எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் அத்தியாயம்-9

NNK-70

Moderator
தீராக காதல் தேனாக மோத-NNK70

அத்தியாயம்-9

“அப்படி யார பத்தி யோசிச்சிட்டு இருந்தீங்க கீழ விழப்போற அளவுக்கு” என்றவனின் கேள்விக்கு இனி பதில் கூற முயல, “ஐம் சாரி, நா… நா… வந்….” என்று பேச எத்தனித்த போதே, நன்கு பரிட்சயமானதாகத் தோன்றிய அக்குரலுக்கு சொந்தகாரனை அப்போது தான் நிமிர்ந்துப் பார்த்தாள்.

பார்த்தவளின் கண்களை அவளால் நம்பவே முடியவில்லை, அங்கு நின்றுக் கொண்டிருந்தது அவனே தான். அத்தனை நாட்களின் ஏக்கதிற்க்கும் தவிப்பிற்கும் விடையாக அங்கு வந்து நின்றான் இதயசந்திரவர்மன்.

அவனைக் கண்டவுடன் அவளின் கண்கள் அத்தனை பாவங்கள் காட்டின. லட்சம் பட்டாம்பூச்சி பறந்ததுப் போல முகம் பிரகாசமானது.

தன் உயிர் காதலை கண்ணில் தேக்கி வைத்திருந்தவளின் முகத்தில் தோன்றிய அத்துனை உணர்ச்சிகளையும் தவறாமல் குறித்துக் கொண்டான் அந்தக் காதலன்.

“உங்கள தான் டாக்டரம்மா, யார நினைச்சிட்டு விழப்போனீங்க” என்றான் ஒன்றும் தெரியதவன் போல. அவ்வளவு நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கேள்வியில் நிதானத்திற்கு வந்தாள்.

“அ…. அது வந்து….” என்றுத் தடுமாறியவளை ரகசியமாக ரசித்தான் ஆடவன். “அ… அது ஒன்னுமில்ல, நீ… நீங்க எப்படி இருக்கீங்க, உடம்பு இப்போ பரவாயில்லயா?, காயம் ஆறிடுச்சா?” என்றவளின் வாய் பேசினாலும் அவளின் கண்கள் அவனை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஆராய்ந்து அவனின் நலனை உறுதி செய்துக் கொண்டது.

அதில் இன்னும் இதழ் விரித்துப் பெரிதாகச் சிரித்தவன், “டாக்டரம்மா அடிப்பட்டு ஒரு வருஷம் ஆகிடுச்சு இன்னுமா காயம் அப்படியே இருக்கும், எல்லாம் சரியாகிடுச்சி ஐம் ஆல்ரைட்” என்றான் சந்திரன்.

அதற்குத் தலையசைத்தவளோ மேற்கொண்டு என்ன பேச என்று தெரியாமல் அப்படிய நின்றாள்.

“ஆனா இங்க மட்டும் பெய்ன் குறையவேயில்ல” என்றான் தனது இதயம் இருக்கும் இடது மார்பினைச் சுட்டிகாட்டியவாரே” அதில் விழி விரித்தவளோ அவனையே உற்றுப்பார்த்தாள்.சந்தன நிற சட்டைக்கு ஏற்றவாறு வெள்ளை நிற வேட்டி அணிந்திருந்தவனின் வலதுக் கையில் தங்க காப்பு மின்னியது, இடக்கையில் ரோலக்ஸ் வாட்சும், கழுத்தில் தங்கச்சங்கிலியும் அலங்கரித்திருந்தது, எப்போதும் அடங்கியிருக்கும் சிகை இன்று அடங்காது காற்றில் புரள, பேரழகனாய் தெரிந்தான் இதய்.

“என்ன டாக்டரம்மா? நின்னுகிட்டே சைட் அடிக்கிறீங்க, கால் வலிக்காதா வாங்க உட்கார்ந்து பார்க்கலாம், சாரி பேசலாம்” என்றான் குறும்பாக.

அவனின் பேச்சில் வெட்கமடைந்தவள், ‘ஐயோ இனி இப்படியா பார்த்துத் தொலைப்ப, சும்மாவே அவன் சீண்டுவான்.இப்போ நீ ஆள விழுங்குற மாதிரி பார்த்து, அவன் கலாய்க்க ஒரு ரூட் வேற போட்டுக் கொடுக்குற’ என்று மனதோடு புலம்பியவள், அவனின் கையை உற்று நோக்கினாள், அப்போதுதான் தன் கையை இன்னும் அவன் பிடித்திருப்பதைக் கண்டு, டக்கென விடுவிக்க முயற்சி செய்தாள். ஆனால் முடியவில்லை.

அவனின் இரும்பு கரத்திலிருந்து அவ்வளவு இளகுவாகத் தன் கரத்தை அவளால் விடுவித்துக் கொள்ள முடியுமா என்ன?.

அவளின் இந்தப் போராட்டத்தைப் பார்த்தவன் சிரித்தவாரே இனியின் கைகளை விடுவித்தான். இப்போது தன் கரத்தைப் பார்த்தவள் அது சிவந்திருந்ததைக் கண்டு அவனை முறைத்தாள்.

அதைக் கண்டு புன்னகைத்தவாரே “கையையே இப்படி சிவக்க வச்சிருக்கானே, இவன நம்பி நம்மள ஒப்படைச்சா என்னாகும்னு யோசிக்கிறியா?” என்று ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினான்.

அவனின் பேச்சில் பெண்ணவளின் முகமோ ‘குப்’பெனச் சிவந்தது. தன் சிவந்த முகத்தைக் காட்டாமல் மறைக்கப் பெரும்பாடுப்பட்டாள்.

இனியின் சிவந்த முகம் சந்திரனுள் ஒரு வித ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது.

“ஆள் பார்க்கதான் நான் முரட்டு உருவமா தெரியுவேன் பட் செய்கையில நான் ரொம்ப ஸாப்ட்தான், கவலப்படாத” என்றான் குறும்பாக.

அவன் கூற்றில் மேலும் நாணமுற்றவளோ, அவனிடம் ஏதோ கூற“இ…. இதய்…” என்றபோது உள்ளிருந்து அழைப்பு வந்தது.

“மச்சான்! தங்கச்சிய கூட்டிட்டு வாங்க பங்ஷன் ஸ்டார்ட் ஆகப் போகுது” என்றான் கெளதம் அனுவின் கணவன்.

அவனின் அழைப்பில் இருவரும் திரும்பிப் பார்த்தனர். அவனின் ‘மச்சான்’ என்ற அழைப்பில் திகைத்தவளையே பார்த்துச் சிரித்தவாறு அவளின் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான் இதய்.

உள்ளே நுழைந்ததும் விழா மேடையைப் பார்த்த போதுதான், இனிக்குச் சட்டென அனைத்தும் விளங்கியது.

கமிஷனர் ரவி பிரசாத்தின் தம்பி மகள் தான் அனு. ஆக அவன் அங்கே வந்ததன் காரணம் புரிந்தது. அவன் வரவை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவேயில்லை. தோட்டத்தில் கூட அவனைப் பார்த்தபோது, இதய் தனக்காக வந்திருப்பதாகத் தான் எண்ணியிருந்தாள், இங்கு அவனை அனைவரும் கொஞ்சிக் குழாவிய போதே நன்கு தெரிந்தது அவன் அந்தக் குடும்பத்திற்கு எத்தனை முக்கியமானவன் என்று.

‘அப்போ அவன் நிஜமாலுமே பங்ஷனுக்காகத் தான் வந்திருக்கானா? என்ன பார்க்க வரலயோ?’ என்றுத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டவளுக்கு மனதினோரம் மெல்லிய வலியொன்று எழுந்தது.

இருந்தும் தூரத்திலிருந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். கலகலவென அவனின் சிரிப்புச் சத்தம் அறையெங்கும் நிறைந்தது.

‘அடேய் அப்படி சிரிக்காத டா, சிரிச்சக்கோழி, சிரிச்சு சிரிச்சே ஆள சாய்க்கிறான், மாயக்காரன்’ என்று புலம்பியவள் அவனை ரசனையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

தன் கைப்பிடித்து வந்தவள் உள்ளே நுழைத்தவுடன் அவனை மேடைக்குச் செல்லுமாறு பணித்து, கீழே இருக்கையில் அமர்ந்திருந்தாள்.

மேடையில் நின்றிந்தாலும் பார்வை முழுவதும் அவள்மீது தான் பதித்திருந்தான் சந்திரன்.

அனைத்தும் தயார் நிலையிலிருக்க, அனு தன் கணவனிடம் ஏதோ கூற, சட்டெனக் கௌதம் மேடையிலிருந்து இறங்கி இனியை நோக்கி வந்தான்.

அவளருகில் வந்தவன் இனியிடம், “சிஸ்டர் பங்ஷன் ஸ்டார்ட் ஆகப் போகுது, நீங்க மேல வந்தீங்கனா கேக் கட் பண்ணிரலாம்”
என்றான் மெல்லிய குரலில்.

“ நா…… நான் எதுக்கு” என ஏதோ மறுத்துக்கூற தொடங்கியவள், பின்னர் கெளதம் பிடிவாதமாகக் கூப்பிட்ட காரணத்தினால் மேடை ஏறினாள்.

பொதுவெளியைக் கருத்தில் கொண்டு அவளை விட்டுத் தள்ளியே நின்றிருந்தான் சந்திரன். ரவி பிரசாத்தும் அவரின் மனைவியும் தங்கள் மகளைக் காண வெளிநாடுச் சென்றதால், விழாவில் கலந்துக்கொள்ளவில்லை.அவருக்குப் பதிலாகத் தமையனாக அந்த இடத்தில் நின்று சந்திரன்தான் எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தான். அனுவின் தந்தை ராம் பிரசாத் மற்றும் தாய் லட்சுமிக்கும் கூடச் சந்திரன் என்றால் அவ்வளவு இஷ்டம்.தாங்கள் பெறாத மகனான சந்திரன், தனக்கு இனியின் மீதிருந்த பிடித்தத்தை முன்னரே அவர்களிடம் கூறிவிட்டான். அவர்களுக்கும் ஏக மகிழ்ச்சி, ஆனால் இனியின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாரும் அவளிடம் எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக, அன்பை பொழிந்தனர்.

அனுவின் புதல்வி சனாவின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.
ஒவ்வொருவராகக் குழந்தைக்கு இனிப்பூட்ட தொடங்கினார்கள்.

ஓரமாக நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இனிக்கு, மனமெல்லாம் தன் மன்னவன் எண்ணம் தான் ஆக்கிரமித்திருந்தது. விழாவுக்கு வந்திருந்தவர்கள் குழந்தைக்குத் தங்களின் அன்பளிப்பினைக் கொடுத்துவிட்டு உணவருந்த சென்றனர். அனைவரும் சென்று விட இப்போது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அங்குக் குழுமியிருந்தனர்.

அனுவிடமிருந்த குழந்தையை வாங்கி தூக்கி கொஞ்சிய இனி, ஒரு சிறிய பரிசுப்பெட்டியை குழந்தையிடம் கொடுத்தாள், அவளையே ரசித்ததுக் கொண்டிருந்த சந்திரனிடம் திடீரெனத் தாவ முயன்றது குழந்தை.

இனி, சனாவை கெட்டியாகப் பிடிக்க ஒரு கையில் இனியின் சேலையையும், மறு கையில் சந்திரனின் சட்டையையும் இறுக்க பற்றிக் கொண்டாள் அந்தச் சுட்டிக் குழந்தை.

இதனால் குழந்தையோடு அவர்கள் நெருங்கி நிற்க, அந்த அழகிய காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டது.

இனியின் கையிலிருந்த குழந்தையை வாங்கிய சந்திரன், தன் சட்டைப்பையில் வைத்திருந்த ஒரு நகைப்பெட்டியை இனியிடம் கொடுத்தது, அதைத் திறக்குமாறு கண்களால் சைகை செய்தான்.

அவன் மாயக் கண்களில் கட்டுண்டவளோ, அதைத் திறந்தபோது அதில் அழகிய கற்கள் பதிக்க இரு வளையல்கள் இருந்தன.

“ மிரு அந்த வளையல குழந்தைக்குப் போட்டுவிடு” என்றான் சந்திரன்.

சாவி கொடுத்த பொம்மைபோல அவனின் பார்வைக்கு கட்டுப்பட்டு வளையல்களை அணிவித்திருந்தாள்.

தன் கைகளில் புதிதாக வந்த வளையல்களைச் சனா ஆர்வம் மின்னப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“சனா குட்டி வளையல் பிடிச்சிருக்கா?” என்று குழந்தையிடம் கேட்டான்.

அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் குழந்தை கைகளைத் தட்டி சிரித்தது.

“ஒ! குட்டி பாப்பாவுக்கு வளையல் ரொம்ப பிடிச்சிருக்கா? அப்போ மாமாக்கு ஒரு கிஸ் குடுங்க” என்றான் மழலையின் அபிநயங்களில் மயங்கி.

என்ன புரிந்ததோ, உடனே அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் பதித்தாள் அந்தப் பிஞ்சுக் குழந்தை. அதில் இன்னும் பெரிதாகச் சிரித்தவனோ, “மாமாக்கு கிஸ் குடுத்தாச்சு அப்போ அத்தைக்கும் ஒன்னு குடுத்திருங்க இல்லனா உங்க அத்த கோவிச்சுக்குவாங்க” என்றான் குழந்தையிடம் விளையாடிக் கொண்டு.

உடனே தாவியக் குழந்தை இனியின் கன்னத்திலும் அழுந்த இதழ் பதித்து விட்டு அழகாய் சிரித்தது. குழந்தையின் இந்த அன்பில் இருவருமே மயங்கித் தான் போனார்கள். அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அனுவும் கெளதமும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

அவர்களின் அருகில் வந்த அனு, "என்ன உடன்பிறப்பே சாப்பிட போலாமா இல்ல இப்படியே ரெண்டு பேரும் நின்னுட்டுருக்க போறீங்களா? என்றாள் கிண்டலாக.

அப்போதுதான், தங்களை அனைவரும் கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து நாணமடைந்தாள் இனி.

விருந்தினர் அனைவரும் கலைந்துச் சென்றிருக்க, குடும்பத்தினர் மட்டுமே மீதம் இருக்க, எல்லோரும் ஒன்றாக உணவருந்தினார்கள். சந்திரனின் அருகில் அமர்ந்திருந்தவளுக்கு அந்தச் சூழ்நிலை புதியதாக இருந்தபோதும் அவ்வளவு பிடித்துமிருந்தது.

உணவு மேஜையே அதிரும் வண்ணம் சிரிப்பும் கேலியும் கிண்டலுமாகச் செல்ல அந்த இரவு நேரத்தை இன்னும் கலகலப்பாக மாற்றிக்கொண்டிருந்தான் இதயசந்திரன்.

“அய்யோ மச்சான் விட்டுறுங்க என்னை, முடியலை என்னால, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது,”என்றான் கௌதம் தன் வயிற்றைப் பிடித்தவாறு.

இனியும் அவன் பேச்சில் மனம் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

நெடுநாட்களுக்கு பிறகு அவளின் முகம் புன்னகையை தத்தெடுத்திருந்தது.

ஒரு வழியாக இரவு உணவை முடித்தவள் அனைவரிடமும் விடைப்பெற்று வீடு திரும்பத் தயாரானாள்.

அவளிடம் வந்த அனுவோ,
“இப்போ சொல்லு இனி, எப்போ கல்யாணம் பண்ணிக்க போற, ஒரு வருஷம் கழிச்சா?, உன் ஆளு ஸ்பீடுக்கு ஒன் இயர் வரை தள்ளிப்போடுறதுலாம் கொஞ்சம் டவுட் தான்” என்றாள் குறும்பாக.

“போங்க க்கா!” என்று நாணத்துடன் தன் தலையைக் குனிந்துக்கொண்டாள் இனி.

தனது காரிலேயே அவளை அழைத்துச் சென்றான் சந்திரன். அந்த இருள் சூழ்ந்த இரவில் அவனுடன் தனியாகப் பயணம் செய்யவே அவ்வளவு இதமாக இருந்தது இனிக்கு. ஆனாலும் எங்கே அவன் தன் காதலை நேரடியாக வெளிப்படுத்தி விடுவானோ என்று பயமாகவும் இருந்தது. கடிதத்தின் வழியாகத் தெரிந்துக் கொண்டபோதும் நேரடியாகக் கேட்க ஒருவித அச்சமாக இருந்தது. அவனை நினைத்து வந்த அச்சமல்ல, அச்சமெல்லாம் இனிக்கு தன்னையே நினைத்துதான்.

இருவரும் அமைதியாக வரவே, அந்த மௌனத்தைக் கலைக்கும் வண்ணம் அவனே பேச ஆரம்பித்தான். “ஹே மிரு, கிளைமேட் சூப்பரா இருக்குல” என்றான் அவளைப் பேச வைக்கும் பொருட்டு.

அவளோ “ம்ம்” என்ற பதிலை மட்டுமே தந்தாள். அவனும் ஏதேதோ பேசிப் பார்க்க அவளிடம் பெரிதாக எந்தப் பதிலும் இல்லாது போகவே திரும்பி அவளிடம், “மிரு இப்படி அமைதியா ட்ரைவ் பண்ணி எனக்குப் பழக்கமில்ல, நான் வேணா பாட்டு பாடிட்டே வரேன், நீ கேட்குறியா?” என்றான் அவளின் மீன் விழிகளைப் பார்த்து.
அதில் ஒரு நொடி அவனை ஏறிட்டுப் பார்த்தவள், பின், ‘சரி’ எனும் விதமாகத் தலையசைத்தாள்.

அதில் புன்னகை பூத்தவன் தன் காந்த குரலில் பாடத் தொடங்கினான்.


ஸ…நிஸரி ஸநி…

ஸ நிஸமக மரி…

பதஸ நிஸரி ஸநி…

ஸ நி ஸ ம க ம ரி…

பத ஸஸஸநி ரிரிரிஸ…

கககரி மமமக பா…

ஸ நி த ப ம க ரி ஸ நி…

கீரவாணி…

இரவிலே கனவிலே…

பாட வா நீ…

இதயமே உருகுதே…

அடி ஏனடி சோதனை…

தினம் வாலிப வேதனை…
தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…

இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே…

புலி வேட்டைக்கு வந்தவன்

குயில் வேட்டை தான் ஆடினேன்

புயல் போலவே வந்தவன்

பூந்தென்றலாய் மாறினேன்…

தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…

என்று இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தவன் குரலில்
அப்படியே லயித்துப் போனாள். அவள் தன்னை மறந்திருந்த அவ்வேளையில் சட்டென அவள் புறம் திரும்பியவன்,
“மிரு ஐம் மேட்லி இன் லவ் வித் யூ!, டூ யூ லவ் மீ, வில் யூ மேரி மீ?”(im madly in love with you, do you love me?, will you marry me?)என்றான் உயிரைக் கரைக்கும் வார்த்தைகளில்.

அவனின் இந்த வார்த்தைகளில் பெண்ணவளின் உள்ளமோ மத்தளமிட்டது. அவன் தன் காதலை எந்நேரத்திலும் சொல்லுவான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு, அவனிடம் என்னக் கூறுவதென்றுதான் தெரியவில்லை. அவளிடம் எந்தப் பதிலுமில்லை.
 
Last edited:

santhinagaraj

Well-known member
ஹேய் இதய் காதல சொல்லிட்டான்.
இனிக்கு சதோஷத்துல பேச்சு வரல போல 😍😍😍
 

Advi

Well-known member
காதலை அழகா சொல்லிட்டான், ஆன இனிக்கு என்ன பிராப்ளம் அப்படினு இன்னும் சொல்லயே
 

NNK-70

Moderator
காதலை அழகா சொல்லிட்டான், ஆன இனிக்கு என்ன பிராப்ளம் அப்படினு இன்னும் சொல்லயே
Next epi ல தெரிஞ்சிடும் சிஸ். :
 
Top