எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் ----15

நிலாச்செய்தி…………

நமது பூமியை சேர்ந்த நிலாவிற்கு லூனா என்றொரு பெயர் உண்டு. இது லத்தீன் வார்த்தையிலிருந்து மருவி வந்தாலும் , ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய மொழியையும் சார்ந்து இருக்கிறது. இந்த லூனா என்பது ரோமானிய பெண் தெய்வத்தை குறிப்பதாகும்.

இதுவரை பச்சையன் ….

தோழிகளுடன் குற்றாலத்திற்கு சென்ற இடத்தில் நிலாமகள் ஒருவனிடம் காதல்வயப்பட்டு பச்சையன் என பெயர் வைக்கின்றாள். சில மர்மமான சம்பவங்களுக்கு பிறகு தோழி விமலா தலையில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்க, தோழிகள் பச்சையன் மீது சந்தேகப்பட , கடைசியில் அதுவும் விலகுகிறது. ஆனாலும் நிலாமகள் காதலும் , நட்பும் அவளை அலைக்கழிக்க பச்சையனிடமிருந்து போன் வருகிறது. இனி…

மன்னிக்கவும் நண்பர்களே. சொல்ல மறந்த கதையின் சில பகுதிகள்…….

முன்பு கதையின் ஆரம்பத்தில் குற்றாலத்திலிருந்து சற்று தள்ளி பச்சையனை நாம் சந்தித்த இடம். அந்த இடத்தில் இருந்த மூன்று கடைகளில் கடைசி கடையில் பெரியரிடம் காபி குடித்துவிட்டு எழமுற்பட விரல் அந்த பெஞ்சின் மூலையில் இருந்த ஒரு ஆணியில் பட்டு ரத்தம் வர , அது வரை அவனை கவனித்துக் கொண்டு இருந்த பச்சை கலரில் இரத்தம் வருவதைக் கண்டு அதிர்ச்சியில் வாய் திறந்து கத்த நினைத்த பெரியவரை பச்சையன் பார்க்க கண்களில் இருந்து யாருக்கும் தெரியாத ஒரு ஒளி வீச்சு நேரடியாக அவர் இதயத்தை தாக்க சுருண்டு விழுந்தார். பச்சையன் ஒரு சில நொடிகள் மின்னலாய் உள்ளே சென்று வெளியே எதுவும் நடக்காதது போல வேகமாய் வெளியேறினான்.

அடுத்தபடியாக தன் பாதையை மறித்த குரங்கை கண்டு ஒரு நிமிடம் திகைத்த பச்சையன் பின் தைரியமாக அதைப்பார்க்க அதன் தோள்பட்டையில் வெப்பகதிர் பாய சூடு தாங்காமல் அலறிக்கொண்டு ஓடியது.

மூன்றாவதாக குற்றாலத்தில் நிலாமகள் மற்றும் அவள் தோழிகளுடன் பேசிவிட்டு அனைவரும் திரும்ப, அதுவரை பச்சையனை ஊன்றி கவனித்து கொண்டு இருந்த விமலா மீண்டும் அவனிடம் திரும்பி வந்து அவன் கையில் மேலே ஒரு கூர்மையான மரக்கிளையில் அடிபட்டு பச்சையாக ரத்தம் வருவதை கண்டு அருகில் வந்து சந்தேகப்பட்டு நெருங்கி வந்து பார்க்க முயல பச்சையனை அவளை எச்சரிக்கும் விதமாக அவள் கால் பகுதியை கூர்ந்து பார்க்க, அவளுடைய கால் விரல்களின் மேல் தோல் பகுதி பொசுங்க ஆரம்பிக்க ,விமலா பயம் கலந்த அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்து விலகி தன் தோழிகள் பின்னால் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

கடைசியாக தன்னை துருவி துருவி விசாரித்து தனக்கு ரூம் கொடுக்க ஹோட்டலில் யோசித்தவனை பச்சையன் அவனை அவன் கை விரல்களை கூர்ந்து பார்க்க விரல்களின் மேற்பகுதி பொசுங்க ஆரம்பிக்க , அவன் மிரண்டு உயிர் பயத்தில் கைகளை பின்னால் இழுத்துக்கொண்டு பச்சையனுக்கு ரூம் ஒதுக்கினான்.

இனி இப்போதைய கதைக்குள் செல்லலாமா……….!

நிலா மகள் பச்சையனின் குரல் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள். இதுவரை அவனைப் பற்றி பலவித நினைப்புகள் மாறி மாறி வந்தன. என்ன பதில் சொல்வது என தெரியாமல் ஒரு நிமிடம் திகைத்தாள். பக்கத்தில் வசந்தியும் , மாலாவும் அவள் யாருடன் பேசுகிறாள் என தெரியாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

வசந்தி சைகையால் யார் எனக் கேட்க , நிலா பக்கத்தில் இருந்த ஒரு பாட்டிலின் பச்சை மூடியை காட்டினாள். மாலா தொடர்ந்து பேச சொல்லி நிலாவை சைகையால் கையை காட்ட நிலா பேச முயற்சிப்பதற்குள் மறுபடி குரல் கேட்டது.

“ என்ன நிலா பதில் பேச மாட்டாயா ? என் மேல் என்ன வருத்தம், கோபம் ? என்னுடன் பேச விருப்பம் இல்லையா ?”

பச்சையன் குரல் கேட்க விமலாவின் இப்போதைய நிலையும் , காதலின் தாக்கமும் மாறி மாறி வர, கடைசியில் விமலாவின் முகம் நிலாவின் கண்முன் வந்து போக, ஏதோ கோபத்தில் பேச போனவளை வசந்தி விரலை உதட்டின் மீது வைத்து எச்சரிக்கை போல காட்ட நிலா நிதானித்தாள்.

“ கண்டிப்பாக வருகிறேன். இடத்தை சொல்லுங்கள் “

“ அப்பாடா , இப்பதான் எனக்கு மூச்சே வருது “.

அவன் இடத்தை சொல்லிவிட்டு போனை வைக்க , நிலா வசந்தி பக்கம் திரும்பினாள்.

“ இப்ப என்ன செய்யறது ? விமலா இப்படி கிடக்கறப்ப நான் போய் காதல் மொழி பேசி கொஞ்சனுமா ? நீ வேற அவன்கிட்ட ஒண்ணும் பேச வேண்டாம்னு சொல்லிட்ட “

“ இல்லை நிலா , நீ இப்ப அங்க போகலைன்னா, நமக்கு பல விசயம் தெரியாம போயிரும். பலவித கேள்விகளுக்கு விடை தெரியாம குழம்பி போய் இருக்கோம். நான் உன்கூட இருந்ததை அவன் பார்த்து இருக்கலாம். அதனால அவன் வரசொன்ன இடத்துக்கு போ. உன்னை கொஞ்ச தூரம் தாண்டி மாலா யாருக்கும் தெரியாம பின் தொடர்ந்து வருவா. யாரும் போன் பேச வேண்டாம். நம்ம மூணு பேருக்குள்ள வார்த்தைகளை டைப் பண்ணி அனுப்புவோம். நான் இங்க இருந்து பார்த்துக்கேறன், தகவல் அனுப்புறேன்.. பயப்படாம போயிட்டு வா “.

வசந்தி சொன்னவுடன் நிலா யோசிக்க ஆரம்பித்தாள்.

‘வசந்தி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. நாம் அவசரப்பட்டால் எல்லா காரியமும் கெட்டுவிடும். ஏதோ மர்மம் இருக்கிறது. இப்போது நான் போகவில்லையென்றால் எதுவுமே முடிவுக்கு வராது’.

நிலா பச்சையன் சொன்ன இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தாள். அந்த இடம் அவள் ஆபிஸூக்கு பக்கத்தில் சற்று தள்ளி இருந்தது. சிறிய பூங்கா அது. அதிக தொந்தரவு இல்லாத இடம், ஆனால் அதைச் சுற்றி மக்கள் நடமாட்டமும் , கடைகளும் அதிகம் இருக்கும் பகுதி. எனவே நிலா சற்று தைரியமாக இருந்தாள், அதேசமயத்தில் மாலா தன்னை பின்தொடர்வது இன்னும் சற்று தைரியத்தை கொடுத்தது.

வண்டியை பூங்கா அருகில் நிறுத்தி விட்டு வண்டியை பூட்டவது போல சற்றே ஓரக்கண்ணால் பார்க்க தூரத்தில் ஒரு கடை அருகில் மாலா எங்கோ பார்ப்பது போல நின்று கொண்டு இருந்தாள்.

நிலா மகள் உள்ளே நுழைந்து பார்வையை மேய விட ஒரு சிறிய செடிக்கு அருகில் இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் பச்சையன் உட்கார்ந்து இருந்தான். அவன் ராஜ தோரணையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தது மிக மிக அழகாக இருந்தது. அவன் அணிந்து இருந்த எலுமிச்சை மஞ்சள் நிற சட்டை மேல் பட்ட சூரிய ஒளி பிரதிபலித்தது கண்ணை கூசும் வண்ணமாய் இருந்தது.

முதுகை காட்டி அமர்ந்து இருந்த அவன் முன் போய் கைகளை கட்டி நிற்க அவனை நேருக்கு நேராக பார்த்தாள். அவனை திணறடிக்க அவனை இவள் பார்வையால் பார்க்க நினைத்தவளை அவன் பார்வை இவள் மனதில் ஊடுருவி திணற வைத்தது.

அவன் பார்வையை தாள முடியாமல் அவள் தவிக்க , அவன் மெதுவாக சிரித்து கீழே உள்ள புல்தரையில் அமர்ந்து அவளையும் உட்காரச் சொல்ல , அவளும் அவனுக்கு எதிரே சற்று தள்ளி உட்கார்ந்தாள்.

அங்கே வானத்தில் சிறு பறவைகளும், தரையில் சிறு பூச்சிகளும் , இவர்களுக்கு இடையே அமைதியும் உலவிக்கொண்டு இருந்தன.

நிலா சுற்றிலும் பார்வையை ஓடவிட சற்று தள்ளி ஒரு மரத்தடியில் தலையில் தொப்பி அணிந்து முகத்தை மறைத்து மாலா உட்கார்ந்து இருந்தாள்.

எங்கிருந்து பேச ஆரம்பிப்பது, என்ன பேசுவது என தெரியாமல் நிலா அவனை பார்த்துக்கொண்டு இருந்தாள். பார்க்க பார்க்க அவளுக்குள் இதயத்திற்குள் காதல் பொங்கி ஊற்ற ஆரம்பிக்க, மூளையில் விமலாவின் நட்பு , தோழிகள் என நினைவுகள் எகிற ஆரம்பிக்க , இடையில் இவள் தத்தளித்துக் கொண்டு இருந்தாள். இவள் தத்தளிப்பைக் கண்டு அவனுக்குள் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. அவனுக்குள் எழுந்த சிரிப்பை முகத்தில் பரவியதை கண்டு இவள் கோபப்பட ஆரம்பித்தாள்.

இங்கே, விமலாவின் வீட்டில் நிலா மகளையும் , மாலாவையும் அனுப்பி விட்டு வசந்தி சோசனையில் ஆழ்ந்து இருந்தாள். அவளுக்கு விமலாவின் போன் சார்ஜரில் போட்டது ஞாபகத்திற்கு வர அதை எடுத்து உயிர் கொடுக்க ஆரம்பித்தாள். சிறிது சிறிதாக போன் உயிர் பெற ஆவலுடன் காத்திருந்தாள்.

போனை எடுத்து வேகமாக பார்த்தாள். நேராக வாட்ஸ் அப் பக்கம் பார்வையை நகர்த்தி, அதில் நிலாவுக்கு அனுப்பிய பகுதியை பார்த்தாள். நாலு செய்திகள் அனுப்பபட்டு , பின் அழிக்கப்பட்டு இருந்ததற்கான தகவலும், ஒரு அழிக்கப்படாத வாய்ஸ் மெசேஜ் இருந்ததை பார்த்தாள்.

விமலாவிடம் ஒரு பழக்கம் இருந்தது. ஏதாவது யாருக்காவது அனுப்பினால் உடனே அழித்து விடுவாள். அவள் போனிலிருந்து யாருக்காவது போன் பண்ணினால் அதையும் சிறிது நேரத்தில் அழித்து விடுவாள். ஆனால் அதிசயமாக இந்த வாய்ஸ் மெசேஜ் அழிக்கப்படாமல் இருந்தது.

வசந்தி யோசிக்க ஆரம்பித்தாள்.

’அவள் கடைசியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பி கொண்டிருந்த போது வழுக்கி விழுந்திருக்கலாம், அதனால் அது அழிக்கப்படாமல் பாதியிலேயே அது தவறுதலாக சேமிக்கப்பட்டிருக்கலாம். அவள் பேசிய அந்த கடைசிப் பகுதியை வைத்துதான் பச்சையனை பற்றி ஒரு முடிவுக்கு வரலாம்’.

அந்த பகுதியை ஓப்பன் செய்ய விமலாவின் குரல் பதட்டமாக கேட்க ஆரம்பித்தது.

‘ நிலா , நான் விமலா பேசுறேன். உனக்கு போன் பண்ணினா கட் ஆகிட்டே இருந்துச்சு. அப்புறம் மெசேஜ் அனுப்புனா பதிலை காணோம். அதனாலதான் பேசி அனுப்பறேன். பச்சையன் நீ நினைக்கற மாதிரி சாதாரண ஆள் கிடையாது. ஏன்னா…….ஆ ! !”

குரல் பாதியிலேயே நின்று போக வசந்தி அதிர்ந்தாள்.

பச்சையனைப் பற்றி விமலா சொல்ல வந்தது என்ன ?

பூங்காவில் பச்சையனுடன் இருக்கும் நிலாவின் நிலை என்ன ஆகும் ?

காத்திருங்கள்…………இனி……
 
Top