எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பார்தவி-06 கதைத்திரி

NNK 67

Moderator
பார்தவி-06


ராகவிற்கோ, மிதிலாவை தான் ஏளனமாகப்பேசி வெளியே அனுப்பிய பிறகு, ஜன்னலின்வழியே கண்ணீருடன் சென்றவளையேப் பார்த்தவனது மனமோ பாரமாகிப்போகிட, தன் மனதின் காயங்களை தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு வெளிக்காட்டாதிருந்தான்..! அதேபோல் மிதிலாவிற்கும் ராகவின் விஷம்தோய்த்த வார்த்தைகளினால் உண்டான மனக்காயங்கள் ஆறாது மனம் ரணமாகிப்போனவளோ, அதன் வலியை கண்ணில் வழிந்திடும் கண்ணீரில் வெளிப்படுத்தினாள்..! இருந்தும் அவளது மனதிற்குள், “தன்னவன், தன்னை பணத்திற்காக பழகுபவள்..! என்று, கேவலமாக நினைத்துவிட்டானே..? நான் அப்படிப்பட்ட பெண்ணா..? பணத்திற்காகத்தான் அவனிடம் பழகினேனா..? அவனது கடைவழிப்பார்வை ஒருநொடி என்னை தீண்டாதா..? என் நினைவு, அவன் மனதில் ஒருநொடி எழாதா..? என்று ஏங்கியிருந்த என்னை, கேவலம் பணத்திற்காக பழகும் விலைமகள்போல உருவகப்படுத்திவிட்டானே..?” என்று குமுறியவளோ,


தன் மனதின் காயங்கள் ஆற வழியின்றி தவித்துபோனாள்.. இப்படியே ஒரு மாதம் கடந்திருந்தபோதும், மிதிலாவின் மனம்கொண்ட காயங்கள் மட்டும் ஆறவேயில்லை..! ஆம்..! அது சாதாரண காயங்களாக இருந்தால், என்றோ மருந்திட்டு ஆற்றியிருப்பாள்..! ஆனால், அது தன்மனம் நிறைந்தவனால் உண்டான காயமாயிற்றே..? அதுதான், அதனை ஆற்ற வழிதெரியாது, தன் வீட்டாரின் முன்பு மகிழ்ச்சியாக இருப்பதும், அறைக்குள்ளே வந்ததும் மீண்டும் தன்னவனின் நினைவிலேயே உருகுவதுமாக தவித்துக்கொண்டிருக்கிறாள்..!


ராகவ்வும் மனதில், “அன்று, தான் பேசிய சுடுசொற்கள் தன்னவளின் மனதை எவ்வாறு காயப்படுத்தி இருக்குமோ..? பாவம்..! என் வார்த்தைகளின் வீரியம் தாங்காது, காயப்பட்டு துடித்துப்போயிருப்பாளே..?” என்று தன்னவளைப்பற்றியே நினைத்துக்கொண்டு, வாழ்வில் முதன்முதலாக தான் ஆசைப்பட்ட பெண்ணை, தன் வாயாலே அவதூறாக பேசவைத்த விதியை எண்ணி நொந்துகொண்டிருந்தான்..! அன்றைக்கு பிறகு நந்தனும் கோபத்தில் ராகவிடம் சரியாக பேசாததால், ஏற்கனவே பாரமான மனதுடன் இருந்த ராகவ்வோ மேலும் தனிமையில் தள்ளப்பட்டு தவிக்கவிடப்பட்டான்..


அதனாலோ என்னவோ..? யாரிடமும் பேசாது வீட்டில் அவனது அறைக்குள் முடங்கிக்கிடந்தவன், வெளியே செல்லும்போதுகூட தன்னவளின் நினைவை தவிர்ப்பதற்காக, கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு அலுவலகம் வந்த பின்புதான் இறக்கிவிடுவான்.. இருந்தும், ஏதாவதொரு ரூபத்தில் அவனது நினைவில் புகுந்து, வண்டாய் குடைந்து தன்னுடைய ஆளுமையை அவ்வப்போது செலுத்திவருகிறாள் மிதிலா..! எவ்வளவு முயன்றும் மிதிலாவின் நினைவுகளை மட்டும் அவனால் புறக்கணிக்கவே முடியவில்லை..! பார்க்கும் இடமெல்லாம் அவளது பால்முகமே தெரிய, அவளை தவிர்க்கமுடியாமல் தவித்துதான்போகிறான் ஆணவன்..! இப்படியே சென்றுகொண்டிருக்க, அன்று காலை மிதிலாவின் வீட்டில் அனைவரும் ஒன்றுகூடி உணவருந்திக் கொண்டிருந்தவேளையில், திடீரென்று யாரோ ஒருவர் வீட்டுவாசலில் வந்து நிற்க, வந்திருந்தவரைக்கண்ட சங்கரனோ, “யாருங்க நீங்க..?” என்று, வெளியேசென்று பார்க்கையில், வெளியே நின்றிருந்தவரோ, “சார்..? என் பெயர் சுந்தரம்..! நான் ஒரு கல்யாணபுரோக்கர் சார்..!” என்றிட, அவரை புரியாதுப்பார்த்த சங்கரனோ, “கல்யாண புரோக்கரா..? சரி..! என்ன விஷயமா வந்திருக்கீங்க..?” என்று சொன்னதும், “சார்..? இந்த வீட்டு அம்மாதான் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னாங்க..? அதுக்காகத்தான் வரனைக்கொண்டு வந்திருக்கேன்..!” என்று சொல்ல, “ என்னது..? மாப்பிள்ளையா..?” என்று புரியாது கேட்டுக்கொண்டிருந்த சங்கரனை தடுத்த வேதவள்ளியோ, “ஆமாம்டா..! நான்தான், அவரை நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னேன்..!” என்று சொன்னதும் மகிழ்ந்துபோன சங்கரனோ மனதில், “ஆம்..! என்னதான் நமக்கு நம்ம பொண்ணுங்க குழந்தைங்களா தெரிந்தாலும், நம்ம பொண்ணுக்கும் இப்போ திருமணவயசு ஆயிடுச்சு இல்ல..? இதுக்குதான் வீட்டில் பெரியவங்க இருக்கணும்னு சொல்றது..!” என்று நினைத்துக்கொண்டு, “அது சரிம்மா..! நீங்கதான் சொல்லி அனுப்புனீங்க..? என்கிட்ட ஒரு வார்த்தையாவது முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே..?” என்றதற்கு, “சொல்லாமென்றுதான்டா இருந்தேன்..! சரி..! எதுக்கும் வரன் கெடச்சிடட்டும், அதுக்கப்புறம் சொல்லிக்கலாமென்று விட்டுட்டேன்..! இப்போ என்ன..?” என்று வழக்கம்போல் வெடுக்கென்று பேச,


அம்மாவின் குணம்புரிந்த சங்கரனோ சிரித்துக்கொண்டே, “சரிம்மா..!” என்று சொல்லிவிட்டு புரோக்கரிடம் திரும்பி, “சொல்லுங்க புரோக்கரே..? வரன் பார்த்திருக்கிறீர்களா..? மாப்பிள்ளை எப்படி..? என்ன வேலை செய்கிறார்..?” என்று கேட்க, “ஓ..! பாத்தாச்சு சார்..! நம்ம பாப்பாவோட ஜாதகத்துக்கு பொருந்துறமாதிரி ஒரு வரன் வந்திருக்கு..! மாப்பிள்ளை பெயர் பரத்..! ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரீஸ் வச்சு ரன் பண்ணிட்டு இருக்காரு..! மாப்பிள்ளைக்கு அப்பா அம்மான்னு யாருமில்லை..! சொந்தம் என்று சொல்லிக்கொள்ள, தாய் மாமாவும் அவரது மகனும் மட்டும்தான் இருக்காங்க..! நல்லா படிச்ச மாப்பிள்ளைதான் சார்..! சொந்தமா தொழில்செய்து, ஓரளவுக்குமுன்னேறி இப்போ பெரிய தொழிலதிபராக இருக்காரு..! இதோ..? இதுதான் மாப்பிள்ளை போட்டோ..!” என்று பரத்தின் புகைப்படத்தை நீட்ட, அதனை வாங்கிப்பார்த்த சங்கரனுக்கோ, புகைப்படத்தில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்த பரத்தைக்கண்டு பிடித்துப்போக, தனது தாயிடமும் மனைவியிடமும் மாப்பிள்ளை புகைப்படத்தை காட்டினார்..


திடீரென்று திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்க்கும் தனது வீட்டாரைக்கண்ட மிதிலாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும்கூட, என்ன சொல்லி இதனை தடுக்கமுடியும்..? அவளின் ஈடேறாத காதலை சொல்லி திருமண ஏற்பாட்டை தடுக்க முடியுமா என்ன..? இல்லை..? தான் காதலித்தவர் இவர்தான்..! என்று தைரியமாக காட்டிடத்தான் முடியுமா..? எதுவும் முடியாத கையறுநிலையில் நின்றுகொண்டிருந்தாள் மிதிலா..! அப்போது மாப்பிள்ளையின் புகைப்படத்தை வாங்கிப்பார்த்த வேதவள்ளியோ பரத்தைக்கண்டு மகிழ்ச்சியாக, “பையன்.. ரொம்ப அழகா இருக்கான்..! அப்படியே என் பேத்திக்கு பொருத்தமாக இருப்பான்..! நல்ல வசதியான பெரிய இடமென்று வேற சொல்றாரு..? டேய் சங்கரா..? சட்டுபுட்டுன்னு நம்ம பொண்ணுக்கு இவரை முடிச்சிடனும்டா..!” என்று சொல்ல, தன் அன்னையின் கட்டளையை ஏற்ற சங்கரனோ, “சரிம்மா..! நீங்க சொல்லிட்டா அதற்கு மறுப்பேது..?” என்று சொல்லிவிட்டு புரோக்கரிடம், “நல்லநாள் பார்த்து மாப்பிள்ளையை வீட்டாரை பெண்பார்க்க வரச்சொல்லுங்க..!” என்று சொல்ல புரோக்கரோ, “சார்..? நாளைக்கே நாள் நல்லாயிருக்கு..! நாளைக்கே அரேஞ்ச் பண்ணிக்கலாமே..?” எனக்கேட்டதும், “நாளைக்கேவா..?” என்று யோசித்த சங்கரனைப்பார்த்த வேதவள்ளியோ, “என்னடா யோசிக்கிற..? இதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு..? நாள் நல்லா இருந்தால், நாளைக்கே பெண்பார்க்க ஏற்பாடு செஞ்சிடலாமே..?” என்று சொன்னதும், தன் அன்னை பேச்சைமீற முடியாதவரோ, “நடப்பதெல்லாம் நன்மைக்கே..!” என்று நினைத்துக்கொண்டு, ஒருவழியாக பெண்பார்க்கும் நிகழ்விற்கு ஒத்துக்கொண்டார்..


ஆனால், மிதிலாவின் மனதிலோ ஒரே ஊசலாட்டமாக இருந்தது..! ஆம்..! அவள் என்னதான் செய்வாள்..? தான், மனதில் நினைத்தவன் தன்னை விரும்பவில்லை என்ற நிதர்சனத்தை ஏற்று, தன் வீட்டார் பார்த்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்வதா..? இல்லை..? அவன் விரும்பவில்லை என்றாலும், தான் இன்றளவும் அவனை மறக்கமுடியாமல் மனதில் அவன் நினைவை சுமந்துகொண்டிருப்பதால் இந்த திருமணத்தை மறுப்பதா..? என்று எதுவும் புரியாமல், நடப்பதை வேடிக்கை பார்த்தபடி மௌனமாய் இருந்தாள்.. அதன்பிறகு வீட்டினர் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சிபொங்க, வீடே திருமண கலை பூண்டது..!


மிதிலாவை தவிர, மற்ற அனைவரும் மகிழ்ச்சியில் லயித்திருக்க தன் குடும்பத்தின் மகிழ்ச்சியைக்கண்டவளோ, அதனைக்கெடுக்க விரும்பாமல், நடப்பதை இறைவனிடம் விட்டுவிட்டு அமைதியாக இருந்தாள்.. இப்படியே அந்தநாள் முடிந்து மறுநாள் காலைப்பொழுது விடியவே, மிதிலாவின் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும், இன்று மாப்பிள்ளைவீட்டார் பெண்பார்க்க வருவதை எண்ணி பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தனர்.. மிதிலா மட்டும் வழக்கம்போல் தன்னவனை எண்ணி, மனதுக்குள்ளே கண்ணீர் வடித்து வெளியில் அதனைக்காட்டாதவாறு இருக்க, பவித்ராவும் ஜாலியாக வலம்வந்தாள்..


அப்போது வேதவள்ளியோ, வீட்டு அலமாறியில் இருந்த விலை உயர்ந்த பட்டுப்புடவை ஒன்றை எடுத்துக்கொண்டு பவித்ராவிடம் கொடுத்து அதனை கட்டிவர சொல்ல, பவித்ராவும் ஆசையுடன் அதனை வாங்கிக்கொண்டு சென்றாள்.. அதனைக்கண்ட வசந்தியும் சங்கரனும், “என்னம்மா நீங்க..? வீட்டிலிருக்கும் ஒரே விலையுயர்ந்த நல்லபட்டுப் புடவையை, மாப்பிள்ளை வீட்டார் பெண்பார்க்க வர சமயத்துல, பவித்ராகிட்ட கொடுத்துட்டீங்களே..? இப்போ மிதிலாவிற்கு எதை கொடுப்பது..?” என்று கேட்க, வித்தியாசமாக சங்கரனை பார்த்த வேதவள்ளியோ, “மிதிலாவிற்கா..? அவளுக்கு எதுக்கு பட்டுப்புடவை..?” என்று கேட்டதும், ஏதோ நகைச்சுவை கேட்டதுபோல் சிரித்த சங்கரனோ, “என்னம்மா நீங்க..? இன்னைக்கு மிதிலாவே பெண்பார்க்க வராங்க..? இன்னைக்கு மிதிலாதானே, அவங்க கண்ணுக்கு பாக்குறதுக்கு லட்சணமா தெரியணும்..?” என்று சொல்ல ஒருகணம் அதிர்ந்துபோன வேதவள்ளியோ, “என்னது மிதிலாவை பொண்ணுபார்க்க வராங்களா..?இன்னைக்கு மாப்பிள்ளைவீட்டார் பெண்பார்க்க வருவது..? மிதிலாவே இல்லை..! பவித்ராவைத்தான்..!” என்று சொல்ல, வசந்தி சங்கரனுடன் சேர்ந்து மிதிலாவும்கூட ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்துதான் போனாள்..! பின்பு சங்கரனோ, “என்னம்மா உளருறீங்க..? பவித்ராவை எதுக்கு அவங்க பொண்ணுபார்க்க வரணும்..?” என்று சொல்ல கோபம்கொண்ட வேதவள்ளியோ, “ஆமாம்டா..! நான், என் பேத்திக்காகத்தான் புரோக்கரிடம் நல்ல வரனாய் பார்க்கசொன்னேன்..!” என்று சொல்ல வசந்தியோ,


“என்னத்தை இது..? மூத்தவள் மிதிலா இருக்கும்போது, இளையவளுக்கு எப்படி அத்தை கல்யாணம் பண்ணமுடியும்..?” என்று கேட்க வேதவள்ளியோ, “இந்தவீட்டிற்கு மூத்தவள்..! இந்தவீட்டு வாரிசு..! எல்லாம் பவித்ரா மட்டும்தான்..! எங்கேயோ..? எவளுக்கோ பிறந்து, ரயிலில் போட்டுச்சென்ற இந்த அனாதையை, நீங்க வேண்டுமென்றால் மகளாக ஏத்துக்கலாம்..! என்னால் பேத்தியாக ஏற்றுக்கொள்ளமுடியாது..! இந்தவீட்டை பொருத்தவரை பவித்ரா ஒருத்திதான் வாரிசு..!” என்று திட்டவட்டமாக சொல்ல,


எந்த உண்மையை இத்தனை வருடமாக மிதிலாவிற்கு தெரியக்கூடாது..! என்று மறைத்து வைத்திருந்தார்களோ..? அந்த உண்மை இன்று அவளுக்கு தெரிந்துவிட்டது..! ஆம்..! வேதவள்ளி கூறியதைக்கேட்டு அதிர்ச்சியான மிதிலாவோ, ஒருகணம் விழிவிரிய தன் தாய் தந்தையரை பார்த்து விழிகளாலே, “அவர் சொல்வது உண்மையா..?” என்று கேட்க, அதற்கு பதில் சொல்லமுடியாமல் இருவரும் இமைதாழ்த்தி மன்னிப்புகேட்டு, தலைகுனிந்து நின்றனர்.. அவர்களின் செய்கையிலேயே உண்மை என்னவென்று புரிந்துகொண்ட மிதிலாவோ நேரடியாகவே அவர்களிடத்தில் கேட்க, “நடந்த விஷயத்தை இனிமேலும் மறைக்கமுடியாது..!” என்று எண்ணிக்கொண்டு, மிதிலாவிடம் நடந்தவற்றை கூறத்தொடங்கினார் சங்கரன்..


ஆம்..! 22 வருடத்திற்கு முன்பு சங்கரன் வசந்தி தம்பதியருக்கு திருமணமாகியும் வெகுநாளாக குழந்தை இல்லாததால், ஒவ்வொரு கோவிலாக சென்று குழந்தை வரத்திற்கு வேண்டிக்கொண்டுவர, அப்படி ஒருமுறை அவர்கள் சென்ற இடம்தான் மதுரை.. மதுரைக்குச்சென்று மீனாட்சி அம்மனை தரிசித்து குழந்தை வரம் வேண்டிக்கொண்டு வந்தவர்களோ, மீண்டும் ஊர்திரும்பும் வேளையில் தாங்கள் பதிவு செய்திருந்த ரயில்பெட்டியில் கேட்பாரற்று தனியாக ஒரு பெண் குழந்தையைக்கண்டனர்.. அதனைக்கண்டு அக்கம்பக்கம் பார்க்கவே சுற்றி எவருமே இல்லாமல் தனியாக கிடந்த அந்த குழந்தையை பார்த்தவர்களோ, நெடுநாளாக குழந்தைக்காக ஏங்கிய தங்களுக்கு அந்த மீனாட்சி அம்மனே தங்களுக்கு குழந்தையாய் கிடைத்ததுபோல் உணர்ந்து, கிடைத்த குழந்தையை தங்கள் குழந்தையாக பாவித்து, மிதிலா என்ற பெயர்சூட்டி வளர்த்தனர்.. மிதிலாவின் அதிர்ஷ்டத்தினால் அவள் வந்த ஒரேவருடத்தில் வசந்தி கருவுற்று பவித்ராவும் பிறந்தாள்..!


பவித்ரா பிறக்கும்வரை அமைதியாக இருந்த வேதவள்ளியோ, தங்கள் குடும்பத்திற்கென்று வாரிசு வந்துவிட்டதால், எங்கே மிதிலாவால் தன் பேத்திக்கு எந்த உரிமையும் கிடைக்காமல் போய்விடுமோ..? என்று பயத்தில், மிதிலாவை மெல்லமெல்ல தவிர்க்கத்தொடங்கி, காலப்போக்கில் அவள்மீது வெறுப்பாகவே மாறியது..! என்று நடந்தவற்றை கூறிய சங்கரனோ மிதிலாவைக்கண்டு, “அம்மாடி மிதிலா..? நீ எனக்கு பொறக்கவில்லையென்றாலும், நீயும் என்னோட பொண்ணுதான்ம்மா..! நான்எப்போதும் உன்னையும் என் பொண்ணையும் தனித்தனியாக பிரிச்சு பார்த்ததில்லைம்மா..!” என்று சொல்ல வசந்தியோ, “ஆமாம்டி மிதிலா..! உயிரே போனாலும், இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லக்கூடாது..! என்று நினைத்து இருந்தோம்..! ஆனால், இன்னைக்கு விதி எங்க வாயாலேயே அதை உன்கிட்ட சொல்லவச்சுடுச்சு..!” என்று சொல்லி கண்ணீர்விட, இதெல்லாம் கண்ட வேதவள்ளியோ எதையும் அலட்டிக்கொள்ளாமல் நின்றிருந்தார்..


பின்பு அறையிலிருந்து பட்டுபுடவை கட்டிக்கொண்டு அலங்காரம் செய்தபடி, வெளியேவந்த பவித்ராவைக்கண்டு அவளருகே சென்ற வசந்தியோ, “அம்மா பவித்ரா..? நடந்ததையெல்லாம் நீ கேட்டுட்டு இருந்திருப்ப..? உங்க பாட்டி, உன்மேல இருக்கிற பாசத்துல இப்படி பண்ணிட்டாங்க..! மிதிலா உன் அக்காம்மா..? அவள் வீட்டிலிருக்கும் போது உனக்கு கல்யாணம் பண்ணிவச்சா அவளோட வாழ்க்கை கெட்டுப்போயிடும்மா..! என்று சொல்ல பவித்ராவோ, “ம்மா..? புரியுதும்மா..! மிதிலா என்னோட அக்கா இல்லன்னு, பாட்டி என்கிட்ட எப்பவோ சொல்லிட்டாங்க..! ஆனால், நான் ஒருநாள்கூட மிதிலாவை தனியாபிரிச்சு பார்த்ததே இல்லை..! என்னை பொறுத்தவரைக்கும் அவள் என் அக்காதான்..! ஆனால், அதுக்காக எனக்கொரு நல்ல வாழ்க்கை அமையும்போது, அதை அவளுக்கு விட்டுக்கொடுக்கிற அளவுக்கு எனக்கு பெரியமனசு இல்லம்மா..! பாட்டி எதுசெய்தாலும், என்னுடைய நல்லதுக்காகத்தான் இருக்கும்..! பாட்டியோட ஆசைக்காகவாது, நான் கண்டிப்பா இந்த கல்யாணத்தை பண்ணிப்பேன்ம்மா..!” என்று சொன்னதில் சங்கரனும் வசந்தியும் அதிர்ந்து போக, அதேகணம் வேதவல்லியோ பெருமையில் மிளிர்ந்தாள்..!


அப்போது பவித்ராவின் அருகேவந்த மிதிலாவோ, “தன் தங்கை, தன்னை இன்றளவும் உடன்பிறந்த அக்காவாகத்தான் நினைக்கிறாள்..!” என்பதை அவளது வாயால் கேட்டு மனம்மகிழ்ந்தவளோ, பவித்ராவை கட்டியணைத்துக்கொண்டு பின், தன் தந்தை சங்கரனைப் பார்த்து, “அப்பா..? பாட்டி சொன்னதுபோல இது பவிக்காக ஏற்பாடு பண்ணியிருக்கிற விசேஷம்..! இதில் என்னால் எந்த தடையும் வந்துவிடக்கூடாது..! தயவுசெஞ்சு நீங்களும் அம்மாவும் என்னைக்கொஞ்சம் புரிஞ்சுகிட்டு, பவிக்கு நல்லபடியா இந்த கல்யாணத்தை பண்ணிவையுங்கள்..!” என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்ள, கையறுநிலையிலிருந்த சங்கரன் தம்பதியரோ, மிதிலாவின் பெருந்தன்மையான குணத்தைக்கண்டு அவளிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டனர்..!


அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவளோ, “அப்பா..? ப்ளீஸ்ப்பா..! நீங்கள் எந்தக்குற்ற உணர்ச்சியுமில்லாமல், நடக்க வேண்டியதை பாருங்க..! என்று சொல்லிக்கொண்டு தன் அறைக்குள் சென்றவளோ மனதில், “தான் ஒரு அனாதை..! இத்தனைநாட்களாக தன்னை பெற்றவர்கள் யார் என்பதே தெரியாமலேயே வளர்ந்துள்ளோமே..?” என்று, தன் நிலையை நினைத்து மனம்நொந்து கண்ணீர் சிந்தியவளோ, “தனக்கு இந்த வீட்டில் எந்த உரிமையும் இல்லாமலே, தன்னை சிறுவயதிலிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சீராட்டி வளர்த்துவந்த தந்தைக்கு, தான் எந்தவிதத்திலும் இடையூறாக இருக்கக்கூடாது..!” என்று உறுதிகொண்டு, மனதில் எழுந்த தன் ஆசைகளை மனதுக்குள்ளே புதைத்துக்கொண்டாள்..!


பிறகு குறித்தநேரத்தில் மாப்பிள்ளைவிட்டார்கள் வந்து பவித்ராவைப் பெண்பார்த்திட, மாப்பிள்ளை பரத்திற்கு பவித்ராவை கண்டதுமே பிடித்துவிட்டது..! மேலும் அவனுடன் வந்த அவனது மாமாவும், மாமா பையனும், சங்கரன் வசந்தி தம்பதியரிடம் சம்பந்தம்பேசி திருமணத்தை உறுதிசெய்திட, அந்நேரம் அங்கு ஒதுங்கிநின்றிருந்த மிதிலாவை கண்டவர்களோ, “யார் இந்த பெண்..?” என்று கேட்டிட, “இவள்தான் தங்களது மூத்தபெண் என்று சொன்னால், எதற்காக பவித்ராவிற்கு இந்த அவசர திருமணம்..? என்று கேட்பார்களோ..?” என்று பயந்தபடி தயங்கிய சங்கரனைக்கண்ட வேதவள்ளியோ, “டேய் சங்கரா..? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேக்குறாங்கல்ல..? ஏன்டா தயங்குற..? உண்மைய சொல்லு..! நாளைபின்னே ஏதாவது, என் பேத்தி வாழ்க்கையில இதனால பிரச்சினை வந்துடக்கூடாதுடா..!” என்று படபடக்க, சங்கரனோ மிதிலா பற்றிய உண்மைகளை சொன்னான்.. அதனைக்கேட்ட மாப்பிள்ளைவீட்டாரோ, “ “இதனால் தங்களது முடிவில் எந்த மாற்றமும் இல்லை..!” என்று சொல்லிக்கொண்டு திருமணத்தை உறுதிசெய்ய, அதே வாரத்தில் நிச்சயதார்த்தமும், அந்த மாத இறுதியில் நல்ல முகூர்த்தநாளில் திருமணமும் உறுதிசெய்யப்பட்டது..!


அதன்பிறகு, பரத் பவித்ராவிடம் தனிமையில் சில வார்த்தைகளை பேசிவிட்டு பின், பெரியவர்களிடம் சொல்லிக்கொண்டு மாப்பிள்ளைவீட்டார் அங்கிருந்து செல்லும்போது, பரத்தின் மாமன் மகனான தஷான்னோ, அங்கே ஒதுங்கி நின்றுகொண்டிருந்த மிதிலாவையே கண்களால் மொய்த்தவண்ணம் ஆழ்பார்வை பார்த்துவிட்டுசென்றான்..! அதன்படி மிதிலா வீட்டார்கள் அனைவரும் மகிழ்வுடன் நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்க,


இங்கே ராகவோ அவன் மனதில் எழும்பும் மிதிலாவின் நினைவை மறக்கவும்முடியாமல், ஏற்கவும்முடியாமல் இருகொல்லி எறும்பாக தவித்து, இறுதியில் அதற்கு தீர்வாக மதுவை நாடினான்..! ஆம்..! இதுவரை மதுவையே தொடாதவன், இன்று தன்னவளை மறக்கவேண்டி தினமும் குடிக்கிறான்..! தினமும் அலுவலகம்விட்டு வீடுவந்தவுடனே தன்னறைக்குள் நுழைபவனோ, உணவைக்கூட மறுத்துவிட்டு விடியவிடிய குடித்துவிட்டு, அந்த போதையில் தன்னவளின் நினைவை மறக்க முயற்சிக்கின்றான்..! ஆனால், பாவம்..! அவனுக்கு புரியவில்லை..? மிதிலாவின் நினைவு கலந்திருப்பது அவனது மனதில் இல்லை..! அவனது உயிரில்..! அதை எங்கனம் மறப்பான்..? இப்படியே நாளுக்குநாள் அவனதுநிலை மிகமோசமாகிட, முதலில் இதனை கண்டுகொள்ளாத நந்தனோ நாள்போக்கில், “எங்கே தனது நண்பனின் வாழ்க்கை வீணாகிவிடுமோ..?” என்று பயந்து, ராகவைக்கண்டித்தான்..! அதற்கு ராகவோ சமாளிப்பாக, “ஒன்னுமில்லடா..! சின்ன டென்ஷன்..! அதனால்தான்..” என்று, ஏதோ ஒரு சாக்குசொல்ல நந்தனோ, “டேய்..? பொய் சொல்றதை நிறுத்துடா..! டென்ஷனாம் டென்ஷன்..? உன்மனசுல என்ன இருக்குன்னு, உன் முகமே சொல்லுதே..! இப்போசொல்லு..? அந்த பொண்ணு ஞாபகமாதானே இப்படி குடிக்கிற..?” என்று சொல்ல, தன் நண்பன் முன்பு பொய்சொல்ல முடியாதவனோ அமைதியாய் நிற்க,


அவனது மௌனம் நந்தனை மேலும் வெறியேற்றவே, வேகமாகசென்று அவன் தோள்களைபிடித்து உலுக்கிய நந்தனோ, “நான்தான் அன்னைக்கே சொன்னேன்லடா..! ஏன்டா ஏன்..? இவ்வளவு ஆசையை அந்த பொண்ணுமேல வச்சுகிட்டு, தேவையில்லாமல் அந்தபொண்ணோட மனசையும் காயப்படுத்தி, இப்போ நீயும் கஷ்டப்படுற..?” என்று சொல்ல, இவ்வளவுநேரம் இழுத்துப் பிடித்துவைத்திருந்த தைரியத்தை காற்றில் பறக்கவிட்ட ராகவோ கண்களில் கண்ணீர் கசிய, “இல்லடா..! அந்தப்பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுடா..! அவளாவது குடும்பத்தோடு வாழட்டும்..! என்னை கட்டிகிட்டு அவள் அவமானப்படவேண்டாம்..!” என்று சொல்ல, ஆறடி ஆண்மகன்..! சிங்கம்போன்ற தனது கர்ஜனையில் ஒட்டுமொத்ததையும் அடக்கி ஆள்பவன்..! இன்று சிறுகுழந்தைபோல் கண்ணீர்விடுவதை பார்த்து பதறிய நந்தனோ, “ என்னடா சொல்ற..? நீதானேடா அந்த பொண்ணுமேல ஆசைபட்ட..? இப்போ உனக்கு என்ன வந்துச்சாம்..?” என்று கேட்டதற்கு, “இல்ல மச்சான்..! அந்தப்பொண்ணு ரொம்ப நல்லபொண்ணு..! ஆனால் இந்த அனாதையை கல்யாணம் பண்ணிக்க, அவள் விரும்பமாட்டாடா..! அவளுக்கு குடும்பம்தான் சகலமும், அப்படியிருக்க இந்த அனாதையை அவளால் ஏத்துக்கமுடியுமா சொல்லு..? எதுக்குடா..? நான், அவளைவிட்டு தள்ளியிருப்பதுதான் நல்லது..! அதற்காகத்தான் அன்று அவளிடம் அப்படி நடந்திகொண்டேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, தன் நண்பனின் பிரச்சனையை புரிந்த நந்தனோ, “இந்தபிரச்சனையை தான்தான் தீர்க்கவேண்டும்..!” என்று நினைத்துக்கொண்டான்..


அதன்படி வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை கோவிலுக்குவரும் மிதிலாவை காண்பதற்காகவே, அன்று கோவிலுக்குவந்த நந்தனோ அவளுக்காக காத்திருக்க, எப்போதும் கலகலப்பாக புன்சிரிப்போடு வலம்வரும் மிதிலாவோ, இன்று கலையிழந்துபோய் காய்ந்தசறுகாய் வரவே, அவளைக்கண்ட நந்தனோ, “அவளும், தன் நண்பனை நினைத்துதான் ஏங்கியிருக்கிறாள் போல..?” என்று எண்ணிக்கொண்டு அவளருகே சென்றுபேச, திடீரென்று வந்த நந்தனைக்கண்டு முதலில் அதிர்ந்தவளோ, பின்பு அவனிடம் மரியாதை நிமித்தமாக, “எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டதற்கு, “ நான் நல்லாதான் இருக்கேன்..! நீங்க ரெண்டு பேரும்தான் என்னவோபோல இருக்கீங்க..?” என்று சொல்ல, அதற்கு தலைதாழ்த்தியவளோ எதுவும்பேசாமல் நின்றிருக்க நந்தனோ, “உங்களை பார்க்கதான் வந்திருக்கேன்..? அன்று ராகவ், உங்களிடம் பேசியது எனக்கு தெரியும்..! ஆனால் அவன் பேசியது எதுவும் உண்மை இல்லை..! வேண்டுமென்றே உங்களை தவிர்ப்பதற்காகத்தான் அப்படி பேசினான்..!” என்று சொல்ல, அதனைக்கேட்டு புரியாது விழித்தவளோ, “ என்ன சொல்றீங்க..? வேண்டுமென்றே பேசினாரா..? எதற்காக அப்படிப்பேசினார்..?” என்று கேட்டதற்கு,


ராகவின் குடும்பநிலவரத்தையும், அவன் வளர்ந்தவிதத்தையும் கூறியவனோ, “இதனால்தான், குடும்பத்தையே பெரிதாக மதிக்கும் உங்களை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குகிறான்..! வேறு எதுவுமில்லை..!” என்று சொல்ல, அதற்கு விரக்தி சிரிப்பொன்றை சிந்தியவளோ, “ஆமாங்க..! குடும்பத்தைத்தான் பெருசா நினைச்சேன்..! ஆனால் விதி, யாரோட வாழ்க்கையை எப்படி மாற்றுமென்று யாருக்குமே தெரியாதே..! அதுபோல நமக்கு, வாழ்க்கை ஒளித்துவைத்திருக்கிற ரகசியமும் யாருக்கும் தெரியாது..!” என்று எதற்கும் பிடிகொடுக்காமல் பேச, “என்னங்க..? உங்களைப் பார்த்து பிரச்சனையை சொன்னால், நீங்க அதுக்கு ஏதாவது தீர்வு சொல்லுவீங்க நினைத்தால், பிலாசஃபி பேசிட்டு இருக்கீங்க..?” என்று கேட்க அதற்கு மிதிலாவோ, “இப்போ நான் என்ன சொல்லணும்..?” என்றிட நந்தனோ, “ஒன்னும் இல்லைங்க..! நீங்க ஒருமுறை அவனை வந்து பார்த்தாலே போதும்..! எல்லா பிரச்சனையும் சால்வாகிடும்..!” என்று சொல்ல மிதிலாவோ, “இனி அது தேவைப்படாதுங்க..! அன்னைக்கு, நான் இருந்த நிலைமை வேற..! என் வாழ்க்கை என்னோட கையில்தான் இருக்கு..! என்ற மிதப்புல என் இஷ்டத்துக்கு நடந்துகிட்டேன்..! ஆனால் இன்னைக்கு அப்படி இல்ல..! நான் நிறையபேருக்கு கடமைப்பட்டு இருக்கேன்..! என்னோட இந்த வாழ்க்கையே பலரோட தியாகத்தினால் வந்தது..! அதனால், இனி என் வாழ்க்கையைப்பற்றி முடிவெடுக்க வேண்டியது நான் இல்லைங்க..! எனக்கு அந்த உரிமையும் இல்ல..! என்று சொல்ல,


கோபம்கொண்ட நந்தனோ, “என்னங்க..? கழட்டிவிட பாக்குறீங்களா..? இல்ல..? உங்க வீட்டில் பாசத்தைக்காட்டி உங்களை பிரைன்வாஷ் பண்ணிட்டாங்களா..?” என்று கேட்க, அதற்குமேலும் விரக்திசிரிப்பு சிரித்தவளோ, “அந்த உரிமைகூட இல்லாமல்தாங்க நான் இருக்கேன்..!” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றாள் மிதிலா.. அவள் பேசிய வார்த்தைகளில் ஏதோ ஒன்று ஒளிந்திருக்க நந்தனோ மனதில், “இந்தப்பிரச்சனையை சீக்கிரம் பேசி தீர்த்துவிடவேண்டும்..!” என்று எண்ணிக்கொண்டான்..


அன்பு, பாசம், கருணை, சிரிப்பு, மகிழ்வு, துக்கம், துயரம் இவையனைத்தையும் அடக்கிவைத்திருக்கும் புதையல்தான் வாழ்க்கையோ…? பார்க்கலாம்…


தொடரும்…
 
Last edited:

kalai karthi

Well-known member
மிதிலா இவள் உண்மை சொல்லாமல் விட்டு விட்டாள்
 
Top