எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பச்சையன் …..17

நிலாச்செய்தி……

இதுவரை மற்ற கிரகங்களின் நிலாக்களின் எண்ணிக்கை சொல்லப்பட்டலும் சிலவற்றை மட்டும் உறுதியாக சொல்லியிருக்கிறார்கள். மற்றவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதாவது கண்டுபிடிக்கப்பட்ட மொத்த நிலாக்களின் எண்ணிக்கை 214. இவற்றில் 156 மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மீதம் 56 இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை அல்லது இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பச்சையன் ….17

பச்சையனை பூங்காவில் பார்த்து நிலாமகள் பேசிகொண்டிருக்கும்போது விமலா தன்னை காலில் காயப்டுத்தியது பச்சையன் என சொல்லிவிட வசந்தி அந்த தகவலை நிலாவுக்கும், மாலாவுக்கும் அனுப்புகிறாள். நிலா கோபப்பட்டு பச்சையனை கேட்க, பச்சையன் சொன்ன பதில் கேட்டு அனைவரும் அதிர்கின்றனர். இனி…

பச்சையன் -----17

நிலா கேட்ட கேள்வியில் கோபமடைந்த பச்சையன் சொன்ன அந்த பதிலை கேட்டு நிலாவுக்கு மயக்கமே வருவது போல இருந்தது. மீண்டும் ஞாபகப்படுத்தி பார்த்தாள்.

” நான் இந்த பூமியை சேர்ந்தவன் இல்லை “

வசந்தி பதட்டமடைந்தாள். மாலா , நிலாவுக்கு பச்சையனால் ஏதாவது ஆகிவிடும் என பயந்து வேகமாக வந்து பச்சையனுக்கும் நிலாவுக்கும் இடையில் நின்றுகொண்டாள். அதாவது நிலாவுக்கு முன்பாக அவளை மறைத்துக்கொண்டு இருகைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு நின்றாள்.

பச்சையன் திடிரென நிலாமகளை மறித்து நின்ற மாலாவை பார்த்து ஓரடி பின் வாங்கினான். அவளை கூர்மையாக பார்த்தான். கண்கள் பச்சை நிறமாக மாற முகம் ஒரு கூடுதல் பச்சை நிறத்துக்கு மாற ஆரம்பித்தது.

இப்போது நிலா மகள், மாலாவை தள்ளி விட்டு முன்னே வந்து நிற்க, பச்சையன் முகம் மீண்டும் இயல்பு நிலைக்கு மாறியது. அவன் முகத்தில் இருந்த பச்சை நிறம் சற்று குறைய ஆரம்பித்தது. திடீரென சிரிக்க ஆரம்பித்தான்.

நிலா மகள் பதட்டப்பட்டாள்.

“ எதற்கு இப்படி நீ சிரிக்கிறாய் ? நீ சொல்வதை நம்ப முடியவில்லை “

“ நம்பிதான் ஆகவேண்டும். நீ குற்றாலத்தில் தடுமாறி விழுந்து எந்திரிக்க தடுமாறிய போது நான் கை கொடுத்து தூக்கினேன் , உனக்கு ஞாபகம் இருக்குதா ?”

நிலா மெதுவாக ஆமாம் என்பது போல தலையாட்டினாள்.

“ உன்னடைய இடது கையில் மணிக்கட்டில் உள்ளங்கைக்கு கீழே ஒரு பிறை நிலா போல சிறிய தழும்பு இருந்ததே. அது இருக்கிறதா என பார்”

பச்சையன் சொன்னவுடன் நிலாமகள் உடனே பார்க்க அங்கே தழும்பு இருந்ததற்கான எந்த அடையாளம் இல்லாமல் இருந்தது கண்டு திடுக்கிட்டாள். தான் இதை இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோமே என நினைத்து வெட்கப்பட்டாள். அதே சமயத்தில் இது எப்படி சாத்தியம் என யோசித்தாள்.

“ ஆமாம், நீ சொல்றது உண்மைதான் . ஆனா இன்னும் எனக்கு குழப்பமா இருக்கு “

பச்சையன் இருவரையும் கையை காட்டி அமரச்சொன்னான்.அவனும் எதிரே மீண்டும் உட்கார்ந்தான். நிலா மீண்டும் கேட்டாள்.

“ சரி, உன் கைபட்டவுடனே எனக்கு சரியானது. ஆனால் விமலாவிற்கு …?”

” என் கண்கள் காயப்படுத்தும், கைகள் குணப்படுத்தும் “

“ நீ சொல்வது கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது”

பச்சையன் எதுவும் பேசவில்லை. பக்கவாட்டில் தலையை திருப்பினான். அவனை மாலாவும் , நிலாவும் பார்க்க பக்கவாட்டில் அவன் முகம் சிறிது சிறிதாக கூடுதல் பச்சை நிறத்துக்கு மாறியது தெரிந்தது. இவர்களும் அவன் பார்த்த திசை பார்க்க அங்கே சற்று தள்ளி யாரோ ஒருவர் சாப்பிட்டு விட்டு போட்டு போன காகித பார்சல் குப்பையாய் கிடக்க, சிறிது நேரத்தில் அது தீப்பிடித்து எரிய ஆரம்பிக்க நிலாவும் , மாலாவும் பயத்தில் சற்று பின் தள்ளி உட்கார்ந்தார்கள். இருவர் முகத்திலும் மரண பயம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.

சில நிமிடங்கள் கழித்து பச்சையன் நேராக உட்கார்ந்தான்.

“ என்னுடைய கோபமான பார்வை தவறுதலாகபடக்கூடாது என நான் அந்த பக்கம் நிரும்பினேன். என்னை வெறுக்க வேண்டாம் நிலா. நீ என்னைத் தேடி நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தபோது நோட்டில் என் பெயரை பார்த்தாய் அல்லவா ? என்ன பெயர் , சொல்லு பார்க்கலாம்”.

நிலா யோசித்தாள் . பெயர் உடனே ஞாபகத்திற்கு வரவில்லை.

“ என்னுடைய பெயர் மேன்ரோப் “

அவன் பேரை கேட்டு நிலாமகள் வித்தியாசமாக பார்த்தாள்.

“ என்னைப் பற்றி நான் சொல்வதற்கு முன் இதுவரை நடந்ததை சொல்கிறேன். நான் முதலில் பார்த்தது டீக்கடை பெரியவரை. என் இரத்தத்தை பார்த்து கத்த நினைத்தவரை நான் கண்ணால் எச்சரிக்க நினைக்க நினைப்பதற்குள் அவர் தடுமாற எனது பார்வை அவர் இதயத்தில் தவறுதலாக பட அங்கே நெஞ்சுப்பகுதியில் காயம் ஏற்ப்பட்டு இறந்து போனார். நான் உடனே கடைக்குள் சென்று அவர் நெஞ்சுப்பகுதியை தொட காயம் மட்டும் மறைந்தது, ஆனால் உயிரை காப்பாற்ற முடியவில்லை.. பின்னர்…”

அவன், குற்றால குரங்கு , விமலா மற்றும் ஹோட்டல் ரிசப்ஷன் இளைஞன் என தன்னால் எப்படி அவர்கள் காயப்பட்டார்கள் என சொல்ல நிலா திகைத்தாள்.

“ அந்த பெரியவரை நான் வேண்டும் என்று கொல்லவில்லை. அவர் கடைக்குள் பயத்தில் தடுமாறியதில் அவர் தோள்பட்டையில் பட வேண்டிய வீச்சு தவறுதலாக இதயப்பகுதியில் பட்டு விட்டது . மற்ற எல்லாரையும் எச்சரிக்க மட்டுமே நான் என் கோபப் பார்வையை உபயோகப்படுத்தினேன். என் தவறு எதுவும் இல்லை”..

பச்சையன் பேசியதை , அவன் செய்ததைக் கண்டு பயம் வந்து அப்பிக் கொண்டது. உடலில் ஒரு சிறிய நடுக்கம் வேறு ஏற்ப்பட்டது. தாங்கள் பேசிக்கொண்டு இருப்பது மனித பிறவி அல்ல, வேறு ஏதோ ஒரு பகுதியிலிருந்து வந்தவன் என தெரிந்து அடுத்து என்ன செய்வது தெரியாமல் விழித்தார்கள். தங்களை எதுவும் இதுவரை அவன் எதுவும் செய்யவில்லை என்றாலும் எவ்வளவு நேரம் இப்படி இருப்பான் எனத் உறுதி இல்லாததால் அவன் மேல் நம்பிக்கை வரவில்லை.

இதிலும் நிலாமகள் அவன் தன்னை காதலிப்பதில் உறுதியாய் இருந்ததைக் கண்டு என்ன செய்வது என முழித்தாள். தான் காதலிப்பதா, வேண்டாமா ? என்ன செய்வது என குழம்பினாள். பச்சையன் இவள் தவிப்பதை கண்டு ரசித்தான்.

” நிலா , நீ இங்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டு இருக்கின்றேன். உன் பக்கத்தில் இருக்கும் தோழி சற்று தூரத்தில் இருந்து உன்னைக் காப்பாற்ற என்னை தூரத்தில் கவனித்து கொண்டு இருந்தது எனக்குத் தெரியும். நீ போனை ஆன் செய்து விட்டு உன் மடியில் சற்று மறைவாய் வைத்து இங்கு நடப்பதை மறுமுனையில் உள்ள தோழிக்கு நேரடி ஒளிபரப்பு பண்ணியது தெரியும், இப்போதும் மறுமுனையில் உன் தோழி நான் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பதும் தெரியும். இப்போதும் நான் சொல்கிறேன், நான் ஆபத்தானவன் இல்லை, ஆனால் அபாயகரமானவன். புரியவில்லையா ? நான் இன்னும் சொல்ல வேண்டியது நிறைய உள்ளது. அப்பொழுதான் உங்களுக்கு என்னப்பற்றி முழுமையாக தெரியும். இப்போது உங்களுக்காகதான் சிரமப்பட்டு என் சக்தியை காட்டினேன். எனக்கு இதில் துளியும் விருப்பமில்லை “

மாலா மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

“ என் பெயர் மாலா, போனில் மறுமுனையில் இருப்பவள் வசந்தி. ஆஸ்பத்திரியில் அடிபட்டு விமலா கிடக்கிறாள். அவளுக்குத் துணையாக மாதவி இருக்கிறாள். உன்னை எப்படி நம்புவது ? எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வாய் என யாருக்குத் தெரியும் ?”

“ நல்லது மாலா , என்னை நீங்கள் நம்ப நான் என்ன செய்ய வேண்டும் ? நிலாவின் மீது நான் கொண்ட காதல் எப்படி நான் உங்களுக்கு நிரூபிக்க வேண்டும் ? இன்னும் நான் என்ன செய்ய வேண்டும் ? “

கேள்விகளை அடுத்தடுத்து பச்சையன் வீச , மாலா , நிலாமகளை திரும்பிப் பார்த்தாள்.

நிலா மகள் வசந்தியை கூப்பிட்டாள்.

“ வசந்தி எல்லாம் கேட்டுகொண்டிருப்பாய் என நினைக்கின்றேன். என்ன செய்யலாம் ?”

வசந்தி மறுமுனையில் பேசியதை நிலாமகள் காதுகொடுத்து கேட்டாள். போனை ஆப் செய்து தூக்கி பையில் போட்டாள்.

“ என்ன சொல்கிறாள் உன் தோழி ? நான் என்ன செய்ய வேண்டும் ?”

“ நாளைக் காலை 10 மணிக்கு நீ விமலா வீட்டிற்கு வர வேண்டும். அங்கு வைத்து பேசிக்கொள்ளலாம். இப்போது எங்கு தங்கியிருக்கிறாய் ?”

” நிலா , அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நான் ஆபிஸுக்கு வந்து விடுகிறேன் . என்னை விமலா வீட்டிற்கு கூட்டிச் செல்”

பச்சையன் சொல்லிவிட்டு இருவரையும் புன்னகைத்த முகத்துடன் பார்த்து விடை பெற்றான். மாலாவும் , நிலாவும் எழுந்தார்கள்.

நிலா மனதில் பச்சையன் பசையாய் ஒட்டிக்கொள்ள மனது சந்தோசத்தில் குதித்தது. அவனுக்கு தண்டனை தரும் அளவு அவன் பெரிய அளவு தப்பு செய்யவில்லை என நினைத்து பெருமூச்சு விட்டாள்.

“ என்ன நிலா, வசந்தி என்ன சொன்னா ? அடுத்து நாம என்ன செய்ய போறோம் ? “

நிலா , வசந்தி சொன்ன அனைத்தையும் சொன்னாள். பிறகு இருவரும் பிரிந்தனர்.

நிலா வீடு வந்து சேர்ந்தாள். பார்கவியிடம் இதுவரை நடந்த அனைத்தையும் சொல்ல , பார்கவி அதிர்ந்து வாயைப் பிளந்தாள்.

“ என்னடி இது கண்றாவி ? சாதாரணமாவாகவே மனுஷ பயலை கட்டினாலே ஒழுங்கா இருக்க மாட்டான்க, இதுலே பச்சையன் எங்கிருந்து வந்தவனோ ? என்னடி பேசாம விலக பாருடி. போதும் உங்க மர்மக் காதல். போய் ஏதாவது ஆகற வேலையை பாரு “

“ இல்லைம்மா, நாளைக்கு பச்சையன் வருவான். எல்லாம் சரியா நடக்கும். நான் விழுந்தப்ப தூக்குன ஒரு தடவை அவன் விரல் பட்டதுதான், அதுக்கப்பறம் இதுவரை அவன் என்னை தொட்டது கூட கிடையாது. நம்ம பக்கத்து ஏரியாவுல அவன் தங்கியிருக்கற இடம் இருந்ததனால, நான் எப்படியும் தேடி வருவேன்னு அவன் இடம் மாறினான். ஆனாலும் என்னை எனக்குத் தெரியாம என்னை முழுசா கவனிச்சிகிட்டு இருந்திருக்கான். என்னோட பிரண்டு விமலாவுக்காக நான் கோபிச்சது உண்மைதான். ஆனா இப்ப அவன் கொஞ்சம் , கொஞ்சம் உண்மையை சொல்ல ஆரம்பிச்சதனால என்னோட கோபம் இறங்கியிருச்சு, காதல் மறுபடியும் மூளைக்குள்ள போதை மாதிரி ஏறியிருச்சு.. நான் நினைச்சாலும் காதல் என்னை விடாது”.

பார்கவி பெருமூச்செறிந்தாள். எப்படியோ நல்ல வாழ்க்கை அமைஞ்சா போதும் இவளுக்கு என நினைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

இதுநாள் வரை கனவுகளுடன் இருந்தவள், இனி அவள் வாழ்க்கை நனவாக மாறப்போவதை நினைத்து வெட்கப்பட்டாள்.

அவனை மறுநாள் எப்போது பார்க்க்கூடிய நேரம் வரும் என ஏக்கத்துடன் தூக்கம் வருமா என தவிப்புடன் தூங்க சென்றாள்.

அதே நேரத்தில் பச்சையன் தனியாக நடந்து கொண்டு இருந்தான். அவனுடைய நடையில் ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டு இருந்தது. அப்போது அவன் சட்டைப்பையில் ஏதோ வெளிச்சம் தெரிய , சுற்றும் முற்றும் பார்த்தவாறே மெதுவாக அதை வெளியே எடுத்தான்.

அது ஒரு சதுர வடிவ தகடு போல இருந்தது. அதில் ஒரு சிறிய திரை தெரிய அவன் அதில் ஒரு பகுதியை தொட மறுமுனையில் யாரோ பேசினார்கள். மறுமுனையில் பேசியதைக் கேட்க கேட்க அவன் முகம் மாறிக்கொண்ட வந்தது. அவன் நின்று பக்கவாட்டில் திரும்ப , அவனை பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த தெருநாயை திரும்பி பார்த்தான். அது சற்று உறுமலுடன் கடிப்பது போல அருகில் வர பச்சையன் திரும்பி முறைக்க அந்த இடத்திலேயே அது எரிந்து சாம்பலானது.

பச்சையன் அந்த தகடை மறுபடி உள்ளே வைத்தான், தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

பச்சையன் மறுநாள் வருவானா ? வசந்தியின் திட்டம் என்ன ? நிலாவின் காதல் என்ன ஆகும் ?

காத்திருங்கள்.. காதல் எதோடு மல்லுக்கட்ட போகின்றது ?

இனி….
 
Top