எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் அத்தியாயம்-8

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத-NNK70

அத்தியாயம்-8

ஆவலுடன் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தவளுக்கு இன்னும் இன்னும் ஆச்சிரியங்கள் காத்துக் கிடந்தன.

தன் மனம் கொண்ட காதலை கவிதையாகக் கிறுக்கியிருந்தான் அவன். ஆம்! காவலன் காதலனாகி பின் கவிஞனாகவும் மாறியிருந்தான்.

என்னவளே…

காதல் ஒரு மந்திரச்சாவி

அது ஒரு மாயவித்தை

இன்னும் இன்னும் பருகிவிட

துடிக்கும் அமிர்தம்.

காதல் ஒரு மாயாவி

சித்தத்தை பித்தாக்கி

இரத்தத்தை உரியும் இராட்சசன்.

காதல் ஒரு கோடாங்கி

எந்நேரம் என்ன நடக்குமென

சரியாகக் கணிக்க தெரியாத கோமாளி.

காதல் ஒரு பெருமழை

சில கணம் சிலிர்ப்பும்

பலகணம் சலசலப்பும்

மிகுந்த உயிர்நீர்.

காதல் ஒரு ஜீவநதி

கற்களும் புற்களும்

ஒன்றாகி கரைசேரும்

பெருந்தேக்கம்.

காதல் ஒரு காட்டாறு

பெருந்துகளையும்

சிறுத்துரும்பையும்

அடித்துச் சென்று

ஒரே ஓடையில் சேர்க்கும்

நியாயவாதி.

காதல்… கிட்டியவனுக்கு நோய்
கிட்டாதவனுக்கு அருமருந்து.

காதல் ஒரு கிரேக்க சிற்பி

சமயங்களில் சிலையும் வடிப்பான்

க்ஷணங்களில் உளியையும் உடைப்பான்.

காதல் ஒரு அறுசுவை விருந்து

உண்டால் பசியாரும்

பார்த்தாலே உயிர் நிறையும்.

காதல் ஒரு சிறுபிள்ளை

மழலையாய் பிதற்றி

தரும் ஓர் அழகிய தொல்லை.

காதல் ஒரு அற்புதம்

மலையை மடுவாக்கும்

மடுவினை மலையாக்கும்.

மனிதனை கவிஞனாக்கும்

கவிஞனை பைத்தியமாக்கும்.

கண்ணே!

இத்தகைய மேன்மை

பொருந்திய காதலில்

பிரபஞ்சமே தத்தளிக்கும்போது

அதில் சிக்காமலிருக்க

நான் மட்டுமென்ன

விதிவிலக்கு?.

குருதி ஓடைக்கு இடையே

குளிர்நிலவாக வந்தவளே

கள்ளையுண்ட வண்டாக

விழிகள் தீண்டியே போதையுற

நின் கைப்பிடித்த போதே

கண்டேன் பெருங்காதலை.

எங்கோ சென்ற உயிரை ஒற்றைசொல்லில் கட்டியிழுத்து

இனி எல்லாமே இந்த இனியோடுதானெனக் கூறாமல் கூறியவளே.

கைப்பிடிப்பேன் நின்னை

கணநேரம் கலங்க விடமாட்டேன் காலமெல்லமாம் உன் காதலை

சுமக்க இதயம் ஒன்றுள்ளது

என்றும் அதை நீ மறவாதே.

இதையும் நினைவுகொள்

என்றோ நீ இதயனின் இனியாக மாறிவிட்டாயென.

இப்பிறவிக்கு நீ ஒருத்தி மட்டுமே

என் வாழ்வில் சிறகு

விரிக்கும் உயிர் பறவை.

வருவேன் உனைத்தேடியே

பற்றுவேன் நின் கைகளையே.

கலங்காதே கண்ணே

காளையவன் நானிருக்க

கவலை ஏனடி பெண்னே.

இப்படிக்கு,

இனியவளின் இதயன்….

பொன்னான அவன் கையெழுத்தில் மிளிர்ந்த வரிகளைப் படித்து முடித்தும் கூடப் பரவசம் அடங்கவில்லை அவளுக்கு. சொல்லிவிட்டான்! அவன் காதலை அவளிடம். அதுவும் இத்தனை விரைவில், இது அவளே எதிர்பாராத ஒன்று.

கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையே கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அனைத்துமே புதிகாகத் தெரிந்தது.

அவளின் முகம் அத்தனை பிராகசமாக இருந்தது.

‘இதய்…. இதய்’ என்று லட்சம் முறை மனதால் அழைத்துப் பார்த்தாள் அவனை.


உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் அவனைப் பார்க்கத் தவம் கிடந்தது. ‘எப்போ வருவீங்க இதய்?’ என்று தினமும் கேட்டுக் கொண்டே நாட்களைக் கடத்தினாள். ஒரு நாள் இரு நாள் அல்ல, இதோ ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. அவனின் தரிசனம் இன்னும் அவளுக்குக் கிடைக்கவில்லை.

“அவனே வேலைய முடிச்சிட்டு வந்து உன்ன பார்க்கிறேன்னு சொன்னான் மா” என்ற கதிரின் வார்த்தைகளை மனதில் வைத்து இதயனுக்காகக் காத்துக்கிடக்க துவங்கினாள். காதலில் காத்திருத்தலும் ஒரு தனிச் சுகம் தானே!

அங்கே…..

பணி நிமித்தமாக அவரவர் வேலையில் கட்டுண்டு கிடக்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் நண்பனுக்கு அழைத்தான் கதிர்.“டேய் மச்சான் எப்படிடா இருக்க?” என்றான் கதிர்.

“நீ இருக்கப்போ எனக்கென்ன மச்சான் கவலை, ராஜாவாட்டம் இருக்கேன் டா” என்றான் சந்திரன் சிரித்தவாரே.

“ ம்ம் ஏன் இருக்கமாட்ட, அமைதியே உருவான ஒருத்தி காதலியா கிடைச்சா, எல்லாருமே ராஜா தான், சரி எப்போ சென்னை போன? சிஸ்டர் எப்படி இருக்காங்க?” என்றான் கதிர்.

“ யாரு சிஸ்டர்? ஒ! என்னோட சிஸ்டர் ஸ்வேதாவ கேட்குறியா மச்சான்” என்றான் சந்திரன் வேண்டுமென்றே.

அதில் கடுப்பான கதிரோ, “மச்சான், திருச்சியும் கோயம்புத்தூரும் ரொம்ப தூரத்துல இல்ல, வந்தேனா உன்ன சாவடிச்சிடுவேன் டா மவனே, நான் கேட்டது மிருணாளினியை” என்றான் இன்னும் கடுப்பாக.

அதில் வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்த சந்திரனோ, “ஹூம்…. அவள நான் எங்க பார்த்தேன், அதுக்கான டைம் இன்னும் வரல, டைம் வரப்போ அவ முன்னாடி போய் நிற்பேன்” என்றான் ஏக்கமாக.


அதில் இன்னுமே அதிர்ந்த கதிர், “டேய் என்னடா சொல்ற? வேலையை முடிச்சிட்டு போய்ப் பார்க்கிறேன்னு சொன்ன, இன்னும் ஏன்டா மீட் பண்ணாமா இருக்க, பாவம்டா மச்சான் அந்தப் பொண்ணு, அன்னைக்கு உன் பேர சொன்னவுடனே கண்ணு கலங்கிருச்சு அவளுக்கு, ஏன் போகல நீ, அப்படி என்ன பெரிய வேலை? அநியாயமா ஒரு பொண்ணு மனசுல ஆசையை வளர்த்திட்டு ஏமாத்திறாத மச்சான், இது மாதிரி விஷயத்துல விளையாடதச் சந்திரா” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

நண்பனின் கோபமும் அக்கறையையும் நன்றாக விளங்கப் பெற்றவன் அமைதியாக அவனிடம் பேசத் துவங்கினான்.

“ ஹே கதிர்! உன் கோபம் எனக்கு நல்லா புரியுது, ஏமாத்தவோ விளையாடவோ இத செய்ய நான் ஒன்னும் டீன் ஏஜ் பையன் இல்லடா, திடீர்ன்னு அவள பார்த்தேன் மனசுக்கு பிடிச்சுச்சு . உடனே காதலையும் சொல்லிட்டேன், பட் அவளுக்கான நேரத்த நான் குடுத்தே ஆகனும்டா, என்னதான் டாக்டரா இருந்தாலும் சின்னப் பொண்ணு மச்சான் அவ. இது லைப் மேட்டர்,
அவ எப்படி உடனே முடிவு எடுக்க முடியும், இப்போ எதோ ஒரு வேகத்துல எனக்கு ஒகே சொல்லி அப்புறம் நாளிடைவில அந்தப் பிடித்தம் இல்லாம போச்சுனா என்னைவிட அவளுக்குத் தான் கஷ்டம், அவளுக்கும் எனக்கும் ஒரு ஏழெட்டு வயசு வித்தியாசம் வேற இருக்கு, அதனால தான் அப்போவே என் மனச அவகிட்ட சொல்லிட்டேன், அவ நல்லா யோசிச்சி முடிவு பண்ணட்டும், சரியா ஒரு வருஷம் கழிச்சு அவள மீட் பண்ணுவேன், அப்பவும் என் மேல அவளுக்குக் காதலிருந்தா கண்டிப்பாக அவ கைய பிடிச்சே தீருவேன், இல்ல அவளுக்கு என்ன பிடிக்கலன்னா விலகிடுவேன்” என்று பொறுமையாக, தான் அவளைச் சந்திக்காத காரணத்தை எடுத்துரைத்தான் சந்திரன்.

கேட்டுக் கொண்டிருந்த கதிருக்கோ சந்திரனை நினைத்துப் பிரம்மிப்பாக இருந்தது. ‘இத்துனை காதல் உள்ளதா அவள்மேல்?’, தன்னை விடுத்து அவள் அவள் என்று அவளுக்காகவே யோசிக்கும் தன் அருமை நண்பனை நினைத்துப் பெருமையாக இருந்தது கதிருக்கு.

“சந்திரா, உன்ன போல ஒருத்தன யாருமே லைப்ல மிஸ் பண்ண நினைக்கமாட்டாங்க மச்சான், யூ ஆர் எ ஜெம், ஐம் ரியலி ப்ரௌட் ஆப் யூ மச்சான்” என்றான் கதிர் உளமாற.

சில பல விஷயங்களைப் பேசிவிட்டு இருவரும் அவரவர் வேலையில் ஐக்கியமாயினர்.

இனியிற்கோ இந்த ஒரு வருடமும் ஏக்கமும் காத்திருப்பும் ஏமாற்றமாகவுமே கழிந்தது. ஆனால் இந்த ஒரு வருட பிரிவில் அவன் மேலிருக்கும் தீராத காதலை நன்றாகப் புரிந்துக் கொண்டாள்.

அன்று….

மருத்துவமனையிலிருந்த இனிக்கு எதையோ பறிகொடுத்த உணர்வுதான் எப்போதும். ஸ்வேதாவும் அவளருகிலில்லாத காரணத்தால் இன்னும் சோர்ந்து போனாள்.

ஆம்.ஸ்வேதா மேற்படிப்பிற்க்காக வெளிநாடுச் சென்று விட, இனியோ சென்னையிலயே பொது மருத்துவம் சார்ந்த மேற்படிப்பு படித்து வந்தாள்.

ஏனோ, அன்று இதய்யின் நினைவுகள் அவளை மிகவும் ஆட்டிப்படைத்தது. ‘இதய்…. இப்படியே போனா எனக்குப் பைத்தியம் தான் பிடிக்கும், சீக்கிரம் வந்திடுங்க இதய்’ என்று மனதோடு மன்றாடினாள்.

அவள் முயற்சி செய்தால் இதய்யை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்தான் ஆனால் அந்தச் செய்தி தன் தந்தையை அடைந்தால் நடப்பதே வேறு என்பதால், தானாகத் தேடிச் சென்று அவனைச் சந்திக்கவில்லை.

யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளின் அலைப்பேசி அலறியது.

“ …………” அந்தப்பக்கம் தெரிவிக்கப்பட்ட செய்தியில் சற்றுப் புன்னைக்கதவள், “அதுக்குள்ள ஒன் இயர் ஆச்சா? , சரி சரி ஈவினிங் தானே, நான் கண்டிப்பா வந்திடறேன்” என்றாள் புன்னகையோடு.

மனதில் எவ்வேளவோ ஓடிக்கொண்டிருந்தாலும் அதைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு அன்று மாலை நடைபெற போகும் பிறந்தநாள் விழா ஒன்றிற்காகத் தயாராகினாள்.

லாவெண்டர் நிற சில்க் காட்டான் புடவை அணிந்திருந்தவள் ,அதே வண்ணத்தில் நெக்லஸ் அணிந்திருந்தாள், மேலும் கழுத்தில் அவன் கொடுத்தச் சங்கலி எப்பவும் போலவே அவளின் மார்போடு உறவாடிக் கொண்டிருந்தது. எப்போதும் போலவே, மிகையில்லாத அளவான ஒப்பனை மட்டுமே செய்திருந்தாலும், பேரழகியாகக் காட்சித்தந்தாள்.

தங்கச் சிலையென இறங்கி வந்த தன் அண்ணன் மகளை ஆசைத் தீரப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் அத்தை மேகலா, அவளுக்குத் திருஷ்டி சுத்திப் போட்டார்.

இதோ தன் தந்தையின் நண்பரின் மகளும், தன் பள்ளி சீனியருமான அனுராதாவின் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தாள்.

அனைவரும் புன்னகை முகமாக அவளை வரவேற்று உபசரித்தனர்.


“அனு க்கா குழந்தை அப்பிடியே உங்கள மாதிரி, ரொம்ப க்யூட்” என்றாள் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு.

அதில் இதழ் விரித்துச் சிரித்த அனுவோ, “அதைவிடு இனி, நீ எப்போ கல்யாண சாப்பாடு போடப் போற” என்றாள். அவள் கல்யாணம் என்றுக் கூறியவுடனே இதய்யின் முகம்தான் மனக் கண்ணில் மின்னி மறைந்தது.

“ம்ம்…. அதுக்கு இன்னும் டைம் இருக்கு கா” என்றாள் புன்னகைத்து.

“ ஹே எங்கடி டைம் இருக்கு?, இதோ ஒன் இயர்ல பிஜியே முடிச்சிருவ, இன்னும் ஏன்டி தள்ளிப் போட்டுட்டு இருக்க?, ரத்தினம் அங்கிள்கிட்ட நானே பேசறேன் இத பத்தி” என்றவளின் பேச்சில் திடுக்கிட்டவள், “அய்யோ! வேண்டாம் க்கா, இன்னும் ஒன் இயர் கழிச்சி பண்ணக்கிறேன், இப்போ அப்பாகிட்ட கல்யாணத்த பத்தி எதுவும் பேசிறாதீங்க” என்றாள் கலக்கமாக.

அவளின் கலக்கத்தை பார்த்த அனுவுக்கு இதழோரம் புன்னகை அரும்பியது.

விழா தொடங்க இன்னும் நேரமாகும் என்பதால், கொஞ்ச நேரம் அவர்களிடம் பேசிவிட்டு வந்த இனி அப்படியே அங்கிருந்த தோட்டத்தில் நடக்கலானாள்.

திடீரெனத் தன் தந்தை, அனு கூறியதுப் போலக் கல்யாண ஏற்பாடு செய்தால் என்ன செய்வதென்று யோசித்தவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.ஏனோ கடந்த இரு நாட்களாக இதய்யின் நியாபகம் அதிகமாக வந்தது. அவனை எப்படியாவது கண்ணில் காட்டுமாறு கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

சுற்றி பார்வையிட்டு வந்தவளின் விழிகளில் தூரத்தில் அவனைப் போன்ற உருவம் தென்பட, அவசர அவசரமாக அவனை நோக்கி விரைந்தாள்.

அருகில் வருகையில் சட்டென அந்த உருவம் காணாமல் போகவே இனிக்கு பெருத்த ஏமாற்றமாயிற்று.

இதே போல நான்கைந்து முறை அவனை ஒத்த உருவத்தைப் பார்த்தவள் அருகில் செல்லும்போது அவ்வுருவம் மறையவே, ஏமாற்றத்தில் அவளின் கண்கள் கலங்கி போயின.

அதே யோசனையில் நடந்து வந்தவளின் கவனம் பாதையில் இல்லாமல் போகவே, பலமாக எதன் மீதோ மோதிய வேகத்தில் தடுமாறினாள். அப்போது கீழே விழுகப்போனவளை இரு வலியக்கரங்கள் தாங்கிப் பிடித்திருந்தன.
 
Last edited:

santhinagaraj

Well-known member
இதய் காதல் கடிதம் சூப்பர் 👌👌👌

இதய் இனிய ரொம்ப தவிக்க விடுற. இனி மோதினது இதய் மேல தான???
 
Top