எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொலுசொலி ஆசைகள் 10

NNK 89

Moderator

கொலுசொலி ஆசைகள் 10

கௌது, பாப்புவைப் பள்ளியில் இறக்கிவிட்ட பின், அவனின் சில வேலைகளை முடித்த பிறகே வீட்டிற்குச் சென்றான்.

பாட்டி"ஏப்பா கௌது! காலையில போன நீ, இப்ப தான் வர, போ! போய் சாப்புடு" என்றார் பேரனிடம்.

"ஒரு வேல இருந்தது அப்புச்சு, அதான் போனேன் நேரமாகிட்டு, அது போது மதியத்துக்கே சாப்புட்டுகலாமுனு இருந்துட்டேன்" என அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அவனின் குரல் கேட்டு வேகமாக வந்த செவாயி, "கௌது! உன் ஃபோனுக்கு கூப்புட்டே இருந்தேன், நீ எடுக்கவே இல்ல, அப்புறம் தான் பாத்தேன் உன் ஃபோன் ரூமுக்குள்ள கெடக்குதுனு" எனக் கூறிக் கொண்டே ஒரு சிறுப்பையை அவன் கையில் திணித்தார்.

"இது என்னதும்மா?"

"பாப்பு சாப்பாட்டு பையை வச்சுட்டுப் போயிட்டாபா, கொண்ட குடுத்துட்டு வந்துடு, நானும் அந்த மகேஷ் பயலுக்கு கூப்புட்டே இருக்கேன், எங்கயோ வெளியில இருக்கேனு சொன்னான்."

"அய்யயோ! மதியம் ஆகப்போகுதே, பாப்புக்கு எப்ப சாப்பாடு டைம்னு தெரியுமா?"

"அது எல்லாம் எனக்கு எப்டி தெரியும்? உன் பொண்டாட்டிக்கு தான் தெரியும், நானும் காலையில இருந்து மாங்கு மாங்குனு வேலைச் செய்றேன், செஞ்சு முடியல" என நொந்தப்படி தரையில் அமர்ந்தார்.

அந்த நேரம் மகேஷ், "என்னடா அம்மா கூப்புட்டு இருந்தாங்க" எனக் கேட்டப்படி வந்தான்.

"பாப்பு சாப்பாடு பையை வச்சுட்டுப் போச்சுடா, உனக்கு ஸ்கூல் டைமிங் தெரியுமா?"

"உன் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல நம்ம பக்கத்துல யாருமே படிக்கலடா, எனக்கு எப்டி தெரியும்?"

"ஆமா! அதிசயமா போய் படிக்க வைக்கிறேனு கொண்ட எங்கயோ சேத்தா உன் பொண்டாட்டி, இந்தா இங்கன இருக்க நம்ம ஊரு பள்ளிக்கூடத்துல போட்டு இருந்தா, நானே நடந்துப் போய் குடுத்துட்டு வந்திருப்பேன். இல்லனா புள்ளயே வந்துச் சுட சுட சாப்புட்டு போய் இருப்பா, காலையில அனுப்பிட்டு சாயங்காலம் வரை நிம்மதியா இருக்கலாம்ல, சமைக்கிற வேலை குறைவுனு, அந்தப் பள்ளிக்கூடத்துல போட்டுருக்கா, ம்உகும்" என செந்தாவைக் குறைக் கூறினார் செவாயி.

அவரைக் கண்டுக்கொள்ளாத கௌது, "மகேஷ்! நீ வா, நம்ம போய் இதைக் குடுத்துட்டு வருவோம். புள்ள சாப்புடாம இருப்பா, இன்னைக்கு காலையில் இருந்து ஒன்னும் சரியில்ல" என பைக்கை எடுக்க, நண்பனும் அவன் பைக்கில் ஏறினான்.

"காலையில சமைச்சு டப்பாவில் போட்டு தான் வச்சேன். நீ கூட்டிட்டுப் போகும் போது ஒழுங்கா கையில் எடுத்துட்டுப் போய் இருக்கனும், எனக்கு இன்னைய பொழுதே சனிப்புடிச்சாப்ல இருக்கு" எனப் புலம்பிக் கொண்டே அடுப்படியை நோக்கிச் சென்றார் செவாயி.

பைக்கை வேகமாக ஓட்டிய கௌதுவிடம்,
"செந்தா எங்கடா?" எனக் கேட்டான் நண்பன்.

"அவ அம்மா வீட்டுக்குப் போய் இருக்கா"

"அதிசயமா இருக்கு, சரி! போயிட்டு வரட்டும், இந்த மாதிரி நேரத்துல அம்மா வீடுப் போறதுக்கும் ஆசை இருக்கும் தானே" என்றான் மகேஷ்.

கௌது மெல்ல மகேஷ் அறியாத, செந்தாவின் வயிற்றில் கரு இல்லை என்று மட்டுமே விளக்கினான், மற்றப்படி இருவருக்கும் நடந்ததைப் பற்றி கூறவில்லை.

"ஓ! அதான் செந்தா அம்மா வீடுப் போயிருக்கா, சரி விடு பாத்துக்கலாம், அடுத்த தடவை நல்ல படியா நடக்கும்" என நண்பனுக்கு ஆறுதல் கூறினான் மகேஷ்.

பள்ளி வளாகம்....

கௌது, செக்யூரிட்டியிடம் இந்த மாதிரி மித்ரவாகினியின் தந்தை எனக் கூறி, உள்ளே செல்ல அனுமதிக் கேட்டான்.

செக்யூரிட்டி ஆபிஸ் ரூமிற்கு இண்டர்கமில் கேட்க, அவனை ஆபிஸ் அறைக்கு வருமாறுக் கூறினர்.

கௌதுவும், மகேஷ்ம் உள்ளே செல்ல, ஆபிஸ் அறையில் அவனை விசாரித்தனர்.

ஒரு பெண் ஆசிரியர்"நீங்க?" எனக் கேட்டார்.

பாப்புவின் வகுப்பைச் சொல்லி, அவளின் தந்தை எனவும், சாப்பாடு கொடுக்க வந்ததாகக் கூறினான்.

"ஓகே சார்! ஐடி கார்டு வச்சு இருக்கீங்களா?"

"இல்லையே!"

"மறந்து வச்சுட்டு வந்துட்டீங்களா? ஃபோனில் இருந்தாலும் காட்டுங்க"

"இல்லங்க! நான் வெளிநாடுப் போய் ரொம்ப வருசம் ஆகுது, இப்ப தான் முதன் முதலா இந்த ஸ்கூலுக்கு வரேன். நான் பொண்ணைப் பாக்கனுமுனு இல்ல டீச்சர், இந்தச் சாப்பாட்டை மட்டும் குடுத்துடுங்க" என்றான்.

"ஓ! வெயிட் பண்ணுங்க, பசங்களுக்கு லன்ஞ்ச் டைம் அல்மோஸ்ட் முடியப் போகுது, அது மட்டுமில்ல நீங்க தான் மித்ரா அப்பானு கன்பார்ம் பண்ணிட்டு தான் ஃபுட் உள்ள குடுக்க முடியும் சார், வெயிட் பண்ணுங்க" என அவர் உள்ளே சென்றார்.

சிறிது நேரத்தில் வந்தவர், "ஒகே சார்! இப்ப தான் மித்ரா அம்மா நம்பருக்கு கால் பண்ணி செக் பண்ணினோம், அவங்க உங்க ஐடி அனுப்பி வச்சாங்க, உங்கப் பேரு?"

"கௌதமசந்திரன்"

"ஓகே! ஸி யுவர் ஐடி" என கௌதுவின் ஐடியைக் காட்டினார். அதைப் பார்த்தவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது.

அவன் புகைப்படம் போட்டு, தனியாக ஐடி கார்டு இருந்தது.

"இது என் கிட்ட இல்லையே"

"மித்ரா அம்மா கிட்ட இருக்குமே சார், எல்லா பேரண்ட்ஸ்கும் இந்த ஐடி கார்டு இருக்கு, அவங்க மட்டும் தான் பிள்ளைகளைப் பார்க்க முடியும். தேவைனா மூன்றாவதா ஒரு கார்டியனுக்கு ஐடி கேட்டு வாங்கிக் கொள்ளலாம். பட் மித்ராவுக்கு அவங்க அம்மா மட்டும் தான் ஃபோன் நம்பர் கொடுத்திருக்காங்க. அப்புறம் ஒரு வீட்டு நம்பர் இருக்கு."

"ஓ! மித்ரா அம்மா வெளில போய் இருக்காங்க, அதான் நான் வந்தேன். பராவாயில்ல இதைக் குடுத்துடுங்க"

"நோ ப்ராப்ளம் சார்! நீங்களே போய் குடுங்க, இப்டியே போனா செகண்ட் ப்ளோர் அவங்க கிளாஸ்." என்றார்.

கௌது மட்டுமே அனுமதிக்கப் பட்டான். மகேஷ் ஆபிஸ் அறையிலே அமர்ந்திருந்தான்.

பாப்புவைப் பார்த்து சாப்பாட்டைக் கொடுக்க, "அப்பா! இங்க என் ப்ரண்ட்ஸ் குடுத்தாங்கப்பா, சாப்புட்டேன்" என்றாள்.

"மன்னிச்சுடு பாப்பு, காலையில எடுத்து வைக்க மறந்தாச்சு"

"எப்பவும் அம்மா எடுத்து வச்சுடும். அதான் நானும் பாக்கல, இங்க பேக்கில் இல்லைனதும் கொஞ்சம் கஷ்டமாச்சுபா, அப்புறம் ப்ரண்ட்ஸ் ஷேர் பண்ணாங்க"

பாப்புவின் தோழி யாரோ வர, இருவரும் ஆங்கிலத்தில் உரையாடினர்.

அவள் சென்றிட, "இங்கத் தமிழில் பேசக் கூடாதா பாப்பு?" எனக் கேட்டான்.

"தமிழ் கிளாஸில் கண்டிப்பா தமிழ் பேசனுபா, மத்த நேரத்துல இங்கிலிஷ் தான், அப்ப தானே ஈஸியா பேச வரும், எங்களுக்குப் பழகிடுச்சு" எனச் சிரித்தாள்.

"பரவாயில்லடா நல்லா பேசுற, வீட்டுல பேசி நான் பாக்கவே இல்ல"

"அம்மா கிட்ட மட்டும் பேசுவேன்பா, மத்தவங்க கிட்ட பேச முடியாதுல, அதுவும் அம்மா திட்டும். தேவையான நேரத்துல தான் பேசனும், சும்மா இங்கிலிஷ்ல பேசாதனு. அதான் அம்மா கிட்ட சரியா பேசுறேனானு செக் பண்ணிப்பேன்"

"ஓ! சரிடா, இதைப் போய் எல்லாரும் சேந்துப் சாப்புடுங்க" எனக் கொடுத்துவிட்டு விடைப்பெற்றான்.

பைக்கில் வீடுத்திரும்பிக் கொண்டு இருந்தனர் நண்பர்கள்.

"கௌது! என்னடா ஸ்கூல் இது, அவசரத்துக்குக் கூட பெத்த அப்பன் கிட்ட ஆயிரம் கேள்விக் கேட்டு தான் அனுப்புறாங்க" எனக் கடுப்படித்தான் மகேஷ்.

"அது புள்ளைங்க பாதுகாப்புக்காக தானேடா"

"என்னத்த? பணம் சம்பாரிச்சு அனுப்புறவன் நீ, ஆனா செந்தாவை தான் தெரியுது, பணம் இல்லைனா இந்த மாதிரி ஸ்கூலில் அட்மிசனே கிடைக்காது போ!" எனச் சலித்தான் அவன்.

"என்ன தான் பணம் சம்பாரிச்சு அனுப்பினாலும், அது செலவு ஆவுதேனு இப்ப தோணலடா, புள்ளைய இப்டி பாதுகாப்பான இடத்தில் பாக்குறப்ப நிம்மதியா இருக்கு."

"அது என்னவோ உண்மைதான், இப்ப தான் செந்தா ஏன் இந்தப் பள்ளிக் கூடத்துல போட்டு இருக்குனு தெரியுது. அது படிச்சப் புள்ள விவரமா தான் புள்ளைய படிக்க வைக்குதுடா, இது தெரியாம உன் அம்மா எப்டி பேசுனுச்சுனு பாத்தீயா? நம்ம ஊருப் பள்ளிக்கூடம் முன்ன மாதிரி இல்லடா, சரியான வாத்தியாருங்க இல்ல, எல்லாரும் வெளியில தான் அனுப்புறாங்க" என நண்பன் மேலும் ஏததோ சொல்லிக் கொண்டே வந்தான்.

கௌது, பாப்புவை இந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு செந்தா போராடியதை நினைத்துப் பார்த்தான்.

செவாயி முடியவே முடியாது என்றிட, செந்தா கௌதுவிடம்"புள்ள படிப்பு முக்கியமுங்க, நான் பொறுப்பா பாத்துக்கிறேன்" எனப் போராடி, கண்ணனை வைத்து கௌதுவிடம் பேசினாள். கண்ணன் பேசிய பிறகே செவாயி அடங்கினார். பிறகு கௌதுவும் பாப்புவிற்காக என யோசித்து தலை அசைத்தான்.

இன்று மகளை பள்ளியில் கண்டப் போது பெருமையாகவும், மனம் நிறைவாகவும் இருந்தது.

கௌது வரும் போது மித்ரா வகுப்பு ஆசிரியரிடம் அவளின் படிப்பு பற்றி விசாரித்து விட்டு தான் வந்தான், படிப்பில் கெட்டிக்காரி எனப் புகழ்ந்தது வேறு அதிக மகிழ்ச்சியை அளித்திருந்தது.
……………

செந்தாவிற்கு அன்று மகளைக் காணாத நாளாக அமைந்ததால் மிகுந்த வருத்தமே. மாலை வேளையில் காத்திருக்க மகளிடம் இருந்து ஃபோன் வரவில்லை, 'பாப்பு! அம்மாவை மறந்துட்டீயா?' என மனதில் புலம்பினாள்.

கௌது எண்ணிற்கு அழைக்கத் தோன்றாமல், எப்படி மகளிடம் பேசுவது என யோசித்தப் போது, இரவு எட்டு மணிவாக்கில் அவன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

ஃபோனை எடுத்ததுமே"பாப்பு! எப்டி இருக்க?" எனக் கேட்டாள்.

"அம்மா! நல்லா இருக்கேன். நீ எப்டி இருக்க? எப்பம்மா வருவ" என ஏக்கமாக கேட்டாள்.

"ஏன்டா! என்ன ஆச்சு?"

காலையில் இருந்து நடந்ததை மகள் கூற, அப்பொழுது தான் மதியம் கௌதுவைப் பற்றி விசாரித்தது நினைவு வந்தது, அப்பொழுதே செந்தா வகுப்பு ஆசிரியரிடம் பேசியதால் ஏற்கனவே அறிந்தது தான்.

"ம்ம்ம்! சரி, ஏதோ மறந்துட்டாங்க போல, நாளைக்கு நீயே ஞாபகமா சாப்பாடு எடுத்து வச்சுக்கோ, காலையில சீக்கிரம் எழுந்திரிச்சி கிளம்பிடுடா"

"எப்டிம்மா, நீ தானே எழுப்புவ"

"அதுக்கென்ன, அம்மா அலாரம் வைக்க சொல்லி தரேன்" என அதைச் சொல்லிக் கொடுத்தாள்.

"அவ்ளோ தான்டா, நீயே எழுந்திரிச்சு யாரையும் தொந்தரவு செய்யாமல் கிளம்பிடு"

"அம்மா! போம்மா, நீ சீக்கிரம் வா" எனச் சிணுங்கினாள் மகள்.

"ம்ம்ம்! நீ வேணா சனி, ஞாயிறு இங்க வா பாப்பு"

"அப்படியா? அப்ப நீ இங்க வர லேட் ஆகுமா?"

"ம்ம்ம்!"

"சரி, நான் அப்பா கிட்ட சொல்லிடுறேன். சனி, ஞாயினு அங்கப் போறேனு, ஐ! ஜாலி" குதித்தாள்.

செவாயி அடுப்படியில் இருந்து கத்தினார்.

"ஏய்! பாப்பு இங்க வா சாப்புட, இந்த வயசான காலத்துல நம்ம உயிரை வாங்குதுங்க" எனச் சத்தம் போட்டார்.

பாப்பு அவசரத்தில் ஃபோனை ஆப் செய்யாமல் போற வழி ஹாலில் இருந்த டேபிளில் வைத்தாள்.

செவாயி சத்தம் கேட்டு, வெளியில் நின்ற கௌது உள்ளே வர, "ஏன்மா கத்துற? உன் சத்தம் வாசல் வரை அலறுது, சாப்புட தானே கூப்புடுற, மெதுவா கூப்புட்டா என்ன?" என்றான்.

"அடேய்! நான் காலையில இருந்து படாதப்பாடு பட்டுட்டு இருக்கேன். நீ உன் பொண்டாட்டியை அம்மா வீட்டுக்கு சொகுசா இருக்க அனுப்பிட்டு, இப்ப நான் கத்துறேனு சொல்றீயா? ஏன் சொல்ல மாட்ட, சாகுற வரைக்கும் வேலைச் செஞ்சே போகனுமுனு விதி போல" எனப் பேசியவாறே தோசையை ஊற்றினார்.

ஒரு தோசையை வாங்கி தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்த பாப்பு"அப்புச்சி! பொடி வேணும்" என்றாள்.

அதைத் தேடியவர் கண்ணில் படாமல் இருக்க"அவ எங்க வச்சாலோ, பொழுதனைக்கும் அடுப்படியிலே நிப்பா ஆனா பொருள் இருக்க இடம் இருக்காது, எல்லாத்தையும் மாத்தி மாத்தி வைக்குறது" என இருந்த பாட்டில்களை வெளியில் எடுத்தார்.

கௌது கண்ணில் பட, அதை எடுத்தவன்
மகள் தட்டில் வைத்து, எண்ணெய் ஊற்றி ஊட்டிவிட்டான்.

அடுத்த தோசையைப் போட போக, பாப்பு போதும்! என ஓடிவிட்டாள்.

"நீயும் சாப்புட்டு போ, எனக்கு வேலை முடியும் கௌது" என்றார்.

அவனும் இரண்டுத் தோசைகளை சாப்பிட்டுவிட்டு போதும் என்று எழுந்தான்.

"ரெண்டுப் போதுமா! இரு ஊத்தி எடுத்துட்டு வரேன்" என்ற தாயிடம், "வேணாம்!" எனக் கூறி கை கழுவினான்.

வெளியில் படுத்திருந்த பாட்டி"ஆமா! வாய் ஓயாம திட்டிட்டே சாப்பாடு போட்டா எப்டி சாப்புட முடியும், அதான் சாப்புட்டது போதுமுனு போறாவோ" என மருமகள் காதில் விழுமாறுப் பேசினார்.

ஒரு தட்டில் மூன்றுத் தோசைகளை வைத்து அவர் முன் தள்ளி விட்ட செவாயி, "இங்கப் பாரு கெழவி! அதிகமா பேசின இதுக் கூட கெடைக்காது" என கழுத்தை நொடித்துச் சென்றார்.

செவாயி அடுப்படிற்குள் மூன்று வேளைகளும் நின்று சமைத்தே வருடங்கள் ஆகிறது. விசேஷங்கள், மாப்பிள்ளைகள் வந்தால் மட்டுமே வருவார், அதுவும் செந்தா அனைத்தையும் நறுக்கி வைத்திருப்பாள்.

மற்றப்படி அசைவம் அலசிக் கொடுப்பதுடன் எட்டிப் பார்க்க மாட்டார், செந்தா வைப்பது எப்படி இருந்தாலும் சாப்பிட்டு விடுவது வழக்கமாகியது.

இன்று முழுநேரமும் நின்றதால் செவாயின் வாய் அனைவரையும் திட்டித் தீர்த்தது.

அனைத்தையும் ஃபோனில் கேட்ட செந்தாவிற்கு ஓரளவு சூழ்நிலைப் புரிந்தது. ஆனாலும் மனதில் வெறுமை இருக்க பொறுமைக் காத்திட, மகளை மட்டுமே எண்ணி வருத்தப்பட்டாள்.

இரவு....

பாப்பு, தந்தையின் நெஞ்சில் படுத்திருந்தாள், அவளை அணைத்தப்படி இருந்தவனிடம்"அப்பா! சாட்டர்டே, சண்டே அம்மாச்சி வீட்டுக்குப் போகலாமா? அம்மா வரச்சொன்னுச்சு" எனக் கேட்டாள்.

"எப்ப பேசின?"

"சாப்புடறதுக்கு முன்னாடி தான்"

"ஓ! ஏன் வரச்சொன்னா?"

"எப்ப வரேனு கேட்டேன், அதுக்கு அம்மா அங்க வானு சொன்னுச்சு, அம்மாக்கு இன்னும் உடம்பு சரியாகல போல"

"ம்ம்ம்!"

"அம்மா என்னைய அலாரம் வச்சு...." என செந்தா கூறியதை மகள் சொல்ல, கௌது மனதில்'பாப்புவுக்கு தேவையானதை சொல்லி தரா, இன்னைக்கு நடந்ததுக்கு யாரையும் தப்புச் சொல்லாம' என தோன்றியது.

"சொல்லுங்கப்பா!" என்ற மகளின் திடீர் கேள்வியில்,

"என்னடா சொல்லனும்?" எனக் கேட்டான்.

"அம்மாச்சி வீட்டுக்குப் போகலாமா?"

இதுவே நேற்றுக் கேட்டு இருந்தால், பார்க்கலாமென்று சொல்லி இருப்பான், இன்று ஏனோ அது முடியவில்லை, ஒரு நாளிலே மனைவியின் மகிமை மெல்ல வெளிச்சமானது.

"ம்ம்ம்! தூங்கு, நாளைக்கு ஸ்கூல் போகனும்" என்றான்.
………

கௌது, அடுத்த நாள் டவுன் போற வழியில் நடராஜனை கண்டான்.

"நல்லா இருக்கீயா தம்பி?" என விசாரித்தான் நடராஜன்.

"நல்லா இருக்கேன் அண்ணா, நீங்க?"

"ம்ம்ம்! பாப்பு ஸ்கூல் போயாச்சா? எப்டி இருக்கா?"

"போயாச்சு!" என்றவன், அடுத்து சில நிமிடங்கள் பொதுவாக பேசி விடைப் பெற எண்ணிய போது, நடராஜன் "கௌது! நீ எனக்கு சகலையா இருந்தாலும் தம்பி தான், அந்த உரிமையில் கேக்குறேன், செந்தா அங்க வந்ததில் இருந்து ஒன்னும் சொல்லல, அது எனக்கு கொழுந்தியா மட்டுமில்ல, அக்கா பொண்ணு அது ஏதோ மனசு சங்கடப் பட்டு வந்த மாதிரி தான் தெரியுது.

நாங்களும் உண்டாகிருந்த விசயத்தைக் கூட சொல்லலைனு கேட்டுப் பாத்துட்டோம், நான் இங்க இருக்கவா, இல்ல அந்த வீட்டுக்குப் போகவானு பதிலுக்கு கேக்குது, எப்பயும் வராத புள்ள வந்து இருக்கேனு நானும் அக்கா கிட்ட எதுவும் கேக்காதனு சொல்லிட்டேன்.

நீயும் வந்ததில் இருந்து செந்தா பத்தி ஒன்னுமே விசாரிக்கல, உங்க ரெண்டுப் பேருக்கும் என்ன மன வருத்தமோ, நான் அதுல தலையிடல ஆனா சீக்கிரம் பேசி சரியாகு தம்பி, நீ லீவுல வந்து இருக்க, இன்னும் ரெண்டு மாசம் கிட்ட தான் ஊருல இருப்ப, சொல்லிட்டேன். நான் கிளம்புறேன். பாப்புவை கூட்டிட்டு வீட்டுக்கு வா, பேசலாம்" எனக் கூறிவிட்டு விலகினான்.

கௌது, நடராஜன் பேசியதைக் கேட்டபின், செந்தாவைப் பற்றி யோசித்தான். தாய் வீட்டில் எதுவுமே சொல்லவில்லையா அவள்? என எண்ணியவனிடம், அவன் மனம்"அவ என்னனு சொல்லுவா?' எனக் கேட்டது.

'அவ தானே கன்சீவ் ஆனதை மறைச்சது, ஏன் உருவானுச்சுனு வருத்தப்பட்டவ அதையும் சொல்ல வேண்டியது தானே' என மனதிடம் வாதிட்டான்.

'அவ கெட்டவ இல்லையே கௌது, பாப்பு உண்டானப்ப அவ்வளவு சந்தோஷப்பட்டாளே. இப்ப என்ன ஆச்சு? அத நீ யோசி, இப்பவும் அவ இல்லாத வீடு வீடா தெரியலையே, ஏன் உன் அம்மாக்கு கூட செந்தா இல்லாம சமாளிக்க முடியல, மூணுப் புள்ளைங்களை தனி ஆளா கரைச் சேத்தவங்க, இன்னைக்கு பாப்புக்குச் செய்ய தடுமாறாங்க, அப்டினா தாய் போல, பொண்டாட்டி இடமும் முக்கியம்' என மனம் எதிரொலித்தது.

கௌது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

இரண்டு நாள்கள் நகர்ந்தது....

அன்று காலையில் செவாயி மெல்ல மகனிடம்"ஏப்பா கௌது! உன் பொண்டாட்டி போய் அம்மா வீட்டுல ஒரேதா தங்கிட்டா போல, பெத்தப் புள்ள, புருசன், குடும்பமுனு கொஞ்சம் கூட நெனப்பே இல்லாம, எல்லாம் நீ குடுக்குற இடம்" என ஆரம்பித்தார்.

அன்று விடுமுறை என்பதால், பாப்பு தூக்கத்தில் இருந்தாள், இன்னும் எழவில்லை.

கௌது"அம்மா! எனக்கும் அவளுக்கும் சண்டை, நான் தான் அவளை அம்மா வீட்டுக்குப் போனா திரும்பி வராதனு சொல்லிட்டு வந்துட்டேன், நான் கூப்புடாம வர மாட்டா" என்றான், இதற்கு மேல் மறைக்க இயலாது என்று.

"என்னடா சொல்ற? அது சரி, புருசன் ஏதோ கோபத்துல கொஞ்சம் கூடக் கொறச்சு பேசுனா அப்டியே அம்மா வூட்டுல கெடந்துடுவாளா? அங்க எத்தன நாளைக்கு கெடக்க முடியும், நீயா போய் கூப்புடாத, அங்க தொரத்தி விடும் போது தானா கெளம்பி வருவா, பெத்தப் புள்ளைய விட ரோசக்காரியா அவ" என மகனிடம் என்ன சண்டை, ஏதுவென்று விசாரிக்காமல் ஏத்திவிட்டார்.

ஆனால் கௌது தாய் பேசிய எதையும் காதில் வாங்கவில்லை, ஏனோ இன்று செவாயி பேசியது அனைத்தும் அவன் மனம் விரும்பாத வார்த்தைகளாக உருமாறியது, அதை வெளிப்படுத்தினால் சேதமாகிவிடும் என அமைதியாக அடக்கி வாசித்தான்.

ஏன் என்றால் செந்தா பாப்புவிடம் அவன் தாயைப் பற்றி தவறாக கூறவில்லை, அவள் வீட்டிலும் யாரிடமும் எதையும் சொல்லவில்லை ஆனால் செவாயி செந்தாவைப் பற்றி தவறாக பேசுவது அவனால் ஏற்க முடியாத உணர்வாக தோன்றியது.

பாப்பு எழுந்து, "அப்பா! அம்மாச்சி வீட்டுக்குப் போகலாமா?" எனக் கேட்டுக் கொண்டே வந்தாள்.

"ம்ம்ம்!" என கௌது பதில் அளிக்கப் போக, அதற்குள் செவாயி"அம்மாச்சி வீட்டுக்கா? அங்க எதுக்கு? அதான் உன் ஆத்தாக்காரி உன்னைய ஒதுக்கி...." என ஆரம்பிக்க, கௌது"அம்மா! என்ன பேசிட்டு இருக்க, பாப்பு சின்னப்புள்ள, அவளுக்கு நடக்குறது எதுவும் தெரியாது, அமைதியா இரு" என அதட்டினான்.

"இல்லடா!" என ஆரம்பித்த தாயை முதன் முறையாக திரும்பி முறைத்தான்.

"பாப்பு! நீ போய் குளிச்சுட்டு கிளம்பு, அம்மாச்சி வீட்டுக்கு அழைச்சுட்டுப் போறேன்" என்றான்.

செவாயிக்கு கோபம் எகிறிட, அடுப்படிற்குள் சென்று பாத்திரங்களைப் போட்டு உருட்டினார்.

பாட்டி"எப்பா பேராண்டி! இன்னைக்கு தான் உருப்புடியா பேசுற, வரும் போது அந்தப் புள்ளைய கூட்டியாந்துடு ராசா" எனப் பேரனைக் கொஞ்சினார்.

"அப்புச்சி! அம்மா வீட்டுக்குப் போகவானு அவளா தான் கேட்டா, நானா போனு சொல்லல, போனவ வருவா" என அழுத்தமாக கூறியவன், அறைக்குள் சென்று தயாரானான்.

கொலுசொலி ஆசைகள்....


 

Advi

Well-known member
இவன் இன்னும் திருந்தல ரைட்டர் ஜி, இன்னும் அலைய விடுங்க😏😏😏😏😏😏
 

admin

Administrator
Staff member
இவன் சரில அதான் அவங்க அம்மா இப்படி பேசுது.. பொறுப்பா காசு அனுப்புனா போதுமா பொண்டாட்டினா என்னனு புரியலை
 

NNK 89

Moderator
இவன் சரில அதான் அவங்க அம்மா இப்படி பேசுது.. பொறுப்பா காசு அனுப்புனா போதுமா பொண்டாட்டினா என்னனு புரியலை
Ama 😃😃
 
Top