எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் ----12

நிலாச்செய்தி….

நமது நிலவின் தூசியின் வாடையானது துப்பாக்கி குண்டு ரவையின் வாடையை ஒத்திருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

இதுவரை நிலா ….

பார்கவி தன் மகளை பச்சையனை மறக்கச் சொல்கிறாள். முடிவில் பார்கவி சமாதானமாகி அவனது உண்மை நிலை அறிய ஒரு யோசனை சொல்கிறாள். நிலா மகள் பலவித கனவுகளுக்கு இடையே தூங்கி போகிறாள். இனி…

பச்சையன் -------12

காலை சூரிய ஒளி பட்டவுடன் நிலாமகள் படுக்கையில் எழுந்து அமர்ந்தாள். கண்களை கசக்கி கொட்டாவி விட்டாள். அழகான பெண்களின் கொட்டாவி எப்போதுமே அழகாக இருக்கும். நிலாமகள் அதற்கு என்ன விதிவிலக்கா ?

நிலாமகள் தனது போனை தேடி எடுத்து ஆன் செய்ய முயற்சித்தாள். ஆன் ஆக போன் மறுத்தது. போனில் சார்ஜ் இறங்கியிருந்தது கண்டு கோபம் அடைந்தாள். பின் போன் பின்னில் மாட்டி விட்டு உட்கார்ந்தாள்.

‘இந்த விமலா என்ன ஆனாள் என்றே தெரியவில்லை ? வர்றேன் சொல்லிட்டு போய் ஒரு போன் இல்லை . ஓ ! நம்ம போனைதான் வண்டியில வர்றப்ப பச்சையனை ஆப் பண்ண சொன்னோமே. ம்ம் ! ஆங் ! அம்மா போன் நம்பர் அவளுக்குத் தெரியுமே , அம்மாகிட்ட கேப்போம் ‘

நிலா பலவித யோசனைக்கு பிறகு அம்மாவை கூப்பிட்டாள்.

“ அம்மா , அம்மா , உன் போனை எடுத்துட்டு வாயேன் “

அடுப்படியிலிருந்து வந்துகொண்டே பார்கவி சொன்னாள்.

“ அம்மாடி , சொல்ல மறந்துட்டேன். நீ ஆபிஸ்ல இருந்தப்ப உன்னை காணோம்னு போன் பண்ணிகிட்டு இருந்தேன். கடைசியா நீ வர்றதுக்கு கொஞ்ச முன்னாடி அடுப்படியில வேலை பார்த்துகிட்டு இருந்தப்ப திடீர்னு போன் அடிச்சது. போய் அவசரமா எடுத்து பார்த்தப்ப விமலா கூப்பிட்டிருந்தா. போனை எடுத்து பேசறதுக்குள்ள திடீர்னு ஈரக்கைப் பட்டு போன் தவறி பக்கத்துல இருந்த பாத்திரத்து தண்ணியில விழுந்துருச்சு. எடுத்து ஆப் பண்ணி துடைச்சு மறுபடி போட்டு பார்த்தும் ஆன் பண்ண முடியலை. கரெக்டா நீ உள்ள நுழைஞ்ச. சாரிடி சொல்ல மறந்துட்டேன். கோவிச்சக்காதே “

“ அம்மா , விமலாகிட்ட இருந்து எந்த பதிலும் வரலை. என்னோட போன் இப்பதான் சார்ஜ் போட்டு இருக்கேன். உன்னோட போனும் ரிப்பேர். பச்சையன் நழுவுறாப்ல. எல்லா பக்கமும் கதவை அடைச்ச மாதிரி இருக்கு. என்ன நடக்குதுன்னு புரியலை ? காதலா ? நட்பா ? இல்லை விசித்திர காதலனா ? விமலாவோட புது காதலா ? “ புலம்பி தவித்தாள் நிலாமகள்.

“ போய் ஆபிஸூக்கு கிளம்பு. போறப்ப என்னோட போனை கொடுத்து என்ன செய்ய முடியும்னு கேட்டு கொடுத்துட்டு வா. லேட்டா போறியா இல்லை முன்னாடியே போகனுமா ? “

“ இல்லம்மா,நேத்து அவ என்கிட்ட பேசுறப்ப , நாளைக்கு ஒரு நாள் மட்டும் நீ ஆபிஸை திற., நான் லேட்டா வர்றேன்னு சொன்னா. நான் கிளம்பறேன்”.

நிலா கிளம்ப ஆரம்பித்தாள். அவசர அவசரமாக கிளம்பி அம்மாவின் போனை வாங்கி, தன்னுடைய போனை எடுத்துக் கொண்டாள். ஆபிஸில் போய்போனை பார்க்கலாம் நினைத்து போனை பையில் போட்டாள். வண்டியைக் கிளப்பினாள்.

ஆபிஸுக்கு சென்று கதவை திறந்து உள்ளே போய் மேசையில் தொப்பென்று உட்கார்ந்தாள். போனை கையில் எடுத்து பார்த்தாள்.

போனின் திரை மெதுவாக உயிர் பெற ஆரம்பித்தது. படபடப்புடன் நகத்தை கடித்துக் கொண்டு காத்திருந்தாள்.

ஏற்கனவே பேசப்பட்ட போன்கால்கள் லிஸ்டை பார்த்தாள். இவள்அம்மாவிடம் பேசிய கடைசி காலுக்குப் பின் எதுவும் போன் காட்டப்படாததால் திகைத்தாள். வண்டியில் பச்சையன் வரும்போது ஏதோ புது நம்பரிலிருந்து போன் வருகிறது என்றவுடன் தான் அதை கட் செய்ய சொல்லி ஆப் செய்ய சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அந்த எண் கூட போனில் கடைசியாக பேசிய லிஸ்டில் இல்லாதது கண்டு குழப்பம் அடைந்தாள். நெட் ஆன் செய்ய டவர் பிரச்சனையால் வாட்ஸ் அப் ஓப்பன் ஆகாமல் தடுமாறியது. எரிச்சலில் மேசை மீது போனை போட்டாள். பச்சையனிடம் கிட்டத்தட்ட விமலா சென்ற பிறகு போன் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்தது ஞாபகத்திற்க்கு வந்தது.

மாலா, மாதவி மற்றும் வசந்தி மூவரும் உள்ளே நுழைந்தனர். வழக்கமான முகமாக இல்லாமல் நிலா மகளின் முகத்தில் குழப்ப முடிச்சுகள் இருப்பதைக் கண்டு சற்று நிதானித்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வசந்தி ஆரம்பித்தாள்.

“ நிலா ஏன் ஒரு மாதிரி இருக்க ? விமலா உன் வீட்டுக்கு வரலையா ? பச்சையனை நைட்டு உங்க வீட்டுக்கு கூட்டிப் போனியா ?

வசந்தியின் கேள்விகள் கண்டு நிலா மகள் நடந்த எல்லாவற்றையும் வரிசையாக சொல்ல ஆரம்பித்தாள். இப்போது குழப்பம் எல்லார் முகத்திலும் தொற்றிக் கொண்டது.

“ உங்க யார்கிட்டேயாவது விமலா நைட்டு போன்பண்ணி பேசினாளா ? “

“ இல்லை நிலா எனக்கு எதுவும் கால் வரலை .மாதவி , மாலா உங்களுக்கு ஏதாவது தகவல் வந்ததா ? “ என வசந்தி கேட்டவுடன் மற்ற இருவரும் இல்லை என்று தலையாட்டினர்.

மேசை மேல் இருந்த நிலாமகளின் போனில் சத்தம் வர ஆரம்பித்தது. நெட் கனெக்ட் ஆகி வாட்ஸ் அப் மெசேஜ்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.

அனைவரும் வெளியே இருந்த நாற்காலிகளை நிலாமகளின் அறைக்குள் கொண்டு வந்து மேசையை சுற்றி உட்கார்ந்து கொண்டனர். போனை அனைவரும் தலையை நீட்டி ஆர்வமுடன் மெசேஜ்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தனர். தற்போதைய நிலையில் பார்க்க தேவையில்லாதவற்றை தள்ளி விமலாவின் பெயரை உற்றுப் பார்க்க ஆரம்பித்தாள் நிலாமகள்.

சிறிது நேரத்தில் நிலா ஒரு இடத்தில் நிறுத்தினாள். அனைவரும் அதிர்ந்தனர். ஆம் , விமலா பெயர் இல்லாமல் அவள் போன் நம்பர் மட்டும் இருந்தது கண்டு நிலா மகள் திகைத்தாள். விமலாவின் பெயர் போனின் கான்டாக்ட் லிஸ்டிலிருந்து அழிக்கப்பட்டருந்தது நன்றாக தெரிந்தது. நிலா மகள் பரபரப்பாக அந்த எண்ணில் நுழைந்து உள்ளே பார்க்க 4 மெசேஜ்கள் அழிக்கப்பட்டிருப்பதும், மேலும் நிலா அந்த எண்ணை பிளாக் செய்தது போல காட்டியது.

“ யாருடி இந்த வேலையை செய்தது ? கண்டிப்பா நீ செஞ்சிருக்க மாட்ட. நைட் போன் யார் கையில இருந்துச்சு ?” மாலா ஆவேசமாய் கேட்டாள்.

“ நானும் பச்சையனும் பேச ஆரம்பிச்ச பிறகு அவன்தான் இந்த போனை கையில வைச்சிருந்தான். மெசேஜ் சிலது வந்தப்ப கம்பெனி விளம்பரங்கள்னு என்கிட்ட சொல்லி அதை அழிச்சான். அப்புறம் வண்டியில வீட்டுக்கு போனப்ப என்னோட போனுக்கு ஏதோ ஒரு புது நம்பர்ல இருந்து கால் வருதுன்னு அவன் சொன்னவுடனே நான்தான் ஆப் செய்ய சொன்னேன். பச்சையனா இப்படி ! என்னால நம்ப முடியலை”

வசந்தி ஆரம்பித்தாள்.

“ இல்ல நிலா , நீ முன்னாடி சொன்ன எல்லா விசயத்தையும் வச்சு பார்க்கறப்ப ஒண்ணு தெரியுது. விமலா ஆபிஸை விட்டு வெளியேறனவுடனே உனக்கு முதல்ல மெசேஜ் அனுப்பியிருக்கா. பின்னால வேற நம்பர் இருந்து போன் பண்ண முயற்சி செஞ்சு இருக்கா, அப்புறம் உங்க அம்மாவுக்கு, கடைசியில வாட்ஸ் அப் மெசேஜ் மூலமா உன்னிடம் ஏதோ சொல்ல முயற்சி செஞ்சிருக்கா. ஆனா எல்லாமே தடுக்கப்பட்டிருக்கு. இன்னும் ஆபிஸுக்கு அவ வரலை, பயமா இருக்கடி “.

மாதவி பேச ஆரம்பித்தாள்.

“ நாம உண்மையில என்ன நடந்துதுன்னு தெரிஞ்சக்கனும்னா, ஒண்ணு விமலா நேரில வரணும் , இல்லை அவ போனாவது கிடைக்கனும், அப்படி இல்லைன்னா நிலா போனும் அழிக்கப்பட்ட தகவல்கள் திரும்ப எடுக்கப்படனும் அதே நேரத்தில அவ அம்மா போனை சரிபண்ணினா அவ ஏதாவது டெக்ஸ்ட் மெசேஜ் இருக்கான்னு பார்க்கனும் “

மாலா தன் பங்கிற்கு ஆரம்பித்தாள்.

“ இப்ப நம்மளோட சந்தேகம் எல்லாம் பச்சையனை சுத்தி இருக்கு. நடந்த எல்லாத்திலேயும் அவன் பங்கு இருக்கலாம். மாதவி சொன்ன விசயத்தோட இன்னொன்னு சொல்ல விரும்பறேன். பச்சையனை பார்த்தா உண்மை தெரியும். என்ன சொல்ற நிலா ? “

நிலா யோசிக்க ஆரம்பித்தாள்.

காதல் புனிதமானதுதான், ஆனால் பாதி கிணற்றில் பாதி தூரம் தாண்டாத நிலா இப்போது நட்பை நினைத்து கவலைப்பட்டாள். காதலை தாண்டி ஆழமானது நட்பு மட்டுமே.

நட்பு காதலாக மாறலாம். நட்புக்காக காதலை விட்டுக் கொடுக்கலாம், ஆனால் சில சமயம் நட்பு காதலை ஜெயித்து விடும். இதுவரை பச்சையனின் காதலுக்காக ஏங்கியவள், அழுதவள், கவலைப்பட்டவள் இப்போது விமலாவிற்காக, விமலாவின் நீண்ட நெடிய பயண நட்பிற்காக நினைத்து கவலைப்பட்டாள்.

“ நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான். காதல் போதையில நட்பு பாதையை மறந்துட்டேன். நேத்து ஒரு வேகத்துல அவள்கிட்ட குருட்டுத்தனமான என்னோட காதலுக்காக அவகிட்ட சண்டை போட்டேன். வசந்தி இல்லைன்னா நேத்து வேற மாதிரி ஆயிருக்கும். நல்ல வேளை அவ வந்ததுனால சமாதனமாயிட்டோம். கடைசியில ஏதோ சொல்ல வந்து யாருக்கோ பயந்த மாதிரி வேகவேகமா வெளியேறினா. அப்ப கூட எனக்கு ஒண்ணுமே புரியலை. ஆனா இப்ப….”பாதியிலேயே பேச்சை தொடர முடியாமல் குலுங்கி குலுங்கி பெரிய குரலில் நிலா அழ ஆரம்பித்தாள்.

அவளை எப்படி ஆறுதல்படுத்துவது என தெரியாமல் அனைவரும் திகைக்க ஆரம்பித்தனர். சில நிமிடங்கள் கழித்து நிலா மகள் தன் அழுகையை அடக்கிக்கொண்டு நிமிர்ந்தாள்.

“ இப்ப என்ன செய்றது ? விமலாவை தேடிப் போகலாமா ? எங்க இருக்கான்னு தெரியலையே ? “

“ இவ்வளவு பேசுறோமே, யாராவது அவ போனுக்கு டிரை பண்ணிபார்த்தீங்களா ? பதட்டத்துல முட்டாதனமா மறந்துட்டாம். நிலா உன்னோட போன்ல இருந்து அவளை கூப்பிடு “

நிலா தலையில் அடித்துக் கொண்டாள் .

‘சே ! அப்படி , இப்படி பேசி அவ நம்பருக்கு முயற்சி பண்ணாம இருந்துட்டோமே ? புத்தி வேலை செய்ய மாட்டேங்குதே ‘

நிலா போனை எடுத்து விமலா நம்பருக்கு டயல் செய்ய ஆரம்பித்தாள். லைன் கிடைக்காமல் மறுபடி முயற்சி செய்தாள். பலன் இல்லை.

” நிலா, இரு நான் டிரை பண்ணுறேன். கிடைக்குதான்னு பார்ப்போம் “ வசந்தி சொல்லி விட்டு டயல் செய்தாள், போனை ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

ரிங் போய் கொண்டு இருந்தது, போய்க் கொண்டே இருந்தது , கடைசியில் நின்று போனது.

மீண்டும் முயற்சி செய்ய மறுபடி ரிங் போய் பதில் ஏதும் கிடைக்காமல் கட் ஆனது.

“ பொதுவா நாம போன் பண்ணினவுடனே அடுத்த நிமிசமே எடுத்துருவாளே, இப்ப என்ன செய்யறா ? எங்க இருக்கான்னு தெரியலையே “ நிலா மகள் புலம்பிய வினாடி அவள் போன் அலற ஆரம்பித்தது. நிலா எடுத்துப் பார்க்க புது நம்பராக இருந்தது.

“ ஹலோ யாரு நிலா மகள் மேடமா ? “ ஒரு பெண் குரல் ஒலித்தது.

“ ஆமா, நீங்க……? “

“ நான் விக்டோரியா ஆஸ்பத்திரியிலிருந்து பேசுறேன். விமலா உங்க ஆபிஸ்ல வேலை பார்க்கறவங்களா ? “

“ ஆமா , என்ன ஆச்சு அவளுக்கு ?”

“ ப்ளீஸ்,நேரா வாங்க . கொஞ்சம் அவசரம் “.

போன் துண்டிக்கப்ட்டது. நிலா மகள் விசயத்தை சொல்ல அனைவரும் பதறினர்.

“ ஏய் , நாம வழக்கமா சுகமில்லைன்னா , அங்க இருக்கற டாக்டர் மித்ரா மேடம்கிட்ட போய் பார்ப்போம், அவங்களுக்கு போன் பண்ணி கேப்போமா ? “

மாதவி கேட்க நிலா மறுத்தாள்.

“ வேண்டாம், நாம நேரா போவோம் “

அனைவரும் அவசரமாய் கிளம்பினர்.

அங்கே……….காதலுக்கு உலை வைக்க விதி இருகைகளையும் கட்டிக் கொண்டு காத்திருந்தது.

இனி……..
 
Top