எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரத்த ரங்கோலி 8

Status
Not open for further replies.

NNK-105

Moderator
ரத்த ரங்கோலி 8

ஆதி, கைலாஷ் வீட்டில் ஒன்றினாலும் அபூர்வா அவன் மனதை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தாள். அவளின் நினைவுகள் இன்ப சாரலாய் வீசி ஏக்கத்தை ஏற்படுத்த தன் மனவோட்டத்தை மறைக்க பால்கனியில் நின்றான்.

“ கனவுலயே ரொமேன்சா?”எனப் பவன் கிசுகிசுப்பாக கேட்க

திடுக்கிட்டுத் திரும்பிய ஆதி “டேய் மாட்டிவிட்ட தெரியும் .. சும்மா இரு” என மிரட்ட

“ஓஹோ சார் மிரட்விங்களா?” என விஷமப் புன்னகையுடன் தானும் அதே பாணியில் “நானே விஷயத்த அஸ்வின்கிட்ட சொல்லிடவா?”

‘என்ன விஷயம்?” இருவருக்கும் இடையே கோகிலா புகுந்தாள்

“அது ..அது .. செமஸ்டர்ல ஒரு பேப்பர் அவுட் அதான்” என ஆதி விஷயத்தைச் சமாளித்து திசை திருப்பினான்.

“அடப்பாவி..பைலா?” என கோகிலா கேட்க

“ஷ்ஷ் .. சத்தமா சொல்லாத “ என்றுவிட்டு “அண்ணி எனக்கு பாயசம்” எனத் தேவையில்லாமல் அழைத்தபடி ஆதி அங்கிருந்து ஓட்டமெடுத்தான்.

பவனும் கோகிலாவும் அவனைக் கண்டு சிரித்தனர். மற்றவர் வீட்டினுள் இருக்க .. பால்கனியில் கோகிலாவும் பவனும் சென்னையின் சூடான காற்றை அனுபவித்தனர்.

உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு கோகிலா “எப்படி பவன் தனியா இருக்க?” எனக் குரலைத் தாழ்த்தி கேட்டாள்.

“நீ என்னைக் கல்யாணம் பண்ணினா என் தனிமை போயிடும்” சட்டெனப் பவன் சொல்லிவிட

“அப்பாடா இப்பவாவது தைரியம் வந்ததே” என்றாள் குழைவாக

“எனக்கென்ன பயம்” என்றான் அவளை விழுங்கும் பார்வையில்

வெட்கம் பிடுங்கித்தின்ன “அப்படி பார்க்காதடா” என்றாள் முணுமுணுப்பாக அவள் புன்னகைக்கக் கன்னத்தில் அழகாய் குழிவிழுந்தது. அவளை அணுஅணுவாய் ரசித்தான் பவன்.

கோகிலா- பவன் காதலுக்கு வயது மூன்று. கோகிலா பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கையில் தான். பவன் தன்னை வெகுவாக பாதிக்கிறான் என்பதை உணர்ந்தாள். பவன் தாய் தந்தை இல்லாமல் கார்மேகத்தின் வீட்டில் வளர்கிறான் என்ற அனுதாபம் மெல்லக் காதலாகியது.

அவளைவிட ஐந்து வயது பெரியவன். அவன் பேச்சில் அடக்கம் பெரியவர்களிடம் காட்டும் மரியாதை. அவன் நன்றாக உடை உடுத்திக் கூடப் பார்த்தது இல்லை. சாதாரண உடை தான் தன் அண்ணன் மற்றும் ஆதி குடும்பத்து ஆண் பிள்ளைகளைப் போல அவன் தன் உடை மற்றும் சிகை அலங்காரத்தில் சிறிதளவு கூட கவனம் செலுத்தியதில்லை.

கோகிலா பன்னிரண்டாம் வகுப்பு முடித்து மேல் படிப்புக்காக பெங்களூர் செல்லவிருந்த இடைப்பட்ட மாதத்தில் ஒரு நாள் பவனைக் காண அவன் வீட்டிற்குச் சென்றாள்.

“அண்ணிப் பவனுக்கு உடம்பு சரியில்லையாம் .. பார்த்துட்டு வரேன்” என்று சசியிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

“கோகி இதை அவனுக்குக் கொடு” எனச் சூடாகச் சாப்பிட உணவை ஹாட் பாக்சில் போட்டுக் கொடுத்தாள்.

கார்மேகம் காலையில் கிளம்பிவிடுவார். பவனை முதன் முதலில் தனியாகச் சந்திக்க உள்ளோம் என்பதே அவளுள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

அழைப்புமணி சத்தத்திற்குக் கதவைத் திறந்தவன். கோகிலாவைக் கண்டு ஆச்சரியமாகப் பார்த்தான். அவளை எதிர்ப்பாக்கவில்லை என அவன் முகமே காட்டிக் கொடுத்தது.

மிகவும் சோர்வாக இளைத்துக் காணப்பட்டான்.

“உள்ள வா கோகி உட்கார்” என அழைத்தவன் அறைக்குள் சென்று தன் லுங்கியைச் சரி செய்து கொண்டு அவசரமாகக் கையில் கிடைத்த டீ ஷர்ட்டை மாட்டிக் கொண்டான். தலைமுடியைக் கையில் கோதியபடி வந்து அவள் முன் அமர்ந்தான்.

“எப்படி இருக்க? டாக்டர்கிட்ட போனியா?” அக்கரையாக விசாரித்தாள்.

“ஒரு பிரச்சனை இல்லை .. ரெண்டு நாள்ல சரியாகிடும்” என்றான்

கோகிலா “அண்ணி கொடுத்தனுப்பினாங்க” எனச் சாப்பாட்டை மேஜையில் அடுக்கினாள். பின்பு சமையலறைக்குள் சென்று தட்டை கொண்டு வந்து வைத்தாள்.

அவனை அமரச் சொல்லி உணவைப் பரிமாறினாள். “எதுக்கு இதெல்லாம்?” என அவன் மறுக்க அவள் முறைப்பால் மௌனமாக உண்டான்.

“ பெரிய மனுஷியாட்டம் நடந்துக்கிற” எனச் சிரித்தபடி உண்டான்.

“அடுத்த மாசம் பேங்ளுர் போயிடுவேன்”

“தெரியும் அங்கிள் சொன்னாங்க .. நல்லா படி” என்றான் சாப்பிட்டபடி … “அண்ணி சமையல் சூப்பர்” என அதிகமாகவே உண்டான்.

அவன் சாப்பிட்டு முடிக்கும் வரையில் மௌனத்தை இழுத்துப்பிடித்தாள். அவனை இப்படிக் காண உள்ளம் உருகியது. அவன் சாப்பிட்டு முடித்தான். கார்மேகத்திற்கும் உணவை எடுத்து சமையலறையில் வைத்தாள்.

பிறகு கோகிலா நிதானமாக “நான் உன்னை லவ் பண்றேன் பவன்” என்றாள்

“ காபி குடிக்கிறேன்” என்பதை போல அவள் சாதாரணமாகச் சொன்னதைக் கேட்டவனுக்கு நொடிக்கும் குறைவான நேரத்தில் புரையேறியது.

அவள் தலையைத் தட்டி தண்ணீர் புகட்ட முயன்றாள்.

அவன் தன்னை சமாளித்தபடி அவள் கையை தட்டிவிட்டான்.

கோகிலா அசரவில்லை மீண்டும் தண்ணீர் புகட்ட முயன்றாள். அவன் தட்டிவிடக் கையை உயர்த்த அவன் கையை பிடித்துக் கொண்டாள். அந்த தொடுதல் அவனுள் ஏதோ செய்யச் சட்டெனத் தள்ளி நின்றான்.

“நீ முதல்ல கிளம்பு ” என அதட்டினான்.

“இந்த உருட்டல் மிரட்டலுக்கு பயப்படறவ நானில்ல. நீயும் என்னை லவ் பண்றனு தெரியும். சும்மா நடிக்காத” என அவனுக்கு மேல் குரலை உயர்த்தினாள்.

“அதெல்லாம் இல்ல .. நீ கிளம்பு” அவனிடம் மீண்டும் அதே ராகம் ..

“சரி நீ என்னை காதலிக்கலனு சத்தியம் பண்ணு நான் போயிடறேன்” என அவன் கையை படக்கென தன் தலையில் வைத்துவிட்டாள். இருக்கமாகப் பிடித்துக் கொண்டவள்“இப்ப சொல்லு” என்றாள் அவன் கண்ணை நேருக்கு நேராகப் பார்த்தபடி.

அவள் உறுதியின் முன் தலை குனிந்தவன் “ஆமா .. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு .. அதுக்கென்ன இப்ப?” என வீம்பாகக் கூறினான்.

“ஆனா உனக்கு நான் பொருத்தமானவ இல்ல கோகி. என் அப்பா அம்மா யாருனு கூட எனக்குத் தெரியாது. என் வேலையும் அழுக்குக் குப்பை நாத்தம்தான் … உனக்குச் சரிவராது போயிடு கோகிலா” அதே உறுதி அவன் கண்ணிலும் பளிச்சிட்டது.

“எனக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல” என்றாள்.

“சரி நான் சொல்றதை கேளு … ஒரு வருஷம் என்னோட பேசாத” என்றான்.

அவள் முறைக்க..

“ஒரு வருஷம் ஆனதும் இங்க லீவுக்கு வருவல அப்ப இதைப் பத்தி பேசலாம்”

“அப்படியே எஸ்கேப் ஆக பார்க்கிறயா?” கைகளை இடையில் வைத்து எரிச்சலாக கேட்க

இல்லையெனத் தலையசைத்தவன் “உன் உறுதியைச் சோதிக்க” என்றான்.

“என் காதல் மேல நம்பிக்கை இல்ல அப்படிதான?” அவன் வேண்டாம் என்று சொல்லாததில் ஆறுதல் அடைந்தாள்.

“யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ் .. இந்த ஒரு வருஷம் என்கிட்ட பேசக் கூடாது .. பை” என எதுவும் பேசாமல் கைக்கட்டி நின்றான்.

அடுத்த சில நாட்கள் அவளை விடப் பவன் அதிக ஆதங்கப்பட்டான். பெங்களூர் வாழ்க்கை அவளை முற்றிலும் மாற்றிவிடும் என நம்பினான். அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய மனதார ஆசைப்பட்டான்.

அடுத்த வருடம் அதே நாளில் பவன் வீட்டுக்கு வந்தாள். அவள் நடை உடை பாவனையில் நிறைய மாற்றங்கள் மனம் மட்டும் அதே கேகாகிலாவாக “ஐ லவ் யூ” என்றாள்.

அவனும் அவளை மனதார ஏற்கத் தயாரானான். ஆனால் அவனுள் மாற்றம் உண்டானதை அவள் அறியவில்லை. பவன் மூன்று நண்பர்களுக்கும் தொழிலாளியாகவே இருந்தான்.

முதலாளி ஆக வேண்டும் என்னும் ஆசைக்கு தீனி போட்டான். பணம் இருந்தால் எப்படியும் எதையும் சமாளிக்க முடியும் என்னும் எண்ணம் விதையாகத் தோன்றி விருட்சம் ஆனதை அவள் அறியவில்லை.

அப்போது பெரிய சிரிப்பலை உள்ளிருந்து கேட்டு பழைய நினைவிலிருந்து மீட்டது இருவரையும் .. யார் என்ன நினைப்பார்களோ என கோகிலா “ நான் உள்ள போறேன் .. நீ ரெண்டு நிமிஷத்துக்குப் பிறகு வா” என்றாள்.

அவன் பறக்கும் முத்தத்தைப் பரிசளிக்க “போடா” எனச் செல்லமாகத் திட்டியபடி துள்ளிக் குதித்து உள்ளே ஓடினாள். தன் தந்தை அருகில் அமர்ந்தாள்.

பவன் மெல்ல ஏதோ போன் பேசி முடித்தவன் போலக் காதிலிருந்து போனை எடுத்தபடி ஆதி அருகில் அமர்ந்தான்.

சமீபத்திய திரைப்படம் பற்றி பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. பவன் மற்றும் கோகிலா அந்த பேச்சில் இணையாமல் நயன பாஷையில் தங்கள் காதலைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

பூமிநாதன் தன் போனில் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவ்வப்பொழுது பார்த்தார். மூன்று குடும்பங்கள் இணைந்தால் நண்பர்கள் மூவரும் தனியே அமர்ந்து பேசுவது வழக்கம். இன்று தான் தனித்துவிடப்பட்டதை எண்ண மனம் கனத்தது.

அதைப் புரிந்து கொண்டவனாக “அப்பா” என கைலாஷ் அவர் கையை ஆறுதலாகப் பற்றினான்.

பூமி “எனக்கு ஒரு ஆசை” எனத் தொடங்கினார். அனைவரும் மௌனமாக அவரையே காண

“கோகிலாவுக்குக் கல்யாணம் பண்ண நினைக்கிறேன் .. “

பவன் கோகிலா கண்கள் சட்டென இணைந்து பிரிந்தது. இருவர் உள்ளத்திலும் மகிழ்ச்சி பிரவாகம்.

“எமன் எப்ப எந்த ரூபத்துல என்கிட்ட வருவான் தெரியலை” எனத் தன் நிலையை எண்ணி கண் கலங்கினார்.

அவ்வார்த்தைகளைத் தாங்க முடியாமல் “ அப்படி சொல்லாதீங்க அப்பா” என கோகிலாவும் கைலாஷ் இதயம் படபடக்கக் கலங்கினர்.

“கோகிலாக்கு ஆதியைக் கல்யாணம் பண்ணலாம்னு எனக்கு ஆசை .. உங்களுக்கு சம்மதம்னா மேல பேசலாம்” என ஆதியின் அம்மாவைப் பார்த்துக் கேட்டார்.

ஆதி பவன் மற்றும் கோகிலா இம்மூவர் இதயத்தை யாரோ பாளம் பாளமாக வெட்டுவது போல உணர்ந்தனர். அனைவர் முன்னும் மூவராலும் தங்கள் உணர்வை மறைத்தனர்.

அங்கே சிலரால் மௌனம் சம்மதமாக எண்ணப்பட்டது.

ஆதியின் அம்மா “எனக்குச் சம்மதம் பசங்களை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்” என்றார் ஆதி மற்றும் கோகிலாவைப் பார்த்தபடி.

“நான் இன்னும் டிகிரி முடிக்கல்ல” என கோகிலா தன் தந்தையை நோக்கியே பேசினாள்.

“நானும் சம்பாதிக்கணும்” என ஆதித் தன் பங்குக்குச் சொல்லி வைத்தான்.

“இப்ப அப்பா ஆசைக்கு நிச்சயதார்த்தம் செய்யலாம் … கல்யாணம் ஒரு வருஷம் ஆகட்டும்”என கைலாஷ் பிரச்சனைக்குத் தீர்வை சொல்வதைப் போலச் சொல்ல

“நீ சொல்றதும் சரிதான்” என மற்றவர் ஆமோதிக்கப்

பவன் நொறுங்கிப் போய்விட்டான். தன்னை நிராகரித்த பூமிநாதன் மேல் ஆத்திரம் பொங்கியது.

அனைவரும் சேர்ந்து உணவு உண்டனர். மூவருக்குத் தொண்டைக் குழி அடைத்தது.

சசி“கல்யாணப் பொண்ணு நல்லா சாப்பிடு” எனக் கிண்டல் செய்ய

மறுபக்கம் ஆதியை கைலாசும் அஸ்வினும் கிண்டல் செய்தனர்.

ஆதிக்குத் தட்டை தூக்கி வீசி “ஷட்அப்“ எனக் கத்த வேண்டும் போல இருந்தது. பவனால் அங்கு இருக்கவே முடியவில்லை.

பூமிநாதன் உணவு உண்டதும் சிறிது நேரம் உறங்குவது வழக்கம். அதனால் அவர் உறங்க சென்றுவிட்டார்.

தான் தனிமைப் படுத்தப்பட்டது போலப் பவன் உணர்ந்தான். தனக்கென யாரும் இல்லை என வருந்தினான். பொங்கி வந்த கண்ணீரை அடக்கினான்.

முகத்தைக் கழுவ வாஷ்ரூம் பக்கம் செல்ல .. “ இது ரிப்பேர் டா .. அப்பா ரூம்ல வாஷ்ரூம் இருக்கு” என கைலாஷ் சொன்னான்.

வாஷ்ரூமில் குழாயைத் திறந்து இரண்டு நிமிடம் மனம் விட்டு அழுதான். முகத்தைக் கழுவி வெளியே வரப் பூமிநாதன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். ஏ.சி. ஓடிக் கொண்டு இருந்ததால் அறைக் கதவு மூடியிருந்தது. வீட்டின் படுக்கை அறையில் சீசீ கேமரா இல்லை.

பவனுள் ஓர் கொரூர எண்ணம். அந்த நொடி அது சரியா தவறா எனச் சிந்திக்க முடியவில்லை. தன் காதலைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவனது எண்ண ஓட்டம்.

சத்தமில்லாமல் அறைக் கதவை தாழிட்டான். தன் முகத்தை மறைக்க மாஸ்க் அணிந்தான். தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து பேனாவைப் போல ஒன்றை எடுத்தான்.

அதைப் பூமிநாதன் நாசி அருகில் வைத்தான். அதன் பின்னால் அழுத்த அதிலிருந்து மருந்து பூமியின் நாசிக்கு சென்றது. அடுத்து மற்றொரு நாசியிலும் அதே போலச் செய்தான்.

அந்த மருந்தின் நெடி ஏதோ செய்ய அவர் முகம் சுருக்கி கண் விழித்தார். இத்தனை அருகில் பவனை கண்டதும் ஏதோ சரியில்லை என அவர் விழி அச்சத்தில் அகல விரிந்தது.

பவன் அவரை அந்த மருந்தைச் சுவாசிக்க வைத்தான். அவர் அந்த பேனாவைத் தட்டிவிட முயல .. அவன் அவரின் இரண்டு கைகளையும் தன் இடது கையால் இறுக்கிப் பிடித்தான். வலது கையால் மீண்டும் நன்றாகச் சுவாசிக்க வைத்தான். அவருக்கு இதயத்தில் ஒரு விதமான வலி பரவியது.

அவரால் பேசவோ சப்தம் இடவோ முடியவில்லை. இரண்டொரு நிமிடத்தில் மயங்கினார். பின் பவன் பேனாவை பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு கைகளை நன்றாகச் சுத்தம் செய்து கொண்டான்.

பூமியைப் பார்க்க உறங்குவது போலவே இருந்தது. வெளி வந்த பவன் சில நிமிடங்கள் அமர்ந்தான். திருமணத்தைப் பற்றிப் பேசினான். கோகிலா அவனைக் கொன்று விடுவதை போல முறைத்தாள்.

பின்னர் புன்னகையுடன் அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்பினான்.தொடரும் …


 
Status
Not open for further replies.
Top