எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் -------- 11

நிலாச் செய்தி……

நமது நிலாவின் வயது 4.51 மில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

இதுவரை பச்சையன்

பச்சையனை நிலா வீட்டுக்கு கூட்டி வருகிறாள். வருகிறேன் என சொல்லிவிட்டு சென்ற விமலா வரவில்லை. பச்சையன் பேசி விட்டு அருகில் அவன் தங்கி இருந்த ஓட்டலுக்கு செல்ல பார்கவி பச்சையனை பிடிக்கவில்லை என கூற நிலா மகள் அதிர்கின்றாள். இனி………

பச்சையன் -------11

அம்மா சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனாள் நிலா.

“ என்னம்மா சொல்ற ? அவரோட நல்லாதான பேசிகிட்டு இருந்த. இப்ப உனக்கு என்ன ஆச்சு ? ஏன் நான் அவர் ஊர், பெயரை விசாரிச்சு சொல்ல மாட்டேனா ? இது ஒரு குறையா உனக்கு ? “

“ முதல்ல உள்ளே வா . அந்த கதவை சாத்து . இப்ப ஏன் கொந்தளிக்கற ? என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு நினைக்கறது தப்பா ? ஏம்மா காலுக்கு பத்தாத செருப்பை போட விருப்பபடுவோமா ? பத்தாத சட்டையை போட நினைப்போமா ?”

“ஏம்மா , காதல்னு உனக்கு என்னன்னு தெரியுமா ?”

“ ஏண்டி முத நாள் பார்த்து இரண்டாம் நாள் காதலிக்கறது ஒரு காதலா ? அதை எப்படி காதல்னு சொல்ல முடியும் ? சரி, சரி முறைக்காதே . சரிம்மா உன் விருப்ப டியே அது காதல்னு வச்சிக்குவோம். எதுவும் சொல்லாம மழுப்பவறவனை எப்படி நான் நம்பறது ? எப்படி நம்பி உனக்கு கட்டி கொடுக்கறது ? “

“ அம்மா , ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம காதலிக்கறது இல்லையா ? அப்படியே காதலிச்சு கல்யாணம் வரை போனதில்லையா ? மறுபடி சொல்றேன் . உனக்கு எங்க காதலை பத்தி என்ன தெரியும் ? இல்லை காதலைபத்தி என்ன தெரியும் ? “

பார்கவி மகளை நிமிர்ந்து பார்த்தாள். காதல் ஒரு அறைக்கு நடுவே பெரிய கண்ணாடி சுவராக நின்று இருவரையும் பிரித்து விட்டது . கண்ணாடி சுவருக்கு பக்கத்தில் இருந்து எதிரே பேச நினைத்தாலும் குரல் சுவர் தாண்டி கேட்காது. அதே நிலைதான் இங்கும் .

” அம்மாடி , நீ பண்ண இந்த அல்ப காதலை விட உங்க அப்பா மேல நான் வச்சிருந்த காதல்பத்தி உனக்கு என்ன தெரியும் ? நீ குருத்துடி, நான் ஆலமரம் . உன்னை தாண்டி உலகத்தை பார்த்தவ நான்டி “

நிலா மகள் திகைத்தாள்.

‘ என்னடா இது வரைக்கும் அம்மா நம்மகிட்ட இந்த காதல் விசயத்தை சொன்னதில்லை. ஒருவேளை அந்த காலத்திலேயே அம்மா காதலிச்சு கல்யாணம் பண்ணியிருப்பாளோ ? சரியான ஆள்தான் , ம்ம் ! ‘

“ நிலா , நீ என்ன நினைக்கறேன்னு எனக்கு புரியுதும்மா . கண்டதும் காதல் எங்க காதல் இல்லைம்மா. உங்க அப்பா எனக்கு முறைப்பையன்தான். நாங்க சந்திக்கற நேரம்லாம் வெட்கப் பார்வையும், செல்ல சிரிப்பும்தான். பரத நாட்டிய கண்அசைவுகளை விட எங்களுடைய கண் அசைவு காதல் செய்தி பரிமாற்றம் அதிகம்மா . நீ பிறந்து இரண்டு வருசத்துல ரோட்ல போன பிள்ளையை லாரி மோதிடகூடாதுன்னு பிள்ளையை தள்ளி விட்டுட்டு திரும்பறப்ப தடுமாறி மறுபடி லாரிக்கடியிலே விழுந்து நம்மளை விட்டு போனாரு. காதல் கல்யாணம் வரைக்கும் இல்லைடி, அதையும் தாண்டி ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கறதுதாண்டி உண்மையான காதல் . கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு உறவு முறை பழக்கம் இருந்தாலும் கல்யாணம் ஆகி நீ பிறந்து வளர்ந்த அந்த இரண்டு வருட காதல் சுகமானதடி. அதை சொல்லி புரியறது இல்லை. ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். உடலை தாண்டி மனசை ஆக்ரமிச்சவர்டி. உனக்கு என்ன தெரியும் ? சும்மா பேச வந்துட்ட “

நிலா செய்வதறியாது திகைத்தாள்.

“ அம்மா சொல்வதிலும் நியாயம் இருக்குது. அவர் எதையும் சொல்லாமல் விலாங்கு மீன் மாதிரி நழுவ பார்க்கின்றார். எதற்கும் பிடி கொடுக்க மாட்டேங்கிறார். என்ன செய்ய போறேன்னு தெரியலையே ?’

நிலாமகள் தலையை இருகைகளாலும் பிடித்துக் கொண்டு தொப்பென்று உட்கார்ந்தாள். மகளின் நிலைகண்டு பார்கவி பரிதாபப்பட்டாள்.

“ அம்மா , அப்படின்னா என்னை காதலை விட சொல்றீயா ?”

“ இல்லை, காதலனை விட சொல்றேன் “

“ புரியலைம்மா. என்ன சொல்ல வர்றே ? “

“ காதலை யாரும் விடமுடியாதும்மா . அது நம்ம உடம்புல அடிபட்ட காயத்துனால வந்த தழும்பு மாதிரி மனசுக்குள்ள இருக்கும். மறையாது, அழியாது , மாத்த முடியாதும்மா “

“ சரிம்மா, இவரு ஏதோ ஒரு காரணத்துக்காக நம்ம கிட்ட எதையும் சொல்ல மாட்டேங்கிறாரு. நான் சொல்ல வச்சா ….”

பார்கவி சற்று நிதானித்தாள். கட்டினா அவனைத்தான் கட்டுவேன் என்று சொல்லி ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டி அடம் பிடிக்காமல் தெளிவாக இருக்கும் மகளை கண்டு பெருமைப்பட்டாள். இருந்தாலும் அடம் பிடிப்பது போல முகத்தை கடுமையாக வைத்துக் கொள்ள முயற்சித்தாள்.

“ என்னம்மா , நான் கேட்டது உன் காதுல விழலையா ? கொஞ்ச நேரமோ இல்லை கொஞ்ச நாளோ, இந்த பாழா போன காதல் என்னை ஆட்டி வைக்குது. வழுக்கி விழுந்தவன் எந்திரிக்க பார்த்து மறுபடி வழுக்கி விழுந்த மாதிரி , மறுபடி மறுபடி என் மனசு வழுக்கி விழுந்துகிட்டே இருக்கு. அம்மா ,அம்மா ப்ளீஸ்மா எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டும்மா “

பார்கவி யோசித்தாள்.

தன் கணவன் தன் மகளோடு தைரியத்தையும், தன்னநம்பிக்கையும் கொடுத்துவிட்டு சென்று இருந்ததால், நின்று நிதானமாக யோசித்தாள்.

காட்டாற்றை கூட தடுத்து விடலாம், ஆனால் அதை விட வேகமாக பாயும் காதல் ஆற்றை யார் தடுக்க முடியும் ? காதல் வந்தவரை அதை மறக்கச் சொல்வது பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளையை குறுக்கே போய் நிறுத்த முயற்சிப்பது போல , யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நிலாமகளின் இதயத்திற்குள் காதல் சூறாவளி அடித்து கொண்டிருக்கும் போது கையை வைத்து மறிப்பது போல மறிக்க பார்கவி நினைக்கவில்லை.

“ அம்மா நிலா , நாளைக்கு உன்னோட அவர் உன்னை பார்க்க வர்றப்ப கண்டிப்பா எல்லா விவரத்தையும் கேளு. அப்படி இல்லைன்னா…”

சிறிது நிறுத்தி விட்டு பார்கவி நிலாவைப் பார்த்தாள். நிலா ஒரு வித படபடப்புடன் தாயை ஆர்வத்துடன் பார்த்தாள்.

“ வேறு ஒண்ணுமில்லைமா, நம்ம தெரு தாண்டி அவர் தங்கியிருக்கற இடத்துக்கு போய் ரிசப்சன்ல விசாரி. கண்டிப்பா அட்ரஸ் கொடுத்து இருப்பாரு, பெயரு இருக்கும், ஏதாவது தொடர்புக்கு போன் நம்பர் கூட ஒருவேளை இருக்கலாம். அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம், விசாரிப்போம். கவலைப்படாம போய் தூங்குமா “

அம்மாவின் பதிலைக் கேட்டு நிலா அம்மாவின் அறிவைக்கண்டு வியந்தாள். அம்மாவை கட்டிபிடித்துக் கொண்டாள்.

பச்சையனை பார்த்த சந்தோசத்தில் தூக்கம் கண்களுக்குள் உட்கார்ந்து கொண்டு தொந்தரவு செய்து கொண்டு இருந்தது. அம்மாவிடம் சொல்லி விட்டு போய் படுத்தாள்.

போர்வைக்குள் புகுந்த அவள் பின் கனவுக்குள் புகுந்தாள். பச்சையனை போய் விசாரித்து , அவன் ஊருக்குச் சென்று அம்மா சம்பந்தம் பேசி கல்யாண ஏற்பாடுகள் நடந்து மணமேடையில் வெட்கத்துடன் உட்காருவது போல கனவு ஆரம்பிக்க, தூக்கத்தில் வெட்கப்பட்டு தானாகவே சிரித்தாள். திடீரென காட்சி மாற ஆரம்பித்தது.

காட்சி முழுவதும் இளம் பச்சை நிறமாக மாற , ஒரு அழகிய மனித முகம் மட்டும் அந்த பச்சை நிறத்திலிருந்து வெளிவந்து சிறிது நேரத்தில் மேலிருந்து ஒரு கத்தி இறங்கி முகத்தை கிழிக்க அந்த இடமே சிவப்பு நிறமாக மாற…

பயத்தில் வியர்த்து விறுவிறுத்து நிலா மகள் எழுந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள். அம்மாவை பக்கத்தில் காணோம். மீண்டும் படுத்து பச்சையன் முகத்தை தன் கண்களுக்குள் கொண்டு வந்தாள். நிம்மதியாக தூங்க ஆரம்பித்தாள் . தூங்கி போனாள்.

பாவம் அவளுக்கு என்ன தெரியும் ? ஆப் செய்த போனை ஆன் செய்ய மறந்ததும் , விமலாவை சுத்தமாக மறந்ததும் எவ்வளவு பெரிய தவறு என………

மறுநாள் எல்லாருக்கும் நல்லபடியாக விடிந்தது. ஆனால் நிலாமகளுக்கு…………?

நாளையாவது பச்சையன் மீண்டும் வருவானா ? விமலா ஏன் வரவில்லை ?

இனி………
 
Top