எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உனை ஏற்றேன்! - அத்தியாயம் 10

NNK-29

Moderator

அத்தியாயம் 10​

செல்வராணியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது. அவரின் பக்கத்தில் வந்தனா வெட்கம் கலந்த பூரிப்பில் அமர்ந்திருந்தாள்.​

அறையிலிருந்து வந்த தேவாவையும் சாருமதியையும் பார்த்து எழுந்த அரவிந்தன் இனிப்பை வழங்கி, “நீங்க ரெண்டு பேரும் மாமா, அத்தை ஆகப்போறீங்க!” என்றான் வெட்கம் நிறைந்த சிரிப்புடன்.​

சட்டென்று கேட்ட சந்தோச செய்தியில் இன்பமாய் அதிர்ந்த தேவா, “வாழ்த்துகள் அரவிந்த்!!!” என அவனை கட்டித்தழுவியவன் தங்கையின் தலையை ஆதூரமாக தடவினான்.​

“வாவ்!!! அண்ணா… வாழ்த்துகள்!!!” என அண்ணனின் கைபிடித்து குதித்தவள், “கங்கிராட்ஸ் அண்ணி!” என வந்தனாவின் அருகில் அமர்ந்துக்கொண்டாள்.​

“ஸ்வீட் சாப்பிடு சாரு... கலோரி ஏறினா பரவால…” என ஒரு துண்டு இனிப்பை சாருவின் வாயில் திணித்தான் அரவிந்த். அண்ணனை முறைத்துக்கொண்டே அதை சாப்பிட்டவளின் உதட்டை பார்த்த தேவாவிற்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய சாருவை மார்க்கமாக பார்த்தான்.​

தேவாவாவின் பார்வையை உணர்ந்து அவனை முறைத்துவிட்டு, “எத்தனை நாள் அண்ணி?” என வந்தனாவிடம் கேட்டாள்.​

“நாற்பது நாள்…” என கூச்சத்துடன் சொல்ல, “டாக்டர் என்ன சொன்னார்கள்?” என கேட்டுவிட்டு அவளுக்கான உணவுமுறைகளையும் சாருமதி வழங்கினாள். டையட்டீஷியன் என்பதால் அவள் சொல்வதை கவனத்துடன் கேட்டுக்கொண்டாள் வந்தனா. பின் இரவுணவை முடித்துவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.​

வந்தனா கர்ப்பம் தரித்து மூன்று மாதங்கள் கடந்திருந்தது. வந்தனா அவர்களின் வாரிசை சுமப்பதினால் ஜெயந்தி அவளை தாங்கு தங்கென்று தாங்குகிறார்.​

அந்த ஞாயிறு முழுக்க ஊர் சுற்றிய தேவா, சாரு இரவில் ஒரு உணவகத்தில் எதிரெதிரே அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தனர்.​

அந்நேரம் சாருமதியை நோக்கி ஒரு இளவயது யுவதி வேகமாக வந்தாள். “நீங்க சாரு தான? ‘ஃபிட் வித் சாரு!’ சேனல் உங்களோடது தான?” என ஆச்சரியங்கள் சுமந்த விழிகளுடன் கேட்டாள்.​

“ஆமா...” என்றவள் அந்த யுவதியை பேசி அனுப்பிவிட்டு, தயக்கத்துடன் தேவாவின் முகத்தை பார்த்தாள்.​

அவனோ எதையும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருந்தான். அவன் முகத்தைவைத்து சாருமதியால் ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை.​

‘ஐயோ இந்த தேவோட கோபத்தை கூட தாங்கிடலாம் போல... இப்படி அமைதியா இருக்கானே?’ என முழித்தவள் சாப்பிட தொடங்கினாள்.​

பின் வீட்டிற்கு செல்லும் வழியில், “இன்னைக்கு முழுக்க உங்கக்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுறேன். நமக்கு நடுல எதுவும்... யாரும்... வரமாட்டாங்கன்னு சொன்ன?” என கோபத்துடன் கேட்டான்.​

“வெளிய வந்தா… நாலு பேர் வந்து பேச தான் செய்வாங்க… அதுக்கு என்ன பண்ணுறது?” என சாருவும் கைகளை விரித்து வெடுக்கென கேட்டாள்.​

“ஹ்ம்ம் என்ன பண்ணுறது..? செலபிரிட்டி கூட வந்தா அப்படி தான் போல!” என அவன் நக்கலுடன் சலித்துக் கொண்டான்.​

‘இந்த யூடியூபினால் இன்னும் எங்களுக்குள் எவ்வளவு சண்டைகள் வருமோ?’ என்ற பெருமூச்சுடன், “அடுத்த ஞாயிறு முழுக்க எந்த வேலையும் செய்யாம உங்க கூடவே இருக்கேன். வெளிய எங்கேயும் போக வேண்டாம் வீட்லயே இருக்கலாம். ஏன்? நம்ம பெட்ரூம்லயே கூட இருக்கலாம்” என சொல்லிட்டு முகத்தை திரும்பிக் கொண்டாள்.​

‘ஒரு நாள் முழுக்க பெட் ரூம்லயே வா?’ என ஏடாகூடமாக யோசித்தவன் பொங்கிய சிரிப்பை தன் உதட்டில் மறைத்துக் கொண்டு மனைவியை முறைக்கவே செய்தான்.​

தான் சொன்னதை உணர்ந்து வெட்கியவள் அமைதியாக வர, “இங்க பாரு மதி! நான் உன்னோட விருப்பம் எதுக்குமே தடை சொல்ல மாட்டேன். ஆனா அதெல்லாம் ஒரு அளவுக்கு இருக்கனும். நமக்கு நடுவுல எதுவும் வரதை நான் எப்பவும் அலோவ் பண்ணவே மாட்டேன். அண்ட் நீ எனக்கு ரொம்ப முக்கியம் மதி!” என்றான்.​

அவள் அவனை திரும்பி பார்த்தாள். காரை சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டே, “உனக்கே தெரியும் மதி. நாம ரெண்டு பேருமே வர்க் பண்ணுறோம். அப்ப நமக்கு கிடைக்கிற நேரத்தை நாம தான் நமக்கு ஏத்த மாதிரி யூஸ் பண்ணிக்கணும்…” என்றவனை இடை வெட்டியவள்,​

“ஆனா தேவ்! எனக்கும் ஈவ்னிங் மட்டும் தான டைம் கிடைக்குது? நான் வாரத்துக்கு ரெண்டு வீடியோஸ் தான் போடுவேன். ஒருநாள் விட்டு ஒருநாள் ஷார்ட்ஸ் போடுவேன். அவ்வளவு தான?” என்றாள் அவன் சொல்வது புரியாமல்.​

ஏனோ சாருமதி யூடியூப்பில் தீவிரமாக இருப்பதாய் அவனுக்கு தோன்றியது. அதனாலே அவளின் நேரத்தை அவனின் புறம் திருப்ப முயன்று கொண்டிருக்கிறான். ஒவ்வொரு வீடியோவிற்கும் அவள் போடும் உழைப்பை பார்த்திருக்கிறான் தேவா.​

அதனால், “அது சரி தான் மதி. உனக்கு பிடித்து நீ பண்ணுறதே, நாளைக்கு உனக்கு பிடிக்காம போய்ட கூடாது தான? நீ உன்னையே ஸ்ட்ரெஸ் பண்ணிகாத…” என்று நிதானமாக எடுத்து சொன்னான்.​

அவன் சொல்வது புரிந்தும் புரியாமல் தலையை ஆட்டினாள். ஆனால் இன்னும் சிறிது நாளில் பொறுமை அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு அவனையே கடித்து குதரப்போவதை பாவை அறியவில்லை!​

__________​

குமரேசனும் ஜெயந்தியும் ஒருநாள் தேவாவின் வீட்டிற்கு வந்தனர். தீபாவளி நெருங்குவதால் முறைப்படி இருவரையும் தலை தீபாவளிக்கு அழைத்துவிட்டு சென்றனர்.​

அதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் செல்வராணி, தேவா, சாருமதி என அனைவரும் சென்று அரவிந்தனையும் வந்தனாவையும் தீபாவளிக்கு அழைத்துவிட்டு வந்தனர்.​

தீபாவளியும் அழகாக விடிந்தது. காலையில் கண்விழித்த தேவா, சாருமதி சாமி கும்பிட்டுவிட்டு சாருவின் வீட்டிற்கு செல்வதாக இருந்தனர்.​

ஆனால் அவர்கள் கிளம்புவதற்குள் அரவிந்தும் வந்தனாவும் அங்கிருந்து வந்துவிட அவர்களுடன் சேர்ந்தே காலையுணவை சாப்பிட்டனர்.​

வந்தனாவிற்கு கர்ப்பகால உபாதையாக சாப்பிட்டவுடனே இருமுறை வாந்தி எடுத்து அனைத்தையும் வெளியேற்றியிருந்தாள். அவளுக்கு சாருமதி எலுமிச்சை ஜூஸ் போட்டு கொடுக்க குடித்துவிட்டு படுத்துவிட்டாள்.​

பின் சமையலறையில் தனியாக வேலைபார்த்து கொண்டிருந்த செல்வராணியுடன் சென்று சாருமதி உதவினாள். “நீங்க ரெண்டு பேரும் கிளம்பலையா சாரு?” என்று கேட்டவரிடம்,​

“அண்ணிக்கும் உடம்பு முடியல தான அத்தை? கொஞ்சநேரம் கழிச்சி கிளம்புறோம்” என்றவள் அவருக்கு சமையலில் அனைத்து உதவியையும் செய்துவிட்டு அறைக்குள் வந்தாள்.​

அந்நேரம் வரை அரவிந்தனுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருந்த தேவாவும் அப்பொழுது தான் அறைக்குள் வந்திருந்தான். அவனை முறைத்துக்கொண்டே முகம் கழுவி வந்தவளிடம், “என்ன டி முறைக்கிற?” என்றான் சத்தமாக.​

“உங்க தங்கச்சி மட்டும் தலை தீபாவளிக்கு இங்க வரணும்? ஆனா… என்னை எங்க அம்மா கூட்டிட்டு போக மாட்டீங்களா? இது என்ன நியாயம்?” என தேவாவிடம் எகிறினாள்.​

‘யார் என்ன சொன்னார்கள்?’ என தெரியாமல் முழித்தவன், “என்ன பிரச்சனை மதி? எப்ப கிளம்பணும்னு நீ சொல்லலையே?” என்றான்.​

“ஏன்? யாரும் சொல்லணுமா? பொண்டாட்டிய தலை தீபாவளிக்கு அம்மா வீட்டுக்கு நேரமே கூட்டிட்டு போகணும்னு உங்களுக்கா தெரியணும்” என்று சொன்னவளை ஆழ்ந்து பார்த்தவன்,​

“மதி! இப்ப என்ன உனக்கு? உங்க வீட்டிற்கு போகணும் அவ்வளவு தான? வா போகலாம்” என அவளின் கையை பிடித்து அறையின் வாயில் வரை அழைத்து சென்றவனை திகைப்புடன் பார்த்தவள் கையை உதறிவிட்டு முறைத்துக் கொண்டிருந்தாள்.​

“நீ தான உங்க வீட்டுக்கு போகணும்னு சொன்ன?” என்று அவன் குரலை உயர்த்தினான்.​

அவனை பார்த்து முகத்தை திருப்பியவள், “அத்தை கிட்ட இங்கேயே மதியம் சாப்பிடுறோம்ன்னு சொல்லிட்டேன். அவங்களும் சேர்த்து சமைச்சிட்டாங்க” என்றாள் முனங்களாக.​

இப்பொழுது தேவா அவளை முறைக்க, “ரொம்ப பண்ணாதீங்க தேவ்! அத்தை தனியா வேலை பார்த்தாங்க அதான்…” என்றவள் மென்றுமுழுங்கினாள்.​

“அப்ப எதுக்கு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலனு சொல்லிக்காட்டி என்னை டென்ஷன் ஆக்குற?” என்று தலையை கோதினான்.​

“அப்படி தான் சொல்லுவேன். எப்பலாம் ஞாபகம் வருமோ அப்பலாம் சொல்லி சொல்லி காட்டிவேன். லைஃப் லாங் இத நீங்க கேட்டு தான் ஆகணும்” என்றவளை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தவனை, “வாங்க சாப்பிட போகலாம்” என சிரிப்புடன் அழைத்து சென்றாள்.​

மதியவுணவையும் முடித்துவிட்டு மாலைப்போல் தான் தேவாவும் சாருமதியும் அவளின் வீட்டிற்கு வந்தனர். அவர்களை வரவேற்ற குடும்பத்தினர் எதுவும் கேட்காமல் சகஜமாகவே பேசினர்.​

வடை, காஃபி என சிற்றுண்டிகளை முடித்துவிட்டு தேவாவும் குமரேசனும் பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர்.​

கோமதி அறையில் பெண்கள் மூவரும் இருந்தனர். சாருமதி அவரின் மடியில் தலைவைத்து படுத்துக்கொள்ள, “மணி ஐந்தாகுது சாரு! எழுந்திரி” என ஜெயந்தி கண்டிப்புடன் கூறினார்.​

அவரை சட்டை செய்யாமல், “உங்க மாப்பிள்ளை என்னை எவ்ளோ சீக்கிரமா தீபாவளிக்கு கூட்டிட்டு வந்துருக்காரு பார்த்தீங்களா கோம்ஸ்? இதெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா?” என பாட்டியை தூண்டிவிட்டாள்.​

“அடி போடி, அந்த தம்பி மதியமே ஃபோன் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட்டார்” என தேவாவிற்கு சப்போர்ட் செய்தார்.​

“இருந்தாலும் நீங்க கேள்வி கேட்கணும் பாட்டி” என அவரை நிமிர்ந்து பார்க்க,​

“உங்க அப்பாவை நான் மாசமா இருக்கிறப்ப தான் எனக்கு தலை தீபாவளி. புள்ளதாச்சியலாம் அனுப்ப முடியாதுன்னு தீபாவளி, பொங்கல் எதுக்குமே என்னோட மாமியார் அனுப்பல. ஆனா கொடுத்த சீரை மட்டும் வாங்கி வெச்சிக்கிட்டங்க” என அவரின் தலை தீபாவளியை பற்றி கூறியவர்,​

“இங்க இருக்கிற முக்காவாசி பேருக்கு தலை தீபாவளி, பொங்கல் எல்லாமே சண்டைல தான் முடியுது சாரு. மோதிரம் போடல, மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கலன்னு அவ்ளோ சண்டை நடந்திருக்கும். ஆனா இதுக்கு நடுவுலயும் பொண்டாடியோட மனச புரிஞ்சி நடந்துக்கிற புருஷன் கிடைக்குறதெல்லாம் வரம் சாரு! என்ன நேரமானாலும் உன்னை நம்ம வீட்டிற்கு கூட்டிட்டு வந்துருக்காரு… நைட் இங்க தான் தங்க போறீங்க… அப்புறம் எப்படி நாங்க அவரை கேள்வி கேட்போம்” என பேத்தியின் தலையில் வலிக்காமல் கொட்டினார் கோமதி.​

“ஹ்ம்ம். விட்டா உங்க மாப்பிள்ளை தேவாவை புகழ்ந்து தேவராமே பாடிடுவீங்க…” என்று அலுத்துக்கொண்டாள்.​

ஜெயந்தி, “ஏன் சாரு? உனக்கும் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆக போகுது தான? இப்ப குழந்தை வேணாம்ன்னு எதாவது முடிவு பண்ணிருக்கீங்களா?”​

பாட்டியின் மடியில் இருந்து எழுந்தவள் எரிச்சலுடன், “இப்ப எதுக்குமா அத பத்தி?” என்றாள்.​

“உங்க மருமக உண்டாகிட்டா. உங்க பொண்ணு எப்ப நல்ல செய்தி சொல்ல போறா? ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல தான கல்யாணம் முடிஞ்சதுன்னு என்கிட்ட தான கேட்கிறாங்க?” என்று ஜெயந்தியும் அவரின் பிடியில் நின்றார்.​

சமீபமாக இந்த கேள்விகள் தான் சாருமதியை நோக்கி வீசபடிகிறது. சட்டென்று கட்டிலில் இருந்து இறங்கியவள், “இதுக்கு தான் தீபாவளிக்கு வர சொன்னீங்களா? நாங்க கிளம்புறோம்” என குதித்தவளை கோமதி அமைதிப்படுத்தி, “மணி ஆறாகுது பாரு… போய் விளக்கெத்து போ” என ஜெயந்தியை விரட்டினார்.​

“ரொம்ப துள்ளாத டி.நான் உனக்கு அம்மா” என சாருவிடம் முணுமுணுத்துவிட்டே சென்றார்.​

“இவங்களுக்கு என்ன தான் வேணுமா பாட்டி? முதல்ல அண்ணியை பேசுனாங்க. இப்ப என்னை பேசுறாங்க” என்றவளை பார்த்து சிரித்த கோமதி, “இதெல்லாம் சகஜம் சாரும்மா. உங்க அம்மா கிட்டயே இப்படி பேசுனா மத்தவங்க கிட்டலாம் என்ன பேசுவியோ?” என பேத்தியை சமாதான படுத்தினார்.​

வெளியே வந்த சாருவின் முகத்தை வைத்தே அவள் சரியில்லை என்று புரிந்து கொண்டான் தேவா. இரவில் விரைவிலேயே உணவை முடித்தவர்கள், “மாடிக்கு போகலாமா மதி?” என அழைத்தான்.​

“ஏன்? பாட்டாசு வெடிக்க போறீங்களா? எனக்கு மூடில்லை…” என நகர பார்த்தவளை, “வெடிக்க வேண்டாம்! வேடிக்கை பார்க்க போகலாம் வா…” என்று அவளின் கைபிடித்து மாடிக்கு அழைத்து சென்றான்.​

ஐப்பசி மாத குளிர் காற்று இருவரையும் தழுவி சென்றது. பல வண்ணங்களில் ராக்கெட்டுகள் தொடர்ந்து வானில் மின்னி வெடித்துக்கொண்டிருந்தது.​

பட்டாசு அவர்கள் மேல் விழாதவாறு ஓரமாக இருவரும் அமர்ந்து அதனை வேடிக்கை பார்த்தனர். சிறிது நேரத்திலேயே சாருவிற்கு மனது ஓரளவு சமன்பட தேவாவின் கைகோர்த்து அவனின் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.​

என்னவென்று அவனும் கேட்கவில்லை! இதுதான் என்று அவளும் விளக்கி சொல்லவில்லை! ஆனால் அவர்களுக்கிடையே ஆட்சி செய்த மௌனம் இருவரையும் கட்டிவைத்திருந்தது.​

தன் இயல்பை மீட்ட சாருமதி, சிறுவயதில் பட்டாசு வெடித்தது, பக்கத்து வீட்டிற்கு ராக்கெட்டை அனுப்பியது என்று அனைத்தையும் அவனிடம் பகிர்ந்துக்கொண்டாள். அவளை பேசவைத்தது கேட்பதில் தேவாவிற்கு அலாதியான இன்பம் கிடைத்தது.​

அவர்களை அழைத்த குமரேசன், “மணி பத்துக்கு மேல ஆகுது” என்றதும் தான் இருவரும் கீழே வந்தனர். அவர்களுக்கு பால் கொடுத்துவிட்டு படுக்க சென்றனர் ஜெயந்தியும் குமரேசனும். கோமதி மாத்திரை உண்டு எப்பொழுதோ நித்திரைக்கு சென்றுவிட்டார்.​

அறைக்குள் வந்த தேவாவும் சாருவும் பாலை அருந்திவிட்டு செல்வராணியிடம் வந்தனாவை பற்றி ஃபோனில் கேட்டுக்கொண்டனர்.​

சாருமதி இரவுடை மாற்றிவிட்டு படுக்க வந்தாள். அவளின் அருகில் படுத்த தேவா அவளை நோக்கி திரும்பி, “தலை தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் மதி?” என கேட்டுக்கொண்டே சாருவின் கதை மெதுவாக கடித்தான்.​

அதில் சிலிர்த்தவள், “ஒன்னுமில்ல தூங்குங்க!” என அவனை நகர்த்த பார்த்தாள்.​

“ஓ சரி” என்றவன் அவளின் இரவுடையின் டாப்பின் மேல் கைவைக்க,​

“தே…தேவ்! என பண்ணுறீங்க?” என பதறியப்படி அவனின் கையை தட்டிவிட்டவளிடம், “நீ தான மதி ஒன்னுமில்லாம தூங்கணும்னு சொன்ன? அதுக்கு தான் ட்ரெஸை…” என கூற வந்தவனின் வாயை கரங்களால் மூடியவள் முறைத்துப் பார்த்தாள்.​

“முறைக்கிறப்ப கூட என்னோட மதி அழகோ அழகு தான்!” என அவளை மெல்ல மெல்ல அவன் ஆளுகைக்குள் கொண்டுவந்தான். சாருமதிக்கும் அவனின் நெருக்கம் தேவையாக இருக்க அவனுடன் ஒன்றிவிட்டாள்.​

பின் மறுநாள் முழுவதும் அங்கிருந்துவிட்டு மாலை அவர்களின் வீட்டிற்கு கிளம்பினர்.​

தீபாவளி முடிந்து இருவாரம் சென்றிருக்க ஓருநாள் விடிகாலையிலேயே அரவிந்த் தேவாவிற்கு அழைத்தான். உடனே எடுத்து காதில் வைத்தவனிடம் ஒரு மருத்துவமனையின் பெயரை சொல்லி வர சொன்னான்.​

அவன் சொன்னதை கேட்டு அவனின் இதயம் பதற பக்கத்தில் அவனையே பார்த்துக்கொண்டிருந்த சாருமதியை கலக்கத்துடன் பார்த்தான்.​

பின் அவளையும் அழைத்துக்கொண்டு செல்வராணியிடம் சொல்லிவிட்டு மருத்துவமனை விரைந்தான். கோமதியை தான் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.​

அழுகையுடன் ஓடி வந்த சாருமதி, “என்னாச்சி அண்ணா?” என அவனின் கையை தான் பிடித்தாள்.​

பக்கத்தில் வந்தனா அமர்ந்திருந்தாள். சற்று தள்ளி குமரேசனும் ஜெயந்தியும் முகமுழுக்க பீதியுடன் அமர்ந்திருந்தனர்.​

“நேத்து நைட் மாத்திரை போட்டுட்டு நல்லா தான் சாரு தூங்கினாங்க. ஆனா திடீர்னு காலைல நெஞ்சி வலிக்கிதுன்னு அப்பா கிட்ட சொல்லிட்டு மயங்கி விழுந்துட்டாங்க” என்று கலக்கமாக சொல்லியவன், “ஆம்புலன்ஸ்கு கூட வெயிட் பண்ணாம கார்லையே கூட்டிட்டு வந்துட்டோம்” என்றான்.​

சாருமதிக்கு அவளின் அம்மாவை விட பாட்டியின் மேல் தான் பிரியம் அதிகம் என்று தேவாவிற்கு நன்கு தெரியும். “என்னோட கோம்ஸ்கு எதுவும் ஆகாது தான தேவ்?” என பாட்டியின் நினைவில் கலங்கி தவித்தவளை தோளோடு சேர்த்தணைத்து ஆறுதல் கூறினான்.​

வெளியே வந்த மருத்துவர், “இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு தான் எங்களால எதுவும் உறுதியா சொல்ல முடியும்” என்று கூறி செல்ல, அருகிலிருந்த இருக்கையில் பொத்தென அமர்ந்த சாருவின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.​ 
Last edited:

Mathykarthy

Well-known member
அவங்க பர்சனல் டைம்ல இடையூறு இல்லாம இருக்கணும்ன்னு தேவா நினைக்கிறது தப்பு இல்லையே.. சாருக்கு தான் புரியல...
இன்னும் சிறுபிள்ளைத் தனமா ஒவ்வொன்னுக்கும் அவன்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கா... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 

NNK-29

Moderator
அவங்க பர்சனல் டைம்ல இடையூறு இல்லாம இருக்கணும்ன்னு தேவா நினைக்கிறது தப்பு இல்லையே.. சாருக்கு தான் புரியல...
இன்னும் சிறுபிள்ளைத் தனமா ஒவ்வொன்னுக்கும் அவன்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கா... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
நன்றி dear❤️❤️❤️
 
Top