எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 7

S.Theeba

Moderator
வரம் 7

ராதா தன் மகனைத் திருமணம் செய்வதற்காகவே பல கோடீஸ்வர வீட்டுப் பெண்கள் தன் வீட்டு வாயிலில் வரிசையில் காத்திருப்பதாக சொன்னதும் அக்காவும் தம்பியும் ஒருவரையொருவர் பார்த்து கண் சிமிட்டி விட்டு வாய் பொத்தி சிரித்தனர்.

ஆனால் தொடர்ந்து பேசிய ராதா தம்பி மீதும் அவனது குடும்பத்தின் மீதும் பாவப்பட்டு வர்ஷனாவைத் தன் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்வதாகச் சொன்னதும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. வருணியனுக்கோ கோபம் தலைக்கேறி தன் தமக்கைக்கு மட்டும் கேட்கும் குரலில் “இவங்ககிட்ட நாங்களாகப் போய் கெஞ்சிக் கேட்டோம் பாரு. உங்க பையனைக் கட்டாவிட்டால் எங்க வாழ்க்கை அழிந்தே விடும் என்று அழுதோம் பாரு. அதான் இவங்க பெரிய மனசு பண்ணி வந்து பேசுறாங்க…” என்று பொருமினான். வர்ஷனாவோ தன் தந்தை என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே பார்த்திருந்தாள்.

கலையரசன் ஒரு நிமிடம் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதி காத்தார். மாலதிக்கோ ஹார்ட் அட்டாக் வராத குறை.

மீண்டும் ராதா “என்ன அரசு நான் சொல்றது சரிதானே. நாளைக்கே எங்க குடும்ப ஜோசியரைக் கூப்பிட்டு நிச்சயத்திற்கு நாளைக் குறிச்சிடுவம். கல்யாண செலவப் பத்தி நீ எதுவும் யோசிக்காத. சரியா… என்னிடம் இருக்கிற எல்லாமே என் மகனுக்குத் தானே. கல்யாணத்த இந்த ஊரே வாயில கைய வைக்கிற அளவுக்கு கிராண்டா பண்ணிடுறேன்” என்றார்.

மாலதிக்கோ மனம் திக் திக் என்றது. 'என்னடா இவர் எதுவுமே சொல்லாமல் அமைதியா இருக்கார். போற போக்கைப் பார்த்தால் சரியென்பார் போலயே. ஆதவன் போன்ற ஒருத்தன் நம்ம வர்ஷனாவுக்கு வேண்டாமே. முருகா… இவர் நல்ல முடிவாக எடுக்க நீதான் துணை புரியணும்.’ என்று கடவுளிடம் வேண்டுதல் வைக்கத் தொடங்கி விட்டார்.
தன் தமக்கை சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த கலையரசன் மெல்ல பேச்சை ஆரம்பித்தார். அவர் பேசத் தொடங்கவும் மாலதி, வர்ஷனா, வருணியன் என் மூவரும் மூச்சைக் கையில் பிடித்தபடி கவனித்தனர்.
“அக்கா… நான் சொல்றேன் என்று குறை நினைக்காதிங்க.. எனக்கு இந்த நெருங்கிய உறவில் கல்யாணம் செய்யுறது கூடாதுன்னு தோணுது. அப்படி செய்தால் பிறக்கிற பிள்ளைகளுக்குப்பாதிப்பாகும்..” என்றார்.
“அப்படி எந்தப் பாதிப்பும் வராதுடா.. அதெல்லாம் ஒன்னுமே இல்லை. அதெல்லாம் சும்மா வேலையில்லாத வங்க கிளப்பிவிட்ட வதந்தி. இதைப் போய் நம்பாத.”
“அது மட்டும் இல்லை அக்கா.. ஆதவனைப் பற்றி தெரிஞ்சு கொண்டும்..” என்று அவர் ஆரம்பிக்கும் போதே இடைமறித்த ராதா “அதெல்லாம் வயசுக் கோளாறுடா.. கல்யாணம் ஆச்சுன்னா அவன் பொண்டாட்டி காலையே சுத்தப் போறான். உன் பொண்ணு அவனைத் தன் முந்தானையில் முடிஞ்சுக்கிட்டா அவன் வேற எவளையாவது தேடிப் போவானா..? உன் மாமா கூட ஆரம்பத்தில் அப்படி இப்படி இருந்தவர் தான். இப்போ அவரை நான் என் காலடியில் வைச்சிருக்கலையா. அதெல்லாம் பொண்ணுங்க சாமர்த்தியமாக நடந்துக்கிட்டா சரி.” என்றார்.
“மன்னிச்சிடு அக்கா. உங்க வார்த்தைய நான் கேட்கக்கூடாது என்று இல்லை. ஆனால் எனக்கு இந்தக் கல்யாணத்தில் இஸ்ரம் இல்லை. ஆதவனுக்கு வேறு நல்ல இடத்தில் பொண்ணப் பாருங்க” என்றார்.

இந்தப் பதிலை ராதா எதிர்பார்க்கவில்லை. தன் சொல்லுக்கு எப்போதும் அடிபணியும் தம்பி இப்போதும் அப்படியே நடந்து, மறுவார்த்தை பேசமாட்டான் என்றே முழுமையாக நம்பினார்.
ஆதவனின் தப்புக்களை இதுவரை தட்டிக் கேட்காதவர், அவனுக்குக் கல்யாணம் பேசும்போதே அதிர்ந்து போய் நின்றார். ஏனெனில் ஆதவனின் திருவிளையாடல்கள் ஊரெங்கும் தெளிவாகப் பரவியிருந்தன. இதனால் அவனுக்கு சம்பந்தம் பேச ராதா அணுகிய பெரிய இடங்களில் எல்லாம் அலறிக் கொண்டு ஓடினார்கள். கல்யாணத் தரகர்கள் கூட தெளிவாகக் கூறியிருக்கிறார்கள், உங்கள் மகனின் நடத்தைகள் தெரிந்து யாருமே தங்கள் மகளைக் கட்டித் தர வரமாட்டார்கள் என்று.

எனவே தான் ராதா வசதியில் மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தன் தம்பியை இறுதியாக நம்பி வந்தார்.
ஆனால், அவரோ அதற்கு மறுப்புச் சொல்லவும் சிறிது நேரம் திகைத்துப்போய் விட்டார்.
“ஏண்டா அரசு… நீ என்ன பேசுறன் என்று தெரிந்து தான் பேசுறாயா…? எவ்வளவு பெரிய இடத்தில் உன் பொண்ணு வாழ்க்கைப்படப் போகிறாள். அதைப் போய் வேண்டாம் என்கிறாயே…?” என்று படபடத்தார்.

ராதா மீது கலையரசனுக்கு இருந்தது பயம் அல்ல மரியாதை. என்னதான் தன் அக்காவின் வார்த்தைக்கு மதிப்பளித்து இதுவரை நாளும் நடந்தாலும் தன் மகளின் வாழ்க்கை என்று வரும்போது தெரிந்து கொண்டே அவளைப் படுகுழிக்குள் தள்ளிவிட அவரால் முடியுமா?

“அப்படி நல்ல ஒரு வாழ்க்கையை இழந்தாலும் பரவாயில்லை. என் மகளின் சந்தோசம் தான் எனக்கு முக்கியம் அக்கா" என்றார் அவர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மாலதிக்கு அப்பாடா என்றிருந்தது. வர்ஷனாவுக்கும் தப்பிச்சோமடா சாமி என்றுதான் இருந்தது.

கலையரசனின் பதிலைக் கேட்ட ராதா எழுந்து ஆத்திரத்தில் கத்தத் தொடங்கி விட்டார். வர்ஷனாவுக்கு தான் சாபமளிப்பதாகவும் அவளுக்கு கல்யாணமே நடக்காதென்றும் அப்படியே நடந்தாலும் அவள் சந்தோசமாய் இருக்க மாட்டாள் என்றும் ஏதேதோ பேசினார். மூச்சு விடாமல் ஒரு நீளத்துக்குத் திட்டித் தீர்த்து விட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினார் ராதா.

அவர் சென்றதும் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது வீடு.
 
Top