எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மிஞ்சியின் முத்தங்கள் - கதை திரி 8

NNK-50

Moderator
மிஞ்சியின் முத்தங்கள் 8

1707732150798.jpeg

“இப்போ என்ன அவசரம் அவன் போய் ஒருவருஷம் தானே ஆகுது அடுத்ததடவ வரும்போது பாத்தா போதாதா” என்ற ராஜவேலுவை ஏறிட்ட பார்த்திபன் “ஏன் அடுத்ததடவ என்ன செஞ்சு அவன் நிம்மதியை கெடுக்கறதா இருக்கீங்க” என்றார் கூர்மையாக அக்காள் கணவரைப் பார்த்து.

அந்த வார்த்தைகளில் அதிர்ச்சியாகி மனைவியைப் பார்த்தார் ராஜவேலு “என்னடா சொல்ற என்ன செஞ்சார்? என்ன ஆச்சு?” என்று பதட்டமானார் பார்வதி.

‘என்னவென்று தனக்கே சரியாகத் தெரியாதபோது அதைப் பற்றிப் பேச வேண்டாம்’ என்று முடிவுச் செய்தவர் “அதெல்லாம் ஒண்ணுமில்ல பொதுவா சொன்னேன், எப்போவும் அவனை விரோதிமாதிரி தானே இவர் பாப்பார் அதைச் சொன்னேன்” என்றவர்.

“நீ என்ன சொல்ற பொண்ணு பிடிச்சிருக்கா பாரு” என்றார் பார்த்திபன்.

கொடிமலரை பார்த்தவுடனே மிகவும் பிடித்துவிட்டது பார்வதிக்கு “ரொம்ப லட்சணமா இருக்காடா எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு, நீ ஆதிக்கு அனுப்பு அவனுக்குத்தான பிடிக்கணும்” என்றார் மிகுந்த ஆர்வத்தோடு.

“அதெல்லாம் அனுப்பியாச்சு அவன்கிட்ட இருந்து சம்மதமும் வந்துடுச்சு ஆதிக்கு பொண்ணை பிடிச்சுருக்கு” என்றார்.

“எங்ககிட்ட கூடக் காமிக்காம எதுக்கு அனுப்பின, அவன்மட்டும் முடிவு செஞ்சா போதுமா ஏன் நாங்க பாத்து பிடிச்சிருந்தா அப்புறமா அவனுக்குச் சொல்லமாட்டோமா” என்று மீண்டும் குதிக்கத்தொடங்கிய ராஜவேலுவை கவனத்தில் கொள்ளாமல் வெளியேறினார் பார்த்திபன்.

‘பெண்பார்க்க வருகிறார்கள்’ என்று முதல்நாள் மாலைவரை தெரியாது கொடிமலருக்கு, ஒருவாரமாக அவளும் பார்க்கிறாள் வீட்டை ஒட்டடை அடிக்கிறார்கள் அடுக்கலையை தலைகீழாக மாற்றுகிறார்கள், சுற்றிலும் இருக்கும் இடத்தை எல்லாம் சுத்தப்படுத்துகிறார்கள்.

“என்னக்கா ஏன் இவ்ளோ வேலை செய்றீங்க” என்று அவள் கேட்டபோதுகூட ஒருவரும் கூறவில்லை, இன்று கல்லூரி முடிந்து மாலை அவள் வந்தபோது அனைவரும் ஏதோ தீவிர விவாதத்தில் இருந்தனர்.

“தேன்முறுக்கு சோமாசு நாங்க செஞ்சுவெச்சுட்டோம், காலைல கேசரி பண்ணிடலாம் அப்படியே கொஞ்சம் பஜ்ஜி போட்டுக்கலாம், பால் காலைல மாமா கறந்து கொண்டுவந்துடுவாரு” என்றாள் மூத்த சகோதரி.

அனைவரும் பேசுவதை கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் கொடிமலர், பெரிய அக்கா மாமா சின்ன அக்கா மாமா அண்ணன்கள் இருவர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க என்னவாக இருக்கும் என்ற யோசனையோடு அவர்களை நெருங்கினாள்.

“அவளுக்குச் சாப்பிட குடுத்து பக்குவமா எடுத்துச்சொல்லுங்க நாங்க வெளில போயிட்டு வரோம்” என்று ஆண்கள் வெளியேற “ஏங்க புள்ளைங்க டியூஷன் முடிஞ்சதும் கூட்டிட்டு இங்கயே வந்துடுங்க, எல்லார்க்கும் ராத்திரி இங்கேயே சமச்சுடுறோம்” என்றார்கள் சகோதரிகள்.

“சரி” என்று அவர்கள் கிளம்பிவிட கொடிமலர் குளித்து வந்ததும் அவளுக்கு முறுக்கும் நுரை தளும்பக் காப்பியும் கொடுத்து அருகிலே அமர்ந்துகொண்டார்கள் சகோதரிகள்.

இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே “என்னக்கா” என்றாள் அவள்.

“சாப்பிடு சொல்றோம்” என்றவர்கள் அவள் முடித்தபிறகு “நாளைக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க பாப்பா” என்று அவள் தலையில் இடியை இறக்கினார்கள்.

“என்ன!” என்று அதிர்ச்சியானவள் “எனக்குக் கல்யாணம் வேண்டாம்" என்றாள் உடனே.

“அச்சாணியமா பேசாத பாப்பா நல்ல விஷயம் பேசும்போது இப்படி சொல்லக் கூடாது, நல்லா விசாரிச்சு ஜாதகம் எல்லாம் பாத்து அதுக்கு அப்புறம்தான் முடிவு பண்ணியிருக்கோம், எங்க எல்லார்க்கும் பிடிச்சுருக்கு நாளைக்கு அவங்க வந்து பாத்து பிடிச்சுடுச்சுன்னா அப்புறமா உனக்கு மாப்ள போட்டோ காட்டறோம்”.

“இப்போவாரைக்கும் கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான் இருந்தாலும்… ஒருதடவை அவங்க வந்து நேர்ல பாத்துட்டா நமக்கும் கொஞ்சம் தெம்பா இருக்கும்” என்றார்கள்.

அவர்கள் பேசியது எதுவும் செவியில் நிறையவில்லை, மனம் முழுதும் மீசையை முறுக்கிக்கொண்டு தன்னை பார்த்துப் புன்னகைத்து சென்ற அதிவீரனின் சிரிப்பில் சிக்கி கிடந்தது.

‘அவங்க வர இன்னும் ஒரு வர்ஷம் இருக்கே… இவங்க பாத்த மாப்பிள்ளை கூட என் கல்யாணம் நடந்துடுமா?’ நினைக்கவே நெஞ்சம் கசந்தது ‘அவங்கள தவிர யாரையும் கட்டிக்கமாட்டேன்னு சொல்லிடலாமா’ என்று யோசித்தவள்.

“எனக்குப் பிடிக்கல யாரையும் நான் பாக்கமாட்டேன்” என்றாள் மீண்டும்.

“பாப்பா சொல்லிட்டே இருக்கேன் இப்படி பேசினா எப்படி? அவனுங்க முகத்தைப் பார்த்தியா எம்புட்டு சந்தோஷம்னு… இந்தச் சம்பத்தம் முடியணும்னு அவ்ளோ ஆசையா இருக்காங்க, நல்ல இடம் பாப்பா உனக்கு நாங்க கெடுதல் பண்ணுவோமா இப்படி பேசாத அவங்க மனசு கஷ்டப்படும்” என்றவர்கள் அவளுக்குப் புத்திமதி கூறிவிட்டு இரவுணவு சமைக்க சென்றனர்.

நிற்காமல் கண்ணீர் வழிந்தது கொடிமலருக்கு ஆரவாரமாக வீட்டிற்குள் நுழைந்த கயல்விழி கொடிமலரை தேடி பின்னில் கொட்டகைக்கு வந்தாள்.

அழுதுகொண்டிருக்கும் தோழியைப் பார்த்துப் பதறியவள் “அடியே மலர் என்னடி என்னாச்சு” என்று அருகில் வர.

“நான் சாகப்போறேன்” என்றாள் அவள்.

அவள் வாயிலே ஒரு அடி போட்ட விழி “விளக்கு வெச்ச நேரம் என்ன பேசுற கழுத என்னடி பிரச்சனை உனக்கு” என்க.

“நாளைக்கு பொண்ணு பாக்க வரங்களாம்” என்றாள் தேம்பிக்கொண்டே.

“ஆமா அம்மா இப்போதான் சொன்னுச்சு அதான் ஓடிவந்தேன்” என்றாள் முகம் கொள்ளா சந்தோஷத்தோடு.

“நீயும் அவங்கள மாதிரியே பேசுற எனக்குப் பிடிக்கல நான் கல்யாணம் செஞ்சுக்கமாட்டேன்” என்றாள் மலர்.

இப்பொழுதுதான் விஷயம் புரிந்தது கயல்விழிக்கு “ஓஹ்… பாக்கவரவங்க பேரு அதிவீரன்னு இருந்தா அப்பவும் வேண்டாமா…” என்றாள் விழி தோழியை ஆழ்ந்துபார்த்து.

சட்டென்று கயல்விழியை திரும்பிப் பார்த்தாள் மலர் “அவங்களா வராங்க!” என்றபோது அந்தக் குரலில் ஜீவன் மீண்டிருந்தது.

“ஹ்ம்ம்… ஆமாம், வீரா அண்ணா வீட்ல இருந்துதான் வராங்க இப்போதான் விமல் அண்ணாவை பார்த்தேன், ஆனாலும் இந்த எலிகுட்டிக்கிட்ட என்ன பிடிச்சுதுன்னு இந்த அண்ணா இவ்ளோ வேலை பாத்துருக்கார்ன்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கு” என்றாள் தாடையில் கைவைத்து.

அவளின் தோளில் அடித்த மலர் “நான் எலிக்குட்டியாடி உனக்கு” என்று முறைத்தவள் “நிஜமா அவங்க வீட்ல இருந்துதான் வரங்களா” என்று கேட்டபோது குரல் இடறி விழிகள் மீண்டும் நிறைந்தது.

“ஆமா மஹாராணி ஆமாம், இந்த மலருக்காக என்னெல்லாம் செஞ்சுருக்காங்க தெரியுமா” என்றவள் சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு ரகசிய குரலில் சொல்லத்தொடங்கினாள்.

“ஊருக்குப் போறதுக்கு முன்னாடி பெரியண்ணாகிட்ட உங்க தங்கச்சிய பிடிச்சுருக்கு கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படுறேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க, அப்புறம் விமல் அண்ணா மூலமா யாருக்கும் சந்தேகம் வராம உன் ஜாதகத்தை வாங்கிக்கிட்டாங்க”.

“அவங்க மாமா மூலமா ஜோசியர்கிட்ட காட்டி ஏதாவது பிரச்சனை இருக்கானு கேட்டுக்கிட்டாங்க, ஏன்னா நாளைக்கு நம்மவீட்டில ஜாதகம் பாக்கும்போது பிரச்சனை இருக்குனு சொல்லிட்டா என்ன பண்ண அதனால முன்னாடியே பாத்துக்கிட்டாங்க”.

“ஒருவேளை இந்தத் தோஷம் அந்தத் தோஷம்னு இருந்திருந்தா அந்த அண்ணா ஜாதகத்தை மாத்தியிருப்பங்களாம்” என்க கொடிமலர் இதழ்களைக் கடித்துக்கொண்டாள், அழுது சிவந்த முகத்தில் வெட்கம் இன்னும் கொஞ்சம் குங்குமத்தை சிதறி சென்றது.

“உனக்கு எப்படி தெரியும்” என்றாள் மலர்.

“சந்திரா அண்ணியை பார்த்தேன் அவங்க புருஷன்(விமல்) அவரோட நண்பன் அதிவீரனின் காதல் கதையை ரசிச்சு சொன்னாராம், அதை என்கிட்டே உளறிடுச்சு, அப்படியே வரும்போது கெஞ்சல்வேற அடியே விழி யார்கிட்டயும் சொல்லிடாதடி என் புருஷன் என்னை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருவாருன்னு” என்று சிரித்தாள் விழி.

“உன் அண்ணனுங்க ஊர்ல ஒரு ஆள் விடாம நல்லா விசாரிச்சுட்டாங்க, ஜாதகம் பாத்துட்டாங்க அதுக்கு அப்புறம்தான் சம்மதம் சொல்லியிருக்காங்க, நாளைக்கு அந்த அண்ணா வீட்ல இருந்து எல்லாரும் வருவாங்க முக்கியமான ஆளைத் தவிர” என்றாள் விழி.

“ஆம் அது மலருக்கும் தெரியும் அவன் வரப்போவதில்லை, சென்று பதினோரு மாதங்கள்தான் ஆகிறது இப்பொழுது வர வாய்ப்பில்லை, அது அவளுக்கும் புரிந்தது என்றாலும் மனம் அவனைத் தேடியது அந்த நொடி.

தோழியை இறுக அனைத்து “தேங்க்ஸ்” என்றவள் “எனக்குக் கோவிலுக்குப் போகணும் விழி” என்றாள் கெஞ்சலாக.

“என்ன விளையாடுறியா… காலைல பத்துமணிக்கு அவங்க வராங்க, வீட்லயிருந்து வாசல்படி தாண்டக்கூட விடமாட்டாங்க” என்றாள் விழி.

அது உண்மையும்கூட என்றாலும்… மலருக்குப் போக வேண்டும் என்று தோன்றியது, அடிப்பிரதக்ஷணம் செய்ய வேண்டும் கருமாரியம்மனுக்கு வருபவர்களுக்குத் தன்னை பிடிக்க வேண்டும் திருமணத்திற்கு அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல் தீவிரமானது.

அவள் முகத்தைப் பார்த்த விழி “சரி இரு நான் போய்க் கேட்டுப்பாக்குறேன்” என்று சமையலறை நோக்கிச் சென்றாள், இவள் சென்று கேட்கத் தமக்கைகள் இருவரும் யோசனையாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்னடி பேசுற காலைல நேரமே இருக்காது அப்போ எப்படி போறது” என்றார் கஸ்தூரி.

சிறிதுநேரம் யோசித்த சுமதி “போயிட்டுவரட்டும் கஸ்தூரி, பாப்பா கைக்குள்ளயே வளந்துடுச்சுல்ல அதான் கல்யாணம் சொன்னதும் பயப்படுது போய் வேண்டிட்டு வரட்டும் எல்லாம் நல்லதே நடக்கும்” என்க.

காலை ஏழு மணிக்கெல்லாம் தோழிகள் இருவரும் கோவிலில் இருந்தனர், அடிப்பிரதேஷணம் முடிந்து வேண்டுதல் வைத்து வெளியில் வர… ஒருபக்கம் தடுப்புக்கு என்று வைத்திருந்த தகரத்தில் கால் தட்டி நன்றாகக் கிழித்துவிட்டது மலருக்கு.

ரத்தம் வரத்தொடங்க “என்னம்மா கோவில்ல ரத்தம் சிந்திடுச்சு, ஏதோ அபசகுனமா நடக்கபோகுது” என்றார் பூ விற்கும் பெண்மணி.

கொடிமலரின் மனதில் பய மேகம் சூழ்ந்தது இறுக்கமாக விழியன் கைகளைப் பற்றிக்கொண்டாள், விரல்கள் நடுங்கியது அழுகை வெடிக்க காத்திருக்க.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, சாமி உனக்கு நல்லதுதான் செய்யும் இவங்க சும்மா ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க நீ வா” என்ற கயல்விழி வெளியில் இருந்த பைப்பில் காயத்தைக் கழுகிக்கொண்டு கடையிலிருந்து ஒரு சிறு துணியை வாங்கி கட்டிவிட்டாள்.

வீட்டிற்கு வந்தபிறகும் மலரின் முகம் தெளியவில்லை வீட்டினர் திருமணம்குறித்த பயம் என்று நினைக்க, விழி ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள்.

மஞ்சள் பச்சை சிகப்பு என்று தமக்கைகள் புடவைகளை எடுத்து வைத்திருக்க மலரின் கரங்கள் அந்தக் கத்தரிப்பூ நிற புடவையை வருடியது.

ஏனோ அதைத்தான் உடுத்த சொன்னது அவள் மனம், மெலிதான ஒப்பனையோடு அளவான நகைகளோடு மல்லிப்பூ சூடி நின்றாள் பெண்ணவள்.

நேரம் நெருங்க நெருங்கப் படபடப்பு கூடியது “பயமா இருக்குடி அவங்க என்ன சொல்லுவாங்க” என்ற தோழியைப் பார்த்த விழி “அவங்க என்ன சொல்லுங்கன்னு எனக்குத் தெரியாது ஆனா உன்னைத் தவிர அந்த அண்ணா யாரையும் கட்டிக்க மாட்டார் அதுமட்டும் எனக்குத் தெரியும்” என்றாள் கயல்விழி உறுதியாக.

“மாப்ள வீட்ல வந்துட்டாங்க” என்ற சுகுமாரின் குரல் ஓங்கி ஒலித்தது.

யார் யார் வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை பேச்சுக் குரல்கள் மெல்ல உயர்ந்துவந்தது, சிறிது நேரத்திற்கு பிறகு வந்த சுமதி “வாப்பாப்பா காப்பி கொண்டுபோய் கொடு” என்க.

“பயமா இருக்கு” என்றாள் விழியின் பின்னால் ஒளிந்துகொண்டே.

சிரித்துக்கொண்டே அவள் அருகில் நெருங்கிய சுமதி “முதல்ல அப்படித்தான் இருக்கும் சரியாப்போயிடும்” என்று அவளின் கையில் ட்ரேயை கொடுத்து “பாப்பா போய் எல்லார்க்கும் குடுத்துட்டு ட்ரேவ விழி கைல குடுத்துடு, அப்புறம் விழுந்து கும்பிட்டுக்கோ” என்றார் சுமதி.

நடுக்கும் கரங்களில் ட்ரெவை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அறையிலிருந்து வெளியில் வந்தாள் மலர், முன்னிலே சின்ன அண்ணன் முத்து நிற்க அங்குசென்று தேங்கி நின்றாள் கொடிமலர்.

“குடு பாப்பா அண்ணா இங்கதான் நிக்குறேன் போ” என்றான், விழி பின்னிலிருந்து உந்த அனைவருக்கும் கொடுத்துமுடித்தாள்.

“முன்னாடியே பேசிட்டோமே தம்பி எங்களுக்குச் சம்மதம் உங்க பக்கம் என்னன்னு சொல்லுங்க” என்றார் பார்த்திபன்.

"அவர்கிட்ட எதையுமே கேக்காத மாமா சபைல நீயே பேசு" என்று மருமகன் கூறியிருக்க அதை ராஜவேலுவிடம் தனிமையில் சொல்லியே அழைத்துவந்தார் பார்த்திபன், அதிவீரனின் முடிவு என்பதால் வாயைத் திறக்கமுடியாமல் பல்லைக் கடித்து அமர்ந்திருந்தார் ராஜவேலு.

“நான் இன்னும் பொண்ணுகிட்ட பேசலையே மாமா” என்ற குரலில் அனைவருமே அதிர்ந்து திரும்பிப் பார்த்தனர், துபாயில் இருக்கவேண்டியன் இங்கு எப்படி என்று அவன் குடும்பத்தினர் வாய் பிளந்து பார்க்க.

அவளை எப்பொழுதும் அசையாமல் பிடித்து நிறுத்திவிடும் அவனின் வசீகர புன்னகையோடு வாயிலில் நின்றிருந்தான் அதிவீரன்.


 
Top