எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 3

S.Theeba

Moderator
காதல் 3

தனது கால்கள் தரையுடன் வேரோடி விட்டதோ என்னும் அளவிற்கு அவளால் அசையக்கூட முடியவில்லை. அவனைக் கண்டதில் அதிர்ச்சி அடைந்த மனதின் ஒரு மூலையில் சிறியதாக சந்தோஷம் குமிழியிட்டதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. எவ்வளவு நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்றாளோ தெரியவில்லை. ஆனால், அந்தக் குறுகிய நேரத்திலேயே அவளது மனதை ஆயிரம் கேள்விகள் குடைந்தன.

“ஹலோ மிஸ், ம்கூம்… மிஸ்ஸிஸ் நிஷாந்தினி” என அவன் அந்த மிஸ்ஸிஸ் என்பதில் அழுத்தம் கொடுத்து அழைக்கவுமே நடப்புக்கு வந்தாள். அவன் முகத்தில் எந்தவித சலனமும் இன்றி தன்னை அழைத்து விட்டு நின்றதைக் காண அவளுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. எனினும் கோபமே அதிகளவில் அவளை ஆட்கொண்டது. தப்பு செய்த அவனே இவ்வளவு நிமிர்வோடு நிற்கும் போது நான் மட்டும் ஏன் தடுமாற வேண்டும் என்று தனக்குத் தானே ஒரு குட்டை வைத்தவள் நிமிர்ந்து நின்றாள்.
அவளை மேலும் கீழும் ஒரு தடவை பார்த்தவன்,
“ம்ம்… வாழ்க்கையும் ஒரு சக்கரம் தான் இல்லையா? வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு எவ்வளவு தொலைவு நீ போனாலும் இந்த வாழ்க்கை நம்மை மீண்டும் சந்திக்க வைக்கின்றதே.
அமெரிக்காவில் இருந்து எப்போது வந்தாய்? எங்கே உன் கனவு நாயகன்? பரவாயில்லை அமெரிக்கா சென்று வந்தும் பாரம்பரியம் மாறாமல் இருக்கிறாய்.” என்றான்.

அவன் கேட்பது புரியாவிட்டாலும் அவனுக்குப் பதில் சொல்வது பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதை விட கோபத்தையே அவன் கேள்விகள் வரவழைத்தன என்பதே உண்மை.

அதே கோபத்தோடு “மாப்பிள்ளையிடம் இதைக் கொடுத்து விடச் சொன்னார்கள்..” என்று கூறி கையில் இருந்த தட்டை அவன் கையில் வைத்து விட்டு திரும்பி அவ்விடத்தை விட்டு வேகமாக சென்று விட்டாள்.

அங்கிருந்து வந்தவளுக்கு மனம் பெரும் படபடப்பாக இருந்தது. அவள் மனம் இருக்கும் நிலையில் மணவறைப் பக்கம் செல்லவே பிடிக்கவில்லை. கோயிலை விட்டு வெளியில் வந்தவள், கோயிலின் வெளிவீதியில் நின்ற ஆலமரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் மேடையில் சென்றமர்ந்தாள்.
'எனக்கு இவ்வளவு பெரிய அநியாயத்தை இழைத்து விட்டு எந்தவித குற்றவுணர்வும் இன்றி அவன் எப்படி இயல்பாக நிற்கின்றான். எனக்கு மட்டும் ஏன் இந்த தவிப்பு. அவன் மீது நான் கொண்ட காதல் ஒரு துளி கூடக் குறையாமல் இருக்கின்றதே.’ எனத் தனக்குள் மருகினாள்.

மனதின் ஒரு ஓரத்தில் தாங்க முடியாத ஏமாற்றமும் ஏற்பட்டு அவளை வேதனைப்படுத்தியது. எவ்வளவோ நாட்களுக்குப் பின் அவளை நேரில் கண்டும் அவன் எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தவில்லையே.
ச்சு… அவனுக்கு அவளது பெயர் நினைவு இருந்ததே ஆச்சரியம்தான். இந்த ஆறு ஆண்டுகளில் அவன் வாழ்வில் எத்தனை பேர் வந்து போனார்களோ? அவனுக்கு காதல் என்பது விளையாட்டாகி விட்டது. ஒருவர் இல்லாவிட்டால் இன்னும் ஒருவர் என சட்டையை மாற்றுவது போல மாற்றிக் கொண்டு இருக்கின்றானே.
இவன் இங்கே எப்படி? தாரணியை மணமுடிக்கப் போகும் மாப்பிள்ளை இவனா? அவன் திருமணம் முடிக்க போவதாக இருந்த அந்தப் பேரழகி சம்யுக்தா என்னவானாள்?'
விடை தெரியாத பல கேள்விகள் அவளுள்ளே சுழன்றடித்தன.
எல்லாவற்றையும் விட அவனைக் கண்டதும் தன் மனம் ஒருவித பரவசத்தை உணர்ந்ததை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. என்ன பாழாய்ப் போன காதல்…
' அவன் எல்லாவற்றையும் மறக்கலாம். ஆனால் அவன்மீது கொண்ட காதல் அவளை எங்கெல்லாம் துரத்தியது… எப்படியெல்லாம் அவளைத் தண்டித்தது… சுபிக்ஷா மட்டும் இல்லையென்றால் நிஷாந்தினி என்றோ இல்லாமல் போயிருப்பாள்.
அவள் பழைய நினைவுகளில் கரைந்து போவதற்கு அந்த மங்கல ஒலி தடை போட்டது. கெட்டிமேளம் சத்தம் கேட்கவும் நிகழ் உலகிற்கு வந்தவள் ஒரு நொடி உறைந்து போனாள். அவன் இந்நேரம் தாரணியின் கழுத்தில் தாலியைக் கட்டியிருப்பான். நெஞ்சை ஏதோ பிசைவது போன்ற உணர்வு தோன்றியது. அதை ஒதுக்கிவிட்டு தன்னையறியாமல் மண்டபத்தை நோக்கி நடைபோட்டாள்.

அங்கே தாலி கட்டி முடித்தானதும் மணமகன் மணமகளின் கால் விரலில் மெட்டி அணிவிக்கும் சடங்கு நடந்துகொண்டிருந்தது. கண்களில் கண்ணீர் திரையிட மேடையை நோக்கினாள். அங்கே தாரணி முகமெல்லாம் பூரிப்பும் வெட்கமும் நிறைந்து மிக அழகாகக் காணப்பட்டாள். அவன் குனிந்து அவளுக்கு மெட்டியை அணிவித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தை அவளால் சரியாகக் காணமுடியவில்லை.

கண்களில் கண்ணீர் வழிந்தோட அதை யாரும் அறியாமல் நாசூக்காகத் துடைத்து விட்டாள். அப்பொழுது அவளுக்குப் பின்னால் நின்ற யாரோ மெதுவாகக் கனைக்கவும் சுதாரித்து சற்றுத் தள்ளி நின்றாள். அப்போது பின்னால் நின்றவர் அவள் காதருகில் குனிந்து
“எதற்கு இந்த அழுகை?” என்று கேட்கவும் தூக்கிவாரிப் போட சட்டென்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். அங்கே நின்றது தனஞ்சயனேதான்.. நம்பமுடியாமல் மணமேடையைத் திரும்பிப் பார்த்தாள். அங்கே மணமகனாக வேறு ஒருவன் நின்றான்.
மீண்டும் தனஞ்சயனைத் திரும்பி பார்க்கவும், அவன் ஏதோ பேச முற்படவும் அங்கே வந்த சிறுவர்கள் குழுவொன்று இருவருக்கும் இடையில் புகுந்து ஓடியது. அவர்களுடன் ஓடிய சுபி இவளைக் கண்டதும்
“அம்மா.. வாசுகி ஆன்டி உங்களைத் தேடினார்கள்” என்று நிற்கக்கூட இல்லாமல் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.
மகள் ஓடுவதைப் பார்த்துவிட்டு அவள் திரும்பவும்,
“ம்ம்… இது உன் மகளா? அப்போ ஹஸ்பன்ட் எங்கே? அவரை அறிமுகப்படுத்த மாட்டாயா?” என்றவன் கேட்கவும் தாரணியின் தமக்கை வாசுகி அவளைத் தேடி அங்கே வரவும் சரியாக இருந்தது.
“நிஷா, பொண்ணு மாப்பிள்ளையை வீட்டுக்கு கூட்டி வரப் போறோம். நீ முன்னமே வீட்டுக்குப் போய் வரவேற்புக்கு எல்லாம் ரெடியாச்சா என்று பாரம்மா. அப்படியே பந்திக்கும் ரெடி பண்ணச் சொல்லிவிடம்மா” என்று கூறிவிட்டு சென்றாள்.
தனஞ்சயன் கேள்வியோடு அவளைப் பார்த்திருக்க ஒன்றும் கூறாது சென்றவள் மகளைக் கையோடு அழைத்துக்கொண்டு தாரணியின் வீட்டிற்குச் சென்றாள்.
வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்துவிட்டு தாமதிக்காது தனது வீட்டிற்குப் புறப்பட்டாள்.
“ஏம்மா நாம வீட்டுக்குப் போறோம். எல்லாரும் கோயில்ல இருக்காங்களே. நாம மட்டும் ஏன் போறோம்.”
“சுபிக்குட்டி, அம்மாக்கு உடம்புக்கு முடியல. தலை வலிக்குதுடா.”
எனவும் குழந்தையும் தாயின் மனம் கோணாமல் அவளுடனேயே சென்றது.

???

அங்கே கோயிலில் நின்றிருந்தவனது உள்ளமோ பெரும் வேதனையில் துவண்டது. ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். ஆனால், இன்று கண்ணெதிரே காணவும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் முரண்டியது.
தான் கேட்ட கேள்விகள் எதற்குமே பதில் சொல்லாது அமைதியாய் சென்ற அவளது மௌனம் அவனை வாட்டியது. இறுகிப் போய் நின்றவனது வெளித் தோற்றம் எதையும் காட்டாத போதும் உள்ளே பெரும் தீயாய் கோபம் கனன்று கொண்டிருந்தது.
‘அவளால் மட்டும் எப்படி முடிந்தது. அவள் என்னை விட்டு போய்விட்டாள் என்று தெரிந்தபின்னும் அவளை மறக்க முடியாமல் இன்று வரை வாழ்கின்ற நான் உண்மையில் முட்டாள்தான்.
‘அவளது மகளுக்கு எப்படியும் நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும். அப்படியென்றால் அவள் என்னை விட்டு பிரிந்தவுடனேயே அவனைக் கல்யாணம் பண்ணியிருக்காள். எப்படி அவளால் மட்டும் சாத்தியமானது.’ என்று தனக்குள்ளேயே மருகினான்.

கோயிலில் சடங்குகளை எல்லாம் முடித்துக்கொண்டு தாரணியின் வீட்டிற்கு உறவுகள் எல்லாம் வந்து கூடின. அங்கே விருந்து அமர்க்களப்பட்டது. அவை எதிலும் கலந்துகொள்ளாமல் அந்த இடம் முழுவதும் சுற்றித் திரிந்தான் தனஞ்சயன்.

அவள் இப்போது தனக்கானவள் இல்லை என்று அறிவு எடுத்துரைத்த போதும் மனம் அதனை ஏற்காது அவளைத் தேடியது. அங்கு எங்குமே அவளைக் காணவில்லை எனவும் மனம் வாட சோர்ந்து போய் அமர்ந்து விட்டான்.
 
Top