எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் 1

NNK-54

Moderator
வர்ணங்கள் 1


நிறைய வர்ணங்கள் இருந்தாலும் எல்லா வர்ணங்களுக்கும் பொதுவானது கருப்பும் வெள்ளையும்தான். நமது வாழ்க்கையில் கூட அதே போலத்தானே பலவர்ணங்கள் ,அத்துடன் சேர்ந்து கருப்பும் வெளுப்பும் கலவையாய். நிறைய நினைவுகள் கனவு போல் அவளை அந்த விடிகாலை நேரத்தில் ஆக்கிரமிப்பு செய்ய,தூக்கம் கலைந்தது.

அதிகாலையிலே விழிப்புத்தட்டியவளாக எழுந்து தன் உள்ளங்கையை பார்த்து கண்களில் ஒற்றிக்கொண்டவள் மெள்ள அருகே படுத்திருக்கும் தனது ஆறு வயது தியாவின் நெற்றியைக் கோதிவிட்டு ,சற்றுநேரம் குழந்தையின் முகத்தையே பார்த்திருந்தாள் .

இந்த அழுத்தமான முகம் அவளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் வேர்விட்டு முளைத்த காதலின் முகம்.திருமணம் முடிந்து அவனுடன் வாழ்ந்த மூன்றாண்டு காலங்களில் தினமும் அவனது முகத்தில் விழிப்பதும்,அவன் முகத்தில் பார்வை பதித்து சற்றே இளைப்பாறுவதும் பழக்கமாக இருந்தது. பிறகு, ஹ்ம்ம்..எல்லாமே ..எல்லாமே என்றால் எதையும் மிச்சம் வைக்காமல் எல்லாமே மாறிவிட்டது.

இப்போது அந்த உறவுக்கு சான்றாக மிச்சம் இருப்பது அவளது தியா மட்டும் தான். அதற்க்கெல்லாம் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. மாமனார் மற்ற வகையில் எப்படியோ, தனது மகனைத் திருமணம் செய்துகொண்டு வந்த பெண்ணை திரும்ப அனுப்பும் பொழுது நிர்கதியாய் விட்டுவிடவில்லை.

பன்னிரண்டாம் வகுப்புவரை படித்திருந்த பெண்ணை நிறையவே செலவழித்து வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க தேவையான பரீட்சைகளையெல்லாம் எழுதவைத்து நிறையவே செலவு செய்து இதோ இங்கே சிங்கப்பூருக்கு அவளது தாயாருடன் அனுப்பிவைத்தவர் பிறகும் அவள் வேலையில் சேரும்வரை விட்டுவிடவில்லை.

அவர்களுடன் வேறு எந்த தொடர்பும் இல்லைதான்.ஆனால் , மாதாமாதம் இவர்களது வாழ்க்கையை சிங்கப்பூரில் சந்தோஷமாகவே ஓட்டும் அளவிற்கு பெரும்தொகை வந்துவிடும். அதனாலேயே,தியா பிறந்ததை இன்று வரை அவர்களிடம் சொல்லவில்லை.

அங்கிருந்து கிளம்பும் முன்னே, மாமியார் அம்பிகை சொல்லி அனுப்பியதுதான். "இங்கேந்து நீ போன பிறகு எங்களுக்கு எந்த வகையிலும் பிரச்சனைகள் வரக்கூடாது.நீ எங்களை தொடர்புகொள்ளவும் முயற்சி செய்யக்கூடாது. உன்னோட வாழ்க்கை செழிப்பா அமைய நாங்க பொறுப்பு. " என்றுவிட்டு அத்துடன்,"படிக்கப்போற பெண்ணுக்கு இவ்வளவு கனமான தாலி கழுத்துல எதுக்கு?அவிழ்த்து கொடுத்துட்டு போ" என அம்மையப்பர் கோர்த்த தாலி சரடையும் கையுடன் வாங்கிவைத்துக்கொண்டாள்.

அவர்கள் மனதில் சிறு உறுத்தல் கூட இல்லையா என்று நமது கதையின் நாயகி சுபாவுக்கும் கூட மனது அடித்துக்கொண்டது. அவர்கள் மகன் கட்டிய தாலி. அதற்கு ஒரு மரியாதை உண்டு தானே!மகன் நல்லபடியாக இருக்கும் பொழுது இப்படி நடந்து கொள்கிறார்களே என்று வருத்தம். மகளை அழைத்துச் செல்லவென்று வந்த சுபாவின் அம்மா ராதாவுக்கும் கூட அதிர்ச்சி. ஆனால்,பணமும் அந்தஸ்தும் பெரியதாக தெரியும் அந்த ராஜ வம்சத்து ராணிக்கு அவையெல்லாம் பெரியது கிடையாது போலும்.

அப்போதும் மாமனார் மனம் கொஞ்சம் சஞ்சலப்பட,நான்கு பவுனில் ஒரு சங்கிலியை கொடுத்து "கழுத்துல போட்டுக்கோ சுபா .வெறும் கழுத்தோட இருக்க வேண்டாம்"என்றதுடன் அவள் கைகளில் இருந்த வளையல்களையும் கழற்ற அனுமதிக்கவில்லை.
அவளைத் தனியே அழைத்து சென்றவர்," அம்பிகா தாலிய கழற்றி வாங்கிட்டாளேன்னு யோசிக்காதே சுபா. இங்கேந்து நீ சிங்கப்பூர் போக போறே. மேலே நீ படிச்சு சுயமா வாழ உனக்கு தகுதிகளை வளத்துக்கோ. உன்னோட சுயகால்ல நீ நிக்குற வரைக்கும் நா உன்னோட செலவுகளை பார்த்துப்பேன். பின்னாலே உனக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமைய இந்த கல்யாணம் தொடர்பான எந்த விஷயங்களும் தடையா இருக்கக் கூடாது" என்றுவிட்டு அவளை வெளியே அழைத்து வந்தார்.

அங்கிருந்து கிளம்பும் பொழுது அவள் வயிற்றில் தியா இரண்டு மாத கரு. தான் கர்ப்பிணி என்பதே சுபாவுக்குத் தெரியாது. இருந்த களேபர நிலையில் அதையெல்லாம் சிந்திக்க அவளால் இயலவில்லை.அவளது வயதும் அதற்க்கு ஒரு காரணம்.

விமான பிரயாணத்தில் நல்லவேளையாக வயிற்றில் இருந்த சின்ன உயிருக்கு எதுவும் ஆகவில்லை . சுபாவின் மாமனார் சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து இவர்களை அழைத்து செல்லவும் ,இவர்கள் இனி அந்த நாட்டில் தங்குவதற்கும் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

சுபாவின் மனம் சந்தோசம் கொள்ளவில்லை. மனம் முழுதும் பாரம்தான். தன்னை அனுப்புவதில் இவ்வளவு தீவிரம் என்று அவளுக்குள் கசந்தது. இன்னும் கல்லூரி செல்ல மூன்று மாதங்கள் இருக்கிறது. ஆனால் ,முன்னரே கிளம்புவதற்கு அவளது மாமியார் ஆணை பிறப்பித்து விட்டாள் .

முதல்நாள் இரவு தன்னை இறுக்கி அணைத்து கொண்டு உறங்கிய கணவனின் வாசத்தை அவள் நுரையீரல் மீண்டும் சுவாசிக்க ஏங்கியது. இருவருக்குள் காதல் எல்லாம் இல்லை. வீட்டில் பார்த்து செய்துவைத்த திருமணம் தான். திருமணம் முடிந்து மூன்றாம் ஆண்டு ஆரம்பிக்கும் வரை இவளது அறை தனியாகத் இருந்தது. பகலில் மட்டும் அவனுடன் இருப்பாள். நடுவில் சில பயிற்சி வகுப்புகளுக்கும் அவளது மாமியார் ஏற்பாடு செய்து அவளை படிக்கவென அனுப்பிவிடுவார்கள்.

ஆரம்பத்தில் அவனும் அவளுடன் பேசியது இல்லை. பாதி நேரம் எதையோ இழந்தது போல் இருப்பான். சில சமயங்கங்களில் தானே பியானோ வாசிப்பான்.இவளை பார்த்ததும் அவனது முகம் யோசனையாக மாறிவிடும்.தினமும் அவனுக்கு ஷேவ் செய்து விட்டு குளிக்க வைக்க இருவர் வருவார்கள். அவர்களிடமும் ஏதும் பேச மாட்டான்.

சுபாவுக்கு அவனைப் பார்த்தாலே கைகள் வேர்த்து விடும். பயத்தில் கால்கள் நடுங்கும்."என்னை எதற்கு இப்படி ஒருவருக்கு திருமணம் முடித்தீர்கள் அப்பா "என்று ஏற்கனவே பலகோடி முறை மனதில் தன் அப்பாவிடம் கேட்ட கேள்வியை மனதோடு மீண்டும் கேட்பாள்.

கொஞ்ச மாதங்கள் இவளை வெற்றுப்பார்வை பாத்தவன் ,பிறகு ஒருநாள் இவளிடம் "நாம செஸ் விளையாடலாமா"என்று கேட்டு வைத்தான். இவளோ மென்று விழுங்கி " எனக்கு அதெல்லாம் விளையாட தெரியாது "என்று பதில் சொன்னாள் .

அன்றிலிருந்து அவனே ஆசானாகி அவளுக்கு செஸ் விளையாடக் கற்றுக் கொடுத்தான்.பிறகு இருவரும் செஸ்,கேரம் என்று விளையாடுவார்கள். நீந்தவும் கூட கற்றுக்கொடுத்தான். இவளுக்கு ஆரம்பத்தில் உடல் சிலிர்த்தாலும், அதை புரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை. இவளுக்கு என்ன செய்வது என்று புரியாது. குழந்தையாக பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தவள் கட்டாயமாக குமரியாக்கப்பட்டு , கையோடு திருமதியும் ஆக்கப்பட்ட கதையை என்னவென்று உரைப்பது!

பியானோவும் கூட வாசிக்க அவளுக்கு கற்றுக்கொடுத்தான். ஒரு மனைவியாக தனது கணவனின் அழகையும் கம்பீரத் தோற்றத்தையும் அவள் அருகே இருந்து ரசித்திருக்கிறாள். கணவனாக அவனால் அதை உணர முடியவில்லை. ஆரம்பத்தில் ஜெயந்தனுக்கு மனம்நிலை பாதிப்பு இருக்கிறது என்பதை சத்தியம் செய்தால் கூட அவள் நம்பத் தயாராக இல்லை.திருமணம் நடந்த அன்று விடிகாலை முகூர்த்தம்.அரை தூக்க நிலையில் இருந்தாள் பதினெட்டு வயது சுபா. முதல் நாள் தான் அவளுக்கு பிறந்தநாள் முடிந்திருந்தது.

அங்கே எஸ்டேட்டில் சூப்பர்வைசராக வேலை பார்த்துக் கொண்டிருந்த சுதாகரின் மகள் தான் சுபா. அவர் தனது மனைவியின் மருத்துவ செலவுக்காக வாங்கியிருந்த கடன் தொகை அவரால் இந்த ஜென்மத்தில் அடைக்க முடியாத அளவுக்கு கடந்து போக ,தொகைக்கு ஈடாக தனது மனம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மனைவியாகும் படிக்கு பணிக்கப் பட்டாள் பெண். என்னவென்று புரியாவிட்டாலும் அவளது அம்மா அழுத அழுகையும்,அப்பா தலை குனிந்து நின்ற நிலையம் சுபாவை உலுக்கியது.

அப்பாவுக்கு வேறு வழி இல்லை என்பதுவும் தெளிவாக புரிந்தது. அப்போதும் மாமனார் பக்காவாக சிலவற்றை எழுதி அவர்கள் மூவரிடமும் கையொப்பம் வாங்கிக்கொண்டார். முற்றிலுமாக உடைந்து போனார்கள் சுபாவின் பெற்றோர்.

அதுவரை பெற்றோரின் அணைப்புக்குள் இருந்தவளுக்கு பயம் வந்தது. திருமணம் அன்று விடிகாலை நான்கு மணிக்கு ஜெயந்தனின் வீடே கல்யாண கோலம் பூண்டிருந்தது. மணப்பெண் அலங்காரத்தில் வானுலக தேவதை எனும் அளவுக்கு அலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள் சுபா. ஏறத்தாழ அரைமணி நேரத்திற்கு பிறகு மணமகன் அலங்காரத்தில் அவள் அருகே வந்து அமர்ந்தான் ஜெயந்தன்.

மந்திரங்கள் சொல்லும் நிலையில் அவன் இல்லை.அப்போதும் வெற்றுப்பார்வை மட்டும் பார்த்திருந்தான். கல்யாணத்தை நடத்திக்கொடுக்க வந்த அய்யரே எல்லா மந்திரங்களையும் ஓதி , திருமாங்கல்யம் கோர்க்கப் பட்டிருந்த பத்து பவுன் சங்கிலியை ஜெயந்தன் கைகளில் கொடுக்க, சுபாவை முகம் கூட பாராமல் அவள் கழுத்தில் அணிவித்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.

அடுத்து என்ன என்றே புரியாது அங்கேயே கற்சிலை போல அமர்ந்திருந்த நிமிஷங்கள் இவ்வளவு வருஷங்கள் ஆன பிறகும் அவள் மனதை விட்டு அகலவில்லை. அன்று அவளை அப்படி பார்த்தவன் எந்த நிமிஷம் மனைவியாகப் பார்த்தானோ..அந்தக் கணம் அவளது உயிராகி போனான்.

தெரியும்,தனது நகங்களில் அழுக்கு படிந்தால் கூட அவனால் தாங்கவியலாது .அப்படிப்பட்டவன் பலபடிகள் கீழே இருக்கும் தன்னை மறந்தும் மனைவியாக ஏற்கும் மனதுடையவனாக இருக்க வாய்ப்பில்லை ,அவன் சுய நினைவோடு இருந்திருந்தால். மருத்துவ ஆலோசனையின் பேரில் அவனுடன் நெருங்கும் அளவில் பெண் வேண்டுமென தன்னை திருமணம் முடித்து அங்கே கூட்டி வந்த அன்றே தனது தாயார் மூலம் மாமியார் சொன்னது,கவனமாக இருந்துகொள்,சேதாரத்திற்கு நாங்கள் பொறுப்பு எடுக்க முடியாது என்பதைத்தான். ஆனால்,கணவனது இறுகிய அழகிய அணைப்பு அவளை அவனை விட்டு தள்ளியிருக்க அனுமதிக்கவில்லையே!

அவனோடு பகிர்ந்து கொண்ட அநேக தருணங்கள் அவன் தன் கணவன்தான் என்பதை அவளது குழந்தை மனதில் பதிய வைத்திருகையில் எவ்வாறு அவனை அவள் மறுக்கக் கூடும்?
இதோ,இப்போது அவளது ஆம்,அவளது புனிதமான காதலின் அடையாளமாக அவளது மகள் இருக்கிறாளே? அம்மா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் குழந்தையை கரு கலைக்க அவள் ஒப்புக் கொள்ளவில்லை.

இப்போது அவன் பார்க்க எப்படி இருக்கிறானோ ..புத்தி தெளிந்திருக்கும் .வேறு திருமணம் கூட முடிந்திருக்கலாம். சுபாவுக்கும் ஜெயந்தனுக்கும் பத்து வருஷங்கள் வித்தியாசம் என்று அங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்த சின்னம்மா சொல்லியதாக ஞாபகம். இப்போதும் அதே கம்பீரமும்,அழகும் ஆண்மையுமாக இருப்பானா?இன்னம் அழகாக இருப்பான் என்று மயங்கியது மனது.

மாற்றான் தோட்டத்து மல்லிகை ,மணந்தால் என்ன?இல்லாவிட்டால் என்ன?எனக்கு அவர் என்றும் கிடைக்கப் போவது இல்லை என்றெல்லாம் அவளது எண்ணங்கள் ஏதேதோ யோசித்தது.

தன்னை மீட்டுக்கொண்டவளாக அடுக்களைக்குள் சென்று காலை வேலையை தொடங்கினாள்.அம்மா இன்னமும் எழுந்திருக்கவில்லை. இவள் ஒன்பது மணிக்கு குழந்தையை பள்ளியில் விட்டு ,தானும் அலுவலகம் சென்றாக வேண்டும். மந்தம் தட்டிய மனதை ஆறுதல் படுத்த தனக்காக காபியை வார்த்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள் . சோஃபா வில் அமர்ந்து அதை ரசித்து பருகினாள் .

இன்று இங்கே இருப்பது மொத்தமும் அவளது சுய உழைப்பில் வாங்கியது. யாரும் அவளுக்காக கொடுத்தது இல்லை என்ற எண்ணமே அவளை கர்வமாய் நிமிர்ந்து அமரச் செய்தது. காலை ஆறு மணிக்கு நிதானமாய் எழுந்து வந்த அவளது மகள் தியா மீண்டும் சுபாவை தனது கணவனின் ஞாபகத்தில் மெல்லிய சிரிப்பை உதிர்க்கச் செய்து அம்மா மடியில் சாய்ந்து சிறிய தூக்கத்தை தொடர்ந்தாள் .

 
Top