எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திருந்தி விட்டேன்! திமிர் பிடித்தவளாக! - அத்தியாயம் 18

NNK-64

Moderator

அத்தியாயம் 18​

காரை நிறுத்திவிட்டு அவசரமாக உள்ளே மருத்துவமனைக்குள் நுழைந்தவளை அதிர்ச்சியாக பார்த்தார் நிரஞ்சனுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்.​

“என்ன மிஸஸ். நிரஞ்சன் வேலை நேரத்தில் வந்திருக்கீங்க. இரவு நேரங்களில் தானே வந்து பார்த்துப்பீங்க” என்றார் பதட்டமாக​

“ஏன் இப்போ வந்து பார்த்தால் என்ன? வரக்கூடாதா?” என்று இடக்காக கேட்டாள் எழிலழகி​

“உஉங்க வேலையை விட்டுட்டு வந்திருக்கீங்கனு கேட்டேன்” என்றார் அவர் பதட்டத்தை மறைத்தபடி​

“உங்க அக்கறைக்கு நன்றி. என் கணவரை விட எனக்கு வேலை முக்கியமில்லை. ஆமா நீங்க ஏன் இவ்வளவு பதட்டபடறீங்க? உங்க முகம் எல்லாம் ஏன் வியர்த்திருக்கு?” என்றாள் ஆராய்ச்சியாக அவரை பார்த்து.​

கர்சிப்பால் தன் முகத்தை அழுந்த துடைத்தவர், “அஅஅப்படி எல்லாம் இஇல்லையேய” என்றார்.​

எதுவோ சரியில்லை என்று தோன்றியது. சரி அவரைப் பற்றி நமக்கு என்ன என்று நினைத்தவள் நிரு அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றாள். அங்கே அவன் இல்லை.​

திரும்பி பார்த்தாள், “எங்கே அவர்? எதாவது ஆபரேஷன் என்று சொல்லி கிட்னி எதாவது திருடறீங்களா?” என்றாள் அதட்டலாக உள்ளே இருந்த பயத்தை காட்டாமல்.​

“அய்யோ மேடம், என்ன வார்த்தை சொல்லிட்டீங்க, யாராவது கேட்டால் என்ன நினைப்பார்கள்? வாங்க அவர் இருக்கும் அறைக்கு கூட்டிட்டு போறேன்” என்று முன்னால் நடந்தார் மருத்துவர்.​

விருந்தினர் அறையில் பேச்சுக் குரல் கேட்டது. நிரஞ்சன் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான். மருத்துவர் அந்த அறை வாசலில் மெதுவாக நின்றார்.​

“கெளதம்! வாடா மச்சான், ஏன்டா அங்கேயே நின்னுட்ட” என்றான் நிரஞ்சன்.​

“மீரா என்ன சொல்றானு கேளேன்” என்றான் மீண்டும்​

டாக்டர் கெளதம் பக்கவாட்டில் பாவமாக திரும்பி பார்த்தான். எழிலழகி அவனையே முறைத்துக் கொண்டு நின்று இருந்ததால் கெளதம் எதுவும் பேசாமல் திருதிருவென்று விழித்தான்.​

“டேய் மச்சான் நீ இப்பவே இப்படி திருடன் மாதிரி முழிச்சேனா, கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்து என்னோட மெடிகல் ரிப்போர்ட் கேட்டால் என்னடா செய்வ?” என்று கேட்டபடி வெளியே வந்தான் நிரஞ்சன்.​

அப்போதும் கெளதம் சிலையாக நின்றிருக்க, யோசனையுடன் பக்கவாட்டில் திரும்பி பார்த்தான், எழிலழகி செங்காந்தள் மலராக கோபத்தில் சிவந்த முகத்துடன் நின்றிருந்தாள்.​

அடிப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இலகுவான உடையில் ஒய்யாரமாய் நின்றிருந்த கணவனை ஏற இறங்க பார்த்தாள்.​

நிரஞ்சனுக்கு புரை ஏறியது.​

“என்னடா இரண்டு பேரும் பேயறைஞ்ச மாதிரி நிக்கறீங்க?” என்று கேட்டபடி மீரா வந்து நின்றாள்.​

அவளும் அந்த நேரத்தில் எழிலழகியை எதிர்பார்க்காததால் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தாள்.​

“இந்த விபத்தே ஒரு நாடகம், அப்படித்தானே?” என்றாள் மூவரையும் முறைத்து பார்த்து.​

மூன்று பேரும் ஒரே நேரத்தில் தலைகுனிந்தனர். அவர்களிடம் மேலும் பேச பிடிக்காமல் வெளியே நடந்தாள்.​

“அழகி நில்லு, உன்கிட்ட பேசணும்” என்றான் நிரஞ்சன்.​

அவன் பேச்சை காதில் வாங்காமல் வெளியே சென்றவள் காரில் ஏறி போய்விட்டாள்.​

அதிர்ந்து போய் நின்றவனின் தோள்களை அழுத்தினான் கெளதம், “கடைசி நேரத்தில் சொதப்பிச்சே டா? எப்படி தெரிந்திருக்கும்?” என்றான் யோசனையாக.​

“சிம்பிள் போலீஸ் என்னோட கார் நம்பரை டிராக் பண்ணி என்னை கண்டுபிடிச்சி சொல்லி இருப்பாங்க. நானும் ரஞ்சனும் ஓரே காலேஜ்னு தெரிந்திருக்கும். அதுதான் இவனை விசாரிக்கலாம்னு வந்திருப்பாள்” என்றாள் மீரா​

“டேய் உன் மனைவி போலீஸூக்கு எல்லாம் போக மாட்டாள், ரொம்ப பயந்தவள்னு சொன்னியேடா?” என்று கேட்டான் கெளதம்​

“இடையில் அந்த ராஜூ அலுவலகத்திற்கு போய் உளறியதால் அவன் மேல் சந்தேகப்பட்டு போலீஸில் சொல்லியிருக்காள், இதை நானே எதிர்பார்க்கலை. எல்லாம் சரியா முடிஞ்சதும் நானே வீட்டுக்கு போய் சொல்லலாம்னு இருந்தேன்.​

இப்போ முன்னாடியே அவளுக்கு தெரிஞ்சிட்டதால் எப்படி ரியாக்ட் பண்ணுவாள்னு தெரியலையே மச்சான்” என்றான் நிரஞ்சன் பயந்த குரலில்.​

“முன்னாடியே பராவாயில்லை. இப்போ அப்படி இல்லை, ஆபிசில் உன் மனைவி எல்லாரையும் லெப்ட் அன்ட் ரைட் வாங்கறாள்னு கேள்வி பட்டேன். உனக்கு தர்ம அடி கன்பர்ம்” என்று கலகலவென்று சிரித்தாள் மீரா.​

அதைக் கேட்டு கெளதமும் சத்தமாக சிரித்தான். “மச்சான் நீ அவங்க கிட்ட அடி வாங்கிற மாதிரி நினைத்து பார்த்தாலே சிரிப்பை அடக்க முடியலைடா” என்றான்.​

“உங்களை எல்லாம் அப்புறம் கவனிச்சிக்கிறேன்” என்று இருவரையும் முறைத்துவிட்டு கிளம்பினான் நிரஞ்சன்.​

“டேய் ரஞ்சு, ஹாஸ்பிட்டல் பில்லை கட்டிட்டு போடா” என்று பதறிக் கொண்டு நிரஞ்சன் பின்னால் ஓடினான் கெளதம்.​

திரும்பி பார்த்து தன் கையில் மூன்று விரல்களை நெற்றியில் நாமம் போல போட்டு காட்டிவிட்டு வெளியேறினான் நிரஞ்சன்.​

“அய்யோ மூன்று மாதம் தங்கி என் உயிரை வாங்கிட்டு, பில்லை கூட செட்டில் பண்ணாமல் போறான் பாரேன். மீரா நீயாவது?” என்று அவன் முடிக்கும் முன்.​

“கெளதம் என் உட்பி போன் செய்றார், நான் உன்னை அப்புறமா பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் மீரா.​

அடப்பாவிங்களா? நீங்கெல்லாம் ஒரு பிரெண்ட்ஸா? என்று புலம்பிக் கொண்டு அவன் கணக்கிலிருந்து ஹாஸ்பிட்டல் பில்லை கழித்துக் கொள்ளும் படி அக்கெளண்ட் பிரிவில் சொல்லிவிட்டு வேலையை பார்க்க சென்றான் கெளதம்.​

காரை கோபமாக ஓட்டிக்கொண்டு வந்தவளிடம் பார்வதி, “நிரஞ்சனுக்கு நாளைக்கு தானே டிஸ்சார்ஜ். வரும் போது சொல்லு போன் பண்ணி சொல்லிடு, நான் ஆரத்தி கரைச்சு வைக்கிறேன்” என்றார்.​

“தேவைப்படாது பாரும்மா, அவரே இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாரு” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று நீள் இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்தாள்.​

பத்து நிமிடத்தில் நிரஞ்சன் ஆட்டோவில் வந்து இறங்கினான்.​

அவசரமாக உள்ளே சென்ற அவனை தடுத்து நிறுத்தி “ஏன் இரண்டுபேரும் தனித்தனியாக வந்து இறங்கறீங்க, உங்க மனைவியோட கார்லயே ஒண்ணா வந்திருக்கலாம் தானே” என்றார் பார்வதி​

“அவளுக்கு டபுள்ஸ் ஓட்ட வராதாம் பாரும்மா” என்றான் நிரஞ்சன்​

“ஓஹோ” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டான்.​

“காரில் எங்க இருக்கு டபுள்ஸ் பிரச்சனை? என்னவோ மிதிவண்டியில், இருசக்கரவாகனத்தில் டபுள்ஸ் ஓட்டவராது என்பது போல சொல்லிட்டு போறாரே” என்று பலமாக யோசித்தபடி தன் வீட்டிற்குள் சென்றார் பார்வதி.​

உள்ளே சென்றவன் இருட்டில் அமர்ந்திருந்த மனைவியை பார்த்தபடி மின்விளக்கை ஒளிரவிட்டான். அதில் அவள் கண்கள் ஒருகணம் கூசி சுருங்கியது.​

“அழகி” என்றான் கொஞ்சலாக.​

பதில் இல்லாது போகவும், அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் தோளில் கைப்போட்டான்.​

“அழகி, என் மேல் கோபம் என்றால் திட்டிடுடி, அடிக்கணுமா அடி, பேசாமல் இருக்காதே” என்றான்.​

“ஏன் இப்படி செய்தீங்க” என்றாள் கண்களை திறக்காமலே.​

“உன்னிடம் பலமுறை சொல்லிட்டேன், திமிரழிகியா மாறு மாறுனு. நீயோ மாறுவதாக தெரியலை. உன்னை விட்டுட்டு மருத்துவமனைக்கு போனால் கூட, உன்னைப் பற்றிய சிந்தனையாகவே இருக்கு. எப்படி இருக்கியோ, எந்த பிரச்சனையிலாவது மாட்டிப்பியோனு தோணிட்டே இருந்தது”​

“உனக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கணும், தனியாக பிரச்சனையை கையாளறத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அதில் உன்னை சிக்க வைத்தால் நீ சமாளித்து தானே ஆகணும். அப்போ தான் உனக்கு தைரியம் வரும்னு தோணுச்சு.​

செல்வநாயகம் அங்கிள் தொழிலாளர்நலவாழ்வு மையம் அமைத்து செயல்ப்படுத்த ஒரு ஆள் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.​

என் கல்லூரி தோழியான மீரா என்னோட வேண்டுகோளுக்காகத்தான் அவர் ஆபிசில் தற்காலிகமாக வேலைக்கு சேர்ந்தாள். அதனால் தான் நான் உன்னை அங்கேயே வேலைக்கு போக சொன்னேன்.​

அவளுடன் பழகினால் உனக்குள் ஒரு மாற்றம் வரும் என்று நம்பினேன். நீ தயார் ஆனதும் உன்னை அந்த இடத்திற்கு அப்பாயின்மென்ட் பண்ண சொல்லி செல்வநாயகம் அங்கிள் கிட்ட சொன்னேன்.​

என்னதான் நானும் மீராவும் சொல்லிக் கொடுத்தாலும், தைரியம் என்பது தானாக அனுபவத்தில் வருவது. சிலது சொல்லி புரிவதில்லை. அதற்கான அனுபவம் உனக்கு வரும்வரை காத்திருக்கும் பொறுமையும் என்னிடம் இல்லை.​

என்னையே நீ சார்ந்து இருக்கிற வரைக்கும் உன் கூட்டிலிருந்து வரமாட்டேனு தான் ஆக்சிடென்ட் ஆகிறமாதிரி ஒரு டிராமா பண்ணேன். என்னை நீ எந்தளவு நேசிக்கிறாய் என்று எனக்கு தெரியும். எனக்கு ஒன்று நடந்தால் சூழ்நிலையை சமாளிச்சி, என்னையும் காப்பாத்த நீ போராடுவனு நம்பிக்கை இருந்தது.​

மீராவையும் கெளதமையும் இதில் நான் தான் கட்டாயப்படுத்தி செயல் பட வைத்தேன். மீரா என் காரை இடிக்கவும் ராஜூவோட கார் கிளம்பிடுச்சு. அவன் போனதும் நானே காரின் முன்பக்க கண்ணாடியை உடைச்சிட்டு ஆளரவமற்ற சாலையில் அடிப்பட்ட மாதிரி படுத்துக் கொண்டேன்.​

வண்டி குலுங்கியதில் நீ காருக்குள்ளேயே விழுந்து தலையில் லேசாக அடிப்பட்டிருக்கு. நீ எழுந்து 108 க்கு போன் செய்து முழுவிவரம் தராமல் பதட்டத்தில் மயங்கிட்டே. எங்க பிளான் படி மீரா எங்களை என் பிரண்டோட மருத்துவமனையில் அட்மிட் செய்தாள்.​

நீ அங்கேயே இருந்தால் எங்க ப்ளான் ஒர்க்அவுட் ஆகாதுனு கெளதம் ஏதேதோ சொல்லி உன்னை கிளப்பினான். ஆனாலும் நீ இரவில் இங்கே வருவதாக சொன்னதால், நானும் உனக்கு முன்னாடி மருத்துவமனைக்கு வந்து படுத்திருப்பேன். நீ போனதும், நான் என் வேலையை பார்க்க சென்று விடுவேன்.​

உன்னுடைய மாறுதலைப் பற்றி மீரா எனக்கு அவ்வப்போது தகவல் அளிப்பாள். ராஜூவிடம் நீ நடந்துக் கொண்டதை கேட்டபின் இனி இந்த நாடகத்தை முடிவிற்கு கொண்டுவர எண்ணி மறுநாளே கண்விழித்தது போல உன்னிடம் பேச ஆரம்பித்தேன்.​

நாம் வீட்டிற்கு வந்ததும் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லி விடலாம் என்று இருந்தேன். அதற்குள் அந்த காவல் அதிகாரி புலன் விசாரணையில் கண்டுபிடித்து உன்னிடம் மாட்டி விட்டுட்டார்.​

அவர் மீராவின் கார் நம்ம காரை இடித்திருக்கு என்பதை சிசிடிவியில் பார்த்திருக்கிறார் என்றால் என்னுடைய நாடகத்தையும் சேர்த்தே கண்டுபிடித்திருப்பார். அதனால் தான் உடனே மீராவை கைது செய்யாமல் உன்னுடன் இருக்கும் நட்பால் உனக்கு இந்த விஷயத்தை மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.​

இதெல்லாம் உன்னை மாற்றுவதற்காக செய்தேனே தவிர, ஏமாற்றுவதற்கு இல்லை அழகம்மா, ப்ளீஸ் புரிஞ்சுக்கோ” என்றான் தவிப்புடன்.​

“என்னை மாற்றுவதற்கு உங்களுக்கு வேறு திட்டமே தோன்றவில்லையா நிரு? இந்த மூன்று மாதமாக நான் மனதால் எவ்வளவு காயப்பட்டிருந்தேன் தெரியுமா?” என்றாள் அழகி வலி மிகுந்த குரலில்.​

“சாரிடி” என்றான் வருத்தமான குரலில்.​

வெடுக்கென்று திரும்பி அவன் சட்டைக் காலரை பிடித்தாள், “சாரி கேட்டால் எல்லாம் சரியாயிடுமா? உங்களுக்கு விபத்து, உயிருக்கு ஆபத்து என்றதும் நான் எப்படி தவித்து போனேன் தெரியுமா?​

நீங்க கண் விழிக்கும் வரை நடை பிணமாகத்தான் உலாவிட்டு இருந்தேன். நொறுங்கி போயிட்டேன். உங்களையும் இழந்துவிட்டால் எனக்கென்று யாரு இருக்காங்க நிரு? ஏன் இப்படி செய்தீங்க” என்று அவன் மார்பில் தன் இரு கைகளாலும் குத்தினாள்.​

அமைதியாக வாங்கி கொண்டான். அவள் வலி புரிந்தது. அவளை மாற்றும் எண்ணமே மேலாங்கி இருக்க, இந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை. வலி இல்லாமல் வாழ்க்கை ஏது பெண்ணே? ஆனால் அந்த வலியை கணவன் வேண்டுமென்றே கொடுத்திருந்ததால் அவள் கோபம் நியாயம் தானே!​

அவள் கைகளை பிடித்து இழுத்து அவள் உள்ளங்கைகளில் மாறி மாறி முத்தமிட்டான். கையை அவனிடமிருந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு திரும்பி கொண்டாள்.​

அவளை பின்னாடி இருந்து அணைத்துக் கொண்டு அவள் கழுத்துவளைவில் முகம் புதைத்தவன், “சாரிடி, ப்ளீஸ் மன்னிச்சிடு” என்றான் பாவமாக.​

“என்னை மாத்துறதுக்கு உங்க உயிரையே பணயம் வைப்பீங்களா? மீரா தெரியாமல் வேகமாக இடிச்சிருந்தால்? வேறு ஏதும் வாகனம் இடையே வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? நினைக்கவே குலை நடுங்குது” என்றாள் நடுக்கமான குரலில்.​

அவளை எப்படி சமாதானம் செய்வது என்றே தெரியாமல் விழித்தான் நிரஞ்சன்.​

அவளோ அவனை திட்டிக் கொண்டே இருந்தாள். காவல் அதிகாரிக்கு போன் செய்து மீராவின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.​

“இனி இதுமாதிரி எல்லாம் செய்யக்கூடாது என்று உங்கள் கணவரிடம் சொல்லி வையுங்கள். பப்ளிக் நியுசன்ஸ் கேசில் உள்ளே போடும் நிலைக்கு என்னை ஆளாக்க வேண்டாம்” என்றார் அவர் ஸ்டிரிட் போலீசாக​

அவர் பேசியதில் இன்னும் கோபம் வர, சமையலறையில் பாத்திரங்களை நங்கென்று கோபமாக வைத்தப்படி அவனை சத்தமாக திட்டிக் கொண்டே சமைத்து முடித்தாள்.​

அதே கோபத்தோடு சாப்பாடு பறிமாறியவளிடம், “இதே வீட்டில் கடைசியாக நாம் கிளம்பும் போது எப்படி அந்நியோன்யமாக இருந்தோம்.​

எனக்கு விபத்து ஏற்படலை என்று சந்தோசப்படாமல் ஏன்டி என்னை திட்டிட்டே இருக்கே. அதுக்கு உண்மையாவே விபத்து நடந்திருக்கலாம் போல” என்றான் நிரஞ்சன் வருத்தமாக (அவளை கவிழ்க்கத்தான்)​

“அய்யோ நிரு, ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க?” என்று கணவனை ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.​

அதை அப்படியே பயன்படுத்திக்கொண்டு அவளை அப்படியே தூக்கி கொண்டு படுக்கை அறைக்கு சென்றான்.​

அவள் அவன் கைகளில் சிக்காமல் நழுவும் மீனாக, விலகி ஓட பார்த்தவளை துரத்தி பிடித்து கட்டிலில் தள்ளி அவள் மீது படர்ந்தான். அவள் முறுக்கிக் கொண்டு தடுத்ததை எல்லாம் முறியடித்து அவளை வெற்றி கொண்ட பின்பே அவளை விட்டான்.​

ஆரம்பத்தில் முரண்டியவள் பின் கணவனின் ஆளுமையில் அவனிடமே தஞ்சம் புகுந்து அவனுள் அடைக்கலம் ஆனாள்.​

மறுநாள் அவள் எழுவதற்கு முன்பே தயாராகி இருந்தான். அவளது உடைகளையும் அவன் உடைகளையும் பேக் செய்து கொண்டிருந்தான்.​

“நிரு எங்க கிளம்பறீங்க காலையில்” என்றாள் அழகி​

“கிளம்பறீங்க இல்ல, கிளம்பறோம். சீக்கிரம் குளிச்சிட்டு தயாராகு” என்றான்.​

“அய்யோ எனக்கு ஆபிஸ் இருக்கே” என்றாள்​

“அதுதான் என்னை கிட்ட இருந்து பார்த்துக்கிறதாக சொல்லி பதினைந்து நாள் லீவு எடுத்திருக்கியே” என்றான் ஒற்றை கண்ணை அடித்து.​

“ம்ம், அது உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று எடுத்தது, நான் நேற்றே கேன்சல் செய்ய சொல்லி மெயில் அனுப்பிட்டேன்” என்றாள்​

“செல்வநாயகம் அங்கிள் என்னை கேட்டாரு, நான் லீவு கன்பார்ம் தான் நாங்க சிம்லாவிற்கு ஹனிமூன் போறாம்னு சொல்லிட்டேனே” என்றான் மீண்டும் கண் சிமிட்டி.​

“அப்போ எல்லாம் முன்னாடியே திட்டம் போட்டு இருக்கீங்க, அதான் அன்னிக்கு நான் லீவு போடறேன் சொன்னதும் ஒரு மாதிரி சிரிச்சீங்களா?” என்றாள்.​

“ஆமாடி… என்னோட அழகி திமிரழகி ஆனதை கொண்டாட வேண்டாமா? இது உனக்காக நான் போட்ட கூடுதல் பிளான். பேசிட்டே இருக்காதே நேரம் ஆகுது. இப்போ நீயே குளிக்கிறயா? இல்லை நான் குளிக்க வைக்கணுமா? என்று அவளை தூக்க வந்தான்.​

அதற்குள் அவள் ஓடிச் சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.​

கெளதம் போன் செய்திருந்தான். “என்ன மச்சான் அடிகிடி பலமாக பட்டுச்சா? முதலுதவி எதுவும் வேண்டுமா?” என்றான்.​

“டேய் அய்யா ஹனிமூனுக்கு கிளம்பிட்டு இருக்கேன். என்ஜாய் பண்ண விடுடா” என்றான் நிரஞ்சன்.​

“அடப்பாவிங்களா, ரெண்டு பேரும் போன வேகத்தை பார்த்தால் எப்போ போலீஸ் வந்து என்னை கைது செய்யுமோ? என்ன பிரளயம் காத்திருக்கோனு நான் இரவெல்லாம் தூங்காமல் விழிச்சிருந்து விடிந்ததும் உனக்கு போன் பண்ணா, பேசுவடா நீனு?” என்றான் கெளதம்.​

“நீயும் தூங்கலையா மச்சி? நாங்க இரண்டு பேரும் கூட தூங்கவே இல்லைடா” என்றான் நிரஞ்சன்.​

“டேய் ஒரு பிரம்மசாரி மருத்துவனை வெறுப்பேத்தி பார்க்காதடா, நீங்க தூங்காமல் இருந்ததும் நான் தூங்காமல் இருந்ததும் ஒண்ணாடா?” என்றான் கெளதம் கடுப்புடன்.​

தயாராகி கோவக்கார கிளியாக நின்றிருந்தால் எழிலழகி.​

“சரிடா, நான் அப்புறமா பேசறேன்” என்றபடி போனை வைத்தான் நிரஞ்சன்.​

“அழகி, நீ கோவத்துல கூட எவ்வளவு அழகு தெரியுமா?” என்று கொஞ்சினான்.​

“போதும் கிளம்பலாமா?” என்றாள் சிடுசிடுவென்று​

“உன் முகம் ஹனிமூன் போறது போலயா இருக்கு? சரி விடு உன்னை எப்படி சமாதானம் செய்யணும்னு எனக்கு தெரியும்” என்றான் நிரஞ்சன்.​

காரில் போகும் போது, “ஆனாலும் நீ ரொம்ப கோபப்படுறடி” என்றான்.​

“இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? இனி திமிரழகியிடம் அவஸ்தைபடு” என்றாள் உதட்டை சுழித்து.​

“திமிரழகியை என் கட்டுக்குள் வைக்கும் வித்தையும் எனக்கு தெரியும்” என்று கண்ணடித்தான்.​

நேற்றைய அவன் செயல் நினைவு வர அதில் அவள் முகம் செவ்வானமாக சிவந்துவிட்டது, அதை மறைக்க சட்டென்று தலையை குனிந்து கொண்டாள்.​

அதை ரசித்தபடி தன் திமிரழகியுடனான தன் காதல் பயணத்தை தொடர்ந்தான் நிரஞ்சன்.​


(தொடரும்)​

 
Top