எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! - அத்தியாயம் 08

NNK-29

Moderator
💖உயிர் காற்றாய் உனை ஏற்றேன்!💖 அத்தியாயம் 8
 

NNK-29

Moderator

அத்தியாயம் 8

மாலை நேரம் வேலை முடித்து வீட்டிற்கு வந்த சாருமதியும் தேவாவும் அறையில் இருந்தனர்.

யூடியூப் ஷார்ட்ஸ் ஒன்றை எடிட் செய்து பதிவேற்றிக் கொண்டிருந்தாள் சாருமதி. தேவா, அவனின் மடிக்கணினியில் வேலை செய்துக்கொண்டிருந்தான்.

அவளின் வேலையை முடித்த சாருமதி தேவாவின் அருகில் வந்து அமர்ந்தாள். “முக்கியமான வேலையா? பார்க்கலாமா?” என அவனின் மடிக்கணினியை எட்டி பார்த்து கேட்டாள்.

வலக்கையில் அவளை அணைத்த மாதிரி உட்கார்ந்தவன், “முக்கியமானது தான். ஆனா நீ பார்க்கலாம்” என்றவன் தொடர்ந்து மடிக்கணினியில் தெரிந்த கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் பார்த்துக்கொண்டிருப்பது வரவு-செலவு கணக்கு என்று புரிந்துக்கொண்டவள், “உங்க வரவு செலவு கணக்கா?” என்று அவனை திரும்பி பார்க்க, அவளின் தலையில் அவனின் தாடையால் இடித்தவன், “நம்ம வரவு-செலவு கணக்கு” என்று திருத்தினான்.

அதில் வந்தனாவின் கல்யாணத்திற்கான செலவு, அவர்கள் இருவரின் திருமணத்திற்கான செலவு, இரண்டிற்கும் வந்த மொய் பணம் என அனைத்தையும் தவறாமல் குறிப்பிட்டிருந்தான். அதனை பார்த்தவளிற்கு அங்கு போட்டிருந்த கணக்கின் தொகைகளை பார்த்து மலைப்பாக இருந்தது.

அவளின் வீட்டில் அரவிந்தும் அவளின் அப்பா குமரேசனும் தான் திருமண செலவு அனைத்தையும் பார்த்துக்கொண்டனர். இவளுக்கு அதை பற்றி ஒன்றும் தெரியவில்லை. வந்தனா வேலைக்கு செல்கிறாள் என்று தெரியும். ஆனால் அவளின் வருமானம் எதுவும் சாருமதிக்கு இதுவரை தெரியாது. அவளும் கேட்டுக் கொண்டதில்லை.

ஆனால் இங்கே தனியாக இரண்டு திருமணத்திற்கான செலவையும் தனியாக பார்த்தவனை வியந்து பார்த்தவள், “எவ்வளவு லோன் வாங்கினீங்க?” என்றாள்.

அவளை வியப்பாக பார்த்துக்கொண்டே, “வந்தனா கல்யாணத்துக்கு முன்னாடில இருந்தே சேர்த்து வைத்தது தான் மதி. நம்ம கல்யாணம் டக்குனு முடிவானதால அதுக்கு மட்டும் இவ்வளவு கடன் வாங்கினேன்” என ஒரு தொகையை குறிப்பிட்டான்.

“எதுக்கு தேவ்? லோன் போட்டீங்க? கல்யாணத்தை தள்ளி வெச்சிருக்கலாமே?” என்றாள் அவனின் கடன் தொகையை பார்த்து.

“அதெல்லாம் இப்ப எதுக்கு டி?” என அதட்டியவன், “அம்மாக்கு நான் லோன் போட்டிருக்கிறது தெரியாது மதி. உன்கிட்ட மட்டும் தான் சொல்லிருக்கேன்” என்றான் கூடுதல் தகவலாக.

இருந்தாலும் தேவா கடன் வாங்கியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல், “இதுவரைக்கும் நான் வாங்கின சேலரி எல்லாமே அப்படியே தான் இருக்கு தேவ். அதைவேணா எடுத்து லோனை…” என்று முடிக்கும் முன், “ஸ்டாப் இட் மதி! நீ எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு நான் இத உன்கிட்ட சொல்லலை” என கத்தி இருந்தான்.

இதுவரை மதி என்று கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சிய தேவா, முதல் முறை கத்துவதை பார்த்தவளின் விழிகள் அச்சத்தில் விரிய உடல் தூக்கிவாரி போட்டது. மெல்ல தலையை கோதி தன்னை சமன் படுத்தியவன்,

“இங்க பாரு மதி, என்னோட செலவுகளை நீ தெரிஞ்சிக்கணும்னு தான் சொன்னேன். அண்ட் இந்த லோன் ரெண்டு வருஷத்துல நானே அடைச்சிடுவேன்” என்றான் அவளின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்து மெதுவாக.

“என்கிட்டயும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ஸ்டாக் மார்க்கெட்லலாம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இருக்கு மதி. ஃபியூசர்ல அதெல்லாம் நல்ல ரிட்டர்ன்ஸ் கொடுக்கும். அதுனால தான் அதை எடுக்காம லோன் போனேன்” என்றான் விளக்கமாக.

“ஓகே தேவ்” என பட்டும்படாமல் சொன்னவள், “சாப்பிடலாம் வாங்க…” என சொல்லிவிட்டு வெளியேறினாள், அவ்வளவு நேரம் அவனை ஒட்டி உரசிக்கொண்டு அமர்ந்திருந்தவள்.

தேவாவிற்கு கஷ்டமாக போனது. ‘நமக்காக தானே அப்படி சொன்னா? அவளை போய் இப்படி கத்திவிட்டுட்டியே டா தேவா?’ என்று அவனை அவனே கடிந்துக்கொண்டு சாப்பிட சென்றான்.

இருவரும் சாப்பிட்டு படுக்கைக்கு வர மீண்டும் மடிக்கணினியை எடுத்தவனை பார்த்தவள் படுக்க சென்றாள். “மதி இங்க வா. இந்த வேலைக்கு எனக்கு ஹெல்ப் பண்ணு” என கூப்பிட்டான்.

“உங்க வேலை எனக்கு என்ன தெரியும்?” என்று முறுக்கிக்கொண்டவளின் கைப்பிடித்து அருகில் அமர்த்தி மடிக்கணினியின் திரையை காண்பித்தான். அதில் அவர்களின் திருமண புகைப்படங்கள் வரிசையாக வந்தன.

அதுவரை சாருமதி பிடித்துவைத்திருந்த கோபம் சட்டென்று மறைய முகமுழுக்க மலர்ச்சியுடன் அவனை பார்த்தாள். “ஈவினிங் தான் ஃபோட்டோக்ராப்பர் ஃபோட்டோஸ் அனுப்பினார். ஆல்பம் போட, ஃபிரேம் போட ஃபோட்டோஸ் செலக்ட் பண்ணி அனுப்ப சொன்னார்” என்றவன் அவளை நெருங்கி அமர்ந்தான். “நீ கேட்ட நமக்கான தருணங்கள்! நமக்கு சொந்தமான தருணங்கள்!” என கூறி ஒவ்வொரு புகைப்படமாக காட்டினான்.

கணினியின் திரையில் தோன்றிய புகைப்படங்களை பார்த்தவர்களுக்கு அன்றைய நாளிற்கே சென்ற உணர்வெழுந்தது. ஒவ்வொரு ஃபோட்டோவிற்கும் ஒவ்வொரு கதை பேசி அந்த நாளின் நொடிகளையும் நினைவுகளையும் மீண்டும் மீட்டிப்பார்த்தனர்.

இரவு முழுவதும் ஃபோட்டோ பார்த்து, வீடியோ பார்த்து என பேசியே அன்றைய இரவை இருவரும் கழித்தனர். உடலாலும், உணர்வாலும் மட்டுமின்றி நினைவாலும், மனதாலும் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினர்.

மறுநாள் சனிக்கிழமை என்பதால் இருவருக்கும் விடுமுறை இருந்தது. ஆனாலும் காலையிலேயே தேவா கிளையன்ட் மீட்டிங் என்று வெளியேறிவிட்டான்.

சாருமதி செல்வராணியுடன் சேர்ந்து தோட்டத்தை சுத்தம் செய்து, அவள் வாங்கிய புது ரோஜா செடிகளை நாட்டுவைத்து அழகு படுத்தினாள்.

மாலைநேரம், பறவைகள் அதனின் கூட்டிற்கு பறந்துசென்று கொண்டிருந்தது. “எங்க இருக்கீங்க தேவ்? வீட்டுக்கு எப்ப வருவீங்க?” என கேள்விகளை தொடுத்துக் கொண்டிருந்தாள் சாருமதி.

“வீட்டுக்கு தான் டி வந்துட்டு இருக்கேன். இன்னும் அரைமணி நேரத்துல வந்திடுவேன்” என்றவனிடம்,

“வெளிய போகணும்னு சொல்லியும் லேட்டா வந்தா என்ன அர்த்தம்?” என சாரு குரலை உயர்த்தினாள். “ஃபோன்ல கத்தாத…” என அவனும் கத்தினான்.

“நீங்க டிரைவ் பண்ணிக்கிட்டே பேசாதீங்க… பார்த்து வாங்க” என்றவள் அலைபேசியை வைக்கும் முன், “மதி! மறக்காம அந்த ப்ளூ சாரியை கட்டு” என கத்திவிட்டே அலைபேசியை வைத்தான்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என சிடுசிடுத்தாலும் அவளின் கைகள் அந்த நீலநிற புடவையை தான் எடுத்தது.

அந்த புடவைதான் அவளுக்கு தேவா எடுத்துக்கொடுத்த முதல் புடவை! முகூர்த்த புடவை எடுக்க சென்ற சமயத்தில் அவனே தேர்வு செய்து எடுத்துக்கொடுத்தது.

கல்யாணம் நடந்த புதிதில் “எதுக்கு எப்ப பார்த்தாலும் சாரி கட்ட சொல்லுறீங்க தேவ்? எனக்கு இது அன்கம்ஃபார்ட்டபிளா இருக்கு தெரியுமா?” என அழுத்துக்கொண்டவளிடம், “எனக்கு இதுதான் கம்ஃபார்ட்டபிளா இருக்கு மதி!” என அவளின் இடையில் வீணை மீட்டியிருக்கிறான் தேவா.

அதை நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்ட பாவை அந்த புடவையை அணிந்து தயாரானாள்.

தேவா வீடு திரும்பும் பொழுது செல்வராணியும் சாருமதியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். சாருமதி நீல நிற சேலை அணிந்து, செல்வராணி கொடுத்த முல்லை சரத்தை தலையில் சூடி பதுமையாக அமர்ந்திருந்தாள்.

“ஃபைவ் மினிட்ஸ் மதி… கிளம்பிடுவேன்” என்றவன், “ஒரே ஒரு காஃபி ப்ளீஸ்…” என புருவம் சுருக்கி அவளிடம் கேட்டுவிட்டு அறைக்குள் சென்றான்.

சாருமதி காஃபியுடன் உள்ளே செல்ல அவன் சட்டையின் கையை மடித்துவிட்டு கொண்டிருந்தான். உள்ளே வந்தவளை இழுத்து அணைத்தவன், “நாம பேசாம வீட்லையே இருக்கலாமா? மதி?” என்றான் அவளுடன் இழைந்துகொண்டே.

அவன் ஒவ்வொரு முறையும் மதி என்றழைக்கும் பொழுது, அவளின் உடல், உணர்வு அனைத்தும் எதுவோ செய்யும். அப்படியே மயங்கி கண்மூடி நின்றவளை கண்ணாடியில் பார்த்தவன்,

“இந்த கண்ணாடி நீ சொன்ன மாதிரி நம்மள அப்படியே படம் பிடிச்சி காட்டுது மதி” என்றான் சிரிப்புடன். இருவரும் அந்த கண்ணாடியை அங்கே மாட்டிய நிகழ்விற்கு சென்றனர்.

ஒருவாரத்திற்கு முன்பு தான் அந்த கண்ணாடியை அவர்களின் அறையில் பொருத்தினர். “இப்ப இந்த கண்ணாடி அவசியமா மதி?” அறையின் ஒருப்பக்க சுவரில் பாதியை ஆக்கிரமித்திருந்த கண்ணாடியை பார்த்து தேவா கேட்டான்.

அந்த கண்ணாடியை பார்த்த செல்வராணிக்கூட, “பார்த்து சூதானமா இருங்க ரெண்டு பேரும். கண்ணாடியை பார்த்தாலே பயமா இருக்கு” என்று எச்சரித்தார்.

“இங்க வாங்க” என அவனை இழுத்து அவளின் இடப்பக்கம் நிறுத்திக்கொண்டவள் அவனின் இடையில் அவளின் இடக்கரத்தை போட்டு இருவரின் உருவத்தையும் அந்த கண்ணாடியில் காண்பித்தாள்.

சாருமதி இழுத்ததுமே தேவா அவளின் தோளில் கைபோட்டவன் கண்ணாடியில் ஜோடியாக விழுந்த அவர்களின் பிம்பத்தை ரசித்தான்.

இதுவரை தேவாவின் வீட்டில் இப்படி ஆளுயர, ஆளையே விழுங்கும் கண்ணாடி இருந்ததில்லை! வந்தனாவின் அறையிலும் தேவாவின் அறையிலும் இடுப்பளவு இருக்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.

“கண்ணாடி, நம்ம உருவத்தை எப்படி இருக்கோ அப்படியே நமக்கு காட்டும் தேவ்! நான் வாழ்க்கைல பாதி நேரத்துக்கு மேல் கண்ணாடியில் தான் செலவிடுகிறேன்” என கண்ணாடி முன்பு ஆடும் அவளின் ஏரோபிக் நடனத்தை குறிப்பிட்டாள்.

“அதுக்கு…?” என புரியாது கண்ணாடியின் வழியே அவளை பார்த்து கேட்டான்.

“இப்படி நம்ம உருவம் முழுசா கண்ணாடியில் தெரியுற மாதிரி இருந்தா தான். நாம வெயிட் ஏறினாலும், இல்லை குறைஞ்சாலும் நமக்கு சட்டுனு தெரியும்” என்றவள்,

“அதுமட்டுமில்ல, நம்ம யார்கிட்டயும் சொல்ல முடியாததை கூட இந்த கண்ணாடி முன்னாடி நின்னு நம்மளோட உணர்வுகளை நம்மகிட்டயே பகிர்ந்துகிட்டா அதுல ஒரு நிம்மதி கிடைக்கும்!” என்றாள்.

“எனக்கு அந்த நிம்‘மதி’ பற்றி தெரியாது. ஆனா இந்த ‘மதி’ கூட ஜோடியா இப்படி கண்ணாடி முன்னாடி நிற்கிறது பிடிச்சிருக்கு!” என அவளின் நெற்றியோடு நெற்றி முட்டினான்.

நினைவில் இருந்து மீண்ட சாருமதி, “ஹ்ம்ம். கண்டிப்பா போகணும் தேவ்” என அவனிடமிருந்து விலகி காஃபியை திணித்தாள். தேவா காஃபி குடித்து முடித்ததும் இருவரும் கிளம்பினார்கள்.

இரவுணவை வெளியே பார்த்துக்கொள்வதாக செல்வராணியிடம் சொல்லிவிட்டே சென்றனர். அவர்கள் இருவரும் சாருமதியின் அகாடமியில் நடைபெறும் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு தான் சென்றனர்.

உள்ளே சென்றதும் தேவாவை அழைத்துக்கொண்டு சாருமதி அவளின் தோழி ஸ்வர்ணமுகியை காண சென்றாள். அவளிடம் பேசிவிட்டு அந்த அரங்கத்தில் இருவரும் அமர்ந்தனர்.

அங்கே கர்நாட்டிக் இசை ஒலித்துக்கொண்டிருந்தது. சிறிது நேரத்திலே தேவாவிற்கு போரடிக்க, “எப்ப ஸ்டார்ட் ஆகும் மதி?” என சிறுபிள்ளை தாயை நச்சரிப்பதுபோல் நச்சரிக்க தொடங்கினான்.

சில நிமிடங்களில் முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரின் துதிக்கு ஆறேழு சிறுமிகள் வந்து பரதம் ஆடினார்கள். பின் அப்படியே வரிசையாக அரங்கேற்றம் செய்ய காத்திருந்த மாணவிகள் அனைவரும் ஒவ்வொரு குழுக்கலாக வந்து ஆடினர்.

முதலில் சலிப்பாக பார்த்த தேவாவும் ஒவ்வொரு பாடலுக்கும் அனைவரும் இடுப்பை வளைத்து, அபிநயம் பிடித்து, முகத்தில் காண்பித்த பாவத்திலும் ரசித்து பார்த்தான்.

அந்நேரம் அங்கே மேடையில் ஒரு துண்டை விரித்து அதில் ஓர் மண்பானையை கவிழ்த்துவைத்தனர். அரங்கத்தில் இருந்த அனைவரும் சுவாரஸ்யமாக பார்க்க, வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற பார்டர் வைத்த பரதநாட்டிய உடையில் சிற்பிவடித்த சிற்பம் போல் தோன்றினாள் ஸ்வர்ணமுகி!

அவள் பயிற்றுவித்த மாணவிகள் அரங்கேற்றம் செய்தாலும், அந்த அகாடமியில் இருக்கும் அனைத்து பரதநாட்டிய கலைஞர்களும் ஒரு ஒரு பாட்டிற்காவது ஆடிவிடுவர். அப்படி தான் ஸ்வர்ணமுகி பெரிணி(perini) நடனம் ஆட மேடையேறினாள்.

பெரிணி(perini) நடனம் என்பது சிவனுக்கான ஒரு நடன தாண்டவமாகும். பொதுவாக இதை ஆண்கள் தான் ஆடுவர். ஆனால் பரதத்தில் ஒரு பானையின் மேல் நின்று இந்த நடனத்தை பெண்களும் ஆடுவர்.

அரங்கிலிருப்பவர்களுக்கு கரங்கள் கோர்த்து வணக்கம் தெரிவித்துவிட்டு மெல்ல அந்த பானையில் ஏறினாள் ஸ்வர்ணமுகி. காலின் பாதத்தை வளைத்து பானையின் மேல் சமநிலையை கடைபிடித்துக்கொண்டே சிவனின் பாடலுக்கு ஏற்ப காலையும் கையையும் அசைத்து ஆட துவங்கினாள்.

ஸ்வர்ணமுகி சாதாரணமாக ஆடினாலும் அரங்கத்தில் இருந்தோர்க்கெல்லாம் படபடப்பு தானாகவே வந்தது. ‘எங்கே கால் இடறி விடுமோ?’ ‘பானை உடைந்து விடுமோ?’ என அந்த நடனத்தை பார்த்திருப்பவர்கள் ரசிப்பையும் மீறி தவித்தனர். அதில் தேவாவும் அடக்கம்.

நடனத்தை முடித்த ஸ்வர்ணமுகி வலதுகாலை பானைமேல் நன்றாக ஊன்றி இடதுகாலை இடைவரை உயர்த்தி கைகளை வலப்புறம் அபய முத்திரை வைத்து நடராஜர் சிலை போல் அபிநயம் பிடித்து நின்றாள்.

அரங்கமே அதிரும் வண்ணம் கரகோஷம் எழுந்தது. பத்து நிமிடம் அந்த அரங்கத்தையே மெய்மறந்து தனது நாட்டிய சூழலில் கட்டிபோட்ட ஸ்வர்ணமுகி வணக்கம் தெரிவித்து விடைப்பெற்றாள்.

“கிளம்பலாமா தேவ்?”

“அவ்வளவு தான? முடிஞ்சிடுச்சா?” என்றான் மேடையை பார்த்துக்கொண்டே.

“இன்னும் இருக்கும். பட் இப்ப கிளம்பினா கார் பார்க்கிங் போய்ட்டு போக சரியா இருக்கும். இல்லனா இந்த கூட்டத்துல மாட்டிப்போம்” என்றாள்.

‘அவள் சொல்வதும் சரியாக பட’ இருவரும் அரங்கத்தை விட்டு வெளியேறி காரில் பயணத்தை தொடங்கினர்.

“சான்சே இல்ல மதி! உன்னோட ஃபிரண்ட் எவ்வளவு அழகா ஆடுறாங்க. ரொம்ப வருஷமா கத்துகுறாங்களா?” என்றான் தேவா வண்டியை ஒட்டிக்கொண்டே.

“ஆமா தேவ். பதினஞ்சி வருஷத்துக்கு மேல ஆடுறா”

“ஓ… ஓகே மதி. நான் இதைமாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம் போனதே இல்லை! நல்லா என்ஜாய் பண்ணேன்” என்றவனின் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தவளை பார்த்தவன் காரில் பாடலை ஒலிக்கவிட்டான். அதில் இளையராஜாவின் இசையில்,

“நான் என்பது

நீ அல்லவோ... தேவ தேவி!

இனி நான் என்பது

நீ அல்லவோ... தேவ தேவி!” என்ற பாடல் ஒலிக்க தொடங்கியது.

இசை அங்கு நிலவிய மௌனத்தை நிறைக்க இருவரின் இதழ்களிலும் புன்னகை மிளிர்ந்தது.

இந்த பாடலை தான் சாருமதி திருமணத்திற்கு முன் எடிட் செய்து தேவாவிற்கு அனுப்பினாள். இந்த பாடலை கேட்ட உடன் அன்று நிகழ்ந்த உரையாடல்களும் சேர ஒருவித மோன நிலையில் இருவரும் இருந்தனர்.

“இனி நான் என்பது

நீ அல்லவோ... தேவ தேவா...

தேவலோகம் வேறு எது

தேவன் இங்கு உள்ள போது வேதம் ஓது...”

என்று அந்த பாடல் முடியும் பொழுது, “உன்னோட தேவா தான் இருக்கேனே மதி? வேதம் ஓதட்டுமா?” என்றான் மந்தகாச புன்னகையுடன்.

“தேவ்…” என சிணுங்கியவள், “வண்டியை அந்த ஹோட்டல்ல நிறுத்துங்க சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்” என்று பேச்சை மாற்றினாள்.

“சரி விடு. வீட்டுக்கு போனதும் பார்த்துக்கலாம்” என்று கண்ணடித்தவனை முறைத்தவளும் இரவில் அவனுடன் தனிமையை எதிர்பார்த்தாள்.

__________

இரவுணவையும் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகையில் வாசலிலே அரவிந்தின் கார் நிற்பதை கண்டுக்கொண்டார்கள்.

“உங்க அண்ணன் ஏதாவது உன்கிட்ட சொன்னாங்களா மதி?” என்ற யோசனையுடன் காரை நிறுத்திக்கொண்டே சாருமதியிடம் வினவினான்.

“இல்லையே தேவ்!” என்றவள் அவனுடன் உள்ளே நுழைந்தாள்.

“வாங்க அண்ணா. வாங்க அண்ணி” என சாருவும்,

“வாங்க அரவிந்த். வா வந்தனா” என தேவாவும் வரவேற்றனர்.

அரவிந்த் முகத்தில் படபடப்பும் வந்தனாவின் முகத்தில் கலக்கமும் இருந்தது. ‘என்னாச்சு இவங்களுக்கு?’ என்று சாருமதி யோசிக்க,

“ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?” என அரவிந்திடம் தேவா கேட்டான்.

“நாங்க சாப்பிட்டாச்சி அண்ணா” என்ற பதில் வந்தனாவிடமிருந்து வந்தது. அதற்குள் தேவாவின் ஃபோன் இருமுறை அடித்து ஓய்ந்தது.

“முக்கியமான கால்னா பேசுங்க தேவா. நாங்க இங்க தான் இருப்போம். நாளைக்கு கூட பேசிக்கலாம்” என்ற அரவிந்த் வந்தனாவின் அறைக்குள் சென்றான்.

தேவாவும் அலைபேசியுடன் அறைக்குள் சென்றுவிட, சாருமதி தான் வந்தனாவின் முகத்தை பார்ப்பதும் செல்வராணியின் முகத்தை பார்ப்பதுமாக இருந்தாள்.

அதுவரை வாயை திறக்காத வந்தனா, “என்ன பண்ணுறது ம்மா? எங்களால கல்யாணம் ஆனவங்களாம் சந்தோசமா வெளிய போய்ட்டு வராங்க? ஆனா நான்…” என்றவள் முடிக்கும் முன், “வந்தனா…” என்று அதட்டினார் செல்வராணி.

‘ஓர் வாக்கியம் என்ன செய்ய முடியும்?’ என்பதை உணர்ந்துக் கொண்டிருந்தாள் சாருமதி. அவ்வளவு நேரம் தேவாவின் கைபிடித்து, கண்களால் கதை பேசி என்ற மோன நிலை அறுபட்டது போல் உணர்ந்தாள்.

அவ்வளவு நாள் மனதிற்குள் அமிழ்ந்து கிடந்த ‘அவங்க கல்யாணத்தால தான நம்ம கல்யாணம்!’ என்ற எண்ணம் மெல்ல மெல்ல மேலெழும்ப கருமேகங்கள் அவளை சூழ்ந்துக்கொண்டது.

அதற்கு மேல் அங்கு அமர பிடிக்காமல், காற்றிழந்த பலூன் போல் சுருங்கிய முகத்துடன் எழுந்து அவளரைக்கு சென்றாள்.

அங்கே மடிக்கணினியுடன் போராடிக் கொண்டிருந்த தேவா, “மதி நீ தூங்கு. எனக்கு வேலையிருக்கு…” என அவளை பாராமல் மடிக்கணினியை பார்த்துக்கொண்டே கூறினான்.

வந்தனா கூறியதில் தெளிவில்லாமல் வந்த சாருமதியின் மனது தேவாவின் இறுகிய அணைப்பில் அடங்க வேண்டும் போல் பரபரத்தது. ஆனால் அவனோ மும்முரமாக அலைபேசியில் பேசிக்கொண்டே தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.

சத்தமில்லாமல் உடைமாற்றி வந்தவள் தேவாவை பார்த்தமாதிரியே படுத்துக்கொண்டாள். 'நம்ம கல்யாணம் காதல் கல்யாணமா இருந்திருந்தா நல்லார்ந்திருக்கும்ல தேவ்?’ என மனதோடு கேட்டுக்கொண்டே உறக்கத்தை தழுவினாள்.

 

NNK-29

Moderator
வந்தனாக்கு இப்போ என்ன பிரச்சினையாம்???... மனசுக்குள்ள கேட்டதை வாய்விட்டு கேட்டுருக்கலாம்!!..
வந்தனாவுக்கு பிரச்சனை என்னனு தெரியலையே😜 நன்றி dear❤️❤️❤️
 

Advi

Well-known member
வந்தனா வந்துட்டாளா பிரச்சனை ஓட🙄🙄🙄🙄🙄

என்னவாம் இப்ப இவளுக்கு.....

இவ ஒருத்தி🤦🤦🤦🤦🤦
 

NNK-29

Moderator
வந்தனா வந்துட்டாளா பிரச்சனை ஓட🙄🙄🙄🙄🙄

என்னவாம் இப்ப இவளுக்கு.....

இவ ஒருத்தி🤦🤦🤦🤦🤦
என்னனு தெரியல 😜😜😜 நன்றி dear❤️❤️❤️
 

Mathykarthy

Well-known member
குழப்பம் பண்ணவே வந்துருக்கா வந்தனா.... 😤

நைஸ் 💞
 

NNK-29

Moderator
Ennavam vanthana ku. Ivalum Aravind kooda pogurathu thana. Ipdi pesura mugathuku nera. Intha charu mind la enna oduthu
அரவிந்த் கூட தான அம்மா வீட்டுக்கு வந்திருக்கா🤣🤣🤣 நன்றி அக்கா❤️❤️❤️
 
Top