியே வந்து நின்றாள் சந்திரகா.​

சோர்ந்து போயிருந்த அவள் முகமும், கசங்கியிருந்த ஆடையும், நடக்கமுடியாமல் நடந்து வந்த தொனியும் யமுனாவின் வயிற்றில் புளியை கரைத்தது.​

“சந்திரிகா” என்று அவளருகில் வந்தவளை “அம்மா” என்று கட்டிபிடித்துக் கொண்டு கதறி அழுதாள் மகள்.​

முருகேசன் நடப்பதை எல்லாம் பார்த்து உறைந்து போய் நின்றிருந்தார்.​

“இது மாதிரி நானும் வந்திருக்க வேண்டியவள், என் நிரஞ்சனால் தப்பித்து இன்றைக்கு நல்லா இருக்கேன். எனக்கு நிரஞ்சன் வந்ததுபோல சந்திரிகாவிற்கு யாரும் வராததால் பலியாகி இருக்கிறாள். இனிமேலாவது அவள் எங்கே போகிறாள் வருகிறாள், எதாவது பிரச்சனையா என்று விசாரிக்க முயற்சி செய்யுங்கள்” என்றாள் எழிலழகி.​

அதன் அர்த்தம் உணர்ந்து மூவருமே எழிலழகியை திடுக்கிட்டு பார்த்தனர்.​

“நீயெல்லாம் ஆம்பிள்ளை பிள்ளை, தம்பினு எதுக்குடா வீட்டில் இருக்க? நீயும் இந்த காலத்து பையன் தானே. உனக்கெல்லாம் எங்கே இருந்து இதெல்லாம் புரிய போகிறது? எப்பவாவது கூட பொறந்தவளிடம் பேசினால் தானே?” என்றாள் சுரேஷையும் விட்டு வைக்காமல்​

சந்திரிகாவிடம் வந்தவள், “சந்திரகா, நான் சொன்னது போல தலை முழுகிட்டு வா. உன்மேல் இருந்த சேறெல்லாம் போய் நீ பரிசுத்தமானவளாயிடுவ. எதற்கும் கவலைப்படாதே. உனக்கு நான் இருக்கேன். எந்த பிரச்சனை என்றாலும் எனக்கு போன் செய். என் வீட்டு கதவு எப்போதும் உனக்காக திறந்தே இருக்கும்.​

எப்போது வேண்டுமானாலும் நீ வரலாம் போகலாம். உன் அத்தான் ரொம்ப நல்லவர். உனக்கு அரசுவேலை கிடைக்க என்னவெல்லாம் படிக்கலாம் என்று வழிகாட்டுவாரு” என்று அவளிடம் சொல்லிவிட்டு மற்ற மூவரையும் பார்த்து முறைத்து விட்டு சென்றாள்.​

நால்வருமே பேச்சற்று சிலைப்போல் நின்றிருந்தனர். முருகேசன் குற்ற உணர்வால் துடித்துக் கொண்டிருந்தார்.​

எழிலழகி மருத்துவமனையை அடையும் போது மணி பத்தாகி இருந்து.​

கணவன் என்ன சொல்வானோ என்று பயந்தபடி அவனை பார்க்க சென்றாள்.​

கண்களை மூடிப் படுத்துக் கொண்டு இருந்தவனிடம், “நிரு” என்றழைத்தாள் மெலிதான குரலில்.​

“அழகி, வந்துட்டியா? சாப்பிட்டயா? ஏன் சோர்ந்து போய் இருக்க?” என்று கேட்டான்.​

“இத்தனை நேரம் எங்க போயிருந்தனு கேட்பிங்கனு நினைச்சேன் நிரு” என்றாள் குன்றிய முகத்துடன்.​

“ஏதோ முக்கிய வேலை இருக்க போய் தானே போயிருக்க. அதைப்பற்றி அப்புறம் பேசிக்கலாம். நீ முதலில் போய் கேன்டினில் சாப்பிட்டு வா” என்றான்.​

“உங்களுக்கு சாப்பிடக்கூட வைக்காமல் போயிட்டேனே” என்று கவலைப்பட்டாள்​

“அதெல்லாம் இல்லை, மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சாப்பாடு வந்தது. நான் சாப்பிட்டேன். நீ போய் சாப்பிடு” என்றான் கனிவான குரலில்.​

கணவனை நினைத்து பெருமையாக இருந்தது. அவள் சென்று சாப்பிட்டு விட்டு வந்ததும் தன்னருகிலேயே கட்டிலில் படுக்க சொன்னான்.​

அவள் மறுத்துவிட்டு அங்கே இருந்த குஷனில் படுத்துக் கொண்டாள்.​

மறுநாள் காலையில் அந்த மருத்துவமனை வளாகத்திலிருந்த தொலைக்காட்சியில் தலைப்பு செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.​

“தனியார் பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் கோபாலன் கைது செய்யப்பட்டார். அங்கே படிக்க வரும் பெண்களிடம் பாலியல் வன்புணர்வு செய்ததாக இதுவரை 50க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருக்கின்றனர்.​

அதில் சிலர் நேரில் வந்து சாட்சி சொல்வதற்கும் தயார் என்று அவர்களின் அலைபேசி உரையாடலின் ஒலிக்கற்றையை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்” என்று செய்தி ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது.​

வெற்றி புன்னகையுடன் உள்ளே வந்தவளை பார்த்து, “வெல்டன் அழகி, உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கு” என்றான்.​

“நிரு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் அழகி ஆச்சரியமாக.​

“என் மனசுக்கு உன்னால் தான் இது நடந்திருக்கும்னு தோணிச்சு” என்றான் கண்சிமிட்டி​

“சரி நிரு, டாக்டர் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்யறதாக சொல்லி இருக்காங்க. நான் ஆபிசிற்கு கிளம்பட்டுமா? முக்கியமான வேலைகளை முடிச்சிட்டு பதினைந்து நாளுக்கு விடுமுறை கேட்டுட்டு வந்திடுறேன். அப்போ தான் உங்களை கிட்ட இருந்து கவனிச்சிக்க முடியும்” என்றாள்​

அவள் சொன்னதும் அவன் முகம் பளிச்சிட்டது, கண்களில் மின்னல் தோன்றியது. இதழில் ஒரு மர்ம புன்னகையுடன், “சரி விடுமுறை சொல்லிட்டு வந்திடு” என்றான்.​

“என்ன நிரு, திடீர்னு முகத்தில் பிரகாசம்?” என்று கேட்டாள்.​

“நாம் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு போனதும் சொல்கிறேன்” என்றான் மர்மான குரலில்.​

சரியென்று அவனிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.​

எழிலழகி அலுவலகத்தை அடைந்ததும் ஆபிசே பரப்பரப்பாக வேலை செய்ய தொடங்கியிருந்தது.​

அவள் நடையில் ஒரு நிமிர்வும், பேச்சில் தெளிவும், மிடுக்கும் இருந்தது.​

அவள் பார்வையில் ஒரு கண்டிப்பும் குடியேறியிருந்தது. அன்றைய வேலைகளை முடித்துக் கொண்டு எப்போதும் செல்வது போல் மற்ற தொழிற்சாலைகளுக்கும் சென்றாள்.​

அங்கே பணிபுரியும் பெண்களை தனிதனி குழுக்களாக அமைத்து அதில் தலைவி, செயலாளர் மற்றும் பொருளாளர் என்று அவர்களுக்கு பொறுப்பையும் கொடுத்திருந்தாள்.​

குழுக்களில் இருக்கும் உறுப்பினர்கள் தங்களுக்கோ அல்லது தங்களுடன் பணிபுரியும் பெண்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் அதை குழுவின் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். புகார் அளித்தவரின் பெயர் விவரம் தேவை இல்லை. ஆனால் புகாரின் விவரம், யார் மேல் புகார் என்பது போன்ற விவரங்களை அந்த குழுவிற்கு தெரிவிக்க வேண்டும்.​

தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரச்சனை பெரிதாக இருப்பின் அதில் எழிலழகி தலையிட்டு முடித்து வைப்பாள்.​

இந்த முயற்சியில் பல அதிகாரிகளை தாட்சண்யம் பார்க்காமல் வேலையிலிருந்து தூக்கியிருந்தாள். மற்ற அதிகாரிகள் இவளது நடவடிக்கையை பார்த்து தங்கள் திருவிளையாடல்களை நிறுத்தியிருந்தனர்.​

வெளியில் அவளைப் பார்த்து மரியாதையாக வணக்கம் வைத்தாலும், அவள் சென்றதும் திமிர்பிடிச்சவள், ராங்கிகாரி, பெரிய இவள்னு நினைப்பு என்று அவளை அவர்கள் திட்டுவதும் அவளுக்கு தெரிந்தே இருந்தது.​

தப்பான ஆண்களுக்கு அவள் திமிர்பிடித்தவளாகவே இருந்துவிட்டு போகட்டுமே என்ன கெட்டுவிட போகிறது? என்று தனக்குள் சிரித்தபடி தன் வேலைகளை முடித்தாள்.​

மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது போலீஸ் அதிகாரியிடமிருந்து போன் வந்தது.​

“சொல்லுங்க சார்” என்றாள்.​

“மிஸஸ் எழில், உங்க கார்விபத்து சம்மந்தமாக நாங்க சிசிடிவி கேமராவில் இருந்த பதிவுகளை பார்த்தோம். அதில் உங்க காரை இடித்த மற்றொரு காரின் நம்பரை வைத்து தேடியதில் அந்த கார் மீரா என்ற பெண்ணுடையது என்று தெரிந்தது. விசாரித்ததில் அவங்க உங்க கம்பெனியில் வேலை செய்ததாக சொன்னாங்க. அவங்க ஆள் எப்படி? ஏற்கனவே உங்களுக்குள் பகையா?” என்று கேட்டார்.​

“என்ன சார் சொல்றீங்க மீராவின் காரா? நல்லா விசாரிச்சீங்களா? அவங்க நல்லவங்க சார்” என்றாள் எழிலழகி பதட்டமாக.​

“இப்ப எல்லாம் நல்லவங்க மாதிரி நடிச்சு தான் எல்லா வேலையும் பார்க்கிறாங்க. அவங்க உங்க கணவர் படித்த கல்லூரியில் ஜூனியர் என்று தெரிந்தது. எனக்கென்னவோ அவர்மேல் உள்ள அஃபேர்ரில் தான் உங்க காரை இடிச்சிருப்பாங்கனு தோணுது” என்றார்​

“நாங்க மீராவை கைது செய்ய ஏற்பாடு செய்யறோம், நீங்க கவனமாக இருங்க” என்று போனை வைத்தார் காவல் அதிகாரி.​

எழிலழகிக்கு தலைச்சுற்றியது. ஒருமுறை மட்டும் மீரா அவளிடம் வந்து உன் கணவரை தெரியும் என்றாள். ஏன் கல்லூரியிலிருந்தே தெரியும் என்று சொல்லவில்லை? அவள் கொல்ல வந்தது என்னையா? நிரஞ்சனையா? என்னிடம் இயல்பாக தானே நடந்து கொண்டாள்?​

நிரஞ்சனிடம் அவளைப் பற்றி விசாரிக்கலாம் என்று எண்ணியவள் நாளை போட இருந்த விடுப்பை அப்போதே விண்ணப்பித்து அனுமதியும் பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள்.​

(தொடரும்)​

 

santhinagaraj

Active member
நிரஞ்சன கொலை பண்ண முயற்சி பண்ணது மீரா வா ஏன்??
நிச்சயமா இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கல
 

NNK-64

Moderator
நிரஞ்சன கொலை பண்ண முயற்சி பண்ணது மீரா வா ஏன்??
நிச்சயமா இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கல
Thank you sis 💕
 

Mathykarthy

Well-known member
அழகி சூப்பர்...
மீராவா இதெல்லாம் பண்ணியது... ஏன் 🤔
 
Top