எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன்…….10

நிலாச் செய்தி ….

பூமியை சார்ந்த நிலாவுக்கு மட்டுமே போக முடிந்த நம்மால், ஏன் மற்ற கிரக நிலாக்களுக்கு போக முடியவில்லை ? காரணம் மிக மிக அதிக தொலைவு என்ற காரணம்தான். ஆனால் அதுவும் விரைவில் கைகூடும் என நம்பலாம்.

இதுவரை பச்சையன்…..

தன் காதலன் பச்சையனை விமலாவும் விரும்புவதாக கூற, கோபமடைந்த நிலாமகளுக்கும் , விமலாவுக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. கடைசியில் சாந்தி இடையில் புகுந்து சமாதானப்படுத்த இருவரும் அமைதியாகிறார்கள். விமலா தன்னுடைய காதலின் நியாயத்தை சொல்ல முயற்சிக்க திடீரென நிலாமகளின் முகம் மாறுகிறது. விமலாவிற்கு பின்னால்……

பச்சையன் ……….10

விமலா தன்னுடைய தரப்பு காதல் நியாயத்தை சொல்ல முயல , திடீரென நிலா மகளின் முகம் மாறுவதை கண்டு , அதுவும் அவள் பார்வை தனக்கு பின்னால் செல்வது கண்டு விமலா திரும்பி பார்த்தாள்.

மாலை நேர மஞ்சள் வெயில் பிண்ணனியில் பச்சையன் நின்றிருந்தான். பச்சையனை கண்டு இருவரும் பதறி எழுந்தனர். சற்று விலகி நின்றனர்.

பச்சையன் உள்ளே நுழைந்து ஒரு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். இருவரும் சற்று தள்ளி அமர்ந்தனர்.

இதுவரை காணாமல் தவித்த பச்சையனை கண்டு பரவசத்தில் நிலாமகளுக்கு கன்னத்தில் செம்மையும் , தன்னை தவிக்க விட்டவனை நினைத்து மனதில் வெம்மையும் பரவியது. . விமலாவிற்கு திடீரென பக்கத்தில் மறுபடியும் பச்சையனை பார்த்தவுடன் கண் இமைகள் படபடத்தன.

நிலா மகள் ஆரம்பித்தாள்.

“ காணாமல் காத்திருக்க வைத்தது நியாயமா ?”

“காதலில் காத்திருப்பதே சுகம்தானே, நியாயம்தானே ? “

“ என்னுடைய தொடர்பு அட்டையை வாங்கி விட்டு மவுனம் சாதித்தால் என்ன அர்த்தம் ?”

“ மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று அர்த்தம் “

பச்சையனின் பதிலுக்கு பதில் கேட்டு நிலாமகள் சிணுங்க ஆரம்பித்தாள், அவனின் வாரத்தையை கேட்டு நிலாமகளின் மனதில் இருந்த வெம்மை காணாமல் போய் அங்கேயும் வெட்க செம்மை பரவ ஆரம்பித்தது.

” பதிலுக்கு பதில் பேசுவதுதான் உங்கள் பதிலா ? இல்லை கேள்விக்கு பதில் கேள்வி கேட்பதுதான் உங்கள் நியாயமா ?”

“ கோபப்படும்போது கூட பெண்கள் அழகு என்று சொல்லுவார்கள், ஆனால் உனக்கு அழகே கோபம்தான். அதாவது கோப உணர்வு கூட அழகாக மாறி விடுகிறது “

நிலா மகளுக்கு வார்த்தை வராமல் தவித்தாள் . அடுத்து என்ன பேசுவது என தெரியாமல் தவித்தாள். அவள் தவிப்பை கண்டு ரசித்துப் பார்த்தான் பச்சையன் .தன்னை பார்வையால் ரசிப்பதைக் கண்டு , பல பேரை தவிக்க விட்டவள் தவித்து போனாள்.

“ மறுபடி கேக்கறேன், ஏன் என் கூட பேசலை ?”

விமலா அங்கிருப்பதை மறந்து இருவரும் தன்னை மெய்மறந்து பார்த்தும், பேசிக் கொண்டும் இருந்தனர்.

“ கோபப்படாதே நிலா, நான் செல்போனுக்கு எதிரானவன். அதாவது எல்லாவற்றையும் இங்கே ( தலை மேற்பகுதியை தட்டி ) பதித்து வைப்பவன். இன்றைக்கு மனிதன் தன் மூளையில் பதிக்க வேண்டியதை , மூலையில் எறிய வேண்டிய உயிரில்லாத செல்போனில் பதித்து வைத்து அலைகின்றான். இயற்கையோடு வாழ்ந்து வெத்தலையில் சுண்ணாம்பு தடவியவன், செல்போன் ஸ்கீரினை தடவிகொண்டு அலைகின்றான். முகம் பார்த்து பேசியவன், முகநூலில் தொலைந்துபோய் அலைகின்றான்.

நான் ஒவ்வொன்றையும் உள்வாங்கி மூளையில் பதிய வைப்பவன். அன்று நீங்கள் குற்றாலத்திற்கு வந்த போது விமலா ஆரஞ்சு சுடிதார், நீ மஞ்சள், வசந்தி பச்சை , மாலா நீலம் , மாதவி கரும்பச்சை நிற சுடிதார்,

போதுமா ? உனக்கு இடது ஓரத்தில் விழுந்ததில் சுடிதார் சிறிது கிழிந்து இருந்ததை விமலா சரி செய்தாள். எல்லாரும் வலது கையில் வாட்ச் கட்டியிருக்க, நீ மட்டும் இடது கையில் கட்டியிருந்தாய். இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமா ? “

விமலாவும் , நிலாமகளும் பிரம்மை பிடித்து நின்றனர்.

’ இவனுக்குள் இப்படி ஒரு திறமையா ? இன்னும் என்ன என்னத்தையெல்லாம் கவனித்தானோ ? எமகாதப் பயலாக இருக்கிறானே ? போனில் உள்ள அனைத்து ஆப்புக்கும் ஆப்பு வைப்பவனாக இருக்கிறானே ! கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . ஆனாலும் நமக்கு ஏத்த ஆள்தான் ‘ நிலா மகளின் மனதிற்குள் பலவாறாக எண்ணங்கள் ஓடியது .

“ என்ன பேச்சையே காணோம் ? சாயந்திரத்திலேயே கனவா ? மற்ற எல்லாரும் போய்விட்ட பிறகும் நீங்கள் போகாம என்ன பண்றீங்க ? “

நிலா மகளுக்கு சுதாரிப்பு வந்தது. தனக்கு சற்று தள்ளி விமலா இருப்பதை கண்டு நிதானத்தற்கு வந்தாள். இவ்வளவு நேரம் சரிக்குசரி சண்டை போட்ட விமலா , பச்சையன் வந்ததிலிருந்து எதுவும் பேசாமல் இருப்பதை கண்டு வியந்தாள்.

“ ஏண்டி , இவ்வளவு நேரமா நானும் அவரை காதலிக்கறேன், நானும் அவரை காதலிக்கறேன்னு கத்தி கூப்பாடு போட்டியே, இப்ப வாயை திறடி. வாயை பிளந்து பார்த்துகிட்டு இருக்க “

பச்சையன் ஆச்சரியப்பட்டு பார்த்தான்.

“ எனக்கு இரண்டு பேர் போட்டியா ? இது என்னடா வம்பா இருக்கு ? நான் பார்த்தது ஒரு ஆள், என்னை பார்த்தது ஒரு ஆளா ? அம்மா நிலா நான் அப்பாவி, எதுவும் செய்யலை. எல்லாம் தானா நடக்குது “

“ அதுக்காக நான்தான் முதல்ல விரும்புனேன், விரும்புறேன். இது என்ன நியாயம் ? “ நிலா மகள் பொங்கினாள்.

விமலா முதன் முதலாக வாயை திறந்தாள்.

“ ஏன் ஒரு கடையில இருக்கற ஒரே ஒரு பொம்மைக்காக இரண்டு பேர் சண்டை போட்டுக்கறது இல்லையா ? நான் தேடி போகலை, காதல் ஆசை தேடி வந்துச்சு ! நான் சிக்கிகிட்டேன் . ஏன் எனக்கும் ஆசை வரக்கூடாதா ? காதல் வரக்கூடாதா ? “

” பார்றா என்னை வச்சு இவ்வளவு நேரம் சண்டை போட்டுகிட்டு இருந்தீங்களா ? எனக்கே என்ன பண்றதுன்னு தெரியலை ? இது என்னடா வம்பா போச்சு ! “ பச்சையன் பதில் கொடுத்தான்.

“ அதுக்காக நான் உங்களை விட்டு கொடுக்க மாட்டேன் . எனக்குதான் நீங்கள்”.

பதில் சொன்ன நிலா மகளுக்கு விமலா மகள் பதில் கொடுத்தாள்.

“ நானும் விரும்புவேன் . இது என் உரிமை “.

விமலா பதிலடி கொடுத்ததை கண்டு பச்சையன் திரும்பி விமலா பார்த்தான்.

விமலா திடீரென எழுந்தாள்.

“ எனக்கு இப்ப அவசரமா போக வேண்டியிருக்கு. மணி இப்ப ஆறரை ஆகுது. என்னோட காலுக்கு டிரஸ்ஸிங் பண்ண வேண்டி இருக்கு . டாக்டர் ஏழு மணிக்கு போயிருவாங்க. நிலா , நான் நாளைக்கு உன்னோட வீட்டுக்கு வர்றேன் . நாளைக்கு நீ ஆபிஸை திற, நான் கொஞ்சம் லேட்டா வருவேன்”.

சொல்லிவிட்டு காலை ஊன்றி மெதுவாக வாசல் பக்கம் போனவளை நிலா கேட்டாள்.

“ என்னடி பரபரப்பா வர்றே, படபடப்பா பேசுற, வெளியே போக பறக்குற. அவர்கிட்ட கொஞ்சம் பேசிட்டு போக வேண்டியதுதானே”.

“ இல்லைடி , நீ அவரை உன் வீட்டுக்கு கூட்டிகிட்டு போ, நான் அங்க ஒரு 8 மணிக்கு வர்றேன். அப்புறம் இருக்கு வேடிக்கை”

பக்கத்தில் சென்ற ஒரு ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி விமலா ஏறிக்கொண்டு கையை அசைத்து கிளம்பினாள்.

நிலா மகள் திரும்பி உள்ளே பார்த்தாள். பார்த்தவுடன் வெட்கம் காட்டு அட்டைப்பூச்சியாய் முகத்தில் ஒட்டிக்கொண்டது. பச்சையன் அவளுடைய போனை எடுத்து விரல்களால் தடவி கொண்டிருந்தான். அது என்னமோ அவள் மனதை வருடுவது போல நினைத்து அதிகமாக வெட்கப்பட்டாள்.

பச்சையனுக்கு தெரியாமல் விமலாவை போட்டோ எடுக்கச் சொல்லி அதை தனது செல்போன் ஸ்கீரினில் முன்பக்கம் வைத்து யாருக்கும் தெரியாமல் அடிக்கடி பார்த்து மகிழ்ந்தாள் . விமலாவுக்கு மட்டும் தெரிந்த உண்மை மற்ற யாருக்கும் தெரியாது ரகசியம் காத்தவள் இன்று மாட்டிக்கொண்டாள்.

பச்சையன் ஆரம்பித்தான்.

“ தரையில் தொட்டவனை திரையில் அடிக்கடி தொட ஆசையோ ? “

“ மனதை தொட்டவனை மறுபடி தொட ஆசைப்படுவது தவறில்லையே “

“ கால்கள் நகர்ந்தாலும் மனசு நகரவில்லையோ இன்னும் ?”

“ நகர மறுக்குது மனசு, நகர விடவில்லை மனசு. பேதை நான் என்ன பண்ணுவேன் ?”

“ காதல் வந்தவுடன் எல்லாவற்றிற்கும் துணிந்து விடுகிறார்களே இந்த பெண்கள் “

“ துணிச்சலை தருவதுதானே காதல். எல்லாவற்றையும் தூக்கி எறிய வைப்பதும் காதல்தானே “

“ பிரமாதம் , என்னை யாரென்று முழுமையாக தெரியாமல் என்னை நம்புவது ஆச்சரியமாக உள்ளது “

“ ஒரு பெண் ஒருவனை நம்பிவிட்டால் மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி விடுகிறாள், மற்றவர்களையும் ஒதுக்கி விடுகிறாள். காதல் அவளை சுற்றி வளைத்து தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா ?”

பச்சையன் பேச்சு மூச்சற்றுப் போனான். அவளை மேலும் கீழுமாய் பார்த்தான். கண்களில் ஆச்சரியம் உட்கார , நிலா மகள் அவள் பேசாமல் தன்னை உற்று நோக்குவதை கண்டு வெட்கமே வெட்கப்படும் அளவிற்கு வெட்கப்பட்டாள்.

இடையில் சின்ன சின்ன குறுந்தகவல்கள் வர நிலாமகளின் போனை கையில் வைத்திருந்த பச்சையன் அதை படித்து கொண்டு இருந்தான். நிலா மகள் என்னவென்று முகம் உயர்த்திப் பார்க்க விளம்பரம் என அவன் சைகையில் சொல்ல , இவள் கையை இட வலமாக வேண்டாம் என ஆட்ட அவன் அழித்தான். பின் அதை மவுனமாக்கினான்.

மணி ஏழை தாண்டி கொண்டு இருந்தது.

“ பச்சை , அம்மா தேடுவாங்க . என் கூட வாங்க. சாப்பிட்டு போகலாம். நேரமாச்சு , விமலா கூட வர்றேன்னு சொல்லியிருக்கா. என்னோட ஸ்கூட்டி இருக்கு, கூட்டிகிட்டு போறேன்”.

“ இல்லை, நான் நாளைக்கு வர்றேன். நீ போ . நாளைக்கு பார்க்கலாம் “

“ ரொம்ப பிகு பண்ணாதீங்க , அம்மா உங்களை பார்க்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க. ஆமா …நீங்க எங்க தங்கி இருக்கீங்க ?”

” நான் பக்கத்துல ஒரு சின்ன ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கியிருக்கேன். அந்த இடம்….” இடத்துப் பெயரைச் சொன்னான்.

“ நீங்க என்கிட்ட தப்ப முடியாது. நீங்க தங்கியிருக்கற ஹோட்டல் எங்க வீட்ல இருந்து மூணு தெரு தாண்டிதான் இருக்கு. பேசாம என்கூட வாங்க “ என்று நிலாமகள் சொல்லிவிட்டு முன்னாடி நடக்க, பச்சையன் பின் தொடர்ந்தான்.

நிலா ஆபிஸை பூட்டி விட்டு அவனிடம் வண்டி சாவியை நீட்ட அவன் , அவளை நோக்கி நீ வண்டி ஓட்டு எனக்கு ஓட்டத் தெரியாது என சைகையில் விரலை நீட்ட நிலாமகள் ஆச்சரியப்பட்டாள் . எதுவும் பேசாமல் அவளை பார்த்து சிரித்து விட்டு வண்டியில் ஏற, பின்னால் பச்சையன் வண்டியில் பின்னால் ஏறி பட்டும்படாமல் உட்கார்ந்தான்.

அருகில் அமர்ந்து இருந்த பச்சையனிடமிருந்து ஒருவிதமான வித்தியாசமான, மனதை கவர்ந்து இழுக்க கூடிய ஒரு வித குளிர்ச்சியான நறுமணம் வீசுவதை நிலாமகள் உணர்ந்தாள். அவனுடைய மூச்சுக் காற்று கூட சற்றே குளிர்ச்சியாக தனது புறங்கழுத்தில் படுவது உணர்ந்து உடல் சிலிர்த்தாள்.

பச்சையன் தன் இடது கையில் போனை வைத்திருக்க , அதன் திரை வெளிச்சம் வருவதை வண்டி கண்ணாடி வழியாக பார்த்தாள்.

“ பச்சை யாரோ போன் பண்றாங்க போல..யாரு ? “

பச்சையன் உற்றுப் பார்த்தான்.

“ யாருன்னு தெரியலை , புது நம்பரா இருக்கு , அப்புறம் வீட்டுல போய் பேசுவோம் “

” சரி , அப்படின்னா கட் பண்ணுங்க, அப்புறம் பார்த்துக்கறேன். போனை ஆப் பண்ணுங்க. பிறகு பார்க்கலாம் “

“ ம்ம்ம்… நான் பார்த்துக்கறேன்”.

பச்சையன் சில வினாடிகள் போனை பார்த்துவிட்டு அதை முழுவதுமாக அணைத்து விட்டான்.

நிலா உற்சாகத்தில் இருந்தாள். இறக்கை கட்டி பறப்பது போன்ற உணர்வு. ஒரே நாளில் பார்த்து, இரு நாளாக காதலில் விழுந்து , மூன்றாவது நாளில் காதலனை கடத்தி செல்வது போல வண்டியில் வைத்து தன் வீட்டிற்றே கூட்டி செல்லும் தன்னுடைய செயலை நினைத்து , துணிச்சலை நினைத்து வாய் விட்டு தன்னை மறந்து சிரித்து விட்டாள்.

“ என்ன நிலா , உனக்கு நீயே சிரிச்சுக்குற ?”

“ இல்லை பொதுவா ஆம்பளைக , பொண்ணுகளை கடத்திட்டு போய் கட்டாய கல்யாணம் பண்ணுவாக, ஆனா நான் இங்கே உங்களை கடத்திட்டு போய் கட்டாய காதல் பண்றேன். அதை நினைச்சேன் சிரிப்பை அடக்க முடியலை”

“ ஓ ! கதை அப்படி போகுதா ? நான் ஒருவேளை வண்டியில இருந்து குதிச்சிட்டேன்னா என்ன பண்ணுவ ? “

“ என் மனச விட்டு உங்களால குதிக்க முடியாது”.

“ அம்மா தாயி, ரோட்டை பார்த்து வண்டி ஓட்டு. யார் மேலயாவது மோத போற “

“காதலுக்குதான் கண் இல்லை, ஆனா எனக்கு உண்டு “

“ அது சரிம்மா , உங்க ஆபிஸ்ல இருந்து நேரா கிழக்கு பக்கமா போய் திரும்பி கொஞ்ச தூரம் போய் பின் வடக்கு பக்கமா போய் வலது பக்கம் திரும்பி நாலு சிக்னல் தாண்டினா உன் வீடு, அதுக்கப்பறம் இரண்டு தெரு தாண்டினா நான் தங்கியிருக்க இடம். ஆனா நீ வேணும்னே மேற்கு பக்கம் திரும்பி வடகிழக்கு பக்கம் போய்கிட்டு இருக்க. இருபது நிமிசத்துல போய் சேர வேண்டிய உன் வீட்டை நாப்பது நிமிசத்துக்கு மேல என்னை வச்சு சுத்திகிட்டு இருக்க “.

நிலா மகள் ஆச்சரியத்தில் உறைந்து போனாள்.

‘ இவன் என்ன மனிதனா ? இல்லை கம்ப்யூட்டரா ? எல்லாத்தையும் கூர்மையா கவனிக்கறானே ! எமகாதனா இருக்காரே , கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் போல ‘

” ஐயா, சரியான பாதைக்கு திரும்பிட்டேன். உங்களை ஏமாத்து முடியாது போல , எப்படி உங்களால எல்லாத்தையும் கவனிக்க முடியுது ,அதை ஞாபகம் வச்சுக்க முடியுது . என்னால நம்ப முடியலை “

“ நீங்க கண்ணால பார்த்து உள்வாங்குறீங்க , இதயத்துல பதிய வைக்க முயற்சிக்கறீங்க. ஆனா நான் அப்படி இல்லை, நான் கண்ணுல உள்வாங்கி என் மூளையில பதிய வைச்சுக்கறேன் , என்னைக்கும் மறக்க மாட்டேன். நீ வண்டி ஓட்டறப்ப உனது இடது கைவிரல்ல கட்டை விரல் மட்டும் தூக்கி தாளம் தட்டிகிட்டே வண்டி ஓட்ற, சரியா ?”

“ அய்யா , போதும்யா போதும், இதோ வீடு வந்தாச்சு. இறங்குங்க “

தன் மகள் யாரோ ஒரு ஆணை பின்னாடி உட்கார வைத்து வண்டியில் வந்து இறங்கியதை வாசலில் நின்ற பார்கவி சந்தேகமாக உற்றுப் பார்த்தாள். பின் மகள் சொன்ன விசயம் ஞாபகத்திற்கு வர புன்னகையை முகத்திற்கு கொண்டு வந்தாள்.

“ வாம்மா , இவ்வளவு நேரமா ? இப்ப கூட போன் பண்ணினேன், ஆனா உன்னோட போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது. சீக்கிரம் வந்தா என்ன ? “

“ அதான் வந்திட்டேன்ல , வாசல்ல மறிச்சு கோர்ட்ல குறுக்கு விசாரணை பண்ற மாதிரி பண்ணிகிட்டு இருக்க”

” சரிடி , கோவிச்சுக்காத , வாங்க தம்பி உள்ளே “

அனைவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

பச்சையன் அங்கே இருந்த ஒரு சோபாவில் உட்கார்ந்தான். பார்கவி அவனை ஒரு பார்வை பார்த்தாள். எல்லா அழகையும் கொட்டி வைத்தது போல ஒரு களையான முகம், வசீகரிக்கும் கண்கள் , மர்மமான ஆனால் அழகிய புன்னகை, நேர்த்தியான உடை. அப்புறம்…

நிலா அம்மாவை தோளில் வலிக்காமல் தட்டினாள்.

“ என்னம்மா அப்படியே முழுசா முழுங்குற மாதிரி அவரை பார்க்கறே . ஏதாவது சாப்பிட எடுத்து வாம்மா ! ஏதாவது வச்சிருக்கியா ? இல்லையா ? எனக்கு பசிக்குதுமா “.

பச்சையன் குறுக்கிட்டான்.

“ நான் சாப்பிடற நேரம் இன்னும் வரலை. இடையில எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ மாட்டேன். அம்மா , நிலாவுக்கு கொடுங்க “

பார்கவி அவனை வற்புறுத்தவில்லை. நிலா மகள் பக்கத்தில் ஒரு சேரில் உட்கார்ந்தாள். மணியை பார்த்தாள். எட்டாகி இருந்தது. ஆனால் விமலா வருவதற்குரிய அறிகுறி எதுவும் தெரியவில்லை. வாசலை பார்த்து பார்கவி கொண்டு வந்த தோசையை முழுங்கி கொண்டே, எதிரில் அமர்ந்து இருந்த பச்சையனை ரகசியமாக பார்வையால் முழுங்கி கொண்டு இருந்தாள்.

பார்கவி பச்சையனுக்கு எதிரே சற்று தள்ளி நின்று கொண்டாள்.

“ தம்பி இதுவரை உங்க பேரை சொன்னதில்லைன்னு நிலா சொல்லியிருக்கா. அப்படி என்ன ரகசியம் ? உங்க பேரு என்ன ? உண்மையிலே எங்க வேலை பார்கறீங்க ? எந்த ஊரு ? அப்பா , அம்மா கூட பிறந்தவங்க யாரு ? “

நிலா பதறினாள்.

‘அம்மா இவ்வளவு கேள்வி கேட்கிறாளே, ஒரு வேளை பச்சையன் கோபித்து கொண்டால் என்ன செய்வது ?’ அவளுக்குள் சிந்தனை ஓடியது. ஆனால் பச்சையன் பதறாமல் சிரித்தவாறே பார்கவியின் அனைத்து கேள்விகளையும் எதிர்கொண்டு அமைதியாக பார்த்தான்.

“ முகம் பார்க்காமல் முகநூலில் காதலிக்கலாம், புலன்களை கிளப்பும் வண்ணம் புலனக்குழுவில் ( வாட்ஸ் அப் ) மெஸேஞ் அனுப்பலாம், இஷ்டத்திற்கு இன்ஸ்டாகிராமில் போட்டோ போடலாம். நான் மட்டும் என் பெயரை சொல்லாமல் காதலிக்க கூடாதா ? “

பார்கவிக்கு அந்த காலத்து ஆளாய் இருந்தாலும், நிலா மகள் நிறைய கற்றுக் கொடுத்திருந்ததால் பச்சையன் சொன்னதை கேட்டு அதிசயித்துப் போனாள். ஆனாலும் விடவில்லை.

“ காதலிப்பவள் உங்களுக்கு பேர் வைக்கலாம், ஆனால் நான் எப்படி மற்றவர்களிடம் உங்க பேரை எப்படி சொல்ல முடியும் “

“ எல்லாம் கூடிய சீக்கிரம் நடக்கும். எனக்கு நேரமாகிறது. நான் கிளம்பறேன் “

அதற்குள் சாப்பிட்டு முடித்து நிலா மகள் எழுந்திருக்க , பச்சையன் அவளை கையை அமர்த்தி பேசினான்.

“ நிலா , எனக்கு பக்கத்துலதான் தங்கியிருக்கற இடம், நான் நடந்தே போயிக்கிறேன் . எனக்கு நடை ரொம்ப பிடிக்கும். வர்றேன். விமலா வந்தா சொல்லியிரு நிலா. நாளைக்கு பார்க்கலாம். அம்மா உங்க எல்லா கேள்விக்கும் சீக்கிரம் பதில் கிடைக்கும். வர்றேம்மா “.

பச்சையன் கிளம்பி வாசல் நோக்கி நடந்தான். இருவரும் வாசல் வரை வந்து வழியனுப்பினர். நிலாவுக்கு விமலா மீது கோபம் கோபமாக வந்தது.

‘ என்ன இவள் , இப்படி விளையாடுகிறாள். டாக்டரை பார்த்துட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா ? வரட்டும் , வரட்டும் ஒரு கை பார்த்துக்கறேன்’ மனதிற்குள் கறுவினாள் செல்லாமாக !

பச்சையன் நடந்து செல்வதை தாயும் மகளும் வாசலில் நின்று பார்த்து கொண்டு இருந்தனர்.

சீரான ஆனால் அதே சமயம் அழகான , வேகமான நடை. கம்பீரமான நடை. நிலாமகள் ரசித்து கொண்டு நின்று இருந்தாள். சற்று தூரம் சென்ற பிறகு அவன் திரும்பி பார்க்க , நிலா மகள் தலையை குணிந்து கொண்டாள். வெட்க சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தாள்.

ஆனால் பார்கவியின் பார்வையும் எண்ணமும் வேறுமாதிரி இருந்தது.

‘பெரிய கல்லுளிமங்கனா இருக்கானே , எப்படி இவனை நம்பி நிலாவை கட்டி கொடுக்க முடியும் ? கல்லில் நார் உரித்துவிடலாம் போல , இவன்கிட்ட இருந்து எந்த விசயத்தையும் வாங்க முடியலையே . இவவேற பார்த்தவுடனே காதலில் விழுந்துட்டேன்னு பினாத்திகிட்டு அலையறா. கண்ணை திறந்துகிட்டே வெறிநாய் வாயில கையை விடறேன்னு அலையுறாளே. நான் என்ன செய்ய போறேன் ? ‘

அம்மாவின் மவுனத்தை கண்டு நிலா சம்மதம் என நினைத்து மகிழ்ந்தாள். விமலா இருந்தால் இன்னும் தன் காதலை உறுதிபடுத்தியிருக்கலாமோ என எண்ணத் தோன்றியது.

“ அம்மா உனக்கு பூரண சம்மதம்தானே ? சந்தோசம்தானே ?

பார்கவி நிறுத்தி நிதானமாக சொன்னாள்.

“ யார் ஆயிரம் கோடி கொடுத்தாலும் ஆருயிர் உன்னை யார் எவர் என தெரியாதவனுக்கு நான் கட்டி கொடுக்க மாட்டேன். இது உறுதி..உறுதி “

யானை ஒன்று தும்பிக்கையால் தூக்கி எறிந்தது போல நிலா மகள் மனதிற்குள் காதல் உடைக்கப்பட்டு சுக்குநூறாகி நின்றாள்.

காதல் என்ன செய்யும் ? விதி பல்லைக் காட்டியது.

இனி ……….என்ன நடக்கும் ? காத்திருங்கள் காதலோடு……
 
Top